Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அகிலத்திரட்டு அம்மானை பகுதி-5 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-7 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-7
முதல் பக்கம் » அகிலத்திரட்டு அம்மானை!
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-6
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
05:06

திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்க
விருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன்
வையங்க ளெல்லாம் வரம்பழித்து மாநீசன்
நெய்யதியச் சான்றோர்கள் நெறியெல் லாங்குலைத்துப்
பேரழித்துத் தர்மம் பெருமையெல்லாந் தானழித்தான்
மார்வரை யேகூடும் மைப்புரசு சஞ்சுவம்போல்
தான மழித்துச் சான்றோரின் கட்டழித்து
ஈனகுலச் சாதிகட்கு ஈடாக்கித் தான்கொடுத்துப்
பள்பறைய நீசனுக்குப் பவளத்தார் தான்கொடுத்துக்
கள்பறைய சாதிகட்குக் காலமிகக் கொடுத்துச்
சாதி வரம்பு தானழித்து மாநீசன்
மூதி முன்னீசன் மும்முடி யுந்தவிர்த்து
நவ்வா முடியெனவே நாடிவன்நா டாகவேதான்
எவ்வோ ரறிய இவன்தேசந் தானாக்கி
ஆளாகமுன் னீசனையும் அவனைநா டாளவைத்துப்
பாழாக நீசன் பழையசட்ட முமாற்றி
நீசன் நவ்வாவின் நினைவுபோல் சட்டமிட்டுத்
தேசமெல்லாம் நவ்வா செய்தானே சட்டமது
மானம் வரம்பு மகிமைகெட்டுச் சான்றோர்கள்
ஈன மடைந்து இருக்கின்ற வேளையிலே 20

தேவர் முறையம்

தேவர்க ளெல்லாம் திருச்செந்தூர் சென்றேகி
மூவரொரு மித்தனுக்கு முறையிட்டா ரம்மானை
ஆதி முதற்பொருளே அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள் துயரமெல்லாந் தீருமையா
இத்தனை நாளும் இருந்தோமொரு மானுவமாய்க்
கொற்றவரே நாங்களினிக் குடியிருக்கப் போகாது
சாதிக்கட்டை யெல்லாம் தலையழித்து மாநீசன்
மேதினிக ளெல்லாம் மேவினா னையாவே
தான மழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின்
மான மழிந்தாச்சே வரம்பெல்லாங் கெட்டாச்சே
பூப்பியமுங் குலைத்துப் புரசியோ டொப்பமிட்டுக்
காப்பிலிய னேதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள்
இத்தனை நாளும் யாங்கள்முறை யிட்டதுபோல்
புத்தி தனில்வைத்தால் பொறுக்கஇனிக் கூடாதே
தம்பி சான்றோர்கள் சங்கடத்தைக் கேளாமல்
சம்பி முகம்வாடித் தலைகவிழ்ந் திருப்பதென்ன
மக்களு டதுயரம் மனதிரங்கிப் பாராமல்
பக்கமாய் நீரும் பாரா திருப்பதென்ன
சான்றோர் படுந்துயரம் தானிரங்கிப் பாராமல்
ஆண்டோரே நீரும் அயர்ந்தே யிருப்பதென்ன 40

இதெல்லா மெங்களைநீர் ஏற்றசான் றோர்பிறப்பாய்
முதலெல்லாஞ் சான்றோருள் முடிந்துவைத்த கண்ணியினால்
பாவியந் தநீசன் படுத்துந் துயரமெல்லாம்
தாவிக் கயிலை சத்தி சிவன்வரைக்கும்
பொறுக்கமிகக் கூடலையே புண்ணிய அய்யாவே
மறுக்க மதைப்பாரும் மனதிரங்கி யெங்களுக்கு
உகத்துக் குகங்கள் ஊழியங்கள் செய்ததெல்லாம்
அகற்றி யருள்தந்த அச்சுதரும் நீரல்லவோ
மக்களா யெங்களையும் வலங்கைவுய்யோர் தாமாக
ஒக்குறவு கெட்டோன் உலகில் படைத்திருந்தால்
இத்தனை பாடும் எங்களுக் கென்றோதான்
புத்திரரா யெங்களையும் பூமிதனில் பெற்றுவைத்து
நாங்கள் படும்பாடு நாரணரே கண்டிலையோ
தாங்களுக்கு நெஞ்சம் சற்று மிரங்கலையோ
இப்படியே தேவர் எல்லோரு முறையமிட
அப்படியே முறையமிட்டு அவரங்கே நிற்கையிலே

அம்மை உமை இரங்கல்

நல்ல உமைதிருவும் நன்றா யெழுந்தருளி
வல்ல பொருளான வாய்த்தநா ராயணரின்
அடியி லவள்வீழ்ந்து அழுதுகரைந் தேதுரைப்பாள்
முடியுமடி யில்லா முதலே முதற்பொருளே 60

அரிஹரிநா ராயணரே அண்ணரே அச்சுதரே
கரிஹரிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே
இலச்சைகெட்ட பாவி ஏமாளிக் கலியதினால்
அலச்சல்செய் தெங்களையும் அகற்றிவைத்துப் போனீரோ
பாவிக் கலியனுட பழிசாபச் சூட்சியினால்
பூவில் மண்டூகம் பொசித்துதே காரணரே
கலியனுட ஏதுவினால் கபாலியும் மைத்துனரும்
சலிவாகி மேனி சடல மிகத்திமிர்த்து
இருள்மூடிக் கண்கவிழ்ந்து இருக்கிறா ரீசுரரும்
உருவு சுவடில்லை உம்முடைய மைத்துனரும்
நின்னயமில் லாக்கலியன் நீசன் பிறந்ததினால்
என்னோடே பேச்சு இல்லையும் மைத்துனரும்
வானுறவு கெட்ட மாநீசன்வந்த நாள்முதலாய்
நானும்பர மேசுரரும் நலநஷ்டமுந் தெரியோம்
பேசிப் பழக்கமிட்டுப் பெருத்தநா ளுண்டுமண்ணே
தோசிக் கலியனுட சூட்சியினால் நாங்கள்படும்
பாட்டைவந்து பாராமல் பரிகாசம் பார்ப்பதென்ன
நாட்டைக் கெடுத்தானே நன்றிகெட்ட மாநீசன்
அல்லாமல் நம்முடைய அருமைச்சான் றோர்கள்படும்
பொல்லாங்கை யெல்லாம் போய்ப்பார்க்க எழுந்தருளும்       80

வரமீறியக் கலியன் மாய்கையி னேதுவினால்
பிரமன் பிறப்புப் பிசகித் தலைமாறி
முண்டம்போல் பிறப்பு முகங்கண்ணில் லாப்பிறவி
பிண்டப் பிறவி பேருறுப் பில்லாப்பிறவி
தலையுடம் பில்லாத சடலப் பிறவியைப்போல்
நிலைதவறி வேதா நினைவுதடு மாறினனே
சீவன் கொடுக்கும் சிவனுக் கிருநினைவாய்ப்
பாவக் குணவுயிராய்ப் பகர்ந்தார் சிவனாரும்
படியளக்க நீரும் பண்புற் றிருக்காமல்
குடிகேடு மாச்சே குடிக்கக் கிடையாமல்
இத்தனை யுங்கலியன் ஏதுவால் வம்பாச்சே
அத்தனையும் நீர்தான் அறியாதவர் போலே
எங்கள்மேல் பகைபோல் இருப்பதென்ன அச்சுதரே
சங்கடங்க ளெல்லாம் தான்சொல்லக் கூடாது
கயிலை சிவனார் காணாம லும்மையுந்தான்
அகிலமதைப் பாராமல் அயர்ந்திருக்கி றாரெனவே
ஆனதா லென்னுடைய அண்ணரே அங்கேகி
மானமுள்ள புத்தியும் மைத்துனர்க்குச் சொல்வாரும்
என்றுமையா ளிப்படியே இன்பமாய்ச் சொல்லிடவே
அன்று பெருமாள் அவள்முகம்பார்த் தேதுரைப்பார் 100

சிவனாரும் நீயும் தேசமதி லில்லாட்டால்
எவனுக்கு மலைச்சல் இல்லையே ராச்சியத்தில்
உங்களால் யானும் உகத்துக் குகங்கிடந்து
சங்கடங்க ளுற்றுத் தவிக்கத் தலைவிதிதான்
நீங்களில்லை யானால் எனக்கும் அலைச்சலில்லை
ஏனுங்க ளோடே இப்பாடு யான்படத்தான்
அயோத்தியா பட்டணத்தில் அரசுண்டு மென்றனக்குக்
கையேற்று வந்த கன்னி திருவுமுண்டு
ஏனிந்தப் பாடு யான்படக் காரணந்தான்
மானழுதாற் போலே மறுகுவாள் லட்சுமியும்
கைப்பிடித்த நாள்முதலாய்க் கலந்துவிளை யாடறியேன்
மெய்ப்பிடித்த மான மெல்லியரு மங்கிருக்க
இரப்பனைப் போல்லோகம் எல்லாந் திரிந்தலையப்
பரப்பிரம னம்மைப் படைத்ததுமி தற்கோவென
எல்லையில்லாப் பாடு யான்பட்ட துபோதும்
நல்லகுலச் சான்றோரை நான்பெற்று வைத்தேனே
வைத்த தெல்லோரும் மனதறியப் பார்த்திருக்க
பொய்த்தலைவ னீசனையும் பிறவிசெய்ய ஞாயமுண்டோ
நீசனுட கையதிலே நின்மக்கள் தங்களையும்
பாசக் கயிறிட்டுப் பந்தடிக்கச் செய்தாரே 120

