இங்குள்ள அம்மன் கல்லால விருட்சத்தின் கீழ், இடது கண்விழி மேல் நோக்கியும், வலதுகண் பூமியை நோக்கியபடியும், ஒரு காதில் குழந்தையை குண்டலமாகவும், மறுகாதில் மகர குண்டலமும் அணிந்து பிரம்ம தேஜசுடன் பூணூலை அணிந்து காட்சியளிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
ஆலயத்தில் அரசு, வேம்பு மரங்கள் லட்சுமிகரமாய் காட்சியளிக்கின்றன. இங்கு விஜயகணபதி, நாகலிங்கேஸ்வரர், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட எட்டு நாகங்கள், அங்காளபரமேஸ்வரி, ஷீரடி சாய்பாபா, துவாரகாமயி பாபா, தன்வந்திரி, சப்தமாதர்கள், லட்சுமி நரசிம்மர், மந்திரவராகி, பிரத்யங்கிரா தேவி, பக்த ஆஞ்சநேயர், புட்டபர்த்தி பாபா, அதர்வண பத்ரகாளி, உக்ர பிரத்யங்கரா மூர்த்தி, சிவன், அபிராமி அம்மன், சர்ப்ப லிங்கேஸ்வரர், பாலமுருகன், பாலகணேஸ்வரர், அகத்தியர், ரேணுகா பரமேஸ்வரி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். மூலஸ்தானத்தில் ஞானசக்தி கணபதி, ஐந்து தலை நாகராஜா, வள்ளி தெய்வானை சமேத செல்வ முத்துக்குமாரசுவாமி, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், அஷ்டபுஜ பைரவர், கருப்பண்ணசாமி ஆகியோரது சிலைகளும் உள்ளன.
பிரார்த்தனை
அஷ்ட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷங்கள் நீங்க வெள்ளி, செவ்வாய், பவுர்ணமி அன்று அஷ்ட நாகங்களையும் வழிபட வேண்டும். பொருளாதாரத்தில் உயர்நிலை பெறவும், தொழிலில் வளர்ச்சி பெறவும் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
அஷ்ட தோஷம் நீங்க அஷ்ட நாகங்களுக்கும் தீபமேற்றி, பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தும், மாங்கல்ய தோஷம் நீங்க கவுரி மங்கள பூஜை செய்து தங்கத்தால் தாலி செய்து சுமங்கலி கையால் தாலிகட்ட சொல்வது கோயில் வழக்கம்.
தலபெருமை:
மூலவர் பூமாத்தம்மன் பத்ம பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பிகையை தட்சிணாமூர்த்தி ரூபிணி என்று வர்ணித்திருக்கிறார். அதுபோலவே இங்குள்ள அம்மனும் கல்லால விருட்சத்தின் கீழ், இடது கண்விழி மேல் நோக்கியும், வலதுகண் பூமியை நோக்கியபடியும், ஒரு காதில் குழந்தையை குண்டலமாகவும், மறுகாதில் மகர குண்டலமும் அணிந்து பிரம்ம தேஜசுடன் பூணூலை அணிந்து காட்சியளிக்கிறாள். தட்சிணாமூர்த்திக்குரியது போல் சிரசில் அக்னி ஜுவாலையுடன், நான்கு கரங்களில் வலது கையில் சூலமும், கீழ்க்கையில் அபய முத்திரையும், இடதுபுற கையில் பாசமும், அதன் கீழ்க்கையில் பிரம்ம கபாலமும் அமைந்து வேத சொரூபிணியாக அருள்பாலிக்கிறாள். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகான் கந்தசாமி சித்தர் பூமாது தில்லைப் பூமாது என்னும் துதியை 108 விருத்தங்களாக ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எழுதி வைத்துள்ளார். அந்த எழுத்தாணியும், சுவடுகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பூமாத்தம்மனின் தாலாட்டைப் பாடிட குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட எட்டு நாகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த நாகங்களை வழிபட்டால் அஷ்டசர்ப்ப தோஷங்கள் விலகும்.
தல வரலாறு:
ஒரு சமயம் பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட, உலகமே இருண்டு போனது. இதில் கோபமடைந்த சிவன் பூலோகத்தில் திருக்கடிகை ஆற்றங்கரைக்கு வடபால் உள்ள மலர்வனத்திற்கு சென்று தன்னை பூஜிக்கும்படியும், தக்க தருணத்தில் நேரில் வந்து உன்னை ஆட்கொள்வேன் என்று கூறிவிட்டார். அந்த அழகான மலர்வனத்தில் சப்தமாதர்களுடன் தேவி பூஜை செய்யத் தொடங்கினார். சில காலம் கழித்து பங்குனி உத்திர திருநாளில் அம்பிகையும், சிவனும் திருக்கல்யாண நாளை கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் அம்மை அப்பனை வணங்கிச் செல்வது வழக்கம். தான் இங்கிருந்தால் நன்றாக இருக்காது என்று எண்ணிய தேவி, சப்தமாதர்களில் ஒருவரான கவுமாரியை மட்டும் வனத்திற்கு காவல் வைத்து விட்டு மற்ற ஆறு மாதர்களுடன் திருக்கயிலாயம் சென்றார். இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரு கந்தர்வர்கள் கவுமாரியை மயங்கச் செய்து மலர்வனப் பூக்களை பறித்து கொண்டு சென்றுவிட்டனர். கைலாயம் சென்று திரும்பிய தேவி கவுமாரி மயங்கி கிடப்பதையும், மலர்வனம் காய்ந்து கிடப்பதையும் கண்டு வெகுண்டெழுந்த தேவி தன் திருஷ்டியால் நடந்ததை அறிந்தாள். தன் வாயிலிருந்து தீப்பிழம்பை அனுப்பி, அவர்களை சம்ஹாரம் செய்து விட்டு பின்னர் சாந்த சொரூபிணியாக அங்கேயே குடிகொண்டாள். பூக்களின் நடுவே குடிகொண்டதால் பூமாத்தம்ம ன் என அனைவராலும் அழைக்கப்பட்டு தன்னை நாடிவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள அம்மன் கல்லால விருட்சத்தின் கீழ், இடது கண்விழி மேல் நோக்கியும், வலதுகண் பூமியை நோக்கியபடியும், ஒரு காதில் குழந்தையை குண்டலமாகவும், மறுகாதில் மகர குண்டலமும் அணிந்து பிரம்ம தேஜசுடன் பூணூலை அணிந்து காட்சியளிப்பது சிறப்பு.