Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

12. இலக்கணையார் இலம்பகம்
முதல் பக்கம் » சீவக சிந்தாமணி
13. முத்தி இலம்பகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
04:09

கதைச் சுருக்கம்: விசயை தனக்குதவியாகத் தன்னோடு வந்த தவமகளிர்க்குக் கைம்மாறாகத் தன் பூசனைப் பயனையெல்லாம் ஈந்தனள். ஈமப் புறங்காட்டில் சண்பகமாலை என்னும் தோழியுருக்கொண்டு வந்து தனக்கப் பேருதவி செய்த தெய்வத்திற்குப் அப்புறங்காட்டில் கோயிலெடுத்து விழாக்கொண்டாடச் செய்தனள். சீவகன் பிறந்த இடத்தை அறக்கோட்டமாக்கினள். சுநந்தை விசயையைக் கண்டு தொழுதனள். அவளைப் பீடார் பெருஞ் சிறுவற் பயந்தீர் வம்மின் என்று விசயை மகிழ்ந்து வரவேற்றாள். தேவியரெண்மரும் முதலிய தேயிரெண்மரும் விசயை திருவடியில் வீழ்ந்து வணங்கினர். அவரை விசையை மனமுவந்து வாழ்த்தினள். பின்னர் விசயை சீவகனைக் கண்டு வாழ்த்தினள். சச்சந்தன் கழிகாமத்தாற் கேடுற்றான்; நீ அவன் போலன்றித் தீநெறி கடிந்து நன்னெறிச் சென்றுயர்வாயாக என்று அறவுரை கூறினள். யான் இனித் துறவின்பாற் செல்வேன் என்று தன் கருத்தைச் சீவகனுக் குணர்த்தினள். தாயின் பிரிவைக் கேட்கப் பொறாதவனாய்ச் சீவகன் மயங்கி வீழ்ந்தனன். விசயை அவனைத் தெளிவித்து அறவுரை பற்பல பகர்ந்து தேற்றினள். செல்வமும் இளமையும் யாக்கையும் நிலையுதலில்லதான ஆதலால் இவற்றின் மகிழாமல் நாளும் நல்லறமே நாடிச் செய்தல் வேண்டும் என்று நவின்றாள். இவற்றைக் கேட்ட சுநந்தை தானும் துறவறஞ் சேர்தற்குத் துணிந்தனள். அதுகண்ட சீவகனும் தேவிமாரும் கலங்கி அழுதனர். சுநந்தையோடு விசயை ஆயிரம் மகளிர் புடைசூழப் பம்மை கோயிலை எய்தினள். பம்மையடிகளார் துறவு நெறியருள யாவரும் துறவுபூண்டனர். அணிகலன்களை அகற்றினர் ;கூந்தல் உகுத்தனர் வெண்டுகிலுடுத்தனர். மெய்ந்நூற் பொருளை யுணர்ந்தனர். புகழுகுரைக்கு மகிழாராய் இகழுரைக்கு இரங்காராய் எப்பொழுதும் ஒரு தன்மையராயினர். சீவகன் சென்று அவரடி வீழ்ந்து சின்னாளேனும் இவணிருத்தல் வேண்டும் என்று வேண்டியான்.

பின்னர் அமைச்சர் சீவகனை இன்பத்திலே மயங்கும்படி செய்யமுயன்றனர். நீராட்டி லீடுபடச் செய்தனர். பருவத்திற்கேற்ற இன்ப நுகர்ச்சியில் ஈடுபடுத்தினர். இந்தக் காலத்தே கோப்பெருந்தேவியர் வயிறு வாய்த்து ஆண்மக்களைப் பயந்தனர். அம்மக்கட்கு நிரலே சச்சந்தன், சுதஞ்சணன், தரணி கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் எனப் பெயரிடப்பட்டது. அம்மக்களெல்லாம் கலைபயின்று சிறந்தனர்; சீவகன் முப்பதாண்டகவை யுடையனாயினன். இங்ஙனமிருக்க ஒருநாள் சீவகசாமி பொழிலின்ப நுகரச் சென்றான். தேவியருமுடன் சென்றனர். அவர்களுடன் மன்னவன் விளையாடி ஆங்கொரு வருக்கை நீழலிற் சென்று தமியனாயிருந்திளைப்பாறினான். அம் மரத்தின் மிசையிருந்த மந்தியொன்று தன் கடுவனொடு ஊடிற்று. அக்கடுவன் அதனை இனியன பலகூறி ஊடலுணர்த்தியது. அளிந்த பலாப்பழம் ஒன்றனைப் பறித்துக் கொணர்ந்து மந்தி அக் கடுவனுக்குக் கொடுத்தது. அப்பொழுது ஆண்டுவந்த சிலதன் ஒருவன் அவற்றைக் கடிந்து ஓட்டிவிட்டு அப்பலாப்பழத்தைக் கவர்ந்துண்டனன். இந் நிகழ்ச்சியைக் கண்ட சீவகன் உலகியலை வெறுத்தான். ஆ! ஆ!! கைப்பழமிழந்த மந்தியை ஒத்தான் கட்டியங்காரன் ; அவனை அலைத்து அரசினைக் கைப்பற்றிய யான் இச் சிலதனையே ஒத்தனன். மெலியோரை வலியோர் நலிந்துண்டலே இவ்வுலகியலாயிற்று. இவ்வுலகின்கட் பிறத்தல் இளிவரவுடைத்து. யான் இனி நோற்றுத் துறக்கம் புகுதலே சால்புடைத்து - ஆகூழான் எய்திய மனைவியரும் மக்களும் போகூழ் தோன்றிற் பிரிதல் ஒருதலை. இனி நல்லறம்பற்றித் துறந்து போகுவல் என்று துணிந்தனன்.

சாரணர்பாற் சென்ற தனக்கு அறங்கூற வேண்டினன். ஒரு சாரணர், சீவகனுக்குயாக்கைய தருமையும் அதன் நிலையாமையும் அதனாலுறும் துன்பமும் விளங்க விரித்துரைத்தனர். நால்வேறு கதிகளின் இயல்புகூறத் தொடங்கி முன்னர்நரக கதித்துன்பமிவையென நவின்றார். பின்னர் விலங்குப் பிறப்பிலுறும் இன்னல்களை விரித்துரைத்தனர். பின்னர் மக்கட்பிறப்பில் எய்தும் துன்பமெல்லாம் விளக்கினர். பின்னர்த் தேவகதியினியல்பிற்றெனத் தெரித்தோதினர். சீலம் தானம் என்பவற்றை விளக்கினர். வீட்டியல்பிற்றென விளக்கினார். சாரணர் மெய்ம்மொழி கேட்ட சீவகன் தனது பழம்பிறப்பு வரலாற்றினை உணர்த்தும்படி வேண்டினன். சாரணரும் சீவகன் பழம்பிறப்பில் அசோதரனாகத் தோன்றினமையும், மனைவியர் பொருட்டு அன்னப் பார்ப்பினைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தமையும் அப்பிறப்பிற் றவஞ் செய்து இந்திரனாயதும், பின்னர் இப்பிறப்புற்றதும் அன்னப் பார்ப்பைச் சிறையிட்டமை யால் இப் பிறப்பிற் பற்றலராற் பற்றப்பட்டமையும் விளக்கிச் சென்றனர். சாரணர்பால் அறவுரை கேட்டுப் பழம்பிறப்புணர்ந்த சீவகன் விரைந்து துறவு பூண விழைந்தான். நட்தட்டனை அரசாட்சியை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினன். அவனும் துறவுள்ளமுடையவனாய் அதற்கிணங்கிலன். ஆதலால் தன் மூத்தமகனாகிய சச்சந்தனை யழைத்து அரசியலறமெலாம் நன்கு விளக்கிக்கூறிக் கோமுடி கவித்தனன்.நந்தட்டன் மைந்தரைக்குறுநில மன்னர்களாக்கினன்.

இவ்வாறியற்றிய பின்னர், காந்தருவதத்தை முதலிய மனைவியர்க்குத் தான் துறவறம்புகக் கருதியதனை அறிவித்தான். அவரெல்லாம் ஆற்றொணாது அழுது புலம்பினர். நகரமெல்லாம் அழுகுரல் நிரம்பியது. ஆடலும்பாடலும் அவிந்தன. அவரை யெல்லாம் சீவகன் அறவுரைகளால் தெருட்டித் தேற்றினன். தேவியர் தாமும் தவஞ்செய்யத் துணிந்தனர். அவரை விசயைபாற் சேர்த்து ஆண்டுத் தவஞ்செய்யப் பணித்தனன். தேவர்கள் சீவகசாமியைச் சிவிகையிலேற்றிச் சமவ சரணத்தை எய்தினர். ஆண்டுச் சீவகன் துறவுக் கோலங்கொண்டனன். அருகக் கடவுளை வணங்கினன். ஆண்டுச் சுதஞ்சணன் வந்து சீவகனைக் கண்டு சென்றான்.நந்தட்டன் முதலானோரும் நோன்பியற்றித் தூயராகினர். மகதவேந்தன் சீவகன் தவநிலை கண்டு வியந்தான். ஒரு முனிவரால் அவன் பெருமையை உணர்ந்தனன் அம் மன்னவன். தேவியரும் இறை நெறிநின்று மெய்யுணர்ந்து வீடு பெற்றனர். சீவகன் முத்தி பெறுதற்குரிய காலமும் நண்ணிற்று. விண்ணும் மண்ணுந் தொழும்படி கேவலஞானமென்னும் மடந்தையை மணந்தனன்; அவளை என்றென்றும் பிரியாமல் இன்பப்பெருங்கடலுள் அழுந்தினான்.

1. விசயமாதேவியார் துறவு

2599. நீரேந்தி நெய்ம்மிதந்து நிணம்வாய்ப் பில்கி யழல்விம்மிப்
போரேந்திப் பூவணிந்து புலவுநாறும் புகழ்வேலோன்
காரேந் திடிமுரச மார்ப்பக் காய்பொற் கலன்சிந்திப்
பாரேந்திச் செல்லுநாட் பட்ட தாநாம் பகர்வதே.

பொருள் : நெய் மிதந்து - நெய் மிதந்து கிடக்கப்பட்டு; அழல் விம்மி - சீற்றத்தீ நிறைந்து; போர் ஏந்தி - போர்த்தொழிலை மேற்கொண்டு; நிணம் வாய்ப் பில்கி - நிணத்தை வாயினின்றும் சிறு துவலையாகவிட்டு; நீரேந்தி - மண்ணும் நீராடி; பூ அணிந்து - மலர் அணிந்து; புலவு நாறும் புகழ வேலோன் - புலால் கமழும் புகழ்பெற்ற வேலோன்; கார் ஏந்து இடி முரசம் ஆர்ப்ப - முகில் ஏந்தின இடிபோலும் தியாக முரசு முழங்க; கலன் சிந்தி - பூண்களை வரையாமற் கொடுத்து; பார் ஏந்திச் செல்லும் நாள் - நிலவுலகைக் காத்துச் செல்லும் நாளிலே; பட்டது ஆம் நாம் பகர்வது - பிறந்தது ஒரு செய்தி நாம்மேற் கூறுகின்றது.

விளக்கம் : வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற (தொல். புறத்திணை, 13) என்று உழிஞையிலும், மாணார்ச்சுட்டிய வாள்மங்கலமும் (தொல். புறத்திணை, 36) என்று பாடாண்டிணையிலும் கூறிய வாளினை வாகைத்திணையிற் கூறாது, பெரும்பகை தாங்கும் வேலினாலும் (தொல். புறத். 21) என்று வேலிற்கே வாகை கூறியது, காவல் தொழில்பூண்ட மாயோன் ஐம்படையும் போலாது, அழித்தற் றொழிலோர்க்கே உரித்தாய், முக்கட் கடவுளும் முருகனும் கூற்றும் ஏந்தி வெற்றிபெறுதற்குச் சிறந்த தென்பதுபற்றிப் புறத்திணையியலுட் கூறினமையால், ஈண்டும் வேலினை வியந்து மண்ணுநீராட்டின வெற்றியைக் கண்டோர் புகழ்தலின், புகழ்வேல் என்றார். இது கட்டியங்காரன் பட்டபின் பகையரசரை வென்றமை கூறிற்று. அழல் - நெருப்பு; ஈண்டுச் சினநெருப்பு. அணிந்து - அணியப்பட்டு. வேலோன் : சீவகன். காய்பொன் : வினைத்தொகை. முரசு - அறமுரசு; பட்டது - நிகழ்ந்த செய்தி. ( 1 )

2600. விண்பாற் சுடர்விலக்கி மேகம் போழ்ந்து விசும்பேந்தி
மண்பாற் றிலகமாய் வான்பூத் தாங்கு மணிமல்கிப்
பண்பால் வரிவண்டுந் தேனும்பாடும் பொழிற்பிண்டி
யெண்பா லிகந்துயர்ந்தாற் கிசைந்த கோயி லியன்றதே.

பொருள் : விண்பால் சுடர் விலக்கி மேகம் போழ்ந்து - விண்ணிலே முகிலைப் பிளந்து, இருசுடரையும் விலக்கி ; விசும்பு ஏந்தி - வானினும் மேலாய்; மண்பால் திலகமாய் - நிலவுலகிற் கோயில்கட்குத் திலகமாய்; வான்பூத்தாங்கு மணி மல்கி - வான் மீனைப் பூத்தாற்போல மணிகள் மல்குதலாலே ; பண்பால் வரி வண்டும் தேனும் பாடும் பொழில் பிண்டி - பண்ணிற் பொருந்திய பாட்டை வண்டும் தேனும் பாடுகின்ற பொழிலாகிய அசோகிற்குள்ளே; எண்பால் இகந்து உயர்ந்தார்க்கு - காதி முதலிய எட்டுக் கன்மங்களின் நீங்கி எட்டுக் குணங்களால் உயர்ந்த அருகற்கு; இசைந்த கோயில் இயன்றது - பொருந்திய கோயில், அரசன் ஏவலாலே சமைந்தது.

விளக்கம் : சுடர் - ஞாயிறும் திங்களும். விசும்பு - வானவருலகு. திலகம் - மேலானது. ஆங்கு : உவமச்சொல். பண்பால் வரி - பண்ணின் கூறாகிய பாட்டு. தேன் - ஒருவகை வண்டு. பிண்டி - அசோகு. எண்பால் என்பதனை உயர்ந்து என்பதன் முன்னும் கூட்டுக. ( 2 )

2601. அடிசிற் கலங் கழீஇக் கருனை யார்ந்த வினவாளை
மடுவின் மதத்துணரா வாழைத் தண்டிற் பலதுஞ்சு
நெடுநீர்க் கழனிசூழ் நியமஞ் சேர்த்தி விழவ யர்ந்து
வடிநீர் நெடுங்கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே.

பொருள் : அடிசில் கலம் கழீஇ - அடிசில் ஆக்கும் கலங்களைக் கழுவுதலாலே; கருணை ஆர்ந்த இனவாளை - பொரிக்கறியை நுகர்ந்த திரளாகிய வாளைகள்; மடுவில் மதர்த்து உணரா - மடுவின்கண்ணே செருக்கிக் கரையேற அறியவாய்; வாழைத்தண்டில் பல துஞ்சும் - வாழைத் தண்டின் மேலே பலவுந் துயிலும்; நெடுநீர்க் கழனி சூழ் நியமம் சேர்த்தி - மிகு நீரையுடைய கழனி சூழ்ந்த ஊரை இறையிலியாக விட்டு; விழவு அயர்ந்து - திருநாளையும் இயற்றி ; வடிநீர் நெடுங்கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தார் - கூரிய பண்புடைய கண்ணாராகிய நாடக மகளிரின் கூத்தும் பாட்டும் வகுத்தனர்.

விளக்கம் : அடிசிலார்க்கும் கலம் என்க. கருணை - பொரிக்கறி. கரையேற உணராவாய் என்க. துஞ்சும் - உறங்கும். நெடுநீர் என்புழி - நெடுமை. மிகுதிகுறித்து நின்றது. நியமம் - ஊர் : ஆகுபெயர்; இறையிலி - காவலற்கு வரிகொடாமல் பயன்கொள்ளும் நிலம். அரசன் ஏவலின் அமைச்சர் இயற்றுவித்தார் என்றவாறு. ( 3 )

2602. அல்லி யரும்பதமு
மடகுங்காயுங் குளநெல்லு
நல்ல கொழும்பழனுங்
கிழங்குந்தந்து நவைதீர்த்தார்க்
கில்லையே கைம்மாறென்
றின்பமெல்லா மவர்க்கீந்தாள்
வில்லோன் பெருமாட்டி
விளங்குவேற்கண் விசயையே.

பொருள் : அல்லி அரும்பதமும் - அல்லி அரிசியால் ஆக்கிய உணவும்; அடகும் - கீரையும்; காயும் - காயும்; குளநெல்லும் - குளநெல்லும்; நல்ல கொழும் பழனும் - நல்ல வளமிகு பழமும்; கிழங்கும் - கிழங்கும்; தந்து நவை தீர்த்தார்க்கு - (தனக்குக்) கொடுத்துப் பசித்துன்பத்தைப் போக்கிய துறவிகட்கு; கைம்மாறு இல்லையே என்று - கைம்மாறாகக் கொடுத்தற்குரியவை இல்லையே என்று கருதி; வில்லோன் பெருமாட்டி விளங்கு வேல்கண் விசயை - சச்சந்தனின் பெருமாட்டியாகிய, விளங்கும் வேல்போலுங் கண்ணாள் விசையையானவள்; இன்பம் எல்லாம் அவர்க்கு ஈந்தாள் - (தான் கோயில் கட்டி வழிபாடு செய்த) பயன் எல்லாவற்றையும் அவர்க்குக் கொடுத்தாள்.

விளக்கம் : விசையை தானையுடன் தனித்து வாராமற் கூடப் போந்தமை பற்றி, நவை தீர்த்தார் என்றார்; அவர்கள் பொருள்கண் மேற் பற்றற்றவர்கள் ஆதலின், அவர்கள் செய்த உதவிக்குத் தன்னாற் செய்யலாம் உதவி இன்னது என்று கருதிக் கைம்மாறில்லை என்றார். ( 4 )

2603. தனியே துயருழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டு
ளினியா ளிடர்நீக்கி யேமஞ்சேர்த்தி யுயக்கொண்ட
கனியார் மொழியாட்கு மயிற்குங் காமர் பதிநல்கி
முனியாது தான்காண மொய்கொண்மாடத் தெழுதுவித்தாள்.

பொருள் : தனியே துயர் உழந்து - தனித்து வருத்தம் உறுகையினாலே; தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுள் - பையப் பைய வீழ்ந்த - சுடுகாட்டிலே; இனியாள் இடர் நீக்கி - இனியளாகிய விசயையின் இடரை நீக்கி; ஏமம் சேர்த்தி உயக்கொண்ட - காவலான இடத்திற் சேர்த்துப் பிழைப்பித்துக்கொண்ட; கனியார் மொழியாட்கும் மயிற்கும் - இனிய மொழியாளாகிய தெய்வத்திற்கும் மயிலுக்கும்; காமர் பதி நல்கி - விருப்புறும் கோயில் சமைத்து; முனியாது தான் காண - தான் எப்போதும் காணும்படி; மெய்கொள் மாடத்து எழுதுவித்தாள் - தனக்குரிய மாடத்திலே எழுதுவித்தாள்.

விளக்கம் : தெய்வத்திற்குக் கோயில் கட்டி மயிலைத் தன் மாடத்திலே எழுதுவித்தாள். ( 5 )

2604. அண்ணல் பிறந்தாங் கைஞ்ஞாற்
றைவர்க் களந்தான்பால்
வண்ணச் சுவையமுதல் வைக
நாளுங் கோவிந்தன்
வெண்ணெ யுருக்கிநெய் வெள்ள
மாகச் சொரிந்தூட்டப்
பண்ணிப் பரிவகன்றாள் பைந்தார்
வேந்தற் பயந்தாளே.

பொருள் : அண்ணல் பிறந்த ஆங்கு - சீவகன் பிறந்த இடமாகிய சுடுகாட்டிலே; ஐஞ்ஞாற்றைவர்க்கு ஆன்பால் அளந்து - ஐந்நூற்றைந்து குழந்தைகட்கு ஆவின்பால் அளந்து; நாளும் வண்ணச் சுவை அமுதம் வைக - எப்போதும் அழகிய சுவையுடன் கூடிய பருப்புச்சோறு நிலைபெற; வெண்ணெய் உருக்கி நெய் வெள்ளமாகச் சொரிந்து - வெண்ணெயை உருக்கி நெய்யை வெள்ளம்போலச் சொரிந்து; கோவிந்தன் ஊட்டப்பண்ணி - கோவிந்தன் ஊட்டும்படி செய்து; பைந்தார் வேந்தன் பயந்தாள் - பைந்தார் வேந்தனைப் பெற்றவள்; பரிவு அகன்றாள் - வருத்தம் நீங்கினாள்.

விளக்கம் : தோழர் ஐந்நூற்று நால்வர்க்கும் சீவகனுக்குமாக ஐந்நூற்றைந்து சிறுவர்கட்குப் பாலளந்தனர். கோவிந்தன் : நந்தகோன். பரிவு : இங்குக் கூறியன எல்லாம் செய்துமுடிக்கவேண்டும் என்னும் வருத்தம். ( 6 )

2605. தோடார் புனைகோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளைப்
பீடார் பெருஞ்சிறுவற் பயந்தீர் வம்மி னெனப்புல்லி
நாடார் புகழாளை நாண மொழிகள் பலகூறிக்
கோடாக் குருகுலத்தை விளக்கிட் டாளை விளக்கினாள்.

பொருள் : தோடு ஆர்புனை கோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளை - இதழ் பொருந்திய மலர்மாலையுடைய சுநந்தை வந்து தொழுதபோது, அவளை; பீடு ஆர் பெருஞ்சிறுவன் பயந்தீர் வம்மின் எனப் புல்லி - பெருமை பொருந்திய பெருமகனைப் பெற்றீர் வம்மின் என்று தழுவிக்கொண்டு; நாடு ஆர் புகழாளை - உலகம் புகழ்தற்குக் காரணமானவளை; நாண மொழிகள் பல கூறி - நாணுறும்படி புகழ்மொழிகள் பல உரைத்து; கோடாக் குருகுலத்தை விளக்கிட்டாளை - கெடாத குருகுலத்தை விளக்கிய சுநந்தையை; விளக்கினாள்- (விசயை) விளக்கமுறச் செய்தாள்.

விளக்கம் : தான் பெற்றவளாயினும் வளர்த்தவள் சுநந்தையே யாதலின் முகமனுரையால் இங்ஙனங் கூறினாள். இனிப், புகழாளைஎன்பதில், ஐ அசை என ஆக்கிப் புகழாள் விசையை என்பர் நச்சினார்க்கினியர் புகழ்மொழிகளால் நாணினாள். நாணியவள் சுநந்தை. சீவகனை வளர்த்ததனால் உலகு வாழச் செய்தவள் என விளக்கினாள். விளக்கிட்டாள் சுநந்தை. இது சுட்டுப்பெயர். ( 7 )

2606. மறையொன் றுரைப்பனபோன்
மலர்ந்து நீண்டு செவிவாய்வைத்
துறைகின்ற வோடரிக்க
ணுருவக் கொம்பி னெண்மரு
மிறைவி யடிபணிய
வெடுத்துப் புல்லி யுலகாளுஞ்
சிறுவர்ப் பயந்திறைவற்
றெளிவீ ரென்றா டிருவன்னாள்.

பொருள் : மறை ஒன்று உரைப்பனபோல் - மறைமொழி ஒன்றைக் கூறுவனபோல; செவி வாய் வைத்து - செவியிடத்தே வாய் வைத்து; மலாந்து நீண்டு உறைகின்ற ஓடு அரிக்கண் - மலர்ந்து நீண்டு வாழ்கின்ற செவ்வரியோடுகின்ற கண்களை யுடைய; உருவக்கொம்பின் எண்மரும் - அழகிய மலர்க்கொம்பு போன்ற எண்மரும்; இறைவி அடிபணிய - விசயையின் அடியைப் பணி; திரு அன்னாள் - திருமகள் அனைய அவள்; எடுத்துப் புல்லி - (அவர்களை) எடுத்துத் தழுவி; உலகு ஆளும் சிறுவர்ப் பயந்து - உலகு காக்கும் மக்களைப் பெற்றுப்(பின்); இறைவன் தெளிவீர் என்றாள் - அருகனைத் தெளிமின் என்றுரைத்தாள்.

விளக்கம் : எனவே, இருமைக்கும் பயன் கூறினாள். முன்பு திருவனையாள் என்க. சிறுவர்களில் நால்வர் உலகாளுதற்குரிரயல்லரேனும் தம் குலத்தொழிற்கேற்ப உலகாளுதற்குரியரென்பது பற்றி, உலகாளும் சிறுவர் என்றாள். மெய்தெரிவகையின் எண்வகை உணவின் (தொல். மரபு. 78) எனவும், கண்ணியுந் தாரும் எண்ணினர் ஆண்டே (தொல். மரபு. 79) எனவும் ஆசிரியர் கூறினமையின், தம் குலத்துக்குரிய உழுது பயன் கோடலும், அரசன் கொடுத்த சிறப்புக்களும் மன்றித் தன் புதல்வராதலின், அரசாட்சி முதலியன கொடுப்ப, அவர் தாமும் தம் வழித்தோன்றினோரும் ஆள்வரென்றுணர்க - என்பர் நச்சினார்க்கினியர். உலகு என்னுஞ்சொல், மண்ணுலகம் முழுதுமே அன்றி அதன் கண் கூறுபட்ட நிலங்களையும் உணர்த்தும் என்பது, மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். அகத்திணை. 5)என்னுஞ் சூத்திரத்தான் உணர்க. ( 8 )

2607. பொங்கு மணிமுடிமேற்
பொலிந்தெண் கோதைத் தொகையாகிக்
கங்குற் கனவகத்தே
கண்ணுட் டோன்றி வந்தீர்நீ
ரெங்கும் பிரியற்பீ
ரென்று கண்கண் மலர்ந்திருந்து
கொங்கு ணறும்பைந்தார்க்
கோமா னிங்கே வருகென்றாள்.

பொருள் : நீர் கங்குல் கனவகத்தே - நீர் இரவிலே கனவகத்தே; பொங்கும் மணிமுடிமேல் - ஒளி பொங்கும் மணிமுடியின் மேல்; பொலிந்து எண் கோதைத் தொகையாகி - விளங்கி எட்டுப் பூமாலைத் திரளாய்; கண்ணுள் தோன்றி வந்தீர் - கண்களிலே வெளிப்பட்டு வந்தீர்; எங்கும் பிரியற்பீர் - (அத்தகைய நீர்) எவ்விடத்தும் பிரியாதிருப்பீர்; என்று கண்கள் மலர்ந்திருந்து - என்றுகூறி கண்கள் மலர நோக்கியிருந்து; கொங்கு உண் நறும் பைந்தார்க் கோமான்! இங்கே வருக என்றாள் - மணம் பொருந்திய நல்ல மாலையணிந்த மன்னனே! இங்கே வருக என்று (சீவகனைக்) கூறினாள்.

விளக்கம் : முன்னர். இறைவற் றெளிவீர் (சீவக. 2606) எனவும் ஈண்டு, பிரியற்பீர் எனவுங் கூறினமையால், பின்னர் என்னிடத்தே வந்து துறப்பீர் என்றாளாயிற்று. ( 9 )

2608. சிங்க நடப்பதுபோற் சேர்ந்துபூத்தூய்ப் பலர்வாழ்த்தத்
தங்கா விருப்பிற்றம் பெருமான்பாத முடிதீட்டி
யெங்கோ பணியென்னா வஞ்சாநடுங்கா விருவிற்கட்
பொங்க விடுதவிசி லிருந்தான்போரே றனையானே.

பொருள் : பலர் பூத்தூய் வாழ்த்த - பலர் மலர் தூவி வாழ்த்த; சிங்கம் நடப்பதுபோல் சேர்ந்து - சிங்கம் நடப்பது போல நடந்து சென்று; தங்கா விருப்பின் தம் பெருமான் பாதம் முடி சூட்டி - அமையாத விருப்பத்துடன் விசயையின் அடியிலே முடியை வைத்து வணங்கி; எங்கோ பணி என்னா - எனக்குத் தகும் பணிவிடை இனி எங்கே என்று வினவியவாறு; அஞ்சா நடுங்கா - உள்ளம் அஞ்சி மெய்ந்நடுங்கி; இரு வில் கண் பொங்க இடுதவிசில் - இரண்டு விற்கிடை நீளம் அகல இட்ட அணையின் மேலே; போரேறு அனையான் இருந்தான் - போர்ச் சிங்கம் போன்றவன் இருந்தான்.

விளக்கம் : பெருமான் : னஃகான் ஒற்று மகடூஉ உணர்த்திற்று. அஞ்சியதும் நடுங்கியதும் எதிரில் இருத்தற்கு. இவள் கூறிய அறம் எல்லாம் தான் செய்து முடித்தலின், இன்னும் அவை உளவோ என்பது தோன்ற, எங்கோ பணி என்றான். ( 10 )

வேறு

2609. கொற்றவி மகனைநோக்கிக்
கூறின ளென்ப நுங்கோக்
குற்றத்தைப் பிறர்கள்கூற
வுணர்ந்தனை யாயி னானு
மிற்றென வுரைப்பக் கேண்மோ
விலங்குபூ ணலங்கன் மார்பிற்
செற்றவர்ச் செகுத்த வைவேற்
சீவக சாமி யென்றாள்.

பொருள் : கொற்றவி மகனை நோக்கி - விசயை மகனைப் பார்த்து; கூறினள் - கூறினாள்; இலங்கு பூண் அலங்கல் மார்பின் - விளங்கும் பூணும் மலர் மாலையும் அணிந்த மார்பினையும்; செற்றவர்ச் செகுத்த வைவேல்- பகைவரை வென்ற கூரிய வேலினையும் உடைய; சீவகசாமி!-சீவகசாமியே!; நும் கோக்கு உற்றதைப் பிறர்கள் கூற உணர்ந்தனையாயின் - நும் அரசற்கு நேர்ந்ததை மற்றோர் உரைக்க அறிந்தனை யெனினும்; நானும் இற்று என உரைப்பக் கேண்மோ - யானும் இத்தகைத் தென்று கூறக் கேட்பாயாக.

விளக்கம் : என்ப : அசை. உணர்ந்தனை என்ப எனக் கூட்டி, உணர்ந்தாய் என்பார்கள் என்றுரை கூறுவர் நச்சினார்க்கினியர். கேண்மோ : மோ : முன்னிலை அசை. சாமி என்னும் ஒருமை நும் என்னும் பன்மையொடு மயங்கிற்று ( 11 )

2610. நாகத்தால் விழுங்கப் பட்ட
நகைமதிக் கடவுள் போலப்
போகத்தால் விழுங்கப் பட்டுப்
புறப்படான் புன்சொ னாணா
னாகத்தா னமைச்சர் நுண்ணூற்
றோட்டியா லழுத்தி வெல்லும்
பாகர்க்குந் தொடக்க நில்லாப்
பகடுபோற் பொங்கி யிட்டான்.

பொருள் : நாகத்தால் விழுங்கப்பட்ட நகை மதிக் கடவுள் போல - பாம்பினால் விழுங்கப்பட்ட ஒளியை உடைய திங்களைப் போல; போகத்தால் விழுங்கப்பட்டு - பெண்ணின்பத்தாலே விழுங்கப்பட்டு; புறப்படான் - அதிலிருந்து வெளிவராதவனாகி; புன்சொல் நாணான் - இழிமொழிக்கு நாணமுறாமல்; தான் ஆக அமைச்சர் நுண் நூல் தோட்டியால் அழுத்தி - தான் ஆகிவிடவும் மேம்பாடடைய அமைச்சர்கள் நுண்ணிய நூல்களாகிய அங்குசத்தாலே அழுத்தவும்; வெல்லும் பாகர்க்குத் தொடக்க நில்லாப் பகடுபோல் பொங்கியிட்டான் - வெற்றியுறும் பாகர்க்குத் தொடக்கவும் நில்லாத களிறுபோற் காமத்தே பொங்கிவிட்டான்.

விளக்கம் : இது முதல் ஐந்து செய்யுட்கள் ஒரு தொடர். நாகம் - இராகுக்கோள். நகை - ஒளி. போகம் - நுகர்ச்சி. புன்சொல் - பழிச்சொல்; தான் ஆக என மாறுக. தான் என்றது. சச்சந்தனை. பொங்கியிட்டான் : ஒரு சொல். ( 12 )

2611. நுண்மதி போன்று தோன்றா
நுணுகிய நுசுப்பி னார்தங்
கண்வலைப் பட்ட போழ்தே
கடுநவை யரவோ டொக்கும்.
பெண்மையைப் பெண்மை யென்னார்
பேருணர் வுடைய நீரா
ரண்ணலைத் தெருட்ட றேற்றா
தமைச்சரு மகன்று விட்டார்.

பொருள் : நுண்மதி போன்று தோன்றா நுணுகிய நுசுப்பினார்தம் - நுண்ணறிவு போல வெளிப்படையாகத் தெரியாத சிற்றிடையாரின்; கண்வலைப் பட்ட போழ்தே - கண்ணாகிய வலையிற் பட்டபொழுதே; கடுநவை அரவோடு ஒக்கும் பெண்மையை - கொடிய குற்றத்தையுடைய பாம்பைப்போலுற்ற பெண்மையை; பேர் உணர்வு உடைய நீரார் பெண்மை என்னார் - பேரறிவுடைய பண்பினார் பெண்மை எனக் கூறார் (ஆகையினால்); அண்ணலைத் தெருட்டல் தேற்றாது - அரசனைத் தெருட்டவும் தெளியாமல்; அமைச்சரும் அகன்றுவிட்டார் - அமைச்சரும் நீங்கிவிட்டனர்.

விளக்கம் : நுண்மதி - நுண்ணறிவு - அறிவு அருவப் பொருளாகலின் இங்ஙனம் உவமையாக எடுத்தார். கண்வலை : பண்புத்தொகை. கடுநவை - கொடிய குற்றஞ் செய்தலையுடைய. அரவு பெண்மைக்குவமை. அண்ணல்; சச்சந்தன். ( 13 )

2612. கற்சிறை யழித்து வெள்ளங்
கடற்கவா யாங்குக் கற்றோர்
சொற்சிறை யழித்து வேந்தன்
றுணைமுலை துறத்தல் செல்லான்
விற்சிறை கொண்ட போலும்
புருவத்து விளங்கு வேற்க
ணற்சிறைப் பட்டுநாடு நகரமுங்
காவல் விட்டான்.

பொருள் : கல் சிறை அழித்து வெள்ளம் கடற்கு அவாய் ஆங்கு - கல்லாகிய அணையை அழித்து வெள்ளம் கடலை விரும்பிச் சென்றாற்போல; வேந்தன் - அரசன்; கற்றோர் சொல் சிறை அழித்து - கற்ற அமைச்சரின் சொல்லாகிய காவலை அழித்து; துணைமுலை துறத்தல் செல்லான் - இருமுலைகளின் இன்பத்தை விட்டு நீங்கானாகி; வில் சிறை கொண்டபோலும் புருவத்து விளங்கு வேற்கண் நல்சிறைப்பட்டு - வில்லைச் சிறைப்படுத்தினாற்போன்ற புருவத்தின்கீழ் விளங்கும் வேல் போன்ற கண்ணாகிய தப்பாத சிறையிலே அகப்பட்டு; நாடும் நகரமும் காவல் விட்டான் - நாட்டையும் நகரத்தையும் காப்பது ஒழிந்தான்.

விளக்கம் : கற்சிறை - கல்லணை. இது சான்றோர் கூறிய அறவுரைக்கு உவமம். வேந்தன் : சச்சந்தன். துறத்தல் செல்லான் : ஒரு சொல். நற்சிறை என்புழி நன்மைப்பண்பு கொடுமைப் பண்பின்மேனின்றது. நல்ல பாம்பு என்றாற்போல. ( 14 )

2613. பிளிறுவார் முரசத் தானைப்
பெருமகன் பிழைப்பு நாடிக்
களிறுமென் றுமிழப் பட்ட
கவழம்போற் றகர்ந்து நில்லா
தொளிறுவேற் சுற்ற மெல்லா
முடைந்தபி னொருவ னானான்
வெளிறுமுன் வித்திப் பின்னை
வச்சிரம் விளைத்த லாமோ.

பொருள் : பிளிறு வார் முரசத்தானைப் பெருமகன் பிழைப்பு நாடி - ஒலிக்கும், வாராலிறுகிய முரசுடைய தானையானாகிய அரசன் பிழையை எண்ணி; ஒளிறு வேல் சுற்றம் எல்லாம் - விளங்கும் வேலையுடைய அமைச்சர் முதலான சுற்றத்தார் எல்லோரும்; களிறுமென்று உமிழப்பட்ட கவழம்போல் தகர்ந்து - களிற்றினால் மென்று உமிழப்பட்ட உணவுபோலச் சிதறி; நில்லாது உடைந்தபின் - நிற்காமல் நீங்கிய பிறகு; ஒருவன் ஆனான் - அரசன் தனித்தவன் ஆனான்; முன் வெளிறு வித்திப் பின்னை வச்சிரம் விளைத்தல் ஆமோ? - முதலிற் பயன் அற்ற தீவினையை விதைத்துப் பின்னர்ப் பயனுடைய நல்வினையை விளைவித்தல் இயலாதன்றோ?

விளக்கம் : வேற்றுப்பொருள் வைப்பணி. ஆமணக்கு நட்டு ஆச்சா வாக்கலாகாது என்பது பழமொழி. ( 15 )

2614. வனைகலக் குயவ னாணின்
மன்னரை யறுத்து முற்றிக்
கனைகுர லுருமி னார்ப்பக்
காவல னின்னை வேண்டி
வினைமயிற் பொறியி னென்னைப்
போக்கிவிண் விரும்பப் புக்கான்
புனைமுடி வேந்த போவல்
போற்றென மயங்கி வீழ்ந்தான்.

பொருள் : வனைகலக் குயவன் நாணின் - வனைகலத்தைக் குயவன் தன்நாணலே அறுத்தல்போல; மன்னரை அறுத்து - வேந்தரைக் கீழறுத்துத் (தன் சுற்றத்தாராக்கிய பின்); முற்றி - அந்தப்புரத்தை முற்றுகையிட்டு; கனைகுரல் உருமின் ஆர்ப்ப - ஒலிக்குங் குரலாலே இடிபோலக் (கட்டியங்காரன்) ஆர்ப்ப; காவலன் நின்னை வேண்டி - அரசன் நீ பிழைப்பதை விரும்பி; என்னை வினைமயிற் பொறியின் போக்கி - என்னைத் தொழிற்பாடுடைய மயிற்பொறியிலே முதலிற் போக்கி; விண் விரும்பிப் புக்கான் - வீரருலகை விரும்பி அடைந்தான்; புனைமுடி வேந்த! - புனைந்த முடிமன்னனே!; போவல் - யான் துறவிற் செல்வேன்; போற்று என - (நீயும் இத்தகைய காமத்தை) அடக்குக என்றுரைக்க; மயங்கி வீழ்ந்தான் - சீவகனும் அதுகேட்டு மயங்கி விழுந்தான்.

விளக்கம் : அறுத்த - கீழறுத்து. முற்றி - முற்றுகையிட்டு. காவலன்:சச்சந்தன். நின் ஆக்கத்தைவேண்டி என்றவாறு. போவல் - துறத்தற்குப் போவேன். போற்று - போற்றுக. ( 16 )

2615. சீதநீர் தெளித்துச் செம்பொற்
றிருந்துசாந் தாற்றி தம்மான்
மாதரார் பலரும் வீச
வளர்ந்தெழு சிங்கம் போலப்
போதொடு கலங்கள் சோர
வெழுந்துபொன் னார மார்பன்
யாதெனக் கடிகண் முன்னே
யருளிய தென்னச் சொன்னாள்.

பொருள் : மாதரார் பலரும் - (அப்போது) மங்கையர் பலரும்; சீத நீர் தெளித்து - குளிர்ந்த நீரைத் தெளித்து; செம்பொன் திருந்து சாந்தாற்றி தம்மால் வீச - செம் பொன்னால் அழகுற அமைத்த சாந்தாற்றிகளால் வீசியதால்; வளர்ந்து எழு சிங்கம் போல - துயில்கொண்டு எழுகின்ற சிங்கம் போல; பொன் ஆர மார்பன் - பொன் மாலை பொருந்திய மார்பன்; போதொடு கலங்கள் சோர எழுந்து - மலரும் அணிகலனும் சோர எழுந்து; அடிகள் எனக்கு முன்னே அருளியது யாது என்ன - அடிகள் எனக்கு முன்னர்க் கூறியருளியது யாது என்று வினவ; சொன்னாள் - விசயை கூறினாள்.

விளக்கம் : சீதம் - குளிர்ச்சி. சாந்தாற்றி - ஒருவகை விசிறி. வளர்தல் - துயிலுதல். மார்பன் : சீவகன். அடிகள் : விளி. ( 17 )

2616. பிறந்துநாம் பெற்ற வாணா
ளித்துணை யென்ப தொன்று
மறிந்திலம் வாழ்து மென்னு
மவாவினு ளழுந்து கின்றாங்
கறந்துகூற் றுண்ணு ஞான்று
கண்புதைத் திரங்கி னல்லா
லிறந்தநாள் யாவர்மீட்பா
ரிற்றெனப் பெயர்க்க லாமே.