தொட்டாலும் நீசம் தொடருமதைக் கண்டாலும்
வெட்டா வெளியாய் விரட்டிப் பிடிக்குமல்லோ
காதிலதைக் கேட்டாலும் கர்மம்வந்து சிக்குமல்லோ
ஆரிந்த நீசனையும் அழிக்கவகை யாரறிவார்
மாய்கை நினைவொழிய மறுநினைவு வாராதே
மோசக் கலியனையும் முடிக்கவகை யாரறிவார்
வாளா யுதத்தாலே மாளானே மாகலியன்
தூளாம் பிறவி சொல்லொணா வல்லமைதான்
முப்பிறவி யாறும் முடித்த வலுமையெல்லாம்
இப்பிறவி தன்னில் எட்டிலொன்று பாரமில்லை
உகத்துக் குகம்பிறந்து ஓடித்திரிந் தவனென்றே
அகத்துக்கொஞ்சம் வைய்யாமல் அவர்மூப்பாய்ச் செய்தாரே
ஆனதா லின்னமினி அங்குவர வேணுமோகாண்
தானம்வைத்துப் பாராமல் சங்கை யழித்தாரே
எங்கே யானாலும் இறந்திடுவே னானிதற்குச்
சங்கையுள்ள சாணார்க்குத் தங்குமிடம் வேறிலையே
தாய்தந்தை யில்லாமல் தயங்குகின்ற பிள்ளையைப்போல்
மாயக் கலியனினால் வாடுவரே சான்றோர்கள்
தகப்பனில்லாப் பிள்ளை சாணார்க ளென்றுசொல்லி
அகப்படுத்திச் சான்றோரை அடிப்பானே மாநீசன் 140

தாயுந் தவமிருந்து சடைப்பாளெனைக் காணாமல்
ஆயுங் கலைதெரிந்த ஆயிளையும் வாடுவளே
இப்படியே ஞாயம் இருப்பதா லென்றனக்கு
அப்படியே வேறு வழியல்லவே யானதினால்
எங்கினிப் போவேன் என்றெண்ணுது என்மனது
உங்களுட ஊருக்கு ஒண்ணுதலே போநீயெனக்
கோபத்தால் தங்கையுடன் கூறினா ரித்தனையும்
வேகத்தா லம்மை விழியிட் டழுதனளே
கயிலைக்கு நீர்தான் கால்வைக்கா தேயிருந்தால்
அகிலம தொன்றாய் அழியு மொருநொடியில்
நல்லகுலச் சான்றோர் நாடுங் கலியனினால்
தொல்லைமிகப் பட்டுத் துயருற்று வாடுவரே
நானுமென்றன் ஈசுரரும் நல்ல கயிலையிலே
மானுங் கலைபோல் மறுகி யிருப்போமே
கயிலை முனிதேவர் கட்டழிந்து வாடுவரே
மயிலனைய ஈசர்சொல்லை மறந்து மிருந்தாரே
கன்னிப்பெண் ணார்களென் கற்பனையைத் தான்மறந்து
உன்னுதலாய்ப் பெண்கள் ஒருவர்க்கோர் மூப்பாச்சே
ஐயோ கயிலை அங்கே வரம்பழிந்து
பையரவம் பூணும் பரமன்மௌ னமாச்சே 160

அண்ணரே கோவே அடியாள் தனக்கிரங்கி
எண்ணமில்லாக் கயிலைக்கு எழுந்தருள வேணுமையா
என்று அறம்வளர்த்தாள் இறங்கியண்ணர் கால்தனையும்
சென்று பிடித்துச் செய்யத்தாள் தான்வணங்கி
மனதிரங்கி எம்பெருமாள் மார்போடு தங்கையரைத்
தனதில் பிரியமுற்றுத் தங்கையரோ டேதுரைப்பார்

திருமால் திருக்கயிலை ஏகல்

உன்னோடு பிறந்த ஊழிவிதி யானதினால்
நன்னாடோ டேவாழ நமக்குவிதி யில்லையே
உன்றனக் காகவல்லோ ஊருக்கூரே திரிந்து
சந்தோச மற்று சடைக்க விதியாச்சே
என்று பெருமாள் ஏற்ற பிறப்போடு
இன்று கயிலைக்கு எழுந்தருள வேணுமென்று
தேவர் முனிவரோடு திருக்கனனி மாரோடு
மூவருட நடுவன் மகமலர்ந் தேகூடி
நடக்கவே ணுமெனவே நளினமுற் றெம்பெருமாள்
கடற்கரையில் வந்து காலமே தெனப்பார்த்தார்
இந்தச் சொரூபமதாய் இங்குவிட் டெழுந்தருளிச்
சிந்தர் குடியிருக்கும் சீமையி லேகுமுன்னே
கலிமூழ்கி நாமள் கரையேறப் போறதில்லை
பொலிவாக வேசம் புதுப்பிக்க வேணுமென்று 180

என்ன சொரூபம் எடுப்போம்நா மென்றுசொல்லி
அன்னப் பெருமாள் ஆலோ சனையாகி
மேலெல்லாம் வெண்ணீற்றை மிகஅணிந் தெம்பெருமாள்
பாலொக்கும் நெஞ்சம் பரம னொருநினைவாய்
மாமோக ஆசை மயக்க வெறியறுத்துத்
தாமோ தரனார் சடைக்கோல மேபுனைந்து
காலில் சிவநினைவைப் கழராமல் தானிறைத்து
மார்பிலைந்து பூமணியை வகிர்ந்தார வேடமிட்டுக்
கண்ணில் மனோன்மணியைக் கண்ணாடி யாய்ப்பதித்து
எண்ணரிய தங்கை இன்பமுட னேவளர்த்த
முப்பத்தி ரண்டறத்தை உடலெல்லா மேபொதிந்து
செப்பமுடன் கந்தை செய்யவெண் கலையணிந்து
தண்டரள மானத் தடியொன்று கைப்பிடித்து
அண்டர்களும் போற்றி அரகரா என்றுவர
தேவர்களுங் கூடிச் சிவசிவா சிவனேயென்று
தாவமுள்ள தேவரெல்லாம் தாரமி டேத்திவர
அம்மை உமையாளும் அவளுஞ் சடைவிரித்துச்
செம்மையுள்ள மாதும் சிவசிவா என்றேத்தி
எல்லோ ருடனே எம்பெருமாள் தானடந்து
வல்லோர் புகழும் வாழ்கயிலை வந்தனராம் 200

கயிலை தனில்வரவே காரிருளுந் தான்மறைய
மயிலையொத்த ஈசர் மாயவரைக் கண்டாவிச்
சந்ததியைக் கண்டு தாயாவல் கொண்டதுபோல்
வந்தந்த ஈசுரரும் மார்போ டுறவணைத்து
இத்தனை நாளும் யானும்மைக் காணாமல்
புத்திரனுந் தாயைப் போகவிட்டாற் போலிருந்தேன்
மாரி காணாத வாய்த்த பயிர்போலும்
ஏரி காணாத ஏற்றநீர் போலிருந்தேன்
இனம்பிரிந்த மான்போல் இருந்தே னுமைத்தேடித்
துணையில்லார் போலே துணையற்று நானிருந்தேன்
என்று மகாமாலை எடுத்தாவி ஈசுரரும்
சென்றாவிக் கொண்டு சிணுங்கி யழுதுசொல்வார்
இணையும் புறாவதுபோல் இருந்தோமே மைத்துனரே
துணையு மெனைமறந்து தூரநீர் போனதென்ன
என்னைவிட்டு நீரும் எழுந்தருளு மன்றுமுதல்
வன்ன உமையாளின் வடிவை மிகஅறியேன்
துணையிழந்த அன்றிலைப்போல் தினமு முமைத்தேடிக்
கணவனில்லாப் பெண்போல் கலங்கினேன் காரணரே
உயிர்த்தோ ழமைபோல் உறவுகொண்ட நாரணரே
மெய்த்தோ ழமையை விட்டுப் பிரிந்தமுதல் 220

பிரிந்து மலைத்தேன் பச்சை நிறமாலே
சரிந்துபள்ளி கொண்டு சதாவருட மாச்சுதல்லலோ
இத்தனைநாளும் என்னைமிகப் பாராமல்
மத்திப மந்திரியே மறந்தென்னை வைத்ததென்ன
கயிலைக்கு மென்றனக்கும் கட்டான மந்திரிதான்
அகில மீரேழ்க்கும் அடக்கமுள்ள மந்திரிதான்
நீயல்லாமல் வேறுளதோ நெடிய திருமாலே
தானீ தமான சர்வபர நாரணரே
இந்த விதமாய் இகபர விதத்தோடும்
உந்தன் தனைப்பெறவே உயர்ந்ததவஞ் செய்தனல்லோ
அப்படியே நீரும் ஆதிநா ராயணராய்
முப்படியே வந்து உருவெடுத்த மாயவரே
கயிலைத் தேவாதிகளும் கண்ணான மாதிருவும்
ஒயிலான மாமறையோர் உற்ற இருஷிகளும்
கின்னரர்கள் வேத கிம்புருடர் கேதாரர்
மன்னர் முனிவர்களும் மறையும்பல சாஸ்திரமும்
வேதாவும் நந்தி விதரூபச் சித்தர்களும்
நாதாந்த வேத நல்ல ரிஷிமாரும்
இப்படியே ஓர்வசனம் அவர்களோ டேகேட்டுக்
கல்லை வலித்திழுத்துக் காலில்மிகப் போட்டவர்போல்         240

