Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சூர்ப்பனகை அகல்யா அகல்யா
முதல் பக்கம் » பிரபலங்கள்
பிரகலாதன்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 மே
2012
02:05

முனிவர்கள் வைகுண்டத்துக்கு வந்தனர். வாசலில் ஜெயனும், விஜயனும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வாயில் காப்பவர்களே! ஸ்ரீமன் நாராயணனே எங்கள் குல தெய்வம். நாங்கள் அவரைக் காண நீண்டகாலம் தவமிருந்தோம். இன்று வைகுண்டத்தின் வாசலுக்கு வந்து விட்டோம். இது நாங்கள் பெற்ற பெரிய பேறு. நாராயணனை பார்த்து விட்டால் வைகுந்த பதவியும் பெற்று விடுவோம். பிறப்பற்ற இன்ப வாழ்க்கை பெற நாராயணனின் தரிசனமும், கரிசனமும் அவசியமல்லவா? வைகுண்டக்கதவை திறவுங்கள், என்றனர். வாயில் காப்பவர்கள் அவ்வளவு எளிதாக யாரையும் அனுமதிப்பார்களா? அவர்களிடம், நாராயணன் நீங்கள் வருவது பற்றி எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. அவரைப் பார்க்க நீங்கள் முன் அனுமதி பெற்றது பற்றிய தகவலும் இல்லை. உஹூம்...உங்களை அனுமதிக்க முடியாது. நீங்கள் போகலாம், என்றனர். முனிவர்கள் கெஞ்சிப் பார்த்தனர். தம்பிகளே! நீங்கள் இப்படி செய்வது முறையா? பூலோகத்தில் இருந்து கால் கடுக்க நடந்தே வந்தோமப்பா! நீ திரும்பச் சொல்கிறாயே! நாங்கள் தபஸ்விகள்...ஒன்றுமறியாதவர்கள் இல்லையப்பா!. ஜெய, விஜயர்கள் அசைந்து கொடுக்கவில்லை. நீங்கள் யாராயிருந்தால் எங்களுக்கென்ன? நாராயணன் சொல்லியுள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் போகலாம், என்றதோடு கழுத்தை பிடித்து வெளியே தள்ளினர். முனிவர்களுக்கு ஆத்திரம் வந்து விட்டது. கத்த ஆரம்பித்து விட்டனர். ஏ! நாராயணா! நீ பாற்கடலில் பள்ளி கொண்டு அப்படியே உறங்கிப் போய் விட்டாயா? உன் காவலர்கள் செய்யும் அட்டூழியம் கண்ணுக்கு புலப்படவில்லையா? இதுதான் நீ பக்தர்ளை வரவேற்கும் லட்சணமா? நீ எழுந்து வா! இல்லாவிட்டால் நாங்கள் இங்கேயே உயிர் துறப்போம், என்று சத்தம் போட்டனர். நாராயணன் இதெல்லாம் தெரியாதவரா? தெரிந்து தானே நாடகமாடுகிறார்....அவர் பதறிப் போய் ஓடி வருவது போல நடித்தார். முனிவர்களே! என்ன நடந்தது? என்று அப்பாவித்தனமாகக் கேட்டார். முனிவர்கள் நாராயணனைக் கண்டதும் நடந்ததை மறந்து விட்டனர்.

