சித்ரா பவுர்ணமி, ராமானுஜர் விழா, நம்மாழ்வார் விழா, கிருஷ்ணஜெயந்தி, தனுர்மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் என ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் மூன்று நாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்,
விழுப்பனூர்,
விருதுநகர்.
பொது தகவல்:
சாலக்கோபுர வாசல் தாண்டியதும் விஸ்தாரமான பிராகாரச் சுற்று. அதில் பலிபீடம் மற்றும் கருடாழ்வார் மண்டபமும், அதனைத் தாண்டியதும் முப்பது கால் முகமண்டபமும், அதன் தென்புறம் சக்கரத்தாழ்வார் சன்னிதியும் உள்ளது. மண்டபத்தின் வடபுறம் தெற்குப் பார்த்த வண்ணம் அனுமன் சன்னிதி காணப்படுகிறது. முக மண்டபத்தை அடுத்து மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டப வாசலில் துவாரபாலகர்கள் உள்ளனர். காளிங்கநர்த்தனம் ஆடிடும் கிருஷ்ணபரமாத்மா, நம்மாழ்வார், ராமானுஜர் திருமேனிகள் உள்ளன. தெற்கு பிராகாரச்சுற்றில் நந்தவனம் பச்சைப்பசேல் என பூத்துக்குலுங்குவதைக் காணலாம். மூலவர் விமானத்தில் கருடாழ்வார், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர், ராமானுஜர் ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலவிருட்சமான வேம்பு, வடக்கு பிராகாரத்திலும், அதன் அருகே தீர்த்தக் கிணறும், கிழக்கு பிராகாரத்தில் நாகர் சன்னிதியும் காணப்படுகிறது.
பிரார்த்தனை
மாங்கல்யம் தடைப்படுவோர் இங்கு முக்கியபிரார்த்தனை திகழ்வதால் ஏராளமான பக்தர்கள் வேண்டுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
மாங்கல்ய பாக்யம் தடைப்படுவோர் அனுமன் சன்னிதி வாசலில் புது வஸ்திரத்தில் மட்டைத் தேங்காயைக் கட்டித் தொங்கவிட்டு வேண்டிக்கொண்டால் விரைவில் அவர்களுக்கு மாங்கல்ய பாக்யம் கூடி வரும். அதன் பின் தம்பதியராக இங்கு வந்து சுந்தர்ராஜப் பெருமாளையும் அனுமனையும் சேவித்துவிட்டு அந்த மட்டைத் தேங்காயை அவிழ்த்து எடுத்துச்செல்வது வழக்கமாக உள்ளது.
தலபெருமை:
கோயிலின் எதிரே தீர்த்தக்குளம் வெகு விஸ்தாரமாக அமைந்துள்ளது. தெப்பக்குளத்தின் எதிரே கலைநயமிக்க நாலு கால் மண்டபம் உள்ளது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோயில் ஆடி மாத பிரம்மோற்சவ வைபவத்தின் மூன்றாம் திருநாளன்று, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் இவ்வூருக்கு விஜயம் செய்து, நாலு கால் மண்டபத்தில் ஒரு நாள் முழுவதும் எழுந்தருளியிருப்பாள். ஆனால், என்ன காரணத்தினாலோ கடந்த 50 வருடக்காலமாக இப்புராதன வழக்கம் தொடராமல் நின்று போயுள்ளது. கி.பி 1911-ல் இங்கிலாந்தின் பேரரசராக ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டிக்கொண்ட வைபவம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பாரதத்தில் பரவலாகக் கொண்டாடப்பட்டது. அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்த விளக்குத் தூணும். கல்வெட்டும் தெப்பகுளக்கரையில் இருக்கின்றன. இது போன்ற விளக்குத் தூணை திருவாதவூரிலும் காணலாம். இத்தலத்துப் பெருமாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.
தல வரலாறு:
மூவடியால் உலகளந்த பெருமாளின் சாந்நித்யம் பரிபூரணமாகத் திகழும் பழம் பெருமை வாய்ந்த திருத்தலம், விழுப்பனூர். நிலவளம், நீர்வளம், மலைவளம் மிக்க செழிப்பான பகுதியான இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகர் என்ற சுந்தர்ராஜப்பெருமாள் எழுந்தருளியுள்ளார். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலத்தில், அதாவது கி.பி. 1242-ல் இத்திருக்கோயில் கல்கட்டுமானமாக உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இவ்வூர், தென்னவன் பொன்பற்றி விழுப்பரைய நல்லூர் என்றும், கோயில் சுந்தரத்தோள் விண்ணகர ஆழ்வார் கோயில் என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. மேலும் திருமல்லிநாடு என்னும் நாட்டுப் பகுதியில் இவ்வூர் அடங்கியிருந்தது. சுமார் 800 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இவ்வூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் மல்லி எனும் ஊர் இருப்பது ஆச்சர்யம்.
அக்காலத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த திருவிழாவில், பெருமாள் வீதி உலா வருவதற்கு ஏதுவாக ஐம்பொன்னாலான உற்சவத் திருமேனிகளை சிங்கவள நாட்டைச் சேர்ந்த விளத்தூர் அழகன் உய்யவந்தானான நந்திவன்மன் செய்து தந்தது, அன்றாட பூஜை கைங்கர்ய பணிகளுக்காக தென்னவன் பொன் பற்றி என்னும் மன்னன் விழுப்பரைய நல்லூருக்குப் பக்கத்தில் உள்ள கூவாணி, மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களுக்கு வரிநீக்கி தானமாக வழங்கப்பட்ட செய்தியும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கிணறு ஒன்றை மலை மண்டலத்தைச் (கேரளம்) சேர்ந்த ஒருவன் வெட்டி வைத்து கல்மடை, துலாக்கால், பத்தை முதலியவற்றை செய்து வைத்துள்ளான். கிழக்குப் பார்த்தகோயில், வெகு கம்பீரமாக பல நூற்றாண்டுகள் கடந்து சாந்நித்யத்துடன் திகழ்வதைக் காணமுடிகிறது. கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அழகர் என்கிற சுந்தர்ராஜப் பெருமாள் பேரழகோடு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.