சொல்லை மிகக்கேட்டுச் சுமந்தேன் மிகுபாரம்
எல்லா விதப்பாடும் யான்பட்ட துபோதும்
வல்லவனே யுன்னுடைய வாக்கைக்கே ளாதபடிச்
செய்த விதத்தாலே செப்புதற்கு நாணமுண்டு
மெய்யிசையு மாலே மெத்தகோ பிக்கரிது
எல்லா முமது இச்சையது போல்நடத்தும்
சொல்லொன்றுக் குள்ளே சூட்டிநீ ராளுமென்று
மாலுக்கு மனது மகிழ்ச்சை வரும்படிக்குப்
பாலுக்கு மோரான் பகர்ந்தார்கா ணம்மானை
அப்போது அச்சுதரும் அவரேது சொல்லலுற்றார்
எப்போது முமக்கு இப்படியே யுள்ளமுறை
நானொருவன் வேடனைப்போல் நாட்டில் திரிந்தலைய
ஏனோகா ணுங்களுக்கு இல்லையே சங்கடங்கள்
முன்னுதித்தப் பாவி முழுநீசக் குறோணியினால்
பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தவன் மாளும்வரை
உகமா றானதிலும் உதித்தக்குறோ ணியுயிரைப்
பகையாக்கிக் கொல்ல பட்டபா டெத்தனைகாண்
யான்மிகப் பட்டபாடு ஆரும் படவரிது
தான்பட்ட தெல்லாம் தான்போது மென்றுசொல்லி
இனிமேல் பகைதான் இல்லாமல் செய்வதற்கு 260

மனுவாய்ப் பிறக்க மக்களே ழுபேரை
சேர்த்தெடுத்து விந்தில் சேர்ந்துசெங் காவுதன்னில்
சார்ந்து விளையாடி தான்பெற்ற பாலருக்கு
எல்லோருங் கூடி ஏற்றதிரு நாமமிட்டு
வல்லோராய்ப் பூமிதனில் வாழுமென்று வைத்தோமே
அலுவ லொழிந்ததென்றும் அலைச்சல்மிக இல்லையென்றும்
மெலிவெல்லாந் தீர்ந்து மேவிஸ்ரீ ரங்கமதில்
இனிதிருக்கும் போது என்னை நினையாமல்
மனிதனையும் பூமியிலே வகுத்ததென்ன சொல்லுமென்றார்
ஆறு யுகமதிலும் அதிகபலக் காரர்களாய்
வீறுடனே பிறவி விதவிதமாய்ச் செய்தீரே
முன்பிறந்த குறோணி முழுங்கினான் கயிலைமுதல்
வன்பிறவிச் சூரனைத்தான் வதைக்கவே றாருமுண்டோ
இரண்டாம் யுகத்தில் நன்றிகெட்ட மாபாவி
குண்டோம சாலியனாய் குதித்தான் மகாபாவி
வானலோ கமுழுங்க வாய்விட் டலறினதால்
கோனகிரி வேந்தே கொன்றதுவே றாருமுண்டோ
மூன்றாம் யுகத்தில் முளைத்தானே யப்பாவி
வான்றான மல்லோசி வாகனென்ற மாபாவி
தேவரையுந் தெய்வ ஸ்திரிகளையு மூவரையும் 280

ஏவலது கொண்டு இடுக்கமது செய்தனனே
முறையமது ஆற்றாமல் ஓடிப்போ வென்றுரைத்தீர்
சிறைப்பிடித்தப் பாவிகளைச் செயித்ததுவே றாருமுண்டோ
நாலாம் யுகத்தில் நன்றிகெட்டச் சூரபற்பன்
ஆலா விருச்சம் அதுபோல் கிளையுடனே
நாட்ட முடனே நாடும் படையோடு
கோட்டை யதிட்டுக் கொடியமா பாவியனாய்க்
கேட்ட வரங்களெல்லாம் கெட்டியாய் நீர்கொடுத்துத்
தேட்டமுடன் கயிலை சீமையது வுங்கொடுத்து
இருக்க இடமற்று எழுந்திருந்து நீரோடி
உருக்கமுடன் நானிருந்த உவரியி லேகிவந்தீர்
தேவர்களைப் பாவி செய்த இடுக்கமதால்
மூவர்முத லும்மிடத்தில் முறையிட்ட ஏதுவினால்
என்னை வருத்தி ஏற்ற மொழிகள்சொல்லிச்
சென்றவனைக் கொல்லுமென்று செய்திசொல்லி விட்டீரே
விட்டவுட னவனோடே வெகுநாளா யுத்தமிட்டுப்
பட்டபா டெல்லாம் பகர எளிதாமோ
உயுத்தமிட் டவனை ஒக்கத் தரமறுத்துச்
செயித்தேன் பின்னவனும் செத்த யுகமதிலே
இரணிய சூரனென்று எனக்கெதிரி யாய்ப்பிறந்து 300

தரணியி லவன்பேரைச் சாற்றி வழங்கலுற்றான்
பின்னு மவன்றனக்குப் பிள்ளையாய் நான்பிறந்து
கொன்று தரமறுத்தேன் குதித்ததுகாண் மற்றயுகம்
பத்துத் தலையோடு பாவியவன் பிறந்து
உற்றுஅவன் கேட்டவரம் ஒக்கநீர் தான்கொடுத்து
அருகில்மிக வாழ்ந்திருந்த ஆயிளையை நீர்கொடுத்துக்
குருவிருந்த சோதி குன்றையும் நீர்கொடுத்துப்
பாவியவன் மூன்று பாரடக்கி ஆண்டனனே
தேவியும் நானும் தேசமதி லேபிறந்து
அவனை யழித்து அந்தயுக முங்கருக்கிச்
சிவனேயுன் பாரிதனைச் சிறைமீட்டித் தந்ததாரு
சதியாந்துரி யோதனனாய்த் தான்திரும்ப வெபிறந்து
மதியாம லென்றனையும் மறையுமிக நம்பாமல்
அன்போரை யெல்லாம் அகப்படுத்தி மாபாவி
வம்பான கள்ளன் மாய்மாலஞ் செய்ததினால்
கொன்றவகை சொல்லக் கூடுமோ காரணரே
என்னென்ன பாடு யான்பட்ட மாய்மாலம்
கஞ்சனென்ற பாவிக்குக் கடியவரம் நீர்கொடுத்து
வஞ்சகன்தான் செய்த மாய்மாலம் மெத்தவுண்டு
அவனை வதைக்குமுன்னே அடியெத்த னைகளுண்டு          320

சிவனே யுமக்குச் சூடெண்ணஞ் சற்றுமில்லை
இருப்பி லிருந்துகொண்டு எனக்கலைச்சல் செய்வதுண்டு
எதிர்ப்பவரார் சொல்லும் இந்தமாய் மாலமொடு
கலியென்ற சொல்லு காதில்மிகக் கேட்டதுண்டால்
சலிவாகி மேனி சடலமிரு ளாகுமல்லோ
மெய்ப்பேச வேணுமென்று மேவி யிருந்தாலும்
பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென
வாளா யுதத்தாலே வாய்த்தகணை யம்பாலே
பாழாக்க வென்றாலும் படாதே மகாலிதான்
மற்றப் பிறவி யாக வகுத்தாலும்
இத்தனை யெண்ணம் இல்லையே யென்றனக்கு
அய்யோயென் மக்கள் அதற்குள்ளாகப் பட்டாரே
மெய்யோ யினிமக்கள் விளங்குவ தெக்காலம்
தீண்டிப் பிடித்தானே செத்தகலி மாய்மாலன்
வீண்டிடறு தீர்ந்துமக்கள் விளங்குவது எக்காலம்
ஆறு பிறவி அழித்ததுவு மென்றனக்கு
நீறுபோ லெண்ணுதுகாண் நிற்கலியைப் பார்க்கையிலே
என்ன விதத்தால் இவனை யழிப்போமென்று
வன்னச் சிவனாரே மனதுவேறே ண்ணுதுகாண்
நாடாச்சு தேசம் நகரியுங்கள் பாடாச்சு 340

வீடாச்சு குண்டம் மேதினிக ளங்காச்சு
தேச வழிபோறேன் செல்லாது இங்கேதான்
மாய்கை வலையைவிட்டு மறையவே போறேன்காண்
பலபேர்க ளாட்டும் பாம்புபோ லென்னையுந்தான்
அலைவிதமா யென்னை அழைத்ததென்ன சொல்லுமென்றார்
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போது நானும் இயம்புகிறேன் கேளுமென்று
முற்பிறவி துயரம் எல்லாம் வரும்படிக்குப்
பண்டுவொரு சாபம் பகர்ந்தேன்நான் மைத்துனரே
அன்றுசா பம்பகர்ந்த அதுகேட்டுக் கொண்டருளும்
குறோணி யொருசூரக் கொடும்பாவி தான்பிறந்து
சுறோணித மாயவரே தொல்புவியெல் லாமுழுங்கி
என்னோடு ஈஸ்வரியாள் எல்லோரை யும்விழுங்க
நின்னோடு மாயவரே நீயொருவன் தப்பிமிக
என்னை நினைத்துத்தவம் இருந்தாய்நீ கீழுலகில்
தென்னவனே நீயும் செய்தத் தவமதினால்
எழுந்தருளி நானும் என்னவரம் வேணுமென்றேன்
குளிர்ந்த குணமான கோவேந்தே நீமாறி
கேட்டாயே சூரனுடல் கீறித்துண் டாறாக்கித்
தாட்டாண்மை யாகத் தரணிதனில் விட்டெறிய 360

வரந்தாரு மென்று வாகாகக் கேட்டவுடன்
தரந்தரமே துண்டம் தரணிக்கெல் லாம்பிறந்து
மாற்றா னாயுனக்கு வருமாறு யுகம்வரைக்கும்
சீற்றத் துடனே செடமெடுக்கு மென்றுசொல்லித்
தந்த வரத்தின் தன்மையா லிந்தமுறை
எந்தன்மேல் கோபம் ஏன்சொல்லப் போறீர்காண்
என்றந் தஈசர் இப்படியே சொன்னவுடன்
அன்று மகாமால் ஆகங் களிகூர்ந்து
ஆனாலும் நான்கேட்ட அவ்வரங்க ளானாலும்
மானாபர ஞாய வரம்பழித்துப் போட்டீரே
இதற்குமுன் னேதாலும் என்னையறி யாதவண்ணம்
ஒதுக்கிலிருந் தோர்வளமை உங்களால் செய்ததுண்டோ
மும்முறைபோ லென்னை உவந்துக் கெணியாமல்
அம்முறையை நீரும் அழித்ததேன் ஈசுரரே
என்னைக் கெணியாமல் இக்கலியைச் செய்ததினால்
நன்னமிர்த ஈசுரரே நம்மாலே கூடாது
அழிப்பதுவுங் கலியை அங்கல்லால் கூடாது
விழிப்பதென்ன நம்மாலே விசாரமிடக் கூடாது
நம்மாலே யொன்றும் நடவாது ஈசுரரே
சும்மாவென் னோடிருந்து சோலிபண்ண வேண்டாங்காண்        380

உகத்துக் குகங்கள் ஓடித்திரிந் தலைந்து
மகத்துவமாய்ச் சந்து சதைமுறிந்து நோகுதையா
தூங்கி விழியாமல் திமிர்ப்போல் சரீரமது
ஏங்கிமிக வாடுதப்பா என்திருவைக் காணாமல்
பாவிகள் பண்ணிவிட்ட பாட்டைமிக எண்ணுகையில்
ஆவி மிகவாடி அங்கமெல்லாஞ் சோருதையா
அந்தமுழுப் பாவிகளில் அதிகமுழுப் பாவியிவன்
சந்ததிக்குத் தாய்தகப்பன் தாழ்ந்துநின் றேவல்செய்தால்
கொடியவனோ பாவி கொஞ்சமிஞ்ச மோயிவன்தான்
முடியுமோ பாவி யுத்தமிடச் சென்றதுண்டால்
தன்ம மறியாத சண்டித்தடி மூடர்கையில்
நம்மைப் பிடித்தங்கே நகட்டிவிட வேண்டாங்காண்
பட்ட அடிவூறப் படுத்திருக்கப் போறேனான்
ஒட்டொழிய என்னை ஒடுக்கிவிட வேண்டாங்காண்
என்றாதி நாரா யணர்தானு மிப்படியே
அன்றாதி நாதன் அவரோ டிதுவுரைக்கச்
சிவனு மிகவயர்ந்து செப்புவார் மாயருடன்
புவன மதற்குடைய பொன்னே யென்மாதவமே
இப்படித்தான் மைத்துனரே ஈதுரைத்தீ ரானாக்கால்
எப்படித்தா னானும் ஏகம தாளுவது 400

சுவரல்லோ மைத்துனரே சித்திரம் நாங்களல்லோ
கவரல்லோ நாங்கள் கயமல்லோ மைத்துனரே
மாயனல்லோ எங்களுக்கு மலையல்லோ மைத்துனரே
ஆயனல்லோ எங்களுக்கு அணையல்லோ மைத்துனரே
கொப்பல்லோ நாங்கள் குருவல்லோ மைத்துனரே
செப்பல்லோ மைத்துனரே சிமிள்கூடு நாங்களெல்லாம்
நீர்தானு மிப்படியே நெகிழ்ந்தமொழி சொன்னதுண்டால்
ஆர்தானு மெங்களுக்கு அணைவுமொழி சொல்லுவது
மூடிப்படிக் குலுங்க முயங்காதோ கொப்பதெல்லாம்
கூடிப்படிக் குலுங்க குலையாதோ சீவனது
தேவர்முனி சாஸ்திரிகள் சிறுபுத்தி யைக்கேட்டு
மூவருன்னைப் பாராமல் முனிந்துசெய்த ஞாயமெல்லாம்
பொறுத்தருளு மென்னுடைய புண்ணிய மைத்துனரே
மறுத்துரைத்தால் நானுமினி வகுத்துரைக்க ஞாயமில்லை
எல்லாம் பொறுத்து இனியுமக்குத் தேர்ந்தபடிச்
சொல்லொன் றுக்குள்ளே செலுத்தியர சாளுமென்று
ஈசுரனார் சொல்ல எம்பெருமா ளேதுசொல்வார்
வீசுபுக ழீசுரரே விரித்துரைக்க நீர்கேளும்
என்னையுமோ கீழுலகில் இறந்துகிடந் தாரெனவே
சொன்னவரை யெல்லாம் சுறுக்காகத் தானழையும் 420

என்றந்த மாயவனார் இப்படியே சொன்னவுடன்
அன்றந்த ஈசுரனார் அழைத்தா ரவர்களையும்
உடனேதான் தேவர்முனி ஒக்கப் பயமடைந்து
தடதடென ஓடிவந்து தாழ்ந்துநமஸ் காரமிட்டு
அப்போது மாயவனார் அவர்கள் தமைப்பார்த்துச்
செப்புகிறா ரையா திருக்கண் பொறிபறக்கக்
கண்கள் சிவந்து கருமேனி தான்விறைத்து
விண்க ளதிர வெடுவெடெனக் கோபமுற்றுத்
தேவர் திணுக்கிடவே தெய்வமுனி தான்பதற
மூவர் திணுக்கிடவே உரைக்கிறா ரெம்பெருமாள்
மண்திண் ணெனவே மலைகள் பொடிபடவே
திண்திண் ணெனவே தேவர் மிகப்பதறச்
சிவனுங் கிடுகிடெனச் சிவனுமை யும்பதற
நமனும் பதற நாரா யணருரைப்பார்
தேவரே வானவரே தெய்வமுனி சாஸ்திரியே
மூவரே நானும் ஒளித்ததெங்கே சொல்லுமென்றார்
ஆளுக்கொரு மூப்பாய் அரியிங்கே யில்லையென்று
கோளுரைத்த ரீசர் குருமுன்னே நீங்களெல்லாம்
சாத்திரத்தைப் பார்த்துச் சரியாகச் சொன்னதிட்டச்
சூத்திரத்தை யெல்லாம் சொல்லுமென்றா ரெம்பெருமாள்       440

சொல்லநா வில்லாமல் சோர்ந்துமிகத் தேவரெல்லாம்
பல்வாய் சுண்டொல்கிப் பதைபதைத்து நின்றனரே
கண்தலை கவிழ்ந்து கால்பேர்த்து வைக்காமல்
விண்கவிழ்ந்த யோகமுனி வெட்கிநின்றா ரன்போரே
நின்ற நிலையறிந்து நெடியபர மேசுரரும்
அன்றெந் தனோடே அறம்பாடிச் சொன்னதெல்லாம்
இன்றெங்கே போச்சுதுகாண் இரண்டும்மிகச் சொல்லாமல்
நின்றிங்கே நீங்கள் நினைவயர்ந்து நிற்பதென்ன
பேச்சுப்பே சுங்கிளிக்குப் பின்பூனை நாட்டமுற்றால்
சீச்சுக்கீச் சென்றுகிளி கீழ்ப்பதுங்க வேண்டியதேன்
அன்றுநீர் சொன்னமொழி அயர்த்துமிகப் போனதென்ன
இன்றுநான் கண்டிலனே இதற்குமுன் னுள்ளதிறம்
இப்படியே ஈசர் எடுத்துரைக்கத் தேவரெல்லாம்
எப்படிநாம் சொல்வோம் என்றே திகைக்கலுற்றார்
எல்லா மறிந்து எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
பொல்லாதார்க் கெல்லாம் பிறப்பொன் றிசைந்திருக்கு
சொல்லுகிறேன் நானுமொன்று சொல்லுவதைக் கேட்பீரோ
நல்லதுதா னென்று நாட்டமுற் றெல்லோரும்
அப்போது எம்பெருமாள் ஆதிசிவ மோடுரைப்பார்
இப்போது கேட்பீரோ யான்சொல்லும் நியாயமது 460

