பக்தர்களை வா என்றழைத்து அருள்புரியும் சுந்தரராஜப்பெருமாள், சிவகங்கை மாவட்டம் வேம்பத்துாரில் குடிகொண்டிருக்கிறார். இவரை வழிபட்டே சங்கப்புலவர்கள் கவிபாடும் ஆற்றல் பெற்றனர். இங்கு தரப்படும் மந்திர விபூதியைப் பூசினால் நோய் தீரும். கவிகால ருத்ரர் என்னும் புலவரின் கனவில் தோன்றிய பெருமாள் அடியெடுத்துக் கொடுத்து பாட அருள்புரிந்தார். பெருமாளைத் தங்கள் ஊரிலேயே தங்கும்படி புலவர் வேண்ட சுவாமியும் ஏற்றார். அதனடிப்படையில் பாண்டிய மன்னர் ஜடாவர்ம குலசேகரன் இக்கோயிலைக் கட்டினார். சுந்தரராஜப்பெருமாள் என சுவாமிக்கு திருநாமம் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் சிதிலமடைந்த கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ‘ஆகூய் வரதராக’ இங்கு சுவாமி அருள்புரிகிறார். ‘இடதுகையால் வா என அழைத்து வலதுகையால் அருள்புரிபவர்’ என்பது பொருள். இடதுகை விரல்களை வளைத்து பக்தர்களை அருகில் அழைத்து வலது கையால் வரம் தரும் விதமாக அபய முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. மார்பில் மகாலட்சுமி இருக்கிறாள். பூமிதேவி, நீளாதேவி அருகில் உள்ளனர். இங்கு தரிசித்தவருக்கு வைகுண்டத்தை தரிசித்த புண்ணியம் சேரும் என்பதால் இத்தலம் ‘விண்ணகரம்’ எனப்படுகிறது. இக்கோயிலில் சுதர்சன சக்கரத்தை விபூதியில் வைத்து விஷ்ணு சகஸ்ர நாமம், சுதர்சன மந்திரங்களை ஜபிக்கின்றனர். சாயந்தர பூஜை முடிந்ததும் நோய் தீர்க்கும் பிரசாதமான மந்திர விபூதி தரப்படுகிறது. ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்ற அடிப்படையில் இந்த விபூதி தரப்படுகிறது. விருப்பம் நிறைவேற வராகருக்கு பூப்பந்தல் அல்லது பூச்சொரிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஹயக்ரீவர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், சுந்தரராஜ விநாயகர், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமிக்கு சன்னதிகள் உள்ளன. பாண்டிய மன்னரின் சார்பாக 2008 அந்தணர்களுக்கு தானம் செய்ய ஏற்பாடானது. எண்ணிக்கையில் ஒருவர் மட்டும் குறைந்ததால், வேம்பத்துார் குளக்கரை விநாயகரே அந்தணராக வந்து தானம் பெற்றார். இதனடிப்படையில் குளக்கரை விநாயகரோடு மற்றொரு விநாயகரும் இருக்கிறார். ‘இரண்டாயிரத்தெண் விநாயகர்’ என்னும் இவரை நீரில் மூழ்க வைத்து வருணஜபம் செய்தால் மழை பொழியும். ‘இரண்டாயிரத்தெண்’ என்பதற்கு இரண்டாயிரத்து எட்டு என்பது பொருள். செல்வது எப்படி: மதுரை – ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பில் இருந்து 8 கி.மீ.,