சிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம். செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.
தல சிறப்பு:
வீரபத்திரர் இத்தலத்தில், மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு கல்யாணசுந்தர வீரபத்திரர் என்று பெயர். அக்னி கிரீடத்துடன், நான்கு கரங்களில் வில், அம்பு, கத்தி, தண்டம் வைத்திருக்கிறார். காலில் காலணி உள்ளது. வலப்புறம் தட்சன் வணங்கியபடி இருக்கிறான்.
திறக்கும் நேரம்:
காலை 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் கோயில்,
மாநெல்லூர் - 601 202.
கும்மிடிப்பூண்டி தாலுகா,
திருவள்ளூர் மாவட்டம்.
போன்:
+91- 44 - 2799 1508, 99656 51830.
பொது தகவல்:
முன் மண்டபத்தில் பத்ரகாளி சன்னதி உள்ளது. அக்னி கிரீடத்துடன் காட்சி தரும் இவளுக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு நிற புடவைகளை மட்டுமே அணிவிக்கிறார்கள். அளவில் சிறிய இக்கோயிலில் விநாயகர் மட்டுமே பரிவார மூர்த்தியாக இருக்கிறார்.
பிரார்த்தனை
திருமண, புத்திர தோஷ நீங்க, மனக்குழப்பம் தீர, குடும்பத்தில் பிரச்சனை தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வீரபத்திரருக்கு சர்க்கரைப்பொங்கல், சுண்டல் படைத்து, வடை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இங்கு ஒரு வித்தியாசமான பிரார்த்தனை செய்கிறார்கள். கோயிலுக்கு அதிகாலையில் வந்து, 9 விரலி மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு, 9 முறை பிரகார வலம் வருகின்றனர். சுற்றுக்கு ஒன்றாக பலிபீடத்தில் ஒரு மஞ்சளை வைக்கின்றனர். வலம் முடிந்ததும், 9 மஞ்சளையும் எடுத்து அம்பாள் பாதத்தில் வைக்கின்றனர்.தட்சனின் யாகத்தை அழித்தபோது, பார்வதி தேவி உக்கிரமானாள். அந்நிலையில் அவள் "பத்ரகாளி' எனப்பட்டாள்.இவள் மேலும் எட்டு காளிகளை உருவாக்கி, நவகாளிகளாக இருந்து யாகத்தை அழிக்க வீரபத்திரருக்கு உதவினாள். இதன் அடிப்படையில் 9 மஞ்சள் வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். இந்த மஞ்சளில் நவ காளிகளும் எழுந்தருளுவதாக ஐதீகம்.பின்பு சுவாமி சன்னதி எதிரில் படுத்து "குட்டித்தூக்கம்' போடுகின்றனர். தூக்கம் என்பது தன்னை மறந்த ஒரு நிலை. ஆழ்நிலை தியானத்தில் மூழ்குபவர்கள், தன்னை மறந்து விடுகிறார்கள். அதுபோல், தூக்கமும் ஒரு வகை சமாதிநிலை தியானமே. இறைவனிடம் "முற்றிலுமாக சரணடைதல்' என்ற தத்துவத்தை இது உணர்த் துகிறது.தன்னை நம்பி, தன்னிடம் சரணடைந்த பக்தர்களுக்கு வீரபத்திரர் குழந்தை பாக்கியத்தை விரைவாக அருளுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு செய்யகின்றனர். இக்கோயிலை, "தூக்க கோயில்' என்கிறார்கள்.
வீரபத்திரர் ஹோமம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ, பயப்படும் குணம், மனக்குழப்பம் நீங்க, புத்திரப்பேறு உண்டாக இத்தலத்தில் தம்பதி சமேதராக "வீரபத்திரர் ஹோமம்' செய்கின்றனர். ஹோமம் முடிந்ததும், சுவாமிக்கு பின்புறம் உள்ள மரத்தாலான இரண்டு திருவாசிகள் அவர்கள் கையில் தரப்படுகிறது. அதில் வெற்றிலை செருகி, தலையில் சுமந்து பிரகாரம் சுற்றி வருகின்றனர். திருவாசிகளை உற்சவர் சிலைக்கு பின்புறம் வைக்கின்றனர்.சுண்டல், பச்சைப்பயிறு, உளுந்து, மிளகு ஆகியவை கலந்த வடை படைத்து விசேஷ பூஜை செய்கின்றனர். பின்னர், சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர். இந்த யாகம் நடத்த 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
தல வரலாறு:
சிவன், நடராஜராக நடனமாடும் பஞ்சசபைகளில் ரத்னசபையாக விளங்குவது திருவாலங்காடு. இங்கு, சிவன், அம்பிகை இடையே நடனப்போட்டி நிகழ்ந்தபோது, சிவனின் நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அம்பிகை தோற்றாள். தோல்வியால் வெட்கப்பட்ட அவள், இத்தலம் வந்தாள். அப்போது சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி அம்பிகையை அழைத்து வரும்படி கூறினார். வீரபத்திரர், அம்பிகையை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் வீரபத்திரருக்கும், அம்பிகையின் அம்சமான பத்ரகாளிக்கும் கோயில் எழுப்பப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வீரபத்திரர் இத்தலத்தில், மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு, "கல்யாணசுந்தர வீரபத்திரர்' என்று பெயர். காலில் காலணி உள்ளது.
இருப்பிடம் : சென்னை கோயம்பேடில் இருந்து சத்திவேடு செல்லும் வழியில் 57 கி.மீ., தூரத்தில் மாதர்பாக்கம் என்ற ஊருக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து 2 கி.மீ., தூரம் சென்றால் மாநெல்லூரை அடையலாம். மாதர்பாக்கத்திலிருந்து ஆட்டோ உண்டு.