ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்திலிருந்து 4ம் பிரகாரத்திற்குச் செல்லும் வகையில், பெரிய சன்னதிக்கு வடபுறம் இந்த வாசல் அமைக்கப்பட்டுள்ளது. மார்கழிமாதம் நடக்கும் திருவத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்த பரமபதவாசல் திறப்பு வைபவம் ஆண்டுதோறும் நடக்கிறது. ராப்பத்து துவக்கநாளன்று அதிகாலை திறக்கப்படும் இந்த பரமபதவாசல் அடுத்த 9 நாட்கள் தினமும் மதியம் திறக்கப்பட்டு இரவு மூடப்படும். இவ்வகையில் வருடத்தில் 9 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் இந்த பரமபதவாசல் ஒவ்வொரு முறை திறக்கும்போதும் பெருமாள் அதன்வழியே செல்வதும் அவரைத் தொடர்ந்து அடியார் திருக்கூட்டம் செல்வதும் கண்கொள்ளா காட்சியாகும். இந்த பரமபதவாசலை பெருமாளோடு கடந்தாலோ, அல்லது
உற்சவ நாட்களில் இவ்வாசலைக் கடந்து சென்றாலோ, பூவுலக வாழ்க்கை முடிந்தபின் ஜீவாத்மாவுக்கு வைகுந்தபிராப்தி கிடைக்கும் என் நம்பிக்கை உள்ளதால், இவ்வாசல் திறந்திருக்கும் நாட்களில் பரமபதவாசலைக் கடந்து செல்ல பெருமளவில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவார்கள் என்பது தனிச்சிறப்பு.