கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகி. அவளுக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது, ‘‘கம்சா! உன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னை கொல்வான்’’ என அசரீரி ஒலித்தது. கம்சன் மணமக்களை சிறையில் அடைத்தான். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை எல்லாம் கொன்றான். எட்டாவதாக கிருஷ்ணர் அவதரித்தார். அப்போது சிறையின் கதவுகள் தானாக திறந்தன. கூடை ஒன்றில் குழந்தையை சுமந்து கொண்டு ஆயர்பாடி நோக்கிப் புறப்பட்டார் வசுதேவர். யமுனை நதி வழிவிட்டது. யசோதை, நந்தகோபர் தம்பதியிடம் கிருஷ்ணரை ஒப்படைத்தார். அவர்களுக்குப் பிறந்த‘ மாயா’ என்னும் பெண் குழந்தையை எடுத்து வந்தார். தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கம்சனிடம் தெரிவித்தார். வழக்கம்போல் அவன் குழந்தையின் கால்களை பிடித்து சுழற்றி எறிந்தான். அக்குழந்தை துர்கையாக காட்சியளித்து, “ அடே மூடனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் ஆயர்பாடியில் வளர்கிறான்’’ என எச்சரித்து மறைந்தாள். அதன்படியே கிருஷ்ணரால் அசுரன் கொல்லப்பட்டான். ‘தீயவர்களை அழிக்கவும், நல்லவர்களைக் காக்கவும் யுகம் தோறும் நான் அவதரிப்பேன்’ என்ற நியதியின்படி அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் பூமியில் கிருஷ்ணர் அவதரிக்கிறார்.