மலைப்பாதை ஒன்றில் பலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கண்களுக்கு ஒரு சிலை தென்பட்டது. உலோகத்தால் ஆன அந்தச் சிலையின் வலது கை மட்டும் நீண்டிருந்தது. அதன் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற விரல்கள் மடங்கியிருந்தன. அதற்கு அருகே, ‘சரியான இடத்தில் என்னை அடியுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது’ என்று எழுதியிருந்தது. இதை படித்த பலரும் ஆர்வமாக சிலையின் கை, கால், தலையில் அடித்தார்கள். ஆனாலும் உறுதியான அந்தச் சிலைக்கு ஒன்றும் ஆகவில்லை. ஒருகட்டத்தில் அவர்கள் சோர்வடைந்தனர். அதில் ஒருவர் மட்டும் மீண்டும் அந்த வாசகத்தை படித்தார். ‘சிலையின் ஆட்காட்டி விரல் எதையோ சுட்டிக் காட்டுகிறதே’ என்று சிந்தித்தார். மறு நிமிடமே விரல் காட்டிய இடத்தை தோண்டினார். புதையல் கிடைத்தது. உங்களுக்கும் இதுபோன்ற புதையல் வேண்டுமா? மாத்தி யோசியுங்கள். ஆம்! பிறர் செல்கிறார்களே என்று அதே பாதையில் செல்லாதீர்கள். ‘இந்தப் பாதையில் நம்மால் பயணிக்க முடியுமா?’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து விட்டால் போதும். வெற்றி என்னும் புதையல் உங்களுக்குத்தான்.