இக்கோயில் தாயார் படிதாண்டா பத்தினியாவார், இவர் எக்காலத்திலும் சன்னதி ஆரியப்படாள் வாசலை விட்டு வெளியே வருவதில்லை. மாறாக ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி உத்தரத்தன்று, பெருமாள் தாயார் சன்னதிக்குச் சென்று தாயாருடன் சேர்ந்து காட்சியளிக்கும் சேர்த்தி சேவை நடைபெறும். இதற்கு கத்யத்ரய சேவை எனப்பெயர். மற்றெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக இக்கோயில் தாயார் சன்னதியில் மட்டும், மூன்று தாயார்களை நாம் சேவிக்கலாம். இவர்களில் முதலில் இருப்பவர் பஞ்சலோகத்தினால் ஆன ரங்கநாயகித்தாயார் உற்சவர். அடுத்து சிலா விக்கிரகமாக நடுவில் இருப்பவர் பூமிதேவித்தாயார், கடைசியில் கருவறை உள்ளே இருப்பவர் ஸ்ரீதேவித் தாயார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாயகித்தாயார் சன்னதியில், பெருமாள் சன்னதியில் நடப்பதுபோலவே, கோடைத் திருநாள், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, ஊஞ்சல் உற்சவம், திருவத்யயன உற்சவம் போன்றவையும், நவராத்திரி உற்சவம்ஆகியவை நடந்தாலும் இவை அனைத்தும் சன்னதிக்குள்ளேயேதான் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.