உலகாளும் நாயகியான பார்வதி ஒருமுறை சாபம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் தவத்தில் ஈடுபட்டாள். இவளின் தவக்கோலத்தைக் காண பக்தர்கள் பெருமளவில் கூடுகின்றனர். அமாவாசையன்று ஊஞ்சலில் காட்சி தரும் இவளை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். தட்சனின் மகளான தாட்சாயணி கணவராக சிவனை அடைந்தாள். சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சன் கர்வத்துடன் நடந்தான். ஒருநாள் மருமகனான சிவனைக் காண வந்த அவன் பணிவின்றி நடந்தான். இதனால் கோபம் கொண்ட நந்தீஸ்வரர் கைலாயத்திற்குள் நுழைய அனுமதி தரவில்லை. இதனால் கோபம் கொண்ட அவன், சிவபெருமானுக்கு அழைப்பே விடுக்காமல் தேவர்களை அழைத்து யாகம் நடத்த ஏற்பாடு செய்தான். தந்தையை கண்டிக்க எண்ணிய தாட்சாயணி. உக்கிர வடிவத்தில் ‘அங்காளி’ என பெயர் கொண்டாள். ஆவேசமுடன் சென்று யாகத்தை தடுத்தாள். இச்செயலை விரும்பாத சிவபெருமான் மனைவியைத் தோளில் சுமந்தபடி ஆக்ரோஷமாக நடனம் ஆடினார். அப்போது அங்காளியின் கை துண்டாகி பூலோகத்தில் விழுந்தது. அந்த இடம் தண்டகாரண்யம் என்னும் சக்தி பீடமாகியது. அதன் ஒரு பகுதியே மேல்மலையனுார் என்னும் தலமாக உள்ளது. கருவறையில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறாள். இக்கோயிலுக்கு இன்னொரு வரலாறும் உண்டு. பர்வதராஜனின் மகளாக பிறந்த அம்பிகை பார்வதி எனப் பெயர் பெற்றாள். சிவனைத் திருமணம் புரிந்து கைலாயத்தில் தங்கியிருந்தாள். அப்போது சிவன், பிரம்மா இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒருமுறை சிவனைக் காண பிரம்மா கைலாயத்திற்கு வந்தார். அப்போது ஐந்து தலையுடன் இருந்த பிரம்மாவைச் சிவன் என தவறுதலாக எண்ணிய பார்வதி அவரது காலில் விழுந்தாள். நிமிர்ந்த போது நிற்பவர் பிரம்மா என்பதை உணர்ந்து வருந்தினாள். ஐந்து தலை இருப்பதே தவறு நிகழக் காரணம் எனக் கருதி பிரம்மனின் ஒரு தலையைக் கொய்யும்படி கணவரிடம் வேண்டினாள். அதனை ஏற்று பிரம்மாவின் ஒரு தலையை சிவனும் கொய்தார். இதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதிலிருந்து விடுவிக்க புற்று வடிவில் அங்காளம்மனாக மேல்மலையனுாரில் வடக்கு நோக்கி பார்வதி தவமிருக்கத் தொடங்கினாள். பிரம்மாவின் தலையைக் கொய்வதற்கு காரணமான பார்வதி மீது சரஸ்வதிக்கு கோபம் வந்தது. ‘‘என் கணவரின் (பிரம்மா) தலையைக் கொய்ய காரணமானதால் அகோர வடிவைப் பெறுவாய்” என சாபமிட்டாள். இதன் பின்னர் மேல்மலையனுாரில் அங்காள பரமேஸ்வரியாக தங்கியிருந்த பார்வதி திருவண்ணாமலையை அடைந்தாள். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபத்தில் இருந்து விடுபட்டு மூதாட்டி கோலத்தை அடைந்தாள். அதன் பின் இங்கு நிரந்தரமாக தங்கினாள். மேல்மலையனுாரைச் சேர்ந்த மீனவர்கள் கோயில் எழுப்பி அம்மனை வழிபடத் தொடங்கினர். செல்வது எப்படி திருவண்ணாமலையில் இருந்து 35 கி.மீ.,