சிவன் திருமால் ஐக்கியம்

என்றுதிரு மாலுரைக்க எடுத்துரைப்பா ரீசுரரும்
மன்று தனையளந்த மாலேயென் மைத்துனரே
வாரு மெனஅழைத்து மாலோன் தனையிருத்திச்
சீருடனே வேதாவும் சிவனும் உமையாளும்
எல்லோருங் கூடி இருந்தந்த மாயவரின்
நல்லா யருகிருத்தி நவிலுவார் சத்தியமாய்
இதற்குமுன் செய்த இழிவெல்லாம் நீர்பொறுத்துக்
கதுக்காக வும்முடைய கருத்தின் படியாலே
நடக்கும்படிச் சட்டமெல்லாம் நாரணர்க்குத் தந்தோங்காண்
அடக்குடக் கெல்லாம் ஆதிக்குத் தந்தோங்காண்
இன்றுமுத லும்முடைய இச்சைபோ லேநடத்தி
என்றும் நடத்திக்கொள்ளும் என்றே விடைகொடுத்து
சட்டமெல் லாமுமக்குத் தந்தோ மினிநீர்தான்
இட்டசட்ட மீறி இனியொருவர் செய்யோங்காண்
உம்மை நினையாமல் உக்கலியைச் செய்ததினால்
நம்மை வரைநீர்தான் நடத்தும் படிநடத்தும்
என்றந்த ஈசுரரும் ஏற்ற உமையாளும்
அன்றந்த வேதாவும் அமரர்முனி தேவர்களும்
சத்திய மாகத் தானுரைத்தார் நாரணர்க்கு
மத்திய நாதன் மனமகிழ்ந் தேதுசொல்வார் 480

நல்லதுதா னென்று நாட்டமுற் றெம்பெருமாள்
வல்ல பரமே சுரரோ டேவகிர்வார்
கன்மம்போ லொத்தக் கலிப்பிறப் பானதினால்
நம்மள் முதல்மாறிப் பிறக்கநா ளாகுதுகாண்
ஆனதா லீசுரரே அருளுகிறேன் நீர்கேளும்
ஈனமுள்ள பாவி இயன்றதுரி யோதனனைக்
கொன்றே னவனைக் குருநாடை வர்க்கீந்து
முன்னே மறையோன் மொழிந்தசா பத்தாலே
தேவர்முதல் வானோர் தேவமுனி தான்வரையும்
மூவ ருறையும் உற்றதெய்வ லோகமேழும்
மேலோர்க ளெல்லாம் மேதினியி லென்றனக்குப்
பூலோகந் தன்னில் பிள்ளையென வேபிறக்க
வேணுமென்று மாமுனிவன் விட்டசா பத்தாலே
தாணுவே நீரறியத் தாம்பிறந்தார் சாணாராய்
ஏழுலோ கமதிலும் ஏற்றமுள்ள வித்தெடுத்துக்
கீழுலகில் பெற்றேன் கீர்த்தியுள்ள சாணாராய்ப்
பெற்றுவைத்து ஸ்ரீரங்கப் பூமியிலே போயிருந்தேன்
மற்றுஞ்சில நாட்கழித்து வாழுந் தியதிதனில்
அனந்த புரம்நோக்கி யானேகும் வேளையிலே
புனந்தனிலே நின்று புலம்பலுற்றார் தேவர்களும் 500

தெய்வலோ கத்திலுள்ள தேவதே வாதிகளும்
வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும்
சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும்
தவமான வேதாவின் தன்னுகத்தில் வாழ்பவரும்
வடகயி லாசமதில் வந்திருந்தார் வாட்டமதாய்
நடக்கும் வழியில் நானவரைக் கண்டேதான்
தாது கரமணிந்த தானவரே தர்மிகளே
ஏதுகா ணீங்கள் இங்குவரக் காரணமேன்
என்றவரோ டேகேட்டேன் ஈசுரரே கேட்டருளும்
அன்றவர்க ளென்னோடே அருளினதை நீர்கேளும்
கலியன் பிறந்ததினால் கட்டழிந்து மானுபங்கள்
சலிவாகி எங்களுட தானதவங் குன்றினதால்
இனியிருந்தா லென்னபலன் என்றுமிக எண்ணமுற்றுக்
கனிந்து வுமைத்தேடிக் காணவந்தோ மென்றுரைத்தார்
அப்போது வுங்களுக்கு ஆகவேண் டியவளம்
இப்போதே சொல்லும் என்றேகேட்டேன் தேவருடன்
சொல்லுகிறா ரந்தத் தேவர்கள்தா மீசுரரே
நல்லதுதா னிந்த நாட்டில்கலி வந்ததினால்
கலிக்குமுன் னுள்ளதுவும் கலியில்மிகக் கண்டதுவும்
அலிக்கிய மானதினால் அக்கலிமா ளும்போது 520

சிவசத்தி தான்முதலாய்ச் சீவனுள்ள செந்துகளும்
தவமுனிவ ராகிடினும் தரணி புற்பூண்டுவரை
மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும்
திட்டமுடன் நாரணர்க்குச் சிந்தையொத்த பேர்களெல்லாம்
மேனி யழுக்கறுத்து மேன்மூ டிருளறுத்து
யோனிப் பிறப்பும் உற்றலிங் கப்பிறப்பும்
அவரவர்க் குள்ள அதிகப் பிறப்போடும்
எவரெவர்க்கும் பூமியொன்றில் இனிப்பிறக்க வேணுமல்லோ
ஆகும் பிறப்பும் ஆகுவது மிந்நாளில்
சாகும் பிறப்புத் தவறுவது மிந்நாளில்
அப்படியே நீசன் அவன்பிறந்தத் தோசமதால்
எப்படியும் ரண்டிலொன்று ஆகுவது திட்டமுண்டே
ஆனதா லெங்களுட அக்கமதி லிப்போது
மானமாய்ச் சான்றோராய் வகிருமென்றா ரீசுரரே
கொஞ்சம் பொறுவுமென்று கூறிவந் தேன்முன்னமே
இஞ்சொல் பார்க்கும்போது இவ்வுலகி லுள்ளோரைப்
பிறவிசெய்ய ஞாயமுண்டு பிள்ளைமொழி சொன்னதினால்
திறவி முதற்பொருளே செய்தியென்ன சொல்லுமென்றார்
அப்போது ஈசுரரும் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போது மைத்துனரே யானென்ன சொல்வதுதான் 540

நீர்நினைத்த துபோலே நிச்சயித்துக் கொள்ளுமென்றார்
பாரனைத்துங் காக்கும் பரமே சுரருரைத்தார்
அப்போது பாரளந்த அய்யாநா ராயணரும்
முப்பொருளு மொன்றாய் ஒத்திருந் தேதுசொல்வார்

தேவலோகத்தார் மனுப்பிறப்பு

தேவரையுந் தான்வருத்திச் செப்புவா ரையாவும்
பாவலரே நீரும் பார்த்துணர்ந் தோராமல்
மாலிங்கே யில்லையென்று மாறாட்டஞ் சொன்னதற்கு
சூலின் கருத்திரண்டு தொல்புவியி லேபிறக்கும்
உங்களி னமாக ஒருபிள்ளை பெற்றதுண்டு
அங்குபோய்ச் சாணாராய் அதில்பிறக்கப் போவுமென்று
சொல்லவே தேவரெல்லாம் சிரித்துமனங் கூடி
நல்லதுகாண் நாரணரே நாங்கள்பிழைத் தோமெனவே
பிறக்கவே போவோம் பிறந்தா லடியார்க்கு
இறக்கவிதி யாகுமல்லோ இழிகலிய னேதுவினால்
இறந்தால் பின்னுமந்த இனத்திலடி யார்பிறக்க
வரந்தாரு மென்று வணங்கிநின்றா ரையாவை
அப்போது அய்யா அரிநமோ நாரணரும்
செப்பரிய நல்லகுலத் தேவர்களுக் கேதுரைப்பார்
மக்களே நீங்கள் வையகத்தி லேபிறந்தால்
வக்கலிய னேதுவினால் மாயமுங்க ளைச்சூழ்ந்து 560

என்பேரு மீசர் ஏற்றஉமை யாள்பேரும்
தன்பேருஞ் சொல்லாதே என்று தடுத்தடிப்பான்
ஆனதால் சாவுவரும் ஆனாலு முங்களுயிர்
மானமது மாறாமல் மாறியவ் வினத்திலுறும்
இப்படியே வுங்களைநான் இரட்சித்துக் காக்குமட்டும்
எப்படியு முங்களுயிர் இதில்விட் டகலாதென்றார்
நல்லதுகா ணென்று நாட்டமுற்றுத் தேவரெல்லாம்
வல்ல வகையான வாய்த்தசா ணாரினத்தில்
தேவ ருயிர்பார்த்துச் சென்றுதித்தார் தேவரெல்லாம்
மூவருரை மாறாமல் மோகமுள்ள தேவரெல்லாம்

சம்பூர்ணத்தேவன் - பரதேவதை தவசு

போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில்
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
பரதே வதையான பார்மறலி தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடையமன்ன னைநீக்கித்
தெய்வச்சம் பூரணனும் சேர்ந்தவளோ டேநடப்பாய்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால் நன்னுதலை யென்னோடு
தான்பிறக்கச் சொல்லித் தாரம்போ லாக்குவீரால்
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்க ளுண்டுமையா         580

