பதிவு செய்த நாள்
20
ஜூன்
2022
05:06
பார்த்தசாரதி கோலத்தை மையமாகக் கொண்ட கோயில் சென்னை திருவல்லிக்கேணி. இங்கு நின்ற கோலம் – பார்த்தசாரதி பெருமாள், அமர்ந்த கோலம் – நரசிம்மர், சயனக்கோலம் – மன்னாதர் ஆகிய மூவரையும் கண்டு களிக்கலாம். யாதவ குலத்தில் பிறந்தவர் கண்ணன் என்பதால் மீசையுடன் காட்சி அளிக்கிறார் பெருமாள். இவரது வலக்கை சங்கினை ஏந்தி இருக்க, இடக்கை தனது திருவடியை பக்தனுக்கு நினைவுறுத்தும் வகையில் வரதமுத்திரையுடன் உள்ளது. போரில் பங்கு பெற மாட்டேன் எனக் கூறிய காரணத்தால் சக்கரம் இல்லை. பெருமாளுக்கு வலது புறத்தில் ருக்மணி காட்சி தருகிறாள். அருகில் அண்ணன் பலராமர், தம்பி சாத்யகி, மகன் பிரக்த்யும்னன், பேரன் அநிருத்தன், தோழர் அக்ரூரர் உள்ளனர்.
பார்த்தசாரதி பெருமாளின் உற்ஸவ மூர்த்தியை முதலில் காண்பவர்களுக்கு திகைப்பு உண்டாகும். ஏனெனில் முகம் தழும்பு நிறைந்ததாக உள்ளது. அது பக்தனுக்காகப் பரமன் ஏற்றுக் கொண்ட தழும்புகள். போரில் அர்ஜுனனுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பீஷ்மரின் கணைகளைக் கண்ணனே ஏற்றதால் உண்டானவை அவை. எனினும் தழும்பையும் மீறி கண்ணனின் புன்னகை நம்மை மயக்குகிறது. பேயாழ்வார், திருமழிசையாழ்வார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் இங்கு கண்ணனின் அருள் பெற்றிருக்கிறார்கள்.