பொருள் : நாம் பிறந்து பெற்ற வாழ்நாள் இத்துணை என்பது - நாம் உலகிற் பிறந்து பெற்ற வாழ்நாட்கள் இவ்வளவு என்பதை; ஒன்றும் அறிந்திலம் - சிறிதும் அறியோம்; வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்துகின்றாம் - வாழ்வோம் என்கிற ஆசையிலே முழுகுகின்றோம்; கூற்றுக் கறந்து உண்ணும் ஞான்று - கூற்றுவன் வாழ்நாளைக் கறந்து உயிரை உண்ணும் போது; கண் புதைத்து இரங்கின் அல்லால் - (அஞ்சிக்) கண்ணைப்பொத்தி அழுவதை அன்றி; இறந்த நாள் யாவர் மீட்பார் - கழித்த நாட்களைத் திரும்ப யாவர் பெறுவார்?; இற்று எனப் பெயர்க்கல் ஆமோ? - இத் தன்மைத் தென்று நம்மால் மீட்க முடியாது.

விளக்கம் : இரங்குதல் : இப்பிறவித் துன்பத்தை நீக்குதற்குத் தவம் புரிந்திலமே என வருந்துதல். கழிந்த நாட்களை மீட்க விரும்புவது தவஞ்செய்தற்கு. ( 18 )

2617. சுமைத்தயிர் வேய்ந்த சோற்றிற்
றுய்த்தினி தாக நம்மை
யமைத்தநா ளென்னு நாகம்
விழுங்கப்பட்ட டன்ன தங்க
ணிமைத்தகண் விழித்த லின்றி
யிறந்துபா டெய்து கின்றா
முமைத்துழிச் சொறியப் பெற்றா
மூதியம் பெரிதும் பெற்றாம்.

பொருள் : சுமைத்தயிர் வேய்ந்த சோற்றின் - கட்டித் தயிரால் ஆக்கப்பெற்ற சோற்றை இனிதாக உண்பதுபோல; அமைத்த நாள் என்னும் நாகம் - (நம் வாழ்விற்கு) வைத்த நாட்கள் என்னும் பாம்பு; இனிதாக நம்மைத் துய்த்து விழுங்கப் பட்டு - இனிமையாக நம்மைச் சிறிது சிறிதாக உண்டு விழுங்கப்பட்டு; அங்கண் அன்னது இமைத்த கண் விழித்தல் இன்றி இறந்து பாடு எய்துகின்றாம் - அவ்விடத்தே அவ்வாழ்நாளை, இமைத்த கண் விழித்தற்கும் இயலாத அளவிலே கடந்து சாவெய்துகின்றோம்; உமைத்துழிச் சொறியப்பெற்றாம் ஊதியம் பெரிதும் பெற்றாம் - (எனினும்) தினவுற்றபோதே சொறியப் பெற்றோம் எனினும் ஊதியம் மிகவும் பெற்றவராவோம்.

விளக்கம் : ஈண்டு உமைத்துழிச் சொறியப் பெற்றாம் என்பது விழுங்குதற்கு வாய்க்கொண்ட காலம் சிறிது பொழுது விழுங்காதிருக்கவும் பெற்றோமாதலின் ஈண்டுத் தவம் செய்து கோடுமென எழுந்த மனவெழுச்சிக் கண்ணே அதனை முற்ற முடித்துக் கொள்ளப் பெற்றே மென்றவாறாம். ( 19 )

2618. கடுவளி புடைக்கப் பட்ட
கணமழைக் குழாத்தி னாமும்
விடுவினை புடைக்கப் பாறி
வீற்றுவீற் றாயி னல்லா
லுடனுறை பழக்க மில்லை
யொழிமதி யத்தை காதல்
வடுவுடைத் தென்று பின்னு
மாபெருந் தேவி சொன்னாள்.

பொருள் : கடுவளி புடைக்கப்பட்ட - கொடிய காற்றால் மோதப்பட்ட; கணமழைக் குழாத்தின் - திரளாகிய முகில் நிரைபோல; விடுவினை புடைக்க - தீவினை தாக்குதலால்; நாமும் பாறி வீற்றாயின் அல்லால் - நாமும் சிதறித் தனித்தனியே போவதல்லாது; உடன் உறை பழக்கம் இல்லை - ஓரிடத்திலே வாழும் பழக்கம் அதற்கு இல்லை; வடுவுடைத்து - (இத்தகைய) குற்றமுடையது (ஆதலால்); காதல் ஒழி - காதலை நீங்குவாயாக!; என்று - என்றுரைத்து; பின்னும் மாபெருந்தேவி சொன்னாள் - மேலும் விசயை கூறினாள்.

விளக்கம் : மதி, அத்தை : அசைகள். வளி - காற்று. கணம் - திரள். விடுவினை - போகூழ். பாறி - சிதறி. மாபெருந்தேவி : விசயை.
( 20 )

வேறு

2619. முருந்தனைய தூமுறுவன் முற்றிழையார் சேரி
யிருந்திளமைக் கள்ளுண் டிடைதெரித லின்றிக்
கருந்தலைகள் வெண்டலைக ளாய்க்கழியு முன்னே
யருந்தவமுந் தானமு மாற்றுமினே கண்டீர்.

பொருள் : முருந்து அனைய தூமுறுவல் முற்றிழையார் சேரி - மயிலின் இறகு அடியைப் போன்ற தூய முறுவலையுடைய அணிகல மணிந்த மகளிர் சேர்ந்த இடத்தே; இருந்து இளமைக் கள் உண்டு - இருந்து இளமையாகிய கள்ளைப் பருகி; இடை தெரிதல் இன்றி - அறம் முதலியவற்றை அறிதல் இன்றி; கருந்தலைகள் வெண்தலைகளாய்க் கழியும் முன்னே - கரியதலைகள் நரைத்து இறந்துபடுதற்கு முன்னே; அருந்தவமும் தானமும் ஆற்றுமின் - அரிய தவமும் தானமும் செய்யுங்கோள்.

விளக்கம் : கண்டீர் - வினாவொடு சிவணாது நின்ற அசை. முருந்து மயிலிறகின் அடிப்பகுதி. முறுவல் பல். இளமையின்பமாகிய கள் என்க. என்றது காமநுகர்ச்சியை. கருந்தலைகள் வெண்டலைகளாய்க் கழியுமுன் என்றது, இளமை தீர்ந்து மூப்பெய்திச் சாதற்குமுன் என்றவாறு ( 21 )

2620. உடற்றும் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட்
டடுத்துணர்வு நெய்யாக வாற்றறுவை யாகக்
குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே
கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர்.

பொருள் : உடற்றும் பிணித்தீ உடம்பின் - வருத்தும் நோயாகிய தீயையுடைய உடம்பிலே; உயிர் பெய்திட்டு - உயிரைச் சோறாக முன்னே பெய்திட்டு; அடுத்து உணர்வு நெய்யாக - பின்னர் உணர்வு நெய்யாக; ஆற்றல் துவையாக - ஆற்றலைத் துவையலாகக் கூட்டி; கூற்றம் குடித்து உண்ணும் - கூற்றுவன் உயிரைக் குடித்து உண்பான்; குடில் பிரியா முன்னே - (ஆகவே) உயிர் குடிலை விட்டு நீங்குவதற்கு முன்னே : கொடுத்து உண்மின் - கொடுத்து உண்ணுங்கோள்; குணம்புரிமின் - நற்பண்பை விரும்புமின்.

விளக்கம் : உயிர்போவதற்கு முன்னே உணர்வும் ஆற்றலும் தேய்தல் இயல்பு. பிணித்தீ - பிணியாகிய நெருப்பு. பெய்திட்டு ஒரு சொல். ஆற்றல் - வலிமை. துவை - துவையல்; ஒருவகைக்கறி. குடித்துண்ணும்; ஒரு சொன்னீர்மைத்து. குடில் - ஈண்டு உடம்பு.
( 22 )

2621. உழந்தாலும் புத்தச்சொன் றிட்டூர்த றேற்றா
திழந்தார் பலரா லிடும்பைநீர் யாற்று
ளழுந்துமா லப்பண்டி யச்சிறா முன்னே
கொழுஞ்சீலங் கூலியாக் கொண்டூர்மின் பாகீர்.

பொருள் : பாகீர் - (உடம்மை நடத்தும்) பாகர்களே!; உழந்தாலும் புத்தச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது - (உடலாகிய வண்டி) தொழில் செய்து பழையதாகி வருந்தினாலும் புதிய அச்சு ஒன்றை இட்டு நடத்த அறியாமல் இழந்தார் பலர் அவ்வுடல் வண்டியை இழந்தவர் பலர்; இடும்பை நீர் யாற்றுள் - துன்பமாகிய நீரையுடைய ஆற்றிலே; அப்பண்டி அழுந்தும் - அவ்வண்டி அழுந்தும்; அச்சு இறா முன்னே - பழையதாகி அச்சு ஒடிவதற்குமுன்; கொழுஞ்சீலம் கூலி ஆக் கொண்டு ஊர் மின் - நல்ல ஒழுக்கத்தை அவ்வண்டியை ஓட்டும் பயனாகக் கொண்டு செலுத்துமின்.

விளக்கம் : புதிய அச்சு இட்டு ஊர்தல் இயலாதாகலின் தேற்றாது என்றார். அச்சு : உயிர், புதிய அச்சு இடாமையாற் பழைய அச்சுள்ள வரை (வாழ்நாள் வரை) வண்டி ஓடும். எனினும், இடும்பையாகிய ஆற்றிற் செல்லும்போது வண்டி அழுந்தி அச்சுத் தேயாமுன்னரே ஒடிதலும் உண்டு. எனவே, அச்சுத்தேய்ந்தோ, இடும்பை யாற்றில் அழுந்தி ஒடிந்தோ போகுமுன்னரே வண்டியை ஓட்டுதற்குரிய கூலியைப்பெறுதல் வேண்டும். ( 23 )

2622. பிறந்தவர்க ளெல்லா மவாப்பெரிய ராகித்
துறந்துபுகழ் வேண்டாரோர் துற்றவிழு மீயா
ரறங்கரிது சேய்த்தென்ப தியாதுமறி யாரேல்
வெறும்பொருள தம்மா விடுத்திடுமி னென்றாள்.

பொருள் : பிறந்தவர்கள் எல்லாம் அவாப் பெரியராகி - பிறந்த மக்கள் எல்லோரும் பேராசையுடையராய் - புகழ் வேண்டார் துறந்து - புகழை விரும்பாமல் அதனைத் துறந்து; துற்று ஓர் அவிழும் ஈயார் - உண்ணப்படுவதாகிய ஒரு சோற்றவிழையும் கொடாராய்; அறம் கரிது சேய்த்து என்பது யாதும் அறியாரேல் - அறம் கரியதோ செய்யதோ என்பதைச் சிறிதும் அறியாரெனின்; அது வெறும் பொருள் - அந்த ஆவல் பயன் இல்லாத பொருள்; விடுத்திடுமின் என்றாள்- எனவே, என்னைத் துறவு பூண விடுத்திடுக என்றாள்.

விளக்கம் : அம்மா : இரக்கக் குறிப்பு. அவாப் பெரியர் என்றது பேராசையுடையராய் என்றவாறு. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து, வேண்டும் பனுவல் துணிவு என்பது பற்றி, துறந்து புகழ் வேண்டார் என்றாள். அறங்கறுப்போ சேப்போ யானறியேன் என்பது ஓர் உலகவழக்கு. ஒருசிறிதும் அறியாதாராய் என்பது கருத்து. வெறும் பொருள் - பயனில்லாப் பொருள் ( 24 )

வேறு

2623. முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய
பாலடிசின் மகளி ரேந்த
நல்ல கருனையா னாள்வாயும்
பொற்கலத்து நயந்துண் டார்க
ளல்ல லடைய வடகிடுமி
னோட்டகத்தென் றயில்வார்க் கண்டுஞ்
செல்வ நமரங்கா ணினையன்மின்
செய்தவமே நினைமின் கண்டீர்.

பொருள் : முல்லை முகை சொரிந்தாற்போன்று இனிய பால் அடிசில் - முல்லை அரும்பைப் பெய்தாற்போல் இனிய பாற்சோற்றை; மகளிர் ஏந்த - பணிப்பெண்கள் ஏந்தி நிற்க; நல்ல கருனையால் நாள்வாயும் பொற்கலத்து நயந்து உண்டார்கள் - தூய பொரிக்கறியுடன் நாடோறும் பொன்னாலான கலத்திலே விரும்பி உண்டவர்கள்; அல்லல்அடைய - தீவினையால் வறுமைத் துன்பம் அடைதலால்; ஓட்டகத்து அடகு இடுமின் என்று - ஓட்டிலே கீரைக்கறியை இடுங்கோள் என்று வேண்டிப் பெற்று; அயில்வார்க் கண்டும் - உண்பவரைப் பார்த்தும்; நமர்காள்! - சுற்றத்தீர்!; செல்வம் நினையன்மின்!- செல்வத்தை நினையாதீர்; செய்தவமே நினைமின் - செய்தற்குரிய தவத்தையே நினைப்பீராக.

விளக்கம் : நமரங்காள் : அம் : அசை. முல்லைமுகை அடிசிலுக்கு நிறமும் வடிவமும் பற்றிவந்த உவமை. கருனையான் என்புழி ஆன்உருபு ஒடுவின் பொருட்டு. நாள்வாயும் - நாள்தோறும். அயில்வார் - உண்பார், அடகு - இலைக்கறி. இதுமுதல், மூன்று செய்யுள் செல்வநிலையாமை கூறுவன. ( 25 )

2624. அம்பொற் கலத்து ளடுபா
லமர்ந்துண்ணா வரிவை யந்தோ
வெம்பிப் பசிநலிய வெவ்வினையின்
வேறாயோ ரகல்கை யேந்திக்
கொம்பிற் கொளவொசிந்து பிச்சை
யெனக்கூறி நிற்பாட் கண்டு
நம்பன்மின் செல்வ நமரங்கா
ணல்லறமே நினைமின் கண்டீர்.

பொருள் : அம் பொன் கலத்துள் அடுபாலை அமர்ந்து உண்ணா அரிவை - அழகிய பொற்கலத்திலே, காய்ச்சிய பாலை விரும்பிப் பருகாத அரிவையாள்; அந்தோ! - ஐயோ!; வெவ்வினையின் வேறாய் - கொடிய வினையினால் வேறுபட்டு; பசி வெம்பி நலிய ஓர் அகல் கை ஏந்தி - பசி வெம்பி வருத்தலாலே, ஒரு மண் கலத்தைக் கையில் ஏந்தி; கொம்பின் கொள ஒசிந்து - மலர்க்கொடிபோல இடை நுடங்கி; பிச்சை எனக் கூறி நிற்பாள் கண்டும் - பிச்சை இடுமின் என்று வேண்டி நிற்பவளைக் கண்டு வைத்தும்; நமர்காள்! - உறவினரே!; செல்வம் நம்பன மின் - செல்வத்தை நம்பாதீர்; நல் அறமே நினைமின்! - தூய அறத்தையே நினைப்பீராக!

விளக்கம் : அடுபால் - காய்ச்சிய பால். அமர்ந்து - விரும்பி. உண்ணா - உண்ணாத. அந்தோ : இரக்கக் குறிப்பு. வெவ்வினை - தீவினை. செல்வம் நம்பன்மின் என மாறுக. ( 26 )

2625. வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட்
டழுவதுபோல் வருந்து மல்கு
னண்ணாச் சிறுகூறை பாகமோர்
கைபாக முடுத்து நாளு
மண்ணாந் தடகுரீஇ யந்தோ
வினையேயென் றழுவாட் கண்டு
நண்ணன்மின் செல்வ நமரங்கா
ணல்லறமே நினைமின் கண்டீர்.

பொருள் : வண்ணத்துகில் உடுப்பின் வாய்விட்டு அழுவது போல் - அழகிய ஆடையை உடுப்பின் வாய்திறந்து அழுவதைப் போல; வருந்தும் அல்குல் - நையும் அல்குலிலே; நண்ணாச் சிறு கூறை பாகம் ஓர் கை பாகம் உடுத்து - பிறர் அணுகாமல் அருவருக்கும் சிறு கூறை ஒரு பாதியும் ஒரு கை ஒரு பாதியுமாக உடுத்து; அண்ணாந்து அடகு உெரீஇ - மேனோக்கிக் கீரையை உருவியவாறு; அந்தோ வினையே என்று - ஐயோ ‘கொடுவினையே‘ என்று; நாளும் அழுவாள் கண்டும் - ஒவ்வொரு நாளும் அழுகின்றவளைக் கண்டிருந்தும்; நமர்காள்! செல்வம் நண்ணன்மின் - சுற்றத்தீர்! செல்வத்தை அணுகாதீர்; நல் அறமே நினைமின்! - நல்லறத்தையே எண்ணுமின்!

விளக்கம் : இதுவரை கூறிய அறம் பொதுவானது. வண்ணம் - அழகு. பிறரால் நண்ணப்படாத என்க. கூறை - ஆடை. ஓர்பாகம் கூறையும் ஓர்பாகம் கையுமாக உடுத்து என்க. உரீஇ - உருவி.

வேறு

2626. மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்ப
மல்லிகைமென் மாலை சூடிக்
கைதிரண்ட வேலேந்திக் காமன்போற்
காரிகையார் மருளச் சென்றா
ரைதிரண்டு கண்டங் குரைப்பவோர்
தண்டூன்றி யறிவிற் றள்ளி
நெய்திரண்டாற் போலுமிழ்ந்து நிற்கு
மிளமையோ நிலையா தேகாண்.

பொருள் : மைதிரண்ட வார்குழல்மேல் - கருமை திரண்ட நீண்ட சிகையிலே; வண்டு ஆர்ப்ப மென் மல்லிகை மாலை சூடி - வண்டுகள் முரல மெல்லிய மல்லிகை மாலையை அணிந்து; கை திரண்ட வேல் ஏந்திக் காரிகையார் மருளக் காமன்போற் சென்றார் - காம்பு திரண்ட வேலை ஏந்தியவாறு மங்கையர் மயங்கக் காமனைப்போலச் சென்றவர்கள்; ஐ திரண்டு கண்டம் குரைப்ப - சிலேட்டுமம் திரண்டு கழுத்திலே ஒலியுண்டாக; நெய்திரண்டாற்போல் உமிழ்ந்து - நெய் திரண்டாற்போலக் கோழையை உமிழந்து; ஓர் தண்டு ஊன்றி அறிவின் தள்ளி - ஒரு தண்டை ஆதரவாக ஊன்றி, அறிவிலிருந்து விலகி; நிற்கும் இளமையோ நிலையாதே காண் - நிற்பதற்குக் காரணமான இளமையோ நிலை அற்றது காண்.

விளக்கம் : இது சீவகனுக்குக் கூறியது. 2619 முதல் இச் செய்யுள்வரை அறவுரை கூறினாள். இஃது இளமை நிலையாமை கூறிற்று.  இனி, மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்ப மல்லிகை மென் மாலைசூடிச் சென்ற காரிகையாரும் அக்காரிகையார் மருளக் காமன் போற் சென்றாரும் எனப் பிரித்துக் கூட்டிச் சிலசொல் வருவித்து முடித்தல் இச்செய்யுட்குச் சிறப்பாகும். இங்ஙனம் செய்யாக்கால் அடை மொழிகள் ஒவ்வாமை யுணர்க. ஐ - சிலேத்துமம். குரைப்ப - இரும. ( 28 )

வேறு

2627. என்றலுஞ் சுநந்தை சொல்லு
மிறைவிதான் கண்ட தையா
நன்றுமஃ தாக வன்றே
யாயினு மாக யானு
மொன்றினன் றுறப்ப லென்ன
வொள்ளெரி தவழ்ந்த வெண்ணெய்க்
குன்றுபோல் யாது மின்றிக்
குழைந்துமெய்ம் மறந்து நின்றான்.

பொருள் : என்றலும் சுநந்தை சொல்லும் - என்று விசயை கூறிய அளவிலே சுநந்தை கூறுவாள்; ஐயா! - ஐயனே!; இறைவி கண்டது நன்றும் அஃது ஆக - அரசி கருதியது நன்றாயினும் ஆகுக; அன்றே ஆயினும் ஆக - தீதாயினும் ஆகுக; யானும் ஒன்றினன் - யானும் அதனைப் பொருந்தினேன்; துறப்பல் என்ன - (எனவே, இனி) துறவு பூண்பேன் என்றுரைப்ப; ஒள் எரி தவழ்ந்த வெண்ணெய்க் குன்றுபோல் - பெருந் தீ தழுவிய வெண்ணெய்க் குன்றுபோல; யாதும் இன்றிக் குழைந்து - மறுத்துக்கூறுஞ் சொல் சிறிதும் இன்றி உருகி; மெய்ம் மறந்து நின்றான் - தன்னை மறந்து நின்றான்.

விளக்கம் : கந்துக்கடன் முன்னே இறத்தலின், சுநந்தையைத் துறவு விலக்கிக் கூறுதல் அறன் அன்றென்று கருதியதால், மறுக்குஞ் சொல் யாதும் இன்றி நின்றான் என்றார். கந்துக்கடன் இறந்தமை இத் தொடர்நிலைச் செய்யுளில் தேவர் கூறிற்றிலர் தகுதியன் றென்று கருதி; இத்துறவால் உய்த்துணர வைத்தார். ( 29 )

2628. ஓருயி ரொழித்திரண் டுடம்பு போவபோ
லாரிய னொழியவங் கௌவை மார்கடாஞ்
சீரிய துறவொடு சிவிகை யேறினார்
மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே.

பொருள் : ஓர் உயிர் ஒழித்து இரண்டு உடம்பு போவபோல் - ஓருயிரைக் கை விட்டு இரண்டுடம்பு போந்தன்மை போல; ஆரியன் அங்கு ஒழிய - சீவகன் அங்கே யிருப்ப; ஒளவைமார்கள் தாம் - தாய்மார் இருவரும்; சீரிய துறவொடு - சிறப்புடையதாகிய துறவை யுட்கொண்டு; சிவிகை ஏறினார் - சிவிகையிலே ஏறிப்போயினார்; மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்த - மழை பெய்வதைப்போல, அங்கிருந்த மங்கையரின் கண்கள் நீரை வடித்தன.

விளக்கம் : சீரிய துறவென்றார் சீவகன் வாழ்வை யுட்கொண்டு முன்னர் இருந்த நோன்பினுஞ் சிறப்புடைத் தென்பது கருதி. சீவகனுக்கு உயிரும், தாய்மாரிருவர்க்கும் இரண்டு உடம்புகளும் உவமை. ஆரியன் - மேலானவன்; சீவகன், ஒளவைமார்- தார்மார்; ஈண்டு விசயையும், சுநந்தையும். கண்கள் மாரியின் வார்ந்த என மாறுக. ( 30 )

2629. நன்மயிற் பொறியின்மேற் போயா நாளினும்
புன்மையுற் றழுகுரன் மயங்கிப் பூப்பரிந்
திந்நகர் கால்பொரு கடலி னெங்கணு
மன்னனி லாகுல மயங்கிற் றென்பவே.

பொருள் : நல் மயில் பொறியின்மேல் போய நாளினும் - அழகிய மயிற்பொறியின்மேல் விசயை சென்ற நாளாகிய, சச்சந்தன் பட்ட நாளினும்; புன்மை உற்று - வருத்தம் அடைந்து; கால் பொரு கடலின் - காற்றால் மோதப்பட்ட கடலினும்; இந் நகர் எங்கணும் - இராசமாபுரம் எங்கும்; அழுகுரல் மயங்கி - (முன்னர்) அழுகுரலாலே மயங்கி; பூப் பரிந்து - மலரை எடுத்தெறிந்து; மன்னனில் ஆகுலம் மயங்கிற்று - (பின்னர்ச்) சீவகனைப் போலச் செயலற்றுச் சோர்ந்தது.

விளக்கம் : என்ப : அசை. நன்மயிற் பொறியின்மேற் போயநாள் என்றது சச்சந்தன் பட்ட நாள் என்பதுபட நின்றது. புன்மை - துன்பம். கால - காற்று. சீவகன் ஆகுலம் பெரிதாதல் தோன்ற உவமையாக எடுத்துவிதந்தார். என்னை? உவமை உயர்ந்ததன் மேற்றாகலின் என்க. ஆகுலம் - துன்பம். ( 31 )

2630. அழுதுபின் னணிநகர் செல்ல வாயிரந்
தொழுதகு சிவிகைகள் சூழப் போயபி
னிழுதமை யெரிசுடர் விளக்கிட் டன்னவள்
பழுதில்சீர்ப் பம்மைதன் பள்ளி நண்ணினாள்.

பொருள் : அணிநகர் அழுது பின்செல்ல - இராசமாபுரம் அழுதவாறு பின்னே செல்ல; தொழுதகு சிவிகைகள் ஆயிரம் சூழப்போயபின் - வணங்கத்தக்க பல்லக்குகள் ஆயிரம் சூழ்ந்து வரச் சென்ற பிறகு; இழுது அமை எரிசுடர் விளக்கிட்ட அன்னவள் - நெய் பொருந்திய சுடரை விளக்கிட்டாற் போன்றவளாகிய; பழுதுஇல் சீர்ப்பம்மைதன் - குற்றம் அற்ற புகழையுடைய பம்மை யென்பாளின்; பள்ளி நண்ணினாள் - தவச் சாலையை விசயை அடைந்தாள்,

விளக்கம் : பிறப்பாகிய இருளைப்போக்கி வீடாகிய ஒளியைப் பரப்புதற்கு உரியள் என்பார், விளக்கிட் டன்னவள் என்றார். ஆயிரஞ் சிவிகையிற் போய மகளிரும் துறப்பதற்கு ஒருப்பட்டுப் போயினர் என்றுணர்க. ( 32 )

2631. அருந்தவக் கொடிக்குழாஞ் சூழ வல்லிபோ
லிருந்தறம் பகர்வுழி யிழிந்து கைதொழு
தொருங்கெமை யுயக்கொண்மி னடிக ளென்றனள்
கருங்கய னெடுந்தடங் கண்ணி யென்பவே.

பொருள் : அருந்தவக் கொடிக்குழாம் சூழ - அரிய தவவொழுங்குடைய மகளிர் திரளாகிய புறவிதழ் சூழ்ந்திருப்ப; அல்லிபோல் இருந்து அறம் பகர்வுழி - பம்மை யென்பாள் அவர்களின் நடுவே அகவிதழ்போல அமர்ந்து அறங்கூறியவாறிருக்கும் இடத்தே; கருங்கயல் நெடுந்தடங்கண்ணி - கரிய கயலைப்போன்ற பெருங்கண்ணியாகிய விசயை; இழிந்து - பல்லக்கிலிருந்து இறங்கிச் சென்று; கை தொழுது - கைகளாலே தொழுது; அடிகள்! - அடிகளே!; எமை ஒருங்கு உயக்கொண்மின் என்றனள் - எம்மையெல்லாம் சேரப் பிறவிக்கடலினின்றும் கரையேற்றுவீராக என்றாள்.

விளக்கம் : முன்பு கயல்போலும் கண் என்க. கொடி - ஒழுங்கு. அல்லி - அகவிதழ். பம்மையை அகவிதழ் என்றதற்கேற்ப மகளிர் குழாமாகிய புறவிதழ்கள் என்க. பகர்வுழி - கூறுமிடத்து. கண்ணி இழிந்து தொழுது உயக்கொண்மின் என்றனள், என்க. ( 33 )

2632. ஆரழன் முளரி யன்ன வருந்தவ மரிது தானஞ்
சீர்கெழு நிலத்து வித்திச் சீலநீர் கொடுப்பிற் றீந்தேன்
பார்கெழு நிலத்து ணாறிப் பல்புக ழீன்று பின்னாற்
றார்கெழு தேவரின்பந் தையலாய் விளைக்கு மென்றாள்.

பொருள் : முளரி ஆர் அழல் அன்ன - விறகிலே பொருந்திய அழலைப்போன்ற; அருந்தவம் அரிது - அரிய தவம் நினக்கு மேற்கோடல் அரிது; சீர்கெழு நிலத்துத்தானம் வித்தி - (ஆகையால்) சிறப்புடைய நிலத்தே தானமாகிய விதையை வித்தி; சீல நீர் கொடுப்பின் - (அது முளைக்க) ஒழுக்கமாகிய நீரை அதற்குப் பாய்ச்சின்; பார்கெழு தீந்தேன் நிலத்துள் நாறி - உலகிற் பொருந்திய இன்ப நிலமாகிய உத்தர கருவிலே முளைத்து; பல் புகழ் ஈன்று - பல புகழையும் நல்கி; பின்னால் - பின்னர்; தார்கெழு தேவர் இன்பம் - மாலையணிந்த வானவர் இன்பத்தை; தையலாய்! விளைக்கும் என்றாள் - அரிவையே! விளைவித்துத் தரும் என்றாள்.

விளக்கம் : தானப்பயனாற் போகபூமியிலே பிறந்து, ஆண்டுள்ள நுகர்ச்சியை எய்திப் பின் துறக்கம் பெறுவார் என்றாள். முளரி ஆர் அழல் அன்ன என மாறுக. முளரி - விறகு. வித்தி - விதைத்து. தானமாகிய வித்தினை வித்தி என்க. ஐம்பொறியும் வென்று அவாவற்ற இடத்தே என்பார் சீர்கெழு நிலத்து என்றார். பார்கெழுநிலம் என்றது உத்தரகுருவினை; (போகபூமியை.) ( 34 )

2633. அறவுரை பின்னைக்கேட்டு மடிகண்மற் றெமக்குவல்லே
துறவுதந் தருளு கென்னத் தூநக ரிழைத்து மேலா
னறவிரி தாம நாற்றி வானகம் விதானித் தாய்ந்து
திறவிதிற் றவிசு தூபந் திருச்சுடர் விளக்கிட் டாரே.

பொருள் : அடிகள்! - அடிகளே!; பின்னை அறவுரைக் கேட்டும் - அறவுரையைப் பிறகு கேட்கின்றோம் ; மற்று எமக்கு வல்லே துறவு தந்து அருளுக என்ன - இனி, எமக்கு விரைந்து துறத்தலைத் தந்தருள்க என்று வேண்ட; தூ நகர் இழைத்து - (ஆண்டுள்ள தவமகளிர்) தூய இடத்தை ஒப்பனை செய்து; மேலால் நறவு விரி தாமம் நாற்றி - மேலே மணம் பரப்பும் மலர் மாலைகளைத் தொங்கவிட்டு; வானகம் விதானித்து - வானத்தை மேலே மேற்கட்டியால் மறைத்து; ஆய்ந்து - ஆராய்ந்து; திறவிதின் - நன்றாக; தவிசு தூபம் திருச்சுடர் விளக்கு இட்டார் - இருக்கையையும் நறும்புகையையும் அழகிய ஒளிதரும் விளக்கையும் இட்டனர்.
 
விளக்கம் : அடிகள் : விளி. வல்லே - விரைவில். இழைத்து - கோலஞ் செய்து. நற - தேன், விதானித்து - மேற்கட்டியிட்டு. திறவிதின் - நன்றாக. ( 35 )

வேறு
 
2634. பாலினாற் சீறடி கழுவிப் பைந்துகி
னூலினா லியன்றன நுனித்த வெண்மைய
காலனைக் கண்புதைத் தாங்கு வெம்முலை
மேல்வளாய் வீக்கினார் விதியி னென்பவே.

பொருள் : விதியின் பாலினால் சீறடி கழுவி - நூல் முறைப்படி பாலால் அவர்களுடைய சிற்றடிகளைக் கழுவி ; நூலினால் இயன்றன - பருத்தி நூலால் நெய்யப்பட்டனவும்; நுனித்த வெண்மைய பைந்துகில் - மெல்லியவாய் வெண்மையுடையவும் ஆகிய புதிய ஆடையை; காலனைக் கண்புதைத் தாங்கு - கூற்றுவவனுடைய கண்களைக் கட்டினாற்போல; வெம்முலைமேல் வளாய் வீக்கினார் - விருப்பூட்டும் முலைகளின்மேற் சூழ்ந்து இறுகக் கட்டினர்.
 
விளக்கம் : இஃது இருவர் தீக்கையும் கூறிற்று. கண் புதைத்தல். அவனுடைய கொலைத்தொழிலை மாற்றுவித்தல். நச்சினார்க்கினியர், முன்பு காலனைக் கண்புதைத்தாங்கு என விளக்கங் கூறுவர். ( 36 )

2635. தேனுலா மாலையுங் கலனுஞ் சிந்துபு
பானிலாக் கதிரன வம்மென் பைந்துகி
றானுரலாய்த் தடமுலை முற்றஞ் சூழ்ந்தரோ
வேனிலான் வருநெறி வெண்முள் வித்தினார்.

பொருள் : தேன் உலாம் மாலையும் கலனும் சிந்துபு - வண்டுகள் உலவும் மாலையையும் கலன்களையும் வாங்கிவிட்டு; பால் நிலாக் கதிர் அன அம்மேன் பைந்துகில் - பால்போன்ற நிலவின் கதிர்போன்ற அழகிய மெல்லிய பைந்துகிலை; உலாய் - உலாவ; தடமுலை முற்றம் சூழ்ந்து - பருத்த முலைகளின் முற்றத்தைச் சூழ்ந்து; வேனிலான் வரும்நெறி வெண்முள் வித்தினார் - காமன் வரும் வழியை வெள்ளிய முள்ளால் அடைத்தனர்.
 
விளக்கம் : உலாய் - உலாவ : எச்சத்திரிபு . வெண்துகிலாதலின் வெண்முள் என்றார். இஃது மற்றைய மாதரின் தீக்கை கூறியதென்பர். ( 37 )

2636. முன்னுபு கீழ்த்திசை நோக்கி மொய்ம்மலர்
நன்னிறத் தவிசின்மே லிருந்த நங்கைமா
ரின்மயி ருகுக்கிய விருந்த தோகைய
பன்மயிற் குழாமொத்தார் பாவை மார்களே.

பொருள் : மொய்ம்மலர் நன்னிறத் தவிசின்மேல் - மிகுதியான மலர்களையிட்ட நல்ல நிறமுடைய இருக்கையின்மேல்; கீழ்த்திசை முன்னுபு நோக்கி - கீழ்த்திசையை நினைத்து நோக்கி; இருந்த நங்கைமார் பாவைமார்கள் - இருந்த தாயரிருவரை உள்ளிட்ட பாவைபோன்ற மங்கையரெல்லோரும்; இன்மயிர் உகுக்கிய இருந்த தோகைய பன்மயில் குழாம் ஒத்தார் - இனிய மயிரைச் சிந்துதற்கு இருந்த தோகை யுடையனவாகிய பல மயில்களின் திரளைப் போன்றனர்.
 
விளக்கம் : நோக்கி முன்னுபு என மாறுக. முன்னுபு - நினைத்து. தோகையென்பது தோன்ற இன்மயிர் என்றார். உகுக்கிய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினை யெச்சம். தோகைய - தோகையையுடையனவாகிய. ( 38 )

2637. மணியியல் சீப்பிடச் சிவக்கும் வாணுத
லணியிருங் கூந்தலை யௌவை மார்கடாம்
பணிவிலர் பறித்தனர் பரமன் சொன்னநூற்
றுணிபொருள் சிந்தியாத் துறத்தன் மேயினார்.

பொருள் : பரமன் சொன்ன நூல் துணிபொருள் சிந்தியா - இறைவன் கூறிய நூல்களின் மெய்ப்பொருளைச் சிந்தித்து; துறத்தல் மேயினார் - துறவை விரும்பியவர்கள்; மணி இயல் சீப்பு இடச் சிவக்கும் வாள் நுதல் - மணிகள் இழைத்த சீப்பினை இட்டாற் சிவக்கும் ஒளி பொருந்திய நுதலைச் சார்ந்துள்ள; அணி இருங் கூந்தலை - அழகிய கரிய கூந்தலை; ஓளவைமார்கள் தாம் - ஆரியாங்கனைகள்; பணிவு இலர் பறித்தனர் - ஒன்றில் தாழ்விலராய்ப் பறித்தனர்.
 
விளக்கம் : மணியியல் சீப்பு - மணிகளாலியற்றப்பட்ட சீப்பு. ஒளவைமார் - தவமகளிர். பணிவு - தாழ்வு. பரமன் - அருகக்கடவுள். துணிபொருள் : வினைத்தொகை. சிந்தியா - சிந்தித்து. மேயினார் பறித்தனர் என்க. ( 39 )

2638. கன்னிய ராயிரர் காய்பொற் கொம்பனார்
பொன்னியற் படலிகை யேந்திப் பொன்மயிர்
நன்னிலம் படாமையே யடக்கி நங்கைமார்
தொன்மயி ருகுத்தநன் மயிலிற் றோன்றினார்.

பொருள் : பொன் மயிர் - (அவ்வாறு பறித்த) அழகிய மயிரினை; காய்பொன் கொம்பனார் கன்னியர் ஆயிரர் - உருக்கிய பொன்னாலாகிய கொம்பு போன்றவராகிய கன்னியர் ஆயிரவர்; பொன் இயல் படலிகை ஏந்தி - பொன்னாலாகிய தட்டிலே ஏந்தி : நன்னிலம் படாமையே அடக்கி - பள்ளியில் வீழாமற் கொண்டு போய் அடக்கி; நங்கைமார் தொன் மயிர் உகுத்த நன் மயிலின் தோன்றினார் - அந் நங்கையர் பழைய மயிரை உகுத்த அழகிய மயிலைப்போல் தோன்றினார்.
 
விளக்கம் : அடக்கி என்னும் வினையெச்சம் பிறவினைகொண்டது. காய்பொன் : வினைத்தொகை. படலிகை - தட்டு. பொன்மயிர் - அழகிய மயிர். படாமையே என்புழி ஏகாரம் : அசை. ( 40 )

2639. பொற்குடந் திருமணி பொழியப் பெய்தபோ
லெற்புடம் பெண்ணிலாக் குணங்க ளானிறைத்
துற்றுட னுயிர்க்கருள் பரப்பி யோம்பினார்
முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார்

பொருள் : முற்றுடன் உணர்ந்தவன் அமுதன் முன்னினார் - முற்றும் ஒருங்கே உணர்ந்த இறைவன் நூலாகிய அமுதத்தினைப் பொருந்திய அவ் வரிவையர்; பொற்குடம் திருமணி பொழியப் பெய்தபோல் - பொற்குடத்திலே அழகியமணிகளை மிகுத்து வழிய நிரப்பினாற்போல; என்பு உடம்பு எண் இலாக் குணங்களால் நிறைத்து - என்பாலாகிய உடம்பை அளவற்ற நற்பண்புகளால் நிறைத்து; உயிர்க்கு உடன் உற்று அருள் பரப்பி ஓம்பினார் - பல்லுயிர்க்கும் (வந்த துன்பங்களை) உடன் பொருந்தி அவ்வுயிர்கட்கு அருளைப் பரப்பித் (தவத்தைப்) பேணினார்.
 
விளக்கம் : தவம் புரிந்து அடங்கத்தக்க நல்வினை யுடைமையிற் பொற்குடத்தோடு உவமித்தார். ( 41 )

2640. புகழ்ந்துரை மகிழ்ச்சியும் பொற்பில் பல்சன
மிகழ்ந்துரைக் கிரக்கமு மின்றி யங்கநூ
லகழ்ந்துகொண் டரும்பொருள் பொதிந்த நெஞ்சினார்
திகழ்ந்தெரி விளக்கெனத் திலக மாயினார்.

பொருள் : பொற்பு இல் பல்சனம் - பொலிவு அறியாத பல மக்களும்; புகழ்ந்து உரை மகிழ்ச்சியும் - புகழ்ந்து கூறுவதால் மகிழ்ச்சியும்; இகழ்ந்து உரைக்கு இரக்கமும் இன்றி - இகழ்ந்து கூறுவதால் வருத்தமும் இல்லாமல்; அங்க நூல் அரும்பொருள் அகழ்ந்துகொண்டு பொதித்த நெஞ்சினார் - அங்கத்தையுடைய ஆகமத்தின் பொருளைக் கல்லி எடுத்துக்கொண்டு பொதிந்து வைத்த மனமுடையவராய் : திகழ்ந்து எரி விளக்கு எனத்திலகமாயினார் - (மயக்கமின்மையின்) விளங்கி எரியும் விளக்குப் போலத் திலகமாயினர்.

விளக்கம் : புகழ்ந்துரைக்கும் உரையினால் உண்டாகும் மகிழ்ச்சியும், இகழ்ந்துரைக்கும் உரைக்கு இரங்கும் இரக்கமும் என்க. எனவே விருப்பும் வெறுப்பு மிலராய் என்றாராயிற்று. ( 42 )

வேறு
 
2641. அலைமணிக் கவரி மான்றே ரடுகளி யானை பாய்மா
நிலநெளி கடலந் தானை நிரந்துபூச் சுமப்ப மன்னன்
சிலமலர் தானு மேந்திச் சென்றுசீர் பெருக வாழ்த்தி
யிலமலர்ப் பஞ்சிப் பாதத் தெழின்முடி தீட்டி னானே.

பொருள் : அலைமணிக் கவரி மான் தேர் - அசைகின்ற மணிக்கவரியையும் குதிரையையும் உடைய தேரும்; அடு களி யானை - கொல்லும் மதயானையும்; பாய்மா - குதிரையும்; நிலம் நெளி கடல் அம் தானை - நிலம் நெளியும் கடலைப்போன்ற காலாட் படையும்; நிரந்து பூச் சுமப்ப - பரவி மலரைச் சுமந்து வர; மன்னன் தானும் சில மலர் ஏந்திச் சென்று - சீவக வேந்தன் தானும் சில மலர்களை ஏந்திச்சென்று; சீர் பெருக வாழ்த்தி - புகழ் வளர வாழ்த்தி; இலமலர்ப் பஞ்சிப் பாதத்து - இலவமலர் போலும் செம்பஞ்சூட்டிய அடிகளிலே; எழில் முடி தீட்டினான்- தன் அழகிய முடியைச் சூட்டினான்.
 