என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய்
உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு
பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ
அப்பிறவிக் கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ
இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா
ஆனையொடு பூனை அணைந்துநலஞ் செய்திடுமோ
பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா

ஆனை மதமா யடர்ந்து மிகத்தேவா
பூனை யொடுவந்து புல்குமோ - பூனை
நாயோடு புல்குமோ நல்லறிவில் லாத்தேவா
ஈயோடு சேர்மோ இசல்

ஏனடா தேவாநீ இந்தமுறை சொன்னதென்ன
வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா
கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில்
ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா
இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி
எப்படியும் புத்தி இசையாம லேயுரைப்பான்
காவலரே மாமோகம் கண்டஇட மன்றல்லவோ
ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண் 600

எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத்
தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும்
தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு
என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம்
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே
கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு
காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று
சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல்
நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான்
பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி
விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து
நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று
நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும் 620
நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார்
அனைத்துயி ருங்காக்கும் அய்யாநா ராயணரும்

எமலோகத்தார் மனுப்பிறப்பு

ஏம னுலகமதில் இருக்குந் தபோதனரைத்
தாமனந்தப் பேர்கள் சர்வது மேயழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த தபோதனரே
ஏதுங்கள் ஞாயம் என்னோடே சொல்லுமென்றார்
உங்கள் குடும்பம் உடையோன் பதம்வணங்கி
எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால்
ஆனதா லவர்கள் அனுக்கிரகந் தன்னாலே
மானமுட னேமனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர்
இன்ன முன்வழிகள் என்மகவா யங்கிருக்க
வன்னமுட னவ்வழிதான் வாய்த்தசா ணாரினத்தில்
போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதி லேவளர்ந்து
மேற்பிறவி வந்திடினும் மேவுவ தவ்வழியில்
இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து
எப்படியு மென்குடும்பத் தாலே யிருளகன்று
உன்பிறப்போர் தம்மால் உதவிபெற்று வாழுமென்று
எம்பெருமாள் சொல்லி இனத்தில் பிறவிசெய்தார்

சொர்க்க லோகத்தார் மனுப்பிறப்பு

சொர்க்கலோ கத்தாரைச் சுறுக்காய் வரவழைத்து
மிக்கவுங்கள் செய்தியென்ன விடுத்துரையு மேவலரே     640
நான்பிறவிக் கெல்லாம் நம்பிகூ டப்பிறந்து
என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால்
இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய்
வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால்
காலக் கலிதான் கட்டழித் தென்மகவு
மேலுக மாள விடைநிச்சித் திருப்பதினால்
நீங்களும்போ யங்கே நிங்ஙளுட தன்வழியில்
மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய்
வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம்
நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ
ஏவல்கண் டுங்களைநாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம்
போவெனவே சொல்லிப் புகன்றா ரவர்களுக்கு

பிரமலோகத்தார் மனுப்பிறப்பு

பிரமலோ கத்திலுள்ள பிலத்த இருஷிகளை
வரவழைத்து அய்யா நாராயணர் வகிர்வார்
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த ரிஷிமாரே
ஏதுங்கள் ஞாயம் என்னோ டுரையுமென்றார்
அப்போது நல்ல அந்தரிஷி யேதுரைப்பார்
இப்போது அய்யாவே எங்களைப்பூ லோகமதில்
படைக்கவே ணுமெனவே பகர்ந்தமொழி மாறாமல்
நடக்கக் கருமமிது நாரணரே பொய்யாது 660

முன்னமே யெங்கள் முறைவழியி லோருயிரை
வன்னமுள்ளச் சாணாராய் வகுத்தீரே யும்மகவாய்
அல்லாம லெங்கள்வழி ஆனரிஷி தங்களிலே
பொல்லாத குற்றம் பிரமனுக்குச் செய்ததினால்
அன்பத்தினா லொன்றிரிஷி அவனிதனில் போகவென்று
இன்புற்ற நாரணரே ஈந்தீரவர் கேட்டவரம்
ஆனதா லவர்கள் அவனிதனி லேதிரிய
ஏனையா எங்களைநீர் இப்போ பிறவிசெய்தால்
இனம்பிரிந்து நாங்கள் இருப்போமே பூமிதனில்
கனம்பொருந்தும் நாரணரே கட்டுரைக்க வேணுமென்றார்
நல்லதுதா னென்று நாரா யணருரைப்பார்
வல்ல ரிஷிமாரே வகையாகக் கேட்டீரே
அதற்கு விபரம் அருளுவேன் கேளுமென்று
மதுக்குகந்த மன்னன் வழுத்துவா ரன்போரே
சென்ற ரிஷியெல்லாம் செடமெடுத்துப் பூமிதனில்
மண்டலங்கள் தோறும் வாழுவார் கண்டீரே
என்ன விதமாய் இருப்பாரென் றேயினமாய்
துன்னயமாய் நீங்கள் துணிந்துநன்றாய்க் கேட்டிங்கோ
மான்தோ லிலேயிருப்பான் வானமதைத் தான்பார்த்துத்
தீன்சோ றருந்தாமல் செலங்குடித்து நாடோறும் 680

கற்பமுண்டோ மென்று கலியில்மிகப் பட்டுழன்று
அற்பமுடன் கொஞ்சி அவன்சிலநாள் தானிருந்து
பிரம்ம வைகுண்டம் பிறப்பெடுத்து நான்தானும்
வரம்வைத் தவனை வதைத்துப்பின் னுன்னினத்தில்
படைத்துத் தருவேன் பார்த்துக்கோ லெக்கெனவே
அடர்த்தியா யைம்பத்து ஐந்து இருஷிகளும்
ஆளுக் கொருவிதமாய் அருந்துவ துமிருப்பும்
நாளு முறையாய் நடத்துவதும் நீகேளு
ஒக்க விபரமதாய் உரைக்கநே ரம்பெருகும்
மிக்கத் திரட்டாய் விடுகிறேன் நீகேளு
நல்ல மிளகுதின்று நவகண்டி தான்பூண்டு
கொல்ல மிளகுதின்று குப்பைமே லேபுனைந்து
வெள்ளித் தடுக்கில் வீற்றிருப்பா ரேசிலர்கள்
ஆனைத்தோ லிட்டு அருந்தாமல் நாடோறும்
கானகத்தில் வாழ்ந்து கண்மூ டாரேசிலர்கள்
மரத்தைமிகக் காலிலிட்டு வார்சிலந்திக் கோர்வையிட்டுச்
சரத்தையுள்ளே கொண்டு தானிருப்பா ரேசிலர்கள்
மீட்டைக் கொடியும் மிளகுவெற்றி லைக்கொடியும்
இட்டமுடன் நிஷ்டை இருப்பார் சிலபேர்கள்
உப்பில்லா தன்னம் ஒருபோது தான்குடித்து 700

அப்பிலிட்டுத் தின்று அக்கினியி லேகாய்ந்து
இருப்பார் சிலபேர் இன்னமும்நன் றாய்க்கேளு
பொருப்பி லிருப்பார் பூமியில் வரோமென்பார்
கள்ளிப்பா லுண்டு கவிழ்ந்திருப்பா ரேசிலபேர்
கொள்ளித் தழலும் கொள்ளைகொண்டக் கஞ்சாவும்
உண்டோங்காண் லோகமதை விழுங்குவோ மென்பார்சிலர்
புல்லை யருந்திப் புலித்தோலின் மேலிருந்து
தில்லைப்பா லுண்டு திரிவோமென் பார்சிலபேர்
புகையிலைச் சாறு புகட்டுவோ மென்பார்சிலர்
தகையில்லாக் கற்பம் தானுண்டோ மென்பார்சிலர்
பூவில் படுப்போம் புகட்டுவோ மாவின்பால்
காவி லுறைந்து கலைதரி யாதிருப்பார்
உடையுடா தேகழுத்தில் உத்திராட்ச மேபுனைந்து
நடையொற்றைக் காலால் நடப்பார் சிலபேர்கள்
இப்படியே நன்றாய் இவரிவர்க் கோர்விதமாய்
அப்படியே தேசமைம்பத் தாறதி லுந்திரிவார்
சோழக் குருநாடு தேசமது நன்னாடு
ஆளவை குண்டர் அவர்வளரும் நன்னாடு
இந்நாட்டில் வாழும் இராச ருடவளமை
சொன்னால் தொலையாது சொல்ல எளிதல்லவே 720

