காலை 7.30 - 10 மணி, மாலை 6 - இரவு 8 மணி. மதிய வேளையில் கோயில் அருகிலுள்ள அர்ச்சகரை அழைத்துக்கொண்டு, சுவாமியை தரிசனம் செய்யலாம். இத்தலத்திற்கு செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.
இத்தலவிநாயகர் சக்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். வீரபத்திரர் தனிக்கோயில் மூர்த்தியாக அருளும் இத்தலத்தில், சுவாமிக்கு நேரே கொடிமரம் இருக்கிறது. முற்காலத்தில் இவருக்கு தனியே பிரம்மோற்ஸவம் நடந்துள்ளது. காலப்போக்கில் கோயில் சிதிலமடையவே திருவிழாவும் நின்றுவிட்டது. தற்போது சித்ரா பவுர்ணமியன்று ஒருநாள் விழா மட்டும் நடக்கிறது. சிவன் கோயில்களில் விசேஷ நாட்களின்போது, சுவாமி தனது வாகனமான நந்தியின் மீது சோமாஸ்கந்த வடிவில் (முருகன், அம்பாளுடன் கூடிய வடிவம்) எழுந்தருளுவார். ஆனால் இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியின்று காலையில் வீரபத்திரர், அம்பாள் மற்றும் விநாயகருடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி, கோயிலில் இருந்து சற்று தூரத்திலுள்ள குற்றலை (குசஸ்தலை) நதிக்கு செல்கிறார். விநாயகருக்கு முக்கியத்துவம் தரும்விதமாக, அவர் சுவாமியுடன் எழுந்தருள்வதாக சொல்கிறார்கள்.
வீரபத்திரர் சிறப்பு: இத்தலத்து வீரபத்திரர் மண்ணிலிருந்து தாமாக கிடைத்தவர் என்பதால், "தான்தோன்றி வீரபத்திரர்' என்றும், "மண்ணில் கிடைத்த தங்கம்' என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். வீரபத்திரர் சிவனின் அம்சம் என்பதால், ஐப்பசி பவுர்ணமியன்று இவருக்கே அன்னாபிஷேகம் செய்வதும், மார்கழி திருவாதிரையன்று (ஆருத்ரா தரிசனம்) விசேஷ பூஜை மற்றும் வழிபாடு நடப்பதும் சிறப்பு. செவ்வாய்க்கிழமைகளில் இவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப் படுகிறது.வீரபத்திரர் சன்னதி எதிரிலுள்ள மண்டபத்தில் நந்தி வாகனம் இருக்கிறது. அருகில் ஐயப்பனுக்குரிய யானை மற்றும் விநாயகருக்குரிய மூஞ்சூறு வாகனங்களும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. பிரதோஷத்தன்று மாலையில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது நந்தி, யானை, மூஞ்சூறு ஆகிய மூன்று வாகனங்களுக்கும் அபிஷேகம் செய்கின்றனர். வீரபத்திரருக்கு இடப்புறத்தில் சண்டிகேஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள், பயப்படும் குணம் உள்ளவர்கள் சுவாமிக்கு சர்க்கரை, மிளகுப்பொங்கல், மிளகு வடை, சுண்டல் படைத்து, வெற்றிலை மாலை சாத்தி, சந்தனக்காப்பு செய்தும், அம்பாளுக்கு தாலிப்பொட்டு காணிக்கையாக செலுத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள்.
பத்ராம்பிகை சிறப்பு: மூதாட்டி வழிபட்ட பத்ராம்பிகை சிலை, மரகதக்கல்லால் ஆனது. எனவே இவள், "மரகத பத்ராம்பிகை' என்றே அழைக்கப்படுகிறாள். இந்த அம்பிகை கைகளில் சூலம், கத்தி, உடுக்கை மற்றும் தண்டாயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். அருகில் மூதாட்டி நின்று வணங்கிய கோலத்தில் இருக்கிறாள். பிரகாரத்தில் அகோர வீரபத்திரர் இருக்கிறார். மூலவருக்கு பூஜை நடந்தபின்பு, இவருக்கும் பூஜை செய்யப்படுகிறது. சோமசுந்தரர், சுந்தராம்பிகை, மகாலட்சுமி, கங்காதேவி, சனீஸ்வரர், பைரவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.
தல வரலாறு:
முற்காலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில வியாபாரிகள், நவரத்தினக்கல் வியாபாரம் செய்வதற்காக தென்திசை நோக்கி வந்தனர். அவர்களில் வயதான மூதாட்டி ஒருத்தியும் வந்தாள். அம்பாள் பக்தையான அவள், தன்னுடன் ஒரு அம்பாள் சிலையையும் எடுத்து வந்தாள். தான் தங்குமிடங்களில் அம்பாளை வழிபட்டு, மீண்டும் பயணத்தை தொடரும்போது சிலையை எடுத்துச் செல்வது அவளது வழக்கம். வியாபாரிகள் ஒருநாள் இத்தலத்தில் தங்கினர். வழக்கம் போல் அம்பாளுக்கு பூஜை செய்து வணங்கிய மூதாட்டி, சிலையை எடுக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. உடன் இருந்த வியாபாரிகளும் சிலையை எடுக்க முயன்று, முடியாமல் விட்டுவிட்டனர். காரணம் தெரியாத வியாபாரிகள், மறுநாள் கிளம்ப நினைத்து அன்றும் இத்தலத்திலேயே தங்கினர். அன்றிரவில் மூதாட்டியின் கனவில் தோன்றிய அம்பிகை, தான் இருக்கும் இடத்திற்கு அருகில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு வீரபத்திரர் இருப்பதாக உணர்த்தினாள். மூதாட்டி இதை வணிகர்களிடம் கூறினாள். அவர்கள் அவ்விடத்தில் தோண்டியபோது, வீரபத்திரர் சிலை இருந்ததைக் கண்டனர். பின்னர் அங்கேயே அவரை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். அம்பாள் குறிப்பால் உணர்த்தி கிடைக்கப்பெற்ற மூர்த்தி என்பதால் இவர், "கல்யாண வீரபத்திரர்' என்று பெயர் பெற்றார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள பத்ராம்பிகை சிலை மரகதக்கல்லால் ஆனது.
இருப்பிடம் : சென்னையில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் 35 கி.மீ., தூரத்தில் ஆண்டார்குப்பம் என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 2 கி.மீ., சென்றால் சென்னிவாக்கத்தை அடையலாம். குறித்த நேரத்தில் மட்டும் மினிபஸ் செல்கிறது. ஆட்டோ வசதி உண்டு. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மின்சார ரயிலில் பொன்னேரி சென்று, அங்கிருந்து பஸ்களில் இத்தலத்திற்கு செல்லலாம்.