தமிழ் முதல் நாள், அமாவாசை, பிரதி மாதம் கிருத்திகை, மாத வளர்பிறை சஷ்டி, பிரதோஷம், செவ்வாய் ஆகிய தினங்களில் காலை 8 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பவுர்ணமி நாளில் மாலை 4 மணிக்குமேல் விசேஷ ஆராதனைகள் நடத்துகின்றன. புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இத்தல முப்பெரும் தேவியார்க்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. தைப்பூசம், வைகாசி விசாகம், பால் காவடி உற்சவம், பங்குனி உத்திரம் போன்ற சிறப்பு வாய்ந்த வழிபாடு நாட்களில் கோயில் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். கந்தசஷ்டியை ஒட்டி சூரசம்ஹார திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை மஹா அபிஷேகத்துடன் விழா துவங்குகிறது. பின்னர் கந்தர் கலிவெண்பா, கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடைபெறுகிறது. மாலை சூரசம்ஹாரம் முடிந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
தல சிறப்பு:
சித்தரால் உருவாக்கப்பட்டதால் பாலதண்டாயுதபாணி மிகச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் இது மூன்றும் ஒரே இடத்தில் இருப்பது இந்த கோயிலின் சிறப்பம்சம், அதுமட்டுமின்றி, இளமைகோலம், துறவுக்கோலம், கல்யாணக் கோலம் ஆகிய மூன்றும் இந்த கோயிலின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கருவறை அமைக்கப்பெற்று வழிபடப்பட்டு வந்த இத்தலம், அதற்குப் பின் பல்வேறு திருப்பணிகள் முடிந்து தற்போது கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம் என விரிவடைந்துள்ளது. கோயிலிற்கு சற்று முன்பாகவே இங்கே கந்தனை ஸ்தாபித்த காலேஸ்வர சித்தரின் நிர்விகல்ப சமாதி பீடம் உள்ளது. அவரின் ஜீவ சமாதியின் மேல் நாகர் திருமேனிகளும், நந்திகளும் அமைந்துள்ளன. அருகில் காலேஸ்வரரின் சீடர்களது நினைவிடம் உள்ளது. அடுத்த அரசமரத்தடியில் ஜலவிநாயகர், நாகர் வடிவங்கள், நந்தி, மூஷிக வாகனம் உள்ளனர்.
கோயில் வாசல் எதிரே தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். அங்கு மயில், அதன் அலகில் நாகம், பலிபீடம் அமைந்துள்ளன. நேர் எதிரே உள்ள கருவறையின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். வெளிச்சுற்றில் அன்னபூரணி, சரஸ்வதி, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் வரிசையாக வீற்று முப்பெரும் தேவியராக அருள்பாலிக்கின்றனர். கற்பக விநாயகர் நஞ்சுண்டேஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன. சனிபகவான் மேற்கு நோக்கி காகத்தின் மீது அமர்ந்தவாறு தனிச் சன்னிதியில் காட்சியளிக்க, வெளியே பீடத்தின் மீது அவரது வாகனமான காகம் அமைந்துள்ளது. அரசமரத்தடியில் அமைந்துள்ள ஜலவிநாயகருக்கு நேர் எதிரே நவகிரக சன்னிதி உள்ளது.
பிரார்த்தனை
இவரை வேண்டி மக்கட்பேறு அடைந்தவர்களும் திருமணத்தடை மன நோய் நீக்கியவர்களும் ஏராளமாகும். விநாயகரின் பார்வையில் நவகிரகங்கள் அமைந்துள்ளதால் இங்கு வந்து பிரார்த்தித்தால் கிரக தோஷங்கள் முழுமையாக நீங்கிவிடும் என்கின்றனர். அதுமட்டுமின்றி, கலிதோஷம் எனும் சனிதோஷம் விலகவும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
முருகனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கருவறையில் பாலதாண்டாயுதபாணி சுவாமி இடதுகையினை இடுப்பில் வைத்து, வலது கையில் தண்டாயுதம் தாங்கி திருக்காட்சியளிக்கிறார். அவருக்கு இடது பக்கம் சேவற்கொடியும், வலது பக்கம் வேலும் சாத்தப்பட்டுள்ளன. அழகும் அருளும் ஒருசேர்ந்த வடிவாகக் காட்சிதரும் வேலவனை நாளெல்லாம் பார்த்து பொழுதெல்லாம் வேண்டிக்கொண்டே இருக்கத் தோன்றும். சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், சனிக்கிழமையில் இத்தலம் வந்து பவானி நதியில் நீராடி பாலதாண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து விட்டு, சனீஸ்வர பகவானை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி கிட்டும் என்கின்றனர், இங்கு வந்து பலனடைந்த பக்தர்கள். இளமையும், துறவுக்கோலம்-சேர்ந்தது மூர்த்தி, கல்யாணக் கோலத்தில்-உற்சவ மூர்த்தி, பவானி ஆற்றில் கரையில் உள்ளதால் தீர்த்தமும் சேர்ந்துள்ளது. இத்தலத்தில் செவ்வாய் வெள்ளியில் அபிராமி அந்தாதி முற்றோதல் சிறப்பாக நடத்தப்படுகிறது.
