வருடத்தில் அனைத்து சனிக்கிழமைகள், மார்கழி மாதம் முழுவதும் காலை 5.00 மணிக்கு திருப்பள்ளி யெழுச்சி, திருப்பாவை ஸேவித்து திருவாராதனம் நடைபெறும். ஆவணி திருவோணம், கார்த்திகை, சித்திரை விசு, ஏகாதசி, ராமநவமி, தீபாவளி, ஆடிபூரம் ஆகியவை இத்தலத்தில் கொண்டாடப்படும் திருநாட்கள் ஆகும். இத்தலத்தில் வருடத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது. வைகுண்டஏகாதசி பெருவிழாவாகும். அன்றிரவு முழுதும் அகண்ட நாம பஜனை நடைபெறும். அவ்வமையம் பெருமாள் ஒவ்வொன்றாக திருமாலின் பத்து அவதார அலங்காரத்தில் சேவை சாதிப்பார். சுற்றுவட்டார கிராமத்தில் உள்ளவர்கள். விரதம் மேற்கொண்டு இவ்வைபவத்தில் கலந்து கொள்வர். துவாதசியன்று நிறைவு பூஜை முடிந்தவுடன் நெல்லி, அகத்திக்கீரை, வாழைத்தண்டு முதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை விரத சாப்பாடாக வழங்குவர்.
தல சிறப்பு:
இதன் அருகில் உறங்கா புளி என்ற புளிய மரம் இருந்துள்ளது. இம்மரத்தின் இலைகள் சூரியன் மறைந்த பின்பும் மூடாமல் இருப்பதாகக் கூறுகின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பூமி நீளா சமேத அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில்,
வத்திராயிருப்பு, 626132
விருதுநகர்.
போன்:
+91 9003523020
பொது தகவல்:
கி.பி. 1442 முதல் 1469 வரை தென்காசி வீரபாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். அச்சமயத்தில் அழகிய சாந்த மணவாளப் பெருமானுக்கு பெரிய அளவில் திருப்பணிகளைச்செய்து 1464ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக கல்வெட்டு செய்திமூலம் அறியப்படுகிறது. கருவறையின் வெளிப்புறத்தில் உள்ள கல்வெட்டில் கண்ட நாட்டில் உள்ள சாந்தனேரி தனிமால் அழகியர் கோயில் என காணப்படுகிறது. எனவே இப்பகுதி சாந்தனேரி என வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது. மேலும் கோயில் பராமரிப்பு, பூஜைகள் திருவிழாக்கள் நடத்த தேவையான செலவினங்களுக்காக நன்கொடைகளும், பூமியும் தானமாக வழங்கப்பட்டதை பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டியன் ஆட்சி செய்த கி.பி. 1469-1480 காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு செய்திகள் மூலம் அறியப்படுகிறது. இத்தலம் விமானத்துடன் கூடிய கருவறை. அர்த்த மண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் உற்சவ மண்டபம், பலிபீடம் என முழுவதும் கற்களாலேயே கட்டப்பெற்ற பெரிய கோயிலாகும்.
பல்வேறு மன்னர்களால் திருப்பணி, மண்டபங்கள் என அந்தந்த நாட்டின் சிற்ப கலையம்சங்களோடு விளங்கிய தலம் ஆகும். இங்கு பெரும்பாலான சிற்பங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இத்தனை சிறப்புக்களைப் பெற்றிருக்க இக்கோயில் முறையான பராமரிப்பு மற்றும் நீண்ட காலமாக திருப்பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தாலும், சுவற்றிலும் மேற்கூரையிலும் தாவரங்கள் வளர்ந்து முற்றிலுமாக சிதிலமடைந்துவிட்டது. மழை வெள்ளம் காரணமாக கோயிலைச் சுற்றியுள்ள தரைப்பகுதி உயர்ந்து விட்டதால் கோயில் உட்புற தளம் தாழ்ந்து விட்டது. இக்கோயிலால் தான் இவ்வூருக்கே பெருமை, கோயில் நிலை கண்டு ஊர் பெரியவர்கள் இத்தலத்தை திருப்பணி செய்திட முடிவு செய்து அதற்கென ஒரு குழுவையும் அமைத்தனர். மேலும் கோயிலின் தரை தளத்தை பூமி மட்டத்திலிருந்து 4 அடி உயரத்திற்கு உயர்த்துதல் பழமை மாறாமல் உயரத்தை 4 அடி உயர்த்தி புனரமைப்பது என்பது எளிதான காரியமல்ல மேலும் சவாலான விஷயமும் கூட ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தொடர் வரிசை எண்ணை குறியீடு செய்து கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய பகுதிகளை சேதாரமின்றி கவனமாக பிரித்து எடுக்கப்பட்டது.
