பதிவு செய்த நாள்
23
ஏப்
2022
06:04
முத்தி, மோட்சம், சொர்க்கம் என்னும் சொற்கள் வானுலகத்தைக் குறிக்காது. பிராமணமய கோசத்திலுள்ள சுழுமுனையை தவத்தால் எழுப்பி மனோமய கோசத்திலுள்ள சூக்கும சரீரத்தில் செலுத்தினால் நம் பாவம் எல்லாம் நீங்கும். அப்படி சூக்கும சரீரம் துாய்மையடைந்ததும் அதை விஞ்ஞானமய கோசத்திலுள்ள உயிராகிய பரப்பிரம்மம் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும்.
இந்த நிலையே முக்தி, மோட்சம், சொர்க்கம், மரணமில்லா பெருவாழ்வு. இது சித்தர்கள் அனுபவபூர்வமான உண்மை. இதற்கு மாறான விளக்கம் எல்லாம் கற்பனையே என உறுதியாகக் கூறலாம்.
* ஜீவ (சூக்கும சரீரம்), பிரம்ம (உயிராகிய சிவலிங்க வடிவ பரப்பிரம்மம்) ஐக்கியமானைதை முத்தி என்கிறது அத்வைதம் – அதர்வண வேதம், மாண்டூக்ய உபநிடதம், 3:13.
* முத்தியில் ஈடுபாடு கொண்டவனுக்குக் குருவிடம் உபதேசம் பெறுதல், அதை சிந்தித்தல், இடைவிடாமல் தியானம் பழகி சமாதி நிலை அடைந்து வாழும் போதே முக்தியை அடையலாம் – ஆதிசங்கரர், விவேக சூடாமணி.
4. உடல் இருக்கும் போதே முக்தி அடைந்த சித்தருக்கு தன்னிடத்திலேயே எப்போதும் பேரின்பத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.
– ஆதிசங்கரர் விவேகசூடாமணி. 418.
இந்த வேத வாக்கியங்கள் முக்திநிலையை விளக்குகின்றன.
1. முத்தியென்ன தெய்வமதைக் காணல் கூடல்
மோகித்துக் கூடி உறவாடித் தானே
– காகபுஜண்டர், பெருநுால் காவியம்
2. தாணப்பா குமரன் சொல் ஜீவாத்மாவைத்
தானுமே பரமாத்மாவுடன் கூட்ட
மாணப்பா யோகமது சித்தியாச்சு.
– சுப்பிரமணியர் சிவ யோகம்
3. பேரப்பா பெற்ற தொரு சீவாத்மாவும்
பேசாத மவுன மென்ற பரமாத் மாவும்
சேரப்பா ஒன்றிரண்டும் ஒன்றாய்ச் சேரும் பாரே.
– உரோமரிஷி பிரம்ம ஞான திருஷ்டி
4. தன்னுயிர் தான் அறப்பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும் – திருக்குறள் 268
இதன் பொருளாவது:
தவம் செய்து உயிராகிய சிவலிங்க வடிவில், நான் என்னும் சூக்கும சரீரத்தை இணைத்து முக்தியடைந்த ஞானியை உலகிலுள்ள மக்கள் எல்லோரும் வணங்குவர்.
வித்து உண்டா மூலம் முளைத்தவா தாரகமாம்
அத்தன் தாள் நிற்றல் அவர் வினையால் – வித்தகமாம்
வேட்டுவனாம் அப்புழுப்போல் வேண்டுருவைத்தான் கொடுத்துக்
கூட்டானே மண்போல் குளிர்ந்து.
– சிவஞான போதம்
ஒரு விதையிலுள்ள மூலப்பொருள் முளைக்கின்ற ஆதாரம் போன்று பிரம்மரந்திரத்திலுள்ள கடவுளின் திருவடியாகிய சிவலிங்க வடிவ உயிருடன், சூக்கும சரீரத்தை இணைத்து முத்தி நிலையை அடைவது, அவரவர் தவத்தால் ஆகும். மண்கூட்டுக்குள் இருக்கும் புழுவைக் குளவி கொட்டி, வேண்டும் உருவை உண்டாக்குவது போல் கடவுள் வலிந்து மனிதனுக்கு முக்தியருள மாட்டார்.
அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தாங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரனடி செய்து நிறைந்து நின்றானே.
– திருமந்திரம்
நடராஜப் பெருமானின் திருவடிகளைப் போற்றி அழுதும், அவருடைய சிவலிங்க வடிவ உயிரை நினைத்து கடுந்தவம் செய்தும் சுழுமுனை சுவாசத்தால் சூக்கும சரீரத்தை உயர்த்த வல்லவர்களுக்கு முக்தி நிலையை அடையச்செய்து இறைவன் நிறைந்து நிற்பான்.
தவம் செய்தால் தான் முக்தியடைய முடியும் என்று வேதங்கள் கூறும் உண்மையைத் தேவாரமும் திருவாசகமும் தெரிவிக்கின்றன.
1. பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பரே
ஞானசம்பந்தர் தேவாரம்
2. முக்தியாக ஒரு தவம் செய்திலை
அப்பர் தேவாரம்
3. முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளும்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
கழுமல வளநகர் கண்டு கொண்டேனே.
சுந்தரர் தேவாரம்
4. முக்திநெறி அறியாத மூர்க்கரொடு முயலுவேனைப்
பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.
திருவாசகம்
மோட்ச சாதனங்களில் பக்தியே சிறந்தது. சூக்கும சரீரத்தைத் தொடர்ந்து சிந்தித்து தவம் செய்வதே பக்தியாகும்.
ஆதிசங்கரர், விவேக சூடாமணி
நற்றுணையாவது நமச்சிவாயவே!
சிவபக்தன் ஒருவன், மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து சிதம்பரம் நடராஜரை தரிசித்தான். அவனது ஆயுட்காலம் முடிந்ததும், சிவகணங்கள் அவனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர். மண்ணில் வாழும் காலம் வரைக்கும் பக்தனை விட்டு விலகாமல், தான் உடனிருந்ததை தெய்வீக சக்தியால் எடுத்துக் காட்டினார் சிவன்.
கடந்து வந்த பாதை எங்கும் அவனுக்கு பின்னால் இரண்டு பாதங்களின் தடயம் இருப்பதைச் சுட்டிக் காட்டிய சிவன்,“பக்தனே... எப்போதும் உன் பின்னால் நான் தொடர்ந்து வந்ததைப் பார்” என்றார்.
உன்னிப்பாக பார்த்த அவனுக்கு மகிழ்ச்சியை விட கவலை மேலிட்டது.
“ஏன் கவலைப்படுகிறாய் மகனே...” என்றார் சிவன்.
“சுவாமி....தாங்கள் சொல்வது உண்மை என்றாலும், சில இடங்களில் எனக்குப் பின்னால் உங்களின் காலடிச் சுவடு தெரியவில்லை. அந்த காலம் நான் துன்பப்பட்ட நேரமாக இருந்ததை என்னால் உணர முடிகிறது. மகிழ்ச்சியில் உடனிருக்கும் நீங்கள் துன்பத்தில் காணாமல் போனது நியாயமா? இதற்காகவா நான், இமைப்பொழுது கூட மறக்காமல் தினமும் பக்தியுடன் தேவாரம் படித்தேன்” என்று கேட்டான்.
அதைக் கேட்டு பலமாக சிரித்தார் சிவன்.
“அட... பைத்தியக்காரா! எப்போது நான் உன்னை தனியாக விட்டேன். முன்வினைப்பயனால் நீ கஷ்டப்பட்ட காலத்தில் கூட, உன்னைத் துாக்கிக் கொண்டு நடந்தேன். துன்ப காலத்தில் தெரிவது உன் காலடிகள் அல்ல. உன்னைத் தோளில் சுமந்து கொண்டு நடந்த என் காலடித் தடயங்கள்” என்றார்.
பரவசம் அடைந்த பக்தன், ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்று பாடி சிவபெருமானை வணங்கினான்.