Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆரியபட்டர் சேரன் செங்குட்டுவன் சேரன் செங்குட்டுவன்
முதல் பக்கம் » பிரபலங்கள்
துரியோதனன்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2012
03:08

பாரத நாட்டின் பொக்கிஷமான மகாபாரதம் தர்மத்தையே நிலைக்களமாகக் கொண்டது. இதில் காணப்படும் தர்மங்கள் எண்ணிலடங்காதவை.  மகாபாரதக் கதையில் வீரம், சூழ்ச்சி என எத்தனையோ இருந்தாலும், தர்மத்தின் அடிப்படையில்தான் வெற்றி கிட்டியிருக்கிறதே தவிர, வீரத்தினாலோ சூழ்ச்சியினாலோ மட்டுமல்ல. வீரமும் சூழ்ச்சியும் தற்காலிக வெற்றியைத் தேடும் உபாயங்கள். ஆனால் நிலையான- அழிவில்லாத வெற்றிக்கு தர்மமே முற்றிலும் சாதனமாக இருந்தது. பாண்டவர்கள் தர்மத்தைவிட்டு சிறிதும் விலகாதவர்கள். கவுரவர்கள் சாதுக்களான பாண்டவர்களுக்கு வஞ்சகமும் சூழ்ச்சியும் செய்து துன்பத்தையே கொடுத்தனர். துன்மதி கொண்ட துரியோதனன் பக்கத்திலும் நல்லவர்கள் இருந்தாலும் இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பெறுபவள் துரியோதனனைப் பெற்றவளான காந்தாரிதேவியே.

காந்தார தேசத்து இளவரசியான காந்தாரி திருதராஷ்டிர மன்னன் பார்வை அற்றவன் என்று தெரிந்தேதான் மணம் புரிந்துகொண்டாள். பிறவிக் குருடனான திருதராஷ்டிரனை மணம் செய்துகொண்டபிறகு, தன் கணவன் காணாத இந்த உலகத்தை இனி தானும் பார்க்கக் கூடாது என்று, தன் இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இறுதி வரை வாழ்ந்தாள். இவளுடைய பதிவிரதா தர்மத்தின் முன்பு பரந்தாமனான கண்ணனும் செயலிழந்து நின்றான். பாரதப் போர் கடுமையாக பதினேழு நாட்கள் முடிந்துவிட்டன. குருஷேத்ர புண்ணிய பூமி குருதி வெள்ளத்தில் மிதந்தது. கவுரவ சேனையின் பாசறையில் சூன்யம் நிறைந்திருந்தது. அவர்கள் தரப்பில் போரிட்ட மாவீரர்கள் அனைவரும் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார்கள். துரியோதனனுக்குத் துணையிருந்த நண்பன் கர்ணன், அருமைச் சகோதரர்கள், வஞ்சகமே உருவான சகுனி மாமன் யாவருமே இப்போது இல்லை. கவுரவர்களுக்காக அஸ்தினாபுர அரசைக் காப்பதற்காகவே இருந்த பீஷ்ம பிதாமகர், உயிரை விடாமல் உத்திராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு வெட்டப் பட்ட மரம்போல அம்புப் படுக்கையில் சயனித்து விட்டார்.

தனித்து விடப்பட்ட அஸ்தினாபுரத்து இளவல் தன்னந்தனியாகத் தவிக்கிறான். சித்தம் தடுமாறி நிலை குலைந்து நிற்கிறான். பாண்டவர் பக்கம் வெற்றி கிட்டும் நிலை. துரியோதனனின் மனம் கொந்தளிக்கிறது. எதை யெல்லாமோ எண்ணுகிறது. அன்று பரமாத்மா கண்ணன் சொன்ன சொற்கள் நினைவில் நிழலாடுகிறது. தர்மத்தை சூது கவ்வும்; காலம் வரும்போது தர்மமே வெல்லும் என்று சொன்னானே! அந்தக் காலம் வந்துவிட்டதே எனக்குத் துணையாக யாருமே இல்லையே! என்று கலங்குகிறான். அன்று அரச சபையில் பாவி துச்சாதனனின் செந்நீர், துரியோதனனின் ரத்தம், மேவி இரண்டும் கலந்து குழலில் பூசி, நறுநெய் குளித்தபிறகே சீவிக் குழல் முடிப்பேன் என்று கூந்தலைக் கலையவிட்ட பாஞ்சாலியின் சபதம் ஈட்டியாகக் குத்துகிறது. இருண்ட பாசறையில் தன்னந்தனியாகப் புலம்பித் தவிக்கிறான். கூடாரத்தில் எங்கேயோ இருந்த பகடைக்காய்கள் அவனைப் பார்த்து சிரிப்பது போன்ற ஒரு பிரமை. வெறிபிடித்தவன் போல அங்கும் இங்கும் நடக்கிறான். பாசறைக் கதவருகே ஏதோ நிழலாடுகிறது. யாரோ வரும் காலடிச் சப்தமும் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறான். அங்கே அவனைப் பெற்ற அன்னை காந்தாரி நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அம்மா, நீங்களா? என்ன இந்த வேளையில்.... அதுவும் யுத்த பூமியில்? என்று வேதனையோடு கேட்டான்.