பின் பலவித அஸ்திவார கட்டுமானத்துடன் அதே கற்களைக் கொண்டு முழுவதும் கல் திருப்பணியாக நிர்மாணித்து புதுப்பிக்கப்பட்டு 20.03.2014 அன்று மஹா ஸம்ப்ரோக்ஷ்ணம் வெகு விமர்சையாக நடந்தேறியது. கோயில் புதுப்பிக்கப்பட்டாலும் அதே தொன்மையுடன் விளங்குவது சிறப்பு. மகா மண்டபத்தில் ஆதி சேஷன், விஷ்வ சேனன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மணவாள மாமுனி ராமானுஜர், ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். கருவறையின் தென் பகுதியில் பத்மாவதி தாயார் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கின்றார். கோயிலின் வடக்குப் பகுதியில் துவாதசி மண்டபம் உள்ளது. தற்போது இம்மண்டபம் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. வசந்த மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மடப்பள்ளி, கருட மண்டபம் துவாதசி மண்டபம் என அனைத்தும் சீர்செய்து புனரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. புராண காலத்தில் நக்கன் வில்லி, சொக்கன் வில்லி என்ற பக்தர்களால் உருவாக்கப்பட்ட கேணி இங்கு உள்ளது. இதுவே இத்தலத்தின் புஷ்கரணி, திருமூலர் இக்கேணியில் இறங்கி நீரெடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்தார். சாதாரண மானுடன் இறங்கி அசுத்தப்படுத்தக் கூடாது என சித்தர் கூறி இக்கேணியில் இறங்குவார் மானுடராயின் மடிவர் என சாபமிட்டார். தேவரன்றி வேறு எவரும் இதனுள் இறங்குவதில்லை. இதுவே இத்தலத்தின் தீர்த்தம் இறங்காகக் கிணறு என பெயர்.
பிரார்த்தனை
வாழ்க்கையில் எந்த குறைபாடுகள் இருந்தாலும் இவரை வழிபட்டால் குறைகள் நிவர்த்தியாகும். குறிப்பாக திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.
நேர்த்திக்கடன்:
நான்கு சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வேண்டி வழிபட வேண்டுவனயாவும் குறிப்பாக நீண்ட நாள் நடைபெற்ற திருமணங்கள் கூட கைகூடி வருகிறது. என உறுதியுடன் பக்தர்கள் நம்புகின்றனர்.
தலபெருமை:
மஹாலட்சுமி தாயார் இத்தலத்தில் பத்மாவதி தாயாராகத் தவம் மேற்கொண்டு அருகில் உள்ள திருத்தங்கல் என்னும் திவ்ய க்ஷேத்திரத்தில் மஹா விஷ்ணுவை மணந்தார். என்ற குறிப்பு பிரம்மாண்ட புராணத்தில் உள்ள திருத்தங்கள் மஹாத்மியத்தில் காணப்படுகிறது. அப்போது கட்டப்பட்டிருந்த கோயில் தரையில் மண்ணைப் பரப்பி அதன்மீது கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இப்படி கட்டப்பட்ட கோயில் மழை, வெள்ளம், ஒரு சமயம் சிறிய அளவில் பூகம்பம் ஏற்பட்டுக்கூட எந்த சேதமும் இல்லாமல் இருந்தது ஆச்சரிய மூட்டுவதாக இருக்கிறது. இது அன்றைய கட்டிட கலையின் ஸ்திர தன்மையையும் நுணுக்கத்தையும் உணர்த்துவதாக அமைந்திருந்தது. மதுரையை ஆண்ட திருமலை நாய்க்கர் ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டம், துவாதசி மண்டபம் மற்றும் மடப்பள்ளி ஆகியவற்றை கட்டியதாக கல்வெட்டு செய்திகள் உள்ளன. மகா மண்டபத்தின் முன் உள்ள உற்சவ மண்டப தூண்களில் இக்கோவிலை நிர்மாணித்த திருமலை நாய்க்கர் மற்றும் அரசியின் உருவச் சிலைகளை வடித்துள்ளனர்.
அன்னம், ஆமை, விஷ்ணு, தாமரை, அனுமன் போன்ற சிற்பங்களை அத்தூண்களில் வடித்துள்ளனர். மேலும் யாழி, கீழ் நோக்கியுள்ள மலரில் தேனைக்குடிக்கும் தேன் சிட்டு போன்ற நுணுக்கமான சிற்பங்களையும் காண முடிகிறது. பெருமாளின் சிரசில் உயர்ந்த கிரீட மகுடம் அணிசேர்க்கின்றது. நீண்ட காதுகளில் மகா குண்டலங்கள் அழகு சேர்க்கின்றன. கழுத்தில் முத்தாரம் அணிவிக்கப்பட்டுள்ளது. சிலைமுழுவதும் அணிகலன்கள், ஆடை உடலை அணி செய்ய மிகத் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் சிலை வடிக்கப் பட்டுள்ளது. திருமுடி முதல் திருவடிவரை அணிகலன்களை காணலாம். இந்த அழகை எல்லாம் திருமஞ்சனத்தின் போது மட்டுமே காண இயலும். இத்தலத்தில் இரு கருடாழ்வார் சன்னிதிகள் உள்ளன. ஒரு சன்னிதியில் மஹா விஷ்ணுவை தொழுத நிலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார் இத்திருக் கோலத்தை அற்புதகோலம் என அகஸ்தியர் விவரிக்கின்றார். மற்றொரு சன்னிதியில் உள்ள கருடாழ்வார் இடது காலை மடித்து நின்ற கோலத்தில் வீற்றிருக்கின்றார். நமது முறையீடுகளை உடனே பெருமாளிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது அபூர்வமானது. இங்குள்ள ஏரியை சாந்தனேரி கண்மாய் எனவும், இந்த ஏரியின் கரையைக் காத்ததால் ஏரி காத்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். கோவிலின் எதிரே பல நூற்றாண்டுகளைக் கண்ட பெரிய அரச மரம் ஒன்று உள்ளது.
இத்தலத்தில் வைகானச ஆகமப்படி தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவ மண்டபம் ஆகியவற்றுள் இன்றும் சித்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மகாவிஷ்ணுவைத் தொழுவதாக ஐதீகம். பூலோக சுவர்க்கபுரி எனப்போற்றுகின்றார். சதாசிவ பிரம்மம்.
தல வரலாறு:
மகா பெரியவா ஒருமுறை, புதுசு புதுசா கோயில் கட்டுவதைத் தவிர்த்து தொண்மையான சிதிலமடைந்த கோயில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது நல்ல புண்ணியத்தைத் தரும் என்றார். அந்த வகையில் சீரிய முறையில் புனரமைத்து தொன்மை மாறாமல் அதே பழமையான தோற்றத்துடன் கம்பீரமாக விளங்கும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் அர்ஜீனாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூமி நீளா சமேத அழகிய மணவாளப் பெருமானின் பவித்ர க்ஷேத்திரம். குருக்ஷேத்திர மஹாயுத்தத்தில் பகவான் கண்ணனின் திருவருளால் துரியோதனாதியருக்கு உரிய தண்டனை அளித்து வெற்றியும் பெற்று தர்மத்தை நிலைநாட்டியவர்கள் பஞ்ச பாண்டவர்கள். பிறர் அறியா வண்ணம் வனவாசம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். தற்போதைய கேரள மாநிலம் நோக்கிச் சென்றனர். சென்ற இடங்களில் எல்லாம் அழகான கோயில்களை நிர்மானித்து பூஜித்து வந்தனர். அப்படி அவர்கள் செல்லும் போது ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்துள்ள புண்ணிய தலமாக ஸ்ரீ வக்த்ரபுரம் வந்தனர்.