விளக்கம் : அலைகவரி, மணிக்கவரி என இயைக்க. மான் - குதிரை. நிலம் நெளிதற்குக் காரணமான தானை, கடல்போலும் தானை, அந்தானை எனத் தனித்தனி கூட்டுக. நிரந்து - பரவி. மன்னன் : சீவகன். இலமலர் - இலவமலர். தீட்டினான் - சேர்த்தான். ( 43 )

2642. கடியவை முன்பு செய்தேன்
கண்ணினாற் காணச் சின்னா
லடிகளிந் நகரி னுள்ளே
யுறைகென வண்ணல் கூற
முடிகெழு மன்னற் கொன்று
மறுமொழி கொடாது தேவி
படிமம்போன் றிருப்ப நோக்கிப்
பம்மைதான் சொல்லி னாளே.

பொருள் : முன்பு கடியவை செய்தேன் - முன்பு (நும்மைக் காணற்கியலாதவாறு) தீவினைகளைச் செய்த நான்; கண்ணினால் காண - கண்களாற் கண்டு மகிழ்ந்திருக்கும்படி; அடிகள் சின்னாள் இந் நகரினுள்ளே உறைக என - அடிகள் சில நாட்கள் இந்த நகரிலே உறைக என்று; அண்ணல் கூற - சீவகன் வேண்ட; முடிகெழு மன்னற்கு ஒன்றும் மறுமொழி கொடாது - முடியுடைய வேந்தனுக்கு யாதும் விடை கூறாமல்; படிமம் போன்று தேவி இருப்ப - பாவை போன்று விசயை இருந்தாளாக; பம்மை நோக்கிச் சொல்லினாள் - பம்மை அந்நிலையை நோக்கிக் கூறினாள்.

விளக்கம் : கடியவை - தீவினை. அடிகள் என்றது விசயையை. அண்ணல் : சீவகன். மன்னன், சுட்டுப்பொருள் மேனின்றது. தேவி : விசயை. படிமம் - பதுமை. ( 44 )

2643. காதல னல்லை நீயுங் காவல நினக்கி யாமு
மேதில மென்று கண்டா யிருந்தது நங்கை யென்னத்
தாதலர் தாம மார்ப னுரிமையுந் தானு மாதோ
போதவிழ் கண்ணி யீர்த்துப் புனல்வரப் புலம்பி னானே.

பொருள் : காவல - மன்னனே!; நீயும் காதலன் அல்லை - நீயும் எம்மால் விருப்பப்படுவாய் அல்லை; நினைக்கு யாமும் ஏதிலம் என்று - நினக்கு யாமும் சுற்றம் அல்லேம் என்று; நங்கை இருந்தது என்ன - விசயை உரையின்றியிருந்தது என்ன; தாது அலர் தாம மார்பன் - தேன் விரியும் மலர்மாலை மார்பனான சீவகன்; உரிமையும் தானும் போது அவிழ் கண்ணி ஈர்த்து - மனைவியருந் தானுமாக அரும்பலர்ந்த கண்ணியை இழுத்து; புனல்வரப் புலம்பினான் - கண்ணீர் வர அழுதான்.
 
விளக்கம் : காதலன் அல்லைநீயும் காவல நினக்கு யாமும் ஏதிலம் என்னுமளவும் பம்மை விசயையின் கருத்தைக்கொண்டு கூறியபடியாம். தாது - மகரந்தம். உரிமை - மனைவியர். மாதும் ஓவும் அசைகள். ( 45 )

2644. ஏதில னாயி னாலு
மிறைவர்தம் மறத்தை நோக்கக்
காதல னடிக ளென்னக்
கண்கனிந் துருகிக் காசின்
மாதவ மகளி ரெல்லா
மாபெருந் தேவி யாரை
யேதமொன் றில்லை நம்பிக்
கின்னுரை கொடுமி னென்றார்.

பொருள் : அடிகள் - அடிகளே!; ஏதிலன் ஆயினாலும் இறைவர்தம் அறத்தை நோக்க - யான் தேவிக்குச் சுற்றம் அன்றேனும், இறைவர் அறத்தைத் துணிந்து நிற்கின்ற நிலையை நோக்க; காதலன் என்ன - அதனாற் காதலிக்குந் தன்மையுடையேன் என்றுகூற; காசு இல் மாதவ மகளிர் எல்லாம் - குற்றம் அற்ற தவமகளிர் எல்லோரும்; கண்கனிந்து - கண்ணோட்டஞ் செய்து; உருகி - மனமுருகி; மாபெருந் தேவியாரை - விசயமா தேவியாரை நோக்கி; ஏதம் ஒன்று இல்லை - குற்றம் ஏதும் இல்லை; நம்பிக்கு இன்னுரை கொடுமின் என்றார் - சீவகற்கு இன்மொழி பகர்மின் என்றனர்.
 
விளக்கம் : ஏதிலன் - அயலான். இறைவர் தம் அறம் - அருகனறம., இறைவனறம் எல்லோரிடத்தும் அன்பு கூரும்படி கூறுதலின் அடியேனையும் மகனென்னும் முறையுடன் கருதாது அருகனடி நெறிபற்றியொழுகும் ஒருவனென நினைத்துத் தாங்கள் அளித்தல் தவறன்றே என்றவாறு. தேவியாரை - என்றது விசயையை. ஏதம் - குற்றம். ( 46 )

2645. திரைவள ரிப்பி யீன்ற
திருமணி யார மார்பின்
வரைவளர் சாந்த மார்ந்த
வைரக்குன் றனைய திண்டோள்
விரைவளர் கோதை வேலோய்
வேண்டிய வேண்டி னேமென்
றுரைவிளைத் துரைப்பக் காளை
யுள்ளகங் குளிர்ந்து சொன்னான்.

பொருள் : திரைவளர் இப்பி ஈன்ற திருமணி ஆரம் மார்பின் - கடலிற் கிடைத்த இப்பி பெற்றனவும் அழகிய மணிகளுடன் கலந்தனவும் ஆன முத்துமாலை அணிந்த மார்பினையும்; வரைவளர் சாந்தம் ஆர்ந்த - மலையில் வளர்ந்த சந்தனம் பொருந்திய; வைரக்குன்று அனைய திண்தோள் - வைர மலைபோன்ற திண்ணிய தோளினையும்; விரைவளர் கோதை வேலோய்!; - மணம் வளரும் மாலை யணிந்த வேலையும் உடையவனே!; வேண்டிய வேண்டினேம் என்று - நீ விரும்பியவற்றை யாமும் விரும்பினேம் என்று; உரைவிளைத்து உரைப்ப - உரையை வலிய எழுப்பிக் கூற, காளை உள்ளகம் குளிர்ந்து சொன்னான் - சீவகன் மனம் மகிழ்ந்து கூறினான்.

விளக்கம் : வேண்டிய என்ற பன்மை, உறைக என்றதும், காதலன் என்றதும். இப்பியீன்ற ஆரம், திருமணிஆரம் எனத் தனித்தனி கூட்டுக. திருமணி - மாணிக்கம். ஆரம் - முத்துமாலை - மாணிக்கம் கலந்த முத்து மாலை என்பது கருத்து. வரை - பொதியமலை என்க. விரை - நறுமணம். வலிந்துரைப்ப என்பது தோன்ற உரைவிளைத்துரைப்ப என்றார்: ( 47 )

2646. அடிகளோ துறக்க வொன்று
முற்றவர் யாது மல்லர்
சுடுதுய ரென்கட் செய்தாய்
சுநந்தைநீ யௌவை யல்லை
கொடியைநீ கொடியை செய்தாய்
கொடியையோ கொடியை யென்னா
விடருற்றோர் சிங்கந் தாய்மு
னிருந்தழு கின்ற தொத்தான்.

பொருள் : அடிகளோ துறக்க - அடிகளோ துறவு பூண்க; ஒன்றும் யாதும் உற்றவர் அல்லர் - (ஏனெனில்) அவர் என்னிடம் ஒன்றும் இன்பமாதல் துன்பமாதல் யாதொன்றும் உற்றவர் அல்லர்; சுநந்தை! நீ ஒளவை - சுநந்தையே! நீயே என் அன்னை; கொடியை அல்லை - (இதற்குமுன்) நீ எவ்வகையினும் கொடியை அல்லை; என் கண் சுடுதுயர் செய்தாய் - (இப்போது துறந்தனை யாதலின்) இப்போது என்னிடம் சுடுதுயரைச் செய்தனை யாதலின்; கொடியை செய்தாய் - கொடியவற்றைச் செய்தனை; கொடியை கொடியை என்னா - கொடியை கொடியை என்று; ஓர் சிங்கம் இடர் உற்று - ஒரு சிங்கம் துன்புற்று; தாய்முன் இருந்து அழுகின்றது ஒத்தான் - தன் தாயின்முன் அமர்ந்து அழுவது போன்றான்.
 
விளக்கம் : அடிகளோ என்புழி ஓகாரம் பிரிநிலை. யாது ஒன்றும் உற்றவர் அல்லர் என இயைக்க. துன்பமாதல் இன்பமாதல் யாதொன்றும் உற்றவர் அல்லர் என்றவாறு. ஒளவையல்லை என்புழி எடுத்தோதி வினாவாக்கினும் அமையும். ( 48 )

2647. சென்றதோ செல்க விப்பாற்
றிருமக ளனைய நங்கை
யின்றிவ டுறப்ப யானின்
னரசுவந் திருப்பே னாயி
னென்றெனக் கொழியு மம்மா
பழியென விளங்கு செம்பொற்
குன்றனான் குளிர்ப்பக் கூறிக்
கோயில்புக் கருளு கென்றாள்.

பொருள் : சென்றதோ செல்க - போனது போக; இப்பால் - இனி; திருமகள் அனைய நங்கை இவள் துறப்ப - திருமகளைப் போன்ற நங்கையாகிய இவள் துறக்கவும்; இன்று யான் நின் அரசு உவந்து இருப்பேன் ஆயின் - இப்போது நான் உன் அரசை விரும்பி இருப்பேனெனின்; எனக்குப் பழி என்று ஒழியும்? - எனக்குப் பிறக்கும் பழி எப்போது நீங்கும்?; என இலங்கு செம்பொன் குன்றனான் குளிர்ப்பக் கூறி - என்று விளங்கும் பொன் மலை போன்ற அவன் மனங்குளிர உரைத்து; கோயில் புக்கு அருளுக என்றாள் - இனி அரண்மனைக்குப் போய் உலகைக் காத்தருள்க என்றாள்.
 
விளக்கம் : கணவன் இறக்கவும் புதல்வன் அரசை உவந்திருந்தாளென்ற பழி நேர்ந்தது போக என்பாள், சென்றதோ செல்க என்றாள்.
 
2648. பந்தட்ட விலலி னார்தம்
படாமுலை கிழித்த பைந்தார்
நந்தட்டன் றன்னை நோக்கி
நங்கையா ரடிகள் சொன்னார்
நொந்திட்டு முனிய வேண்டா
துறந்தில நும்மை யென்னக்
கந்தட்ட திணிதிண் டோளான்
கற்பக மலர்ந்த தொத்தான்.

பொருள் : பந்து அட்ட விரலினார்தம் - பந்தை வருத்தின விரலையுடைய மகளிரின்; படாமுலை கிழித்த பைந்தார் நந்தட்டன் தன்னை நோக்கி - சாயாத முலைகள் கிழித்த மாலையணிந்த நந்தட்டனைப்பார்த்து; நங்கையர் அடிகள் சொன்னார் - விசயமா தேவியார் கூறினார்; நும்மைத் துறந்திலம் - உம்மை யாம் நீக்கிலம்; நொந்திட்டு முனிய வேண்டா என்ன - (ஆதலால்) வருந்தி வெறுத்தல் வேண்டா என்றுரைக்க; கந்து அட்ட திணி திண்தோளாளன் கற்பகம் மலர்ந்தது ஒத்தான் - தூணைத் தாக்கிய மிகவும் திண்ணிய தோளான் (நந்தட்டன்) கற்பகம் மலர்ந்ததைப்போல மகிழ்ந்தான்.
 
விளக்கம் : அட்ட - வருத்தின. நங்கையாரடிகள் : விசயை . நொந்திட்டு - நொந்து. முனிய - வெறுக்க. கந்து - தூண். திணிதின்தோள் - மிகவும் திண்ணிய தோள். தோளான் : நந்தட்டன். ( 50 )

2649. துறந்த விந்நங்கை மார்தந்
தூம லரனைய பாத
முறைந்தவென் சென்னிப் போதின்
மிசையவென் றொப்ப வேத்திக்
கறந்தபா லனைய கந்திக்
கொம்படுத் துருவப் பைம்பூண்
பிறங்குதார் மார்பன் போந்து
பெருமணக் கோயில் புக்கான்.

பொருள் : உருவப் பைம்பூண் பிறங்கு தார் மார்பன் - அழகியபூணினையும், விளங்குந்தாரையுமுடைய மார்பன்; துறந்த இந்நங்கைமார் தம் தூமலர் அனை பாதம் - துறவு பூண்ட இந்த அரிவையரின் தூய மலர்போன்ற அடிகள்; என்சென்னி உறைந்த போதின் மிசைய - என் முடியிலுள்ள மலர்களின் மேலன; என்று ஒப்ப ஏத்தி - என்று அவர்களின் தவவொழுக்கத்திற்குப் பொருந்த வாழ்த்தி; கறந்த பால் அனையகந்திக் கொம்பு அடுத்து - கறந்திட்ட பால்போலுந் தூய கந்தியாகிய கொம்பு இவர்களைப் புரக்குமாறு சேர்த்து; போந்து பெரு மணக்கோயில் புக்கான் - பள்ளியினிற்றும் திரும்ப வந்து பெரிய மணமுறும் அரண்மனையை அடர்ந்தான்.

விளக்கம் : கறந்தபால், கந்தியின் தூய்மைக்குவமை. கந்தி - தவப்பெண். கந்தியாகிய கொம்பு என்க. உருவம் - அழகு. மார்பன் : சீவகன்; பள்ளியினின்றும் போந்தென்க. ( 51 )

2650. வடிநிரை நெடிய கண்ணார்
மாமிமார் விடுப்ப வேகிக்
கடிநிரை சிவிகை யேறிக்
கதிர்மணிக் குடைபின் செல்ல
வுடைதிரைப் பரவை யன்ன
வொளிறுவேன் மறவர் காப்பக்
கொடிநிரைக் கோயில் புக்கார்
குங்குமக் கொடிய னாரே.

பொருள் : குங்குமக் கொடியனார் வடிநிரை நெடிய கண்ணார் - குங்குமம் அணிந்த கொடிபோன்றவராகிய, மாவடுவின் வரிசைபோன்ற நீண்ட கண்ணார்; மாமிமார் விடுப்ப ஏகி - மாமியார் விடைதரத் தவப்பள்ளியினின்றும் போய்; கடிநிரை சிவிகை ஏறி - வரைவினையுடைய அணியான பல்லக்கில் ஏறி; கதிர்மணிக் குடை பின்செல்ல - ஒளியுறும் மணிக்குடைகள் பின்னே போதர; உடை திரைப் பரவை அன்ன ஒளிறு வாள் மறவர் காப்ப - முரிகின்ற அலைகளையுடைய கடல்போலும் அளவினராகிய, விளங்கும் வாளேந்திய மறவர்கள் காப்ப; கொடி நிரை கோயில் புக்கர் - கொடிகளையுடைய அரண்மனையை அடைந்தனர்.
 
விளக்கம் : கடிச் சிவிகை - வரைவினையுடைய சிவிகை; என்றது, அரசனால் தேவியர் குலங்கட்கேற்ப இவ்வாறு செல்லற்குரியர் என்று முன் போதற்கும் பின் போதற்கும் வரையப்பட்ட சிவிகை என்றவாறு; ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் - உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் - பெருமையில் திரியா அன்பின் கண்ணும் (தொல் - கற்பு. 6 ) என்றார். ( 52 )

வேறு
 
2651. முழுதுல கெழிலேத்து மூரிவேற் றானை மன்னன்
றொழுதகு பெருமாட்டி தூமணிப் பாவை யன்னாள்
பொழிதரு மழைமொக்குட் போகம்விட் டாசை நீக்கி
வழிவரு தவமெய்தி வைகின டெய்வ மன்னாள்.

பொருள் : எழில் முழுது உலகு ஏத்தும் - அழகை உலகு முழுதும் போற்றும்; மூரி வேல் தானை மன்னன் தொழுதகு பெருமாட்டி - பெருமை பெற்ற வேற்படை வேந்தனாகிய சச்சந்தனின், வணங்கத்தக்க பெருமாட்டி; தூமணிப் பாவை அன்னாள் - தூய மணிப்பாவை போன்றவள்; தெய்வம் அன்னாள் - அருந்ததி போன்றவளாகிய விசயை; பொழிதரு மழை மொக்குள் போகம்விட்டு - பெய்யும் மழை நீரில் தோன்றுங் குமிழிபோலும் இன்பத்தை விடுத்து; ஆசை நீக்கி - அவாவை வெறுத்து; வழிதரு தவம் எய்தி வைகினள் - வீட்டை அடையும் வழியிலே வருகின்ற பரமாகமத்திற்கூறிய தவத்தைப் பொருத்தித் தங்கினள்.
 
விளக்கம் : பாவை யன்னாள் என்றார், ஐம் பொறி நுகர்ச்சியை விட்டுத் தவம் புரிந்தமை கருதி. அருகனாகமத்திற் கூறியவன்றி மற்றையவர் தவங்கள் வீடு பேற்றிற்குரியவல்ல எனலாயின. ( 53 )

2. நீர் விளையாட்டணி
 
2652. உடைதிரை முத்தஞ் சிந்த வோசனிக் கின்ற வன்னம்
படர்கதிர்த் திங்க ளாகப் பரந்துவான் பூத்த தென்னா
வடர்பிணி யவிழு மாம்ப லலைகடற் கானற் சேர்ப்பன்
குடைகெழு வேந்தற் கிப்பா லுற்றது கூற லுற்றேன்.

பொருள் : உடை திரை முத்தம் சிந்த - முரிகின்ற அலைகள் முத்துக்களை; சிந்துகையாலே; ஓசனிக்கின்ற அன்னம் - அதற்கு வெருவிச் சிறைகளை அடித்துக் கொள்ளும் அன்னம்; படர் கதிர்த் திங்கள் ஆக - பரவிய கதிர்களையுடைய திங்களாக; பரந்து வான் பூத்தது என்னா - கடல் வானாக, அது சிந்தின முத்தம் அவ் வான் மீனைப் பூத்ததாக உட்கொண்டு; ஆம்பல் அடர்பிணி அவிழும் - அல்லிமலர் (பகற் காலத்திலேயே) இதழ் பிணித்த பிணி மலர்கின்ற ; அலைகடல் கானல் சேர்ப்பன் - அலை கடலும் கானலும் கொண்ட சேர்ப்பனாகிய; குடைகெழு வேந்தற்கு - குடையுடைய சீவக மன்னற்கு; இப்பால் உற்றது கூறல் உற்றேன் - இனி நிகழ்ந்ததைக் கூறத் தொடங்கினேன்.

விளக்கம் : உடைதிரை : வினைத்தொகை. ஓசனித்தல் - சிறகடித்தல் என்பர் நச்சினார்க்கினியர். வெக்கையால் தலை எடுத்தல் என்பர் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர். போதற்கு ஒருப்பட்டு முயறல் என்று அடியார்க்கு நல்லார் உரைகூறி உடைதிரை முத்தஞ் சிந்த ஓசனிக்கின்ற அன்னம் என்றார் சிந்தாமணியினும் என்று இத்தொடரை எடுத்துக் காட்டினர். ( 54 )

2653. துறவின்பாற் படர்த லஞ்சித்
தொத்தொளி முத்துத் தாம
முறைகின்ற வுருவக் கோலச்
சிகழிகை மகளி ரின்பத்
திறைவனை மகிழ்ச்சி செய்து
மயங்குவா னமைச்ச ரெண்ணி
நிறையநீர் வாவி சாந்தங்
கலந்துடன் பூரித் தாரே.

பொருள் : துறவின்பால் படர்தல் அஞ்சி - (அரசன்) துறவிலே மனம் படர்தற்கு அஞ்சி; தொத்து ஒளி முத்துத்தாமம் - கொத்தாகிய ஒளியையுடைய முத்துமாலை; உறைகின்ற உருவக் கோலச் சிகழிகை - தங்கிய அழகிய ஒப்பனை நிறைந்த மயிர் முடியுடைய; மகளிர் இன்பத்து - மகளிரின் இப்பத்திலே; இறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவான் - அவனைக் களிப்பூட்டி மயக்குதற்கு; அமைச்சர் எண்ணி - மந்திரிகள் ஆராய்ச்சி செய்து; நீர் வாவி நிறைய சாந்தம் உடன் கலந்து பூரித்தார் - நீர் வாவி நிறையச் சந்தனமும் உடன் கலந்து நிறைத்தார்.

விளக்கம் : இறைவன் துறவின்பால் படர்தல் அஞ்சி அவனை மயக்குவான் அமைச்சர் எண்ணிப் பூரித்தார் என்க. இன்பம் பிறத்தற்கு விளையாட்டும் நிலைக்களனாதலின் முதற்கண் நீர் விளையாட்டிற் சீவகனை ஈடுபடுத்த முய்னறார் என்பதாம்.
செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று ஊல்லல் நீத்த உவகை நான்கே. (மெய்ப். - 11)  என்பது தொல்காப்பியம். மகளிரின்பத்திற்கு நீர் விளையாட்டுக் கால் கோளுமாதலுணர்க. ( 55 )

2654. நீரணி மாட வாவி
நேர்ம்புணை நிறைத்து நீணீர்ப்
போரணி மாலை சாந்தம்
புனைமணிச் சிவிறி சுண்ணம்
வாரணி முலையி னார்க்கு
மன்னற்கும் வகுத்து வாவி
யேரணி கொண்ட விந்நீ
ரிறைவகண் டருளு கென்றார்.

பொருள் : மாட நீரணி வாவி - மாடத்தையுடைய (அந்த) நீரணி வாவியிலே; நேர்ம் புணை நிறைத்து - நொய்ய தெப்பங்களையும் நிறைத்து; நீள் நீர்ப்போர் அணி மாலை சாந்தம் புனை மணிச் சிவிறி சுண்ணம் - பெரிய நீர்ப் போருக்கு அழகிய மாலையும் சாந்தமும் மணிச் சிவிறியும் சுண்ணமும்; வார் அணி முலையினார்க்கும் மன்னற்கும் வகுத்து - வாரணிங்த முலை மகளிர்க்கும் வேந்தனுக்கும் என வகுத்து வைத்து; ஏர் அணி கொண்ட இந்நீர் வாவி - அழகிய ஒப்பனை கொண்ட இந்த நீர் வாவியை; இறைவ! கண்டருளுக என்றார் - அரசே! பார்த்தருள்க என்றனர்.

விளக்கம் : நேர்ம்புணை என்புழி மகரம் வண்ண நோக்கித் தோன்றிற்று. நேர் - ஈண்டு நொய்மையின் மேனின்றது. இறைவ : விளி.
( 56 )

2655. கணமலை யரசன் மங்கை கட்டியங் கார னாகப்
பணைமுலை மகளி ரெல்லாம் பவித்திரன் படைய தாக
விணைமலர் மாலை சுண்ண மெரிமணிச் சிவிறி யேந்திப்
புணைபுறந் தழுவித் தூநீர்ப் போர்த்தொழி றொடங்கி னாரே.

பொருள் : கணமலை அரசன் மங்கை கட்டியங்காரனாக - தொகுதியான மலைகளின் அரசன் மகளான காந்தருவதத்தை கட்டியங்காரனாகவும்; பணைமுலை மகளிர் எல்லாம் பவித்திரன்படையதாக - பருத்த முலைகளையுடைய மங்கையர் எல்லோரும் தூய மன்னனின் படையாகவும்; இணை மலர்மாலை சுண்ணம் எரிமணிச் சிவிறி ஏந்தி - இணைத்த மலர் மாலையும் சுண்ணமும் விளங்கும் மணிச் சிவிறி ஏந்தி; புணைபுறம் தழுவி - தெப்பத்தின் புறத்தைத் தழுவியவாறு : போர்த்தொழில் தொடங்கினார் - நீர் விளையாட்டைத் தொடங்கினார்.

விளக்கம் : வேறொரு பகையரசைத் தாம் கேட்டறியாமையானும், கட்டியங்காரன் கொடுமை மனத்தே நிகழ்தலானும், கட்டியங்காரனாக என்றார். ( 57 )

2656. தூமலர் மாலை வாளாச் சுரும்பெழப் புடைத்துந் தேன்சோர்
தாமரைச் சதங்கை மாலை சக்கர மென்ன வீழ்த்துங்
காமரு கணைய மாகக் கண்ணிக ளொழுக விட்டுந்
தோமர மாகத் தொங்கல் சிதறுபு மயங்கி னாரே.

பொருள் : தூமலர் மாலை வாள் ஆ - தூய மலர்மாலை;வாளாக; சுரும்பு எழப் புடைத்தும் - வண்டுகள் எழ ஓச்சியும்; தேன் சோர் தாமரைச் சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும் - தேன் வழியும் தாமரை மலர்போன்ற கைகளாலே சதங்கை மாலையைச் சுழல் படையாக வீழ்த்தும்;கண்ணிகள் காமரு கணையம் ஆக ஒழுக விட்டும் - கண்ணிகளை விருப்பூட்டும் கணையமாக முன்னே மிதக்கவிட்டும்; தொங்கல் தோமரமாகச் சிதறுபு மயங்கினார் - பெரிய மாலைகளைத் தண்டாகச் சிதறியும் தம்மிற் போர் செயக்கலந்தார்.

விளக்கம் : வாளா - வாட்படையாக. சுரும்பு - வண்டு. தேன்சோர் தாமரை என்றது கைகளை. கணையமாகக் காமரு கண்ணிகள் என மாறுக. தோமரம் - ஒரு படைக்கலன். தொங்கல் - ஒருவகை மாலை. மயங்கினார் - கலந்தார் . ( 58 )

2657. அரக்குநீர்ச் சிவிறி யேந்தி
யாயிரந் தாரை செல்லப்
பரப்பினாள் பாவை தத்தை
பைந்தொடி மகளி ரெல்லாந்
தரிக்கிலா ராகித் தாழ்ந்து
தடமுகிற் குளிக்கு மின்போற்
செருக்கிய நெடுங்கண் சேப்பச்
சீதநீர் மூழ்கி னாரே.

பொருள் : அரக்கு நீர்ச் சிவிறி ஏந்தி - இங்குலிகம் கலந்த நீரைச் சிவிறியிலே ஏந்தி; ஆயிரம் தாரை செல்ல - ஆயிரம் தரையாகச் செல்லும்படி; பாவை தத்தை பரப்பினாள் - பாவையாகிய தத்தை (மகளிர்மேற்) செலுத்தினாள்; பைந்தொடி மகளிர் எல்லாம் தரிக்கிலர் ஆகி - பசிய வளையல் அணிந்த மங்கையர் எல்லோரும் அத் தாரைகளைப் பொறாராய்; தாழ்ந்து - ஆற்றல் குறைந்து; செருக்கிய நெடுங்கண் சேப்ப - களித்த நீண்ட விழிகள் சிவக்க; தட முகில் குளிக்கும் மின்போல் - பெரிய முகிலிடையே மறையும் மின்னுக் கொடிகள் போல்; சீதம் நீர் மூழ்கினார் - குளிர்ந்த பொய்கையின் நீரிலே முழுகினர்.

விளக்கம் : தடமுகில் என்பதில் உள்ள தடம் என்னும் சொல்லை எடுத்துத், தடத்துச் சீதநீர் என இயைப்பர் நச்சினார்க்கினியர். நீரில் மூழ்குவதை, வெண்முகில் மறையும் மின்போல என்றுவமை காட்டுவர். ( 59 )

2658. தானக மாட மேறித்
தையலார் ததும்பப் பாய்வார்
வானகத் திழியுந் தோகை
மடமயிற் குழாங்க ளொத்தார்
தேனின மிரியத் தெண்ணீர்க்
குளித்தெழுந் திருவி னன்னார்
பான்மிசை சொரியுந் திங்கள்
பனிக்கடன் முளைத்த தொத்தார்.

பொருள் : தையலார் - (நீரில் மூழ்கிய) அம்மங்கையர்; ததும்ப - (தடத்து நீர்) அலைவதால்; தானக மாடம் ஏறி - (அங்கு மறைந்திருக்க மாட்டாராய்) அங்குள்ள நிர் மாடங்களில் ஏறி; பாய்வார் - திரும்ப நீரிற் பாய்வாராகிய மகளிர்; வானகத்து இழியும் தோகை மடமயில் குழாங்கள் ஓத்தார் - வானிலிருந்து இறங்கும் தோகையையுடைய இளமயில்களின் திரளைப் போன்றனர்; தேன் இனம் இரியத் தெண்ணீர் குளித்து எழும் திருவின் அன்னார் - வண்டினம் ஓடத் தெளிந்த நீரிலே முழுகி எழும் திருமகளைப் போன்றவர்கள்; மிசை பால் சொரியும் திங்கள் படுகடல் முளைத்தது ஒத்தார் - வானிலிருந்து பால்போல் நிலவைப் பொழியும் திங்கள் தான் உண்டாகும் கடலிலே தோன்றியது போன்றனர்.

விளக்கம் : தன்னகமாடம் : விகாரம்; நீரகத்துச் செய்த பல நிலங்களையுடைய மாடம் என்பர் நச்சினார்க்கினியர். தானக மாடம் - ஒருவகை நீர்மாடம். தானக மாடமொடு தலைமணந்தோங்கிய என்றார் கதையினும் (1, 38 : 81). மாடத்தினின்று மிழியும் மகளிர்க்கு வானத்தினின்றிழியும் மயிற்குழாமும் முழுகியிருந்து எழும் மகளிர் முகத்திற்குக் கடலில் எழுந்திங்கள் மண்டிலமும் உவமைகள். ( 60 )

2659. கண்ணிகொண் டெறிய வஞ்சிக்
காறளர்ந் தசைந்து சோர்வார்
சுண்ணமுஞ் சாந்தும் வீழத்
தொழுதன ரிரந்து நிற்பா
ரொண்மலர் மாலை யோச்ச
வொசிந்துகண் பிறழ வொல்கி
வெண்ணெயிற் குழைந்து நிற்பார்
வேற்கணா ராயி னாரே.

பொருள் : கண்ணிகொண்டு எறிய - கண்ணிகொண்டு இவ்வாறு எறிந்ததனால்; வேல் கணார் - வேலனைய கண்ணினர்; அஞ்சிக் கால் தளர்ந்து அசைந்து சோர்வார் - அச்சுற்று நின்ற நிலைகுலைந்து இளைத்துச் சோர்வார் : சுண்ணமும் சாந்தமும் வீழத் தொழுதனர் இரந்து நிற்பார் - சுண்ணப் பொடியும் சந்தனமும் கைசோரத் தொழுது வேண்டி நிற்பார்; ஒண்மலர் மாலை ஓச்ச - சிறந்த மலர்மாலையை ஓச்ச; ஒசிந்து கண் பிறழ ஒல்கி - முரிந்து. கண் பிறழும்படி ஒதுங்கி : வெண்ணெயின் குழைந்து நிற்பார் ஆயினார் - வெண்ணெய்போலக் குழைந்து நிற்பார் ஆயினார்.

விளக்கம் : வேற்கணார் சோர்வாரும் இரந்து நிற்பாரும் குழைந்து நிற்பாரும் ஆயினார் என்க. கண்ணி - தலையிற் சூடுமாலை. சுண்ணம் - நறுமணப்பொடி. தொழுதனர் : முற்றெச்சம். ( 61 )

2660. கூந்தலை யொருகை யேந்திக்
குங்குமத் தாரை பாயப்
பூந்துகி லொருகை யேந்திப்
புகுமிடங் காண்டல் செல்லார்
வேந்தனைச் சரணென் றெய்த
விம்முறு துயர நோக்கிக்
காய்ந்துபொற் சிவிறி யேந்திக்
கார்மழை பொழிவ தொத்தான்.

பொருள் : குங்குமத் தாரை பாய - தத்தையின் சிவிறி யால் குங்கும நீர்த் தாரை பாய்வதால்; கூந்தலை ஒருகை ஏந்திப் பூந்துகில் ஒருகை ஏந்தி - கூந்தலை ஒரு கையில் ஏந்தி, அழகிய துகிலை மற்றொரு கையில் ஏந்தி; புகும் இடம் காண்டல் செல்லார் - புகுமிடம் அறியாராய்; வேந்தனைச் சரண் என்று எய்த - அரசனை அடைக்கலம் என்று அடைய; விம்முறு துயரம் நோக்கி - அவர்களுடைய விம்மல் கொண்ட துயரத்தைப் பார்த்து; காய்ந்து - சினந்து; பொன் சிவிறி ஏந்தி - பொன் சிவிறியைக்கொண்டு; கார் மழை பொழிவது ஒத்தான் - முகில் மழைபெய்வது போன்றான்.

விளக்கம் : தாரைபாயக் கூந்தலை ஒருகை யேந்தித் துகில் ஒருகையேந்தி என இயைக்க. தத்தை விட்ட குங்குமத்தாரை என்க. காண்டல் செல்லார் : ஒரு சொன்னீர்மைத்து. சரண் - அடைக்கலம். ( 62 )

2661. வீக்கினான் றாரை வெய்தாச்
சந்தனத் தளிர்நன் மாலை
யோக்கினார் கண்ணி சுண்ண
முடற்றினா ருருவச் சாந்திற்
பூக்கமழ் துகிலுந் தோடு
மாலையுஞ் சொரியப் போர்தோற்
றாக்கிய வநங்கன் சேனை
யாறலா றாயிற் றன்றே.

பொருள் : சந்தனத் தளிர் நன்மாலை ஓக்கினார் - (அப்போது தத்தை சார்பினர்) சந்தனத் தளிரால் ஆகிய அழகிய மாலையால் அடித்தனர்; கண்ணி சுண்ணம் உருவச் சாந்தின் உடற்றினார் - கண்ணியாலும் சுண்ணதாலும் அழகிய சுண்ணப் பொடியாலும் எறிந்து அவனை வருத்தினார்; தாரை வெய்துஆ வீக்கினான் - (சீவகனும்) நீர்த் தாரையைச் சிவிறியாற் கடிதாக முறுக்கினான்; ஆக்கிய அநங்கன் சேனை - (அப்போது அப்போரை) உண்டாக்கிய காமன் சேனை; போர் தோற்று - போரிலே தோல்வி அடைந்து; பூக் கமழ்துகிலும் தோடும் சுண்ணமும் சொரிய - மலர் மணங்கமழும் ஆடையும் தோடும் சுண்ணப் பொடியும் சிதற; ஆறு அல் ஆறு ஆயிற்று அன்றே - (கெட்டு) வழியல்லா வழிகளிலே சென்றது.

விளக்கம் : மகளிரெல்லாம் காமன் படையாதலின், தத்தை சேனையையும் அநங்கன் சேனை என்றார். ( 63 )

2662. அன்னங்க ளாகி யம்பூந்
தாமரை யல்லி மேய்வார்
பொன்மயி லாகிக் கூந்தல்
போர்த்தனர் குனிந்து நிற்பா
ரின்மலர்க் கமல மாகிப்
பூமுகம் பொருந்த வைப்பார்
மின்னுமே கலையுந் தோடுங்
கொடுத்தடி தொழுது நிற்பார்.

பொருள் : அன்னங்களாகி அம்பூந் தாமரை அல்லி மேய்வார் - அன்னங்களைப்போல அழகிய தாமரை மலரையும் அல்லியையும் மேய்வார்கள்; பொன் மயில் ஆகிக் கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார் - அழகிய மயில் போலக் கூந்தலாற் போர்த்துக் கொண்டு தலை வணங்கி நிற்பார்கள்; இன்மலர்க் கமலம் ஆகிப் பூமுகம் பொருந்த வைப்பார் - இனிய தாமரை மலர்போலத் தம் முகத்தைப் பூவுடன் பொருந்த வைப்பார்கள்; மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடிதொழுது நிற்பார் - ஒளிரும் மேகலையையும் தோட்டையுங் கொடுத்து அடியைத் தொழுது நிற்பார்கள்.

விளக்கம் : தோற்றவர் புல்லைக் கவ்வுதலுண்மையின் அல்லிமேய்வார் என்றார். மேகலையும் தோடும் திறையாக் கொடுத்து என்றவாறு. ( 64 )

2663. பண்ணுரை மகளிர் மாலை
பைந்துகில் கவர்ந்து கொள்ளக்
கண்ணுரை மகளிர் சோர்ந்து
காரிருட் டிவளு மின்போற்
பெண்ணுரைப் பிடிக்கைக் கூந்தற்
பொன்னரி மாலை தாழ
வெண்ணுரை யுடுத்து நின்றார்
வேந்தனோக் குண்ண நின்றார்.

பொருள் : பண் உரை மகளிர் மாலை பைந்துகில் கவர்ந்து கொள்ள - பண்போலும் உரையினையுடைய (அரசன் படையினராகிய) மகளிர், மாலையையும், துகிலையும் கவர்ந்து கொண்டதனாலே; கண் உரை மகளிர் - கண்ணால் அரசனுக்கு வருத்தத்தை யுண்டாக்கும் மகளிராகிய, தத்தையின் படையினர்; சோர்ந்து - சோர்வுற்று; கார் இருள் திவளும் மின்போல் - கரிய இருளிலே நுடங்கும் மின்னுக் கொடிபோல; பெண் உரை - பெண்களுக்கு உவமையாகக் கூறப்படும்; பிடிக்கைக் கூந்தல் - பிடியின் கை போலும் பின்னின கூந்தலிலே; பொன் அரி மாலை தாழ - பொன் மாலை தாழச் (சோர்ந்து), வெண் நுரை உடுத்து நின்றார் - வெள்ளிய நுரையை உடுத்து நின்றவராய்; வேந்தன் நோக்கு உண்ண நின்றார் - அரசன் தமது அழகை நுகர நின்றனர்.

விளக்கம் : பெண்உரைஎன்பதற்குத் தம் பெண்மையைப் பலருக்குங் கூற என்றும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். தமக்குத் தோற்றமை தோன்றத் துகிலைக் கவர்ந்தார். பண்ணுரை - பண்போன்ற இன்மொழி. மாலையையும் துகிலையும் என்க. கண்ணாலுரைக்கு மகளர் என்க. ( 65 )

2664. தன்படை யுடையத் தத்தை
சந்தனத் தாரை வீக்கி
யொன்பது முகத்தி னோடி
யுறுவலி யகலம் பாயப்
பொன்படு சுணங்கு போர்த்த
பொங்கிள முலையிற் றூவான்
முன்படு குலிகத் தாரை
முழுவலி முறுக்க லுற்றான்.

பொருள் : தன் படை உடைய - தன் படை தோற்றதனால்; தத்தை - தத்தையானவள்; சந்தனத் தாரை வீக்கி - சந்தனத் தாரையை வீக்க; ஒன்பது முகத்தின் ஓடி - அஃது ஒன்பது முகமாக ஓடி; உறுவலி அகலம் பாய - சீவகன் மார்பிலே பாய்தலால்; பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இளமுலையில் தூவான் - பொன் போன்ற தேமல் படர்ந்த ததும்பும் இளமுலையிலே தூவானாகி; முன்பு அடு குலிகத்தாரை - தத்தையின் வலியை அடுகின்ற சிவந்த குலிகத்தாரையை; முழுவலி முறுக்கல் உற்றான் - முழுவலியுடன் தாக்கத் தொடங்கினான்.

விளக்கம் : உடைய - தோற்ப, தத்தை : காந்தருவதத்தை. உறு வலி : சீவகன். அகலம் - மார்பு. சுணங்கு - தேமல். முழுவலி : அன்மொழித் தொகையுமாம். ( 66 )

2665. மெய்ப்படு தாரை வீழி
னோமிவட் கென்ன வஞ்சிக்
கைப்படை மன்ன னிற்பக்
கதுப்பயன் மாலை வாங்கிச்
செப்பட முன்கை யாப்பத்
திருமகன் றொலைந்து நின்றான்
பைப்புடை யல்கு லாளைப்
பாழியாற் படுக்க லுற்றே.

பொருள் : மெய்ப்படு தாரை வீழின் இவட்கு நோம் என்ன அஞ்சி - மெய்யிற்படும் நீர்த்தாரை பட்டால் இவட்கு நோகும் என அஞ்சியவனாய்; கைப்படை மன்னன் நிற்ப - கைப்படையாகிய சிவிறியுடன் வேந்தன் நிற்க; கதுப்பு அயல் மாலை வாங்கி - கூந்தலில் உள்ள மாலையை எடுத்து; செப்பட முன்கையாப்ப - (அரசனுடைய) செவ்விய முன்கையைப் பிணிக்க; பைப்புடை அல்குலாளைப் பாழியால் படுக்கல் உற்று - பாம்புப் படத்தின் பக்கம் போன்ற அல்குலுடையாளை, வலிமையாற் கைப்படுக்க முயன்று; திருமகன் தொலைந்து நின்றான் - சீவகன் தோல்வியுற்று நின்றான்.

விளக்கம் : முலைமேற் படின் நோமென்றஞ்சி, மேய்யின்கண் வீச நின்றவன் மெய்யும் நோம் என அஞ்சினான். ஆகவே, தோற்றதாகக் கருதித் தத்தை மலர் மாலையால் அவன் கையைப் பிணித்தாள். ( 67 )

2666. அடுத்தசாந் தலங்கல் சுண்ண
மரும்புனல் கவர வஞ்சி
யுடுத்தபட் டொளிப்ப வொண்பொன்
மேகலை யொன்றும் பேசா
கிடப்பமற் றரச னோக்கிக்
கெட்டதுன் றுகின்மற் றென்ன
மடத்தகை நாணிப் புல்லி
மின்னுச்சேர் பருதி யொத்தான்.

பொருள் : அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும்புனல் கவர - மெய்யிற் பூசிய சாந்தையும் சுண்ணப் பொடியையும் அணிந்த மாலையையும் அரிய நீர் கவர்ந்ததால்; உடுத்த பட்டு அஞ்சி ஒளிப்ப - (அதனைக் கண்டு ) அவள் உடுத்த பட்டு அஞ்சி மறைய; ஒண் மேகலை ஒன்றும் பேசா கிடப்ப - சிறந்த மேகலை ஒன்றும் பேசாது கிடப்ப; அரசன் நோக்கி - அரசன் பார்த்து; உன் துகில் கெட்டது என்ன - உன் ஆடை காணாமற் போயிற்று என்ன; மடத்தகை நாணிப் புல்லி - இளந்தகையாள் வெள்கித் தழுவ; மின்னுச் சேர் பருதியொத்தான் - மின்னற் கொடி தழுவிய ஞாயிறு போன்றான்.

விளக்கம் : பட்டு நனைந்தபடியே மெய்ம்முழுதுந் தோன்றும்படி ஒட்டிக்கொண்டதாற் பட்டொளிப்ப என்றார். ( 68 )

2667. விம்மகிற் புகையின் மேவி
யுடம்பினை வேது செய்து
கொம்மென நாவி நாறுங்
கூந்தலை யுலர்த்தி நொய்ய
வம்மல ருரோமப் பூம்பட்
டுடுத்தபி னனிச்ச மாலை
செம்மலர்த் திருவி னன்னார்
சிகழிகைச் சேர்த்தி னாரே.

பொருள் : விம்மு அகில் புகையின் மேவி - மிகுகின்ற அகிற் புகையிலே பொருந்தி; உடம்பினை வேது செய்து - உடம்பிற்கு வெப்பம் ஊட்டி; கொம் என நாவி நாறும் கூந்தலை உலர்த்தி - விரையக் கத்தூரி கமழும் கூந்தலைக் காய வைத்து; அம்மலர் உரோமப் பூம்பட்டு உடுத்தபின் - அழகிய மலர் வேலை செய்த எலிமயிர்ப் பட்டை உடுத்தபின்; செம் மலர்த் திருவின் அன்னார் - செவ்விய தாமரையில் உள்ள திருமகளைப்போன்றவர்; சிகழிகை அனிச்சம் மாலை சேர்த்தினார் - மயிர் முடியிலே அனிச்ச மலர்மாலை அணிந்தனர்.

விளக்கம் : விம்மகிற்புகை : வினைத்தொகை. கொம்மென: விரைவுக் குறிப்பு. நாவி - கத்தூரி. மலர் உரோமப் பூம்பட்டு - பூவேலை செய்யப்பட்ட மயிரும் பட்டுங் கலந்தியற்றிய அழகிய ஆடை என்க. சிகழிகை - மயிர்முடி. ( 69 )

3. இருது நுகர்வு

வேறு

2668. கார்கொள் குன்றன கண்கவர் தோளினா
னீர்கொ ணீரணி நின்று கனற்றலின்
வார்கொண் மென்முலை வம்பணி கோதையா
ரேர்கோள் சாயலுண் டாடுமற் றென்பவே.

பொருள் : நீர்கொள் நீர் அணி நின்று கனற்றலின் - (மங்கையரின்) நீர்மைகொண்ட நீர்க்கோலம் உள்ளத்தே நின்று அழற்றலின்; கார்கொள் குன்று அன கண்கவர் தோளினான் - கார்காலத்திலே குன்றைப்போலக் கண்ணைக் கவரும் தோளினான்; வார்கொள் மென்முலை வம்பு அணி கோதையர் - கச்சினால் இறுக்கிய மெல்லிய முலையிலே மணந்தரும் கலவைச் சாந்தணிந்த மகளிரின்;ஏர் கொள் சாயல் உண்டு ஆடும் - அவர்தம் அழகு கொண்ட மென்மையை முன்னர்க் கண்ணாலே நுகர்ந்து, பின்னர் அவர்களுடன் விளையாடுவான்.

விளக்கம் : ஆடும் : எதிர்காலம்; மேற் கூறப்படும் ஆறு காலத்தினும் விளையாடுவான். ( 70 )

முதுவேனில்

2669. வேனில் வாய்க்கதிர் வெம்பலின் மேனிலைத்
தேனு லாங்குளிர் சந்தனச் சேற்றிடைத்
தானு லாய்த்தட மென்முலைத் தங்கினான்
பானி லாக்கதிர் பாய்தரு பள்ளியே.

பொருள் : வேனில் வாய்க் கதிர் வெம்பலின் - முதுவேனிற் காலத்திலே ஞாயிறு கொதித்தலின்; மேல்நிலைத் தேன் உலாம் குளிர் சந்தனச் சேற்றிடை - (அதற்காற்றாமல்) மேல் நிலத்திலே தேக்கிய வண்டுகள் உலாவும் குளிர்ந்த சந்தனச் சேற்றில்; தான் உலாய் - அவன் உலாவி; பால் நிலாக் கதிர் பாய்தரு பள்ளி - பால் போன்ற நிலவின் கதிர் பாய்கின்ற பள்ளியிலே; மென் முலைத்தடம் தங்கினான் - மென் முலையாகிய தடத்திலே தங்கினான்.

விளக்கம் : கார்காலத்தைக்கொண்ட குளிர்ந்த குன்று என்றவாறு. தோளினான் : சீவகன். நீர் - நீர்மை. உள்ளத்தே நின்று என்க. வார் - கச்சு. வம்பு - மணம். ஏர் - எழுச்சி. ( 71 )

2670. முழுது மெய்ந்நல மூழ்கலி னீர்சுமந்
தெழுது கண்ணிரங் கப்புரு வக்கொடி
தொழுவ போன்முரி யச்சொரி பூஞ்சிகை
யழுவ போன்றணி நித்தில முக்கவே.

பொருள் : மெய்ந்நலம் முழுதும் மூழ்கலின் - (அவன் அவர்களின்) உடல் நலமாகிய தடத்தே முழுவதும் மூழ்கலின்; எழுதுகண் நீர் சுமந்து இரங்க - மையெழுதிய கண்கள் (அதற்கஞ்சி) நீரைச் சுமந்து இரங்காநிற்க; புருவக் கொடி தொழுவபோல் முரிய - புருவமாகிய கொடி (நீ வருத்தினை என்று) தொழுவனபோல வளையாநிற்க; பூஞ்சிகை அணி நித்திலம் அழுவ போன்ற உக்க - மலரையுடைய கூந்தலில் அணிந்த முத்துக்களை அக் கூந்தல் அழுவன போலச் சிந்தின.

விளக்கம் : நலமாகிய குளத்தில் என்க. எழுதுகண் : வினைத்தொகை; மையெழுதிய கண்ணென்க. புருவமாகிய கொடியென்க. நித்திலம் - முத்து. ( 72 )

2671. எழுத்தின் பாடலு மாடலு மென்றிவை
பழத்த கற்பகப் பன்மணிக் கொம்பனா
ரழுத்தி யன்ன வணிவளைத் தோண்மிசைக்
கழிக்கு மைங்கணைக் காமற்குங் காமனே.

பொருள் : ஐங்கணைக் காமற்குங் காமன் - ஐங்கணையுடைய காமனையும் வருத்துகின்ற காமன்; எழுத்தின் பாடலும் ஆடலும் என்று இவை - எழுத்தின் வடிவு தோன்றும் பாட்டையும் கூத்தையும் (கேட்டும் கண்டும்); பழுத்த கற்பகப் பன்மணிக் கொம்பு அனார் - கனிந்த, கற்பகத்தின் பல்மணிகளையுடைய கொம்பு போன்ற மகளிரின்; அணி வளை அழுத்தி அன்ன தோள்மிசை - அழகிய வளையை அழுத்தினாற்போல அணிந்த தோளிலே; கழிக்கும் (முதுவேனிலைக்) கழிப்பான்.

விளக்கம் : எழுத்தாலாய பாடல் என்க. ஆடல் - கூத்து. பாடலும் ஆடலும் என்பதற்கேற்பக் கேட்டும் கண்டும் என்க. ( 73 )

கார்

2672. நீர்து ளும்பு வயிற்றின் னிழன்முகில்
பார்து ளும்ப முழங்கலிற் பல்கலை
யேர்து ளும்ப வெரீஇயிறை வற்றழீஇக்
கார்து ளும்புகொம் பிற்கவி னெய்தினார்.

பொருள் : நீர் துளும்பு வயிற்றின் நிழல் முகில் - நீர் அசையும் வயிற்றையுடைய ஒளி பொருந்திய முகில்; பார் துளும்பு முழங்கலின் - நிலம் அசைய முழங்குவதாலே; பல்கலை ஏர் துளும்ப வெரீஇ - பல மணிகளையுடைய மேகலையின் அழகு அசைய அச்சம் உற்று; இறைவன் தழீஇ - அரசனைத் தழுவி; கார்துளும்பு கொம்பின் கவின் எய்தினார் - கார்காலத்தே அசையும் கொம்புபோல அழகுற்றனர்.

விளக்கம் : துளும்புதல் நான்கும் அசைதல் என்னும் ஒரே பொருளன். பார்- நிலம். ஏர் - அழகு. வெரீஇ - வெருவி - அஞ்சி. இறைவன் : சீவகன். தழீஇ - தழுவி. கவின் - அழகு. ( 74 )

2673. இழிந்து கீழ்நிலை யின்னகிற் சேக்கைமேற்
கிழிந்து சாந்தழி யக்கிளர் மென்முலை
தொழிந்து மட்டொழு கத்துதை தார்பொர
வழிந்த மேகலை யஞ்சிலம் பார்த்தவே.

பொருள் : கீழ்நிலை இழிந்து - (மழை பெய்தலாற்) கீழ் நிலையிலே இறங்கி; இன் அகில் சேக்கைமேல் - இனிய அகில் மணங் கமழும் பள்ளியிலே; கிளர் மென்முலை சாந்து அழிய - விளங்கும் மென்முலையிலுள்ள சாந்து அழியவும்; கிழிந்து தொழிந்து மட்டு ஒழுகத் துதைதார் பொர - மலர் கிழிந்து சிதறித் தேன் ஒழுகும்படி அரசனுடைய நெருங்கிய தூசிப் படை பொருதலாலே; மேகலை அழிந்த - அவர்களுடைய மேகலைகளும் பொருதழிந்தன; அம் சிலம்பு ஆர்த்த - (அதுகண்டு) அழகிய சிலம்புகள் ஆர்த்தன.

விளக்கம் : தொழிந்துதொழித்து என்பதன் விகாரம். தொழித்து - சிதறி. தார் என்றதற் கேற்பப் பொருதல் கூறினார். தார் - மாலை; தூசிப் படை. மகளிர் தொழிலால் மேகலையும் தலைவன் தொழிலால் சிலம்பும் ஆர்த்தன. ( 75 )

2674. தேனி றாலன தீஞ்சுவை யின்னடை
யான றாமுலைப் பாலமு தல்லதொன்
றானு மேவல ரச்சுற வெய்திய
மான றாமட நோக்கிய ரென்பவே.

பொருள் : தேன் இறால் அன தீசுவை இன் அடை - தேன் அடைபோன்ற இனிய சுவையை உடைய அடையும்; ஆன் அறா முலைப்பால் அழுது - ஆவினிடம் எப்போதும் கிடைக்கும் முலைப்பால் கலந்த சோறும்; அல்லது - அல்லாமல்; அச்சுறவு எய்திய மான் அறா மடநோக்கியர் - அஞ்சுதல் பொருந்திய மானின் நோக்கம் நீங்காத மடநோக்கியரான மங்கையர்; ஒன்றானும் மேவலர் - அவிழ் பதம் ஒன்றாயினும் விரும்பிலர்.

விளக்கம் : தேனிறால் - தேனடை, இன்னடை என்றது பண்ணிகாரத்தை. இறால் புரையும் மெல்லடை என்றார் மதுரைக் காஞ்சியினும் (624) வடிவினாலும் மென்மையாலும் இனிமையாலும் இறாலையொத்த அடை. எந்நாளும் பாலறாத ஆனினது முலையிற் பாலமுதம்; என்றது சினை மேலும் கறக்கும் பசுவெனப் பசுவினது விசேடங் கூறிற்று. அமுதென்றதனால் பசுவினது முதுகொற்றிப் பாலே காமநுகர்வார்க் குறித்து என நூலிற் கூறியவாறே கூறினார் என்பர் நச்சினார்க்கினியர். அச்சுறவு - அஞ்சுதல். பாலும் தேனும் கலப்பால் இன்சுவைத்தென்பது பாலோடு தேன்கலந்தற்றே என்னும் பொதுமறையான் உணர்க. ( 76 )

கூதிர்

வேறு

2675. கூதிர்வந் துலாவலிற் குவவு மென்முலை
வேதுசெய் சாந்தமும் வெய்ய தேறலும்
போதவிழ் மாலையும் புகையுஞ் சுண்ணமுங்
காதலித் தார்கருங் குவளைக் கண்ணினார்.

பொருள் : கூதிர் வந்து உலாவலின் - (காருக்குப் பின்) கூதிர்க் காலம் வந்து பரத்தலின்; கருங்குவளைக் கண்ணினார் - கரிய குவளை போலுங் கண்களையுடையார்; குவவு மென்முலை வேது செய் சாந்தமும் - திரண்ட மென் முலையை வெம்மை செய்யும் அகிற் சாந்தமும்; வெய்ய தேறலும் - விருப்பமூட்டும் தேறலும்; போது அவில் மாலையும் - மலர் விரிந்த மாலையும்; புகையும் - அகிற் புகையும்; சுண்ணமும் - சுண்ணப் பொடியும்; காதலித்தார் - விரும்பினார்.

விளக்கம் : கூதிர்- அறுவகைப் பருவத்துளொன்று. வேது - வெம்மை. தேறல் - கள். புகை - நறுமணப்புகை. ( 77 )

2676. சுரும்புநின் றறாமலர்த் தொங்க லார்கவி
னரும்புகின் றார்கட லமிர்த மேயெனா
விரும்புகின் றானிள வேனில் வேந்தனைஞ்
சரங்கள்சென் றழுத்தலிற் றரணி மன்னனே.

பொருள் : இளவேனில் வேந்தன் ஐஞ்சரங்கள் சென்று அழுத்தலின் - இளவேனிலின் அரசனாகிய காமனுடைய ஐங்கணைகளும் சென்று அழுத்துதலின்; தரணி மன்னன் - உலக காவலன்; சுரும்பு நின்று அறாமலர்த் தொடஙகலார் - வண்டுகள் மாறாது முரலும் மலர் மாலையாராகிய; கவின் அரும்புகின்றார் - அழகு மலர்ந்தவர்களை (அக் காலத்துக்கு வேண்டும் பொருள்களை அவர்களிருக்குமிடத்திற் கொண்டு கொடுத்து); கடல் அமிர்தமே எனா விரும்புகின்றான் - கடலின் அமிர்தமே என்று கருதி விரும்பி நுகர்வானாயினான்.

விளக்கம் : சுரும்பு - வண்டு. அரும்புகின்றார்: வினையாலணையும் பெயர். எனா - என்று. வேனில் வேந்தன் : காமன். சரங்கள் - அம்புகள், மன்னன் : சீவகன். ( 78 )

2677. குழைமுக மிடவயிற் கோட்டி யேந்திய
வழனிறத் தேறலுண் மதிகண் டையென
நிழன்முகப் பகைகெடப் பருகி நீள்விசும்
புலலெனா நோக்குவாண் மதிகண்டூடினாள்.

பொருள் : ஏந்திய அழல்நிறத் தேறல் - (தனக்குக் கொடுக்க) ஏந்திய அழல் நிறமுடைய தேறலை; குழை முகம் இடவயின் கோட்டி - (குணமாலை) குழையணிந்த முகத்தை இடத்தே வளைத்துப் (பார்த்து); உள்மதி கண்டு - அதனுள்ளே தன்முகமாகிய திங்கள் தோன்றக்கண்டு அதனைத் திங்களாகவே கருதி; நிழல் முகப் பகைகெட - ஒளியுறும் தன் முகத்திற்குப் பகையாகிய அத் திங்கள் கெடும்படி; ஐ எனப் பருகி - விரைந்து பருகி; நீள் விசும்பு உழல் எனா - நீண்ட வானிலே உழல்வாயாக என்று கூறி; நோக்குவாள் மதிகண்டு ஊடினாள் - வானை நோக்குகின்றவள் மதியைக் கண்டு ஊடினாள். ( 79 )

2678. பருகினேற் கொளித்துநீ பசலை நோயொடு
முருகிப்போ யின்னுமற் றுளையென் றுள்சுடக்
குருதிகண் கொளக்குண மாலை யூடினா
ளுருவத்தா லுறத்தழீஇ யுடற்றி நீக்குவான்

பொருள் : பருகினேற்கு - விரையப் பருகிய எனக்கு; நீ பசலை நோயொடும் உருகி ஒளித்துப்போய் - நீ பசலை நோயுடன் உருகிப் பின்னர் ஒளித்துச் சென்று; இன்னும் உளை என்று - இன்னும் இருக்கின்றனை என்று; உள்சுட - மனம் வெதும்ப; கண் குருதிகொள் - கண்சிவப்ப; குணமலை ஊடினாள் - குணமாலை ஊடினாள்; உருவத் தார் உறத் தழீஇ உடற்றி நீக்குவான் - அழகிய தார் பொருந்த வருத்தத் தழுவி நீக்குகின்ற மன்னன்.

விளக்கம் : இப்பாட்டுக் குளகம். தேறல் உண்டதனாற் சிவந்த கண்கள் மதியோடூடிச் சிவந்தன என்றார். பருகி......உளை குணமாலை திங்களை நோக்கிக் கூறியது. இன்னும் உளை என்றது இறந்துபட்டாயல்லை என்று சினந்தபடியாம். கண் குருதிகொள என மாறுக. நீக்குவான் : சீவகன்; வினையாலனையும் பெயர். ( 80 )

2679. நங்கைநின் முகவொளி யெறிப்ப நன்மதி
யங்கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது
மங்கைநின் மனத்தினால் வருந்த லென்றவள்
பொங்கிள வனமுலை பொருந்தி னானரோ.

பொருள் : நங்கை! - நங்காய்!; நின்முக ஒளி அங்கு எறிப்ப - நின் முகத்தின் ஒளி அங்குச் சென்று வீசியதனால்; நிழல் மதி அதோ உள் கறுத்து அழகின் தேய்ந்தது - ஒளியையுடைய திங்கள் அதோ உள்ளே கறுத்து அழகினின்றும் நீங்கித் தோய்ந்தது; மங்கை! - மங்கையே!; நின் மனத்தினால் வருந்தல் - நின் உள்ளத்தினால் வருந்தாதே; என்று - என்றுரைத்து; அவள் பொங்கு இள வனமுலை பொருந்தினான் - அவளுடைய விம்மும் இளமுலைகளைத் தழுவினான்.

விளக்கம் : மதி அழகு நீங்கித் தேய்ந்தது என்றதனால், அது நினக்கு ஒப்பாகாது என்றும் ஒப்பாகாதவருடன் பகைப்பது அறமன் றென்றுங் குறினானாயிற்று. ( 81 )

முன்பனி

வேறு

2680. கொங்கு விம்முபூங் கோதை மாதரார்
பங்க யப்பகைப் பருவம் வந்தென
வெங்கு மில்லன வெலிம யிர்த்தொழிற்
பொங்கு பூம்புகைப் போர்வை மேயினார்.

பொருள் : கொங்கு விம்மு பூங்கோதை மாதரார் - மணம் விம்மும் மலர் மாலையணிந்த மாதர்கள்; பங்கயப் பகைப்பருவம் வந்தென - தாமரைக்குப் பகையாகிய பனிப்பருவம் வந்ததாக; பொங்கு பூம்புகை - பொங்கும் பொலிவுறு புகையூட்டிய; எலி மயிர்த் தொழில் - எலிமயிரால் தொழில் செய்யப்பட்ட; எங்கும் இல்லன போர்வை மேயினார் - எங்கும் இல்லனவாகிய போர்வையை விரும்பிப் போர்த்தினர்.

விளக்கம் : கொங்கு - மணம். பங்கயம் - தாமரை; பங்கயத்திற்குப் பகையாகிய பருவம் என்க; அது. பனிப்பருவம். வந்தென - வந்ததாக. எங்கும் - பிறநாட்டின்கண் எவ்விடத்தும் என்க. ( 82 )

2681. கூந்த லின்புகைக் குவவு மென்முலைச்
சாந்த மேந்திய தமால மாலையு
மாய்ந்து தாங்கின ரரவ மேகலை
காய்ந்து நித்திலங் கடிய சிந்தினார்.

பொருள் : கூந்தல் இன் புகை - கூந்தலிலே இனிய புகையையும்; சாந்தம் ஏந்திய மென்முலை - (முன்னர்ச்) சந்தனந் தாங்கிய திரண்ட மெல்லிய முலைகளிலே; தமால மாலையும் - பச்சிலையால் தொடுத்த மாலையையும்; ஆய்ந்து தாங்கினார் - (பனிக் காலத்திற்குத் தக) ஆராய்ந்து அணிந்தனர்; அரவம் மேகலை காய்ந்து - ஒலி தரும் மேகலையை நீக்கி; நித்திலம் கடிய சிந்தினார் - முத்துக்களை விரைய நீக்கினார்.

விளக்கம் : பனிக் காலத்திற்கு மேகலையும் முத்தும் சந்தனமும் ஆகாவென நீக்கினார். தமாலம் - பச்சிலை மரம். ( 83 )

2682. அளிந்த தீம்பழ மிஞ்சி யார்ந்தநீர்
விளைந்த வல்விளை வரிசி வேரியும்
வளைந்த மின்னனார் மகிழ்ந்து சண்பக
முளைந்து மல்லிகை யொலியல் சூடினார்.

பொருள் : அளிந்த தீம்பழம் நீர் ஆர்ந்த இஞ்சி - அளிந்த இனிய எலுமிச்சம்பழ நீரிலே பொருந்திய செவ்விஞ்சியும்; அரிசி விளைந்த வல்விளைவு - அரிசி வலிய விளைவாக விளைந்த பொரி அவல் முதலியனவும்; வேரியும் .- மதுவும்; வளைந்த மின் அனார் மகிழ்ந்து - வளைந்த மின்னுக் கொடிபோன்றவர் மகிழ்ந்து (நுகர்ந்து); சண்பகம் உளைந்து - சிறு சண்பகத்தை வெறுத்து; ஒலியல் சூடினார் - மல்லிகை மாலையைச் சூடினார்.

விளக்கம் : அரிசி வலிய விளைவாக விளைந்தவை பொரி, அவல் முதலியன. கருப்புக் கட்டி முதலிய பரலவுங் கூட்டி முறுகப் பொரித்தலின், வலிய விளைவாயிற்று. இனி, பழமும் இஞ்சியும் நீரிலே நின்று விளைந்த வலிய விளைதலையுடைய அல்லி யரிசியென்றும் உரைப்ப ( 84 )

2683. தொத்து டைம்மலர்த் தொங்கல் கண்பொர
முத்து டைம்முலைக் கண்க ணொந்தவென்
றெய்த்த டிச்சிலம் பிரங்கு மின்குரல்
கைத்தெ டுத்தலிற் காமந் தாழ்ந்ததே.

பொருள் : தொத்து உடை மலர்த் தொங்கள் கண்பொர - கொத்தாக உள்ள மலர் மாலை முலைக்கண்களைத் தாக்கலால்; முத்து உடை முலைக்கண்கள் நொந்த என்று - முத்துக்களையுடைய அம் முலைக்கண்கள் நொந்தன என்று (முன்னர்க்) கூறி; அடிச் சிலம்பு எய்த்து இரங்கும் இன்குரல் - அடியிலுள்ள சிலம்புகள் இளைத்து ஒலிக்கும் இனிய குரலை; கைத்து எடுத்தலின் காமம் தாழ்ந்தது - செலுத்தி எழுப்புதலாலே காம இன்பம் அக் காலத்தே தங்கியது.

விளக்கம் : தொத்து - கொத்து. உடைம்மலர் எனவும் உடைம்முலை எனவும் ஈரிடத்தும், மகரம் வண்ணத்தால் விரிந்தது. தொங்கல் - மாலை. எய்த்து - இளைத்து. கைத்து - செலுத்தி. ( 85 )

2684. பொன்ப னிப்புறும் பொற்பி னார்நல
மன்ப னித்தலை யணங்க வத்தலை
முன்ப னித்தலை முழுது நீங்கிப்போய்ப்
பின்ப னித்தலை பேண வந்ததே.

பொருள் : பொன் பனிப்பு உறும் பொற்பினார் நலம் - திரு மகளும் வருந்தும் அழகினார் நலம்; அன்பன் இத்தலை அணங்க - அன்பனை இக்காலத்தே வருத்துதலால்; அத்தலை - அதனுடன்; முன்பனித்தலை முழுதும் நீங்கிப் போய் - முன்பனிக் காலம் முழுதும் நீங்கிப்போய்; பின் பனித்தலை பேண வந்தது - பின் பனிக் காலம் (அவர்கள்) எதிர்கொள்ளும்படி வந்தது.

விளக்கம் : பொன் - திருமகள். பனித்தல் - இவர் அழகிற்கு ஒவ்வேமென்று வருந்துதல், பொற்பு - பொலிவு. அன்பன் : சீவகன். முன்பனி பின்பனி என்பன பருவங்கள். ஈரிடத்தும் தலை என்பது காலம் என்னும் பொருள் குறித்தது. ( 86 )

2685. வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண்மலர்க்
கள்செய் மாலையார் கண்கொ ளாத்துகி
லள்ளி யேந்திய வரத்த வல்குலா
ரொள்ளெ ரிம்மணி யுருவப் பூணினார்

பொருள் : வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண்மலர் - வெள்ளி லோத்திரத்தினது விளங்கும் வெண்லராற் செய்த; கள்செய் மாலையார் - தேன் பொருந்திய மாலையினார்; அரத்தம் அள்ளி ஏந்திய கண்கொளாத் துகில் - செந்நிறத்தை வாரிக் கொண்டு, கண்ணாற் காணவியலாத மெல்லிய துகிலை; அல்குலார் - அணிந்த அல்குலினார்; ஒள்எரி மணி உருவப் பூணினார் - சிறந்த ஒளி வீசும் மணியாலாகிய அழகிய அணியினார்.

விளக்கம் : அடுத்த செய்யுளுடன் தொடரும். அரத்தந் தோயாமல் இயல்பான செந்நிறமுடைய துகில் கோபத் தன்ன தோயாப் பூந்துகில் (முருகு.15), அரத்தத்தை அள்ளி ஏந்திய அல்குல் என்றும் உரைப்பர். ( 87 )

2686. செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி
ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பல
மன்ன ருய்ப்பன மகிழ்ந்து தாங்கினா
ரென்ன ரொப்புமில் லவர்க ளென்பவே.

பொருள் : செந்நெருப்பு உணும் செவ்வெலி மயிர் - சிவந்த நெருப்பை யுண்ணும் சிவந்த எலியின் மயிராலாகிய; அந்நெருப்பளவு ஆய்பொன் கம்பலம் - அந்த நெருப்பின் அளவு வெம்மைய என்று ஆராய்ந்த பொலிவினையுடைய கம்பலம்; மன்னர் உய்ப்பன - அரசராற்றிறையாகக் கொண்டுவரப்பட்டன வாய் உள்ளவற்றை; என்னர் ஒப்பும் இல்லவர்கள் - எத்தன்மையரும் ஒப்புமையில்லாதவர்களாகிய அம் மகளிர்; மகிழ்ந்து தாங்கினார் - விரும்பி அணிந்தனர்.

விளக்கம் : என்னருப்பு மில்லவர் என்று பாடம் ஓதி, எக்குற்றமும் இல்லாதவர் என்றும் உரைப்பர். நெருப்பைத் தின்னும் இயல்புடைய எலியுண்மையும் அதன்மயிரால் அழகிய கம்பலம் செய்யப்பட்டன என்பதும் அக் கம்பலம் மிக்க வெம்மையைத் தருவனவென்பதும் இதனால் உணர்க. ( 88 )

2687. ஆட லின்சுவை யமர்ந்து நாடொறும்
பாடன் மெய்ந்நிறீப் பருகிப் பண்சுவைத்
தோடு மாமதி யுரிஞ்சு மொண்பொனின்
மாடக் கீழ்நிலை மகிழ்ந்து வைகினார்.

பொருள் : நாடொறும் ஆடல் இன்சுவை அமர்ந்தும் - நாள்தோறும் கூத்தின் இனிய சுவையை நுகர்ந்தும்; பாடல் மெய்ந்நிறீஇப் பருகிப் பண்சுவைத்து - இசையை உண்மையாக நிறுத்தி அப் பண்ணைச் சுவைத்தும்; ஓடும் மாமதி உரிஞ்சும் ஒண்பொனின் மாடக்கீழ்நிலை - வானிற் செல்லும் பெருமதியை உரிஞ்சும் சிறந்த பொன்னாலான மாடத்தின் கீழ்நிலத்திலே; மகிழ்ந்து வைகினார் - களித்துத் தங்கினார்.

விளக்கம் : அமர்ந்து - விரும்பி. நிறீஇ - நிறுத்தி. ஓடும் - இயங்கா நின்ற. மாடக்கு - மாடத்திற்கு. ( 89 )

வேறு

2688. புரிக்குழன் மடந்தையர் பொம்மல் வெம்முலை
திருக்கழற் குருசிறார் திளைக்கும் போரினுட்
செருக்குரற் சிறுபறை சிலம்பு கிண்கிணி
யரிப்பறை மேகலை யாகி யார்த்தவே.

பொருள் : புரிக்குழல். மடந்தையர் பொம்மல் வெம்முலை - நெளிவினையுடைய குழலாராம் மங்கையரின் பருத்த வெம்முலைகளும்; திருக்கழல் குருசில்தார் - அழகிய கழலணிந்த குரிசிலின் தாரும்; திளைக்கும் போரினுள் - பொருகின்ற போரிலே; செருக்குரல் சிறுபறை - போர்க்குரலையுடைய சிறுபறைகளாக; சிலம்பு கிண்கிணி - சிலம்பும் கிண்கிணியும் ஆகியும்; அரிப்பறை மேகலை ஆகி - அரிப் பறையாக மேகலை ஆகியும்; ஆர்த்த - ஆர்த்தன.

விளக்கம் : மடந்தையர் - ஈண்டுச் சீவகன் மனைவிமார். பொம்மல் - பெருமை. வெம்முலை - வெம்மையுடைய முலை; விரும்புதற்குக் காரணமான முலையுமாம். குருசில் : சீவகன். செரு - போர். போரையுண்டாக்கும் குரல் என்க. சிலும்பும் கிண்கிணியும் சிறுபறையாகி மேகலை அரிப்பறையாகி ஆர்த்த என்க. ( 90 )

2689. ஏச்செயாச் சிலைநுத லேழை மார்முலைத்
தூச்செயாக் குங்குமந் துதைந்த வண்டினம்
வாய்ச்சியா லிட்டிகை செத்து மாந்தர்தம்
பூச்செயா மேனிபோற் பொலிந்து தோன்றுமே.

பொருள் : ஏச் செயாச் சிலைநுதல் ஏழைமார் - அம்பை ஏவும் தொழிலைச் செய்யாத வில்போலும் நுதலையுடைய மங்கையரின்; முலைத் தூச்செயாக் குங்குமம் துதைந்த வண்டினம் - முலையிலுள்ள கழுவாத குங்குமத்திலே படிந்த வண்டின் திரள்; வாய்ச்சியால் இட்டிகை செத்தும் மாந்தர்தம் - வாய்ச்சி எனுங் கருவியாலே செங்கல்லைச் செத்தும் மக்களின்; பூச்செயாமேனிபோல் பொலிந்து தோன்றும் - கழுவாத உடம்பைப்போல விளக்கித் தோன்றும்.

விளக்கம் : வண்டினம் படிதற்குக் காரணமான குங்குமம் மேனி போல் தோன்றும் என்றும் கூட்டி உரைப்பர் நச்சினார்க்கினியர்.  ஏ - எய்தற்றொழில். ஏத்தொழில் செய்தற்கு ஏறிட்டும் அத்தொழில் செய்யாத விற்போலும் நுதல். வாய்ச்சி - ஒரு கருவி. இட்டிகை - செங்கல். பூச்செயா - கழுவாத. ( 91 )

இளவேனில்

வேறு

2690. குரவம் பாவை கொப்புளித்துக்
குளிர்சங் கீர்ந்த துகளேபோன்
மரவம் பாவை வயிறாரப்
பருகி வாடை யதுநடப்ப
விரவித் தென்றல் விடுதூதா
வேனி லாற்கு விருந்தேந்தி
வரவு நோக்கி வயாமரங்க
ளிலையூழ்த் திணாபுன் றலர்ந்தனவே.

பொருள் : குளிர்சங்கு ஈர்ந்த துகளேபோல் - குளிர்ந்த சங்கினை அறுத்த தூசிபோல; குரவம் பாவை பொப்புளித்து - குரவு ஈன்ற தேனைக் கொப்புளித்து; மரவம் பாவை வயிறு ஆரப்பருகி - மரவம் தந்த தேனை வயிறு நிறையப் பருகி ; வாடை நடப்ப - வாடை போகாநிற்க; விரவித் தென்றல் விடுதூதுஆ - வாடையுடன் கலந்த தென்றலை விடுகின்ற தூதாகக் கொண்டு; வேனிலாற்கு விருந்து ஏந்தி - காமனுக்கு இடுகின்ற விருந்தை ஏந்தி; வரவு நோக்கி - அவன் வரவை எதிர்பார்த்து; இலையூழ்த்து வயாமரங்கள் - அதனாலே இலையை உதிர்த்து வயா நோய்கொண்ட மரங்கள்; இணர்ஈன்று அலர்ந்தன - மலர்க்கொத்துக்களை ஈன்று மலர்ந்தன.

விளக்கம் : வாடை தொடங்கின காலத்தே குரவம் பூத்தலின், அத் தேனைப் பல்காலும் உண்டு தெவிட்டினமை தோன்றக், கொப்புளித்து என்றார். கொப்புளித்தல் - காற்றுச் சிதற அடித்தல். பாவை இரண்டும் உவமையாகுபெயர். வாடை கழிகின்ற காலத்தே மரவம் பூத்த புதுமைபற்றி, வயிறாரப் பருகி என்றார் இதனாற் காற்று மிகச்சிதற அடியாமை கூறிற்று. தென்றல் வரவி என்றார் தென்றல் வாடை போகாநிற்க விரவி வருகின்ற வரவைக் குறித்து. வாடையது : அது : பகுதிப் பொருள் விகுதி. நச்சினார்க்கினியர் அது என்னும் சொல்லைப் பிரிந்து அது விடுதூதா என இயைத்துத் தென்றலைச் சுட்டுகின்றதென்பர். ஏந்தி - மேற்கொண்டு.

மேலும் நச்சினார்க்கினியர் விளக்கம்:- இதனால் வாடையும் தென்றலும் முன்னர் விரவித்தென்றல் பின்பு முதிர்ந்ததென்றார். கொய்புனத்துப் பருகி என்பனவும், வயாமரம் என்பதூஉம், மாற்றருஞ் சிறப்பின் மரபன்றி, வழக்கின்கண் அடிப்பட்டு செய்யுளின்பம்பட வந்த மரபென்று மரபியலிற் பாதுகாத்தாம். ( 92 )

2691. இளிவாய்ப் பிரசம் யாழாக
விருங்கட் டும்பி குழலாகக்
களிவாய்க் குயில்கண் முழவாகக்
கடிபூம் பொழில்க ளரங்காகத்
தளிர்போன் மடவார்தணந்தார்தந்
தடந்தோள் வளையு மாமையும்
விளியாக் கொண்டிங் கிளவேனில்
விருந்தா வாட றொடக்கினான்.

பொருள் : இளிவாய்ப் பிரசம் யாழாக - இளி என்னும் பண்ணையிசைக்கும் வண்டு யாழாகவும்; இருங்கண் தும்பி குழல் ஆக - கரிய கண்களையுடைய தும்பி குழல் ஆகவும்; களிவாய்க் குயில்கள் முழவு ஆக - களிப்பையுடைய குயில்கள் முழவாகவும்; கடிபூம் பொழில்கள் அரங்கு ஆக - மணமுறும் மலர்ப் பொழில்கள் அரங்காகவும்; தளிர்போல் மடவார் - தளிரனைய மேனியையுடைய மங்கையரில்; தணந்தார்தம் - கணவரைப் பிரிந்தவர்களின்; தடத்தோள் வளையும் மாமையும் - பெரிய தோளிலிருந்து வளை கழன்றபடியும் மாமைநிறங் கெட்டபடியும்; விளியாகக் கொண்டு - (கணவருணரத் தூது சென்ற பாணன் யாழ்மேல் வைத்துப் பாடும் பாட்டைப்) பாட்டாகக் கொண்டு; இங்கு இளவேனில் விந்தா ஆடல் தொடங்கினான் - இப்போது இளவேனில் புதியதாக ஆடலைத் தொடங்கினான்.

விளக்கம் : இளி - இளியென்னும் நரம்பு. நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை யுரைத்தல் - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய (தொல். கற்பு. 24) என்பதனாற் கணவரைப் பிரிந்த மகளிரின் மெலிவைப் பாட்டாகக் கொண்டு பாணன் அம் மகளிரின் கணவரிடம் பாடுதல் கொள்க. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் (திரி.11) என்றார் பிறரும். ( 93 )

2692. வேனி லாடும் விருப்பினால்
வியன்காய் நெல்லிச் சாந்தரைத்து
நான வெண்ணெய் கதுப்புரைத்து
நறுநீ ராடி யமிர்துயிர்க்குந்
தேனா ரகிலின் புகைசேர்த்தி
வகுத்து நாவிக் குழம்புறீஇ
யானாப் பளித நறுஞ்சுண்ண
முகிரி னுழுதாங் கணிந்தாரே.

பொருள் : வேனில் ஆடும் விருப்பினால் - வேனிலில் விளையாடும் விருப்பதினால்; வியன்காய் நெல்லிச் சாந்து அரைத்து- பெரிய நெல்லிக்காயைச் சாந்தாக அரைத்துக்கொண்டு; நான் எண்ணெய் கதுப்பு உரைத்து - கத்தூரி கலந்த எண்ணெயைக் கூந்தலிலே தேய்த்து; நறுநீராடி - (அச் சாந்தைக் கொண்டு) நல்ல நீரிலே குளித்து; அமிர்து உயிர்க்கும் தேன்ஆர் அகிலின் புகைசேர்த்தி - அமிர்தம் துளிக்கும் தேன் நிறைந்த அகிற்புகையைச் சேர்த்தி; வகுத்து - வகிர்ந்து; நாவிக் குழம்பு உறீஇ - புழுகைத் தடவி; உகிரின் உழுது - நகத்தாலே நீக்கி; ஆனாப் பளித நறுஞ்சுண்ணம் அணிந்தார் - குறைவில்லா நல்ல கருப்பூரப் பொடியை அணிந்தார்.

விளக்கம் : வேனில் - வேனிற்காலம். நெல்லிக்காய்ச் சாந்து அரைத்து என்க. நானம் - கத்தூரி. கதுப்பு - கூந்தல். நாவிக்குழம்பு - புழுகுச் சாந்து. பளிதம் - கருப்பூரம். உகிர் - நகம் ( 94 )

2693. முத்தார் மருப்பி னிடைவளைத்த
முரண்கொள் யானைத் தடக்கையி
னொத்தே ருடைய மல்லிகையி
னொலியன் மாலை யுறுப்படக்கி
வைத்தார் மணிநூற் றனவைம்பால்
வளைய முடித்து வான்கழுநீ
ருய்த்தாங் கதனுட் கொளவழுத்திக்
குவளைச் செவித்தா துறுத்தாரே.

பொருள் : முத்து ஆர் மருப்பினிடை வளைத்த முரண்கொள் யானைத் தடக்கையின் - முத்து நிறைந்த கொம்பினிடையே வளைத்த வலிமை கொண்ட யானையின் துதிக்கையினை; ஒத்து ஏருடைய மல்லிகையின் ஒலியல் மாலை உறுப்பு அடக்கி வைத்தார் - ஒப்புக்கொண்டு அழகுடையனவாகிய மல்லிகையாற் கட்டின மாலையை அடக்கி அதனருகே உறுப்பு மாலையையும் முன்பனிக்காலத்தே வைத்த மங்கையர்; மணி நூற்றன ஐம்பால் வளைய முடித்து - (இவ்விளவேனியிலே) நீல மணியை நூலாக்கினாற் போன்ற கூந்தலைத் திரள முடித்து; வான்கழுநீர் உய்த்து - சிறந்த கழுநீர் மாலையை அதனுட் செலுத்தி; ஆங்கு அதனுள் கொள அழுத்தி - அங்கே அதனுள்ளே கொள்ள அழுத்தி; குவளைச் செவித்தாது உறுத்தார் - குவளையினது செவ்வி பொருந்திய தாதையும் உறுத்தினார்.

