ஸ்ரீரங்கநாதருக்கும், தனிச்சந்நிதியில் உள்ள ஸ்ரீதேவி,பூமாதேவி நாச்சியார்களுக்கும் பூக்களும், மாலைகளும் சாற்றப்படுவதில்லை. பெரிய பெருமாளின் திருமேனிக்குக் கீழே தாயார்களுடன் உற்சவர்களாக சேவை சாதிக்கும் அழகிய மணவாளனாகிய நம்பெருமாளுக்கும், ஸ்ரீரங்க நாச்சியார் உற்சவருக்கும் மட்டுமே பூ அலங்காரமும், மாலைகளும் அணிவிக்கப்படுகின்றன. இதில் வியப்பான செய்தி இதற்கான மலர்மாலைகள் அம்மாமண்டபத்தின் அருகில் உள்ள ஸ்ரீமதுரகவிசுவாமி நந்தவனத்தில் தயாரிக்கப்படும் பூமாலைகள் மட்டுமே நம்பெருமாளுக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் சாற்றப்பட்டு வருகிறது.
கடைகளில் விற்பனையாகும் பிற மாலைகள் பெருமாள், தாயார் திருவடிகளில் சேர்க்கப்பட்டு பின், பிரசாதமாக சேவார்த்திகளுக்கு வழங்கப்படுகின்றன. அவை பெருமாளுக்கோ, தாயாருக்கோ அணிவிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாலைகள் தயாராகும் விதமே தனி, பெருமாளுக்குப் பூமாலைகள் கட்டுபவர்கள் பூணூல் சாத்தாத வைணவர்கள். இவர்கள் குடியிருந்த வீதி முன்பு சாத்தாதார் வீதியென்றிருந்து பின்பு (பூவியாபாரம்
நடைபெறுமிடமாகிய) சாத்தாரவீதியாகிற்று என்பது சிறப்புச் செய்தி. பெருமாளுக்கு மாலைகட்டும் பணியாற்றுபவர்கள் திருமணமாகாத ஏகாங்கிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பல சடங்குகளைப் பின்பற்றுகின்றனர். ஒரு நாளில் இருவேளை மட்டும் உணவு உண்டு, மேல்சட்டை அணியாமல், வெறும் தரைகளில் துண்டை விரித்து அதில்தான் உட்காருவார்கள். காலையில் பூக்குடலையில் பூக்களைப் பறித்து வந்து, தரையில் படாமல் பலகையில் கிடத்தி, பெரிய மாலைகளைக் கட்டுகிறார்கள். திருவரங்கனைச் சேரும் மாலைகளைத் தயாரிப்பதால், அவை இடுப்புக்குக் கீழ் விழக்கூடாது என்பதற்காக, மேஜையில் வைத்துக் கட்டுவதும் குறிப்பிடத்தக்கது.