தைஅமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாட்டுக்குரிய தலங்கள் இடம் பெற்றுள்ளன. ராமேஸ்வரம் ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு ராமர் பிரதிஷ்டை செய்த சிவன் ராமலிங்கம் என்றும், அனுமன் பிரதிஷ்டை செய்த சிவன் விஸ்வ லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. காசி யாத்திரை செல்வோர் இங்கு வந்து தீர்த்தங்களில் நீராடி ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்தால் மட்டுமே யாத்திரை சென்ற பலன் உண்டாகும். கோயிலுக்கு எதிரிலுள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பிதுர் தர்ப்பணம் செய்வோர் அமாவாசையன்று தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமியை வழிபடுவது நல்லது. மதுரையில் இருந்து 200 கி.மீ., தொடர்புக்கு: 04573 - 221 223
திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காசிக்கு நிகரான தலமாக விளங்குகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள இத்தலத்திற்கு பிதுர் மோட்சபுரம், புஷ்பவன காசி என்ற சிறப்பு பெயர்கள் உண்டு. இங்கு வைகை ஆறு வடக்கு நோக்கி உத்திரவாகினியாக ஓடுகிறது. இங்கு தர்ப்பணம் செய்து இறந்தோரின் அஸ்தியை ஆற்றில் கரைத்தால் அவர்கள் நற்கதியை பெறுவர். அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் இங்கு வந்த போது வைகைக்கரையிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கமாக காட்சியளித்தது. அதனால் காலால் மிதிக்க விரும்பாமல் மறுகரையில் நின்று வழிபட்டனர். அவர்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றது. இதனால் இங்கு நந்தி சற்று சாய்ந்த நிலையில் இருப்பதைக் காணலாம். மதுரையில் இருந்து 18 கி.மீ., தொடர்புக்கு: 04575 – 265 082, 84
கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள் அம்பிகையின் உதவியை நாடினர். கன்னியால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க அம்பிகையே குமரியாக வடிவெடுத்து தவத்தில் ஈடுபட்டாள். பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனை வதம் செய்தாள். இத்தலத்தில் அமாவாசை நாளில் நீராடி தர்ப்பணம் செய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும். தொடர்புக்கு: 04652- 246 223
அழகர்கோவில் திவ்யதேசங்களில் ஒன்றான அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். மலைத்தலமான இங்கு சோலைமலை முருகனும் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பசாமி சக்தி மிக்கவர். உருவமற்ற இவர் கோபுரவாசலில் குடிகொண்டிருக்கிறார். இவர் முன் சத்தியம் செய்து வழக்கு தீர்ப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இங்கு அனுமன், கருடன், சக்கர தீர்த்தங்கள், நுாபுரகங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. இதில் அமாவாசை நாளில் நுாபுர கங்கையில் நீராடி வழிபடுவது சிறப்பு. சுவை மிக்க இதில் நீராடினால் தோல்நோய்கள் மறையும். மதுரையில் இருந்து 25 கி.மீ., தொடர்புக்கு: 0452- 247 0228, 247 0229
தேவிபட்டினம் ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள தேவிபட்டினத்தில் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணம் என்னும் கற்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ளன. அமாவாசையன்று இங்கு கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் கிரகதோஷம் விலகும். இங்குள்ள சக்கர தீர்த்தம் என்னும் தர்ம புஷ்கரணியில் நீராடினால் பாவம் தீரும். வீரசக்திபீடமாக விளங்கும் இங்கு அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள். புகழ் மிக்க மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்தால் போற்றப்படுபவள் இவள். ராவணனுடன் போரிடும் முன் ராமர் இந்த அம்பிகையை வழிபட்டார். ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,
