பதிவு செய்த நாள்
20
மே
2023
06:05
படைக்கும் கடவுள் பிரம்மாவிற்கு திடீரென்று ஒரே சோர்வாக இருந்தது. இதென்ன வேலை. முடிவே இல்லாமல் பிரஜைகளை உருவாக்கி, அவர்களுக்குத் தலையெழுத்து எழுதி, வரங்கள் அளித்து, பிறகு அந்த வரங்கள் மூலம் எனக்கே துன்பம் வந்தால் பகவானை அண்டுவது என்று இப்படியே காலம் கழிகிறதே. எல்லோருக்குமே பிறப்பிலிருந்து விமோசனம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார். பிரம்மா கண்ணை மூடி நீல வண்ணனாம் நாராயணனை குறித்துப் பிரார்த்தனை செய்ய, உடனே பகவான் அவரை பூரி க்ஷேத்திரத்திற்கு வரச் சொன்னார். பிரம்மாவும் ஹம்ச வாகனத்தில் கிளம்பிச் சென்றார். அங்கு புருஷோத்தமன் ஒரு குளக்கரையில் இளைப்பாறிக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது ஆச்சர்யமான காட்சி ஒன்றைக் கண்டார். ஒரு காகம் அதிவேகமாக பகவானை நோக்கிச் சென்று வணங்கியது. பிறகு, குளத்தில் மூழ்கி, தேஜோமயமான ரூபத்துடன் எழுவதைக் கண்டார். நான்கு கைகளில் சங்கு, சக்கரம் என்று நாராயண சொரூபத்துடன் மோட்சம் பெற்ற அந்த உருவத்தைப் பார்த்து பிரம்மா வியந்தார். பூரியில் உள்ள ஜகன்னாதனை சேவித்து ஒரு காகம் மிகச் சுலபமாக மோட்சம் பெற்றதைப் போன்று சுலபமான மோட்ச வழி வேறு ஒன்றும் இல்லையென்று நினைத்தார்.
அந்த சமயம் மூச்சிரைக்க ஒருவர் ஓடி வருவதைக் கண்டார். அவர் உயிரைப் பறிக்கும் கடவுளான எமதர்மன். எமதர்மன் பகவான் முன் வணங்கி, பகவானே பாபம் செய்பவர்களின் விதி என்னால் முடிகிறது. இந்த வயதான ஒரு பிராமணனான காகம் மிகவும் பாபம் செய்துள்ளது. இந்த பிராமணனை நான் பிடிக்க வரும்போது இறந்த காகத்தின் <உடம்பில் புகுந்து <பறந்து <உங்களை வணங்கி, குளத்தில் மூழ்கி அவன் ஆத்மாவிற்கு முக்தி கிடைத்துள்ளது. இது எப்படி சாத்தியம்? என்று கேட்டான். பிரம்மா, பூரியில் நீ நுழைய முடியாதே. பகவான் கட்டளை அப்படித்தானே என்று யமனைக் கேட்டார். அவரைப் பார்த்த யமன், அடடே, பிரம்மாவா? நீங்கள் உங்களுக்குத் தோன்றியதை எல்லோர் தலையிலும் எழுதி விடுகிறீர்கள். <உங்கள் தலையெழுத்தை நான் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கு நடுவில் விதியை பகவான் கருணையால் பலர் வென்று விடுகிறார்கள். என்னால் என் வேலையை பிறகு எப்படிச் செய்ய இயலும்? என்று புலம்பினார். பிறகு பகவானிடம், பிரபோ, என் வேலையை ஒழுங்காகச் செய்ய விடுங்கள். பாபம் செய்பவர்களுக்கு மோட்சம் கொடுத்து, என்னை கையாலாகாதவனாக ஆக்காதீர்கள் என்று யமன் வேண்டினான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாராயணன் திரு மார்பில் உறையும் லட்சுமிதேவி, யமதர்மா, நீ ஏன் உன் வேலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்கிறாய். சித்திரகுப்தன் மற்றும் யம கிங்கரர்கள் உங்கள் வேலைகளைக் குறைக்கிறார்களே. இதே மாதிரி தான் பிரம்மா உனக்கும். நீ ஏன் படைக்கும் வேலையைச் செய்வது மிகவும் கடினம் என்கிறாய்?
இந்த உலகமே நாராயணன் வயிற்றில் உள்ளது. அவர் உன் கையிலிருந்து காணாமல் போன வேதங்களை மீட்டுக் கொடுத்துள்ளார். அவருடைய தொப்புள் கொடியிலிருந்து தோன்றிய உன்னை ஒரு தாயார் போல் கவனித்துக் கொள்கிறார். இப்படி ஒரு பக்கபலம் இருக்கும் போது நீ ஏன் உன் வேலையைச் சரிவரச் செய்ய முணுமுணுக்க வேண்டும்? என்றாள். யமதர்மன், பிரம்மா இருவரிடமும் இதமாகப் பேசினாள். பிறகு லட்சுமி தேவி அவர்கள் இருவருக்கும் ஒரு காட்சியைக் கவனிக்கச் சொன்னாள். அவள் காட்டிய திசையில் இரு உருவங்கள் கோபுரத்தைத் தாங்குவது போல் கட்டப்பட்டிருந்தது. இந்த உருவங்களா நிஜமாக கோபுரத்தைத் தாங்குகின்றன? அதே போல் படைப்பது, அழிப்பது இரண்டுமே உங்கள் இஷ்டத்திற்கு செய்யக் கூடியவை அல்ல. இந்த <உலகத்தை சிருஷ்டித்தவன் ஸ்ரீமந்நாராயணன். அவருக்கு அந்த வேலையில் துணைபுரிய எவரும் கிடையாது. சுயமாக அவனே எல்லாவற்றையும் செய்யக் கூடியவன். படைக்கும் பிரம்மாவிற்கும், அழிக்கும் யமனுக்கும் பலமாக இருந்து செயல்படுபவனும் அவனே என்றாள்.
லட்சுமி தேவி இப்படிக் கூறியபிறகு பிரம்மா, யமன் இருவருமே தங்கள் தவறினை உணர்ந்து தலைகுனிந்தனர். பிறகு லட்சுமி தேவி, பிள்ளைகளே, சஹஸ்ரநாமத்தைப் புரிந்து கொண்டால் சோர்வே வராது. பகவான் பூதக்ருத் என்று அழைக்கப்படுகிறார். ஸஹஸ்ர நாமத்தின் பூதக்ருத் என்ற வார்த்தைக்கு படைப்பவன் என்று பொருள். நீங்கள் இருவருமே நாராயணன் துணையில்லாமல் எதுவும் செய்யமுடியாது. பூதக்ருத் என்ற நாமத்தைக் கூறுவதன் மூலம் எவருக்குமே தாங்கள் செய்யும் வேலையில் சோர்வு வராது என்று நாராயணனின் மகிமையை விளக்கினாள். யமனும் பிரம்மாவும் திருப்தியுற்று தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள். நாமும் எப்போதும் உற்சாகத்துடன் வேலை செய்ய ஓம் பூதக்ருதே நம: என்று கூறி மகிழ்வோம்.