விநாயகர், பாலதண்டாயுதபாணி, நஞ்சுண்டேஸ்வரர் தெய்வங்களை பலதரப்பட்ட மக்களும் வணங்கி நன்னிலையடைய ஊர்க்கவுடர் அவர்கள் வேண்டிய சவுகரியங்களையும், இத்திருக் கோயிலைச் சுற்றி விழாக்கள் நடத்த வேண்டிய நில புலன்களையும் அப்போதே இத்திருக்கோயிலுக்கு பட்டயம் செய்து வைத்தனர். இத்திருக்கோயில் முன்பாக செல்லும் சாலை பழைய மைசூர் மார்க்கம். ஆகையால் திப்புசுல்தான் மைசூரிலிருந்து தனது பரிவாரங்களுடன் வரும்போது திப்பு சூல்தான் படைதளபதி (வேட்டைகாரன்புதூரில், வேட்டைகாரர் சமாதி கொண்டுள்ளவர்) இக்கோயிலிற்கு வந்து வழிபட்டு நமது கோயிலில் கோயில் கொண்டுள்ள பாலதண்டாயுபாணிக்கு தங்கவாள் காணிக்கையாகச் செலுத்தியதாகச் செவிவழிச்செய்தி. இன்னும் பல அருளாளர்கள், சிருங்கேரிமடம் பீடாதிபதிகள், ஞானிகள் தங்கி வழிபட்டுச் சென்ற சில தடயங்கள் உண்டு.
சனிபகவான் இத்தலத்திற்கு வந்த வரலாறு: நிடத நாட்டு அரசன் நளமகாராஜனும், விதன்ம்ம நாட்டு இளவரசி தமயந்தியும், தமது பூர்வ ஜன்ம தொடர்பால் இவர்கள் காதல் வயப்பட்டு பெரியோர்களால் ஏற்படுத்திய சுயம்வரத்தில், சனிபகவான் மானுடராகிய தமயந்தி மேல் மோகங் கொண்டு, நளன் தமயந்தி சுயம்வரத்தில் கலந்து, நளமகாராஜனை தமது கணவராக மாலையிட்டு ஏற்றதைப் பெறாமல் நளன் தமயந்தி மேல் கோபங்கொண்டு 7 1/2 ஆண்டுகள் சனியாக இவர்கள் குடும்பத்தை கொல்லாமல் கொடுமை செய்து, 7 1/2 ஆண்டுகள் கழித்து விமோசனம் கொடுத்து, சனிபகவான் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் பிரணாம்பிகை திருக்கோயில் கோபுர வாசலை அடையும் போது, அசரீரியாக சனீஸ்வரா உமக்குப்பிடித்த கலிதோஷத்தால், நீ இந்திராதி தேவர்களில் ஒருவன் என்பதை மறந்து மானுட மோகம் கொண்டு, மானுடர் சுயம்வரத்திலே கலந்து கொண்டாய். உமக்குப்பிடித்துள்ள கலிதோஷம் நீங்க, கொங்கு நாட்டின் மேல் திசையில்மேலைப்பழநி என்று ஆன்றோர்களால் போற்றப்படுகின்ற கலியுக தெய்வம் பாலதண்டாயுபாணியை, கோயிலின் அருகில் உத்திரவாகினியாக செல்கின்ற பவானி நதியில் மூழ்கிச் சேவித்தால் உமது கலிதோஷம் நீங்கி இந்திராதி தேவர்கள் நிலையை அடைவீர் எனக் கட்டளையிட்டார்.