அன்பு மகனே, உன் நிலையை அறிந்து தாயான நான் எப்படி நிம்மதியாக இருப்பேன். குழந்தையின் தவிப்பை தாயையன்றி யார்தான் அறிவார். வருந்தாதே மகனே என்று அவன் தலையை அன்போடு வருடினாள். வணங்காமுடியான துரியோதனனுக்கு தாயின் வருடல் இதமளிக்கிறது. அம்மா! நாளை நடக்கும் போரில் எனக்கு மரணம் நிச்சயமென்று என் உள்ளுணர்வு அச்சுறுத்துகிறது என்றான். மகனின் நிலைகண்டு அன்பு மேலிட, கவுரவக் குலத்தோன்றலே! நீயா மரணத்தைக் கண்டு அச்சப்படுகிறாய். கோழையாகி விடாதே. நீ மரணத்திலிருந்து தப்ப வழியுண்டு மகனே. உன்னை யாரும் வெல்ல முடியாது. அதற்கு உபாயம் சொல்லத்தான் உன்னைத் தேடிவந்தேன் என்றாள் வாஞ்சையோடு. என்ன சொல்கிறீர்கள் தாயே? என்றான் துரியோதனன் ஆச்சரியத்தோடு. சுவேதனா! எனது கற்பு நெறியும் பதிவிரதா தர்மமும் உண்மையாக இருக்குமாயின், உன்னை யாராலும் எந்த அஸ்திரத்தினாலும் வெல்ல முடியாது. மரணமும் உன்னைத் தீண்டாது. நான் சொல்வதை நீ செய்யவேண்டும் என்றாள்.  சொல்லுங்கள் தாயே?துரியோதனா, இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு, பிறந்த மேனியாக என்னிடம் வா. எந்தவிதமான ஆடையோ ஆபரணமோ உன் மேனியில் இருக்கக்கூடாது.

இத்தனைக் காலமாகக் கட்டியிருந்த கண்களைத் திறந்து, என் பரிபூரணமான கடாட்சத்தைப் பொழிந்து உன்னை ஆசீர்வதிக்கிறேன். எனது நயன தீட்சை உன் மேனியில் பட்டுவிட்டால் உனக்கு மரணம் கிடையாது. விரைவாகப் போய் வா மகனே என்று துரிதப்படுத்தினாள் காந்தாரி. அப்படியே தாயே என்று ஆனந்தமாக தடாகத்தை நோக்கி ஓடினான் காந்தாரி மைந்தன். அதேவேளை பாண்டவர் பாசறையில் இருந்த கண்ணனின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. துரியோதனின் பாசறையில் காந்தரிக்கும் துரியோதனனுக்கும் நடந்த உரையாடல்கள் எல்லாம் சர்வ வியாபியான கண்ணன் அறிந்துகொண்டான். காந்தாரியின் கற்பின் ஆற்றலையும், அவளுடைய பதிவிரதா தர்மத்தின் பவித்ரத்தையும் அறிந்த கண்ணன் கவலைப்படலானான். கடவுளான கண்ணனே கவலைப்படுவதா? ஆம்; காந்தாரியின் கற்பு எதையும் செய்யவல்லது. காந்தாரியின் திட்டப்படி துரியோதனன் தடாகத்தில் நீராடிவிட்டு பிறந்த மேனியோடு வந்து அவளுடைய நயன தீட்சையையும் ஆசிகளையும் பெற்றுவிட்டால் அவனை யாருமே வெல்ல முடியாது.

பதிவிரதா தர்மத்தின் முன்பாக பார்த்தசாரதியான கண்ணனாலும் எதும் செய்யமுடியாது. பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தலும் சபதமும் மாதவனுடைய மனதில் தோன்றுகிறது. பாண்டவதூதன் கண்ணன் பாசறைக்கு வெளியே வந்து தடாகத்தை நோக்கி விரைந்தான். நட்ட நடுநிசி. யாரும் அறியாமல் மறைவான இடத்தில் நின்றான் மாயக்கண்ணன். காந்தாரி மைந்தன் தடாகத்தில் மூழ்கி நீராடியபின் பிறந்த மேனியுடன் நீர்த்திவலைகள் உடம்பில் வழிய மேலே எழுந்தான். அப்போது மெல்லிய குழலோசை கேட்கிறது. என்ன இது! இந்த நள்ளிரவில் யார் குழலை இசைக்கிறார்கள்? எல்லாம் அந்த மாயாவி கிருஷ்ணன் வேலையாகத் தான் இருக்கும் அவர் வருவதற்குள் தாயிடம் சென்று விட வேண்டும் என்று துடிப்புடன் கிளம்பும் போது. கபடமாகச் சிரித்தபடி எதிரிலே வந்து நின்றான் கண்ணன். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான் துரியோதனன். கவுரவக் குலத் தோன்றலே! என்ன இது? ஏனிந்த அவலம்? எதற்காக இந்த விபரீத விளையாட்டு! எல்லா சாஸ்திரங்களும் அறிந்தவன்தானே நீ? இந்த மதியீனமான காரியம் செய்ய எப்படித் துணிந்தாய்? என்றான் கண்ணன்.

