கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத் தள்ளித் தலை தக்கனைக் கொண்டு அவர் சார்வாம் வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச் செவ்வாய் வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே.
புள்வாய் பிளந்தான் அயன் பூமுடி பாதம் ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடமாம் தெள்வார் புனல்செங்கழுநீர் முகைதன்னில் விள்வாய் நறவு உண்டு வண்டுஆர் விடைவாயே.
உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர் கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர் அடையார் புரம்வேவமூவர்க்கு அருள்செய்த விடையார் கொடியான் அழகுஆர் விடைவாயே.
ஆறும் மதியும் பொதிவேணியன் ஊராம் மாறில் பெரும் செல்வம்மலி விடைவாயை நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன் கூறும் தமிழ்வல்லவர் குற்றம் அற்றோரே.
திருச்சிற்றம்பலம்
திருவிழா:
சித்ரா பவுர்ணமி இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
கிழக்கு பார்த்த கோயில். கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, கஜலட்சுமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலசாஸ்தா, நவகிரகம், பைரவர், அய்யனார், மற்றும் சூரியன், சந்திரன் இருவரும் வாகனத்துடன் உள்ளனர்.
பிரார்த்தனை
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வேண்டிகொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
தங்களது வேண்டுதல் நிறைவேற பஞ்ச மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்கிறார்கள்.
தலபெருமை:
இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது.
தல வரலாறு:
விடையன் என்னும் சூரிய குலத்து அரசன் கோயில் கட்டி வழிபட்ட தலமாதலால், இத்தலத்திற்கு திருவிடைவாசல் என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் "விடை' உள்ளது. சிவத்தலமான இங்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் "விடைவாயே' என குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து கொரடாச்சேரி வழியாக திருவாரூர் செல்லும் வழியில் திருவிடைவாசல் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து கொரடாச்சேரி 42 கி.மீ. , கொரடாச்சேரியிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் திருவிடைவாசல் உள்ளது.