இறைவன் ஆணையை சனிபகவான் சிரமேற்கொண்டு அத்தலத்திற்கு வருகைபுரிந்து பவானி நதியில் நீராடி பாலதண்டாயுதபாணியை சேவித்து தனக்குப்பிடித்த கலிதோஷம் நீங்கப்பெற்று தேவர்கள் நிலை அடைந்ததாக வரலாறு. சனிக்கே சனி விலகிய இடம், சனிபகவான் மற்ற உயிர்களை தன் 7 1/2 ஆண்டு காலத்தில் அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்ப ஆட்சி செய்வார். சனிபகவானுக்கே கலிதோஷம் என்னும் சனிதோஷம் விலகியதே நமது பாலதண்டாயுதபாணியின் அருள் என்பது வரலாறு. உம்மை நாடி வந்தோரையும், உம்மை வணங்குவோரையும் எத்தீங்கும் செய்ய மாட்டேன் என்பது சனிபகவான் பாலதண்டாயுதபாணியை வழிபட்டு கொடுத்த சத்யவாக்கு. பாலதண்டாயுதபாணி திருக்கோயில் நுழைவு வாயிலில் தனிக்கோயில் கொண்டு தம்மை நாடி வருவோர்க்கு இன்னருள் புரிந்து வருகிறார். திருக்கோயில் நுழைவு வாயிலில் நுழைந்ததுமே மானுடர்களைப் பிடித்துள்ள தீயசக்திகள் விலகி தெய்வ சக்திகள் கிடைக்கும் என்பது திண்ணம். இது ஆன்றோர்கள் அருள்வாக்கு.
தல வரலாறு:
பழநியில் துறவுக் கோலத்தில் இருக்கும் முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணி சுவாமியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை கிராமம் எலகம்பாளையம் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார். திருவருள் ததும்பிய தமிழகம் இங்கு இறைவன் அருள் விளக்கம் மிகுதியும் பெற்ற திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள்ளே தொன்மைச் சேரனும், தென்னவனாகிய பாண்டியனும் ஒருங்கு போற்றிய கொங்கு நாட்டின் மேல் திசையில் நீலமலைச் சாரலில் உத்தர வாகினியாகப் பாயும் பவானி நதிக்கரையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை எலகம்பாளையத்தில் கோயில் கொண்டு வந்து வணங்குவோர்க்கும், நினைந்து வணங்குவோருக்கும் வேண்டும்வரங்களை எல்லாம் குறைவின்றி வழங்கி வரும் பாலதண்டாயுதாணி பல அருளாளர்கள், ஞானிகளால் கண்டு உணர்ந்து எடுப்பித்ததே பால தண்டாயுதபாணியின் அருள் திருமேனியாகும்.
இத்திருக்கோயில் அமைவிடத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன் எலகம்பாளையம் ஊஞ்கவுடர் மிட்டா லிங்கே கவுடர் அவர்கள் இப்பகுதியில் விவசாயம் செய்து உணவு தான்யங்களை உற்பத்தி செய்து ஊர் மக்களின் பசிப்பிணி தீர்த்து வந்துள்ளனர். விவசாயத்திற்கு தேவையான கால்நடைகள் பால் பசுக்களை இத்திருக்கோயில் வளாகத்தில் வைத்துப் பராமரித்து வந்துள்ளனர். இக்காலத்தில் கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு நங்சுண்டேஸ்வரர் கோயிலிற்கு அருகாமையில், தனது ஆசிரமத்தில் காலேஸ்வர சித்தர் உலக மக்கள் உய்யும் வண்ணம் நல் அருளாசி வழங்கி வருங்காலை தனது பிரதம சீடர் பசுவண்ண சித்தரை தம் அருகாமையில் அழைத்து தன் அருள் ஞானத்தால், நஞ்சுண்டேஸ்வரர் கோயிலிற்கு தென்திசை நோக்கிச் சென்று பஞ்ச பர்வதங்கள் சூழ்ந்து ஆறுபாயும் கரையில், பசு மாட்டுத் தொழுவங்கள் நிறைந்த இடத்தில் வேத விற்பன்னர்களைக் கொண்டு ஏழுகோடி பிரணவ மந்திரயாக வேள்வியைச் செய்து முடித்து, கணபதி, பாலதண்டாயுதபாணி, நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து பின் தன் ஆசிரமமாகிய நஞ்சன்கூடு வருக என கட்டளையிட்டார்.
