குருவாயூர் கோயிலில் பெரிய உருளி ஒன்றில் குண்டுமணி நிரப்பியிருக்கும். நினைத்தது நிறைவேறவும், நோய்களில் இருந்து விடுபடவும் பக்தர்கள் குண்டுமணிகளைக் கைகளால் எடுத்து மீண்டும் அதிலேயே இடுவர். இதன் பின்னணியில் வரலாறு உண்டு. ஒரு காலத்தில் வயதான கிருஷ்ண பக்தை ஒருவரது ஊர் குருவாயூருக்கு வெகுதுாரத்தில் இருந்தது. குருவாயூரப்பனை தரிசிக்க விரும்பிய அவர் காணிக்கை தர ஆசைப்பட்டார். அவரது வீட்டில் மஞ்சாடி மரம் (குண்டுமணி மரம்) ஒன்று இருந்தது. அதிலிருந்து விழுந்த குண்டுமணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். குருவாயூரை அவர் அடைந்த போது மன்னர் ஒருவர் குருவாயூரப்பனுக்கு யானையை காணிக்கையாக வழங்க காத்திருந்தார். அதற்காக கோயிலில் அரண்மனைச் சேவகர்கள் பரபரப்புடன் செயல்பட்டனர். அவர்களின் அலட்சிய போக்கால் பக்தை கீழே தள்ளப்படவே, அவரது கையில் இருந்த குண்டுமணிகள் சிதறின. செய்வதறியாமல் கண்ணீர் சிந்தினார். அந்த நேரத்தில் மன்னர் அளித்த யானைக்கு மதம் பிடித்தது. யாராலும் அதை அடக்க முடியவில்லை. அப்போது ‘‘என் பக்தையை அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் இது. குண்டுமணிகளை காணிக்கையாக அளிக்க அவளுக்கு வழிவிடுங்கள்’’ என அசரீரி ஒலித்தது. உடனே சேவகர்கள் சிதறிய குண்டுமணிகளை எடுத்து கொடுத்ததோடு மன்னிப்பும் கேட்டனர். சகல மரியாதைகளுடன் சன்னதிக்கு அவளை அழைத்து வந்தனர். அவள் குருவாயூரப்பனை தரிசித்து காணிக்கை செலுத்தியதும் யானையின் மதம் அடங்கியது. அந்த பக்தையின் நினைவாக இன்றும் குருவாயூரப்பன் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளன.