பதிவு செய்த நாள்
23
ஏப்
2022
06:04
மனசு முழுக்க குழப்பம். கண்கள் முழுக்க கண்ணீர். வார்த்தை முழுக்க புலம்பல். உறக்கம் முழுக்க பிரச்னை. முயற்சி முழுக்கத் தோல்வி. உடம்பு முழுக்க வியாதி. இப்படியான நரகத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறீர்களா.... கவலை வேண்டாம். உங்களைக் காப்பாற்றி கரை சேர்க்க காத்துக் கொண்டிருக்கிறாள் கைலா தேவி. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேச மாநில மக்களின் இஷ்ட தெய்வமான இவள் ராஜஸ்தானின் கரவ்லி நகருக்கு அருகில் குடியிருக்கிறாள். அவளை தரிசித்தால் கவலையனைத்தும் பறந்தோடும்.
கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகி. அவளுக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது,“ கம்சா! உன் தங்கையின் கர்ப்பத்தில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்வான்’’ என அசரீரி ஒலித்தது. கம்சன் மணமக்களை சிறையில் அடைத்தான். அவர்களுக்கு பிறந்த ஏழு குழந்தைகளை தன் கையாலேயே கொன்றான். எட்டாவதாக கிருஷ்ணர் அவதரித்தார். அப்போது சிறையின் கதவுகள் தானாக திறந்தன. கூடை ஒன்றில் குழந்தையை சுமந்து கொண்டு ஆயர்பாடி நோக்கிப் புறப்பட்டார் வசுதேவர். யமுனை நதியும் வழிவிட்டது. யசோதை, நந்தகோபர் தம்பதியிடம் குழந்தையை ஒப்படைத்தார். அவர்களுக்குப் பிறந்த ‘மகாமாயா’ என்னும் பெண் குழந்தையை எடுத்து வந்தார். தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கம்சனிடம் தெரிவித்தார். இருப்பினும் அவன் குழந்தையின் கால்களை பிடித்து சுழற்றி வானத்தை நோக்கி எறிந்தான். அக்குழந்தை துர்கையாக காட்சியளித்து, “அடே கம்சா! உன்னைக் கொல்லப் பிறந்தவன் ஆயர்பாடியில் வளர்கிறான்’’ என எச்சரித்து மறைந்தாள். கிருஷ்ணனின் சகோதரியான மகாமாயா என்பவளே இத்தலத்தில் ‘கைலாதேவி’ என்னும் பெயரில் இருக்கிறாள். இவளுக்கு விந்தியவாசினி, நிங்கல மாதா என்றும் பெயருண்டு. ராஜஸ்தானின் பல இடங்களில் கைலாவுக்கு கோயில்கள் இருந்தாலும் இதுவே முதன்மை தலமாக திகழ்கிறது.
ஒரு சமயம் நாகர்கோட்டில் இருந்து மாட்டு வண்டி ஒன்றில் மகாமாயா சிலை ஒன்றை சிலர் கொண்டு வந்தனர். அடர்ந்த காடான இப்பகுதியை அடைந்ததும் வண்டியை நகர்த்த முடியவில்லை. அன்றிரவு இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் கனவில் தோன்றிய மகாமாயா, ‘‘நான் நிலை கொண்டிருக்கும் இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்’’ என கட்டளையிட்டாள். அதன்படி கோயில் கட்டப்பட்டது.
1723 மன்னர் கோபால்சிங் காலத்தில் கோயில் விரிவுபடுத்தப்பட்ட கோயில் தற்போது பெரிய மாளிகை போல காணப்பபடுகிறது. முன் மண்டப சுவர்களில் புராணக் கடவுளர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் கைலாதேவி, சாமுண்டாதேவி. இருவரும் அமர்ந்த நிலையில் உள்ளனர். பைரவர், சிவன், அனுமன் சன்னதிகளும் உள்ளன. கோயிலுக்கு அருகில் குளம் ஒன்று உள்ளது. மார்ச், ஏப்ரலில் சைத்ர மாத திருவிழா நடக்கிறது. அப்போது அகர்வால், ஜாட் இன மக்கள் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவர்.
எப்படி செல்வது
* ஜெய்ப்பூரில் இருந்து 170 கி.மீ.,
* கங்காபூரில் இருந்து 15 கி.மீ.,
* கரவ்லியில் இருந்து 23 கி.மீ.