பதிவு செய்த நாள்
14
மே
2012
03:05
தர்மசாஸ்தாவைப் பெற்றவர்கள் பரமசிவனும், திருமாலும் என்பதை நாடறியும். அவரை வளர்த்தவர் பந்தளராஜா ராஜசேகரன். தர்மசாஸ்தா ஏன் இவரிடம் மகனாய் போய் சேர்ந்தார் என்பதை தெரிந்து கொள்வோம்.
பாண்டியநாட்டில் செல்வம் மிக்க பிராமணர் பிறந்தார். இவரது மனைவி பேரழகி. செல்வச் செழிப்பில் நீந்துபவள். செல்வம் இவர்களிடம் கொட்டிக் கிடந்தும் சந்தானப்பேறு இல்லை. கவலையுடன் இருந்த இத்தம்பதியரின் வீட்டிற்கு வந்தார் ஒரு முனிவர். அவரை பூரண திருப்தியுடன் உபசரித்தனர் தம்பதியர். அவர்கள் முகத்தில் கவலையின் ரேகை ஓடுவதைக் கவனித்த முனிவர் அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டார். ""மகனே! கவலை வேண்டாம். நீ காட்டிற்குள் சென்று அங்கு வசிக்கும் சபரி என்ற முனிவரைப் பார். அவர் இதற்குரிய பரிகாரத்தைச் சொல்வார், என்றார். அந்த அந்தணர் சபரி முனிவரைச் சந்தித்தார். ""அந்தணரே! தாங்கள் இப்பிறவியில் குழந்தை பாக்கியம் அடையும் வாய்ப்பில்லை. ஏனெனில், முற்பிறவி பாவங்களால் நீர் பீடிக்கப்பட்டுள்ளீர். அவை தொலைந்தால் அடுத்த பிறவியில் நீர் குழந்தை பாக்கியம் பெறலாம்.
இப்பாவங்கள் தொலைய ஒரு உபாயம் சொல்கிறேன், என்றவர், ஒரு குடத்தைக் கையில் கொடுத்து, அருகிலுள்ள அருவியில் இருந்து அதில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அந்தணர் இப்பிறவியில் தனக்கு குழந்தை பிறக்காது என்பதையறிந்து வருத்தமடைந்தாலும், எதிர்கால நன்மை கருதி, அந்த குடத்துடன் அருவிக்கு சென்றார். அருவி நீரில் குடத்தை பிடித்ததும், வேகம் தாளாமல் குடம் கீழே விழுந்து உடைந்தது. அது மிகப்பெரிய தாமரை மலராக மாறியது. மலர் முழுவதும் தண்ணீர் நிறைந்தது. அந்த தண்ணீரில் அந்தணர் குளித்தார். அப்போது அவரது உடலில் இருந்து கரிய நிறமுள்ள சில பறவைகள் பறந்தன. அதாவது, அவரது உடலில் இருந்த பாவங்கள் பறவைகளாக மாறி பறந்துவிட்டன.
பாவம் நீங்கிய அந்தணர் முன்பு தர்மசாஸ்தா குழந்தை ரூபத்தில் காட்சியளித்தார். ""பகவானே எனக்கு தாங்கள் குழந்தை பாக்கியம் தரவேண்டும், நீங்களே இப்போது குழந்தை வடிவில் வந்துள்ளீர்கள். உங்களைப்போலவே அழகான குழந்தை பிறக்கவேண்டும், என வேண்டிக்கொண்டார். சாஸ்தா அவரிடம், ""பாவங்கள் நீங்கினாலும் விதிப்படி இப்பிறவியில் குழந்தை கிடையாது. மறுபிறவியில் நானே உமக்கு குழந்தையாக பிறக்கிறேன், என்றார். குடம் உடைந்த இடம் கும்பளம் எனக் கூறப்பட்டது. சபரிமலைக்கு செல்லும் வழியில் இப்போதும் இவ்விடம் உள்ளது. இதை கும்பளத்தோடு என அழைக்கின்றனர். ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி பாவம் நீங்கப் பெறுகின்றனர். வரம் பெற்ற அந்தணர் மறுபிறவியில் பந்தளராஜா ராஜசேகரனாக பிறந்தார். பாண்டிய வம்சத்தில் அவதரித்தார்.
சிவபக்தராக இருந்தார். அப்பிறவியிலும் அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு முறை வேட்டைக்காக காட்டிற்கு சென்றபோது பம்பை நதிக்கரையில் குழந்தை அழும் குரலைக்கேட்டார். அருகில் சென்று பார்த்தபோது கழுத்தில் மணிகட்டிய நிலையில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு மணிகண்டன் என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இறைவன் அவருக்கு அளித்த வரத்தின்படி அவரது மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றார். அக்குழந்தைக்கு ராஜராஜன் என பெயர் சூட்டினார். மணிகண்டனும், ராஜராஜனும் ஒற்றுமையாய் வளர்ந்து வந்தனர்.