பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
02:07
மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்குள் பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரட்டாதி போன்ற சில நட்சத்திரங்களும், 15 திதிகளுக்குள் அஷ்டமி, நவமி போன்ற சில திதிகளும், 7 கிழமைகளுக்குள் செவ்வாய், சனி போன்ற சில கிழமைகளும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றுக்கும் விலக்கப்பட வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம் அதைப்போலவே, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சில நாட்களில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதையே கரிநாள் என்று கூறுகிறார்கள். வடமொழி நூல்களும் இந்தக் கரிநாளை தக்த யோகம் என்று குறிப்பிடுகின்றன. இந்த கரி நாட்கள் என்பவை தமிழ் மாதத்தின் குறிப்பிட்ட தேதிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. வருஷாதி நூல் என்னும் ஜோதிட புத்தகம், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் எந்தெந்த நாட்கள் (தேதிகள்) கரிநாட்கள் என்று கூறுகின்றன.
சித்திரை மாதம், 6,15ஆம் தேதிகள்; வைகாசி 7, 16,17 ஆம் தேதிகள்; ஆனி 1,6 ஆம் தேதிகள்; ஆடி 2,10,20 ஆம் தேதிகள்; ஆவணி 2.9,28 ஆம் தேதிகள்; புரட்டாசி 16,29 ஆம் தேதிகள், ஐப்பசி 6 ஆம் தேதி; கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமை மற்றும் 1,10,17 ஆம் தேதிகள், மார்கழி 6,9,11 ஆம் தேதிகள்; தை 1,2,3,11,17 ஆம் தேதிகள்; மாசி 15,16,17 ஆம் தேதிகள்; பங்குனி 6,5,19 ஆம் தேதிகள் என்பதாக, வருஷத்தில் மொத்தம் 34 நாட்கள் கரிநாட்கள் எனப்படும். அனைத்து வருஷங்களிலும் இந்தக் குறிப்பிட்ட தேதிகள்தான் கரி நாட்கள். இதில் மாறுதலில்லை. ஆகவே, இந்தக் கரி நாட்களில் திருமணம், கிருஹபிரவேசம், சீமந்தம், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரி நாட்களில் செய்யலாம்.