குரு பார்க்க கோடி நன்மை; சாப்பிட்ட கோலத்தில் தெட்சிணாமூர்த்தி.. வழிபட பஞ்சம் இல்லை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2023 11:10
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. மேலும் கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார்.
சாப்பிட்ட கோலத்தில் தெட்சிணாமூர்த்தி: அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன் அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார். இதன் அடிப்படையில் இக்கோயிலில் தெட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இவரை தவ தெட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. குரு பார்க்க கோடி நன்மை ஏற்படும்.