இப்புவியில் வாழும் என்றன்வை குண்டரிடம்
எப்புவியில் வாழும் இருஷிகன் னாசியெல்லாம்
வரம்வைக்கச் சொல்லி வதைக்கவந்த வைகுண்டர்காண்
பரம்பெரிய வைகுண்டப் பதியாள வந்தவர்காண்
சன்னாசி யெல்லாம் தலைவீதம் வாழுகின்ற
மின்னான சீமை விரிக்கக்கேள் நீங்களெல்லாம்
பாண்டிய னான பரிகொங்கை நன்னாட்டில்
ஆண்டிருப்பான் சன்னாசி அவனொருவன் கேட்டிருநீ
வருஷ மொருநேரம் மாறிப் பிறந்தேனென்று
புருஷனென வந்தெடுத்தால் பிள்ளையுண் டென்றுசொல்லி
இருப்பான் சிலநாள் இவனொரு சன்னாசி
சிங்கள நன்னாட்டில் சீகண்டன் ராச்சியத்தில்
புங்கம்பா லுண்டு பூவையரைப் பாரோமென்று
ஆடை யுடுக்காமல் அவனிருப் பானொருவன்
கோரக்க நாடு குருக்கேத்திரன் ராச்சியத்தில்
சூரக்கோல் கைப்பிடித்துச் சூலா யுதமேந்தி
தன்மதத்தால் பேசித் தானிருப்பா னேசிலநாள்
கன்மத்தால் சாவான் கடியமூன் றாம்பேர்தான்
இப்படியே யைம்பத் தாறூ ரிவைகளுக்கும்
அப்படியே தானிருக்கும் ஆனசன் னாசிகட்கு 740

ஒண்ணொண் ணடையாளம் உரைக்கிறேன் சீக்கிரமாய்
துண்ணெனவே நீங்கள் துணிந்துமிகக் கேளுமென்று
நாலாஞ் சன்னாசி நயன மிமையாதிருப்பான்
காலைக் கைகொண்டு கட்டிறுக்கி யேயிருப்பான்
அஞ்சாஞ் சன்னாசி அன்னங் குடியாமல்
பிஞ்சிரு மிச்சியிலை பிசைந்துதின் றேயிருப்பான்
ஆறாஞ் சன்னாசி ஆனகஞ் சாகுடித்து
நீறாக்கித் தேகமதை நிஷ்டைபோல் தானிருப்பான்
ஏழாம் சன்னாசி இடுப்பிலொரு சீலைகட்டிப்
பாழாகப் பட்சி பறவைதின்றே யிருப்பான்
எட்டாஞ் சன்னாசி இருந்துமிகக் கண்மூடி
கட்டாய்ச் சுவாசமதைக் கவர்ந்துகவர்ந் தேயிருப்பான்
ஒன்பதாஞ் சன்னாசி உமிழ்நீ ரிறக்காமல்
இன்ப விறுவிறுத்து ஈரவம்போல் கண்வெளுத்துத்
தூங்கினாற் போலே சூழச்சூழ விழித்துப்
பாங்குகள் தேடிப் பதிந்திருப்பான் கண்டீரே
பத்தாஞ் சன்னாசி பதிவாக நாள்தோறும்
சிற்றா மணக்கிலையில் துயிலுவான் கண்டீரே
பதினொராஞ் சன்னாசி பவளமணிக் கோர்வையிட்டுத்
துதியா யொருமூலம் சொல்லித்தினம் சேவித்து  760

உரிய உளுந்தும் ஓயாமல் கஞ்சாவும்
சதமென்று நம்பி தானிருப்பான் கண்டீரே
பன்னிரண்டாஞ் சன்னாசி பாரக்கல் கோர்வையிட்டு
உந்திக்(கு) இலுப்பையிலை உழக்குச்சா றுகுடித்து
இருப்பான் பதிமூன்றான் இவனினத்தைக் கேட்டிருநீ
பருப்பா னவலும் பழமுந் தினமருந்தி
கோவை யிலையும் கொடுப்பையிலை யும்புசித்துச்
சேவைபண்ணி நித்தம் செய்திருப்பான் கண்டாயே
பதினாலாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு
துதியா யொருமூலம் சொல்லித் தினஞ்சேவித்துக்
கையிறை கொண்டேதான் கட்டிக்கொண் டேயிருப்பான்
பதினைந்தாஞ் சன்னாசி பார்க்கெந்த மாலையிட்டு
மதியகத்தே வுண்டு மலர்ந்துதுயின் றேகிடப்பான்
பதினாறாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு
ஆடை யுடுக்க அறிவுசற்று மில்லாமல்
கோடை குடித்துக் குலைவான் பதினாறான்
கள்ளிதனைத் தின்று காய்க ளிலையருந்தி
கொள்ளித் தழல்காய்வான் கொடிய பதினேழான்
நல்லத்திக் காயருந்தி நாமமணி யும்பூண்டு
கொல்லத்தி போலே குலைந்துகுலைந் தேதிரிவான் 780

இவன்பதி னெட்டான் என்றே யினமறிநீ
எவனு மறிவான் ஈரெட்டு மூன்றானை
மான்தோலின் மேலிருப்பான் மற்றிருபான் மீசையுள்ளான்
தான்தெரியு மற்றிருபத் தொன்றா னினங்கேளு
நாகத்தின் முள்ளை நல்லதலை மேலணிந்து
கூகத்தைச் சுற்றிக் கும்பிட்டுத் தான்திரிவான்
இருபத்தி ரண்டான் இனங்கேளு நன்றான
மதுவைத்து நித்தம் வணங்குவான் மந்திரத்தை
இருபத்தி மூன்றான் இருப்பான் மயிர்வளர்த்துச்
சருவைத்துப் பால்பழத்தில் தந்திரத்தை யோதிடுவான்
இருபத்தி னாலான் எங்கு மிகத்திரிந்து
உருவேற்றி நித்தம் உடல்வாட லாயிருப்பான்
இருபத்தியைந் தாமிருஷி எருக்கலம் பாலருந்தி
பருவமாய் ஓவியஞ்செய் ததிலே படுத்திருப்பான்
கள்ளுக் குடித்துக் கறியுப்புக் கூட்டாமல்
புள்ளித்தோல் மேலிருப்பான் புகழிருபத் தாறானும்
நீரைத் தியானமிட்டு நித்திரைக்குத் தானோதி
பாதை வழியேகான் பத்துரண் டேழானும்
கோண முடிமுடித்து குறுத்தடியுங் கைப்பிடித்து
நாணமில்லா தேதிரிவான் நல்லிருபத் தெட்டானும் 800

சூலம் பிடித்துச் சுழியெழுத்தை மேலூன்றி
கோலமிட் டேதிரிவான் கூறிருபத் தொன்பானும்
முப்பதாஞ் சன்னாசி முச்சந்தி தான்பார்த்து
அப்புச் சிரங்குபற்றி அவன்கிடப்பான் சந்தியிலே
ஓர்முப்பத் தொன்றான் ஊமையென வேதிரிந்து
கூர்மையுள்ள காது கொஞ்சமுங்கேளாத் திரிவான்
முப்பத்தி ரண்டான் உயர்ந்ததிடில் தான்பார்த்து
சர்ப்பத்தின் நஞ்சு தானுண்டோ மென்றிருப்பான்
நன்றா யறிந்திடுநீ நல்லமுப்பான் மூன்றானையும்
கண்டா லறிந்திடலாம் கண்ணில் வெளுப்புமுண்டு
தொண்டையில் சடம்புகட்டித் தொல்புவியி லேதிரிவான்
மண்டை வகுப்புமுண்டு வாய்த்தமுப்பத் தினாலான்
முப்பத் தைந்தானும் முயலகன்போ லுண்டாகி
எய்ப்பிளைப்பார் போலே இவன்திரிவான் கண்டாயே
செப்பமுள்ள முப்பத்(து) ஆறான் செய்தியைக்கேள்
புஸ்பமீதிற் படுத்து பூவையர்கள் தாலாட்ட
அற்பமுட னாடை அணியாமல் தானிருப்பான்
முப்பத்தி யேழாஞ் சன்னாசி யானவனும்
அகத்தி யிலையருந்தி ஆனைத்தோல் மேலிருந்து
மகத்துவமாய்ப் பேசி மாள்வான் முப்பத்தேழான் 820

கொல்ல மிளகு குறுணியொரு நாளருந்தி
பல்லைமினுக் காதிருப்பான் பார்முப்பத் தெட்டானும்
சோறு குழையவைத்துச் செவ்வலரிப் பூவிலிட்டு
ஆறுமுன் பூவோடு அருந்துவான் முப்பத்தொன்பான்
நாக்கிலோ ராணிதனை நல்லவிந்தை யாய்க்கொருத்து
மூக்கிலே கட்டி முனங்குவான் நாற்பதானும்
சிறுபயறை மாவாக்கித் தேங்கா யதனிலிட்டு
முறுக்கா யதையருந்தி முழுங்குவான் நாற்பத்தொன்றான்
அறைக்கீரை வித்தை அருந்தித் தினந்தோறும்
சுரைக்கூடிட் டேதிரிவான் சுத்தநாற் பத்திரண்டான்
நாற்பத்தி மூன்றான் நத்தைச்சூரி விதையை
தாற்பத்தி யமெனவே தானிருப்பான் கண்டாயே
விராலி யிலையும் விளாங்காய் வெறுந்தோடும்
நிராதனமாய் வைத்து நித்த மருந்துவன்காண்
நாற்பத்தி நாலான் என்றே யிவனையறி
நாற்பத்தைந் தானுடைய நல்விபரம் நீகேளு
பூப்பறித்துத் தின்று பூனைமொழி பேசிடுவான்
பேய்க்குமட்டிக் காயைப் பிசைந்து விரைதானெடுத்து
நாய்க்குணம்போல் தின்பான் நாற்பத்தி ஆறானும்
எருமை யுடமோரும் எள்ளெண்ணெ யுங்குடித்து 840

