ஆருத்ரா நாதர் மீது ஆண்டுதோறும் மாசி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய ஒளி விழுகிறது.
ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில், ஒரே லிங்கத்தில் 1008 சிவலிங்கம் பொறிக்கப்பட்டு காட்சி தருவது சிறப்பு.
முதல் இரட்டையர்கள் பிறந்த ஊர்
பெரிய நல்லக்காள் மலை, சின்ன நல்லக்காள் மலை எனப்படும்இம்மலை இன்றும் பொன் நிறமாக காட்சியளிப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் முதன் முதலாக தமிழ் அர்ச்சனை நடைபெற்றதும் இக்கோயிலாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்,
எழுமாத்தூர் - 638 001,
ஈரோடு மாவட்டம்.
போன்:
+91-424-2267578
பொது தகவல்:
பெரிய நல்லக்காள் மலை, சின்ன நல்லக்காள் மலை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இம்மலை இன்றும் பொன் நிறமாக காட்சியளிக்கிறது. ஏழு மாற்றுள்ள பொன் இம்மலையில் கிடைத்ததால் இந்த ஊர் எழுமாத்தூர் என பெயர் பெற்றது.
இக்கோயிலின் அருகிலேயே கஸ்தூரி அரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது சிறப்பாகும்.
ஈரோடு கோட்டை பகுதியில் தொண்டீசுவரர் அருள் புரியும் இந்த கோயில் உள்ளது. கோயிலின் ராஜகோபுரம் அழகிய வேலைப்பாடு உடையது. முன் மண்டபத்துக்கும், மடப்பள்ளிக்கும் இடையே சூரியன் தன் இருபெரும் தேவியரோடு காட்சி தருகிறார். தென் மேற்கு பகுதியில் கன்னி விநாயகர் உள்ளார். மேற்கில் தல விருட்சமாகிய வன்னிமரம் உள்ளது.பொல்லாப்பிள்ளையார் முதல் அறுபத்து மூன்று நாயன்மார்களும் அமர்ந்திருப்பது சிறப்பு. தட்சிணாமூர்த்தியும் அங்கு வீற்றிருக்கிறார். சப்த கன்னியரை கடந்து சென்றால் மேற்கு புறம் ஐம்பெரும் தத்துவங்களை விளக்கும் ஐந்து லிங்கங்களையும் விளக்க ஓவியங்களுடன் காணலாம்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, நெசவுத்தொழில் விருத்தியடைய இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், ஆடை தானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
முதல் இரட்டை குழந்தைகள் : தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி ஆகியோர் வியாழ பகவானைக் கவனியாமல் ஆடிக்கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த தேவகுரு ""பூந்துறை நாட்டில் முத்தி என்ற தாசி வயிற்றில் இரட்டை குழந்தைகளாக பிறப்பீர்கள்'' என சபித்தார். சாப விமோசனம் வேண்டிய அவர்களை மன்னித்த தேவகுரு, ""தாசியின் வயிற்றில் பிறந்து 12 ஆண்டுகள் பார்வதி தேவியை வணங்கி வந்தால், ஐராவதம் ஏறிய இந்திரன் நீங்கள் வாழும் பூந்துறை நாட்டில் பொன்மாரி பெய்வான். அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்கிறார்.
தேவகுருவின் சாபத்தால் ரம்பை, ஊர்வசி இருவரும் அழகாலும் குணத்தாலும் சிறந்த தாசி முத்தியின் வயிற்றில் பிறந்தனர். அவர்கள் சிறுநல்லாள், பெருநல்லாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். தேவகுருவின் வாக்கின்படியே சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் ஈரோட்டில் குடி கொண்டுள்ள இறைவனையும், இறைவியையும் மனமுருக வழிபாடு செய்தனர். அவர்களது அன்புக்கு இறங்கிய சிவன், இந்திரன் மூலம் பூந்துறை நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து பாவம் போக்கினார் என்பது வரலாறு.
