தேய்பிறை சதுர்த்தி திதியின் அதிபதி சக்தி ஒருமுறை விநாயகரை வணங்கி அவரிடம், ‘‘சுவாமி! வளர்பிறை சதுர்த்தியைப் போல நானும் பெருமையாக வாழ வேண்டும்’’ என வேண்டிக் கொண்டாள். அப்போது விநாயகர் ‘‘சந்திரனின் உதய காலத்தில் என்னை நீ வழிபட்டதால் தேய்பிறை சதுர்த்தியும், சந்திரோதயமும் சேரும் இந்தக் காலம் சிறப்பு மிக்கதாகும். இதில் என்னை வழிபடுவோருக்கு சங்கடங்களை எல்லாம் போக்கி மங்களத்தை அருள்வேன். உனக்கு ‘சங்கஷ்ட ஹரணி’ எனப் பெயர் வழங்கட்டும்’’ என வாழ்த்தினார். இதனடிப்படையில் தேய்பிறை சதுர்த்திக்கு ‘சங்கஷ்டஹர சதுர்த்தி’ எனப் பெயர் வந்தது. அதுவே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. ‘துன்பம் போக்கும் சதுர்த்தி’ என்பது இதன் பொருள். சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் காலை முதல் மாலை வரை தண்ணீர், பழச்சாறு சாப்பிடலாம். மாலையில் சந்திரனை பார்த்த பின் விநாயகரை வழிபட்டு 108 போற்றி, அஷ்டோத்திரம், அகவல், கவசப் பாடல்களை பாட வேண்டும். உப்பு, புளி, காரம் அதிகம் சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதம் இருந்ததால் கிருதவீர்யன் என்னும் மன்னன் கார்த்தவீர்யன் என்னும் வீரனை மகனாகப் பெற்றான். சந்திரன் தனக்கு ஏற்பட்ட காசநோய் நீங்கி குணம் அடைந்தான். புருசுண்டி முனிவர் நரகத்தில் தவித்த தன் முன்னோர்களை விடுதலை பெறச் செய்தார். தேய்பிறை சதுர்த்தியும், செவ்வாயும் இணையும் நாளில் நவக்கிரங்களில் ஒருவரான அங்காரகன் (செவ்வாய்) வழிபட்டு விநாயகரின் அருள் பெற்றார். இதனடிப்படையில் சங்கடஹர சதுர்த்தியன்று செவ்வாயும் சேர்ந்தால் ‘அங்காரக சதுர்த்தி’ எனப்படும். பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருப்பவர்களுக்கு கடன், நோய், எதிரி பயம் உண்டாகும். அங்காரக சதுர்த்தி விரதமிருந்தால் தோஷம் நீங்கி நன்மை பெருகும். முயற்சியில் தடைகள் விலகவும், நோய்கள் தீரவும், முன்னோர் அருள் பெறவும் சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து கணபதியை வழிபடுவோம்.