பழநியின் புராணப் பெயர் திருஆவினன்குடி. இதற்கான காரணம் தெரிந்து கொள்ளுங்கள். * மகாவிஷ்ணுவைப் பிரிந்து பூலோகம் வந்த மகாலட்சுமி ஆறுதல் பெற வேண்டி பழநியில் தங்கினாள். * ஆணவத்தால் தன் சக்தியை இழந்த தெய்வப்பசுவான காமதேனு பழநியில் தவமிருந்து பலம் பெற்றது. * தன்னால் தான் உலகமே இயங்குகிறது என்று கர்வப்பட்ட சூரியனை சபித்தார் சிவன். இதிலிருந்து விடுபட பழநி முருகனைச் சூரியன் சரணடைந்தார். * பார்வதியின் தந்தையான தட்சன் நடத்திய யாகத்திற்கு மருமகன் சிவனை அழைக்கவில்லை. சிவனை மதிக்காத யாகத்தில் பங்கேற்ற அக்னிபகவான் ஒளியிழந்தார். பின்னர் பழநி முருகனை வழிபட்டு பலன் பெற்றார். * பழநி முருகனின் மகிமை அறிந்த பூமாதேவி இத்தலத்தில் தங்கி வழிபட்டாள். மகாலட்சுமியாகிய ‘திரு’, காமதேனுவாகிய ‘ஆ’, ‘இனன்’ என்று பெயர் கொண்ட சூரியன், பூமாதேவியாகிய ‘கு’, அக்னியாகிய ‘டி’ ஆகியோர் வழிபட்டதால் இத்தலம் இவற்றின் பெயரால் ‘திருஆவினன்குடி’ என பெயர் பெற்றது.