சத்தியவானை சாவித்திரி எமனிடமிருந்து மீட்டாள் என்பது வரை நமக்கு தெரியும். ஆனால் எப்படி மீட்டாள் என்பது தெரிய வேண்டுமல்லவா... அவளிடம் எமன் சொன்னான். அம்மா! உனக்கு உன் கணவனின் உயிரைத் தவிர எதை வேண்டுமானாலும் தருவேன். கேட்டுப்பெற்றுக்கொள், என்றான். உடனே சாவித்திரி புத்திசாலித்தனமான பதிலை சொன்னாள். அவளது கணவனின் உயிர் திரும்ப கிடைத்தது. சாவித்திரிஅப்படி என்ன சொன்னாள்? என்பதை அறியத்தானே ஆவலாக இருக்கிறது! இதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அப்படியே கதைக்குள் செல்லுங்கள்...
மந்திரதேசம்...வளம் மிக்க ஒரு நாடு. மக்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் எல்லோர் மனதிலும் ஒரு குறை. நாட்டின் எதிர்காலம் யார் கையில் இருக்கப்போகிறது என்பதே அந்த கவலை. மன்னர் அஸ்வபதிக்கு வாரிசுகளே இல்லை. அவர் சரஸ்வதி தேவியிடம் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என கேட்டார். மன்னர் கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியிடம் குழந்தை வரம் கேட்டதில் ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என்று மக்கள் எல்லாம் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். குழந்தை வரம் வேண்டுமானால் பார்வதி தேவியிடம்தானே கேட்டிருக்க வேண்டும். ஏன் சரஸ்வதியிடம் குழந்தை வரம் கேட்டார் என்று புருவத்தை உயர்த்தி நின்றார்கள். ஆனால், சாவித்திரி பிறந்த பிறகு திருமணமாகி கணவனை இழந்த நிலையில் அவனது உயிரை திரும்ப பெற வேண்டும். இது மாபெரும் சாதனை படைக்கும் காரியமல்லவா! அதற்கு தகுந்த புத்திசாலித்தனமுள்ள குழந்தை தனக்கு வேண்டுமே! என்று மன்னரின் உள் மனதில் பட்டதோ என்னவோ! ஒரு கலக்கமான மனநிலையில் சரஸ்வதியிடம் அவர் வரம் கேட்டார். அஸ்வபதியின் மனதார்ந்த பிரார்த்தனையில் மகிழ்ச்சி கொண்ட சரஸ்வதி அவருக்கு குழந்தை பாக்கியத்தை அளித்தாள். அஸ்வபதியின் மனைவி மாளவி சாவித்திரியை பெற்றெடுத்தாள். இளமைப் பருவம் முதலே சாவித்திரிமிக புத்திசாலியாக திகழ்ந்தாள். அவள் நாவிலிருந்து வந்த வார்த்தைகள் பெற்றோருக்கு தேனாய் இனித்தன. எத்தகையவரையும் பேச்சுத்திறனால் வசீகரிக்கும் ஆற்றல் அவள் மனதில் இருந்தது.
பருவம் அடைந்த மகளுக்கு தகுந்த மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே என்ற கவலை அஸ்வபதிக்கு எழுந்தது. தான் இன்னொருவனுக்கு மனைவியாகி விட்டால் நாட்டை ஆளப்போவது யார் என்ற கவலை சாவித்திரிக்கு....தனக்கு ஒரு தம்பி இருந்தால் அவன் நாட்டை ஆண்டிருப்பான். கடவுளே! எனக்கு ஒரு தம்பியைக் கொடு! என வேண்டினாள் அவள். ஆனால் அவ்வளவு இலகுவான காரியமா அது.....அவளது வேண்டுதல் பலிக்கவில்லை. இந்த நேரத்தில் தான் சால்வ நாட்டின் அரசன் சத்தியவானை சாவித்திரிஒரு முறை சந்தித்தாள்.அவன் மீது காதல்வயப்பட்டாள். அவனே தனக்கு மணாளன் என முடிவெடுத்து விட்டாள். இருப்பினும் காதலை பற்றி தந்தையிடம் சொல்ல தயக்கம். மன்னன் இதை அறியாமல் பல தேசத்து இளவரசர்களையும் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். இந்த நேரத்தில் தான் கலக முனிவர் நாரதர் வந்தார். அஸ்வபதியிடம் மெதுவாக போட்டுக் கொடுத்தார். உன் மகள் யாரையோ விரும்புகிறாள் போல் முகத்தில் தெரிகிறதே! அதைப் பற்றி விசாரித்தாயா? என்றார். தந்தை கண்டிப்பான பார்வையை மகள் மீது வீசினார். மகள் உண்மையைச் சொல்லி விட்டாள். சத்தியவானை விரும்புவதாக சொன்னாள். அதிர்ச்சி அடைந்தார் நாரதர். இந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையே கிடைக்கவில்லையா? அந்த சத்தியவான் தன் எதிரிகளிடம் தோற்று நாட்டை இழந்து கண் தெரியாத தன் தந்தையுடன் காட்டில் அல்லவா வாழ்கிறான்? அட...நாடு போனால் போகட்டும். அவன் இன்னும் உயிரோடு இருக்கப் போவதே இன்னும் ஒரு வருஷம் தான். அவன் விதி முடியப் போகிறது. அதன் பிறகு இந்த குழந்தையின் நிலை என்னவாகும்? என்ற அதிர்ச்சி தகவலை சொன்னார்.
