ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, ஆடி வெள்ளி, பெரிய கார்த்திகை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மகாசிவராத்திரியன்று லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வருவார்கள். பல இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஏழு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழாவில் பிரதமை திதியன்று நடைபெறும் ஆறாம் திருவிழாமிகவும் பிரசித்தி பெற்றது.
தல சிறப்பு:
வீரத்திடல் என்று இன்றும் அழைக்கப்பட்டு வரும் இடத்தில் மற்ற பகுதி மண்ணைவிட இங்குள்ள மண் சிவந்து காணப்படுவது அதிசயம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
கிழக்கு நோக்கிய கோயில். வாயிலுக்கு எதிரே மயில் வாகன மண்டபமும், அதன் அருகே நொண்டி சோணை, அரிய சுவாமி, கருப்பணசாமி, செல்வவிநாயகர் சன்னதிகளும் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுர வாசல் தாண்டியதும் விஸ்தாரமான வசந்த மண்டபமும், பிராகாரச் சுற்றில் சங்கிலி கருப்பண்ண சுவாமி, மன்னரும், அமைச்சரும், பத்திர காளியம்மன், ஆதி பூசாரி, பெரிய கருப்பு, இருளப்ப சுவாமி, ராக்காச்சி அம்மன், இருளாயி அம்மன், பேச்சியம்மன், லாட சன்னாசி, அக்னி வீரபத்திரசாமி, முத்துக்கருப்பசாமி, பெருமாள், மகாலட்சுமி, அரசமர விநாயகர் சன்னதிகளும் அமைந்துள்ளன. வசந்த மண்டபம் தாண்டியதும் பலிபீடம், கொடி மரம், மயில் வாகன மண்டபம் ஆகியவை வரிசைக்கிரமமாக அமைந்துள்ளன. மயில் வாகனத்தின் இருபுறமும் நந்தீசரும், யானையும் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
சகடதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு பிரச்னைகளால் துன்பப்படுவோர் இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
தலபெருமை:
கலைநயமிக்க முகமண்டபம் தாண்டியதும் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன. கருவறைச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை தரிசனம் தருகின்றனர். மூலவர் விமானம் புராணச் சம்பவங்களை விளக்கும் அற்புத சிற்பங்களுடன் அமைந்துள்ளது. ஒவ்வொரு சஷ்டியன்றும் பகல் 12.30 மணி அளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை செய்யப்படுகிறது. சகடதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு பிரச்னைகளால் துன்பப்படுவோர் அதில் கலந்துகொண்டு, முருகனை வழிபட்டு தங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி, வாழ்வில் எல்லா வளமும் குறைவற கிடைக்கப் பெறுகிறார்கள்.
தல வரலாறு:
நான்கு பக்கமும் பச்சைப்பசேல் என வயல்கள் சூழ்ந்த அழகிய தலம், வீரக்குடி. இங்கு அழகன் முருகனுக்கு அருமையான கோயில் ஒன்று அமைந்துள்ளது. முருகையன்னார் திருக்கோயில் எனப்படும் இந்த கோயில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வீரக்குடி கிராமத்திலிருந்து சிலர் பல்வேறு பொருட்களை விற்பனைக்காக பக்கத்து ஊர்களுக்கு தினமும் கொண்டு செல்வது வழக்கம். பால் விற்கும் பெண்மணி ஒருவர் குடத்தில் பாலை எடுத்துக்கொண்டு பக்கத்து ஊருக்கு கண்மாய்க்கரை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வளர்ந்திருந்த வள்ளிக் கொடியில் அவளது தால் இடறி பால் சிந்தியது. இதை தற்செயல் சம்பவமாக அவளால் கருதமுடியவில்லை. காரணம் தொடர்ந்து அதே இடத்தில் பலமுறை இது நடந்தது.
ஒருநாள் கடும்கோபத்துடன் கோடரியை எடுத்துச்சென்று அந்தக் கொடியை அவள் வெட்ட, அந்த இடத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. அதனால் பயந்து போன அப்பெண் ஊருக்குள் தகவல் சொல்ல, மக்கள் திரண்டு வந்தனர். ஊர்ப் பெரியவரின் உத்தரவின் பேரில் அந்த இடத்தை மக்கள் தோண்டிய பார்க்க, அங்கே முருகன் சிலை கிடைத்தது. பின்னர் முறைப்படி கோயில் கட்டப்பட்டு முருகன் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டார். அன்று வள்ளிக்கொடியில் ரத்தம் பெருக்கெடுத்து இடம், வீரத்திடல் என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதி மண்ணைவிட இங்குள்ள மண் சிவந்து காணப்படுவது அதிசயம். கருவறையில் மூலவராக வள்ளி தெய்வானை சமேத முருகைய்யா, பாம்பின் மேல் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கண்மாய்க் கரையில் எழுந்தருளியுள்ளதால் இவருக்கு கரைமேல் முருகன் என்றொரு சிறப்புப்பெயரும் வழங்கப்படுகிறது. பலருக்கும் இவர் குலதெய்வம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வீரத்திடல் என்று இன்றும் அழைக்கப்பட்டு வரும் இடத்தில் மற்ற பகுதி மண்ணைவிட இங்குள்ள மண் சிவந்து காணப்படுவது அதிசயம்.