1983ல் கர்நாடகாவிலுள்ள குல்பர்காவில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அவரை தரிசிக்க சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த காஞ்சிவரத ஓதுவார் என்பவர் சென்றார். கங்காதீஸ்வரர் கோயிலில் நடக்கவுள்ள கோபுரத் திருப்பணி நல்லவிதமாக நிறைவேற வேண்டும் என சுவாமிகளிடம் வேண்டினார். ஆசியளித்த சுவாமிகள், தேவாரப் பதிகம் பாடும்படி சொல்ல ஓதுவாரும் பாடினார். மடத்திலுள்ள தொண்டரிடம் புதுவேட்டி, துண்டு, பொற்காசு எடுத்துவரச் சொல்லி அன்பளிப்பாக வழங்கினார். அங்கிருந்த பக்தர்களும் பணம் கொடுத்து உதவினர். குருவருள், திருவருளைப் பெற்ற மகிழ்ச்சியுடன் ஓதுவார் புறப்பட்டார். 1993ம் ஆண்டு காஞ்சி மடத்திற்கு ஓதுவார் மீண்டும் வந்திருந்தார். அந்த சமயத்தில் சென்னையைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் மஹாபெரியவரிடம் தன் பார்வைக் குறைபாட்டைச் சொல்லி வருந்தினார். அருகில் நின்ற ஓதுவாரிடம், ‘‘சிவன் அடியார்களில் ஒருவரான சுந்தரர் வரலாறு பற்றி சொல்’’ என்றார் மஹாபெரியவர். கொடுத்த வாக்கை மீறிய சுந்தரருக்கு பார்வை போனதையும், பின்னர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர், திருமுல்லைவாயில், காஞ்சிபுரம், திருவாரூர் போன்ற சிவத்தலங்களைப் பாடி பார்வை பெற்றதையும் விவரித்தார். அத்தலங்களுக்கு யாத்திரை செல்லுமாறு தெரிவித்தார் மஹாபெரியவர். இன்ஜினியரும் அப்படியே தரிசிக்க பார்வை குறைபாடு மறைந்தது. ஒருமுறை ஓதுவார் தன் குடும்பத்திருடன் திருவெண்காடு சிவன் கோயிலுக்கு செல்லும் வழியில், ஓரிக்கையில் மஹாபெரியவர் முகாமிட்டிருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றார். சுவாமிகள் ஓய்வெடுப்பதால் காலையில் தான் பார்க்க முடியும் என தொண்டர்கள் தெரிவித்தனர். ஓதுவாரும் அங்கு தங்கி மறுநாள் தரிசித்து விட்டு புறப்பட்டார். திருவெண்காட்டுக்கு பயணிக்கும் போது தான் அவருக்கு ஒரு உண்மை புரிந்தது. இரவெல்லாம் கனமழை பெய்து பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதைக் கண்டார். தான் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக மஹாபெரியவர் தடுத்திருக்கிறார் என்பதை அறிந்த ஓதுவார் மனம் நெகிழ்ந்தார்.