திங்கள் வெள்ளி அமாவாசை மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. இக்கோயிலின் முக்கிய வருடத் திருவிழா 9 நாட்கள் கொண்டாடப்படும் வைகாசித் திருவிழாவாகும் கம்பம் போடுதல் என்ற நிகழ்வில் ஆரம்பித்து சிறப்பு அலங்கார பூஜைகள், முனியப்பன் பூஜை, அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் சக்திகரகம், மஞ்சள் நீராடல் மதுரை வீரன் பூஜை என தினமும் ஒரு கோலாகல வைபவம் நடைபெறும். இத்திருவிழாவின் போது ஒவ்வொரு வருடமும் கனிமண்ணால் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்ட புதிய பட்டத்தரசி அம்மன், வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் உடன் குதிரை மீது அமர்ந்தபடி உள்ள மதுரைவீரன் சிலைகளை செய்து கோயிலில் வைத்து வழிபட்டு வருவர். அடுத்த ஆண்டு அச்சிலைகளை எடுத்து விட்டு புதியதாக நிறுவுவர், மதுரை வீரன் காவல் தெய்வமாக இருப்பதால் கோயில் வாசல் அருகே வைத்திருக்கின்றனர். வைகாசி திருவிழாவில் சக்தி கரகம் அழைத்தல் நிகழ்வு பிரதான வைபவம் ஆகும். இப்பகுதி மக்கள் ஊர் கவுண்டர் தோட்டத்தில் இருந்து பூக்கரகம், சக்தி கரகம் எடுப்பவர்கள் நாவில் அலகிட்டும், பால் குடம் பூச்சட்டி ஏந்தி வருவர். நாதஸ்வர இசையுடன் பம்பை, உடுக்கை நகாரி உறுட்டி, கனக சப்டி ஆகிய வாத்திய இசைகள் முழங்க பவனி வரும் காட்சி கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாகும். கரகங்களை உடுக்கை அடித்தபடி குன்றுடையான் பாடல்களை பாடி அழைக்க அந்த இசைக்குத் தகுந்தாற்போல் கரகத்தை தாங்கி இசைக்கு தக்கபடி ஆடிவரும் அழகே தனிதான்.
தல சிறப்பு:
பட்டத்தரசி அம்மனுக்குகென தனிக் கோயில் எழுப்பி இருந்தாலும் காலம் காலமாக பூஜித்துவரும் 150 ஆண்டுகளுக்கு மேல் வயதுள்ள அரச மரத்தடியில் நட்டக்கல் தெய்வங்களுக்கு இன்றும் தினசரி பூஜைகள் நடந்து வருவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோயில்,
இந்திரா காலனி
கணுவாய்
கோவை 641 108
போன்:
+91 98439 71143
பொது தகவல்:
பட்டத்தரசி அம்மனுக்குகென தனிக் கோயில் எழுப்பி இருந்தாலும் காலம் காலமாக பூஜித்துவரும் 150 ஆண்டுகளுக்கு மேல் வயதுள்ள அரச மரத்தடியில் நட்டக்கல் தெய்வங்களுக்கு இன்றும் தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. சிறிய கருவறையுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது. பட்டத்தரசி அம்மன் பின் இரு கரங்களில் உடுக்கையுடன் கூடிய நாகம், சாட்டை முன்னிரு கரங்களில் சூலம் மற்றும் குங்குமசிமிழ் ஏந்தி அமர்ந்த கோலத்தில் கம்பீரமாக காட்சி தருகின்றார். சிரசில் அக்னி ஜீவாலைகளுடன் கூடிய மகுடத்தை அணிந்துள்ளார். புன்னகை ததும்பும் சாந்த சொரூபியாய் வீற்று அருள்புரிகின்றார்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது அனைத்துவித பிரார்த்தனைகளையும் நிறைவேற பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
மதுரை வீரனுக்கு உயிர்பலி கொடுத்து ( ஆட்டுகிடாய் வெட்டி) பிராந்தி, சுருட்டு படைத்து வழிபடும் நிகழ்வு ஒரு வித்தியாசமானது. இதுவே நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.
தலபெருமை:
கோயிலைச் சார்ந்த மக்கள் எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும் அம்மனின் உத்திரவு பெற்ற பின்னரே மேற்கொள்ளுகின்றனர். ஆத்தா எங்க எல்லா குடும்பத்தையும் சந்தோசமாக வைத்து எந்த குறையு இல்லாமல் எங்க கூடவே இருந்து காப்பாத்துகிறாள் என அப்பகுதி மக்கள் மனம் நெகிழ்கின்றனர்.