நருநரெனப் பேசிடுவான் நாற்பத்தி யேழானும்
மருளான பெண்ணை மனதில்வை யோமெனவே
இருளான போது இந்தநினை வாயிருப்பான்
காமத்தைத் தன்னால் கழியவிட் டேவாடி
நாமத்தைப் பேசான் நாற்பத்தி யெட்டானும்
புகையிலையைத் தீயில்வைத்துப் புகையு மிகக்குடித்து
நகம்வளர்த் தேயிருப்பான் நாற்பத்தொன் பான்தானும்
அன்பதாஞ் சன்னாசி அரசியிலை மேலிருப்பான்
மண்புரளத் தான்கிடந்து மாஜலங் குடித்திருப்பான்
அன்பத் தொன்றானும் அலைவாய்க் கரைதோறும்
புண்ணியத் தீர்த்தமெனப் போயாடி யேதிரிவான்
நீல மவரி நித்தஞ்சா றேகுடித்து
ஆலம் பலகையிலே ஐம்பத்திரண் டானிருப்பான்
சுக்குப் பொடியைத் தினந் தினமெயருந்தி
அக்குமறு கணிவான் ஐம்பத்தி மூன்றானும்
ஐம்பத்தி நாலான் அசுரக்கா வடிவைத்துக்
கெம்பித் திரிவான் கீரித்தோல் காலிலிட்டு
விளியிட் டேயாடி வெற்றிகொண் டேதிரிவான்
வழிவிட்டு விலகி வழிநடப்பா னைம்பத்தஞ்சான்
இப்படியே யைம்பத்(து) அஞ்சு இருஷிகளும் 860

அப்படியே அவரவர்கள் அற்புதங்கள் வேறுசெய்து
இருப்பா ரவர்கள் இராச்சியத்துக் கொன்றாக
பருப்பா ரவர்கள் பழுதுகை வாய்த்துதென்று
இருக்குமந்த நாளையிலே யான்வருவேன் தெச்சணத்தில்
ஒதுக்கிச் சன்னாசிகளை ஒன்றொன்றாய்க் கொண்டுவந்து
வைக்கச்செய் வேன்வரத்தை மனுவறி யச்சிலரைச்
செயிப்பேன் பலபேரைச் செகமெல்லா மறிய
வதைத்து ஒவ்வொன்றாய் மனுவில் வரத்தாக்கி
நிரைத்துங்கள் தன்னோடு நிலைநிறுத்தி யேதருவேன்
ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய்
ஈனமில்லா துங்கள் இனத்தில் பிறந்திருங்கோ
வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால்
பாழுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில்
நான்வந் துங்களையும் நாட்ட முடனெடுத்து
மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன்
என்று பிரம இராச்சியத் தோர்களையும்
அன்று பிறவி அமைத்து அனுப்பினர்காண்

வைகுண்டலோகத்தார் மனுப்பிறப்பு

அந்தப் பிறவி அவர்செய் தனுப்பிவைத்துச்
சொந்தப்பிறவி சிவவைகுண் டத்தோரை
வாருங்கோவென்று வரவழைத் தெம்பெருமாள் 880
ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றார் தர்மிகளை
அப்போது தர்மியெல்லாம் அரியோ னடிவணங்கி
எப்போது மெங்களைநீர் இரட்சித்துக் கொண்டவரே
ஆண்டவை குண்டம் ஆண்டிருந்தோ மித்தனைநாள்
தாண்டவரே யினியுமது தயவி னருளாலே
என்னபடி நிச்சித்து இருக்குதோ அவ்வழியில்
வன்னத் திருமாலே வகுத்தா லதுமனதாம்
என்றுதர்மி யெல்லாம் இசைய ஆதிநாரணரும்
நன்றுபிள்ளா யுங்களுட நல்வளமை சொல்லுகிறோம்
இல்லா தெளியோர்க்கு எனைநினைந்து தர்மமிட்டுப்
பல்லுயிர்க் குன்னயிராய்ப் பார்த்தீ ரொருப்போலே
நீத நிலையை நிறுத்தி யெனைநினைந்து
சீதமாய்ப் பூமி செலுத்தியர சாண்டிருந்து
வந்தீர்கள் கூட்டோடு வைகுண்ட மானதிலே
சேர்ந்தீர்க ளாகிடினும் செய்தநன்றி தான்பார்த்து
உங்களுக்கின் னாள்வரையும் உதவிதர வில்லையல்லோ
தங்களுக்கு நன்மை தரவேணு மானாக்கால்
இன்னமொரு பிறவி என்மகவி லேபிறவும்
வன்னப் பிறவியென் மகவழியில் தான்பிறந்தால்
ஏழு யுகக்கணக்கும் யான்கேட் டுங்களுக்கு 900

மாளுவ தில்லாமல் மறுபிறப் புமறுத்து
நம்முடைய சொத்தும் நாடியுங் களுக்கீந்து
மும்மடங்காய்த் தர்மம் ஓங்கிவளர்ந் தேயிருப்பீர்
என்றுதர்மி தங்களுக்கு எம்பெருமா ளீதுரைக்க
அன்றந்தத் தர்மிகளில் ஐபேர்க ளேதுரைப்பார்
ஆயரே எங்களுட ஆதிநா ராயணரே
மாயரே எங்களைநீர் மறந்தெங்கே போனீர்காண்
காணாம லும்மையெங்கள் கண்கள் மிகத்தவித்து
வாணா ளயர்ந்து மறுகிநொந்து வாடினோமே
என்றுதர்ம பாண்டவர்கள் இப்படியே சொல்லிடவே
நன்றுநன் றென்று நாரா யணர்மகிழ்ந்து
முன்னமே நீங்கள் உகத்துக் குகங்கூட
என்னைவிட் டகலாது இருந்தீர்க ளென்னுயிர்போல்
ஆனதா லிப்பிறவி அய்யாநா ராயணராய்
மானமாய்த் தர்மம் வளர்ந்தோங்க எந்நாளும்
நிச்சித்து ஒன்றாய் நிலைநிறுத்தித் தற்சொரூபம்
மெச்சித்து நானினித்தான் மேல்பிறக்கப் போவதினால்
என்மகவாய் நீங்கள் ஏழி லொருவனுமாய்க்
கண்மணிபோல் நீங்கள் கலியுகத்தில் போய்ப்பிறங்கோ
என்றேதான் தர்மிகட்கு எம்பெருமா ளீதுரைக்க 920

அன்றேதான் தர்மி எல்லோரு மேதுரைப்பார்
தானதவஞ் செய்தல்லவோ தர்மிகள் தானாகி
மான வைகுண்ட வாசலிலே வந்திருந்தோம்
மானுவங்க ளில்லா மாளுங் கலியுகத்தில்
பேய்நீச வையகத்தில் பிறக்கப்போ வென்றீரே
நாங்கள் முன்செய்த ஞாயநடுப் போய்விடுமே
ஏங்கக் கலியனுட இருளினா லையாவே
நாயநடுக் கேட்டு நடுக்கம் மிகப்பிடித்து
தேயமதில் நாங்கள் செய்தமுறை தப்பிடுமே
ஆனதால் நீரும் அன்றுநடுக் கேட்கையிலே
மானமில்லை யானால் வழக்கென்ன சொல்லிடுவோம்
என்றுரைக்கத் தர்மி ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பிள்ளைகளே நானதற்குச் சொல்வதுகேள்
என்மக்க ளேழும் இயல்கலியில் பட்டுழன்று
வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம்
நான்பொறுத் துங்களுக்காய் நானே தவசுபண்ணி
வான்சிவனுக் கேற்க வாய்த்த தவமிருந்து
மக்களேழு பேர்கள் வம்மிசங்க ளுள்ளதெல்லாம்
ஒக்கவொன்று போலே உகந்தெடுத் துண்மையுடன்
நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும் 940

தாடாண்மை யான சத்தியுமை தன்னாணை
நீங்களென்ன குற்றம் நிலையில்லாச் செய்தாலும்
தாங்கிப் பொறுப்பேன் தருவே னானல்லபுத்தி
உங்கள்கர்ம மெல்லாம் ஒக்கத் தொலைப்பதற்கு
மங்களமாய்ச் சிவனை வருந்தித் தவசுபண்ணி
நானுங்க ளாலே நல்ல தவசிருந்து
மானுபங்கள் கெட்ட மாகலிய னுகத்தில்
தாயும் தகப்பனையும் தான்பழித்த துற்கலியில்
பேயுங் கலிநீசப் பிறப்பைச் சோதித்தறுத்து
தாடாண்மை தர்மம் தழைக்கவைத் துங்களையும்
நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது
என்றுரைக்க அய்யா எல்லோருஞ் சம்மதித்து
அன்று பிறவி அமையுமென்றா ரப்படியே
நன்மையுள்ள தர்மியெல்லாம் நல்லசான் றோர்குலத்தில்
மேன்மையோ ரெல்லாம் மேதினியி லேபிறந்தார் 955

 
மேலும் அகிலத்திரட்டு அம்மானை! »
temple news
அய்யா துணை காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிகாரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - ... மேலும்
 
temple news
அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்துஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்துவேதியரும் நன்றாய் விளம்புவா ... மேலும்
 
temple news
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்இம்முதலா யுள்ள ஏற்ற ... மேலும்
 
temple news
தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்தாட்டிமையாய்ச் ... மேலும்
 
temple news
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்சாதி யினம்பிரித்துத் தடுமாறி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar