விழுப்புரத்தில் இருந்து 15கி.மீ., துõரத்திலுள்ள திருவாமத்துõரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வசித்த ஒருவன், தன் தம்பியை ஏமாற்றி சொத்தை விற்று தங்கம் வாங்கினான். ஒரு மூங்கில் தடியில் அதை வைத்துக் கொண்டான். நீதி கேட்ட தம்பியிடம்,என்னிடம் ஏதும் இல்லை. இந்த மூங்கில் கழி மட்டும் தான் மிச்சம் என்று பொய் சொன்னான். ஏமாந்த தம்பி , மாரியம்மன் கோவிலுக்கு வந்து சத்தியம் செய் என்றான். அதன்படி அண்ணன், மாரியாத்தா! இந்த மூங்கில் கழியைத் தவிர வேறு எதுவும் என்னிடமில்லை, என்று பொய் சத்தியம் செய்தான். தம்பியும் அதை நம்பினான். சாதித்து விட்டோம் என்ற எகத்தாளத்தில் இருந்த அண்ணன் சிலரிடம்,இந்த மாரியாத்தாளை ரொம்ப சக்தி படைச்சவன்னு சொன்னீங்க. நான் செய்தது பொய் சத்தியம். அவ என்ன செய்துட்டா! துரத்தி வந்து என்னைக் கொத்திடவா போறா? என்று சிரித்தான். அந்த நிமிஷமே, புதரில் இருந்து ஒரு பாம்பு வந்து தீண்டியது. அலறி விழுந்த அவன் கையில் இருந்த தடியிலிருந்த தங்கக்கட்டி கொட்டியது. மக்கள் அதை தம்பியிடம் சேர்த்தனர். இப்படி, பொய்சத்தியம் செய்தவர்களைத் தண்டிப்பவளாக மாரியம்மன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள்.