Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கணபதி என்றிட கவலை தீருமே! தர்மத்தின் அடையாளம் தர்மஸ்தலா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஞயம்பட உரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2022
06:08

கனிவான முறையில் எதையும் கூறுங்கள் என்கிறார் அவ்வையார். ஆனால் நாம் வாழ்வியலில் பார்ப்பது என்ன? பஸ்சில் ஏறி உட்கார்ந்தவுடன் “தள்ளி உட்காரய்யா...” என்று தொடங்கி உங்க அப்பன் வீட்டு பஸ்சோ...’’ என்று தொடர்ந்து இறங்கப் போகிற அரை மணி நேரத்திற்குள் பஸ்சையே ஒரு போர்க்களமாக மாற்றி விடுகின்ற தன்மையைக் காண்கிறோம்.
    சிலபேரை எங்கே கூட்டிச் சென்றாலும் சண்டை போடாமல் வரமாட்டார்கள். இன்னும் சிலர் இருக்கின்றார்கள் நான் எதிலும் பர்பெக்ட் என்று சொல்லியே எரிந்து விழுவார்கள். லஞ்சம் வாங்க மாட்டேன் என்று சொல்பவர்களும் அப்படித்தான் அமைதியாக பேசுவது குறைவாகவே இருக்கும். கொஞ்சம் வயதானால் தனக்குத் தெரியாத ஒன்றை இவன் என்னச் சொல்லி விடப் போகிறான் என்று ஏளமான அல்லது எடுத்தெறிந்து பேசுவார்கள். இவை எல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைக் காட்சிகள்.
    ஆனால் அவ்வையோ, ‘ஞயம்பட உரை’ என்கிறாள். அது சிறிய வயதிலிருந்தே பழக்கத்தில் வர வேண்டும். அல்லது அது போலப் பேசும் மனிதர்களிடம் பழக வேண்டும். மனதில் உறுதி வேண்டும் என்பார் மகாகவி பாரதியார். மனதில் உறுதியானது எதனால் வரும். பணம், பதவி, படிப்பு, உடல் உறுதி, செல்வாக்கு எனக் கூறிக் கொண்டே போகலாம். ஆனால் இவை எல்லாம் நிரம்பி இருப்பவர்கள் பெரும்பாலும் ஓங்கியே பேசுவார்கள். அதனால் தான் அடுத்த வரியே வாக்கினிலே இனிமை வேண்டும் என்றான். மனதில் உறுதி இருக்கின்றது என்று தடித்த வார்த்தைகளால் பேசாதே. இனிமையாகப் பேசு என்கிறார். அடுத்து இனிமையாகப் பேசுபவர்களும் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவர்களாக இருக்கும் போது அவர்களையும் கணக்கில் கொண்டு தான் நினைவு நல்லது வேண்டும் என்றார் மகாகவி.
    உண்மையைப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள், இனிமையற்றதை உண்மையாகவே இருந்தாலும் பேசாதீர்கள், கேட்பவர் மனம் விரும்பி இனியதாகக் கருத வேண்டும் என்பதற்காக இட்டுக் கட்டிப் பொய்யைப் பேசாதீர்கள் என்கிறது நமது வேதம்.
    எனவே தான் வள்ளுவரும் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்றார். இனிய சொற்கள் பழம் போல இருக்கும் போது ஏன் கடுமையான காய் போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்கிறார். மேலும் பேசுவது குறித்தே இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, சொல்வன்மை ஆகிய நான்கு அதிகாரங்களைத் தந்துள்ளார் எனின் இனிமையாகப் பேசுவதன் முக்கிய புரிகிறதல்லவா?
    கணவன் பசியுடன் வந்து சாப்பிட உட்காருகிறான். அவளும் தான் ஆபீசுக்குப் போய் விட்டு வந்து அவசர அவசரமாகச் சமைத்து, களைத்துப் போயிருக்கின்றாள். சாப்பிட ஒரு கை எடுக்கிறான். உணவில் ஒரு தலைமுடி... உடனே டென்ஷன் ஏற.... உனக்கு அறிவிருக்கிறதா? எப்படி வந்தது? தலையைச் சொரிந்து கொண்டே சமைத்தாயா? என்று கத்துகின்றான். மனைவிக்கும் பசி, களைப்பு, கோபமாகப் பேசிவிட்டாரே என்ற ஆத்திரம் இருவரும் சமைத்து வைத்ததை அப்படியே போட்டு விட்டு தனித்தனியாகப் பசியுடன் படுக்கைக்குப் போனது தான் மிச்சம். சமாதானம் ஆக ஓரிரு நாட்கள் ஆனது எனச் சொல்லவும் வேண்டுமா என்ன?
    இதே காட்சி மற்றொரு வீட்டில், கணவன் தலைமுடியைக் கையில் எடுத்தான். மனைவியை அழைத்தான். இது இலையில் இருப்பதைக் காட்டிலும் உன் தலையில் இருந்தால் அழகு என்றான். பெண் பார்க்கச் சென்ற போது ஏற்பட்ட வெட்கத்தை விட இப்போது அதிகமாக வெட்கப்பட்டாள்... சாரிங்க என்றாள். நீயும் தானே பசியோடு இருக்கிறாய் சேர்ந்து சாப்பிடலாம் என்றான். அன்பு அங்கே ஆறாக ஓட நெருக்கம் அதிகமானது எனக் கூறவும் வேண்டுமா? எங்கள் செட்டிநாட்டில் இதனையே எதவாகப் பேசுதல் என்பார்கள்.
    ஸ்ரீராமனைப் பார்த்த கணத்திலேயே அனுமன் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் கலையே அருமையாக இருந்தது. அதனைக் கேட்ட மாத்திரத்திலேயே அனுமனுக்கு “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தினை ஸ்ரீராமர் தந்துவிட்டார். வாலியால் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த சுக்ரீவனிடம்,  ஸ்ரீராமரை அறிமுகப்படுத்திய போது ‘வாலிக்குக் காலன் வந்தனன்’ என்று சொல்லி சுக்ரீவனுக்கு உயிர் கொடுக்கிறார். அன்னை சீதையைக் காணும் பொழுது ராமநாமத்தை முதலில் சொல்லி உயிர் தந்து ராவணனைத் தன் பிள்ளை அங்கதனின் தொட்டிலில் பொம்மையாகக் கட்டித் தொங்கவிட்ட வாலியை ஒரே கணையால் கொன்ற ஸ்ரீராமனின் துாதுவன் என்று சொல்லி சீதைக்கு உயிர்தந்தார். ராவணனின் சபையில் தருமமே ஸ்ரீராமனாக உருவெடுத்து வந்துள்ளது என பயமின்றித் தெளிவாகக் கூறினார். இலங்கையில் இருந்து திரும்பிய பின் ஸ்ரீராமனிடம் சுருக்கமாக, அதே சமயம் தெளிவாக “கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்” எனக் கூறி ஸ்ரீராமனுக்கே உயிரைத் தந்தார். இவ்வாறு எங்கே எப்படிப் பேச வேண்டும். இனிமையாகவும், அதே நேரத்தில் நம்பிக்கை தருபவனாகவும் பேச்சு அமைய வேண்டும். இதுவே அனுமனிடம் நாம் கற்க வேண்டிய பாடம் ஆகும்.
    மருத்துவமனையில் நோயுற்று இருப்பவர்களைப் பார்க்கச் செல்பவர்கள் பேசுவது அவர்களுக்கு நம்பிக்கை தருபவனவாக அமைய வேண்டும். நோயுற்றிருப்பவர்களைப் பார்க்கச் செல்லும் போது ஆரம்பரமான உடைகளோ, அலங்காரங்களோ கூடாது. போய்ப் பார்க்கும் போது இந்த ஆஸ்பத்திரிக்கா வந்தீங்க... இந்த ரூம்ல தான் போனதடவை அவர் வந்துட்டு... என்றெல்லாம் நம்பிக்கைக் குறைவான வார்த்தைகளை பேசவே கூடாது. கடவுள் துணையிருக்கிறார். விரைவில் பூரண நலம் பெறுவீர்கள் என்ற நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.
    ஒரு முனிவர் கண்களை மூடித் தவமிருந்தார். வேட்டைக்கு வந்த மன்னர் பரிவாரங்களுடன் ஒரு மானைத் துரத்தி அம்பெய்தினார். மான் அம்புடன் தப்பியோடிவிட்டது. தேடச் சொன்னார். அந்த வழியில் தான் தவமிருக்கும் முனிவர் இருந்தார். முதலில் ஒருவன் வந்தான். ‘‘ஏய் சாமி இந்தப் பக்கம் மான் ஓடிச்சா?’’ எனக் கேட்டான். ‘‘சிப்பாயே... நான் பார்க்கவில்லை’’ என்றார் கண்களை மூடியபடியே. அவன் அங்கேயே சிறிது தள்ளி நின்றான். தொடர்ந்து வந்த அடுத்தவர்,‘‘சாமி... மானைப் பாத்தீங்களா?’’ என்று கேட்க ‘‘தளபதியே... மானைப் பார்க்கவில்லை’’ என்றார். அடுத்து வந்தவர் ‘‘முனிவரே வணக்கம். இந்தத் திசையில் மான் ஒன்று வந்ததைப் பார்த்தீர்களா?’’ எனக் கேட்க ‘‘மந்திரியாரே! நான் மானைப் பார்க்கவில்லை’’ என்றார். தொடர்ந்து வந்தவர் ‘‘தவசீலருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம். இப்பகுதியில் தங்கள் கண்களில் மான் ஏதும் தென்பட்டதா’’ எனக் கேட்க ‘‘மாமன்னரே! நான் கண் மூடிய நிலையில் அமர்ந்துள்ளேன். எனவே எதனையும் பார்க்கவில்லை’’ என்றார். சற்று தொலைவில் நின்றிருந்த சிப்பாய் ஆர்வமுடன் ஓடிவந்து, ‘‘கண்களைத் திறக்காமலேயே எவ்வாறு தங்களால் சிப்பாய், தளபதி, மந்தியார், மாமன்னர் எனக் கூற முடிந்தது’’ என்று கேட்டான். முனிவரும் சிரித்தபடி, ‘‘அவரவர் தகுதிக்கேற்ற வார்த்தைகளையே உபயோகப்படுத்தினீர்கள். வார்த்தைகள் தான் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கின்றது. நாக்கின் நுனியில் தான் மகாலட்சுமி வசிக்கின்றாள். நீங்கள் பேசும் விதத்தில் தான் உங்கள் வளமை பெருகுகிறது. நாக்கின் நுனியில் தான் நண்பர்களும், பகைவர்களும் இருக்கின்றார்கள். ஒருவன் நாக்கின் நுனியில் தான் சிறைச்சாலையோ அல்லது மரணமோ இருக்கின்றது. எனவே தான் எங்கள் திருவள்ளுவரும் யாராக இருந்தாலும் நாக்கினை காத்துக் கொள்ளுங்கள் என்றார்’’  என  அறிவுரை கூறினார். மன்னரும் மற்றவர்களும் மகிழ்ந்து விடை பெற்றனர்.
