பதிவு செய்த நாள்
11
மே
2012
05:05
பிரம்மாவின் பேரர்களான நரர், நாராயணர் என்ற ரிஷிகள் கந்தமாதன மலையில் தவம் செய்துகொண்டிருந்தனர். மிகுந்த தவம் செய்பவர்களைக் கண்டாலே இந்திரனுக்குப் பயம் உண்டாகும். ஏனெனில், கடுமையான தவத்திற்குப் பிறகு ஒருவன் இந்திர பதவியை அடைகிறான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படியானால் அப்போது இருக்கும் இந்திரனுக்கு பதவி பறிபோய்விடும். சுகமான இந்திர பதவியை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டான் இந்திரன். இந்திரன் கந்தமாதன பர்வதத்திற்கு வந்து நர நாராயணர்களிடம், வேண்டிய வரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் படியும், தவத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டான். இதை ரிஷிகள் இருவரும் கண்டுகொள்ளவும் இல்லை, கண்களைத் திறக்கவுமில்லை. இந்திரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன்னுடைய மாயாஜாலத்தால் பல கொடிய விலங்குகளைப் படைத்தான்.
சீறி வரும் பயங்கரமான பாம்புகளும், சிங்கம், புலி, கரடி முதலிய விலங்குகளும் தோன்றின. அவற்றை மகரிஷிகளின் மீது ஏவிவிட்டான். அவைகளும் சீறிப்பாய்ந்து அவர்களிடம் சென்றன. ஆனால், முனிவர்களின் தவவலிமை அனலாய் மாறி அவற்றை அவர்கள் அருகே நெருங்கவிடாமல் செய்தன. அவமானத்தால் குன்றிப் போனான் இந்திரன். தேவலோகத்திற்கு திரும்பி வந்தான். மன்மதனை வரவழைத்தான். அவன் தன் மனைவி ரதிதேவியுடன் வந்தான். பிறகு மேனகா, திலோத்துமா, ரம்பா உள்ளிட்ட எல்லா தேவலோக அப்சரஸ்களையும் அழைத்தான். விஷயத்தைக் கூறி கந்தமாதன மலைக்குச் சென்று ரிஷிகளின் தவத்தைக் கலைக்கக் கட்டளையிட்டான். அவர்களும் அப்படியே சென்று ரிஷிகளின் தவத்தைக் கலைக்க முற்பட்டனர். மன்மதன் அகாலமான இளவேனில் பருவத்தை உருவாக்கினான். அதன் விளைவாக மரம், செடி, கொடிகளெல்லாம் பூத்துக் குலுங்கின. விலங்குகளும் பறவைகளும் காதல் மேலிட்டு தத்தம் பெண் இனத்துடன் காதல் லீலைகளில் ஈடுபட்டன. அப்சரஸ் பெண்கள் ஆடல், பாடல்களினால் ரிஷிகளை மயக்க முற்பட்டார்கள். இனம் புரியாத உணர்ச்சி இரண்டு ரிஷிகளின் உடல், உள்ளத்திலும் பரவத் தொடங்கின. இருவரும் கண் விழித்தனர்.
தங்கள் முன்னால் நடக்கும் களியாட்டங்களைக் கண்டு நாராயண ரிஷிக்கு கடுங்கோபம் வந்தது. இவைகளெல்லாம் இந்திரன் வேலையே என உணர்ந்தார். கடுங்கோபத்துடன் தன் தொடையைத் தட்டினார். தொடை பிளந்தது. அதிலிருந்து மூவுலகிலும் இல்லாத பேரழகுப் பெட்டகமாக ஊர்வசி வந்தாள். ஊரு என்றால் தொடை என்று பொருள். நாராயண ரிஷியின் தொடையிலிருந்து வந்ததால் அவள் ஊர்வசி எனப்பட்டாள். இன்னும் பல பெண்களை உருவாக்கி அவர்களை எல்லாம் இந்திரனிடம் அனுப்பி வைத்தார் நாராயணரிஷி. இந்திரன் தலைகுனிந்தான். நர, நாராயண ரிஷிகளிடம் வந்து மன்னிப்பை வேண்டினான். நாங்கள் கேவலமான இந்திரலோக சுகத்துக்கு ஆசைப்பட்டு தவமிருக்கவில்லை. இறைவனின் திருவடியில் நிரந்தரமாக தங்கியிருக்க விரும்பியே தவம் செய்கிறோம், என்றனர். மீண்டும் ரிஷிகளிடம் மன்னிப்பு கேட்ட இந்திரன், ஊர்வசியையும் அழைத்துக் கொண்டு இந்திரலோகம் போய் சேர்ந்தான். அன்றுமுதல், அப்சரஸ்களில் மிகவும் உயர்ந்தவள் என்ற அந்தஸ்துடன் ஊர்வசி வசித்தாள்.