தல வரலாறு:
பெயரிலேயே ஒரு கம்பீரம். எந்த ஒரு ஆடம்பரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாத அமைதியான கோயில். மந்திரங்களைச் சொல்லி ஆராதனை செய்ய குருக்கள், அர்ச்சகர்கள் என யாரும் இல்லை. ஆனால் பூசாரி ஒருவர்தான் கற்பூர தீபராதனை காட்டி பூஜை செய்தார். அதில் எத்தனை பணிவு, பயபக்தி, இவை எல்லாம் இது ஒரு கிராமத்து கோயில் என்பதை உணர்த்துகிறது. கோவை, கணுவாய் கிராமத்தில் இந்திரா காலனியில் உள்ளது. இக் கோயில் சுமார் 150 ஆண்டுகள் தொன்மையான கோயில். அக்காலத்தில் அரசமரத் தடியில் நட்டுக்கல் வைத்து அம்மனையும் பரிவார தெய்வங்களான பல்வேறு மாரியம்மனை வைத்து வழிபட்டு வந்தனர்.
பின் தனிக்கோயில் அமைத்து பட்டத்தரசி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வரலாயினர். பார்வதி தேவியின் ஒரு அவதாரம் தான் பட்டத்தரசி அம்மன். மாதி சின்னான் என்பவர் ஒரு பெரிய நிலக்கிழார். நூற்றுக் கணக்கான பண்ணை நிலங்களுக்குச் சொந்தக்காரர். நெல், வாழை, கரும்பு என பல்வேறு இனப்பயிர்களை பயிரிட்டு வந்தார். ஒரு சமயம் ஒரு பசுமாடும் அதன் கன்றும் அவர் பண்ணையின் விளை நிலத்தில் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்துவிட்டது. விளை நிலங்களைப் பார்வையிட குதிரையில் வந்த சின்னான் நாசமான பயிர்களைக் கண்டு கடும் கோபம் கொண்டு கன்று குட்டியின் மீது அம்பை எய்து விட்டான். வலிதாங்க முடியாமல் அழுது துடிதுடித்தது. தாய்ப்பசு அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. காலையில் சிவ பூஜைக்குத் தேவையான பாலை இப்பசுதான் வழங்குகிறது. பின் பார்வதி தேவியிடம் சென்று அப்பசு அழுதது. கன்றுக்கு நேர்ந்த கதியைக் கேட்டு பார்வதி தேவியே மனம் வருந்தினார். முனியப்பனை அழைத்து, மாதி சின்னானை பச்சை பந்தலிட்டு கரகம் ஜோடித்து வைக்குமாறும் தான் அங்கு வருவதாகவும் தகவல் சொல்லும்படி உத்தரவிட்டார். அடுத்த நாள் காலையில் பார்வதி தேவி கையில் வாளுடன் பிரசன்னமானார், தேவியை கண்டவுடன் மாதி சின்னானும் அவன் குடும்பத்தாரும் தேவியை வணங்கி நின்றனர். அவன் மீது கொண்ட கோபத்தில் தன் வாளால் தலையைச் சீவி அக்குடும்பத்தையே நிர்மூலமாக்கினார். இதைக் கண்ட சின்னானின் பங்காளி ஓடிச் சென்று அரசாணி காட்டில் கொடிக்குள் புகுந்து ஒளிந்து கொண்டான். பின் அம்மனிடம் வந்து சரணடைந்தான். கன்றைத் தாக்கிய அக்குடும்பத்தையே நிர்மூலமாக்கி வெற்றிகண்ட தேவியை பட்டத்து அரசி என போற்றித்துதித்தனர். பட்டத்தரசி அவர்களிடம், உங்களுக்கு மந்திரம் பூஜை எல்லாம் தெரியாது. 7 நட்டுகல் வைத்து படையல் இட்டு காவல் தெய்வமான மதுரை வீரனுக்கு மண் சிலை செய்து படை வெட்டி பட்டத்தரசி அம்மனை (படையை வெட்டி அழித்ததால் இப்பெயர்) மனதில் நிறுத்தி அழைத்தால் நிச்சயம் நான் வருவேன். உங்கள் அருகில் இருந்து காத்தருள்வேன் எனக் கூறி மறைந்தார். அந்த ஏழு நட்டக்கல் தெய்வங்கள் முறையே மாரியம்மன், தண்டுமாரி, எல்லை மாரி, முத்துமாரி, சக்தியம்மன் தவிட்டு மாரி, கருமாரி என பூசாரி நினைவு கூர்ந்தார்.
படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பட்டத்தரசி அம்மனுக்குகென தனிக் கோயில் எழுப்பி இருந்தாலும் காலம் காலமாக பூஜித்துவரும் 150 ஆண்டுகளுக்கு மேல் வயதுள்ள அரச மரத்தடியில் நட்டக்கல் தெய்வங்களுக்கு இன்றும் தினசரி பூஜைகள் நடந்து வருவது சிறப்பு.