ராஜகோபாலர் இக்கோயிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய "குழந்தை' அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.மதுரை கள்ளழகர் கோயில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்,
மன்னார்குடி - 614 001.
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91- 4367 - 222 276, +91- 94433 43363,94433 65165
பொது தகவல்:
இந்த கோயிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன. பொதுவாக ராஜகோபுரத்தில், எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை.
ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது. திருவாரூர் தேரழகு என்பதுபோல, "மன்னார்குடி மதிலழகு' என்பது சொல் வழக்காக உள்ளது.
இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.
பிரார்த்தனை
சுவாமியிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும், திருமண, புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. கால்நடைகள் நோயின்றி வாழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்தும், பசுக்களை தானம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
தலபெருமை:
கிருஷ்ண லீலை: கிருஷ்ணரின் பெற்றோர் வசுதேவர், தேவகி. இவ்விருவரையும் கம்சன் சிறையில் அடைத்தபோது பெருமாள் அவர்கள் முன்பு தோன்றி தானே அவர்களுக்கு பிள்ளையாக பிறக்கப்போவதாக கூறினார். இதுவே அவரது முதல் லீலை. தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர், கோபிரளயர் என்ற முனிவர்களுக்கு முதலில் வாசுதேவராக காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார்.
இந்நிகழ்வின் அடிப்படையில் இக்கோயிலில் மூலவர் "வாசுதேவர்' என்ற பெயரிலும், உற்சவமூர்த்தி ராஜகோபாலசுவாமியாகவும் காட்சி தருகிறார். தினமும் காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கும்போது பசு, யானைக்கு பூஜை செய்யப்படுகிறது. உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் "மன்னார்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.
சுவாமி அமைப்பு: ராஜகோபாலர் இக்கோயிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய "குழந்தை' அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. கிருஷ்ண, பலராமரை அழிக்க கம்சன் குவலயாபீடம் என்னும் யானையை ஏவிவிட்டான்.
கிருஷ்ணன், யானையின் தந்தத்தை ஒடித்து அதனை அடக்கினார். இதன் அடிப்படையில் இவர் இடது கையில் தந்தமும் இருக்கிறது. ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி! போட்டி துவங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் தாடங்கத்தை (காதணி) எடுத்து அணிந்து கொண்டார்.
கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர். மதுரை கள்ளழகர் கோயில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது.
வெண்ணெய் கண்ணன்: பங்குனியில் 18 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. கிருஷ்ணருக்காக அமைந்த கோயில் என்பதால் 18க்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா நடத்தப்படுகிறது (குருக்ஷேத்ர யுத்தம் நடந்த நாட்கள் மற்றும் கீதையின் அத்தியாயம் 18). இவ்விழாவை, "பார் புகழும் பங்குனி பிரம்மோற்ஸவம்' என்று குறிப்பிடுகிறார்கள்.
இவ்விழா நடக்கும் நாட்களில் கிருஷ்ணனின் 32 லீலைகளில், சுவாமியை அலங்காரம் செய்வது விசேஷம். பிரம்மோற்ஸவத்தின் 16ம் நாளில் "வெண்ணெய் தாழி' உற்சவம் நடக்கிறது. அப்போது சுவாமியை தவழ்ந்த கோலத்தில், கையில் வெண்ணெய்ப்பானையுடன் வீதியுலா செல்கிறார்.
அந்நேரத்தில் சுவாமிக்கு வெண்ணெயை பிரதான நைவேத்யமாக படைக்கின்றனர். அலங்காரம் முடிந்து இவர், ஊருக்குள் உள்ள மண்டபத்திற்கு செல்கிறார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் இவர் மீது வெண்ணெயை வீசுகிறார்கள். அன்று மாலையில் இவர் குதிரை வாகனத்தில் அங்கிருந்து சன்னதிக்கு திரும்புகிறார். இவ்விழாவில் ஆண்டாள் கோலத்திலும், இரண்டு முகமுடைய "கண்டபேரண்ட பட்சி' என்னும் பறவை வாகனம், பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனத்தில் மரவுரி தரித்த ராமர் வேடத்தில் எழுந்தருளுவது விசேஷம்.
கோயில் சிறப்பு: செங்கமலத்தாயார் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவரது அவதார நட்சத்திரமான பூசத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. தை 4ம் நாள் மட்டும் சுவாமி, தாயாருடன் சேர்ந்து "ஏக சிம்மாசனத்தில்' காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.
திருமண, புத்திரதோஷம் உள்ள பெண்கள் இந்த கருடனுக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இது பெருமாள் தலமாயினும், கண்ணனுக்குரியது என்பதால் அவருக்கு முன்பிறந்த "மாயா', "துர்க்கை' என்னும் பெயரில் அருளுகிறாள்.
இவள், வாசுதேவப்பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் இருக்கிறாள். ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது. புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.
தல வரலாறு:
திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் இருந்தனர். இவ்விருவரும் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை கிளம்பினர். வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்துவிட்டதாக கூறினார். அதைக்கேட்டதும் முனிவர்கள் மயக்கமாயினர். நாரதர் அவர்களை எழுப்பி தேற்றினார். கண்ணனைக் காண அவரது ஆலோசனைப்படி தவமிருந்தனர். பகவான் "கிருஷ்ணராக' அவர்களுக்கு காட்சி தந்தார். அவரிடம் தங்களுக்கு கிருஷ்ணலீலையைக் காட்டும்படி வேண்டினர். அவர் தனது 32 லீலைகளைக் காட்டியருளினார். அவர்களது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.