அஸ்வபதி அரண்டு விட்டார். சாவித்திரிக்கு மனதில் கலக்கம் என்றாலும் வெளியில் காட்டவில்லை. தந்தையிடம் உறுதியாகச் சொல்லி விட்டாள். மனதில் அவரை நினைத்த பிறகு வேறு ஒருவருக்கு இடமில்லை. ஒரு ஆண்டு வாழ்ந்தாலும் அவரோடு வாழ்ந்து விட்டு சாகிறேன், என்றாள். அடம் பிடித்த மகளின் கண்ணீர் அஸ்வபதியின் நெஞ்சைக் கரைத்து விட்டது. சால்வ தேசத்து காட்டில் நாடிழந்து தவித்துக் கொண்டிருந்த சத்தியவானை தேடிச் சென்றார். அவனது தந்தையை சந்தித்தார். கண்ணிழந்த அந்த மாஜி மகாராஜா, தன் மகனின் நிலை தெரிந்தும் பெண் கொடுக்க முன்வந்த அஸ்வபதியின் அன்பை நினைத்து நெகிழ்ந்து போனார். என் மகனுக்கு திருமணமே வேண்டாம் என நினைக்கிறேன். உயிரிழக்க போகும் அவனுக்கு உங்கள் செல்வ மகளை கொடுத்து அவளை அமங்கலியாக்க வேண்டுமா? இதைத் தாங்கும் சக்தி எனக்கே இல்லாத போது, உங்கள் மனம் என்ன பாடுபடும்? தெரிந்தே கிணற்றில் விழுவது என்பது பாவமில்லையா? என்றார். மகளின் மனதை மாற்றும் சக்தி தனக்கு இல்லை என்ற அஸ்வபதி, திருமணத்துக்கு நாள் குறித்தார். கற்பரசி சாவித்திரியை கைபிடித்தான் சத்தியவான். தன் நாட்டை விட்டு கண் தெரியாத மாமனாருக்கு சேவை செய்யவும், ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்ற தத்துவத்தை மெய்யாக்கும் வகையிலும், காட்டிற்கே வந்து விட்டாள் சாவித்திரி. ஒரு வருடம் கழிந்தும் விட்டது. எமன் பாசக்கயிறோடு வந்து விட்டான். யாருக்காகவும், எதற்காகவும் காத்திராதவன் அவன். விதி முடிந்து விட்டால் ஏதாவது ஒரு ரூபத்தில் வருவான். பாவிகள் என்றால் வேறு ரூபத்தில் வருவான். இவன் கற்புக்கரசியின் கணவன் அல்லவா? நேரிலேயே வந்து விட்டான். இந்த நேரத்தில் ஏதோ காரணத்தால் மயங்கிக் கிடந்தான் சத்தியவான். சற்று நேரத்தில் உயிர் பிரிந்து விட்டது. சாவித்திரிதுயரக்கடலில் இருந்தாலும் நிதானத்தை இழக்கவில்லை. எமதர்மராஜாவை அழைத்தாள்.
பெரியவரே! தாங்கள் என் கணவரின் உயிரைக் கொண்டு செல்லும் காரணம் என்ன? என்றாள். எமதர்மராஜன் சிரித்தவனாய், விதி முடிந்தவர்களை கூட்டிச் செல்வதுதானே என் வேலை. நீ பத்தினிப் பெண். எனவே உனக்கு தரிசனம் தர வந்தேன், என்றான். தேவர்களின் தரிசனம் கிடைத்தால் நல்லது நடக்கும் என்று தானே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் மகா பெரியவர். தேவ மைந்தன். உங்கள் தரிசனம் கிடைத்தும் நான் அமங்கலியாகிறேனே! அப்படியானால் வேதங்கள் சொல்வது பொய்யா? என பதில் சொல்ல முடியாத கேள்வியை தூக்கி போட்டாள் சாவித்திரி. எமன் கலங்கிப் போனான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை தாயே! நீ சொல்வது சரிதான். இருந்தாலும் விதி முடிந்தவர்களை விட்டுச் செல்லும் அதிகாரம் எனக்கு இல்லை. நீ உன் கணவனின் உயிரைத் தவிர எதைக் கேட்டாலும் தருகிறேன், என்றான். இங்குதான் சரஸ்வதி கடாட்சத்தால் பிறந்த அந்த புத்திசாலி பெண்ணின் அறிவுத்திறன் வெளிப்பட்டது. தர்மராஜவே! நீங்கள் சொன்னதைப் போலவே கேட்கிறேன். என் மாமனாருக்கு கண் பார்வை வேண்டும், என்றாள். எமன் அந்த வரத்தை கொடுத்து விட்டான். அடுத்து என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும், என்றாள். ஒன்றென்ன! நூறு ஆண் குழந்தைகள் வேண்டுமானாலும் தருகிறேன், என்றான். கடைசியாக அணுகுண்டை வீசினாள் சாவித்திரி. நான் குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், என்றாள். அவ்வளவு தான். அரண்டு போனான் எமன். சொன்ன வார்த்தை தவறாமல் வரம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. கணவனின் உயிர் வேண்டும் என கேட்காமல் தனக்கு குழந்தை வேண்டுமென கேட்கிறாள். கணவன் இல்லாமல் குழந்தை பிறப்பது எப்படி சாத்தியம்? வேறு வழியே இல்லாமல் உயிரை திருப்பித் தந்தான் எமன். புத்தி சாதுர்யம் உள்ளவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள். இதற்கு சாவித்திரியின் வாழ்க்கை ஒரு உதாரணம்.