எழுமாத்தூர் மலை : மானிடப் பிறவி எடுத்த சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் கடும் வறுமையில் உழன்றனர். அவர்களின் வறுமையை போக்க சிவபெருமான், பொன் மயமான இருமலைகளை தானமாக வழங்கினார். அந்த மலைகள் தற்போது மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூருக்கு மேற்கே இரட்டை மலைகளாக காட்சியளிக்கின்றன. பொன்மலை, கனககிரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
சூரிய வழிபாடு: இந்த கோயிலில் சிவபெருமானை சூரியன் வழிபட்டார். எனவே சூரிய வழிபாடு இங்கு சிறப்பாக நடக்கிறது. மாசி மாதம் இறுதி நாட்களில் எல்லா மண்டபங்களையும் கடந்து சூரிய ஒளி இறைவன் முன் செல்கிறது. அந்நாட்களில் இங்கு சிறப்பான வழிபாடு நடக்கிறது. துர்வாசர் இங்கு, பள்ளி கொண்ட சிவபெருமானை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். திருநாமங்கள்: இங்குள்ள இறைவனுக்கு தொண்டீசுவரர், சேடீசுவரர், சோழீசுவரர், ஆருத்ரா கபாலீஸ்வரர் என்ற பெயர்களுண்டு. கல்வெட்டுகளில் கோயில் திருத்தொண்டீசுவரம் என்றும், இறைவனுக்கு தொண்டீசுவரமுடைய மகாதேவர், தொண்டீசுவரமுடைய தம்பிரானார், தொண்டீசுவரமுடையபிடாரர், நாயனார், தொண்டர்கள் நாயனார் என்றும் பெயர்கள் வழங்கப் பெறுகின்றன. கோயிலின் சிறப்பு: கடந்த 1938ம் ஆண்டு தொண்டர்சீர் பரவுவார் முயற்சியால் இக்கோயிலில் தமிழ் வழிபாட்டு நூல் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் முதன் முதலாக தமிழ் அர்ச்சனை நடைபெற்றதும் இக்கோயிலாகும்
தல வரலாறு:
இந்த சிவாலயத்தை கட்டியவர் லட்சுமி காந்தன் என்ற அரசன் என்று சொல்லப்படுகிறது. இந்த அரசன் வேள்வி ஒன்றை நடத்தும் போது, அதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பால்குடங்கள் கீழே வைக்கப்பட்டதும், கவிழ்ந்து கொண்டே இருந்தன. அரசன் இந்த இடத்தை அகழ்ந்து பார்த்தான். அப்போது மண்வெட்டி பட்டு உதிரம் பெருக அரசன் அஞ்சி இறைவனின் திருமேனி கண்டு கோயில் எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது.கி.பி.1004 முதல் 1280 முடிய இந்நாட்டை ஆண்ட கொங்கு சோழர்களில் சிலர் கரிகாலன் என்ற பெயரை பெற்றிருந்தனர். அவர்களுள் ஒரு கரிகாற்சோழன் சமய முதலி என்பவருடைய துணையுடன் காவேரி ஆற்றோரத்தில் 36 சிவாலயங்களை அமைத்தார். அந்த சிவாலயங்களில் ஒன்று ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில் என்றும் சொல்லப்படுவதுண்டு.
