கோபி ஐயப்பன் கோயிலில் ஈஸ்வரனும், முருகனும் எதிரெதிரே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கிருக்கும் மஞ்சள் மாதா சன்னதி பிரபலமானது. இந்த கோயிலில் வாய் பேச முடியாதவர்களுக்காக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, அவர்கள் நலனுக்காக வேண்டப்படுகிறது.
கோயிலினுள் நுழைந்ததும் இடது, வலது பக்கங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரு சன்னதிகள் அமைந்துள்ளன. இதனையடுத்து ஐயப்பசுவாமி மண்டபம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுமார் மூன்றாயிரம் பக்தர்களுக்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு வழிநடத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இருமுடிகட்டும் மண்டபத்திற்கு அருகே நாகராஜர் சன்னதியும், கோயிலின் மையப்பகுதியில் ஐயப்பன் சன்னதியும், அதனருகே விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத பரமேஸ்வரர் சன்னதியும், இதற்கு நேர் எதிரே பாலமுருகன் சன்னதியும், அருகில் நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. பரமேஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் பாலமுருகன் ஈஸ்வரனின் நேரடி அருளை பெற்று பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை வழங்கி வருகிறார்.
ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள தவம் கிடந்து காத்து பக்தர்களுக்கு அருளும் மஞ்சள் மாதா சன்னதி, பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள வீணா தட்சிணாமூர்த்தி அடுத்ததாக கோபி ஐயப்பன் கோயிலிலும் வீற்றிருந்து வியாழன்தோறும் பக்தர்களை காத்து அருளுகின்றார். இடதுபுறம் சிவதுர்க்கையும், சண்டிகேஸ்வரரும், கால பைரவரும் பக்தர்களை காக்கின்றனர்.
கடந்த 1977ம் ஆண்டு ஐயப்ப சமாஜம் துவங்கப்பட்டது. 1981ம் ஆண்டு கார்த்திகை மாதமும், பின்னர் 1987ம் ஆண்டிலும் கோயில் கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் 2000ம் ஆண்டு துவக்கத்தில் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
|