பஞ்சபர்வதம், உத்திர வாகினி (வடக்கு நோக்கிப்பாயும் வற்றாத ஆறு) பசுத்தொழுவங்கள் சூழ்ந்த பகுதியில் செய்யும் மந்திர ஜெபத்திற்கு ஒப்பாகும் என்று அருளாசி வழங்கி பசுவண்ண சித்தரை தென் திசைக்கே வர வைத்தார். பசுவண்ணச் சித்தர் தம் குருநாதரின் கட்டளையை சிரமேற்கொண்டு, தென்திசை தம் சீடர்கள் சிலருடன் பல நாட்கள் அலைந்து எலகம்பாளையம் வந்து சேர்ந்து அதிகாலைப் பொழுதில் உத்திர வாகினியாக பவானி நதியில் மூழ்கி எழுந்து சந்தியா வந்தனம் முதலிய தெய்வ நித்திய கடமைகளைச் செய்து விட்டுப் பார்க்கும்போது லிங்கே கவுடரிடம் வினவ, வடதிசை கோவர்த்தனகிரி என்னும் நீலகிரி ரங்கரார்மலை, தென்திசை குமரன் குன்று, மேல்திசை குருந்தமலை, சென்னாமலை, கீழ்திசை ஓதிமலை என்று இயம்பக் கேட்ட பசுவண்ணச் சித்தர் ஆனந்தக் களிப்புக் கொண்டு குருநாதரின் கட்டளையை நிறைவேற்ற காலம் வாய்த்ததை எண்ணி ஆனந்தக் களிப்படைந்தார். ஊர் முழுக்க பசுமை நிலவுவதையும் பயிர்களும் உயிர்களும் செழித்து விளங்குவதையும் கண்டார் காலேஸ்வரர். அதோடு மக்களிடம் விருந்தோம்பல் பண்பாடு நிறைந்திருப்பதையும் பார்த்தார்.
குருநாதர் கட்டளைப்படி முருகனை ஸ்தாபித்து வழிபட தான் தேடி வந்த சிறப்புமிக்க இடம் அதுதான் என உணர்ந்தார். அவ்வூரிலேயே தங்கி, பவானி ஆற்றங்கரையில் பாலதாண்டாயுதபாணியை கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்து மனமுருக வழிபட்டார். பின்னர் பொதுஜன வழிபாட்டிற்கு அக்கோயிலை அர்ப்பணம் செய்துவிட்டு, சித்த ஞான நிலையில் அமர்ந்தார். அந்நிலையிலேயே தான் நிர்விகல்ப சமாதி நிலையை அடைய ஆசிர்வதிக்குமாறு குருநாதரிடம் வேண்டினார். அவ்வாறே சித்திக்க அருளினார் பசுபதி சித்தர். பசுவண்ணச் சித்தர் நாளும் கோளும் நன்னிலை பொருந்திய நன்னாளைக் குறித்து லிங்கே கவுடர் உதவியுடன் பல யாக சாலைகளை அமைத்து வேத விற்பன்னர்களைக் கொண்டு மஹாயாக வேள்வியை சீறும் சிறப்புடனும் நடத்தி, விநாயகர், பாலதண்டாயுபாணி நஞ்சுண்டேஸ்வரர் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து நாளும் கோளும் நன்னிலை பொருந்திய சுப வேளையில் தெய்வங்களுக்கு திருக்குட முழுக்கு செய்து, மறையோர்களுக்கும், அருளாளர்களுக்கும், துறவிகளுக்கும், ஊர் மக்களுக்கும் அன்னதானம், கோதானம், அனைத்து தர்மங்களையும் குறைவின்றிச் செய்து ஊர் உலக மக்கள் யாவரும் இத்தெய்வங்களை வழிபட்டு சாயுச்ய அடைந்து நலம் பெற வாழ்த்தி பசுவண்ணச் சித்தர் தனது குருமகான் ஆசிரமம் அடைந்தார்.சித்தர்கள் பலரும் போற்றிடும் தெய்வீகக் குமரன், எலகம்பாளையத்தில் சித்தர் ஒருவரது சீடராலேயே நிறுவப்பட்டு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் வரலாறு இதுவே ஆகும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சித்தரால் உருவாக்கப்பட்டதால் பாலதண்டாயுதபாணி மிகச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் இது மூன்றும் ஒரே இடத்தில் இருப்பது இந்த கோயிலின் சிறப்பம்சம், அதுமட்டுமின்றி, இளமைகோலம், துறவுக்கோலம், கல்யாணக் கோலம் ஆகிய மூன்றும் இந்த கோயிலின் சிறப்பு.
இருப்பிடம் : கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் 11-வது கி.மீ.யில் சிறுமுகை நால்ரோடு பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கிருந்து அரை கி.மீ நடந்தால் எலகம்பாளையம் கோயிலை அடையலாம்.