அவரது கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினர். ஐயனே! தங்கள் தரிசனம் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த ஏழைகளின் அபயக்குரல் கேட்டு, ஓடோடி வந்த எம்பிரானே! தங்களைக் கண்டோம். ஆனால் எம்பிராட்டி லட்சுமி தாயாரை பார்க்க முடியவில்லை. வைகுண்டத்தின் வாசலே இப்படி அழகு பொங்க இருக்கிறது என்றால், உள்ளே இருக்கும் பாற்கடலின் அழகு, ஆதிசேஷன் தங்களுக்கு குடை பிடித்திருக்கும் அழகு இவற்றையெல்லாம் பார்த்திருக்கலாம். தாங்கள் எங்களை வைகுண்டத்துக்குள் அழைத்துச் செல்லுங்கள், என்றனர். முனிவர்கள் சொன்னதை நாராயணன் கவனமாகக் கேட்டுக் கொண்டார். ஜெய, விஜயர்களை அழைத்தார். முட்டாள்களே! என்னைக் காண வருபவர்களின் தராதரத்தை அறிந்து அவர்களை அனுமதிக்க வேண்டாமா? வைகுண்டத்திற்கு முதன் முதலாக வந்த அவர்களைத் தடுத்து, நிறுத்திய நீங்கள் மனிதர்களாக பிறப்பீர்களாக, என்றார். ஜெய, விஜயர்கள் நாராயணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். நாராயணன் மசியவில்லை. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். நீங்கள் பூலோகத்தில் கொடியவர்களாக பிறந்து, என்னையே எதிர்த்து போரிட்டு மடிந்தால் மூன்று பிறவி எடுக்க வேண்டும். நல்லவர்களாகப் பிறந்தால், ஏழுபிறவி எடுக்க வேண்டும். இதில் எது வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், என்றார். அப்படியே முனிவர்கள் பக்கம் திரும்பி, முனிவர்களே! தாங்கள் தபஸ்விகள். எனவே கோபம் உங்களை விட்டு ஒழிந்திருக்க வேண்டும். உங்களை வாயில் காப்பவர்கள் தடுத்தனர் என்பதற்காக, ஆத்திரத்தில் சத்தம் எழுப்பி, வைகுண்டத்தின் அமைதி குலைய காரணமாக இருந்தீர்கள். நீங்கள் பூலோகத்தில் எனது பக்தர்களாக பிறந்து, கோபத்தை ஒழித்து வைகுண்டம் திரும்ப வேண்டும், எனச் சொல்லி விட்டு மறைந்தார். அவர்களில் ஒருவர் தான் பிரகலாதன் என்ற பெயரில் பூமியில் அவதரித்தார். ஜெயன் இரண்யகசிபு என்ற பெயரிலும், விஜயன் இரண்யன் என்ற பெயரிலும் சகோதரர்களாக பூமியில் தோன்றினர். இரண்யகசிபுவை திருமால் வராக அவதாரம் எடுத்துக் கொன்றார். இரண்யன் கடும் தவத்தால், பிரம்மனிடம் ஒரு வரம் பெற்றான். தன்னை எப்பேர்ப்பட்ட பலசாலியும் எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது என்ற வரம் பெற்றான். இதனால் இவன் உலகையே ஆளும் மன்னன் ஆனான்.

எல்லாரும் இரண்யாய நமஹ என்று சொல்லும்படி கட்டளையிட்டான். இவனது வயிற்றில் பிறந்தான் பிரகலாதன். திருமாலின் பக்தனாக வளர்ந்தான். இரண்யாய நமஹ என்பதை சொல்ல மறுத்து விட்டான். உலகைக் காக்க ஒரு மனிதனால் முடியாது. காக்கும் கடவுளான விஷ்ணுவால் மட்டுமே முடியும், என்று அவன் தந்தையிடம் வாதிட்டான். குருகுலத்திற்கு சென்று மற்ற பிள்ளைகளுக்கும் ஓம் நாராயணாய நமஹ, என்றே சொல்லிக் கொடுத்தான். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் தினமும் சண்டை தான். மகனை கொன்றுவிடும்படி ஏவலர்களுக்கு கட்டளையிட்டான். ஆனால் விஷம் கொடுத்தும், கடலில் தூக்கி வீசியும் கூட பிரகலாதன் அழியவில்லை. கலங்கிப் போன இரண்யன், ஒருமுறை,இந்தத் தூணில் நாராயணன் இருக்கிறானா? எனக் கேட்டான். தூணில் என்ன? உங்கள் உடம்பில் ஒட்டியிருக்கும் சிறு தூசியில் கூட அவன் தான் இருக்கிறான், என்றான் மகன். ஆத்திரத்தில் தூணை எட்டி உதைத்தான் இரண்யன். தூண் உடைந்தது. உள்ளிருந்து நரசிம்மராக வெளிப்பட்டார் பகவான். பாதியளவு சிங்கத்தின் உருவம், பாதியளவு மனித உருவத்துடன் உருவெடுத்து வந்தார் அவர். இரண்யனுடன் போரிட்டுக் கொன்றார். ஆயுதம் ஏதும் அவர் கொண்டு வரவில்லை. அவரது நகமே ஆயுதமாயிற்று. நகத்தால் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டார். பெற்ற தந்தை தன்னால் தானே அழிந்தார் என கதறி அழுதான் பிரகலாதன். தாயை அமங்கலி ஆக்கி விட்டோமே...அவள் முகத்தில் எப்படி விழிப்பது? கதறி அழுத பிரகலாதனை அள்ளி அணைத்துக் கொண்டார் நரசிம்மர். பிரகலாதனிடம் முற்பிறவி கதையை எடுத்துச் சொன்னார். இருந்தாலும் அவன் மனம் தாங்கவில்லை. அன்னையோ தீக்குளிக்க தயாரானாள். பிரகலாதனை பார்க்கக் கூட அவள் விரும்பவில்லை. இறைவா! உன்னை நம்பிய என் நிலையை பார்த்தாயா? என் தந்தைக்கு உயிர்கொடு. இனியும் மானிடனாய் பிறக்கச் செய்யாதே! என பிரார்த்தித்தான். அவர்களை குடும்பத்துடன் வைகுண்டம் அழைத்துச் சென்றார் பெருமாள். பிரகலாதன் இன்றும் சரித்திரத்தில் வாழ்கிறான்.