பவானி சங்கமம் ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானியில் பவானி ஆறு காவிரியாற்றுடன் கூடுகிறது. இங்கு சங்கமேஸ்வரர் வேதாம்பிகையுடன் அருள்புரிகிறார். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு பவானி கூடல், திருநணா என்றும் பெயர்கள் உண்டு. இலந்தை மரம் தலவிருட்சமாக இருப்பதால் வதரிகாசிரமம் என்றும், காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானி முக்கூடல் என்றும் சொல்வர். இங்கு நீராடி சுவாமி வழிபடுவோரை பாவங்கள் தீண்டுவதில்லை. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., தொடர்புக்கு: 98432 48588, 04256 - 230 192
செதிலபதி திலதர்ப்பணபுரி என்னும் சிவத்தலம் தற்போது செதிலபதி எனப்படுகிறது. திலம் என்பதற்கு ‘எள்’ என்பது பொருள். இத்தலத்தில் தசரதர், சடாயுவுக்கு ராமர் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. முக்தி அளிப்பவராக சிவன் இருப்பதால் முக்தீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகை சுவர்ணவல்லித்தாயாராக இருக்கிறார். இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. இங்குள்ள நரமுக விநாயகர் சிறப்பு மிக்கவர். மனித முகத்துடன் கூடிய இவரை எங்கும் காண முடியாது. இங்கு ஓடும் அரசலாறு புனித தீர்த்தமாகும். திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையிலுள்ள கூத்தனுாரில் இருந்து 2 கி.மீ., தொடர்புக்கு: 94427 14055, 04366- 238818, 239 700
அய்யாவாடி அமாவாசை வழிபாட்டுத் தலமான அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். போரில் வெற்றி பெறுவதற்காக ராமர், யாகம் நடத்தி தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் கரிய நிறத்துடன் சிங்க முகம், 18 கைகளுடன், சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள். அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா என்னும் மிளகாய் வத்தல் யாகம் நடக்கும். இதில் மிளகாயின் நெடி சிறிதும் இருக்காது. அமாவாசையன்று இங்கு வருவோருக்கு எதிரி தொல்லை மறையும். கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் இருந்து 3 கி.மீ., தொடர்புக்கு: 0435 – 246 3414
பாபநாசம் நவகைலாயத் தலங்களில் முதல் தலமாக பாபநாசம் பாபநாசநாதர் கோயில் உள்ளது. தாமிரபரணியின் கரையில் அமைந்த இத்தலத்தில் அகத்தியர் சிவபார்வதியின் திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக ரிஷபத்தின் மீதமர்ந்த சிவனும், அருகில் மனைவி லோபமுத்திரையுடன் அகத்தியரும் காட்சி தருகின்றனர். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஒருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். சித்திரை புத்தாண்டு நாளில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது. பாபநாச நாதர் சிற்பம் ருத்திராட்சத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ., தொடர்புக்கு: 04634- 223 268
சொரிமுத்தையனார் கோவில் பொதிகை மலையில் சாஸ்தாவின் முதல் தலமான சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. சாஸ்தாவான இவர் இடது காலை மட்டும் குத்துக் காலிட்டு வலக்காலைத் தொங்கவிட்டபடி பூரணை, புஷ்கலா தேவியருடன் இருக்கிறார். தாமிரபரணியில் உள்ள புனித தீர்த்தங்களில் முதலாவதான பாணதீர்த்தம் இக்கோயிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. வானத்தில் இருந்து விழுவதைப் போல தோற்றம் கொண்ட இதனை ’வான தீர்த்தம்’ என்பர். அம்பில் புறப்பட்ட பாணம் போல அருவி நீர் கொட்டுவதால் பாணதீர்த்தம் என வந்ததாக கூறுவர். அமாவாசையன்று பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகின்றனர். திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் 50 கி.மீ., அங்கிருந்து காரையார் செல்ல பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு: 04634- 250 209
சுருளி மலை மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் சுருளிமலையில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிறார். சித்தர்கள் முருகனை வழிபட்ட தலம் இங்கு ஆண்டிக்கோலத்தில் சுவாமி காட்சியளிப்பதால் சுருளியாண்டி எனப்படுகிறார். கைலாச புடவு என்னும் குகையில் கைலாசநாதராக சிவனும், குகையின் மேல்பகுதியில் முருகனும் இருக்கின்றனர். சனியின் பிடியிலிருந்து தேவர்களைக் காப்பாற்றியதால் இங்கு வழிபட்டால் சனிதோஷம் நீங்கும். அமாவாசையன்று சுருளிதீர்த்தம் என்னும் அருவியில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்கின்றனர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோயிலில் விபூதியே பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேனியிலிருந்து 40 கி.மீ., தொடர்புக்கு: 93452 61022
