ஒரு துறவியின் சீடர்களுக்கு, கடவுள் ஒருவரே என்றால், அவரால் எப்படி எல்லோரது ஆசைகளையும் நிறைவேற்றமுடியும்? என்ற சந்தேகம் எழுந்தது. ஒருநாள், தன் சீடர்களை நோக்கி, அதோ தெரிகிறது பாருங்கள், ஒரு மாமரம், அதனிடம் நீங்கள் எதையாவது கேட்க விரும்பினால், என்ன கேட்பீர்கள்? என்றார். ஒரு சீடன் புசிப்பதற்கு நல்ல சுவையுள்ள மாம்பழங்களைக் தா என்று கேட்பேன்! என்றான். அடுத்தவன். நான் அமர்ந்து தியானம் செய்ய நல்ல பலகைகளைத் தா என்று கேட்பேன்! என்றான். மற்றொருவன், பூஜைக்கு உபயோகமான, மாவிலைகளைத் தரவேண்டுவேன்! என்றான். இன்னொருவன், வெயிலுக்கு இதமான நிழல் வேண்டும் எனக்கு! என்றான். துறவி சொன்னார், அஃறிணைப் பொருளான இந்த ஒரு மரமே, பலரது தேவையை நிவர்த்தி செய்யும்போது எல்லாம் வல்ல பரம்பொருளான இறைவனால் எல்லோரது வேண்டுதலையும் ஏன் ஈடேற்றமுடியாது? என்று கூற, தன் சீடர்களின் ஐயப்பாடு நீங்கியது.