பிரகலாதனின் முற்பிறவி!

துவாரகையில் வசித்த சிவசர்மா, வேத சாஸ்திரங்களை கற்று புலமை பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களுக்கு குருவாக இருந்து வேதத்தை கற்றுக் கொடுத்தார் சிவசர்மா. வேதம் பயில்பவர்கள் குருவுக்கும் பெற்றோருக்கும் மரியாதை செய்ய வேண்டும். தன் மகன்கள் அவ்வாறு இருக்கின்றனரா என சோதிக்க நினைத்தார் சிவசர்மா. அதற்காக ஒரு தந்திரம் செய்தார். தன் மனைவி, இறந்து கிடப்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, மூத்த மகன் யஜ்ஞசர்மாவை அழைத்தார். அவனிடம், உன் தாய் இறந்துவிட்டாள். அவளது உடலை வாளால் வெட்டி வீசி விடு! என்றார். அவனும் அப்படியே செய்தான். பின் ஒரு அழகிய பெண்ணை படைத்து, இரண்டாவது மகன் வேதசர்மாவை அழைத்தார். அவனிடம் அப்பெண்ணை, தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டார். வேதசர்மா அவளிடம், தன் தந்தையை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளோ மறுத்தாள். அவள் மனதை மாற்றுவதற்காக, எதைக் கேட்டாலும் தருவதாகச் உறுதியளித்தான் வேதசர்மா. அவள் அவனது தலையைக் கேட்டாள். அவனும் தன் தலையை வெட்டிக் கொடுத்து விட்டான்.

அடுத்து மூன்றாவது மகன்  தர்மசர்மாவை அழைத்தார். அவனிடம் வெட்டபட்ட வேதசர்மாவின் தலையை கொடுத்து, பத்திரமாக வைத்திரு என்றார். அவன் அதை வாங்கி தர்மதேவதையை வணங்கி, அண்ணனை உயிர்ப்பித்தான். நான்காவது மகன் விஷ்ணுசர்மாவை சோதிக்க வேண்டியநிலை. சிவசர்மா அவனிடம், நான் ஒரு அழகியை மணக்க விரும்புகிறேன். ஆனால், வயதாகிவிட்டது. மீண்டும் இளமையைப் பெற அமிர்தம் உண்டால் மட்டுமே முடியும். எனவே, தேவலோகம் சென்று அமிர்தம் பெற்று வா என்றார். அவனும் தேவலோகம் சென்றான். இந்திரன் மேனகை எனும் தேவலோக பெண்ணை அனுப்பி அவனது கவனத்தை திசைதிருப்ப முயன்றான். அவனோ தன் வேலையில் மட்டும் கவனமாக இருந்து, இந்திரனிடம் அமுதம் பெற்று. தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா நான்கு மகன்களையும் அழைத்தார். தன் மனைவியை உயிர்ப்பித்து, தான் அவர்களை பரிசோதித்ததை கூறினார். மகன்களும் மகிழ்ந்தனர். அவர்களை விஷ்ணுலோகத்திற்கு அனுப்பி விட்டார் சிவசர்மா. ஐந்தாவது மகன் சோமசர்மா விஷ்ணுவின் மீது அதீத பக்தியுடையவன்.

ஒருசமயம் சிவசர்மா அவனிடம், நானும், உன் தாயாரும் தல யாத்திரை செல்கிறோம். நாங்கள் திரும்பும் வரையில் இந்த அமுதத்தை பத்திரமாக வைத்திரு! என்று சொல்லி சென்றார். சிலநாட்கள் கழித்து திரும்பிய சிவசர்மா, கலசத்தில் இருந்த அமுதத்தை மறையச் செய்துவிட்டு, மகனிடம் அமுதம் தரும்படி கேட்டார். அமுத கலசத்தை பார்த்த அதில் அமுதம் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். விஷ்ணுவை பிரார்த்தித்தான். அமுதகலசம் நிரம்பியது. அதனை தன் பெற்றோரிடம் கொடுத்தான். அமுதம் உண்ட இருவரும் சோமசர்மாவை வாழ்த்திவிட்டு, விஷ்ணுலோகம் சென்றனர். பின் பூலோகத்தில் தனித்து வாழ்ந்த சோமசர்மா, தவ வாழ்க்கையில் ஈடுபட்டான். ஒருசமயம் அவனது தவத்தை கெடுக்க வந்த அசுரர்களைக் கண்டு பயத்திலேயே உயிர் விட்டான். அந்த அசுரகுலத்தை வேரறுக்க மறுபிறவியில் அதே குலத்தில், இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனாக பிறந்தான். நரசிம்ம அவதாரம் தோன்றவும் காரணமாக இருந்தான். மகாவிஷ்ணுவின் அருளையும் பெற்றான்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar