திருத்தணியைச் சேர்ந்தவர் டாக்டர் அண்ணாமலை. அவரது மகன் இதயக்கோளாறால் அவதிபட்டான். சாப்பிட்டதும் உணவு வயிற்றில் தங்காமல் வாந்தி வந்து விடும். சிகிச்சை செய்தும் குணமாகவில்லை. காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்கும்படி நண்பர்கள் அறிவுறுத்தினர். அதனை ஏற்று மடத்திற்கு வந்தவர், சுவாமிகளின் முன் மகனைக் கிடத்தினார். சுவாமிகள் தீர்த்தம் கொடுத்தார். சாறு பிழிந்து தரும்படி ஆரஞ்சுபழம் ஒன்றைக் கொடுத்து, ‘‘கவலை வேண்டாம். நாளடைவில் இவன் குணம் அடைவான்’’ என்று ஆசியளித்தார். அன்று முதல் சிறுவனின் உடல்நிலை தேறத் தொடங்கியது. அன்றாடப் பணிகளை தானே செய்யும் அளவிற்கு முன்னேறினான். இதன்பின் காஞ்சி மஹாபெரியவரின் பக்தராக மாறிய அண்ணாமலை ஆந்திராவில் உள்ள ‘புக்கை’ சங்கர மடம், காஞ்சி மடத்திற்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார். ஆண்டு தோறும் சங்கர ஜயந்தி விழாவை முன்நின்று நடத்தினார். இவரைப் போலவே மஹாபெரியவரின் பக்தராக விளங்கியவர் சுந்தரம். வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவருக்கு குடல்புண் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறினர். மஹாபெரியவரைத் தரிசிக்க மனைவியுடன் காஞ்சிமடத்திற்குச் சென்ற சுந்தரம், ‘‘ பெரியவா... அல்சரால் அவதிப்படுறேன். ஆப்ரேஷன் செய்ய மனமில்லை. தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்’’ என்றார். ‘‘மருந்து சாப்பிடு! சீக்கிரம் குணம் பெறுவாய்’’ என ஆசியளித்தார். ஆரஞ்சுப்பழம் கையில் வைத்தபடி சிறிதுநேரம் கண்களை மூடி தியானித்தார். ‘‘இந்த பழத்தை இரவு துாங்கும் முன் இன்று சாப்பிடு’’ எனக் கொடுத்தார். அதன் பின்னர் அறுவை சிகிச்சைக்கு தேவை இல்லாமல் போனது. மருத்துவரால் ஆகாததும், மஹாபெரியவரால் சாத்தியமாகும் எனில் அவரது அற்புத சக்தியை யாரால் அளக்க முடியும்?