விளக்கம் : மருப்பு - கொம்பு. முரண் - வலிமை. ஏர் - அழகு. ஒலியன் மாலை - உறுப்புமாலை என மாறுக. மணி - நீலமணி. ஐம்பால் - கூந்தல். கழுநீர்: ஆகுபெயர். செவ்வி - செவி என விகாரமெய்தியது. ( 95 )

2694. புகையார் வண்ணப் பட்டுடுத்துப்
பொன்னங் கலைகள் புறஞ்சூழ்ந்து
நகையார் கவுள கிண்கிணியுஞ்
சிலம்பு நாய்நாச் சீறடிமேற்
பகைகொண் டார்போற் சுமாஅய்க்கண்பின்
பரூஉக்காம் பனைய கணைக் கால் சூழ்ந்
தகையார்ந் திலக்கும் பரியகந்
தாமே கவினச் சேர்த்தினார்.

பொருள் : பகை கொண்டார்போல் - பகைவரைப்போல; புகைஆர் வண்ணப் பட்டு உடுத்து - அகிற்புகை ஊட்டின அழகிய பட்டை (இடைக்குச் சுமையாக்) உடுத்து; பொன் அம் கலைகள் புறம் சூழ்ந்து - பொன்னாலாகிய அழகிய மேகலைகளை அப் பட்டின்மேல் வளைத்து; நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் - ஒளிபொருந்திய கதுப்பினையுடைய கிண்கிணியையும் சிலம்பையும்; நாய்நாச் சீறடிமேல் சுமாய் - நாயின் நாவைப் போன்ற சிற்றடியின்மேற் சுமத்தி; கிண்பின் பரூஉக் காம்பு அனைய கணைக்கால் சூழ்ந்து - கணுக்களுக்குப் பின்னேயுள்ள (கணுக்களின் இடையே உள்ள) பெரிய காம்பு போன்ற கணைக் காலின்மேல் சூழ்ந்து; அகை ஆர்ந்த இலக்கும் பரியகம் தாமே கவினச் சேர்ந்தினார் - கூறுபாடு நிறைந்து விளங்கும் பரியகம் என்னும் அணியை அழகுறச் சேர்த்தினார்.

விளக்கம் : அகை - கூறுபாடு. சூழ்ந்து தகை என்பது விகாரப் பட்ட தெனினும் ஆம். புகை - நறுமணப் புகை. பொன்னங்கலை - பொன்னாலியற்றிய அழகிய மேகலையணி. கவுள - கவுளையுடையன, நாப்போன்ற சிறிய அடி என்க. சுமாஅய் - சுமத்தி. கண்பின் பரூஉக் காம்பு - இரண்டு கணுக்களுக்கும் பின்னாகிய பரிய தண்டு. ( 96 )

2695. பிடிக்கை வென்று கடைந்தனபோற்
பஞ்சி யார்ந்த திரள் குறங்கு
கடித்துக் கிடந்து கவின்வளருங்
காய்பொன் மகரங் கதிர்முலைமே
லுடுத்த சாந்தின் மிசைச்செக்க
ரொளிகொண் முந்நாட் பிறையேய்ப்பத்
துடிக்குங் குதிர் சேர் துணைமுத்தந்
திருவில் லுமிழ்ந்து சுடர்ந்தனவே.

பொருள் : பிடிக்கை வென்று கடைந்தனபோல் பஞ்சி ஆர்ந்த திரள் குறங்கு - பிடியின் கையை வென்று, கடைந்தன போலப் பஞ்சியூட்டிய திரண்ட துடையினை; கடித்துக் கிடந்து கவின் வளரும் காய்பொன் மகரம் - கவ்விக் கிடந்து அழகு வளரும் உருக்கிய பொன்னால் மகரவடிவாகச் செய்யப்பட்ட குறங்குசெறியென்னும் அணியும்; கதிர்முலைமேல் உடுத்த சாந்தின்மிசை - ஒளிரும் முலைமேற் பூசிய சாந்தின்மேல்; செக்கர் ஒளி கொள் முந்நாள் பிறை ஏய்ப்ப - செவ்வானிலே ஒளிவீசும் முந்நாட் பிறைபோல; துடிக்குங் கதிர்சேர் துணைமுத்தம் - கிடந்தசையும் ஒளி பொருந்திய இரண்டு வடமான முத்துமாலையும்; திருவில் உமிழ்ந்து சுடர்ந்தன - வானவில்போல ஒளியுமிழ்ந்து கிடந்தன.

விளக்கம் : குறங்கு செறியும் முத்துமாலையும் கிடந்தன என்க. ஒழுக நோக்குதலின் பிடிக்கையை வென்று, திரட்சியாலும் சருச்சரையின்மை யாலும் பஞ்சியாலும் கடைந்தனபோல் திரண்ட குறங்குகள். ( 97 )

2696. குழியப் பெரிய கோன்முன்கை
மணியார் காந்தட் குவிவிரன்மேற்
கழியப் பெரிய வருவிலைய
சிறிய மணிமோ திரங்கனலத்
தழியப் பெரிய தடமென்றோட்
சலாகை மின்னத் தாழ்ந்திலங்கும்
விழிகண் மகர குண்டலமுந்
தோடுங் காதின் மிளிர்ந்தனவே.

பொருள் : கோல் முன்கை - திரண்ட முன்கையிடத்து; காந்தள் குவிவிரல்மேல் - காந்தளையொத்த குவிந்த விரலின்மேல்; பெரிய குழிய - கேவணம் குழிந்திருத்தலின்; மணி ஆர் - மணிகள் பொருந்திய; கழியப் பெரிய அருவிலைய - மிகவும் பெருமையுற்ற அரிய விலையையுடைய; சிறிய மணி மோதிரம் கனல் - சிறிய அழகிய மோதிரம் ஒளி வீச; பெரிய தடம் மென்தோள் தழிய சலாகைமின்ன - பெரிய மெல்லிய தோளிலே தழுவச் சலாகை மின்னும்படி; விழிகண் மகர குண்டலமும் தோடும் - விழித்த கண்ணையுடைய மகரமீன் வடிவான குண்டலமும் தோடும்; காதில் மிளிர்ந்தன - காதிலே விளங்கின.

விளக்கம் : மகரத்திற்குங் குண்டலத்திற்கும் இடையில் ஓட்டின சலாகை மின்னாநிற்கத் தோளிலே தாழ்ந்திலங்குங் குண்டலம். இனி, சலாகை வாகுவலயம் என்பாருமுளர். நச்சினார்கினியர் சொற்களைக் கொண்டு கூட்டிக் கூறும் பொருள்: திரண்ட முன்கையிடத்துக் காந்தளையொத்த விரல்மேலே சிறிய மணிமோதிரம் கனலப் பெரிய தோளிலே கேவணம் குழிந் திருத்தலின் கழியப் பெரிய மணிகளார்ந்த அருவிலையையுடைய அணிகலம் தழுவக் காதிலே மகரகுண்டலமும் தோடும் மிளிர்ந்தன. ( 98 )

2697. நாணுள் ளிட்டுச் சுடர்வீசு
நன்மா ணிக்க நகுதாலி
பேணி நல்லார் கழுத்தணிந்து
பெருங்கண் கருமை விருந்தூட்டி
நீணீர் முத்த நிரைமுறுவல்
கடுச்சுட் டுரிஞ்சக் கதிருமிழ்ந்து
தோணீர்க் கடலுட் பவளவாய்த்
தொண்டைக் கனிக டொழுதனவே.

பொருள் : நாண் உள்இட்டுச் சுடர் வீசும் நன்மாணிக்கம் நகுதாலி - நாணைத் தன்னுள்ளே அடக்கி, ஒளிவீசும் நல்ல மணிகளிழைத்த நகுகின்ற தாலியை; நல்லார் பேணிக் கழுத்து அணிந்து - மடவார் ஓம்பிக் கழுத்திலே அணிந்து ; பெருங்கண்கருமை விருந்து ஊட்டி - பெரிய கண்ணிலே கரிய மையைப் புதுமைபெற அணிந்து; நீள்நீர் முத்தம் நிரைமுறுவல் - பெரு நீர்மையுடைய முத்தனைய வரிசையான பற்களை; கடுச்சுட்டு உரிஞ்சக் கதிர் உமிழ்ந்து - கடுவைச் சுட்டுத் தேய்த்தலால் அவை ஒளியை வீசி; தோள்நீர்க் கடலுள் பவளவாய் - தோண்டின நீரையுடைய கடலிலுள்ள பவளம் போன்ற வாயை; தொண்டைக் கனிகள் தொழுதன - கொவ்வைக் கனிகள் தோற்று வணங்கின.

விளக்கம் : முறுவலின் ஒளி பவளவாயிலே படுதலால், அத்தகைய ஒளியில்லாத கொவ்வைக் கனிகள் தொழுதன. நாணைத் தன்னுள்ளே யடக்கி நகுகின்ற தாலியைப் பழைய நிலையிலே கிடக்கும்படி, பேணி, சுடர்வீசும் மாணிக்கத்தைக் கழுத்திலே அணிந்து - என இரண்டணிகள் ஆக்குவர் நச்சினார்க்கினியர். தோள் : முதனிலை. தோள் கடல் : வினைத்தொகை. தோள்கடல் நீர்க்கடல் என இயைக்க. ( 99 )

2698. மாலை மகளி ரணிந்ததற்பின்
பஞ்ச வாசங் கவுட்கொண்டு
சோலை மஞ்ஞைத் தொழுதிபோற்
றோகை செம்பொ னிலந்திவளக்
காலிற் சிலம்புங் கிண்கிணியுங்
கலையு மேங்கக் கதிர்வேலு
நீலக் குவளை நிரையும்போற்
கண்ணார் காவி லிருந்தாரே.

பொருள் : மகளிர் மாலை அணிந்ததன் பின் - (இவ்வாறுஒப்பனைக்குப்பின்) அம் மகளிர் மாலையையும் குறைதீர அணிந்த பிறகு; பஞ்சவாசம் கவுள் கொண்டு - (வெற்றிலையை) ஐந்து வகையான முகவாசத்துடன் வாயிற்கொண்டு; காலில் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்க - காலிலே சிலம்பும் கிண்கிணியும் இடையிற் கலையும் ஒலிக்கவும்; தோகை செம்பொன் நிலம் திவள - கொய்சகம் அழகிய நிலத்தே பட்டுத் துவள; கதிர் வேலும் நீலக்குவளை நிரையும்போற் கண்ணார் - ஒளியுறு வேலும் நீல நிறமுடைய குவளை நிரையும் போன்ற கண்ணார் ஆகிய அவர்கள்; சோலை மஞ்ஞைத் தொழுதிபோல காவில் இருந்தார் - சோலையிடையே உள்ள மயிர் திரள்போலக் காவினிடையே இருந்தனர்.

விளக்கம் : மஞ்ஞை - மயில். தொழுதி - கூட்டம். தோகை - கொய்சகம். திவள - துவள. கலை - மேகலை. கா - சோலை. ( 100 )

2699. மணிவண் டொன்றெ நலம்பருக
மலர்ந்த செந்தா மரைத்தடம்போ
லணிவேன் மன்ன னலம்பருக
வலர்ந்த வம்பார் மழைக்கண்ணார்
பணியார் பண்ணுப் பிடியூர்ந்து
பரூஉக்காற் செந்நெற் கதிர்சூடித்
தணியார் கழனி விளையாடித்
தகைபா ராட்டத் தங்கினார்.

பொருள் : மணிவண்டு ஒன்றே நலம் பருக - ஒரு கரிய வண்டே நலத்தைப் பருகுமாறு; மலர்ந்த செந்தாமரைத் தடம் போல் - பூத்த செந்தாமரைப் பொய்கைபோல; அணிவேல் மன்னன் நலம் பருக - அழகிய வேலையுடைய மன்னவன் தம் நலத்தை நுகரும்படியாக; அலந்த அம்புஆர் மழைக் கண்ணார் - மலர்ந்த காமன் அம்பு போன்ற குளிர்ந்த விழியார்; பணி ஆர் பண்ணுப்பிடி ஊர்ந்து - அணிகலம் நிறைந்த சமைத்தலையுடைய பிடியை ஏறிப்போய்; பரூஉக்கால் செந்நெல் கதிர்சூடி - பெரிய தாளையுடைய செந்நெலின் கதிரை அணிந்து; தணியார் கழனி விளையாடி - அமையாராய்க் கழனியிலே விளையாடி; தகைபாராட்டத்தங்கினார் - (அரசன்) தம் அழகைப் பாராட்ட அக் கழனியிலே தங்கினார்.

விளக்கம் : இது நகரினின்றும் போய், நாட்டிலுள்ளவற்றை நுகர்ந்து இன்பமுற்றமை கூறிற்று. சூடி என்றார் தொழத்தகுதலின்; தொழுது கொண்டுண்க உகா அமை நன்கு (ஆசார. 20) என்றார். மணிவண்டு சீவகனுக்கு உவமை. மனைவியர் குழாத்திற்குச் செந்தாமரைத் தடம் உவமை. மன்னன் : சீவகன். பருக - பருகுமாறு. அலர்ந்த அம்பு - காமன் அம்பு என்க. பண்ணு - சமைத்தல். தகை - அழகு. ( 101 )

2700. எண்ணற் கரிய குங்குமச்சேற்
றெழுந்து நான நீர்வளர்ந்து
வண்ணக் குவளை மலரளைஇ
மணிக்கோல் வள்ளத் தவனேந்த
வுண்ணற் கினிய மதுமகிழ்ந்தா
ரொலியன் மாலை புறந்தாழக்
கண்ணக் கழுநீர் மெல்விரலாற்
கிழித்து மோந்தார் கனிவாயார்.

பொருள் : எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று எழுந்து - அளவிடற்கரிய குங்குமச் சேற்றிலே எழுந்து; நானநீர் வளர்ந்து - கத்தூரி நீரிலே வளர்ந்து; வண்ணக் குவளைமலர் அளைஇ - நிறத்தையுடையவாகிய குவளை மலரை விரவி; உண்ணற்கு இனிய மது - பருகுதற்கு இனிய மதுவை; மணிக்கோல் வள்ளத்து - மணிகள் அழுத்தி விளிம்பு பிரம்புகட்டின வட்டிலில்; அவன் ஏந்த - அரசன் ஏந்த; ஒலியல் மாலை புறம்தாழக் கனிவாயார் மகிழ்ந்தார் - மலர் மாலையும் முத்துமாலையும் புறத்தே தாழக் கனிவாயினர் பருகி மகிழ்ந்தனர்; கண்ணக் கழுநீர் மெல்விரலாற் கிழித்து மோந்தார் - (பருகிய பின்) இவர்கள் குறிப்பை அவன் கருதும்படி, கழுநீரை உகிராற் கிழித்து மோந்தார்.

விளக்கம் : இம்மலர் வடுப்படுத்தி மோந்தும் இனிய நாற்றத்தவே ஆயினாற்போல, எம்மையும் உகிர் முதலியவற்றாற் சிறிது வடுப்படுத்தி நுகர்தல் எமக்கு வருத்தம் என்று அஞ்சினையாயினும், அஃது எமக்கு மிக்க இன்பமேயாதலின், உனக்கும் இன்பஞ் செய்யும் என்று உணர்த்துதற்குக் கிழித்து மோந்தாரென்க. இளமைச் செவ்வி மிக்கவழி மகளிர்க்கு இங்ஙனம் வடுப்படுத்தி நுகர்தல் இன்பஞ் செய்யும் என்று காமநூலிற் கூறலின், அதனை யீண்டுக் கூறினார். அது, காமத்தூழுறு கனியை யொத்தாள்.......வேந்தன் அஞ்சிறைப் பறவை யொத்தான் (சீவக.192) என முன்னர்க் கூறியவற்றானும் உணர்க. ( 102 )

4. புதல்வர்ப் பேறு

2701. இவ்வா றெங்கும் விளையாடி
யிளையான் மார்பி னலம்பருகிச்
செவ்வாய் விளர்த்துத் தோண்மெலிந்து
மணிக்கோல் வள்ளத் தவனேந்த
செய்ய முலையின் முகங்கருகி
யனிச்ச மலரும் பொறையாகி
யொவ்வாப் பஞ்சி மெல்லணைமே
லசைந்தா ரொண்பொற் கொடியன்னார்.

பொருள் : இவ்வாறு எங்கும் விளையாடி - தாம் கருதிய இம் முறையே எங்கும் இருந்து கூடிமகிழ்ந்து ; இளையான் மார்பின் நலம் பருகி - சீவகன் மார்பினைத் தழுவி இன்பம் பருகி; செவ்வாய் விளர்த்து - சிவந்த வாய் விளர்த்து ; தோள் மெலிந்து - தோள் இளைத்து; செய்ய முலையின் முகம் கருகி - சிவந்த முலையின் முகம் கறுத்து; அவ்வாய் வயிறு கால்வீங்கி - அழகு வாய்ந்த வயிறு அடிபருத்து; அனிச்ச மலரும் பொறை ஆகி - அனிச்ச மலரும் சுமையாகி; ஒவ்வாப் பஞ்சிமெல் அணைமேல் - தன் மென்மைக்கு ஒவ்வாத பஞ்சியினால் ஆகிய மெல்லிய அணையின்மேல்; ஒண்பொன் கொடி அன்னார் அசைந்தார் - சிறந்த பொற்கொடி போன்றவர்கள் தங்கினார்கள்.

விளக்கம் : இவை கருவுற்ற குறிகள். நச்சினார்க்கினியர் தம் கருத்துக்கிசையக் கூறும் உரை: அக் கொடியன்னார், தாம் கருதிய இத் தன்மையை எந் நிலத்தினும் இருந்து புணர்ந்து, அக் கருத்து முற்றிய பினனர் மகப்பேற்றை விரும்பி, இவனைப்போலும் புதல்வரைப் பெற வேண்டும் என்று அவன் வடிவழகையெல்லாம் உட்கொண்டு புணர்ந்து கருப்பம் தங்குதலாலே, விளர்த்து, மெலிந்து வயாநோய் செய்து விடுகையினாலே, பின்பு முலையின் முகங்கருகி, வீங்கிப், பாரமாய்த் தமது மென்மைக்கு ஒவ்வாத பஞ்சணைமேலே தங்கினாரென்க. மார்பென்றது மெய்யை. பருகியென்னுஞ் செய்தென் எச்சம் காரணகாரியப் பொருட்டாய்க் கருப்பம் தங்கினமை தோன்ற நின்றது; பருக என்றுமாம். பூப்பின் புறப்பாடீராறு நாளும் நீவாதுறைந்து, நாளும் ஓரையும் நன்றாயவாறும் உணர்ந்து, தலைவியை நோக்கி, நீயும் இன்பங் கருதாது இவனே போலும் புதல்வனை யானுடையேனாக வேண்டும் என்று கருதுவாய் எனத் தலைவன் கூறிப் பின்னர்ப் புணர்தல் வேண்டும் என நூலிற் கூறியவாறே இவரும் கூறினார். மார்பின் நலம் பருகி என்பதைக் கொண்டே இத்துணையுங் கொண்டு கூறினார்; இவரும் கூறினார் என்பதால் நூலாகிரியர் கருத்தும் அதுவே என்றாராயிற்று. நூலாசிரியர் கருத்தாயின் விளக்கமாகவே கூறுவாரென்க. ( 103 )

2702. தீம்பால் சுமந்து முலைவீங்கித்
திருமுத்தீன்ற வலம்புரிபோற்
காம்பேர் தோளார் களிறீன்றார்
கடைக டோறுங் கடிமுரசந்
தாம்பாற் பட்ட தனிச்செங்கோற்
றரணி மன்னன் மகிழ்தூங்கி
யோம்பா தொண்பொன் சொரிமாரி
யுலக முண்ணச் சிதறினான்.

பொருள் : காம்புஏர் தோளார் - மூங்கிலனைய அழகிய தோளையுடைய அம் மங்கையர்; தீம்பால் சுமந்து முலை வீங்கி இனிய பாலைச் சுமந்து முலையடி பருத்து; திருமுத்து ஈன்ற வலம்புரிபோல் - அழகிய முத்தைப் பெற்ற வலம்புரிபோல் (நலம் தொலைந்து); களிறு ஈன்றார் - களிறனைய மக்களை பெற்றனர்; கடைகள் தோறும் கடிமுரசம் தாம்பாற்பட்ட - (அப்போது) வாயில்கள் தோறும் மணமுரசுகள் கூறுபட நின்றொலித்தன; தனிச் செங்கோல் தரணி மன்னன் மகிழ்தூங்கி - தனித்த செங்கோலையுடைய நிலவேந்தன் களிப்படைந்து; ஓம்பாது ஒண்பொன் சொரிமாரி உலகம் உண்ணச் சிதறினான் - வரையாமற் சிறந்த பொன் பெய்யும் மழையை உலகம் உண்ணுமாறு பெய்தான்.

விளக்கம் : திருமுத்து - அழகிய முத்து; திருவாகிய முத்துமாம். முத்து மகவிற்கும் வலம்புரி தேவியர்க்கும் உவமை. காம்பு - மூங்கில். களிறு என்றது பிள்ளைகளை. தாம் : அசை. மன்னன் : சீவகன். ( 104 )

2703. காடி யாட்டித் தராய்ச் சாறுங்
கன்னன் மணியு நறுநெய்யுங்
கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக்
கொண்டு நாளும் வாயுறீஇப்
பாடற் கினிய பகுவாயுங்
கண்ணும் பெருக வுகிருறுத்தித்
தேடித் தீந்தேன் றிப்பிலிதேய்த்
தண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார்.

பொருள் : காடி ஆட்டி - காடியை வார்த்து; தராய்ச் சாறும் கன்னல் மணியும் நறுநெய்யும் கூட - பிரமிச் சாறும் கண்டசர்க்கரைத் தேறும் நெய்யும் தம்மில்கூட; செம்பொன் கொளத்தேய்த்து - பொன்னால் தேய்த்து ; கொண்டு நாளும் வாய் உறுத்தி- இவற்றைக்கொண்டு நாடோறும் குழந்தைகள் கொள்ளும்படி வாயில் ஊட்டி; பாடற்கு இனிய பகுவாயும் கண்ணும் பெருக - பாடுதற்கினிய வாயும் கண்ணும் பெருகும்படி; உகிர் உறுத்தி - நகத்தால் அகற்றி; தீந்தேன் தேடிக் திப்பிலி தேய்த்து - இனிய தேனிலே அதிவிடயத்தையும் திப்பிலியையும் தேய்த்து (வாயுறுத்தி); அண்ணா உரிஞ்சி - அண்ணாக்கை உரிஞ்சி; மூக்கு உயர்த்தார் - மூக்கை உயர்த்தினார்.

விளக்கம் : தேடி - அதிவிடயம்; ஆராய்ந்தென்றும் ஆம். தராய் - திராயுமாம், காடி - கஞ்சி. தராய்ச்சாறு - பிரமிச்சாறு. கன்னல்மணி என்றது கற்கண்டினை. பொன்னாற் றேய்த்தென்க. வாயுநீஇ - வாயில் உறுத்தி ஊட்டி என்றவாறு. அழகுடைமையால் பாடுதற்கினிய வாய் என்க. அண்ணா - உண்ணாக்கு ( 105 )

2704. யாழுங் குழலு மணிமுழவு
மரங்க மெல்லாம் பரந்திசைப்பத்
தோழன் விண்ணோ னவட்டோன்றி
வயங்காக் கூத்து வயங்கியபின்
காழார் வெள்ளி மலைமேலுங்
காவன் மன்னார் கடிநகர்க்கும்
வீழா வோகை யவன்விட்டான்
விண்பெற் றாரின் விரும்பினார்.

பொருள் : யாழும் குழலும் அணி முழவும் அரங்கம் எல்லாம் பரந்து இசைப்ப - யாழ் குழல் அழகிய முழவு ஆகியவை அரங்குகளில் எல்லாம் பரவி யிசைக்குமாறு; விண்ணோன் தோழன் அவண் தோன்றி - சுதஞ்சணனாகிய தோழன் அங்கே தோன்றி; வயங்காக் கூத்து வாங்கியபின் - இவ்வுலகில் ஆடாத கூத்தெலாம் ஆடிய பிறகு; காழ் ஆர் வேள்ளி மலைமேலும் - திண்மை பொருந்திய வெள்ளி மலைமேலும்; காவல் மன்னர் கடி நகர்க்கும் - காவலையுடைய (தன் உறவினராகிய) மன்னரின் சிறப்புற்ற நகர்க்கும்; அவன் வீழா ஓகை விட்டான் - அரசன் கெடாத மகிழ்ச்சியாகிய இதனைக் கூறிவிடுத்தான்; விண்பெற்றாரின் விரும்பினார் - அவர்கள் துறக்கம் பெற்றவரைப்போல விரும்பினார்.

விளக்கம் : வெள்ளி மலையிற் கலுழ வேகனுக்குக் கூறிவிட்டான். வயங்காக் கூத்து - சீவக சரிதை. ( 106 )

2705. தத்த நிலனு முயர்விழிவும்
பகையு நட்புந்தந்தசையும்
வைத்து வழுவில் சாதகமும்
வகுத்த பின்னர்த் தொகுத்தநாட்
சச்சந் தணனே சுதஞ்சணனே
தரணி கந்துக் கடன்விசயன்
றத்தன் பரதன் கோவிந்த
னென்று நாமந் தரித்தாரே.

பொருள் : தத்தம் நிலனும் உயர்வு இழிவும் பகையும் நட்பும் தம் தசையும் வைத்து - கோள்கள் தம் தம் இடங்களில் நிற்கும் நிலையும், அவற்றுட் சில உச்சமும், தாழ்வும், பகையும் நட்பும் கொண்டிருப்பதும், தாம் நிற்கும் தசையும் விளங்க முன்னர் அமைத்து; வழுஇல் சாதகமும் வகுத்த பின்னர் - குற்றம் அற்ற சாதகத்தையும் எழுதிய பிறகு; தொகுத்த நாள் - பன்னிரண்டென்னும் எண்ணாகத் தொகுத்த நாளிலே; சச்சந்தணன் சுதஞ்சணன் தரணி கந்துக்கடன் விசயன் தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தார் - சச்சந்தணன் முதலாக அப்புதல்வர்கள் பெயர்களைச் சுமந்தனர்.

விளக்கம் : தேவிமாரை முற்கூறிய முறையே அவர்கள் புதல்வர் பெயர்களையும் வைத்தாரென்க. தரணி - உலோகபாலன் இயற்பெயர். நட்பு மிகுதியால் உலோகபாலன் பெயரும் விசயன்பெயரும் இட்டான். தத்தன் - விசயமாமீவியர் தந்தை பெயர். அதனால் கோவிந்தராசன் தன் மகனுக்குச் சீதத்தப் பெயதிட்டனன்; பரதன்; அச்சணந்தியாசிரியன் பெயர். ( 107 )

2706. ஐயாண் டெய்தி மையாடி
யறிந்தார் கலைகள் படைநவின்றார்
கொய்பூ மாலை குழன்மின்னுங்
கொழும்பொற் றொடுங் குண்டலமு
மையன் மார்க டுளக்கின்றி
யாலுங் கலிமா வெகுண்டூர்ந்தார்
மொய்யா ரலங்கன் மார்பற்கு
முப்ப தாகி நிறைந்ததே.

பொருள் : ஐயன்மார்கள் - அக்குழந்தைகள்; ஐயாண்டு எய்தி - ஐந்து வயது நிறைந்து; மை ஆடி - மை ஓலை பிடித்து ; கலைகள் அறிந்தார் - கலைகளைக் கற்றார்; படை நவின்றார் - படைக்கலம் பயின்றார்; கொய் பூ மாலை - கொய்த மலர் மாலையும்; குழல் - சிகையும்; மின்னும் கொழும்பொன் தோடும் - ஒளிர்கின்ற சிறந்த பொன்னாலான தோடும் ; குண்டலமும் - குண்டலமும்; துளக்கின்றி - அசையாமல்; ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார் - அசையும் மனம் செருக்கிய குதிரைகளை வெகுண்டு செலுத்தினார்; மொய் ஆர் அலங்கல் மார்பற்கு முப்பது ஆகிநிறைந்தது - (அப்போது) மலர் நெருங்கிய மாலையணிந்த சீவகவேந்தனுக்கு முப்பதாண்டாகிய நிறைவுற்றது.

விளக்கம் : வெகுண்டு ஊர்ந்தார் - அடித்துச் செலுத்தினார். மாலை முதலியன அசையாமல் ஊர்தல் அரிது.  நிறைந்ததென்றது, அரசவுரிமை நிகழ்த்தின யாண்டு முப்பதும் முன்னர்க் கழிந்த யாண்டு பதினைந்தும் ஆக நாற்பத்தையாண்டு சென்றமையின், இல்லறத்திற்குரிய காலம் முற்றுப் பெற்ற தென்றவாறு. இனி, துறவறத்தின் மேல் உள்ளம் நிகழ்தற்குக் காரணம் கூறுகிறார். ( 108 )

5.சோலை நுகர்வு

2707. பூநிறை செய்த செம்பொற்
கோடிகம் புரையு மல்குல்
வீநிறை கொடிய னாரும்
வேந்தனு மிருந்த போழ்திற்
றூநிறத் துகிலின் மூடிப்
படலிகை கொண்டு வாழ்த்தி
மாநிறத் தளிர்நன் மேனி
மல்லிகை மாலை சொன்னாள்.

பொருள் : பூ நிறை செய்த செம்பொன் கோடிகம் புரையும் அல்குல் - மலர் நிறைந்த பொன்னாலான பூந்தட்டைப்போன்ற அல்குலையுடைய; வீ நிறை கொடியனாரும் - மலர் நிறைந்த கொடிகளைப்போன்ற அரசியரும்; வேந்தனும் இருந்த போழ்தில் - அரசனும் வீற்றிருக்கும்போது; படலிகை தூநிறத் துகிலின் மூடிக்கொண்டு வாழ்த்தி - பூவிடு பெட்டியைத் தூய நிறமுடைய ஆடையாலே மூடிக் கையிலே கொண்டு அரசனை வாழ்த்தி; மாநிறத் தளிர் நல் மேனி மல்லிகை மாலை சொன்னாள் - மாந்தளிர்போன்ற மேனியையுடைய மல்லிகைமாலை கூறினாள்.

விளக்கம் : வீநிறை கொடி என்றார் புதல்வர்ப் பயந்தமை தோன்ற. நிறை - நிறைதல். கோடிகம் - பூந்தட்டு. புரையும் : உவமவுருபு. வீ - மலர் : இது மகவிற்குவமை. கொடியனார் : சீவகன் மனைவிமார். வேந்தன் : சீவகன். படலிகை - பூவிடு பெட்டி. மா - மாமரம். மல்லிகை மாலை : ஒரு தோழி. ( 109 )

2708. தடமுலை முகங்கள் சாடிச்
சாந்தகங் கிழிந்த மார்பிற்
குடவரை யனைய கோலக்
குங்குமக் குவவுத் தோளாய்
தொடைமலர் வெறுக்கை யேந்தித்
துன்னினன் வேனில் வேந்த
னிடமது காண்க வென்றா
ளிறைவனு மெழுக வென்றான்.

பொருள் : தடமுலை முகங்கள் சாடி - பெரிய முலை முகங்கள் தாக்கியதனால்; சாந்தகம் கிழிந்த மார்பன் - சாந்து பிளந்த மார்பினையுடைய; குடவரை அனைய கோலக் குங்குமக் குவவுத் தோளாய்! - மேலை மலைபோன்ற அழகிய குங்குமம் பூசிய திரண்ட தோளாய்!; தொடை மலர் வெறுக்கை ஏந்தி - தொடைக்குரிய மலராகிய காணிக்கையை ஏந்தி ; வேனில் வேந்தன் துன்னினன் - வேனில் மன்னன் பொழிலிலே நெருங்கினன்; இடம் அது காண்க என்றாள் - அப்பொழிலே அவனைக் காணுதற்குரிய இடம், நீ சென்று காண்பாயாக என்றாள்; இறைவனும் எழுக என்றான் - அரசனும் எழுக என்றான்.

விளக்கம் : தொடை மலர் : தொத்தாக மலர்ந்த மலருமாம். சாடி - மோதி. சாந்து - சந்தன முதலியன. குடவரை - மேலைமலை. வெறுக்கை - பொருள் : ஈண்டுக் காணிக்கைப் பொருள் குறித்து நின்றது. பாகுடம் என்பர் நச்சினார்க்கினியர். வேனில் வேந்தன் : காமன். அஃது இடம் என மாறுக. இறைவன் : சீவகன். ( 110 )

2709. முடித்தலை முத்த மின்னு
முகிழ்முலை முற்ற மெல்லாம்
பொடித்துப் பொன் பிதிரிந்த வாகத்
திளையவர் புகழ்ந்து சூழக்
கடுத்தவாள் கனல வேந்திக்
கன்னியர் காவ லோம்ப
விடிக்குரற் சீய மொப்பா
னிழையொளி விளங்கப் புக்கான்.

பொருள் : முடித்தலை முத்தம் மின்னும் முகிழ் முலை முற்றம் எல்லாம் - முடியைத் தலையிலேயுடைய முத்துக்கள் ஒளிரும், அரும்புபோலும் முலையின் பரப்பெல்லாம்; பொன் பொடித்துப் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழ - சுணங்கு தோன்றிச் சிதறின மார்பினையுடைய அரசியர் புகழ்ந்து சூழ; கடுத்த வாள் கனல ஏந்திக் கன்னியர் காவல் ஓம்ப - சினத்துக்குரிய வாள் ஒளிர ஏந்திக் கன்னிப் பெண்கள் காவலாக வர; இடிக்குரல் சீயம் ஒப்பான் - இடிபோன்ற குரலையுடைய சிங்கம் போன்றவன்; இழை ஒளி விளங்கப் புக்கான் - அணிகலனின் ஒளி விளங்க அப் பொழிலிலே புகுந்தான்,

விளக்கம் : பொடித்து - தோன்றி. பொன் - சுணங்கு; ஆகுபெயர். இளையவர் - ஈண்டு மகளிர். இடிக்குரல் - இடியை ஒத்த குரல். சீயம் - அரிமா. ( 111 )

2710. இலங்குபொன் னார மார்பி னிந்திர னுரிமை சூழக்
கலந்தபொற் காவு காண்பான் காமுறப் புக்க தேபோ
லலங்குபொற் கொம்பு னாரு மன்னனு மாட மாதோ
நலங்கவின் கொண்ட காவு நல்லொளி நந்திற் றன்றே.

பொருள் : இலங்கு பொன் ஆரம் மார்பன் இந்திரன் - விளங்கும் பொன்மாலை அணிந்த மார்பையுடைய இந்திரன்; உரிமை சூழக் கலந்த பொன் காவு காண்பான் - தன் காதலியர் சூழக் கலந்த கற்பகச் சோலையைக் காண; காமுறப் புக்கதே போல் - விருப்பம் உண்டாகப் புகுந்த தன்மை போல; அலங்கு பொன் கொம்பனாரும் மன்னனும் ஆட - அசையும் பொற்கொடி போன்றவரும் அரசனும் புகுந்து ஆடியதால்; நலம் கவின் கொண்ட காவு நல் ஒளி நந்திற்றன்றே - நலமும் அழகும் கொண்ட அப்பொழில் நல்லொளியாற் சிறப்புற்றது.

விளக்கம் : இந்திரன் சீவகனுக்கு உரிமை மகளிர்க்கும் உவமை. பொற்காவு என்றது கற்பகச்சோலையை. இது சீவகன் முதலியோர் ஆடுகின்ற சோலைக்கு உவமை என்க. நந்துதல் - சிறத்தல். ( 112 )

2711. புலவியுண் மகளிர் கூந்தற்
போதுகுக் கின்ற தேபோற்
குலவிய சிறகர்ச் செங்கட்
கருங்குயில் குடையக் கொம்பர்
நிலவிய தாது பொங்க
நீண்மலர் மணலிற் போர்த்துக்
கலவியிற் படுத்த காய்பொற்
கம்பல மொத்த தன்றே.

பொருள் : புலவியுள் மகளிர் கூந்தல் போது உகுக்கின்றதேபோல் - பிணக்கின்போது மகளிர்தம் கூந்தலிலுள்ள மலரைச் சிந்துவதுபோல; குலவிய சிறகர்ச் செங்கண் கருங்குயில் குடைய - விளங்கிய சிறகினையும் செங்கண்களையும் உடைய கரிய குயில் குடைவதால்; கொம்பர் நிலவிய தாது பொங்க நீள்மலர் மணலிற் போர்த்து - கொம்பிலேயிருந்து விளக்கமான மகரந்தத் தூள்பொங்க, நீண்ட மலர்கள் மணலில் வீழ்ந்து அதனை மறைத்ததனால்; கலவியில் படுத்த காய்பொன் கம்பலம் ஒத்தது - கலவி காரணமாக விரித்த பொன்னாலான கம்பலத்தை ஒத்தது.

விளக்கம் : புலவி - ஊடல். போது - மலர். சிறகர் - சிறகு. செங்கட்கருங்குயில் என்புழிச் செய்யுளின்பம் உணர்க. நிலவிய - விளங்கிய. தாது - பூந்துகள். மணலில் வீழ்ந்து அதனைப் போர்த்து என்க. கலவி - புணர்ச்சி. புணர்ச்சிகுறித்தென்க. படுத்த - விரித்த. ( 113 )

2712. காசுநூல் பரிந்து சிந்திக்
கம்பலத் துக்க தேபோன்
மூசுதேன் வண்டு மொய்த்து
முருகுண்டு துயில மஞ்ஞை
மாசில்பூம் பள்ளி வைகி
வளர்ந்தெழு மகளி ரொப்பத்
தூசுபோற் சிறக ரன்னந்
தொழுதியோ டிரியச் சேர்ந்தார்.

பொருள் : நூல் பரிந்து காசு சிந்தி - நூலறுந்து மணிகள் சிந்தி; கம்பலத்து உக்கதேபோல் - கம்பலத்திலே வீழ்ந்து கிடந்த தன்மைபோல; மூசு தேன் வண்டு மொய்த்து முருகு உண்டு துயில - நெருக்கமாகத் தேனும் வண்டும் மொய்த்துத் தேனைப் பருகிக் (கம்பலம் போன்ற இடத்திலே) துயில்; மஞ்ஞை மாசு இல் பூம் பள்ளி வைகி வளர்ந்து எழும் மகளிர் ஒப்ப - மயில்கள் குற்றமற்ற மலர்ப்பள்ளியிலே தங்கித் துயின்று எழும் மகளிரைப்போல இருக்க; தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு - வெள்ளாடைபோற் சிறகினையுடைய அன்னம் தன் திரளுடன்; இரிய - ஓட; சேர்ந்தார் - அவர்கள் அடைந்தனர்.

விளக்கம் : காசு - மணி, பூந்துகள் பரவிக் கம்பலத்தை ஒத்த அவ்விடத்தே வண்டுகள் துயின்று கிடப்பன கம்பலத்தின்மேல் உதிர்ந்து கிடக்கும் மணிகட்குவமை. தேன் - ஒருவகை வண்டு. முருகு - தேன். மஞ்ஞை - மயிர். வளர்ந்து - துயின்று. தொழுதி - திரள். இரிதல் - கெட்டோடுதல். ( 114 )

2713. காதிக்கண் ணரிந்து வென்ற
வுலகுணர் கடவுள் காலத்
தாதிக்கண் மரங்கள் போன்ற
வஞ்சொலீ ரிதனி னுங்கள்
காதலிற் காண லுற்ற
விடமெலாங் காண்மி னென்றா
னீதிக்க ணின்ற செங்கோ
னிலவுவீற் றிருந்த பூணான்.

பொருள் : நீதிக்கண் நின்ற செங்கோல் நிலவு வீற்றிருந்த பூணான் - அறத்திலே நிலைபெற்ற செங்கோலையும் நிலவு தங்கிய அணிகளையும் உடைய சீவக மன்னன்; அம் சொலீர் - அழகிய மொழியினீர்!; காதிக் கண் அரிந்து வென்ற உலகு உணர் கடவுள் காலத்து - காதி வினைகளைத் தன்னிடத்தே இல்லையாம் படி வேர் அறுத்து, அவற்றை வென்ற, உலகுணர்ந்த இறைவன் தோன்றின காலமாகிய; ஆதிக்கண் மரங்கள் போன்ற - ஆதிக்கால மரங்கள்போலப் பயனுற்று நின்றன; இதனின் உங்கள் காதலின் காணல் உற்ற இடம் எலாம் காண்மின் என்றான் - இதனாலே நீர் நும் காதலாற் காணவேண்டிய இடங்கள் எல்லாவற்றையும் சென்று காண்பீராக என்றான்.

விளக்கம் : காதி - காதிவினைகள், அவை ஞானாவரணீயம் முதலியன. கடவுள் என்றது இடபதீர்த்தங்கரரை. இவர் தோன்றிய காலத்தில் முகில்கள் எழுந்து மழை பொழிந்தன; எல்லாக் கூலங்களும் உழுதுவித்தாமல் காலவியல்பானே தாமே விளைந்தன. கற்பக மரங்கள் மறைந்த பின்னர் பல்வேறு வகையான மரங்கள் தாமே தோன்றி மல்கின,என்று சீபுபுராணம் கூறும். எனவே ஈண்டு ஆதிக்கண் மரங்கள் என்றது அக்காலத்தே தாமே தோன்றியவற்றை என்க. இடபதீர்த்தங்கரர் தோன்றுமுன் இவ்விடமெல்லாம் போகபூமியாயிருந்தது என்றும் அப்பால் கருமபூமியாயிற்று என்றும் கூறுப. ( 115 )

2714. வானவர் மகளி ரென்ன
வார்கயிற் றூச லூர்ந்துங்
கானவர் மகளி ரென்னக்
கடிமலர் நல்ல கொய்துந்
தேனிமிர் குன்ற மேறிச்
சிலம்பெதிர் சென்று கூயுங்
கோனமர் மகளிர் கானிற்
குழாமயில் பிரிவ தொத்தார்.

