தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப்பூசம் இவற்றோடு மாத பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு அலங்கார ஆராதனைகள் இங்கே நடைபெற்று வருகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சிரவணமாபுரீஸ்வரர் திருக்கோயில்,
சரவணம்பட்டி,
அன்னுõர் வழி
கோயம்புத்தூர்.641035
போன்:
+91 9363225294
பொது தகவல்:
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் ஆதியில் ஓடு வேய்ந்த கோயிலாக இருந்தது. பின்னர் சுண்ணாம்பு கலந்த மட்டிக் காரையால் விமானங்களுடன் மாற்றி அமைக்கப்பட்டு, அதன்பின்னர் பல்வேறு கால கட்டங்களில் திருப்பணிகள் கண்டு, கற்கோயிலாக திருத்தி அமைக்கப்பட்டு, 17.9.15 விநாயகர் சதுர்த்தியன்று வெகுவிமர்சையாக திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடந்தேறி, தற்போது புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. கோயிலின் முன்புறம் மண்டபத்துடன் கூடிய விளக்குத்தூண் அமைந்துள்ளது. அதையடுத்து சுதைச் சிற்பங்கள் நிறைந்த விழா மண்டபம் எனும் மகா மண்டபம் எழிலோடு விளங்குகிறது.
இதன் மேற்புற முகப்பில் விநாயகர், பிரதோஷ நாயகர், வள்ளி -தெய்வயானை உடனமர் முருகன், சிவகாமியம்மை ஆகியோரது சுதைச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. முன் மகா மண்டபத்தில் ஈசனுக்கு எதிரிலும், தண்டாயுதபாணி சுவாமிக்கு எதிரேயும் நுழைவாயில்கள் உள்ளன. இச்சன்னிதிகளின் வடபுறத்தில் தண்டாயுதபாணி சுவாமிக்கு தனிச் சன்னிதி உள்ளது. கருவறையில் தண்டாயுதபாணி சுவாமி நின்ற கோலத்தில் வலக்கையில் தண்டத்தைத் தாங்கி, இடக்கையை இடுப்பில் வைத்து அற்புத அழகோடு அருள்பாலிக்கின்றார். பிராகாரத்தில் நால்வர், திருவருள் விநாயகர், கன்னிமார்கள், வைத்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஆதி தண்டாயுதபாணி, கால பைரவர் மற்றும் சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சரஸ்வதி, துர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் தேவகோட்டத்தில் வீற்றுள்ளனர்.
பிரார்த்தனை
தடைப்பட்ட திருமணங்கள், குழந்தைப்பேறு, கல்வி, பணிவாய்ப்புகள் போன்ற வேண்டுதல்கள் இத்தலம் வந்து வழிபட்டால் விரைவில் நிறைவேறுவதாக பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யப்படுகிறது.
தலபெருமை:
ஈசனுக்கான வாயில் வழியாக நுழைந்தால் நந்தியம் பெருமான் கம்பீரமாக வீற்றிருக்க, துவார பாலகர்கள் இருபுறமும் எழிலோடு காவல் புரிகின்றனர். உட்புற மகாமண்டபத்தில் மற்றொரு நந்திதேவர் வீற்றிருக்கின்றார். இதையடுத்து அர்த்தமண்டபமும், கருவறையும் உள்ளது. கருவறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ் சிரவணமாபுரீஸ்வரர் வீற்றிருப்பது சிறப்பு. ஈசனின் லிங்கத் திருமேனி, வட்ட ஆவுடையாரில் இருத்தப்பட்டுள்ளது. சுமார் நான்கடி உயரம் உள்ள லிங்கத் திருமேனி, முன்புறம் சற்றுப் புடைப்பாகவும், பின்புறம் சற்று குழிவாகவும் சீரற்ற வடிவில் அமைந்துள்ளது.
சுயம்பு மூர்த்தமாகையால் இவ்வாறு காடுமுரடாகக் காட்சியளிப்பதை அபிஷேகத்தின்போது மட்டுமே காணமுடிகிறது. அலங்காரம் செய்து நாகாபரணம் சாற்றிய நிலையில், செதுக்கப்பட்ட திருமேனி போலவே மிளிர்கிறது. மகா மண்டபத்தின் வட பகுதியில் தெற்கு நோக்கி சிவகாமியம்மையின் சன்னதி இருக்கிறது. சிவகாமியம்மை வலக்கையில் கருங்குவளை மலரை ஏந்தி, இடக்கையை கீழே தொங்கவிட்ட நிலையில் நின்ற திருக்கோலத்தில் புன்னகை ததும்ப தரிசனம் தருகின்றாள். இலை மற்றும் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய திருவாசி, சிலையுடன் இணைந்தே கல்லால் உருவாக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு.
தல வரலாறு:
அறுமுகக் கடவுளின் திருப்பெயர்களுள் ஒன்று சிரவணன். அந்தப் பெயரிலேயே ஓர் ஊர் இருப்பதும், அங்கே சிரவணமாபுரீஸ்வரர் என்ற பெயரோடு ஈசன் காட்சி தருவதும் சற்றே வித்தியாசமானது. கொங்கு நாட்டில் உள்ள அந்த ஊரின் பெயர், சரவணம்பட்டி. இங்கிருக்கும் சிரவணமாபுரீசுவரர் கோயில், இருநூறு ஆண்டுகள் பழமையானது. முருகனுக்கு செவ்வண்ணன் என்ற பெயர் உண்டு. இங்குள்ள ஒரு குன்றின் மீது முருகன் குடிகொண்டிருப்பதால் இப்பகுதி செவ்வண்ணன்பட்டி எனப் பெயர் பெற்று காலப்போக்கில் சரவணம்பட்டி என்றாகி, இன்று சரவணம்பட்டி என மருவி விட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் சிரவணமாபுரீஸ்வரர் சுயம்புவாகத் தோன்றியவர். சிவகாமி அம்பாள், தண்டாயுதபாணி மற்றும் விநாயகப் பெருமானும் இத்தலத்தில் வீற்றிருந்தாலும் பிள்ளையார்கோயில் என்றே அழைக்கப்பட்டு வந்தது. சிரவணபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு சிரவணமாபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டு, இன்று அவரும் சிரவணமாபுரீஸ்வரர் எனப் பெயர் மருவி அழைக்கப்படுகிறார். கருவறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ் சிரவணமாபுரீஸ்வரர் காட்சியளிக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கோவை - சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில், சரவணம் பட்டி, காவல் நிலையம் எதிரே கோயில் அமைந்துள்ளது. கோவை - காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பேருந்து தடம் எண். 15, 24, 45, 63, 111 மூலம் கோயிலை அடையலாம்.
இருப்பிடம் : கோவை - சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில், சரவணம் பட்டி, காவல் நிலையம் எதிரே கோயில் அமைந்துள்ளது. கோவை - காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பேருந்து தடம் எண். 15, 24, 45, 63, 111 மூலம் கோயிலை அடையலாம்.