இத்திருத்தலம் புராண காலத்தில் தர்மாரண்ய க்ஷேத்திரம் என புகழ் பெற்று விளங்கியது. ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள். இப்பகுதி அழகிய மலைகளும் அடர்ந்த மரங்களும், பசுமையான சோலைகளும் சூழப்பெற்று எழிலுடன் இருந்ததால் தர்மாத்ரி என முனிவர்கள் போற்றினர் அத்ரி என்றால் மலை என்று பொருள். கலியின் கொடுமையால் இப்பகுதி நீரின்றி வாடி, வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்தது, இங்கு வந்த பஞ்சபாண்டவர்கள் இவ்வூர் மக்கள் நிலை கண்டு மனம் வருந்தினர். ஊர்மக்கள் அனைவரும் பஞ்சபாண்டவர்களை சந்தித்து, தங்கள் நிலையை உணர்த்தி தங்களை இக்கொடுமையிலிருந்து காத்தருள வேண்டினர். மக்களின் வேண்டுதல்களுக்கு மனம் இறங்கி அர்ச்சுனன் காண்டீபம் என்ற வில்லில் அம்பை பூட்டி பூமியில் செலுத்தினான். அந்த அம்புதைத்த இடத்தில் ஒரு நீருற்று தோன்றி பிரவாகம் எடுத்து நதியாகப் பெருகி ஓடியது. இதனை அர்ச்சுனாநதி என சித்தர்களும் வானோர்களும் போற்றினர். இப்பகுதியில் வாழ்ந்த குதம்பைச் சித்தர் தனது பாடலில் இந்நதியைப் பற்றி குறிப்பிட்டுள்ளர்.
ஒரு சமயம் மஹாலட்சுமி தான் தவம் மேற்கொள்ள பொருத்தமான தலத்தை தேர்வு செய்யுமாறு சித்தர்களையும் ரிஷிகளையும் கேட்டுக் கொண்டார். அப்போது அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் தர்மாத்திரி எனப்படும் இத்தலமாகும். இந்த இடத்தைக் கண்டதும் மஹாலட்சுமியின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. எனவே ரிஷிகள் இத்தலத்தை ஸ்ரீவக்த்ரம் எனப் போற்றினர். ஸ்ரீ என்றால் மஹாலட்சுமியைக் குறிக்கும் வக்த்ரம் என்றால் திருமுக மலர்தல் எனப் பொருள்படும். திருவக்த்ரமென ரிஷிகள் ஏக குரலெழுப்பிய ஓசை ஈரெழு உலகில் எதிர் ஒலிக்கக் கண்டேன் என கோரக்க சித்தர் தனது நூலில் குறிப்பிடுகின்றார். மன்னர் காலத்தில் ஸ்ரீவக்தபுரம் என அழைக்கப்பட்டு பின் காலப்போக்கில் மருவி வத்திராயிருப்பு என ஆகிவிட்டது. தரையில் இருந்து நீர் ஊறி வருடத்தின் அனைத்து நாட்களிலும் அர்ச்சுனா நதியில் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. நீர் வற்றி அறியாத இருப்பு இருந்ததால் இப்பகுதியை காரணப்பெயராக வத்திராயிருப்பு என்ற பெயர் இப்பகுதிக்கு நிலைத்து விட்டது எனவும் கூறப்படுகிறது. கருவறையில் பெருமாள் சங்கோடு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கி நின்று ஒருகையை அபய ஹஸ்தமாகவும் மற்றொரு கையில் கதாயுதத்தை தாங்கியும் நிற்பது மிகவும் விசேஷமட்டுமல்லாது திருமகளுக்கு பிடித்த காட்சியாகும். வலது பக்கத்தில் பூ தேவியும் இடது பக்கத்தில் ஸ்ரீதேவியும் எழுந்தருளியுள்ளனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இதன் அருகில் உறங்கா புளி என்ற புளிய மரம் இருந்துள்ளது. இம்மரத்தின் இலைகள் சூரியன் மறைந்த பின்பும் மூடாமல் இருப்பதாகக் கூறுகின்றனர்.