பதிவு செய்த நாள்
11
ஜூலை
2022
04:07
நேபாள நாட்டின் கண்டகி மாவட்டத்தில் உள்ள நகரம் போக்ரா. இங்குள்ள அன்னபூர்ணா மலையில் ஏறுவோருக்கு இப்பகுதியே நுழைவு வாயிலாக உள்ளது. இந்த குன்றின் மீது ஐம்பது படிகள் ஏறினால் விந்தியவாசினியை தரிசிக்கலாம். காளியின் அம்சமான இவளை ஒருமுறை தரிசித்தாலும் மரணபயம் பறந்தோடும்.
நேபாள மன்னரான சித்தி நாராயண்ஷாவின் கனவில் தோன்றிய அம்பிகை, ‘‘உள்ளி பர்பாத் என்னும் காட்டுப்பகுதியில் சிலை வடிவாக பூமிக்குள் புதைந்திருக்கிறேன். என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்’’ என ஆணையிட்டாள். அதை அரண்மனைக்கு எடுத்து வரும் வழியில் போக்ரா என்னுமிடத்தில் வீரர்கள் தங்கினர். அங்கு வைத்த சிலையை எடுக்க முயன்ற போது நகர்த்த முடியவில்லை. அப்போது அங்கேயே தங்க விரும்புவதாக அசரீரி ஒலித்தது. இதன்பின் 1760ல் விந்தியவாசினி அம்மன் கோயில் இங்கு கட்டப்பட்டது.
மலைப்பாதை எங்கும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. கோயிலின் வாசலில் இரண்டு சிங்கங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. தங்க கிரீடம், நெற்றியில் தங்கப்பட்டை, மூக்கில் வளையம், செந்நிற ஆடை, ஆபரணம், தாமரைப் பூமாலை என அம்மன் அலங்காரமாக காட்சி தருகிறாள். ஆக்ரோஷமும், கருணையும் கண்களில் கொப்பளிக்கிறது. விநாயகர், சரஸ்வதி, அனுமன், சிவன், மகாவிஷ்ணு சன்னதிகள் உள்ளன.
கோயிலுக்கு வடக்கில் இமயமலையும், தெற்கில் போக்ரா நகரமும் பிரம்மாண்டமாக தெரிகின்றன. ஆடு, கோழிகளை பலியிடும் வழக்கம் இங்குண்டு. வியாழன், ஞாயிறன்று தரிசிப்பது சிறப்பு.
எப்படி செல்வது: காத்மாண்டில் இருந்து 200 கி.மீ.,
விசேஷ நாள்: கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி, துர்காஷ்டமி, மகாசிவராத்திரி
நேரம்: 24மணி நேரமும் திறந்திருக்கும்