தைப்பூசம், மாட்டுப்பொங்கல், அமாவாசை, கிருத்திகை, வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல சிறப்பு:
இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் அருள்பாலிக்கிறார்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில்,
சரவணம்பட்டி - 641035
கோயம்புத்தூர் மாவட்டம்
போன்:
+91 - 422- 553 5727
பொது தகவல்:
இங்கு ஆதியில் பெரிய பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
முருகன் தலம் ஒன்றில் சூபூப்பறித்தல் நோன்பு' என்ற சடங்கு பிரபலமாக உள்ளது. இந்த நோன்பை நோற்பவர்கள், திருமணத்தடை நீங்கி, விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைவர் என்பது நம்பிக்கை.
இங்கு வேண்டிக்கொள்ள புத்திரபாக்கியம் கிட்டும், பயம் நீங்கும், தீராத நோய்கள், மனக்குறைகள் தீரும், தொழில் விருத்தியடைந்து சகல செல்வங்களும் பெருகும்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வன்னி இலைகளால் அர்ச்சனை மற்றும் பால்அபிஷேகம் செய்து பால்குடம் எடுக்கப்படுகிறது. அன்னதானமும் செய்யலாம்.
தலபெருமை:
பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார்.
தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஓரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார்.
அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அப்பெண் கருவுற்றார். அதன் பின்பே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் தான் என அறிந்து கொண்டார். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம்.
இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் பிரபாவளையத்துடன் அருட்காட்சி தருகிறார்.
பூப்பறிக்கும் சடங்கு : இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளைகளும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர்.
பின்னர், முருகப்பெருமானுக்கு மாலையணிவித்து தங்களை மணமக்களாக சிரமமின்றி இணைத்து வைக்க வேண்டுவர். இந்த வழிபாட்டிற்கு சூபூப்பறித்தல் நோன்பு' என்று பெயர். இப்பழக்கம் தற்போதைய நாகரீகத்தின் காரணமாக குறைந்து விட்டது. இருப்பினும், விஷயமறிந்த காதலர்கள் இப்போதும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.
எப்படியிருப்பினும், இக்கோயிலுக்கு வருபவர்கள் தங்கள் கையாலேயே மலர் பறித்து, மாலை கட்டி முருகனுக்கு அணிவித்தால் நினைத்த கணவன் அல்லது மனைவியை அடையலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்றளவும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு தம்பதி சமேதராக வந்து வணங்கிச் சென்றால் நல்ல குழந்தைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கை.
பள்ளிக்காலத்து நண்பர்கள் பணி காரணமாக வேறு ஊரில் இருந்தால், பொங்கலன்று தங்கள் ஊருக்கு வந்து விடுகின்றனர். அவர்கள் பொங்கலுக்கு மறுநாள் மலைக்கோயிலுக்கு வந்து தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.
தல வரலாறு:
சிவனை நோக்கி யுகங்கள் பல கடுந்தவம் இருந்து அண்டசராசரங்களையும்அழிவிலாது அடக்கி ஆளும்படி வரம் பெற்ற அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது இன்னல்களுக்கு பயந்த தேவதலைவன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் அசுரனின் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிவுமறைவாக வசித்து வந்தனர். அப்போது ஓர் முறைஇந்திரன் மறைந்திருந்ததைக் கண்ட அசுரன் அவரை துன்புறுத்துவதற்காக வந்தான்.
இதனை அறிந்த இந்திரன் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அவ்வாறு ஓடி வந்த அவர் ரத்தினகிரி மலையின் மீது ஏறி மறைந்து கொள்ள இடம் தேடினார். அப்போது அங்கு இந்திரனுக்கு காட்சி தந்த குமரக்கடவுள் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றிக் கொண்டார். அங்கு இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றான். இவ்வாறு அசுரனிடமிருந்து இந்திரனைக் காப்பதற்காக அவரை தனது மயில் வாகனமாக முருகன் மாற்றிக்கொண்ட அற்புதம் நிகழ்ந்தது இந்த ரத்தினகிரி மலையில் என புராண வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் அருள்பாலிக்கிறார்.
இருப்பிடம் : கோயம்புத்தூர் காந்திபுரம் மற்றும் உக்கடத்தில் இருந்து அன்னூர் செல்லும் 45, 98, 82, 57 வழித்தட பஸ்கள் இவ்வழியே செல்கிறது. கோவை - சத்தியமங்கலம் பஸ்சில் சரவணம்பட்டியில் இறங்கி 2 கி.மீ., தூரம் ஆட்டோ, கார்களில் சென்றால் கோயிலை அடையலாம்.
கோவையிலிருந்து 13 கி.மீ., தூரத்தில் ரத்தினகிரி அமைந்துள்ளது.