    நாக்கு பாஸ்பரஸ் போலத்தான் என்றான் ஓர் அறிஞர். பாஸ்பரஸ் என்னும் தனிமத்தை நீரிலேயே வைத்து இருக்க வேண்டும். அதனை வெளியே எடுத்தால் உடனே தீப்பற்றி விடும். அது போலத்தான் எச்சில் எனும் ஈரத்திலேயே இந்த நாக்கு இருந்தாலும் வெளியே வரும் போது பலபேரை, அவர்களின் மென்மையான இதயங்களையும் சுட்டு விடுகின்றது. எனவே தான் மகான் ஞானானந்தகிரி சுவாமிகள், ‘‘அன்பாகப் பேசுக, அளவாகப் பேசுக, அழகாகப் பேசுக, அவையறிந்து பேசுக...என்று கூறிக் கொண்டே சென்று நிறைவாகப் பேசாதிருந்தும் பழகுக’’ என்று அருளிச் செய்தார்கள். வாயைத் திறந்து நம் முட்டாள் தனத்தை வெளிக்காட்டுவதை விட, வாயைத் திறக்காமல் அமைதியாய் இருப்பது நல்லது.
    அவ்வையாரும், ‘வெட்டெனப் பேசேல், பழப்பன பகரேல், பிழைபடச் சொல்லேல், மிகைபடச் சொல்லேல், வஞ்சகம் பேசேல், கடிவது மற, சுளிக்கச் சொல்லேல், நொய்ய உரையேல், மொழிவது அற மொழி’ என அடுக்கிக் கொண்டே போகிறார். மனம் அன்போடு இருந்தால் வார்த்தையே தேவையில்லை. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பார் கவியரசர். வார்த்தைகளின்றி கண்களே கூடப் பேச முடியும் என்பதை அனைவரும் அறிவர். காதலர்கள் மட்டுமல்ல.
    கணவன் – மனைவி, முதலாளி –  பணியாளர்கள், தலைவன் – தொண்டர்கள் ஆகியோர் நல்ல புரிதலில் கண்கள் காட்டும் செய்தியை அப்படியே பிடித்துக் கொள்வார்கள். ஆனால் அன்பில்லையென்றால் கோபம் வந்து கத்துகின்றோம். ’அவன்தான் பக்கத்துலேயே இருக்கான்ல. ஏன் கத்தற’  எனக் கோப்படும் போது கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் மனநுாலார் சொல்கிறார்கள். அன்பில்லை என்று சொன்னால் இருவர் மனமும் நீண்ட தூரத்திற்கு விலகிச் சென்றுவிடுகிறது. கேட்பதற்கு வெளிப்புலனான செவிகள் இருந்தாலும் கேட்பதற்கான உட்புலன் மனம் விலகி இருப்பதனால் தான் கத்துகிறோம் என்கிறார்கள். சிறிது சிந்தித்தால் இந்த உண்மை புரியும்.
    ‘கவலைப்படாதே அடுத்த தேர்விலே வென்றுவிடுவாய்’  என்று சொல்லும் ஆசிரியரும், ‘ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. சீக்கிரம் குணமாயிடும்’  என்று சொல்லும் டாக்டரும், ‘இதெல்லாம் மேட்டரே இல்ல... பாத்துக்குவோம் வாடா’  என்று சொல்லும் நண்பனும், ‘பரவாயில்லங்க.... நாமளும் நல்லா வந்துருவோம்ன்னு’ சொல்லி ஆறுதல் அளிக்கும் மனைவியும் வாழ்வின் வரங்கள்.
    ‘எட்டு மாதத்திலேயே பேசத் தொடங்கிவிடுகின்றோம். ஆனால் எண்பது வயதானாலும் எப்படிப் பேசுவது என்று தான் தெரியவில்லை’ என்றான் ஓர் அனுபவசாலி. ஆம், அது உண்மையிலும் உண்மை. அன்பாக இருப்போம். அன்பாக, இனிமையாகப் பேசுவோம். இதனால் எல்லோருடைய இதய சிம்மாசனங்களிலும் நாமே குடியிருப்போம்.
         

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar