திருமண, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி பொங்கல் படைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
இவள் எட்டு கைகளுடன் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். இவளுக்கு தங்கமலைக்காளி என்றும், விளையாட்டுகாளி என்றும் திருநாமங்கள் சூட்டப்பட்டன. தட்டாங்குளக்காளி என்றும் சொல்வார்கள். இவளை ஆடிவெள்ளி, செவ்வாயில் வழிபடுவது உத்தமம்.
தல வரலாறு:
ராஜபாளையம் அருகிலுள்ள சிவகிரி தேவிப்பட்டினம், தட்டாங்குளம் கிராமத்தில் தங்கமலை இருந்தது. மக்கள் தங்களுக்கு தேவையான அளவு தங்கம் வெட்டி செலவுக்கு வைத்துக் கொண்டனர். காலப்போக்கில், அது கல் மலையாகி விட்டது.ஒருமுறை, அந்த மலையடிவாரத்திற்கு செல்லும் ஆடுமேய்க்கும் சிறுவர்கள், விளையாட்டாக ஒரு கல்லை எடுத்து, அதை சுவாமியாக கருதி வழிபட்டனர். அதற்கு பொங்கலிடும் பாவனையில், ஒரு சிறுமி மூன்று கற்களை எடுத்து வைத்தாள். உடைந்த மண்பாண்ட சில்லை அதன் மேல் வைத்தாள். சிறிது மணலை அரிசியாகக் கருதி இட்டனர். தேங்காய் உடைக்க வேண்டும் என்பதற்காக குமட்டிக்கல் (காறைக்கல்) ஒன்றை எடுத்து வந்தாள். ஒரு இலவம்பஞ்சு நெற்றை பழமாக படைத்தனர். வெற்றிலைக்காக அரசமர இலைகளை எடுத்தனர். பாக்கிற்காக சிதறிக்கிடந்த பழ விதைகளைப் பொறுக்கி வந்தனர். பத்திக்கு பதிலாக ஈர்க்கு குச்சியை வைத்தனர். என்ன அதிசயம்! சற்று நேரத்தில், இந்த விளையாட்டுப் பொங்கல் நிஜப்பொங்கலாக மாறியது. சிறுவர்கள் கற்பனையாக வைத்த பொருட்களெல்லாம் நிஜமாக மாறின. சுவையான பொங்கலை, தங்கள் சட்டைகளைக் கழற்றி அதில் வைத்து வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர்.ஊரார் அதிசயித்து, அந்த இடத்திற்கு வந்தனர். சிறுவர்கள் நட்டு வைத்த கல் கடவுள் விளக்கு தண்டாக மாறியிருந்தது. இதுபற்றி சிவகிரி ஜமீன்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அசரீரி ஒலித்தது. பிள்ளைகள் விளையாடினாலும், அவர்களின் உண்மை பக்தியில் மயங்கி காளியாக வெளி வந்துள்ளேன். அருகிலுள்ள கூடாரமலையில் கல் எடுத்து எனக்கு சிலை வடியுங்கள், என்றது.அதன்படியே காளிக்கு சிலை வடிக்கப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சிறுவர்கள் விளையாட்டாக நட்ட கல் ஒன்று, தெய்வமாக மாறியது. அந்தக் கல்லை காளியாகக் கருதி வழிபடுகின்றனர் பக்தர்கள்.
இருப்பிடம் : மதுரையில் இருந்து தென்காசி செல்லும் ரோட்டில் 80 கி.மீ., தூரத்தில் சிவகிரி. (ராஜபாளையத்தை அடுத்து) இங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., தூரத்தில் தேவிப்பட்டினம். பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில்.