அச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரர் திரிபுர அசுரர்கள் அடக்க எண்ணிய சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்ற நியதியை பின்பற்றவில்லை. இதை அறிந்த விநாயகர் தேரின் அச்சை முறித்து சிவனைத் தடுத்தார். உண்மையை உணர்ந்த சிவனும் அக்கறையுடன் விநாயகரை மனதில் தியானிக்க தேர் சரியானது. தேரின் அச்சு முறிந்த இடமான அச்சிறுபாக்கத்தில் சிவனுக்கு கோயில் அமைக்கப்பட்டது. ஆட்சிபுரீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் விளங்கும் இவரை அமாவாசை நாளில் வழிபட்டால் முயற்சி தடையின்றி நிறைவேறும். * காஞ்சிபுரத்தில் இருந்து 70 கி.மீ., * செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. தொடர்புக்கு: 98423 09534, 044 - 2752 3019
ஆனைமலை மாசாணி ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் ஒன்று இருந்தது. அதில் பழங்களை யாரும் பறிப்பது கூடாது என உத்தரவிட்டிருந்தனர். ஒருநாள் ஆழியாற்றில் நீராடிய இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்த மாம்பழத்தை எடுத்து உண்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை விதித்தான். ஊரார் அவளுக்கு மயானத்தில் சயன கோலத்தில் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினர். உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி காட்சி தருகிறாள். நீதி தெய்வமான இவளை அமாவாசை நாளில் வழிபடுவது சிறப்பு. பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ., தொடர்புக்கு: 04253- 282 337, 283 173
திருச்செங்கோடு கொடிமாடச் செங்குன்றம் என்று சிறப்பு பெயர் கொண்ட தலம் திருச்செங்கோடு. இங்கு சிவன் அர்த்தநாரீஸ்வரராக அம்பிகையை இடது பாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னதியும் சிறப்பு மிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோயிலான இங்குள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வழக்குகள் பேசித் தீர்க்கும் வழக்கம் இங்கு இருந்தது. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. அமாவாசை நாளில் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு தீர்த்தம் பருகினால் உடல், மனநோய் நீங்கும். கருத்துவேறுபாடு நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். ஈரோட்டில் இருந்து 18 கி.மீ., தொடர்புக்கு: 04288 – 255 925
அனுமந்தபுரம் வீரபத்திரர் தட்ச யாகத்தை நிறுத்த சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பினார். தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்ட, தலை யாகத்தீயில் விழுந்தது. தட்சனின் தந்தையாகிய பிரம்மாவின் ஆணையால் அங்கிருந்த ஆட்டின் தலை தட்சனுக்குப் பொருத்தப்பட்டது. அங்கிருந்து சினத்துடன் புறப்பட்ட வீரபத்திரர் சிவனிடம் முறையிட்டார். பூலோகத்தில் அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கினால் சாந்தம் உண்டாகும் என வழிகாட்டினார். அதன்படி வீரபத்திரருக்கு இங்கு கோயில் அமைக்கப்பட்டது. அமாவாசையன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். இருப்பிடம்: விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ., தொடர்புக்கு: 044- 2746 4325
பண்ணாரி மாரி வனப்பகுதியில் மேய்ந்த பசு ஒன்று வேங்கை மரத்தடியில் தானாக பால் சுரந்தபடி நின்றிருந்தது. இதை அறிந்த பால்காரர் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில் சுயம்பு திருமேனி இருப்பதைக் கண்டார். விஷயமறிந்த ஊரார் கூடிய போது அங்கிருந்த ஒருவர் ஆவேசமுடன், “ இங்கு பண்ணாரி மாரியம்மனாக வீற்றிருந்து வரம் அளிப்பேன்” என்று அம்பிகை வாக்களித்தாள். அதன்படி கோயில் அமைத்து வழிபாடு செய்தனர். தெற்கு நோக்கி இருக்கும் இந்த அம்மனின் பிரசாதமாக புற்று மண்ணே தரப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி.மீ., ஈரோட்டில் இருந்து 77 கி.மீ., தொடர்புக்கு: 04295 – 243 366