பதிவு செய்த நாள்
10
நவ
2022
01:11
ஐப்பசிமாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக, அன்னாபிஷேகத்தின்போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது. சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும். இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு.! நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர். அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது. நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம். பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.