பொருள் : வானவர் மகளிர் என்ன வார்கயிற்று ஊசல் ஊர்ந்தும் - விண்ணவர் மகளிரைப்போல நீண்ட கயிற்றூசலிலே ஆடியும்; கானவர் மகளிர் என்னக் கடிமலர் நல்ல கொய்தும் - வேட்டுவர் மகளிர் போல மணமுறு மலர்களில் நல்லவற்றைப் பறித்தும்; தேன் இமிர் குன்றம் ஏறிச் சிலம்ப எதிர் சென்று கூயும் - வண்டுகள் முரலும் குன்றுகளிலே ஏறி அவற்றின் எதிரொலி உண்டாகக் கூவியும்; கோன் அமர் மகளிர் கானில் குழாமயில் பிரிவது ஒத்தார் - அரசன் விரும்பும் அரசியர் காட்டிலே குழுமியிருந்த மயில்கள் பிரிந்து செல்வது போன்று சென்றனர்.

விளக்கம் : வானவர் மகளிர் ஊசலாடு மகளிர்க்குவமை. கானவர் மகளிர் பூக்கொய்யும் மகளிர்க்குவமை. கடிமலர் - மணமலர். சிலம்பெதிர் கூவுதல் குறிஞ்சி நிலமகளிர் விளையாட்டினுள் ஒன்று. கூயும் - கூவியும். கோன் : சீவகன். கான் - சோலை. ( 116 )

2715. நெடுவரை யருவி யாடிச்
சந்தன நிவந்த சோலைப்
படுமதங் கவரும் வண்டு
பைந்தளிர்க் கவரி யேந்திப்
பிடிமகிழ்ந் தோப்ப நின்ற
பெருங்களிற் றரசு நோக்கி
வடிமதர் மழைக்க ணல்லார்
மன்னனை மகிழ்ந்து நின்றார்.

பொருள் : நெடுவரை அருவி ஆடி - பெரிய மலையிலுள்ள அருவியிலே ஆடி; சந்தனம் நிவந்த சோலை - சந்தன மரங்கள் உயர்ந்த சோலையிலே; படுமதம் கவரும் வண்டு பைந்தளிர்க் கவரி ஏந்தி - தன்னிடந்தோன்றும் மதத்தைக் கவரும் வண்டைப் பைந்தளிராகிய கவரியை எடுத்து; பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற - பிடி களிப்புடன் ஓட்ட நின்ற; பெருங்களிற்று அரசு நோக்கி - பெரிய களிற்று வேந்தைப் பார்த்து; வடி மதர் மழைக்கண் நல்லார் மன்னனை மகிழ்ந்து நின்றார் - கூரிய மதர்த்த மழைக்கண் மங்கையர் (தாமும் அவ்வாறு இன்பம் நுகர) அரசனை விரும்பி நோக்கி நின்றனா

விளக்கம் : சந்தனம் - சந்தன மரம். நிவந்த - உயர்ந்த. படுமதம் : வினைத்தொகை. களிற்றரசு - யூதநாதன். வடி - மாவடு, மன்னன் : சீவகன். ( 117 )

2716. கொழுமடற் குமரி வாழைத்
துகிற்சுருள் கொண்டு தோன்றச்
செழுமலர்க் காம வல்லிச்
செருக்கயல் சிற்ப மாகக்
கழுமணிச் செம்பொ னாழிக்
கைவிர லுகிரிற் கிள்ளி
விழுமுலைச் சூட்டி நின்றார்
விண்ணவர் மகளி ரொத்தார்.

பொருள் : கொடுமடல் குமரி வாழைத் துகில் சுருள் கொண்டு - கொழுவிய மடலையுடைய கன்னி வாழையின், துகிலனைய வெள்ளிய குருத்தை எடுத்துக்கொண்டு; தோன்ற - அதனுள்ளே (சிற்பத்) தொழில் தோன்ற; செழுமலர்க் காம வல்லி செருக்கயல் சிற்பம் ஆக - செழுவிய மலரையுடைய காம வல்லியையும் அக் கொடியின் நடுவே கயற்பிணக்கையும் ஓவியமாக; கழுமணிச் செம்பொன் ஆழி - கழுவிய மணியிழைத்த பொன்னாழியணிந்த; கைவிரல் உகிரின் கிள்ளி - கைவிரலின் நகத்தாற் கிள்ளி; விழுமுலைச் சூட்டி நின்றார் - சிறந்த முலையிலே அழகு தோன்றச் சூட்டின நின்றனர்; விண்ணவர் மகளிர் ஒத்தார் - (அவர்கள்) வானவர் மகளிரைப் போன்றனர்.

விளக்கம் : விழுமம் முலை : விழுமுலை : விகாரம். விழுமம் - சிறப்பு : உரிச்சொல். குமரிவாழை - இளவாழை. துகில் ஈண்டு வாழைக் குருத்திற்கு ஆகுபெயர். சிற்பத்தொழில் தோன்ற என்க. காமவல்லி - ஒரு பூங்கொடி. செருக்கயல் - ஒன்றனோடொன்று போரிடும் இரண்டு கயல் மீன்கள் என்க. ( 118 )

2717. கடைதயிர்க் குரல வேங்கை
கண்ணுறச் சென்று நண்ணி
மிடைமயிர்க் கவரி நல்லான்
கன்றுணக் கண்டு நிற்பார்
புடைதிரண் டெழுந்த பொம்மல்
வனமுலை பொறுக்க லாற்றார்
நடைமெரிந் திகலி யன்ன
நன்னடை நயந்து நிற்பார்.

பொருள் : கடைதயிர்க் குரல வேங்கை கண் உறச் சென்று நண்ணி - கடையும் தயிரின் குரலையுடைய வேங்கை எதிர்ப்படுதலாலே சென்றணுகி; மிடைமயிர்க் கவரி நல்லான் கன்று உண - நெருங்கிய மயிரையுடைய கவரியை நல்ல ஆவின் கன்று பாலுண்ண; கண்டு நிற்பார் - பார்த்து நிற்பார்; அன்ன நன்னடை இகலி - அன்னத்தின் நல்ல நடையுடன் மாறு பட்டு நடந்து; புடைதிரண்டு எழுந்த பொம்மல் வனமுலை பொறுக்கல் ஆற்றார் - பக்கத்திலே திரண்டு எழுந்த பருத்த அழகிய முலையின் சுமையைப் பொறுக்க வியலாமல்; நடைமெலிந்து - நடை தளர்ந்து (தோற்று); நயந்து நிற்பார் - அன்னத்தின் நடையை விரும்பி நிற்பார்.

விளக்கம் : கடையுங்காலத்துத் தயிரில் எழுகின்ற ஓசையை ஒத்த குரலையுடைய வேங்கை என்றவாறு. வேங்கை - புலி. புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி - தயிர்கலக்கி என்றும் (பெரும்பாண்.156-8), கடையலங்குரல வாள்வரி யுழுவை என்றும் (அகநா. 277) பிறரும் ஓதுதல் உணர்க. கவரியை ஆன்கன்று பாலுண்ண என்க. ( 119 )

2718. எம்வயின் வருக வேந்த
னிங்கென விரங்கு நல்லியாழ்
வெம்மையின் விழையப் பண்ணி
யெஃகுநுண் செவிகள் வீழச்
செம்மையிற் கனிந்த காமத்
தூதுவிட் டோத முத்தம்
வெம்முலை மகளிர் வீழ்பூம்
பொதும்பருள் விதும்பி னாரே.

பொருள் : இங்கு எம் வயின் வேந்தன் வருக என - ஈங்கு நின்ற எம்மிடத்தே அரசன் வருக என்று கருதி ; இரங்கும் நல்யாழ் வெம்மையின் விழையப்பண்ணி - ஒலிக்கும் நல்ல யாழைத் (தாம் கொண்ட) புணர்ச்சி விருப்பத்தாலே விரும்ப இசைத்து; எஃகு நுண் செவிகள் வீழ - அரசனுடைய கூரிய நுண்செவி விரும்ப; செம்மையின் கனிந்த காமத் தூதுவிட்டு - தலைமையுடன் கனிதல் கொண்ட காமத்தின் தூதாக விட்டு; ஓதம் முத்தம் வெம்முலை மகளிர் - கடல் முத்து விரும்பின முலைகளையுடைய அம்மகளிர்; வீழ் பூம் பொதும்பருள் விதும்பினார் - சுற்றுக் கவிந்த இளமரச் செறிவிலே கூடுதற்கு விதும்பினார்.

விளக்கம் : விதும்பினார் - நடுங்கினார். கேட்டால் காமத்தையே விரும்புதலிற் பாட்டைக் காமத்தூது என்றார். எஃகுநுண் செவி; தோற்செவி, மரச்செவி, எஃகுச் செவி என்பனவற்றுள் மிக்கது. ( 120 )

2719. பிடிமரு ணடையி னார்தம்
பெருங்கவின் குழையப் புல்லித்
தொடைமலர்க் கண்ணி சேர்த்திச்
சுரும்புண மலர்ந்த மாலை
யுடைமது வொழுகச் சூட்டி
யுருவத்தார் குழைய வைகிக்
கடிமலர் மகளி ரொத்தார்
காவலன் களிவண் டொத்தான்.

பொருள் : பிடிமருள் நடையினார் தம் பெருங்கவின் குழையப் புல்லி - பிடி மயங்கும் நடையை உடைய அம் மகளிரின் பேரழகு வாட்டமுற்றதால் அவரைத் தழுவி; தொடை மலர்க் கண்ணி சூட்டி - தொடுத்த மலர்க் கண்ணியைச் சூட்டி; சுரும்பு உண மலர்ந்த மாலை - வண்டுகள் பருக மலர்ந்த மாலையை; உடை மது ஒழுகச்சூட்டி - அதனுடையதேன் ஒழுக அணிந்து; உருவத்தார் குழைய வைகி - (தான் அணிந்த) அழகிய மாலை குழையும்படி வைகியதால்; மகளிர் கடிமலர் ஒத்தார் - அவ்வரியவையர் கடிமலரைப் போன்றனர்; காவலன் களிவண்டு ஒத்தான் - அரசன் களிப்பையுடைய வண்டைப் போன்றான்.

விளக்கம் : வைகி - வைக : எச்சத்திரிபு. கடி - ஈண்டு நீக்கம். கடியென்னும் உரிச்சொல் பெயரெச்சமாய் நின்று வினைத்தொகையாயிற்று. கடிந்த மலரெனவே மேல் கூட்டமின்மை கூறினாராயிற்று. களி வண்டெனவே மேல் தேனுக்கும் விருப்பமின்றி நுகர்ச்சியமைந்த வண்டாயிற்று. என்றது; மேல் துறவுக்குக் காரணங் கூறுகின்றாராதலின் ஈண்டுத் தேனை உமிழ்ந்து அமிர்தத்தை நுகருமென்பது தோன்றக் கூறினார். தேன் வாயுமிழ்ந்த அமிர்துண்டவன் போன்று செல்வன் (சீவக. 29) என்று பதிகத்துள் அவ்வாறே கூறலின். ( 121 )

2720. இழைந்தவர் நலத்தை யெய்தி
யினந்திரி யேறு போலக்
குழைந்ததார் நெகிழ்ந்த தானைக்
கொற்றவன் பெயர்ந்து போகி
வழிந்துதேன் வார்ந்து சோரும்
வருக்கையி னீழல் சேர்ந்தான்
விழைந்தவக் கடுக னாங்கோர்
மந்தியை விளித்த தன்றே.

பொருள் : இழைந்தவர் நலத்தை எய்தி - (தன்னைக்) கூடிய அம் மகளிரின் நலத்தை நுகர்ந்தபின் ; குழைந்த தார் நெகிழ்ந்த தானைக் கொற்றவன் - குழைந்த தாரையும் சோர்ந்த உடையையும் உடைய வேந்தன்; இனம் திரி ஏறு போல - தன் இனத்தினின்றும் பிரிந்து செல்லும் விடைபோல; பெயர்ந்து போகி - மீண்டு போய்; தேன் வழிந்து வார்ந்து சோரும் வருக்கையின் நீழல் சேர்ந்தான் - தேன் பழத்தினின்றும் வடிந்து வீழும் பலாவின் நீழலை அடைந்தான்; ஆங்கு விழைந்த அக்கடுவன் ஓர் மந்தியை விளித்தது - ஆங்கே களவொழுக்கத்தை விரும்பிய கடுவன் ஒரு மந்தியை அழைத்தது.

விளக்கம் : இழைந்தவர் : வினையாலணையும் பெயர். ஈண்டுக் காந்தருவதத்தை முதலிய மனைவிமார் என்க. இனத்திற்றிரிதல் - கூட்டத்தினின்றும் பிரிந்து தனித்துப்போதல் என்க. கொற்றவன் : சீவகன். வருக்கை - பலாமரம். ஆங்கு ஓர் கடுவனைக் கண்டனன்; அக்கடுவன் மந்தியை விளித்தது என்க. ( 122 )

2721. அளித்திள மந்தி தன்னை
யார்வத்தால் விடாது புல்லி
யொளித்தொரு பொதும்பர்ச் சேர்ந்தாங்
கொருசிறை மகிழ்ச்சி யார்ந்து
தளிர்த்தலைப் பொதும்பர் நீங்கித்
தம்மின மிரண்டுஞ் சேர்ந்த
களித்தலைக் கூட்டங் காதன்
மந்திகண் டிருந்த தன்றே.

பொருள் : ஒரு பொதும்பர்ச் சேர்ந்து ஆங்கு ஒரு சிறை ஒளித்து - (அக்கடுவன்) ஒரு பொதும்பரை அடைந்து அதன் ஒரு பக்கத்திலே மறைவாக இருந்து; இள மந்தி தன்னை அளித்து ஆர்வத்தால் விடாது புல்லி - இளமந்தியை அதரித்து ஆவலுடன் விடாது தழுவி; மகிழ்ச்சி ஆர்ந்து - இன்பம் நிறைந்தபின்; தளிர்த்தலைப் பொதும்பர் நீங்கித் தம் இனம் இரண்டும் சேர்ந்த - தளிர் நிறைந்த அப் பொதும்பரை விட்டுத் தம் இனத்தை இரண்டும் அடர்ந்தன; களித்தலைக் கூட்டம் - களிப்புடைய அக் கூட்டத்தை; காதல் மந்தி கண்டிருந்தது - அக் கடுவனிடம் காதலையுடைய மந்தி கண்டிருந்தது.

விளக்கம் : ஒளித்து மறைவாகப் போய் என்க. பொதும்பர் - மரச்செறிவு. ஒருசிறை - ஒரு பக்கத்தே. இரண்டும் - அக்கடுவனும், மந்தியும். ( 123 )

2722. பரத்தையர்த் தோய்ந்த மார்பம்
பத்தினி மகளிர் தீண்டார்
திருத்தகைத் தன்று தெண்ணீ
ராடிநீர் வம்மி னென்ன
வுரைத்ததென் மனத்தி லில்லை
யுயர்வரைத் தேனை யுண்பார்
வருத்துங்காஞ் சிரமும் வேம்பும்
வாய்க்கொள்வார் யாவர் சொல்லாய்.

பொருள் : பரத்தையர் தோய்ந்த மார்பம் திருத்தகைத்து அன்று - பரத்தையரைத் தழுவிய மார்பு தூய தன்மையது அன்று; பத்தினி மகளிர் தீண்டார் - (ஆகையால்) கற்புடைய மங்கையர் தீண்டமாட்டார்; நீர் தௌ நீர் ஆடி வம்மின் என்ன - நீர் தெளிந்த நீரிலே முழுகி வருவீர் என்று (அம்மந்தி) கூற; (அது கேட்ட கடுவன்), உரைத்தது என் மனத்தில் இல்லை - நீ கூறியதை யான் மனத்தும் நினைத்தது இல்லை; உயர் வரைத் தேனை உண்பார் யாவர் வருத்தும் காஞ்சிரமும் வேம்பும் வாய்க்கொள்வார்? - உயர்ந்த மலைத்தேனைப் பருகுவோர் யாவர் கசப்பைத் தரும் எட்டியையும் வேம்பையும் வாய்க்கொள்வார்?; சொல்லாய் - நீயேகூறுவாய்.

விளக்கம் : மார்பம் திருத்தகைத்து அன்று ஆதலால் பத்தினி மகளிர் தீண்டார் என்க. திருத்தகைத்து - தூய தன்மைத்து. ஈண்டுத் திரு தூய்மைமேனின்றது. நீர் நீராடிவம்மின் என மாறுக. நீர் - நீவிர். மலைத்தேன் - தன் காதன் மந்திக்குவமை. காஞ்சிரமும் வேம்பும் பரத்தைமையுடைய பிற மந்திகட்குவமை. காஞ்சிரம் - எட்டிக்காய்; ஆகுபெயர். வேம்பு - காய்க்கு ஆகுபெயர். ( 124 )

2723. ஈங்கினி யென்னை நோக்கி
யெவன் செய்தி யெனக்கு வாணா
ணீங்கிற்றுச் சிறிது நிற்பிற்
காண்டியா னீயு மென்னத்
தூங்கித்தான் றுளங்க மந்தி
தொழுத்தையேன் செய்த தென்று
தாங்குபு தழுவிக் கொண்டு
தன்னைத்தான் பழித்த தன்றே.

பொருள் : ஈங்கு இனி என்னை நோக்கி எவன் செய்தி - இவ்விடத்தே (மறுமொழி கூறாமல்) இனி வெறுப்புடன் என்னைப் பார்த்து என்ன செய்கிறாய்?; சிறிது நிற்பின் எனக்கு வாணாள் நீங்கிற்று - சிறிது தாழ்ப்பின் எனக்கு வாழ்நாள் நீங்கியதாம்; நீயும் காண்டியென்னத் தான் தூங்கித் துளங்க - அதனை நீயும் காண்பாயாக என்று அக்கடுவன் தூங்கி (அம்மந்தியின் மனம்) வருந்தச் செய்ய; மந்தி தொழுத்தையேன் செய்தது என்று - அம் மந்தியும் இவ்வருத்தம் தொழுத்தையேன் செய்தது என்று கூறி; தாங்குபு தழுவிக்கொண்டு - எடுத்துத் தழுவிக்கொண்டு; தன்னைத் தான் பழித்தது - தன்னைத்தானே பழித்துக் கொண்டது.

விளக்கம் : தொழுத்தையேன் - நின் ஏவலைச் செய்யும் அடியேன். தொழுத்தையேன் செய்தது எனவே மனங் கொளற்க என்றும் வேண்டிக்கொண்டதாயிற்று. இல்லுள் - தொழுத்தையாற் கூறப்படும் (நலாடி. 326) என்று தொழுத்தை அடிமையாதல் காண்க.(125)

2724. கண்ணினாற் குற்றங் கண்டுங்
காதலன் றெளிப்பத் தேறிப்
பெண்மையாற் பழித்த மந்தி
பெருமகி ழுவகை செய்வான்.
றிண்ணிலைப் பலவின் றேங்கொள்
தொழுத்தையேன் செய்த தென்று
பண்ணுறு சுளைகள் கையாற்
பகுத்துணக் கொடுத்த தன்றே.

பொருள் : கண்ணினால் குற்றம் கண்டும் - கண்ணாலே குற்றத்தைப் பார்த்தும்; காதலன் தெளிப்பத் தேறிப் பெண்மை யாற் பழித்த மந்தி - காதலன் ஊடல் தீர்ப்பத் தெளிந்து தன் பெண்மையால் தன்னைப் பழித்துக்கொண்ட மந்தியை; பெருமகிழ் உவகை செய்வான் - பெரிதும் மகிழ்ச்சியூட்ட வேண்டி; திண் நிலைப் பலவின் தென் கொள் பெரும்பழம் கொண்டு - திண்மையுடைய பலவின் இனிமை பொருந்திய பெரிய பழமொன்றை எடுத்து; கீறி - நகத்தாற் பிளந்து; பண் உறு சுளைகள் - ஆராய்தலுற்ற சுளைகளை; கையால் பகுத்து உணக்கொடுத்தது - (கடுவன்) தன் கையினால் எடுத்து உண்ண நல்கியது.

விளக்கம் : பெண்மை - ஈண்டுப் பெண்மைக் குணங்கள் நான்கனுள் மடம் ஒன்றனையே குறித்து நீன்றது. தன்னையே பழித்துக்கொண்ட மந்தி எண்க. பண்ணுறுதல் - ஆராய்ந்தெடுக்கப்படுதல். ( 126 )

2725. இன்கனி கவரு மந்தி கடுவனோ டிரிய வோட்டி
நன்கனி சிலத னுண்ண நச்சுவேன் மன்ன னோக்கி
யென்பொடு மிடைந்த காம மிழிபொடு வெறுத்து நின்றா
னன்புடை யரிவை கூட்டம் பிறனுழைக் கண்ட தொத்தே.

பொருள் : இன் கனி கவரும் மந்தி கடுவ னோடு இரிய ஓட்டி - இனிய கனியைக் (கடுவன் நல்க) வாங்கும் மந்தியையும் அக்கடுவனையும் ஓட வெருட்டி; நன் கனி சிலதன் உண்ண - அந்த நல்ல பழத்தை (அத்தோட்டப் ) பணியாளன் உண்ணாநிற்க; நச்சு வேல் மன்னன் நோக்கி - (அதனை) நஞ்சூட்டிய வேலேந்திய மன்னன் பார்த்து; அன்புடை அரிவை கூட்டம் பிறனுழைக் கண்டது ஒத்து - காதலையுடைய மனைவியின் கூட்டத்தைப் பிறனிடங் கண்டதைப்போன்று; என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து நின்றான் - உடலுடன் தோன்றிச் செறிந்த காமத்தையும் இழிவைத்தரும் முதுமையையும் வெறுத்து நின்றான்.

விளக்கம் : சிலதன் : அரசன் ஏவல் செய்து அக் காவினைக் காப்பவன். பூ விலை மடந்தையர் ஏவற்சிலதியர் (சிலப். 5 : 51) எனக் காண்க. என்பு : ஆகுபெயராய் உடம்பை யுணர்த்தியது. ஈண்டுக் காமம் என்றது அரசுரிமை எய்தி நுகரும் போகத்தின் மேலே நிகழும் ஆர்வத்தை. அது செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் - றல்லல் நீத்த உவகை நான்கே (தொல். மெய்ப் - 11) என்பதனாலுணர்க. ஈண்டு இழிபென்றது. இளிவரலாகிய சுவையாதலின் அதனை உணர்த்தும் நால்வகை மெய்ப்பாட்டில் மூப்பினையே கொள்க. அது, மூப்பே பிணியே வருத்தம் மென்மையோ - டியாப்புற வந்த இளிவரல் நான்கே (தொல். மெய். 6) என்பதனாலுணர்க. இனி நான்கையும் வெறுத்தான் என்றுமாம். ( 127 )

2726. கைப்பழ மிழந்த மந்தி
கட்டியங் கார னொத்த
திப்பழந் துரந்து கொண்ட
சிலதனு மென்னை யொத்தா
னிப்பழ மின்று போகத்
தின்பமே போலு மென்று
மெய்ப்பட வுணர்வு தோன்றி
மீட்டிது கூறி னானே.

பொருள் : கைப்பழம் இழந்த மந்தி கட்டியங்காரன் ஒத்தது - கையிலுள்ள பழத்தை இழந்த மந்தி கட்டியங்காரனைப் போன்றது; இப்பழம் துரந்து கொண்ட சிலதனும் என்னை ஒத்தான் - இப் பழத்தை அவற்றை ஓட்டிக் கைக்கொண்ட பணியாளனும் என்னைப் போன்றான்; இப்பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று - இப்பழத்தை நுகர்ந்து இவன் எய்தும் இன்பம் இன்று யான் நுகர்கின்ற இன்பத்தையே ஒக்கும் என்று; மெய்ப்பட உணர்வு தோன்றி - உண்மையாக உணர்வு பெற்று; மீட்டு இது கூறினான் - திரும்பவும் தன்னுளத்துடன் இதனையுங் கூறுகின்றான்.

விளக்கம் : அரசை இழந்த கட்டியங்காரனை ஒத்தது என்றவாறு. அரசு பழத்திற்குவமை. சிலதன் - பணியாளன்; இப்பழத்தை நுகர்ந்து இவன் எய்தும் இன்பம் யானுகரும் இவ்வின்பமே போலும் என்பது கருத்து. ( 128 )

2727. மெலியவர் பெற்ற செல்வம்
வேரொடுங் கீழ்ந்து வெளவி
வலியவர் கொண்டு மேலை
வரம்பிகந் தரம்பு செய்யுங்
கலியது பிறவி கண்டாங்
காலத்தா லடங்கி நோற்று
நலிவிலா வுலக மெய்த
னல்லதே போலு மென்றான்.

பொருள் : மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து - வலிமையில்லாதவர் பெற்ற செல்வத்தை வேரொடு பறித்து; வலியவர் வெளவிக்கொண்டு மேலை வரம்பு இகந்து அரம்பு செய்யும் - வலியவர் கைப்பற்றிக்கொண்டு பழைய வரம்பைக் கடந்து குறும்பு செய்கின்ற; பிறவியது கலிகண்டாம் - பிறப்பின் கலியைக் கண்டோம்; காலத்தால் அடங்கி நோற்று - துறத்தற் குரிய இக் காலத்தே ஐம்பொறியும் அடங்கித் தவஞ்செய்து; நலிவு இலா உலகம் எய்தல் நல்லதே போலும் - அழிவு இல்லாத வீட்டினை அடைதல் நன்றே போலும்.

விளக்கம் : கலி - நுகரும் பொருளின்மையால் அவற்றின் மேற்செல்லும் பற்றால் நிகழும் வருத்தம்; செருக்குமாம். மேலை வரம்பு இகந்து என்றது தந்தை தாயத்தைப்புதல்வனே பற்றுதற்குரியன் என முன்னர்க் கூறிய வரம்பைக் கடந்து என்றவாறு. என்றது சச்சந்தனரசைச் கட்டியங்காரன் வலிதின் எய்திய தன்மை கூறியவாறாயிற்று. ( 129 )

2728. நல்வினை யென்னு நன்பொற்
கற்பக மகளி ரென்னும்
பல்பழ மணிக்கொம் பீன்று
பரிசில்வண் டுண்ணப் பூத்துச்
செல்வப்பொற் சிறுவ ரென்னுந்
தாமங்க டாழ்ந்து நின்ற
தொல்கிப்போம் பாவக் காற்றி
னொழிகவிப் புணர்ச்சி யென்றான்.

பொருள் : நல்வினை என்னும் நன்பொற் கற்பகம் மணிக்கொம்பு - நல்வினை என்கின்ற அழகிய பொன்மயமான கற்பகத்தின் மணிக்கொம்பு; பரிசில் வண்டு உண்ணப் பூத்து - பரிசிலராகிய வண்டுகள் தேனை நுகரும்படி மலர்ந்து; மகளிர் என்னும் பல்பழம் ஈன்று - மகளிர் என்கின்ற பல கனிகளை யீன்று; செல்வப் பொன் சிறுவர் என்னும் தாமங்கள் தாழ்ந்து நின்றது - அழகிய செல்வச் சிறுவர் என்கிற மாலைகள் தன்னிடத்தே தங்கி நின்றது; பாவக் காற்றின் ஒல்கிப்போம் - இது தீவினைக் காற்று மோதினால் நிலையாமற் சாய்ந்து விழுந்துபோம்; ஒழிக இப் புணர்ச்சி என்றான் - (அவ்வாறு விழுமுன்) இவ்வில்லறத் தொடர்பு நீங்குக என்றெண்ணினான்.

விளக்கம் : நல்வினை நயந்தவெல்லாந் தருதலின் கற்பகம் எனப்பட்டது. பரிசிலராகிய வண்டு என்க. பொன்போற் புதல்வர் என்றார். புறத்தினும் (9). தாமம் - மாலை. சிறுவர்க்குவமை. கற்பகம் நின்றது அது ஒல்கிப்போம் என்க. பாவக்காற்று - தீவினையாகிய காற்று. ( 130 )

2729. வேட்கைமை யென்னு நாவிற்
காமவெந் தேறன் மாந்தி
மாட்சியொன் றானு மின்றி
மயங்கினேற் கிருளை நீங்கக்
காட்டினார் தேவ ராவர்
கைவிளக் கதனை யென்று
தோட்டியாற் றொடக்கப் பட்ட
சொரிமதக் களிற்றின் மீண்டான்.

பொருள் : வேட்கைமை என்னும் நாவின் - விருப்பம் என்னும் நாவினாலே; காம வெம்தேறல் மாந்தி - காமமாகிய கொடிய கள்ளை நிறைய உண்டு; மாட்சி ஒன்றானும் இன்றி - பெருமை தரும் செய்கை சிறிதும் இல்லாமல்; மயங்கினேற்கு இருளை நீங்கக் கைவிளக்கு அதனைக் காட்டினார் - இன்பத்தே மயங்கிய எனக்கு இவ்விருள் நீங்கும்படி கைவிளக்காகிய (வீட்டு நெறியிலே செல்லுமாறு) இத் துறவுள்ளங் காட்டிய இவர்கள்; தேவர் ஆவார் என்று - தேவராகக் கூடும் என்று; தோட்டியால் தொடங்கப்பட்ட - அங்குசத்தால் தடுக்கப்பட்ட; மதம் சொரி களிற்றின் மீண்டான் - மதம் பெய்யும் கற்றைப்போல இன்ப நுகர்ச்சியினின்றும் எண்ணத்தைத் திருப்பினான்.

விளக்கம் : இருளை : ஐ : அசை. காட்டினார் : மந்தியும், கடுவனும். சிலதனும். இவர்கள் இங்ஙனங் காட்டிய நல்வினையால் தேவராவார் என வாழ்த்தினான் எனினுமாம். மதம் சொரிகளிறு தோட்டியால் தொடக்கப்படல் இல்பொருளுவமை. ( 131 )

2730. கைந்நிறை யெஃக மேந்திக்
கனமணிக் குழைவில் வீச
மைந்நிற மணிவண் டார்ப்ப
வார்தளிர் கவரி வீச
மெய்ந்நெறி மகிழ்ந்து நின்றான்
வேனில்வாய்க் காம னொத்தான்
மொய்ந்நிற மாலை வேய்ந்து
முருகுலா முடியி னானே.

பொருள் : மொய்ந்நிற மாலை வேய்ந்து முருகு உலாம் முடியினான் - செறிந்த நிறமுடைய மாலை அணிந்து மணங்கமழும் முடியுடையான்; கைநிறை எஃகம் ஏந்தி - கை நிறைந்த வேலை ஏந்தி; கனம் மணிக்குழை வில்வீச - பெரிய மணிகள் இழைத்த குழை ஒளிவீச; மைநிற மணி வண்டு ஆர்ப்ப - கருநிறமுடைய அழகிய வண்டு முரல; வார்தளிர் கவரிவீச - நீண்ட தளிர்கள் கவரிபோல வீச; மெய்ந்நெறி மகிழ்ந்து நின்றான் - வீட்டுநெறியிலே விருப்புடன் நின்றவன்; வேனில்வாய்க் காமன் ஒத்தான் - வேனிலுக்குரிய காமனைக் போன்றான்.

விளக்கம் : தளிர் கவரி வீச என்றார் பொதும்பரிடைத் தனியே நிற்றலின். காமனோடு உவமித்தார் மனவேட்கையடங்குதலின். சிலை வலான் போலுஞ் செறிவினான் (கலி.143) என்றார் பிறரும். ( 132 )

2731. நடுச்சிகை முத்துத் தாமம்
வாணுத னான்று நக்கப்
படுத்தனர் பைம்பொற் கட்டில்
பாடினர் கீதந் தூப
மெடுத்தன ரெழுந்து தேனா
ரெரிமணி வீணை யார்த்த
கொடிப்பல பூத்துச் சூழ்ந்த
குங்குமக் குன்ற மொத்தான்.

பொருள் : சிகைநடு முத்துத் தாமம் வாள்நுதல் நான்று நக்க - கூந்தலின் நடுவிலே தலைப்பாளை தூக்கித் தொட்டுக் கொண்டிருக்க நின்று; பைம்பொன் கட்டில் படுத்தனர் - பொன்னால் ஆன கட்டிலை யிட்டனர்; கீதம் பாடினர் - (சிலர்) பண் இசைத்தனர்; தூபம் எடுத்தனர் - நறும்புகை ஏந்தினர்; தேன்ஆர் எரிமணி வீணை எழுந்து ஆர்த்த - (பிறகு) இனிமை நிறைந்த, ஒளிவிடும் மணிகள் இழைத்த யாழ்கள் எழுந்து ஒலித்தன; (இந் நிலையில் மகளிர் சூழக் கட்டிலில் இருந்த சீவகன்); கொடிப்பல பூத்துச் சூழ்ந்த குங்குமக் குன்றம் ஒத்தான் - கொடிகள் பல மலர்ந்து சூழந்த குங்கும மலையைப் போன்றான்.

விளக்கம் : சிகைநடு என மாறுக. முத்துத்தாமம் என்றது தலைப்பாளை என்னும் ஒருவகைத் தலைக்கோலத்தை. நக்க - தொட. பணி மகளிர் என எழுவாய் வருவித்தோதுக. கட்டிலைப் படுத்தனர்; கீதம் பாடினர்; என்க. தேனார் வீணை : எரிமணி வீணை என இயைக்க. ( 133 )

2732. மெள்ளவே புருவங் கோலி
விலங்கிக்கண் பிறழ நோக்கி
முள்ளெயி றிலங்கச் செவ்வாய்
முறுவற்றூ தாதி யாக
வள்ளிக்கொண் டுண்ணக் காமங்
கனிவித்தார் பனிவிற் றாழ்ந்த
வள்ளிதழ் மாலை மார்பன்
வச்சிர மனத்த னானான்.

பொருள் : புருவம் மெள்ளக் கோலி - தம் புருவத்தை மெல்ல வளைத்து; கண் விலங்கிப் பிறழ நோக்கி - கண்கள் குறுக்காகிப் பிறழும்படி நோக்கி; செவ்வாய் முள் எயிறு இலங்க - சிவந்த வாயிலே முள்ளனைய பற்கள் விளங்க; முறுவல் தூது ஆதி ஆக - முறுவலிக்கும் முறுவல் தூது முதலாக; காமம் அள்ளிக்கொண்டு உண்ணக் கனிவித்தார் - அவன் காமவின்பத்தை வாரி உண்ணும்படி பழுப்பித்துப் பார்த்தார்; பனிவில் தாழ்ந்தவள் இதழ்மாலை மார்பன் - முத்துவடம் தங்கிய, வளவிய மலர் மாலையுடைய மார்பன்; வச்சிர மனத்தன் ஆனான்- (நெகிழாமல்) துறவின்கண்ணே உறுதி பூண்ட உள்ளத்தன் ஆயினான்.

விளக்கம் : பனிவில் - முத்துவடம் : (ஆகுபெயர்). கோலி - வளைத்து. கண்விலங்கிப் பிறழ என்க. முறுவலாகிய தூது என்க. கனிவித்துப் பார்த்தார் என்க. வச்சிர மனம் - உறுதியுடைய மனம். ( 134 )

2733. முலைமுகஞ் சுமந்த முத்தத்
தொத்தொளிர் மாலை யாரு
மலைமுகந் தனைய மார்பின்
மன்னனு மிருந்த போழ்திற்
கொலைமுகக் களிற னாற்கு
நாழிகை சென்று கூறக்
கலைமுக மல்லர் புல்லிக்
கமழுநீ ராட்டி னாரே.

பொருள் : முலைமுகம் சுமந்த முத்தத் தொத்து ஒளிர் மாலையாரும் - முலைத்தலை சுமந்த முத்துக் கொத்து விளங்கும் மாலையுடைய மகளிரும்; மலை முகந்த அனைய மார்பின் மன்னனும் - மலையின் பெருமையை வாரிக்கொண்டாற் போன்ற மார்பையுடைய வேந்தனும்; இருந்த போழ்தில் - அமர்ந்திருந்த போது; கொலைமுகக் களிறனாற்கு நாழிகை சென்று கூற - கொலைத்தன்மையுடைய களிறு போன்ற சீவகற்குக் கணிகள் சென்று நாழிகை கூற; கலைமுக மல்லர் புல்லிக் கமழுநீர் ஆட்டினார் - நீராட்டுங் கலை தேர்ந்த மல்லர் உடம்பைத் தடவி நறுமணங் கமழும் நீரால் ஆட்டினார்.

விளக்கம் : முலைமுகம் என்புழி முகம் ஏழாவதன் சொல்லுருபு. தொத்து - கொத்து. மாலையார் : தேவிமார். மன்னன் : சீவகன். மலையின் பெருமையைக் கொள்ளைகொண்டாற் போலும் மார்பு என்க. கணிகள் சென்று நாழிகை கூற என்க. மஞ்சனமாட்டுதற்குக் கூறிய இலக்கணந் துறைபோகக் கற்ற மல்லர் என்க. ( 135 )

2734. வெண்டுகின் மாலை சாந்தம்
விழுக்கலம் விதியிற் சேர்த்தி
நுண்டுகிற் றிரைகள் சேர்ந்த
நூற்றுலா மண்ட பத்துக்
கண்டிரண் முத்த மென்றோட்
காவிக்கண் மகளிர் போற்றி
யெண்டிசை மருங்கு மேத்த
வினிதினி னேறி னானே.

பொருள் : வெண்துகில் மாலை சாந்தம் விழுக்கலம் விதியிற் சேர்த்தி - வெண்மையான துகிலையும் மாலையையும் சாந்தையும் சிறந்த கலன்களையும் முறைப்படி அணிவித்து; நுண்துகில் திரைகள் சேர்ந்த நூறு உலாம் மண்டபத்து - நுண்ணிய துகிலால் ஆகிய திரைகள் சூழவிட்ட நூறடி உலாவுதலையுடைய மண்டபத்தில்; கண்திரள் முத்தம் மென்தோள் காவிக்கண் மகளிர் போற்றி - இடம் திரண்ட முத்துக்களை அணிந்த மெல்லிய தோள்களையும் நீலமலர் போன்ற கண்களையும் உடைய மாதரார் வாழ்த்தி; எண்திசை மருங்கும் ஏத்த - எட்டுத் திக்கினும் நின்று புகழ; இனிதினின் ஏறினான் - மகிழ்ந்து புகுந்தான்.

விளக்கம் : மண்டபத்து ஏறினான் என்க. பொருட்கண் தோன்றும் வரையறைக் குணப்பெயராகிய நூறென்னும் எண்ணுப் பெயர் எண்ணுடைய பொருள்மேல் ஆகுபெயராய் நின்றது; ஆறறி யந்தணர் (கலி.1) என்றாற்போல. உண்டால் நூறடி உலாவுதல் வேண்டும் என்று மருத்துவ நூல் கூறியதனைக் கூறினார். ( 136 )

2735. நெய்வளங் கனிந்து வாச
நிறைந்துவான் வறைக ளார்ந்து
குய்வளங் கழுமி வெம்மைத்
தீஞ்சுவை குன்ற லின்றி
யைவரு ளொருவ னன்ன
வடிசினூன் மடைய னேந்த
மைவரை மாலை மார்பன்
வான்சுவை யமிர்ந்த முண்டான்.

பொருள் : நெய்வளம் கனிந்து வாசம் நிறைந்து - நெய்மிகுதியாக வார்க்கபெற்று, மணம் நிறைந்து ; வான் வறைகள் ஆர்ந்து - சிறந்த பொரிக் கறிகள் நிறைந்து; குய்வளம் கழுமி - தாளிப்பு நன்கு பொருந்தி, வெம்மைத் தீ சுவை குன்றல் இன்றி - சூட்டினால் உண்டான இனிய சுவை குறையாமல்; ஐவருள் ஒருவன் அன்ன அடிசில் நூல் மடையன் ஏந்த - வீமனைப் போன்ற சமையற் கலையில் தேர்ந்த மடையன் ஏந்தி நிற்க; மைவரை மாலை மார்பன் - கரிய மலைபோலும் மார்பினான்; வான் சுவை அமிர்தம் உண்டான - சிறந்த சுவையுடைய அடிசிலை உண்டான்.

விளக்கம் : வறைகள் - வறுவல்கள். குய்வளம் - தாளிப்பு வளம். ஐவருள் ஒருவன் - பாண்டவர் ஐவருள் ஒருவனாகிய வீமசேனன். காவெரி யூட்டிய கவர்கணைத்தூணிப், பூவிரி கச்சைப் புகழோன் தன்முன், பனி வரை மார்பன் பயந்த நுண்பொருட் பனுவல் என்றார் சிறுபாணினும் (238 - 41). இவன் மடையனுக்குவமை. ( 137 )

2736. கைப்பொடி சாந்த மேந்திக்
கரகநீர் விதியிற் பூசி
மைப்படு மழைக்க ணல்லார்
மணிச்செப்பின் வாச நீட்டச்
செப்படு பஞ்ச வாசந்
திசையெலாங் கமழ வாய்க்கொண்
டொப்புடை யுறுவர் கோயில்
வணங்குது மெழுக வென்றான்.

பொருள் : கைப்பொடி சாந்தம் ஏந்தி - முன்னர்ப் பொடியையும் பின்னர்ச் சந்தனத்தையும் தன் கையிலே வாங்கி; கரகநீர் விதியிற் பூசி - கரக நீரிலே முறைப்படி கையையும் வாயையும் கழுவி; மைப்படு மழைக்கண் நல்லார் வாசம் மணிச் செப்பின் நீட்ட - மைதீட்டிய மழைக்கண் நங்கையர் முகவாசத்தை மணிச்செப்பிலே நீட்ட; செப்பு அடு பஞ்ச வாசம் திசை எலாம் கமழ வாய்க்கொண்டு - சொல்லுதற்கரிய அப் பஞ்சவாசத்தைத் திக்கெலாம் மணக்க வாயிற் கொண்டு; ஒப்பு உடை உறுவர் கோயில் வணங்குதும் எழுக என்றான் - தனக்குத்தானே உவமையான அருகன் கோயிலை வணங்குவோம் எழுக என்று பணித்தான்.

