சிவபெருமான் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பராமரிக்க கவுதம முனிவரை நியமித்தார். கவுதம முனிவர் இத்தலத்தில் தவம் செய்து இறைவனின் அருள் வேண்டினார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் வேண்டும் வரம் கேள்,'என்றார். அதற்கு முனிவர் இறைவா! நான் இறந்த பின் எனது உடலை யாரும் பார்க்க கூடாது. ஏனெனில் உனக்கு சேவை செய்ய வந்தவன் நான். சிவனை வணங்க வருபவர்கள், முனிவராகிய என்னையும் சேர்த்து வழிபாடு செய்வார்கள். எனவே என்னை இத்தலத்தின் தலவிருட்சமாக ஏற்று அருள்புரியுங்கள் என்றார். இறைவனும் அதன்படி அருள்புரிந்தார். எனவே தான் அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள்.
கரவீரம் என்பதற்கு பொன்னலரி என்பது பொருள். அலரியைத்தலமரமாக கொண்டதால் இத்தலம் கரவீரம் எனப்படுகிறது.திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
கழுதைக்கு முக்தி: சிவபெருமானின் தரிசனம் வேண்டி ஒரு கழுதை இத்தலத்தில் தவம் இருந்தது. தரிசனம் கிடைக்காத வருத்தத்தில் நாகூர் வரை நடந்து சென்று கடலில் விழ இருந்தது. அப்போது ஏதோ சப்தம் கேட்க, கழுதை திரும்பி பார்த்த போது இத்தலத்தில் இருந்தபடியே இறைவன் தரிசனம் தந்து, மோட்சம் அளித்தார் என புராணம் கூறுகிறது. எனவே தான் சிவனின் எதிரில் கொடிமரமும், நாகூர் வரை வீடுகளும் கிடையாது.
இத்தலத்து சிவபெருமான் கழுதைக்கு மோட்சம் அளித்துள்ளார். எந்த உயிரினமாக இருந்தாலும் உண்மையான பக்தி இருந்தால் சிவதரிசனம் நிச்சயம் என்பதை இதன் மூலம் அறியலாம்.
|