ஸ்ரீரங்கம் கோயில் மூலவர் பெரியபெருமாள் ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். சுண்ணாம்புக்காரை எனப்படும் சுதையினால் உருவாக்கப்பட்ட இந்த திருமேனி மிகச்சிறந்த கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன்மீது புஜங்கசயன கோலத்தில் (வலது கையைத் தலைக்கு அருகில்வைத்து) இவர் பள்ளி கொண்டுள்ளார். சுமார் 10 அடிநீளமும் 5 அடி அகலமுள்ள இந்த சுதாமூர்த்தியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாராகும் தனித்தைலம் பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த திருமேனிக்கு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அது மட்டுமல்ல, இவருக்கு திருவாபரணங்கள், வஸ்திரங்கள் மட்டுமே அணிவித்து அழகுபடுத்துகிறார்கள். மலர்கள் அல்லது மாலைகள் ஏதும் இவருக்குஅணிவிக்கப்படுவதில்லை. இவரது திருமேனி எழிலை பாதம் முதல் திருமுடிவரை ஒவ்வொரு பகுதியாக ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் வர்ணித்துப்பாடியுள்ளார். இந்த ரங்கநாதரின் பாதங்களில் சுக்கிரன் நித்யவாசம் செய்வதாக நம்பிக்கை எனவே ரங்கநாதர் கோயிலை சுக்கிர ஷேத்திரம் என ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுதவிர பெருமாளுக்கு பூமாலையோடு பாமலையும் சூடி இறுதியில் அவரிடமே மணமாலையும் சூட்டிக் கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் ஐக்கியமானது இந்த திருவடிகளில்தான் என்பது புராணச் செய்தி. அத்துடன் இவரை பாடித்துதித்த திருப்பாணாழ்வாரும் இந்த திருவடியோடு ஐக்கியமானதாக இக்கோயில் வரலாற்று குறிப்புகளில் காணக்கிடைக்கிறது. இவரது ஒளிமிகுந்த கண்களைக் காட்டி ராமானுஜர் தனது சீடர்களில் ஒருவரான உறங்காவில்லிதாசருக்கு ஞானோபதேசம் செய்ததாக இவ்வூர் பெரியவர்கள் கூறுவர்.