விளக்கம் : செப்படும் ஒப்புடைக் கோயில் எனக் கூட்டிச் செப்பினைத் தன்னோடு உவமிக்கும் அளவில், அதனைக் கெடுக்கும் ஒப்பினையுடைய கோயில் என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். உறுவர் - எல்லாத் தேவரினும் மிக்கவர். உறு - மிகுதி. (138)
 
6. அறிவர் சிறப்பு

2737. ஒருபகல் பூசி னோராண்
டொழிவின்றி விடாது நாறும்
பெரியவர் கேண்மை போலும்
பெறற்கரும் வாச வெண்ணெ
யரிவையர் பூசி யாடி
யகிற்புகை யாவி யூட்டித்
திருவிழை துகிலும் பூணுந்
திறப்படத் தாங்கி னாரே.

பொருள் : அரிவையர் - (அதுகேட்ட) மாதர்கள்; ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவின்றி விடாது நாறும் - ஒருவேளை பூசினால் ஓராண்டுவரையும் விடாமல் எப்போதும் மணக்கும்; பெரியவர் கேண்மை போலும் - உயர்ந்தோர் நட்பை ஒக்கும்; பெறற்கு அரும் வாச எண்ணெய் - கிடைத்தற்கரிய மணமிகும் எண்ணெயை; பூசி ஆடி - தேய்த்துக் குளித்து; அகிற் புகை ஆவி ஊட்டி - அகிலின் புகையாலே மணமூட்டி; திருவிழை துகிலும் பூணும் - திருமகளும் விரும்பும் ஆடையும் அணியும்; திறம்படத் தாங்கினார் - வகையுற அணிந்தனர்.

விளக்கம் : ஓராண்டும் என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது; அஃது எக்காலமும் என்னும் பொருளது. இதனோடு,

மென்மையு நேயமு நன்மையு நாற்றமும்
ஒருநாட் பூசினும் ஓரியாண்டு விடாஅத்
திருமா ணுறுப்பிற்குச் சீர்நிறை யமைத்துக்
கரும வித்தகர் கைபுனைந் தியற்றிய
வாச வெண்ணெய் பூசினர்போற்றி. (2 - 5 : 97 - 101)

எனவரும் பெருங்கதை ஒப்புக்காணற்பாலது. ( 139 )

2738. நற்றவஞ் செய்த வீர
ருளவழி நயத்து நாடும்
பொற்றதா மரையி னாளிற்
பூஞ்சிகை முத்த மின்னக்
கொற்றவற் றொழுது சேர்ந்தார்
கொம்பனார் வாமன் கோயின்
மற்றவன் மகிழ்ந்து புக்கு
மணிமுடி துளக்கி னானே.

பொருள் : நல்தவம் செய்த வீரர் உளவழி நயந்து நாடும் - நல்ல தவம்புரிந்த வீரர்கள் இருக்குமிடத்தை விரும்பி அவரிருக்குமிடத்தை நாடிச் செல்லுகின்ற; பொற்ற தாமரையினாளின் - பொற்றாமரையாளைப் போல; பூஞ்சிகை முத்தம் மின்ன - பூங்குழலிலே முத்துக்கள் ஒளிவீச; கொம்பனார் - அம்மலர்க் கொம்பு போன்ற மங்கையர்; கொற்றவன் தொழுது சேர்ந்தார் - அரசனை வணங்கிச் சேர்த்தனர்; அவன் வாமன் கோயில் மகிழ்ந்து புக்கு - (பின்னர்) அரசன் அருகன் கோயிலை மகிழ்வுடன் அடைந்து; மணிமுடி துளக்கினான் - மணியிழைத்த முடியால் வணங்கினான்.

விளக்கம் : மிக்க தவத்தைச் செய்து அதனால் நால்வகை வீரத்தையும் உடையவராவர். அவை, கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே (தொல் : மெய்ப். 9) என்பதனான் உணர்க. ( 140 )

வேறு

2739. கடிமலர்ப் பிண்டிக் கடவுள் கமலத்
தடிமலர் சூடி யவருலகில் யாரே
யடிமலர் சூடி யவருலக மேத்த
வடிமலர் தூவ வருகின்றா ரன்றே.

பொருள் : கடிமலர்ப் பிண்டிக் கடவுள் - எக்காலமும் புதியதாகிய மலரினையுடைய அசோகின் அடியிலே எழுந்தருளிய இறைவனின்; கமலத்து அடிமலர் சூடியவர் உலகில் யார்? - தாமரையிலே நடந்த அடியாகிய மலரைக் சூடியவர் இவ்வுலகில் யாவராய் நுகர்வர்? (என வினவின்); அடிமலர் சூடியவர் அன்றே - அடிமலரை அணிந்தவர்களல்லரோ; உலகம் ஏத்த - உலகம் போற்ற; வடிமலர் தூவ வருகின்றார் - அரசர் வடித்த மலரைத் தூவ ஈண்டு வருகின்றவர்?

விளக்கம் : கடிமலர் - ஈண்டு எக்காலமும் புதிய மலர் என்பதுபட நின்றது, யாவர் என்றது எத்தகையோராய் என்றவாறு. உலகம் : ஆகுபெயர். வடிமலர்தூவ வருகின்றவர் என்க. ( 141 )

2740. முத்தணிந்த முக்குடைக்கீழ் மூர்த்தி திருவடியைப்
பத்திமையா னாளும் பணிகின்றார் யாரே
பத்திமையா னாளும் பணிவார் பகட்டெருத்தி
னித்தில வெண்குடைக்கீழ் நீங்காதா ரன்றே.

பொருள் : முத்தணிந்த முக்குடைக் கீழ் மூர்த்தி திருவடியை - முத்துக்களால் அணி செய்யப்பெற்ற முக்குடையின் கீழ் எழுந்தருளிய இறைவன் திருவடியை; பத்திமையால் நாளும் பணிகின்றார் யார்? - அன்புடைமையால் எப்போதும் வணங்குவோர் யாவராய் இன்புறுவர்? (எனின்); பத்திமையால் நாளும் பணிவார் அன்றே - அவ்வாறு அன்புடன் எப்போதும் வணங்குவோர் அல்லரோ; பகட்டெருத்தின் நித்தில வெண்குடைக்கீழ் நீங்கா தார் - யானையின் பிடரிலே முத்தணிந்த வெண்குடையின் கீழே இருக்கும் இருப்பு நீங்காமல் வருகின்றார்?

விளக்கம் : முக்குடைக்கீழ் மூர்த்தி - அருகக்கடவுள். பத்திமை - அன்பு. பகட்டெருத்து - யானையின் பிடரி. எருத்தத்தின் மேலே குடைக்கீழே யிருக்கின்ற இருப்பு நீங்காமல் வருகின்றவர் என்க. ( 142 )

2741. கருமக் கடல்கடந்த கைவலச் செல்வ
னெரிமலர்ச் சேவடியை யேத்துவார் யாரே
யெரிமலர்ச் சேவடியை யேத்துவார் வான்றோய்
திருமுத் தவிராழிச் செல்வரே யன்றே.

பொருள் : கருமக் கடல் கடந்த கைவலச் செல்வன் - இரு வினையாகிய கடலைக் கடந்து அதனாற் பெற்ற கேவல மடந்தையை நுகருஞ் செல்வனின்; எரிமலர்ச் சேவடியை ஏத்துவார் யார்? - பிறவியைச் சுடும் மலரனைய சேவடியை வணங்குவார் யாவராய் இன்புறுவர்? (எனின்); எரிமலர்ச் சேவடியை ஏத்துவார் அன்றே - அவ்வாறு எரிமலர்ச் சேவடியை வணங்குவாரல்லரோ; திருமுத்து அவிர் ஆழிச் செல்வர் - அழகிய முத்து விளங்குகின்ற கொற்றக்குடையுட்ன் எப்போதும் வருகின்றனவர்?

விளக்கம் : இம்மூன்று தாழிசையாலும் வணக்கத்தாற் பெறும் பயனை அரசியர் கேட்டுணரும்படி கூறி வணங்கினான். கருமம் என்றது இருவினைகளின் ஈட்டத்தை. கடத்தற் கருமையுடைமையின் கடல் என்றார். கைவலச் செல்வம் - வீட்டின்பம். கைவலம் - கேவல மடந்தை. செல்வன் - அருகன். எரிமலர் - தாமரை மலர். முத்துஅவிர் ஆழி - கொற்றக்குடை. ஆழி - வட்டம். குடைக்கு: ஆகுபெயர். ( 143 )

வேறு

2742. வண்ண மாமல் மாலை வாய்ந்தன
சுண்ணங் குங்குமந் தூமத் தாற்புனைந்
தண்ணல் சேவடி யருச்சித் தானரோ
விண்ணி லின்பமே விழைந்த வேட்கையான்.

பொருள் : விண்இல் இன்பமே விழைந்த வேட்கையான் - வானுலகில் இல்லாத வீட்டின்பத்தையே விரும்பின வேட்கையுடையான்; வாய்ந்தன வண்ண மாமலர் மாலை - பொருந்தினவாகிய அழகிய மலர்மாலையாலும்; சுண்ணம் - சுண்ணப் பொடியாலும்; குங்குமம் - குங்குமக் குழம்பினாலும்; தூமத்தால் - நறுமணப் புகையாலும்; புனைந்து - அணிந்து; அண்ணல் சேவடி அருச்சித்தான் - இறைவன் சேவடியை அருச்சித்தான்.

விளக்கம் : வண்ணம் - நிறம். சுண்ணம் - நறுமணப்பொடி. ( 144 )

7. அறவுரை

2743. இலங்கு குங்கும மார்ப னேந்துசீர்
நலங்கொள் சாரணர் நாதன் கோயிலை
வலங்கொண் டாய்மலர்ப் பிண்டி மாநிழற்
கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தினான்.

பொருள் : இலங்கு குங்கும மார்பன் - விளங்குங் குங்கும மணிந்த மார்பன்; நாதன் கோயிலை வலம்கொண்டு - (வானிலிருந்திருங்கி) இறைவன் கோயிலை வலம் வந்து; ஆய்மலர்ப் பிண்டி மாநிழல் - ஆராய்ந்த மலரையுடைய பிண்டியின் பெரு நிழலிலே; கலந்த கல்மிசை - அந்நிழல் தங்கிய பளிங்குக் கல்லின்மேல்; ஏந்துசீர் நலம்கொள் சாரணர் - மிகுபுகழுடைய நலங்கொண்டு நின்ற சாரணர் இருவரை; கண்டு வாழ்த்தினான் - கண்டு வாழ்த்தினான்.

விளக்கம் : மாநிழல் கலந்த சாரணர் என இயைத்துப், பெரிய இரண்டு மணிகளின் நிறத்தைக் கலந்த சாரணர் என்றும், மேல் இரு சுடரை உவமித்தலின் மாணிக்கமும் முத்துமே கொள்க என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 145 )

2744. உரிமை தன்னொடும் வலங்கொண் டோங்குசீர்த்
திரும கன்பணிந் திருப்பச் செய்தவ
ரிருநி லம்மனற் கின்ப மேயெனப்
பெருநி லம்மனன் பெரிதும் வாழ்த்தினான்.

பொருள் : ஓங்குசீர்த் திருமகன் உரிமை தன்னொடும் வலம் கொண்டு இருப்ப - வளரும் புகழுடைய அவ்வரசன் தன் மனைவியருடன் (அவர்களை) வலம் வந்து வணங்கி இருந்த அளவிலே; செய்தவர் இருநிலம் மனற்கு இன்பமே என - அச் சாரணர் இப் பெருநிலம் மன்னனுக்கு இன்பமாயிற்றோ என்று வினவ; பெருநிலம் மனன் பெரிதும் வாழ்த்தினான் - (அதைக் கேட்ட) அம் மன்னன் அவர்களைப் பெரிதும் போற்றினான்.

விளக்கம் : தான் துறவுபூண விரும்புவதை அவர்கள் உணர்ந்தமை அறிந்து வாழ்த்தினான். மனன், மனற்கு : செய்யுள் விகாரம், இன்பமே; ஏ : எதிர்மறைப் பொருளையுணர்த்தும் வினாவிடைச் சொல். ( 146 )

2745. தெருள லேன்செய்த தீவி னையெனு
மிருள்வி லங்கநின் றெரியு நீள்சுட
ரருளு மின்னெனக் கடிக ளென்றனன்
மருள்வி லங்கிய மன்னர் மன்னனே.

பொருள் : மருள் விலங்கிய மன்னர் மன்னன் - இல்லற மயக்கம் தீர்ந்த வேந்தர் வேந்தன்; அடிகள் - அடிகளே!; தெருளலேன் செய்த தீவினை எனும் - பிறப்பறுமாறு அறியாதேன் செய்த தீவினை என்கிற; இருள் விலங்க - இருள் நீங்குமாறு; நின்று எரியும் நீள்சுடர் எனக்கு அருளுமின் - சிலநாள் நின்று (தவம்புரிந்து) பின்னர் எரியும் பெருஞ்சுடராகிய அறிவை அடையும்படி எனக்கு அருள்வீராக; என்றனன் - என வேண்டினான்.

விளக்கம் : இனி, இருள் விலங்குமாறு நின்று எரியும் நீள்சுடர் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் இரத்தினத் திரயமும் ஆம். ( 147 )

வேறு

2746. பாற்கடற் பனிமதி பரவைத் தீங்கதிர்
மேற்பட மிகநனி சொரிவ தொப்பவே
நூற்கடன் மாதவ னுனித்த நல்லறங்
கோற்கடன் மன்னனுக் குரைக்கு மென்பவே.

பொருள் : பனிமதி பரவைத் தீங்கதிர் பாற்கடல் மேற்பட மிகநனி சொரிவது ஒப்ப - குளிர்ந்த திங்கள் தன்பரவிய இனிய கதிரைப் பாற்கடல்மேற் பொருந்த மிகவும் நன்றாகப் பொழிவதைப்போல; நூற்கடல் மாதவன் நுனித்த நல்அறம் - நூற்கடலாகிய சாரணன் நுண்ணிய நல்ல அறங்களை; கோல்கடன் மன்னனுக்கு உரைக்கும் - செங்கோல் நடத்துங் கடமைபூண்ட வேந்தனுக்கு விளம்புவான்.

விளக்கம் : பாற்கடல் - சீவகனுக்கும் பனிமதி சாரணனுக்கும் உவமை. நூற்கடல் மாதவன் என்றது சாரணனை. கோல் - செங்கோல். செங்கோல் நடாத்துதலைக் கடனாகவுடைய மன்னன் என்க. ( 148 )

2747. தேனெய் தோய்ந்தன தீவிய திருமணி யனைய
வானி னுய்ப்பன வரகதி தருவன மதியோ
ரேனை யாவரு மமுதெனப் பருகுவ புகல்வ
மான மில்லுயர் மணிவண்ண னுவலிய வலித்தான்.

பொருள் : மானம் இல் உயர் மணிவண்ணன் - ஒப்பில்லாமல் உயர்ந்த மணிவண்ணன் என்னும் சாரணன் ; தேன்நெய் தோய்ந்தன தீவிய வானில் உய்ப்பன ஏனையாவரும் புகலவ - தேனாகிய நெய் தோய்ந்தாற் போன்ற இனிமையுடையனவாய்ச் சிலநாள் துறக்கத்தே செலுத்துவனவாய் அறிவில்லோர் யாவரும் புகல்வனவற்றையும்;திருமணி அனைய வரகதி தருவன மதியோர் அமுதெனப் பருகுவ - பெறுதற்கரிய மணியை ஒத்தனவாய் வீட்டைத் தருவனவாய் அறிவுடையோர் யாவரும் அமுதெனப் பருகுவனவற்றையும்; நுவலிய வலித்தான் - கூறுதற்குத் துணிந்தான்.

விளக்கம் : தேன் நுகர்வார்க்கு, அது புளிச்சுவையுந் தருதலின், நிலையில்லாத துறக்கந் தருகின்ற அறத்திற்கு உவமையாயிற்று. துறக்கத்தையும் வீட்டையுந் தருகின்ற இருவகை அறத்தையுங்கூறினான், இவற்கு இன்னும் துறக்கத்திற் செல்லுங் கருத்து உண்டாமோ என்று உணர்தற்கு. ( 149 )

2748. அருமையின் னெய்தும் யாக்கையும் யாக்கைய தழிவுந்
திருமெய் நீங்கிய துன்பமுந் தெளிபொருட் டுணிவுங்
குருமை யெய்திய குணநிலை கொடைபெறு பயனும்
பெருமை வீட்டொடும் பேசுவல் கேளிது பெரியோய்.

பொருள் : பெரியோய்! - பெரியோனே!; அருமையின் எய்தும் யாக்கை - தவத்தாற் பெறுகின்ற மக்கள் யாக்கையையும்; யாக்கையது அழிவும் - அந்த யாக்கை நூறாண்டளவும் நிலைபெறாமல் இடையே அழிகின்ற அழிவையும்; திரு மெய் நீங்கிய துன்பமும் - நல்வினை மெய்யினின்றும் நீங்கப்பட்டனவாகிய நாற்கதித் துன்பமும்; தெளிபொருள் துணிவும் - துணியப்படும் பொருளையும், அப்பொருளைத் துணியும் துணைவையும்; குருமை எய்திய குணநிலை கொடை பெறு பயனும் - நிறத்தைப் பெற்ற சீலத்தினது நிலையையும், தானத்தையும், தானத்தாலும் சீலத்தாலும் (காட்சியாலும்) பெறும் பயனையும்; பெருமை வீட்டொடும் பேசுவல் - பெருமையையுடைய வீட்டிலக்கணத்தோடும் கூறுவேன்; இது கேள் - (அவற்றுள்) இப்பெறுதற் கருமையை முதலிற் கேள்.

விளக்கம் : நீங்கிய : வினையாலணையும் பெயர். இது என்றது பெறுதற்கருமையை. குரு என்னும் உரிச்சொல் ஈறுதிரிந்தது. திருமை என்றும் பாடம். குண நிலையையும் கொடையையும் என உருபும் உம்மையும் விரிக்க. ( 150 )

8. பெறுதற்கருமை

2749. பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுட்
டிரைசெய் தென்கட விட்டதோர் நோன்கழி சிவணி
யரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதாற்
பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே.

பொருள் : அரச! - அரசனே!; பெரிய யோனிகள் பிழைத்து இவண் மானிடம் பெறல் - பெரியனவாகிய பிறப்புக் களிலிருந்து தப்பி, இவ்வுலகிலே மக்கட் பிறப்பை அடைதல்; பரவை வெண் திரை வடகடல் படுநுகத் துளையுள் - பரப்பையுடைய வெள்ளிய அலைகளையுடைய வட கடலிலே இட்ட நுகத்துளையிலே; திரை செய் தென்கடல் இட்டது ஓர் நோன் கழி சிவணி - அலையுடைய தென் கடலிலே இட்டதாகிய ஒரு பெரிய கழி சென்று எய்தி; அத்துளை அகவயின் செறிந்தென அரிது - அத்துளையின் உள்ளே சென்று செறிந்தது எனும்படி அரியது.

விளக்கம் : வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல் கடல் வால்நுகத்தின் - துளைவழி நேர் கழி கோத்தென“ (திருச்சிற். 6); தென் கடல் இட்டதோர் திருமணி வான்கழி - வடகடல் நுகத்துளை வந்துபட்டாஅங்கு (பெருங். 1. 32 : 17 - 18) என்பன இங்கு ஒப்பிடத்தக்கன. ( 151 )

2750. விண்டு வேய்நர லூன்விளை கானவ ரிடனுங்
கொண்டு கூர்ம்பனி குலைத்திடு நிலைக்களக் குறும்பு
முண்டு நீரென வுரையினு மரியன வொருவி
மண்டு தீம்புனல் வளங்கெழு நாடெய்த லரிதே.

பொருள் : விண்டு வேய் நரல் ஊன் விளை கானவர் இடனும் - வெடித்து மூங்கில் ஒலிக்கும் ஊனே உணவாக விளையும் வேடர் குடியும்; கூர்ம்பனி கொண்டு குலைத்திடும் நிலைக்களக்குறும்பும் - மிக்க பனியைக்கொண்டு குலைக்கும் இடம் ஆகிய குறும்புகளும் (என்கின்ற); உண்டு நீர் என உரையினும் அரியன ஒருவி - நீர் உண்டு என்று மொழியினும் அரியனவாகிய இவற்றை நீங்கி; மண்டு தீம்புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிது - மிகுதியான இனிய நீர்வளம் பொருந்திய நாட்டை அடைதல் அரியது.

விளக்கம் : வேய்நரல் கானவரிடன். ஊன்விளை கானவரிடம் எனத் தனித்தனி கூட்டுக. கூர்ம்பனி - மிக்க பனி. குறும்பு - குறுநில மன்னர் வாழுமிடம். உண்டுநீர் என உரையினும் அரியன என்றது வன்பாலைநிலப் பரப்புக்களை. தீம்புனல் வளங்கெழு நாடென்றது, மருதநிலமிக்க நன்னாடுகளை.  இது வீடுபேறு இடம்நலம் இன்றியமையாது என்றது. ( 152 )

2751. வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லி னார்களும் படுகடற் பரதவர் முதலா
வெல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி
நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே.

பொருள் : நரபதி! - மக்கள் தலைவனே!; வில்லின் மாக்கொன்று - வில்லாலே விலங்குகளைக் கொன்று ; வெள்நிணத்தடி விளிம்பு அடுத்த பல்லினார்களும் - வெண்மையான நிணமும் ஊனும் ஓரத்திற் பற்றித் தின்கின்ற பற்களையுடையவர்களும்; படுகடல் பரதவர் முதலா - மீன்படு கடலின் ஓரத்தில் வாழும் பரதவரும் முதலாக; எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி - அளவு கடந்த இழிதொழிலைப் புரியும் இழிகுலத்தினின்றுந் தப்பி; நல்ல தொல்குலம் பெறுதலும் அரிது- உயர்ந்த பழங்குடியிற் பிறத்தலும் அரியது.

விளக்கம் : வில்லின் என்றது படைக்கலத்தால் என்பது பட நின்றது. மா - விலங்கு பறவைகள் நீர்வாழ்வன முதலியவற்றைக் குறித்து நின்றது. தடி - தசை. இழிதொழில் : கொலை களவு முதலியன. இது வீடுபேறு குலநல மின்றியமையாது என்றது. ( 153 )

2752. கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநா
ளருவி போற்றொடர்ந் தறாதன வரும்பிணி யழலுட்
கருவிற் காய்த்திய கட்டளைப் படிமையிற் பிழையா
துருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலு மரிதே.

பொருள் : கருவி மாமழை கனை பெயல் பொழிந்தென - தொகுதியான பெருமுகில்கள் கூடி மிக்க மழையைப் பெய்ததாக; வழி நாள் - பின்னாளிலே; அருவிபோல் தொடர்ந்து - சில கல்லிடை அருவி இடையறாது ஒழுகுமாறு போல உயிர்க்கிழவனைத் தொடர்ந்து; அறாதன - விடாதனவாய்; அரும்பிணி அழலுள் - போக்குதற்கரிய இருவினை வயிற்றுத் தீயினுள்ளே; காய்த்திய கருவில் கட்டளைப்படிமையில் பிழையாது - இட்டு வைத்துக் காய்சின கருவின் கண்ணே, அவ் விருவினையின் கட்டளையாற் பின் தோன்றும் வடிவத்தின் (தீவினையின் கட்டளையால் உறுப்புக் குறையும்) வடிவைப் பெற்றுத் துன்புறாமல்; உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிது - (நல்வினையின் கட்டளையால்) அழகால் மேம்பட்டதாகிய ஓர் உடம்பை அம்மக்கள் யாக்கை பெறுதலும் அரியது.

விளக்கம் : நற்குலத்தே பிறப்பினும் அழகுடன் பிறப்பது அரிது என்க. பிணித்தலையுடையது பிணியாயிற்று. கட்டளை என்றார், தத்தம் பயனை நுகர்வித்தற்குரிய கோவையுடைய தாதலைப் பிழையா விதியினை. இது வீடுபேறு நல்லுடல் இன்றியமையாது என்றது. ( 154 )

2753. காம னன்னதோர் கழிவனப் பறிவொடு பெறினு
நாம நாற்கதி நவைதரு நெறிபல வொருவி
வாம னூனெறி வழுவறத் தழுவின ரொழுக
லேம வெண்குடை யிறைவமற் றியாவது மரிதே.

பொருள் : ஏம வெண்குடை இறைவ - காவலாகிய வெண்குடை யிறைவனே!; காமன் அன்னது ஓர் கழி வனப்பு அறிவொடு பெறினும் - காமனைப் போன்றதாகிய ஒரு சிறந்த அழகையும் அறிவையும் பெற்றாலும்; நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி - அச்சம் ஊட்டும் நாற்கதியிலே செலுத்தும் குற்றத்தைத் தரும் பிறநெறிகள் பலவற்றினின்றும் நீங்கி; வாமன் நூல்நெறி யாவதும் வழு அறத் தழுவினர் ஒழுகல் அரிது - அருகனார் நூலின் வழியை எல்லாவகையினும் குற்றமறத் தழுவினராக ஒழுகுதல் அரிது.

விளக்கம் : இத்துணையும், மக்கள் யாக்கை பெறுதற்கருமையும், அது பெற்றாலும் நன்னிலமும் நற்குலமும் நல்வடிவும் நல்லறமும் பெறுதற் கருமையுங்கூறி, இனி, பெறுதற்கரிய பேறுபெற்றுச் சிறப்புற்றுப் பல்லோரானும் நன்கு மதித்துப் புகழப்பெற்ற அவ்வியாக்கை நிலைபெறா தொழியுந் தன்மை கூறுகின்றார். இது வீடுபேறு நல்லொழுக்கம் இன்றியமையாது என்றது. ( 155 )

9. நிலையாமை

2754. இன்ன தன்மையி னருமையி
னெய்திய பொழுதே
பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென
வயிற்றகம் பொருந்தி
மின்னு மொக்குளு மெனநனி
வீயினும் வீயும்
பின்னை வெண்ணெயிற் றிரண்டபின்
பிழைக்கவும் பெறுமே.

பொருள் : இன்ன தன்மையின் அருமையின் - இங்குக் கூறிய நால்வகைத் தன்மையினும் மக்கட்குக் குறித்த ஆயுள் நிலைபெறுதல் அரிதாகையாலே; பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென வயிற்றகம் பொருந்தி எய்திய பொழுதே - பொன்னும் வெள்ளியும் கலந்தாற்போலச் சுரோணிதமும் சுக்கிலமும் வயிற்றகத்திலே சேர்ந்து மக்கள் யாக்கை எடுத்தற்கு எய்திய போதே; மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும் - மின்னும் மொக்குளும் தோன்றிக் கெடுமாறு போல உடனே கெடினும் கெடும்; பின்னை வெண்ணெயின் திரண்டபின் பிழைக்கவும் பெறும் - பிறகு வெண்ணெய் போல் திரண்ட பின்னர்க் கெடவும் பெறும்.

விளக்கம் : ஈண்டு, நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந் தன்மை. மயங்கிய வழிப் பேய்த்தேரிற் புனல்போலத் தோன்றி மெய்யுணர்ந்தவழிக் கயிற்றிலரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலைவேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கும் என்பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும், ஒருவாற்றான் வேறுபடாமையு முடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கேயுடைய வென்பாரும் எனப் பொருட்பெற்றி கூறுவார் பலதிறத்தராவர்; எல்லார்க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகலின் ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃதுணர்ந்துழி யல்லது பொருளிகளிற் பற்றுவிடாதாகலின் இது மன் வைக்கப்பட்டது எனவரும் பரிமேலழகர் மெய்ம்மொழி நினையற்பாலது, (திருக்குறள், 34 - நிலையாமை முன்னுரை) ( 156 )

2755. வெண்ணெ யாயது வீங்குபு கூன்புற யாமை
வண்ண மெய்தலும் வழுக்கவும் பெறுமது வழுக்கா
தொண்மை வாண்மதி யுருவொடு திருவெனத் தோன்றிக்
கண்ண னாரழக் கவிழினுங் கவிழுமற் றறிநீ.

பொருள் : வெண்ணெய் ஆயாது வீங்குபு கூன்புற யாமை வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறும் - வெண்ணெய்போலத் திரண்ட அப்பிண்டம் பருத்து வளைந்த முதுகையுடைய யாமையின் தன்மையை அடைந்தவுடன் கெடவும் பெறும்; அது வழுக்காது ஒண்மை வாள் மதி உருவொடு திருவெனத் தோன்றி - அந்த யாமையின் நிலையிற் கெடாமல் ஒள்ளிய விளக்கமுற்ற திங்களைப்போலும் குறையா உருவுடனே அழகாகப் பிறந்து; கண்ணனார் அழக் கவிழினும் கவிழும் - கண்போலச் சிறந்த பெற்றோர் முதலானார் அழக்கெடினும் கெடும்; நீ அறி - இதனை நீ அறிக.

விளக்கம் : மற்று : வினைமாற்று. முன்னிரு திங்களிற் பொன்னும் வெள்ளியும் போன்றும், பின்னிரு திங்களில் வெண்ணெய் போன்றும், ஐந்தாந் திங்களில் ஆமை போன்றும், ஆறாந் திங்களில் உருத்தெளிந்தும் பிறக்கும் என்றார். வீங்குபு - பருத்து. புறம் - முதுகு. வண்ணம் - ஈண்டு வடிவம். வழுக்குதல் - அழிதல். கண்ணனார் என்றது தாய் முதலிய சுற்றத்தாரை. ( 157 )

2756. அழித லின்றியங் கருநிதி யிரவலர்க் கார்த்தி
முழுதும் பேர்பெறு மெல்லையுண் முரியினு முரியும்
வழுவில் பொய்கையுண் மலரென வளர்ந்துமை யாடிக்
கெழீஇயி னாரொடுங் கிளையழக் கெடுதலுங் கெடுமே.

பொருள் : அங்கு அழிதல் இன்றி அருநிதி முழுதும் இரவலர்க்கு ஆர்த்தி - அப்போது அழியாமல் அரிய செல்வத்தை இரவலர்க்கு முற்றும் நிறைவித்து; பேர் பெறும் எல்லையுள் முரியினும் முரியும் - பெயர் இடும் அளவிலே இறந்தாலும் இறக்கும்; வழுஇல் பொய்கையுள் மலர் என வளர்ந்து - (அப்போது) கெடாமற், பொய்கையிலே மலர் போல வளர்ந்து ; மை ஆடி - எழுத்தோலை பிடித்து; கெழீஇயினாரொடும் கிளை அழக்கெடுதலும் கெடும் - நெருங்கியவருடன் உறவினர் அழக் கெட்டாலும் கெடும்.

விளக்கம் : மகப்பேறு எய்திய மகிழ்ச்சியால் ஈன்றோர் இரவலர்க்கு ஆர்த்தி என்றவாறு. மையாடி - மையோலை பிடித்து, பள்ளியில் பயின்று - கெழீஇயினார் : தோழர். ( 158 )

2757. கெடுத லவ்வழி யில்லெனிற்
கேள்விக டுறைபோய்
வடிகொள் கண்ணியர் மனங்குழைந்
தநங்கனென் றிரங்கக்
கொடையுங் கோலமுங் குழகுந்தம்
மழகுங்கண் டேத்த
விடையிற் செல்வுழி விளியினும்
விளியுமற் றறிநீ.

பொருள் : அவ்வழி கெடுதல் இல் எனின் - அவ்வழிக் கெடுதல் இல்லையெனின்; கேள்விகள் துறைபோய் - நூல்களை முற்றக் கற்று; வடிகொள் கண்ணியர் மனம் குழைந்து - மாவடு வைப்போன்ற கண்ணியர் உள்ளம் குழைந்து; அநங்கன் என்று இரங்க - காமன் என்று உருகி; கொடையும் கோலமும் குழகும் தம் அழகும் கண்டு ஏத்த - கொடை, ஒப்பனை, இளமை, அழகு ஆகியவற்றைக் கண்டு வாழ்த்த; விடையின் செல்வுழி விளியினும் விளியும் - காளைபோல நடக்கும் அக்காலத்தே இறப்பினும் இறக்கும்; நீ அறி - நீ இதனை அறிக.

விளக்கம் : மற்று : வினைமாற்று. பரிசிலர் கொடையை ஏத்த என்பர் நச்சினார்க்கினியர். கேள்வி - ஈண்டுக் கல்வி கேள்விகளில் என்பதுபட நின்றது. துறை போதல் - முற்றக்கற்றல். வடி - மாவடு. அநங்கன் - காமன். குழகு - இளமை. விடை - காளை. ( 159 )

2758. எரிபொன் மேகலை யிலங்கரிச்
சிலம்பொடு சிலம்பு
மரிபொற் கிண்கிணி யணியிழை
யரிவையர்ப் புணர்ந்து
தெரிவில் போகத்துக் கூற்றுவன்
செகுத்திடச் சிதைந்து
முரியும் பல்சன முகம்புடைத்
தகங்குழைந் தழவே

பொருள் : எரிபொன் மேகலை இலங்கு அரிச் சிலம்பொடு சிலம்பும் அரிபொன் கிண்கிணி அணி இழை - ஒளி வீசும் பொன்னாலான மேகலையும், விளங்கும் பரல்களையுடைய சிலம்பும், ஒலிக்கும் அரிகளையுடைய பொன்னாலான கிண்கிணியும், அழகிய அணிகலனும் உடைய; அரிவையர்ப்புணர்ந்து - மங்கையரைக் கூடி; தெரிவு இல் போகத்து - வேறொன்றும் தெரியாத இன்ப நுகர்ச்சிக் காலத்தே; கூற்றுவன் செகுத்திட - காலன் உயிரைப் பற்றுதலாலே; பல்சனம் முகம் புடைத்து அகம் குழைந்து அழச் சிதைந்து முரியும் - பலரும் முகத்தில் அடித்துக்கொண்டு, உள்ளம் உருகி அழுமாறு கெட்டுவீழும்.

விளக்கம் : எரிபொன் : வினைத்தொகை. அரி - பரல். போகப் பெருநுகம் பூட்டியகாலை மகா விசும்பின் மதியமும் ஞாயிறும் எழுதலும் படுதலும் தெரிவில் போகம் என்றவாறு. முரியினும் முரியும் என்க. ( 160 )

2759. கோதை மங்கையர் குவிமுலைத் தடத்திடைக் குளித்துக்
காதன் மக்களைக் கண்டுவந் தினிதினிற் கழிப்பப்
பேது செய்பிணிப் பெரும்புலி பாய்ந்திடப் பிணமா
மோத மாக்கட லுடைகலத் தவருற்ற துறவே.

பொருள் : கோதை மங்கையர் குவிமுலைத் தடத்திடைக் குளித்து - கோதை யணிந்த மங்கையர் குவிந்த முலையிடையே முழுகி; காதல் மக்களைக் கண்டு உவந்து இனிதினில் கழிப்ப - அன்புறு மக்களைக் கண்டு மகிழ்ந்து இனிமையாகக் காலங்கழிக்கும் அளவிலே; பேது செய்பிணிப் பெரும் புலி பாய்ந்திட - வருத்தமுண்டாக்கும் நோயாகிய பெரிய புலி பாய்ந்திட; ஓதம் மரக் கடல் உடைகலத்தவர் உற்றது உற - குளிர்ந்த பெருங் கடலிலே உடைகின்ற கலத்திலுள்ளவர் உற்ற வருத்தத்தை (உறவினர்) உறும்படி; பிணம் ஆம் - பிணமாய்க் கெடும்.

விளக்கம் : பிணமாய் என்றும் பாடம். வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே ஆழ்கலத்தன்ன கலி என்றார் நாலடியினும், (12). பிணமாயினுமாம் என்க. ( 161 )

2760. காமம் பைப்பயக் கழியத்தங் கடைப்பிடி சுருங்கி
யூமர் போலத்த முரையவிந் துறுப்பினி லுரையாத்
தூய்மை யில்குளந் தூம்புவிட் டாம்பொரு ளுணர்த்தி
யீம மேறுத லொருதலை யிகலமர் கடந்தோய்.

பொருள் : காமம் பைப்பயக் கழியத் தம் கடைப்பிடி சுருங்கி - தம் இன் நுகர்ச்சி மெல்ல மெல்லக் கழிதலாலே, தம் கொள்கைகள் குறைந்து; ஊமர் போலத் தம் உரை அவிந்து - ஊமையரைப் போலத் தம்முடைய பேச்சுக்கெட்டு; உறுப்பினில் உரையா - உறுப்புக்களால் மொழிந்து; தூய்மை இல் குளம் தூம்பு விட்டு - தூய்மை இல்லாத (உடம்பாகிய) குளம் (ஒன்பது வாயிலாகிய) தூம்புகளும் (தம் வயத்தன ஆகாமல்) சேரத திறந்து; ஆம் பொருள் உணர்த்தி - (முடிவில்) ஆகும் பொருள் (இது என்று அறியாதார்க்கு) அறிவித்து ; ஈமம் ஏறுதல் - சுடு காட்டில் ஏறுதல்; இகல் அமர் கடந்தோய் - பகைவர் போரை வென்றவனே; ஒருதலை - உறுதி ஆகும்.

விளக்கம் : கடைப்பிடி - குறிக்கோள். அஃதாவது : இன்றாது மிந்நிலையே யாதும் இனிச்சிறிது நின்றாது மென்று ஆக்கத்தைக் குறிக்கொண்டிருத்தல். தூய்மையில் குளம் : உடம்பிற்குவமை. ஆம்பொருளுணர்த்தலாவது, யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றி மற்றாங்கே நிலையாது நீத்துவிடும் எனத் தன் அழிவினாலே உலகத்தார்க்குணர்த்துதல். ( 162 )

2761. தேங்கொள் பூங்கண்ணித் திருமுடித் திலகவெண் குடையோ
யீங்கி தன்னியு மிமையவ ரமையலர்க் கடந்த
தாங்கு மாவண்கைச் சக்கர மிக்குயர் பிறரும்
யாங்க ணாரவ ரூரொடு பேரெமக் குரையாய்.

பொருள் : தேன் கொள் பூங்கண்ணித் திருமுடித் திலக வெண்குடையோய்! தேனையுடைய மலர்க்கண்ணியணிந்த திருமுடியையும் உயர்ந்த குடையையும் உடையோய்!; ஈங்கு இது அன்றியும் - இவ்வுலகிற்க்குக் கூறிய இந் நிலையாமையே அன்றியும்; இமையவர் அமையலர்க் கடந்த - வானவரின் பகைவரை ஆங்குச் சென்று வென்ற; தாங்கும் - திருவை ஒழிந்த அரசர்பாற் செல்லாமல் தம்மிடத்தே தாங்குகின்ற; மாவண்கைச் சக்கரம் மிக்கு உயர் பெருங்கொடையாளராய், ஆணையாழி பிற அரசரினும் மேம்பட்டு உயர்தற்குக் காரணமாகி; பிறரும் - சக்கரவர்த்திகளும்; யாங்கணார்? எங்குளார்?; எமக்கு அவர் ஊரொடு பேர் உரையாய் - எமக்கு அவருடைய ஊரையும் பெயரையும் கூறுவாய்?

விளக்கம் : உலகில் அரசர் எல்லோரும் வணங்க இருத்தலிற் சக்கரவர்த்திகளைப், பிறர் என்றார். பொதுமக்கள் போன்று சக்கரவர்த்திகளும் நிலமிசைத்துஞ்சினார் என்பதே. ( 163 )

10. நரக கதித் துன்பம்

வேறு

2762. வெவ்வினை செய்யு மாந்த ருயிரெனு நிலத்து வித்தி
யவ்வினை விளையு ளுண்ணும் மவ்விடத் தவர்க டுன்ப
மிவ்வென வுரைத்து மென்று நினைப்பினும் பனிக்கு முள்ளஞ்
செவ்விதிற் சிறிது கூறக் கேண்மதி செல்வ வேந்தே.

பொருள் : செல்வ வேந்தே! - செல்வமுற்ற மன்னனே!; வெவ்வினை செய்யும் மாந்தர் - தீவினையைச் செய்யும் மக்கள்; உயிரெனும் நிலத்து வித்தி - (தம்) உயிர் என்கிற நிலத்தே அத் தீவினையை விதைத்து; அவ்வினை விளையுள் உண்ணும் அவ் விடத்து - அத் தீவினையின் பயனை நுகரும் அந்நகரத்திடத்தே; அவர்கள் துன்பம் இவ் என உரைத்தும் என்று நினைப்பினும் - அந் நரகர் படும் துன்பம் இத்தன்மைய என உரைப்பேம் என்று நினைத்திடினும்; உள்ளம் பனிக்கும் - உள்ளம் நடுங்கும் (ஆயனும்); சிறிது கூறச் செவ்விதியின் கேள் - அதன் தன்மையைச் சிறிதுரைக்கச் செவ்வையாகக் கேட்பாயாக.

விளக்கம் : கேண்மதி : மதி : முன்னிலை அசைச்சொல். வெவ்வினை - தீவினை. வினை சூக்குமமாக உயிரிற் கலந்திருந்து பின்னர்க் காரியப்படுதலால் உயிரை நிலமாகவும் வினையை வித்தாகவும் கூறினார். உள்ளம் பனிக்கும் என்க. ( 164 )
 
2763. ஊழ்வினை துரப்ப வோடி
யொன்றுமூழ்த் தத்தி னுள்ளே
சூழ்குலைப் பெண்ணை நெற்றித்
தொடுத்ததீங் கனிக ளூழ்த்து
வீழ்வன போல வீழ்ந்து
வெருவரத் தக்க துன்பத்
தாழ்துய ருழப்ப வூணு
மருநவை நஞ்சு கண்டாய்.