கண்ணா! நேரத்தை வீணாக்காமல் வழியே விடு நான் உடனே என் தாயைக் காணவேண்டும். இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடு என்றான் வெறுப்போடு. துரியோதனா! நீ செய்யும் காரியம் சரியானது அல்ல. என்னதான் தாயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. தோளுக்குமேல் போனால் தோழன் என்பார்கள். இத்தனை வயது கடந்த ஆண் மகன் பிறந்தமேனியோடு எந்தப் பெண்ணையாவது பார்ப்பானா? உன் வீரமும் ஆற்றலும் எங்கே போயிற்று? நீ செய்யும் இந்தக் கேவலமான காரியம் பெண்மையையே இழிவுபடுத்துவதாக உள்ளதே! என்றான் கண்ணன் விஷமச் சிரிப்போடு.துரியோதனன் ஒரு வினாடி குழம்பி, கண்ணா, என்னிடம் தற்போது ஆடை எதுவுமே இல்லை என்றான் பரிதாபமாக. கண்ணன் அவசரமாக, துரியோதனா, கவலையை விடு. பக்கத்தில் உள்ள வாழை இலையைப் பறித்து உனது இடுப்பில் மட்டுமாவது மறைத்துக்கொண்டு உன் மாதாவிடம் செல் என்று சொல்லிவிட்டு தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தான்.

அம்மா, அம்மா, என்று கூவியபடி ஆவலோடு வந்தான் துரியோதனன் மகனின் குரலைக் கேட்ட காந்தாரி, மகனைப் பார்த்து அருளைப் பொழிய வேண்டும் என்று தன் கண்களில் கட்டுகளை அவிழ்த்தாள். தன் சக்தியை எல்லாம் திரட்டி தன் மகனின் தலையிலிருந்து ஒவ்வொரு அங்கமாக தனது பார்வையைச் செலுத்திக்கொண்டே வந்த காந்தாரி, இடுப்பிற்குக் கீழே இலை ஒன்று மூடியிருப்பதைக் கண்டு தீயை மிதித்தவள் போல அதிர்ச்சியானாள். தனது கற்பின் சக்தியாலும், பதிவிரதா தர்மத்தின் ஆற்றலாலும் தன் மகனைக் காப்பாற்றிவிடலாம் என்று திடமாக நம்பி வந்தாள். காந்தாரியின் எண்ணம் பலிக்கவில்லை தனது பார்வை படமுடியாத இடுப்பிற்குக் கீழே துரியோதனன் தாக்கப்பட்டால் அவன் அழிவு நிச்சயம் என்பதை எண்ணி கண்ணீர் வடித்தாள். பதினெட்டாம் நாள் யுத்தம்,. பீமனுக்கும் துரியோதனனுக்கும் கடும் போர் எல்லாவித அஸ்திரங்களையும் கையாண்ட பிறகு கதாயுத யுத்தம் தொடங்கியது. துரியோதனனுடைய கதையைத் தாக்கினான் பீமன்.

அவனுடைய கதாயுதம் மேலே எழும்பிற்று. அதைப் பிடிப்பதற்காக துரியோதனன் மேலே எம்பிப் பாய்ந்தான். இந்தத் தருணத்தில் கண்ணன் தனது தொடையைத் தட்டி சைகை காட்டி, துரியோதனனின் தொடையில் அடிக்கும்படி பீமனுக்கு உணர்த்தினான். ஆகாயத்தின் உயர்ந்த அரவக் கொடியோன் கதையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கும்போது பீமன் அவனது தொடையில் தன் கதையால் ஓங்கி அடித்தான். அலறித் துடித்துக்கொண்டு கீழே விழுந்த துரியோதனன் தன் உயிரை விட்டான். திரவுபதியின் கற்பின் ஆற்றல் துரியோதனனின் முடிவிற்கு சபதம் இட்டது. காந்தாரியின் கற்பின் சக்தி அவனைக் காப்பாற்ற முயன்றது. பாரதப் போர் தொடங்குவதற்கு முன்பாக தருமபுத்திரன், துரியோதனன் இருவரும் காந்தாரியை வந்து வணங்கும்போது, எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம் என்று ஆசி கூறிய காந்தாரியின் வாக்கு பொய்யாகாமல் பலித்துவிட்டது!

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar