நீண்ட காலம் குழந்தை இல்லையா.. கவலையை விடுங்கள்! விருதுநகர் மாவட்டம் தேவதானத்திற்கு வாங்க! நம்பிக்கையோடு தான் திரும்புவீங்க! மன்னர்களால் இயற்கை வளம் சூழ்ந்த இப்பகுதி கடவுளுக்கு தானம் அளிக்கப்பட்டதால் தேவதானம் எனப்பட்டது. இதனை இறையிலி நிலங்கள் என்பர். இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருசிவபக்தர் இவரது எதிரியான சோழ மன்னர் ஒருவர் பல முறை போர் தொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை. அதனால் சூழ்ச்சியாக நஞ்சு கலந்த உடை ஒன்றை உருவாக்கி துாதுவர் மூலம் பரிசாக அனுப்பி வைத்தார். இச்செய்தியை பாண்டிய மன்னருக்கு கனவில் சிவபெருமான் உணர்த்திட நச்சாடையில் இருந்து தப்பித்தார் மன்னர். அதனால் தான் இங்குள்ள சுவாமிக்கு ‘நச்சாடை தவிர்த்தருளிய நாதர்’ என்றும், போர்க்களத்தில் மன்னருக்கு போர் வீரராக வந்து சேவகம் புரிந்ததால் ‘சேவகத்தேவர்’ என்ற பெயரும் ஏற்பட்டது. மக்கள் செய்யும் பாவங்கள் யாவும் தன்னிடம் வந்து சேருகிறது என நினைத்தாள் கங்கை. அக்குறையை போக்கி கொள்ள பார்வதிதேவி யுடன் தவம் செய்து இங்கு விமோசனம் பெற்றாள். ஆதலால் அம்மனுக்கு ‘தவம் பெற்ற நாயகி’ என்ற திருநாமம் உண்டாயிற்று. குழந்தை இல்லாத தம்பதியர் கோயிலில் கொடுக்கும் நாகலிங்கப்பூ கலந்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சித்தி விநாயகர், ஆறுமுகநயினார், திருமலைக்கொழுந்தீசுவரர், அறுபத்து மூவர், சப்த கன்னியர், துர்கை சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள மண்டபங்களில் வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்கள் நிறைந்துள்ளன. கோயிலுக்கு எதிரே தெப்பம் உள்ளது. சரக்கொன்றை மரம் தலவிருட்சமாகவும், சிவகங்கை குளம் தீர்த்தமாகவும் உள்ளன. இத்தலம் தென் தமிழக பஞ்ச பூத தலங்களில் ஆகாயத் தலமாகும்.