பஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது. ராகு, கேதுவுக்கு தனிசன்னதி உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில்,
தென்காளஹஸ்தி,
உத்தமபாளையம் -625533,
தேனி மாவட்டம்.
போன்:
+91- 4554 - 265 419, 93629 93967.
பொது தகவல்:
இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்து பகவான், பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் காட்சி தருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேலே சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் பூஜிக்கும் சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலியும் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து, சூரிய மண்டல ஆகாய ராசி சக்கரம் இருக்கிறது. நடுவில் சூரியபகவான், நின்றிருக்க அவரைச் சுற்றிலும் 12 ராசிகள் இருக்கிறது.
சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம் இல்லாமல் காட்சி தருகிறார். லிங்கோத்பவர், தனிச்சன்னதி அமைப்பில் இருக்கிறார். அருகில் பிரம்மா, பெருமாளும், எதிரே நந்தியும் இருக்கிறது. காசி விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பராசக்தியுடன் சகஸ்ரலிங்கத்திற்கு பிரகாரத்தில் சன்னதிகள் இருக்கிறது.
பவுர்ணமியன்று சகஸ்ர லிங்கத்திற்கு விசேஷ பூஜைகள் நடக்கும். தட்சிணாமூர்த்தி அருகில் நின்றுகொண்டு கன்னிமூல கணபதி, விஸ்வநாதர், சொக்கநாதர், சகஸ்ரலிங்கம் ஆகிய மூர்த்திகளை ஒரே சமயத்தில் தரிசிக்கலாம்.
பிரார்த்தனை
ராகு, கேது தோஷ நிவர்த்தி பெற இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாள், ராகு, கேதுவிற்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஆற்றில் வந்த அம்பிகை!: காளாத்திநாதர் இங்கு எழுந்தருளியபின்பு, அம்பிகைக்கு சன்னதி அமைக்க பக்தர்கள் விரும்பினார். இதற்காக பல சிலைகள் அமைத்தும், சிலை சரியாக அமையவில்லை. இதனால் அம்பிகை இல்லாத தலமாகவே இக்கோயில் திகழ்ந்தது. ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், "அம்பிகை முல்லைப்பெரியாற்றில் வருவாள்!' என்றார். அதன்படி, ஒருசமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது, ஒரு கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்பிகையின் சிலை இருந்தது. மகிழ்ந்த பக்தர்கள் அம்பிகையை இங்கே பிரதிஷ்டை செய்தனர். காளாத்தியில் அருளும் அம்பிகையின் பெயரால், "ஞானாம்பிகை' என பெயர் சூட்டினர். இந்த அம்பிகையின் முகத்தில் ஆற்றில் அடித்துவரப்பட்டபோது ஏற்பட்ட தழும்புகள் இருப்பதை தற்போதும் காணலாம். இந்த அம்பிகை இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவளாக அருளுகிறாள். கோயிலும் இவளது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இப்பகுதியில், "ஞானாம்பிகை கோயில்' என்றால்தான் தெரியும். காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை இருவருக்குமிடையே சண்முகர் (சோமாஸ்கந்த அமைப்பில்) தனிச்சன்னதியில் இருக்கிறார். கோயில்களில் ஒரு சன்னதியில் நின்று ஒரு சுவாமியையே தரிசிக்க முடியும். ஆனால் இங்கு ஒரே சமயத்தில் அம்பிகை, முருகப்பெருமான் இருவரையும் தரிசிக்கலாம். அம்பாள் சன்னதிக்கு எதிரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. இதற்கு அருகில் அமர்ந்து கொண்டால், இவ்விருவரின் தரிசனமும் நமக்குக் கிடைக்கிறது. இத்தகைய தரிசனம் கிடைப்பது அபூர்வம். தாய், மகன்களின் ஒற்றுமைக்கான பிரார்த்தனை தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. மகனைப்பிரிந்துள்ள தாயார், இங்கு வேண்டிக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்வர் என்கிறார்கள்.
பிறந்த வீட்டு சீர்!: ஆற்றில் வந்த அம்பாள், இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள கோகிலாபுரம் என்ற இடத்தில் கிடைக்கப்பெற்றாள். எனவே, இவ்வூரை அம்பிகையின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர். சிவன், அம்பிகை திருக்கல்யாணம் நடக்கும்போது, இவ்வூரிலிருந்து பக்தர்கள் அம்பிகைக்கு பிறந்த வீட்டுச் சீரும், தங்களது மருமகனான சிவனுக்கு வஸ்திரங்களும் கொண்டு வருகின்றனர். இதையே சிவன், அம்பிகைக்கு அணிவித்து பூஜிக்கிறார்கள்.
வாஸ்து பகவான்: முல்லைப்பெரியாற்றின் மேற்கு கரையில் அமைந்த கோயில் இது. காசியில் கங்கை நதி தெற்கிலிருந்து, வடக்கு திசை நோக்கி ஓடுகிறது. இதன் கரையில் கோயில் கொண்டுள்ள காலபைரவர், மிக விசேஷமான மூர்த்தியாக வழிபடப்படுகிறார். இதைப்போலவே இங்கும் பெரியாறு நதி, உத்தரவாகினியாக வடக்கு நோக்கி ஓடுகிறது. இதனால் இக்கோயிலில் உள்ள பைரவரும், சிறப்பான மூர்த்தியாக வழிபடப்படுகிறார். செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தி கிடைக்கவும் இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். ஜாதகத்தில் நட்சத்திரம், ராசி தோஷம் உள்ளவர்களும், நிலம், பூமி தொடர்பான பிரச்னை உள்ளவர்களும் வாஸ்து, சூரிய ராசி சக்கரங்களின் கீழ் நின்று சிவனை தரிசித்துச் செல்கிறார்கள்.