ஆருத்ரா கபாலன் என்ற அரக்கன் இங்கு வாழ்ந்து வந்தான். சிவனால் கொல்லப்பட்ட அவன், உயிர் துறக்கும் தருவாயில் இத்தலத்துக்கு தனது பெயரை சூட்ட வேண்டும் என இறைவனிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான். இதனால் இறைவனுக்கு ஆருத்ரா கபாலீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. தாண்டவன் என்ற ஏழை நெசவாளி ஈரோட்டில் குடும்பம் நடத்தி வந்தார். இவர் தினமும் வேலைக்கு செல்லும் போது, ஆருத்ரா கபாலீஸ்வரரை வணங்கி விட்டு தான் செல்வார். ஒரு நாள் இவரிடம் அன்பை வெளிப்படுத்த இறைவன் எண்ணினார். இதையடுத்து ஏழை முதியவராக உருவெடுத்த இறைவன் தாண்டவன் வீட்டிற்கு சென்றார். அங்கு தாண்டவன் இல்லை. அவரது மனைவி மட்டுமே இருந்தார். அவரிடம் இறைவன் "குளிர் தாங்க முடியவில்லை, ஒரு கந்தல் இருந்தால் தயவு செய்து அளிக்க வேண்டும்' என்று வேண்டினார். "ஐயா, என் கணவர் நெசவுக்கு போயிருக்கிறார். அவரிடமும் இடையில் சுற்றியுள்ள ஒரே ஒரு துண்டு தான் இருக்கிறது. இருப்பினும் எங்களால் ஆனதை உங்களுக்கு தருகிறோம். நீங்கள் எங்கு தங்கி இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். "நான் ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில் வெளிபுறத்தில் தான் தங்கியிருப்பேன்,' என்று கூறி விட்டு முதியவர் போய் விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த தாண்டவனிடம், நடந்த சம்பவத்தை அவரது மனைவி கூறினார்.
உடனே தாண்டவன் தான் வேலை செய்யும் நெசவாலை உரிமையாளரிடம் சென்று, "எனக்கு கடனுக்கு ஒரு துண்டு கொடுங்கள், மெதுவாக கடனை அடைக்கிறேன்,' என வேண்டினார். உரிமையாளரும் துண்டு கொடுத்தார். அந்த துண்டை வாங்கி கொண்டு தாண்டவன் கோயிலுக்கு ஓடினார். கோயில் முகப்பில் வாடிய முகத்துடன் உட்கார்ந்திருந்த கிழவரிடம் துண்டை கொடுத்து, வணங்கி விடை பெற்று சென்றார். மறுநாள் அதிகாலையில் கோயில் அர்ச்சகர் கோயிலினுள் சென்றார். அர்த்த சாமத்தில் சாத்திய பரிவட்டம் அங்கு இல்லை. புதுத்துண்டை இறைவன் கட்டியிருந்தார். ஆச்சரியப்பட்ட அர்ச்சகர் இந்த தகவலை ஊரில் எல்லாரிடமும் கூறினார். தாண்டவனின் நெசவாலை உரிமையாளரும், கோயிலுக்கு வந்து பார்த்தார். அதிர்ச்சியடைந்த உரிமையாளர், "நான் தான் தாண்டவனிடம் இந்த துண்டை கொடுத்தேன்.' என்றார். தாண்டவனை மற்றவர்கள் அழைத்து கேட்டனர். நடந்த சம்பவத்தை தாண்டவன் கூறினார். "இது பொய்' என கூறி கயிற்றால் தூணுடன் சேர்த்து கட்டி தாண்டவனை எல்லாரும் அடித்தனர். "இறைவா! நான் என்ன செய்வேன்,' என்று தாண்டவன் கதறினார். அப்போது ஊர் அதிகாரியின் மகன் மீது இறைவன் ஆவேசித்து "நில், நில்' என்று கூறி கட்டுகளை அவிழ்த்தான். "தான் கஷ்டப்பட்ட நேரத்திலும் கூட, தன்னை விட கஷ்டப்பட்ட ஒருவருக்கு உதவி செய்ய தயங்கக்கூடாது. அவ்வகையில் தாண்டவன் மூலம், இதை உலகுக்கு உணர்த்தினேன்,' என்று அந்த சிறுவன் மூலம் இறைவன் அங்குள்ளவர்களிடம் நடந்ததைக் கூறினார். இதையடுத்து ஆருத்ரா கபாலீஸ்வரர் திருவருளை பெற பக்தர்கள் குவிந்தனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில், ஒரே லிங்கத்தில் 1008 சிவலிங்கம் பொறிக்கப்பட்டு காட்சி தருவது சிறப்பு. விஞ்ஞானம் அடிப்படையில்:ஆருத்ரா நாதர் மீது ஆண்டுதோறும் மாசி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய ஒளி விழுகிறது.