கண் நோய் நிவர்த்தி தலம்: பஞ்சபூத தலங்களில் காளஹஸ்தி, வாயு தலமாக இருக்கிறது. இதேபோல இத்தலத்தில் சிவன், வாயு அம்சமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே இவருக்கு, "வாயுலிங்கேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. வாயுவை தொடமுடியாது என்பதால் இவரை "தீண்டாத்திருமேனியன்' என்றும் அழைக்கிறார்கள். வேடுவரான கண்ணப்பருக்கு காளஹஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தருளினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கண்ணப்பருக்கு சன்னதி இருக்கிறது. கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் காட்சி தருகிறார் இவர். சிவராத்திரியன்று இரவில் காளாத்தீஸ்வரர், கண்ணப்பர் இருவருக்கும் விசேஷ பூஜை நடக்கும். கண் தொடர்பான நோய் உள்ளவர்கள் இவ்விருவருக்கும் வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். அஷ்டமாதர்: கோயில்களில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய சப்த மாதர்களையே தரிசித்திருப்பீர்கள். ஆனால் இக்கோயிலில் "அஷ்ட மாதர்களை' (எட்டு அம்பிகையர்) தரிசிக்கலாம். ஆதிசக்தியிலிருந்து ஏழு அம்சங்களாக ஏழு தேவியர் தோன்றினர் என்றும், அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள். இவர்களது தரிசனம் விசேஷ பலன் தரக்கூடியது. மடியில் வீணையை வைத்து இரண்டு கைகளாலும் மீட்டியபடி காட்சி தரும் சரஸ்வதி, இங்கு இடது கையில் வீணையைப் பிடித்தபடி காட்சி தருகிறாள். வலது கையில் அட்சர மாலை வைத்திருக்கிறாள். இத்தகைய அமைப்பில் சரஸ்வதியைக் காண்பது அரிது.
மனைவியருடன் ராகு, கேது: பிரகாரத்தில் குபேரர், ஐஸ்வர்ய லட்சுமியுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவர்களுக்குப் பின்புறம் மகாலட்சுமியும் இருக்கிறாள். அட்சய திரிதியையன்று குபேரருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவருக்கு திரிதியை நாட்களில் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். கோயில்களில் ராகு, கேது இருவரும் நவக்கிரக மண்டபத்தில்தான் காட்சி தருவர். திருநாகேஸ்வரத்தில் ராகுவும், கீழப்பெரும்பள்ளத்தில் கேதுவும் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் இவ்விருவரும் மனைவியருடன் அருளுகின்றனர். இவர்கள் இருவரும் சுயரூபத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு. ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு, சிம்ஹிகையுடனும், கேது, சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர். இவர்களது சன்னதிக்கு தனித்தனி துவாரபாலகர்களும் இருக்கின்றனர். ஏழு நாக தேவதைகளும் இவரது சன்னதியில் சுதை சிற்பமாக வடித்துள்ளனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவர்களுக்கு விசேஷ பாலபிஷேகம் செய்கின்றனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 - 6 மணி) இவர்களது சன்னதியில், "சர்ப்பதோஷ பரிகார ஹோமம்' நடக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு, ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவர்களது சன்னதியில் ஹோமத்துடன் பரிகார பூஜையும், திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
விஷராஜா: நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கு கருப்பு நிறம் உகந்தது. எனவே இந்த நிறத்திலான வஸ்திரத்தையே அணிவித்து வழிபடுவர். ஆனால், இக்கோயிலில் சனீஸ்வரருக்கு, பச்சை நிற வஸ்திரத்தை அணிவிக்கிறார்கள். கல்விக்கு அதிபதியான புதனுக்குத்தான், பச்சை வஸ்திரம் அணிவிப்பர். ஆனால் கல்வியில் சிறப்பிடம் பெற சனீஸ்வரருக்கு, இவ்வாறு பச்சை வஸ்திரம் அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது. காளாத்தீஸ்வரர் கோயிலுக்கு வெளியில் விஷராஜா இருக்கிறார். இவருக்கு சன்னதி கிடையாது. இவரது சிலையைச் சுற்றி சிறிய சுவர் மட்டும் இருக்கிறது. இவர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் இங்கு வரும் பக்தர்களுக்கு அருளுவதாக ஐதீகம். பாம்பு மற்றும் விஷ பூச்சிகளால் கடிபட்டவர்கள் பவுர்ணமியன்று இவருக்கு வஸ்திரம் அணிவித்து, பாலபிஷேகம் செய்வித்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். முருகன் சன்னதி எதிரில் நவவீரர்கள் இருக்கின்றனர்.
கோபுரத்தை அடுத்து சூரியன், சந்திரன் இருவரும் தாமரை மலர் மீது மனைவியருடன் காட்சி தருகின்றனர். நரசிம்மர் இல்லாத சரபேஸ்வரரை இங்கு தரிசிக்கலாம். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் இவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு தாலி அணிவித்து, மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். கோபுரத்தின் கீழே நந்திதேவர், மனைவியுடன் இருக்கிறார். வீணா தட்சிணாமூர்த்தியை, இங்கு உற்சவமூர்த்தியாக தரிசிக்கலாம்.
தல வரலாறு:
இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். காளஹஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அவர், அடிக்கடி அத்தலத்திற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு வயதானபோது, காளஹஸ்தி செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவர், சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு இத்தலத்தில் காட்சி தந்த காளாத்தீஸ்வரர், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே லிங்க ரூபமாக எழுந்தருளினார். சிவன், "காளாத்தீஸ்வரர்' என்றும், தலம் "தென்காளஹஸ்தி' என்றும் பெயர் பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது. ராகு, கேதுவுக்கு தனிசன்னதி உள்ளது.