பொருள் : ஊழ் வினை துரப்ப ஓடி - தீவினை தம் மனத்தைச் செலுத்துதலாலே ஓடிச் சென்று; ஒன்றும் மூழத்தத்தினுள்ளே - (அதன் பயனையெல்லாம் நுகர்தற்குப்) பொருந்தின முகூர்த்தத்திலே; பெண்ணை நெற்றித் தொடுத்த சூழ்குலைத் தீங்கனிகள் ஊழ்த்து - பனையின் நெற்றியிலே தொடுத்த சூழ உள்ள குலைகளில் இருக்கும் இனிய கனிகள் கழன்று; வீழ்வன போல வீழ்ந்து - (பெருங்காற்றாற் சேர) விழுவன போலத் தலைகீழாக வீழ்ந்து; வெருவரத் தக்க துன்பத்து ஆழ் துயர் உழப்ப - அஞ்சத்தக்க துன்பமாகிய நரகத்தே மற்றும் பெருந்துயரம் உறுவர்; ஊணும் அருநவை நஞ்சு கண்டாய் - (அவர்க்கு அவ்விடத்து) உணவும் கொடிய துன்பந்தரும் நஞ்சுகாண்.

விளக்கம் : ஒன்று மூழ்த்தம் - ஒரு முகூர்த்தமும் ஆம், நஞ்சு உணவாயும் சாகார், இத் தீவினையை நுகர்தற்காக. எதிர் நின்று போர் செய்யாது எளியராயிருப்பாரைச் சேரக்கொன்றார், பின்னர் இங்ஙனம் நுகர்வர். ( 165 )

2764. இட்டிவேல் குந்தங் கூர்வா
ளெரிநுனைச் சுரிகை கூட
நட்டவை நிரைத்த பூமி
நவையுடை நரகர் பொங்கி
யுட்பட வெழுந்து வீழ்ந்தாங்
கூன்றகர்த் திட்ட வண்ண
மெட்டெலாத் திசையுஞ் சிந்திக்
கிடப்பவா லடக்க மில்லார்.

பொருள் : அடக்கம் இல்லார் நவை உடை நரகர் - (முன்னர்) ஐம்பொறிகளில் அடக்கம் இல்லாராய்த் தீவினையை உடையராகிய நரகர்; இட்டி வேல் குந்தம் கூர்வாள் எரிநுனைச் சுரிகை கூட - ஈட்டியும் வேலும் குந்தமும் கூரிய வாளும் எரியும் முனையையுடைய சுரிகையும் கூட; நட்டவை நிரைத்த பூமி - நட்டவை நிரைத்து நிற்கின்ற பூமியிலே; பொங்கி எழுந்து உள்பட வீழ்ந்து - துன்பத்தாலே பொங்கி எழுந்து (அப்படைகளின்) அழுந்தும்படி வீழ்ந்து; ஆங்கு ஊன் தகர்த்திட்ட வண்ணம் - அவ்விடத்தில் ஊனைச் சிதறத் தட்டினாற்போல; எட்டு எலாத் திசையும் சிந்திக் கிடப்ப - எட்டாகிய எல்லாத் திசையினுஞ் சிதறிக் கிடப்பர்.

விளக்கம் : ஆல் : அசை. இட்டி - ஈட்டி. சுரிகை - ஒருவகை வாள். நவை - குற்றம். வண்ணம் - உவமப்பொருட்டு. எட்டுத் திசையெலாம் என இயைக்க. ஆல் : அசை. அடக்கமிலார் சிந்திக் கிடப்ப என்க. ( 166 )

2765. வெந்தடி தின்ற வெந்நோய்
வேகத்தான் மீட்டு மாலை
பைந்தொடி மகளி ராடும்
பந்தென வெழுந்து பொங்கி
வந்துடைந் துருகி வீழ்ந்து
மாழ்குபு கிடப்பர் கண்டாய்
கந்தடு வெகுளி வேகக்
கடாமுகக் களிற்று வேந்தே.

பொருள் : கந்து அடு வெகுளி வேகக் கடாமுகக் களிறு வேந்தே - தூணைத் தகர்க்கும் சீற்றமும் விரைவும் மதமுங் கொண்ட களிற்றையுடைய வேந்தனே!; வெம் தடி தின்ற வேம் நோய் வேகத்தால் - (முற்பிறப்பிலே) கொடிய ஊனைத் தின்ற கொடிய தீவினையின் கொடுமையாலே; பைந்தொடி மகளிர் ஆடும் பந்து என - பசிய வளையல் அணிந்த பெண்கள் ஆடுகின்ற பந்தைப்போல; பொங்கி எழுந்து வந்து வீழ்ந்து உடைந்து உருகி மாழ்குபு கிடப்பர் கண்டாய் - (தீயினின்றும்) பொங்கி எழுந்து (மீட்டும் அதனுள்) வீழ்ந்து உடைந்து உருகி மயங்கிக் கிடப்பர் காண்.

விளக்கம் : வெந்தடி - விரும்பித் தின்றற்குக் காரணமான தசை. வெந்நோய் - தீவினை. மாழ்குபு - மயங்கி, கந்து - தூண், கடாம் - மதம், வேந்தே - என்றது சீவகனை. ( 167 )

2766. வயிரமுண் ணிரைத்து நீண்ட
வார்சினை யிலவ மேற்றிச்
செயிரிற்றீ மடுப்பர் கீழாற்
சென்னுனைக் கழுவி லேற்றி
மயிருக்கொன் றாக வாங்கி
யகைத் தகைத் திடுவர் மன்னா
வுயிரைப்பே துறுத்து மாந்த
ருயிரைப்பே துறுக்கு மாறே.

பொருள் : மன்னா! - வேந்தனை!; உயிரைப் பேது உறுத்தும் மாந்தர் உயிரைப் பேது உறுக்கும் ஆறு -ஒன்றன்உயிரை வருத்தம் உறுத்தும் மக்களின் உயிரை வருத்தப்படுத்தும் வகையைக் கேள்; வயிரமுள் நிரைத்து நீண்ட வார்சினை இலவம் ஏற்றி - வைரமாகிய முள்ளை முழுக்க நிரைத்து நீண்ட பெரிய கிளைகளையுடைய இலவமரத்திலே ஏற்றி; கீழால் செயிரில் தீ மடுப்பர் - கீழே குற்றம் அற்ற நெருப்பை எரிப்பர்; செல் நுனைக் கழுவில் ஏற்றி - (உடம்பிலே) செல்லும் முனையையுடைய கழுவிலே ஏற்றி; மயிருக்கு ஒன்றாக வாங்கி அகைத்து அகைத்திடுவர் - (தாம் கொன்ற விலங்குகளின்) ஒரு மயிருக்கு ஒரு தசையாக வாங்கி அறுத்து அறுத்துப் போகடுவர்.

விளக்கம் : வயிரமுள் என்றார் உடம்பிலே தைத்து முனைமுறியாத படி. இலவில் ஏற்றி எரிப்பதேயன்றித் தசையை அறுத்தும் போகடுவர் என்க. சிறப்புக்கருதி ஆண்பாலிற்கு மட்டும் கூறினார், எனினும் பெண் பாற்குங் கொள்க. ஏதிலான் - அயலான். தாரம் - மனைவி. எளிதென இல்லிறப்பான என்றார் வள்ளுவனாரும் (குறள். 145) ஊதுலை:வினைத்தொகை. ஆ :இரக்கக் குறிப்பு. ஆல் : அசை. ( 168 )

2767. துடிக்குரற் குரல பேழ்வாய்த்
தொடர்ப்பிணி யுறுத்த செந்நாய்
மடுத்திட வைர வூசி
வாளெயி றழுந்தக் கௌவிப்
புடைத்திட வலறி யாற்றார்
பொன்றினும் பொன்றல் செல்லா
ருடுப்பினம் வேட்டஞ் செய்தா
ருழப்பவாற் றுன்ப மாதோ.

பொருள் : உடும்பு இனம் வேட்டஞ் செய்தார் - உடும்பின் குழுவை வேட்டையாடினவர்; துடிக்குரல் குரல பேழ்வாய்த் தொடர்ப்பிணி உறுத்த செந்நாய் - துடியின் குரல் போலும் குரலவாகிய, பெரிய வாயையுடைய, சங்கிலியினாற் பிணிக்கப்பட்ட செந்நாயைக் கொண்டுவந்து; மடுத்திட - கடிக்கவிட; வைர ஊசி வாள் எயிறு அழுந்தக் கௌவி - (அவை) வைர ஊசிகளைப் போலும் கொடிய பற்கள் அழுந்துமாறு பற்றி; புடைத்திட - உதறிப் போகடுதலாலே; ஆற்றார் அலறி - ஆற்றாராய் அலறி; பொன்றினும் பொன்றல் செல்லார் - (இவ்வாறே) உடல் கெட்டாலும், உயிர் கெடுதல் இலராய்; துன்பம் உழப்ப - துன்பத்திலே உழல்வர்.

விளக்கம் : மாது, ஓ: அசைகள், இவர்கள் துன்புறுதற்காக அழிந்த உடம்பு மேலும் வடிவு கூடும் என்றுணர்க. ( 169 )

2768. வாளைமீன் றடிக டின்றார்
வருகென வுருக வெந்த
பாளத்தைக் கொடிற்றி னேந்திப்
பகுத்துவாய் புகுத்த லாற்றா
ருளைக்கொண் டோடு கின்றா
ருள்ளடி யூசி பாயத்
தாளொற்றித் தப்பி வீழ்ந்தார்
தறிவலை மானிற் பட்டார்.

பொருள் : வாளை மீன் தடிகள் தின்றார் - வாளை மீனின் ஊனைத் தின்றவரை; வருக என வாருங்கள் என்று அழைத்து; வாய் பகுத்து - அவர்கள் வாயைத் திறந்து; உருக வெந்த பாளத்தைக் கொடிற்றின் ஏந்திப் புகுத்தல் ஆற்றார் - உருகும்படி காய்ந்த செப்புப் பாளத்தைக் குறட்டாலே எடுத்துப் புகுத்தலைப் பொறாராய்; ஊளைக்கொண்டு ஓடுகின்றார் - கூவிக்கொண்டு ஓடுகின்றவர்கள்; உள் அடி ஊசி பாய - தம் உள்ளங்காலில் ஊசி பாய்வதனாலே; தாள் ஒற்றித் தப்பி வீழ்ந்தார் - கால் நிலத்தே ஒட்டிக்கொண்டு செயலற்று வீழ்ந்தவர்களாய்; தறிவலை மானின் பட்டார் - முளையிற் கட்டிய வலையிற் பட்ட மான் போல அகப்பட்டிடுவர்.

விளக்கம் : தப்பி ஓடாமல் நிலத்திலே ஊசியை நட்டு வைத்திருப்பர். அவ்வூசிக்கு அடி ஒட்டி என்றும் பெயர். தாள் ஒற்றித் தப்பி, வீழ்ந்தார் என்னுந் தொடரிலுள்ள. தப்பி வீழ்ந்தார் என்பதை வாளை மீன் தடிகள் தின்றார் என்பதன்முன் சேர்த்து, நல்லறத்தைத் தப்பிப்புலாலுண்ண விரும்பினாராய் எனப் பொருள்கூறிப் பிணைப்பர் நச்சினார்க்கினியர். தப்பி வீழ்வார்  என்றும் பாடம். ( 170 )

2769. காதலாள் கரிந்து நையக் கடியவே களைந்து கன்றி
யேதிலான் றார நம்பி யெளிதென விறந்த பாவத்
தூதுலை யுருக வெந்த வொள்ளழற் செப்புப் பாவை
யாதகா தென்னப் புல்லி யலறுமால் யானை வேந்தே.

பொருள் : யானை வேந்தே - களிற்றையுடைய மன்னனே!; காதலாள் கரிந்து நைய - தன் மனைவி வருந்தா நிற்க; ஏதிலான் தாரம் எளிது என நம்பி - அயலான் மனைவியை அடைதல் எனக்கு எளிது என்று விரும்பி; கடியவே கனைந்து கன்றி - பலரும் கடிந்து கூறவும் அதிலே செறிந்து தழும்பி; இறந்த பாவத்து - உலகியலை இறந்து செய்த பாவத்தாலே; ஊது உலை ஒள் அழல் உருக வெந்த செப்புப் பாவை - ஊதும் உலையிலே செறிந்த நெருப்பிலே உருக வெந்த செப்புப் பாவையை; ஆ தகாது என்னப் புல்லி அலறும் - (கண்டோர்) ஆ! இது தகாது ! என்னும்படி (அவ்வுயிர்கள் ) தழுவி ஆற்றாது அலறும்.

விளக்கம் : சிறப்புக் கருதி ஆண்பாலிற்கு மட்டும் கூறினார், எனினும் பெண்பாற்குங் கொள்க. ஏதிலான் - அயலான் - ததாரம் - மனைவி. எளிதென இல்லிறப்பான் என்றார் வள்ளுவனாரும் (குறள்.145) ஊதுலை; வினைத்தொகை. ஆ : இரக்கக் குறிப்பு. ஆல் : அசை. ( 171 )

2770. சிலையினான் மாக்கள் கொன்று
செழுங்கடல் வேட்ட மாடி
வலையினான் மீன்கள் வாரி
வாழுயிர்க் கூற்ற மான
கொலைநரைக் குழம்பி தன்னுட்
கொந்தழ லழுத்தி யிட்டு
நலிகுவர் நாளு நாளு
நரகரை நாம வேலோய்.

பொருள் : நாம வேலோய்! - அச்சந்தரும் வேலையுடையவனே!; சிலையினால் மாக்கள் கொன்று - வில்லினால் விலங்குகளைக் கொன்று; செழுங்கடல் வலையினால் மீன்கள் வாரி - செழுங்கடலிலே வலையினால் மீன்களை வாரி; வேட்டம் ஆடி - (இவ்வாறு) வேட்டையாடி; வாழ்உயிர்க் கூற்றம் ஆன கொலைஞரை - உடலில் வாழும் உயிர்கட்குக் கூற்றாக இருந்த பாவிகளை; கும்பி தன்னுள் கொந்து அழல் அழுத்தியிட்டு - நரகத்திலே நெருப்பில் அழுத்தி; நரகரை நாளும் நாளும் நலிகுவர் - அந்தப் பாவிகளை நாடோறும் நாடோறும் சுடாநிற்பர்.

விளக்கம் : மாக்கள் - விலங்கு : (பறவைகளும்). கூற்றம் - இயமன் கொலைநர் - கொலைத்தொழில் செய்வோர். கும்பி - நரகம். நரமவேல் - அஞ்சுதற்குக் காரணமான வேல். ( 172 )

2771. பாரகங் கழுநர் போலப்
பரூஉத்தடி பலரு மேந்தி
வீரநோய் வெகுளி தோற்றி
விழுப்பற வதுக்கி யிட்டுக்
காரகற் பொரிப்பர் கண்ணுட்
சுரிகையை நடுவர் நெஞ்சிற்
பாரக்கூர்ந் தறிக ணட்டுப்
பனையெனப் பிளப்பர் மாதோ.

பொருள் : பாரகம் கழுநர்போல - பாரிலுள்ளார் செய்த தீவினைகளைத் தாம் கழுவுவார்போல; பலரும் பரூஉத் தடி ஏந்தி - நிரயபாலர் பலரும் பெரிய தடிகளை ஏந்தி; வீரநோய் வெகுளி தோற்றி - வலிய நோயைத் தருஞ் சீற்றத்தைக் காட்டி; விழுப்புஅற அதுக்கியிட்டு - (அவர்களுடம்பிற்) கழிவது ஒன்றும் இல்லையாம்படி கூட நருக்கியிட்டு; காரகல் பொரிப்பர் - (சிலரைக்) காரகலிலே பொரிப்பர்; கண்ணுள் சுரிகைல் நடுவர் - (சிலரைக்) கண்ணிலே குத்துவாளை நடுவர்; (நெஞ்சில்) பாரக்கூர்ந் தறிகள் நட்டுப் பனையெனப் பிளப்பர் - (சிலயை நெஞ்சிலை பெரிய கூரிய முளைகளை புடைத்துப் பனைபோலப் பிளப்பர்.

விளக்கம் : பல்லுயிரும்தாம் செய்த வினையைத் தாமே நுகரினும் அதனை முயன்று நுகர்வித்துக் கழிப்பராதலின், கழுநர்போல் என்றார். இஃது ஒப்பில் பாலி. ( 173 )

2772. நாப்புடை பெயர்த்த லாற்றார்
நயந்துநீர் வேட்டு நோக்கிப்
பூப்புடை யணிந்த பொய்கை
புக்குநீ ருண்ண லுற்றாற்
சீப்படு குழம்ப தாகிச்
செல்லலுற் றந்தோ வென்னக்
கூப்பிடு குரலாய் நிற்பர்
குறைப்பனைக் குழாங்க ளொத்தே.

பொருள் : நீர் வேட்டு - நீரை விரும்பி; நாப்புடை பெயர்த்தல் ஆற்றார் - நாவை (வறட்சியால்) அசைத்தல் ஆற்றாராய்; பூப்புடை அணிந்த பொகைய் நயந்து நோக்கி - பூ மலர்ந்த பொய்கைகளை விரும்பி நோக்கி; புக்குநீர் உண்ணல் உற்றால் புகுந்து அதில் நீரைப் பருகத் தொடங்கினால்; சீப்படு குழம்பதாகி - அது சீயாலுண்டான குழம்பாகையினாலே; செல்லல் உற்று - வருத்தமடைந்தவராய்; அந்தோ என்னக் கூப்பிடு குரலாய் - ஐயோ! என்று கூவும் குரலராய்; குறைப்பனைக் குழாங்கள் ஒத்து - தலைபோன பனைத்திரளை ஒத்து; நிற்பர் - நிற்பர்.

விளக்கம் : அணிந்து என்னும் பாடத்திற்குத் தோன்றும்  என ஒருவினை வருவிக்க. வேட்டு - விரும்பி. செல்லல் - துன்பம். அந்தோ : இரக்கக் குறிப்பு. குறிப்பனை- மடல் முதலியவாகிய தலைப்பகுதி அற்றுப்போன பனைமரம். ( 174 )

2773. நறுமலர்த் தாம நான்று
நானநீர் பிலிற்றும் பந்தர்க்
குறுகலுங் குடநெய் பெய்த
கொந்தழல் போன்று பொங்கிப்
பறையல கனைய வெண்பாற்
பசுங்கழற் குண்டு பைங்க
ணுறுதுயர் நரகர் தம்மை
யுருகச்சுட் டிடுங்க ளன்றே.

பொருள் : பறையலகு அனைய வெண்பல் பசுங்கழல் குண்டு பைங்கண் உறுதுயர் நரகர் - பலகறையைப் போன்ற வெண்மையான பற்களையும், பசுங்கழல் போலும் ஆழமான பைங்கண்களையும் உடைய மிகுதுயர் கொண்ட நரகர்; நறுமலர்த் தாமம் நான்று - நறிய மலர் மாலைகள் தூக்கப் பெற்று; நானநீர் பிலிற்றும் பந்தர்க் குறுகலும் - கத்தூரி நீர்த்துனி துளிக்கும் பந்தரை (நீர் வேட்டுக்) குறுகின அளவிலே; குடநெய் பெய்த கொந்து அழல் போன்று பொங்கி - குடநெய் சொரிந்த மிகுநெருப்பெனப் பொங்கி; தம்மை உருகச் சுட்டிடும் - அவர்களை உருகுமாறு கூட்டிடும்.

விளக்கம் : பறையலகு இக் காலத்துப் பலகறை ஆயிற்று. நான்று - தொங்கி. பிலிற்றும் - துளிக்கும். குண்டுகண் - உட்குழிந்த கண். உறுதுயர் - மிகுந்த துன்பம். சுட்டிடுங்கள் : ஒருசொல் கள் : அசை. ( 175 )

2774. வெந்துருக் குற்ற செம்பின்
விதவையு ளழுத்தி யிட்டு
மெந்திர வூச லேற்றி
யெரியுண மடுத்துஞ் செக்கிற்
சுந்தெழுந் தரைத்தும் போகச்
சுண்ணமா நுணுக்கி யிட்டு
மந்தரத் தனைய துன்பம்
வைகலு முழப்ப மாதோ.

பொருள் : வெந்து உருக்குற்ற செம்பின் விதவையுள் - வெந்து உருகுதல் உற்ற செம்பாலான குழம்பிலே; அழுத்தி யிட்டும் - (நிரய பாலரால்) அழுத்தியிடப்பட்டும்; எந்திர ஊசல் ஏற்றி எரிஉண மடுத்தும் - பொறியமைப்புள்ள ஊசலில் ஏற்றிக் கீழே நெருப்பை மூட்டி எரிக்கப்பட்டும்; செக்கில் சுந்து எழுந்துபோக அரைத்தும் - செக்கிலே இட்டு நீறெழுந்து போக அரைக்கப்பட்டும்; சுண்ணம் ஆ நுணுக்கியிட்டும் - சுண்ணமாக நுணுக்கியிடப்பட்டும்; மந்தரத்து அனைய துன்பம் - மந்தரமலை போற் பெரிய துன்பத்திலே; வைகலும் உழப்ப - நாடொறும் வருந்துவர்.

விளக்கம் : விதவை - குழம்பு. மானிணப் புழுக்கலொடு தேனெய் விதவையின் (2. 12 : 113) என்றார் கதையினும். சுந்து - நீறு. இதற்கு நீர் என்று நச்சினார்க்கினியர் உரையுளது. நீறு என்று பாட பேதமும் உளது. இப்பாடமே சிறந்ததென்று தோன்றுகிறது. மந்தரம் - ஒருமலை : இது பண்பு பற்றி வந்தவுவமை. ( 176 )

2775. உழும்பகட் டெருது போல
வுரனறு தாள ராகிக்
கொழுங்களி யளற்றுள் வீழ்ந்துங்
கொழும்புகை மடுக்கப் பட்டு
மழுந்துமிந் நரகந் தன்னுட்
செல்பவர் யார்கொ லென்னி
னெழுந்துவண் டிமிரும் பைந்தா
ரிறைவநீ கேண்மோ வென்றான்.

பொருள் : வண்டு எழுந்து இமிரும் - வண்டுகள் எழுந்து முரலுகிற; பைந்தார் இறைவ! - பசிய மாலையணிந்த இறைவனே!; உழும்பகட்டு எருதுபோல உரன் அறு தாளர் ஆகி - உழுகின்ற பெரிய எருதுபோல வலியற்ற தாளராய்; கொழுங்களி அளற்றுள் வீழ்ந்தும் - மிகுதியாகச் செறிந்த சேற்றினுள்ளே வீழ்ந்தும்; கொழும்புகை மடுக்கப்பட்டும் - (ஆண்டு நின்றெழ) மிகுதியான புகையால் மடுக்கப்பட்டும்; அழுந்தும் இந் நரகந்தன்னுள் செல்பவர் யார்கொல் என்னின் - அழுந்துகின்ற இந் நரகத்திலே செல்கின்றவர் யாவரெனின்; நீகேள் என்றான் - நீ கேட்பாயாக என்றான்.

(விளக்கம்.) துன்னினரழுந்து நரகம் என்ப. பகட்டெருது - பெரிய எருது. கிழப்பட்ட பகட்டெருதுபோல என்க. உரன் - வலிமை. தாளர் - காலையுடையோர். அளறு - சேறு. யார்கொல் என்புழி, கொல் அசை. இறைவ என்றது சீவகனை. மோ : முன்னிலையசை.
( 177 )

2776. கொல்வதே கன்றி நின்றார்
கொடியவர் கடிய நீரா
ரில்லையே யிம்மை யல்லா
லும்மையு முயிரு மென்பா
ரல்லதுந் தவமு மில்லை
தானமு மிழவென் பாருஞ்
செல்பவந் நரகந் தன்னுட்
டீவினைத் தேர்க ளூர்ந்தே.

பொருள் : கொல்வதே கன்றி நின்றார் - கொலைத் தொழிலிலே அடிப்பட்டு நின்றாரும்; கொடியவர் - நெஞ்சு கொடியரும்; கடிய நீரார் - கடிய தொழில் செய்வாரும்; இம்மை அல்லால் உம்மையும் உயிரும் இல்லையே என்பார் - இப் பிறப்பேயன்றி மறுமையும் இல்லை, உயிர்க் கிழவனும் இல்லை என்பாரும்; அல்லதும் - அல்லாமலும்; தவமும் இல்லை தானமும் இழவு என்பாரும் - தவம் இல்லை தானம் பயன்தராது என்பாரும்; தீவினைத் தேர்கள் ஊர்ந்து அந் நரகந்தன்னுள் செல்ப - தீவினையாகிய தேர்களில் ஏறி அந் நரகத்திலே செல்வார்கள்.

விளக்கம் : அல்லதும் தவமும் இல்லை என்பதைத் தவமும் தவமல்லதும் இல்லை என ஆக்கி நல்வினையும் தீவினையும் இல்லை என்று பொருள் கூறுவர் நச்சினாக்கினியர். இதுவும் பொருந்தும். ( 178 )

11. விலங்குகதித் துன்பம்

வேறு

2777. எரிநீர வேநரக மந்நரகத் துன்பத்
தொருநீர வேவிலங்கு தாமுடைய துன்பம்
பெருநீர வாட்டடங்கட் பெண்ணணங்கு பூந்தா
ரருநீர வேந்தடர்த்த வச்சணங்கு வேலோய்.

பொருள் : பெருநீரை வாள் தடங்கண் பெண் அணங்கு பூந்தார் - பெரிய நீர்மையுடைய ஒளி பொருந்திய பரந்த கண்களையுடைய மகளிரை வருத்தும் மலர்த் தாரினையும்; அருநீர வேந்து அடர்த்த அச்சு அணங்கு வேலோய்! - அடங்குதற்கரிய தன்மையுடைய வேந்தர்களை அடக்கிய வலியினையும் வருத்தும் வேலினையும் உடைய வேந்தனே!; நரகம் எரிநீரவே - நரகம் எப்போதும் எரியும் தன்மையவே; விலங்குதாமுடைய துன்பம் அந்நரகத்து ஒருநீரவே - விலங்குகள் கொண்ட துன்பம் அந் நரகத்திலே பல்லுயிரும் உறும் துன்பத்துடன் ஒரு தன்மையவே.

விளக்கம் : எரி - நெருப்புமாம். ஒருநீர - ஒருதன்மையுடையன. தாம் : அசை. அணங்கு - வருத்துகின்ற. அச்சு அணங்கு - அஞ்சுதற்குக் காரணமான வருத்தம் எனினுமாம். ( 179 )

2778. கழைபொதிர்ப்பத் தேன்சொரிந்து
காய்த்தினைக ளார்த்து
மழை தவழுங் குன்றில்
வயமா முழங்க
வுழையளிய தாமுறூஉந்
துன்பங்க ணின்மேல்
விழைவயரா வேந்துறூஉந்
துன்பமே கண்டாய்.

பொருள் : கழை பொதிர்ப்பத் தேன் சொரிந்து காய்த்தினைகள் ஆர்த்தும் - (இறாலிலே) மூங்கில் துளைக்க அது தேனைப் பெய்து காயையுடைய தினைகளை ஊட்டுகிற; மழை தவழும் குன்றில் - முகில் உலாவும் குன்றிலே; வயமா முழங்க - புலிகள் முழங்க; அளிய உழைதாம் உறூஉம் துன்பங்கள் - இரங்கத்தக்க மான்கள் அடையும் துன்பங்கள்; நின்மேல் விழைவு அயரா வேந்து உறூஉம் துன்பமே கண்டாய் - நின்னிடத்து விருப்பங்காட்டாத வேந்தர்கள் உறும் துன்பமென்றே அறிக.

விளக்கம் : கழை - மூங்கில். பொதிர்த்தல் - துளைத்தல். காய்த்த : ஈறுகெட்ட தெனினுமாம். தினையை ஆர்த்தும் குன்று, மழை தவழும் குன்று எனத் தனித்தனி கூட்டுக. வயமா - புலி. உழை - மான். ( 180 )

2779. நிணம்பிலிற்றும் வாயர் நெருப்பிமைக்குங் கண்ணர்
குணனஞ்சர் கூற்றனைய கோணாய் மடுப்பக்
கணமஞ்ஞை யஞ்சிக் கழுத்தொளிப்ப கண்டாய்
மணமல்கு பூந்தார் மழைதழீஇய கையாய்.

பொருள் : மணம் மல்கு பூந்தார் மழை தழீஇய கையாய்! - மணம் நிறைந்த மலர்த் தாரினையும் முகிலைத் தழுவிய கையினையும் உடையாய்!; நிணம் பிலிற்றும் வாயர் - நிணம் துளிக்கும் வாயராய்; நெருப்பு இமைக்கும் கண்ணர் - நெருப்பென இமைக்குங் கண்ணராய்; குணன் நஞ்சர் - தம் பண்பினால் நஞ்சினை உடையராய்; கூற்று அனைய கோள் நாய் மடுப்ப - கூற்றுவனைப் போன்ற கொலைத் தொழிலையுடைய நாயைச் செலுத்த; அஞ்சிக்கழுத்து ஒளிப்ப கணமஞ்ஞை கண்டாய் - அதற்கு அஞ்சித் தம் கழுத்தைச் சிறகிலே மறைப்பன திரளான மயில்கள் காண்.

விளக்கம் : குணன் - குணம் : மகரத்திற்கு னகரம் போலி. கோள் - கொலைத்தொழில். கணம் - திரள். மஞ்ஞை - மயில். மழை - முகில் : ஆகுபெயர். ( 181 )

2780. மண்ணார மஞ்ச ளுரிஞ்சி மலர்சூட்டிக்
கண்ணார் மறியறுத்துக் கையா லுதிரந்தூ
யுண்ணீரே தேவீ ருவந்தென்ப திவ்வுலக
நண்ணார்க் கடந்தோய் நமனுலகி னான்மடங்கே.

பொருள் : நண்ணார்க் கடந்தோய்! - பகைவரை வென்றவனே!; மண்ஆர மஞ்சள் உரிஞ்சி மலர் சூட்டி - கழுவுதல் நிறைத்து மஞ்சளைப் பூசி மலரை அணிந்து; கண்ஆர் மறி அறுத்து - கண்போல வளர்த்த மறியை அறுத்து ; கையால் உதிரம்தூய் - தன் கையாலே குருதியைத் தூவி; தேவீர் உவந்து உண்ணீர் என்பது இவ்வுலகம் - தேவர்களே! இதனை மகிழ்ந்து பருகுவீர் என்றுரைக்கும் இவ்வுலகம் ;! நமன் உலகின் நான் மடங்கே - கூற்றுவன் உலகினும் நான்கு மடங்கு கொடியது.

விளக்கம் : மண்ணுதல் - நீராட்டித் தூய்மை செய்தல். உரிஞ்சி - தடவி. தாமே வளர்த்த மறி என்பது தோன்றக் கண் ஆர் மறி என்றார். மறி - ஆட்டுக்குட்டி. தேவீர் உவந்துண்பீரே என்னும் கொடுமைத்து இவ்வுலகம் என்றவாறு. ( 182 )

2781. மங்கை மனாவனைய மென்சூன் மடவுடும்பு
செங்கண் வரிவரால் செந்நீ ரிளவாளை
வெங்கருனை புல்லுதற்கு வேறுவே றாக்குறைப்ப
வங்காந் தழுகின்ற தார்கண்ணே நோக்குமே.

பொருள் : மனா அனைய மென்சூல் மடவுடும்பு - அக்கு மணி போன்ற மெல்லிய சூலையுடைய இளைய உடும்பையும்; செங்கண்வரி வரால் - சிவந்த கண்களையும் வரிகளையும் உடையவராலையும்; செந்நீர் இளவாளை - நல்ல நீரில் உள்ள இளவாளையையும்; வெங்கருனை புல்லுதற்கு மங்கை வேறு வேறாக் குறைப்ப - விருப்பூட்டும் பொரிக்கறியாகச் செய்வதற்கு நல்லாள் துண்டு துண்டாக அறுக்கும்போது; அங்காந்து அழுகின்றது - அவை உயிர்போம்போது வாயைத் திறந்து அழுகின்ற தீவினை; ஆர் கண்ணே நோக்கும்? - யாரிடத்தே செல்லும்?

விளக்கம் : மனா : மனவு, என்னும் செய்யுட் சொல் விகாரமாயிற்று. பெண்ணுக்கு இரக்கம் இயல்பாக உண்டெனினும், அவளே இவ்வாறு அறுக்கின்றனள் என்பதை விளக்க மங்கை குறைப்ப என்றார். இனி, மங்கை அணியும் மனவு எனினும் ஆம். அழுதல் : பழைய தன்மைகெட்டு வருந்துதல் : அஃது அசைவு என்னும் மெய்ப்பாடாம் . யார் கண்ணே நோக்கும் என்றது செய்தவர் கண்ணே அன்றி ஏவினார் கண்ணும் உடம்பட்டார் கண்ணும் செல்லும் என்றவாறு. ( 183 )

2782. கடலரண மாகாது காடரண மாகா
குடலரண மாகாது குன்றரண மாகா
வடுதுயர மூர்ந்தலைப்ப வாங்கரணங் காணாப்
படுதுயரத் தாலே பதைத்தளிய வேமே.

பொருள் : ஆங்கு அரணம் காணா அளிய - தாம் செல்கின்ற கதிக்குக் காவலாகிய நல்வினை முன் செய்யாத இரங்கத் தக்க விலங்குகள்; அடுதுயரம் ஊர்ந்து அலைப்ப - தம்மை வருத்தும் தீவினை சென்று அலைத்தலாலே; கடல் அரணம் ஆகாது - கடல் காவல் ஆகாமலும்; காடு அரணம் ஆகா - காடுகள் காவல் ஆகாமலும்; குடல் அரணம் ஆகாது - குடல் காவல் ஆகாமலும்; குன்று அரணம் ஆகா - மலைகள் காவல் ஆகாமலும்; படுதுயரத்தாலே பதைத்து வேம் - மேலும் மேலும் உண்டாகும் துயரத்தாலே பதைத்துவேம்.

விளக்கம் : ஆங்கு என்றது தாம்செல்கிற விலங்கு கதியை; விலங்கு கதியிலே எங்கும் காப்பான இடம் இல்லை என்றபடி. அரணம் என்றது அதற்குக் காவலாகிய நல்வினையை. காணா அளிய எனக் கூட்டுக. குடலிற் கிடந்தவையும் நோயான் வருந்திவிடும் என்றான். ஆகா ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். ஆகா என்ற பன்மையை ஆகா வாய் என விரித்து, ஆகாமல்  என உரைக்க என்பர் நச்சினார்க்கினியர் ( 184 )

2783. முழுப்பதகர் தாடுரந்து முட்டாற்றிற் குத்தி
யுழப்பெருது பொன்றப் புடைத்துழுது விட்டாற்
கழித்துண்ணுங் காக்கை கடிவோரு மின்றிப்
புழுச்சொரியத் துன்பம் பொறுக்கலா பொன்றும்.

பொருள் : முழுப்பதகர் உழப்பு எருது தாள் துரந்து - முற்றிலும் தீவினையாளர் உழைக்கும் எருதைத் தம் முயற்சியாலே ஓட்டி; முள் தாற்றில் குத்தி - முள்ளையுடைய தாற்றுக் கோலாலே குத்தியும்; பொன்றப் புடைத்து - சாம்படி அடித்தும்; உழுது விட்டால் - உழுது (முடிந்தபின்) கைவிட்டால்; கழித்து உண்ணும் காக்கை - (ஊனை என்பிலிருந்து) நீக்கித் தின்னும் காக்கையை; கடிவோரும் இன்றி - ஓட்டுவாரும் இல்லாமல்; புழுச் சொரிய - புழுக்கள் சிந்த; துன்பம் பொறுக்கலா பொன்றும் - துன்பம் பொறுக்க இயலாது சாகும்.

விளக்கம் : அறிவு நுழைதற்கு வழியிலராய்த், தீவினை செய்யலாகா தென்பார்க்குப் பதகங் கூறுவார் முழுப்பதகர் ; பதிதர் என்பதன் விகாரம் பதகர் என்றும் ஆம்; பாதகர் பதகர் என விகாரமும் ஆம். ( 185 )

2784. நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்து
பெரும்பரா வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி
மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி
யுரங்கெட் டுறுப்பழுகிப் புல்லுண்ணா பொன்றும்.

பொருள் : நிரம்பாத நீர் யாற்று - சிறியதாகிய நீரை உடைய யாற்றிலே; இடுமணலுள் ஆழ்ந்து - பெருமணலில் வண்டி ஆழ்ந்து போதலாலே; பெரும்பார ஆடவர்போல் - மிகுதியான சுமையையுடைய ஆடவரைப்போல; பெய் பண்டம் தாங்கி - தன்னிடம் பெய்த பண்டத்தைச் சுமந்து; மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றி - (தமக்குப் போகலா) நிலத்தைச் சார்ந்து மூக்கை நிலத்திலே ஊன்றி; தாள் தவழ்ந்து - மடி முழந்தாள் இட்டு; வாங்கி - இழுத்து; உரம் கெட்டு - தம் வலியெல்லாங் கெட்டு; உறுப்பு அழுகி - பின்பு உறுப்புக்கள் அழுகி; புல் உண்ணா பொன்றும் - புல்லுண்ணாமற் சாகும்.

விளக்கம் : இச் செய்யுளினது தன்மை நவிற்சியிலீடுபட்ட பரிமேலழகர் திருக்குறள் (624) உரையின்கண் மருங்கொற்றியும் மூக்கூன்றியும் தாடவழ்ந்தும் என இதன் சொற்றொடரை எடுத்தமைத்துள்ளனர். ( 186 )

2785. போழ்மதிபோற் கூரிரும்பிற்
பூநுதல்கள் போழ்ந்திடவுங்
காழ்நுதியிற் குத்துண்டுங்
கார்மழைபோ னின்றதிர்ந்தும்
வீழ்பிடிகள் சிந்தித்தும்
வெந்நோய்தம் முள்சுடவெந்
தாழத்த கந்திளக
யானை யலம்வருமே.

பொருள் : போழ்மதிபோல் கூரிரும்பின் - பிளந்த திங்கள் போலும் கூரிய தோட்டியினாலே; பூ நுதல்கள் போழ்ந்திடவும் பூவனைய புள்ளிகளையுடைய மத்தகங்கள் பிளக்கப்பட்டும்; காழ்நுதியின் குத்துண்டும் - குத்துக்கோலின் - நுனியினாற் குத்தப்பட்டும்; கார் மழைபோல் நின்று அதிர்ந்தும் - (அவை பொறாமற்) கரிய முகிலைப்போல் நின்று பிளிறியும்; வெம் நோய் தம் உள் சுட வெந்து - காம நோய் தம் உள்ளத்தைச் சுடுதலாலே வெந்து; வீழ் பிடிகள் சிந்தித்தும் - தாம் விரும்பிய பிடிகளை நினைத்தும்; ஆழந்த கந்து இளக - ஆழ நாட்டின் தூண்கள் இளக; யானை அலம்பரும் - யானைகள் சுழன்றுகொண்டிருக்கும்.

விளக்கம் : மதிப்போழ் என மாறினும் அமையும்; இது தோட்டிக் குவமை. பூப்போலும் புள்ளிகளையுடைய நுதல் என்க. காழ் - ஈண்டுக் குத்துக்கோல். நுதி - நுனி. கார்காலத்து மழை என்க. கட்டுண்டு கிடத்தலின் பிடியைச் சிந்தித்தன என்க. கந்து - தூண். அலம்வரும் - சுழலும். ( 187 )

2786. எரிவளைப்ப வெம்புகையுண் டின்னுயிர்விட் டேகு
மரிவளைப்பக் குஞ்சரமு மாலிபோ னீராம்
வரிவளைக்கும் வெண்மயிர்க்கு முத்திற்கு மாந்தர்
திருவளைத்த மார்ப செகுத்திடுவர் தேங்கார்.

பொருள் : திரு வளைத்த மார்ப - திருவைக் கவர்ந்த மார்பனே!; எரி வளைப்ப வெம்புகை உண்டு இன் உயிர் விட்டு ஏகும் - (சில விலங்குகள்) தீச் சூழ்தலாலே கொடிய புகையால் விழுங்கப்பட்டு இனிய உயிரை விட்டுப் போய்விடும்; அரி வளைப்பக் குஞ்சரமும் (இன் உயிர் விட்டு ஏகும்) - சிங்கத்தாற் சூழப்பட்டு யானைகளும் இனிய உயிர்விட்டு நீங்கும்; நீர் ஆம் வரிவளைக்கும் - நீரிலிருந்து கிடைக்கும் வரிவளைக்குச் சங்கையும்; வெண் மயிர்க்கும் - வெண்மையான மயிர்க்குக் கவரிமானையும்; ஆலிபோல் முத்திற்கும் - நீர்த்துளிபோன்ற முத்திற்குச் சிப்பியையும்; மாந்தர் தேங்கார் செகுத்திடுவர் - மக்கள் வருந்தாராய்க் கொன்றிடுவர்.

விளக்கம் : எரி - ஈண்டுக் காட்டுத்தீ. அரி - சிங்கம். குஞ்சரம் - யானை. நீரிலே உண்டாகும் வரிவளை என்க. வரிவளையின் பொருட்டுச் சங்கையும் முத்தின் பொருட்டு இப்பியையும் மயிரின் பொருட்டுக் கவரியையும், மாந்தர் செகுத்திடுவர் என்று தகுதியால் வருவித்தோதுக. ஆலிபோல் முத்திற்கும் எனக் கூட்டுக. ( 188 )

2787. வேள்விவாய்க் கண்படுத்தும்
வெவ்வினைசெ யாடவர்கை
வாளின்வாய்க் கண்படுத்தும்
வாரணத்தி னீருரிபோற்
கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க்
கண்படுத்து மின்னணமே
நாளுலப்பித் திட்டார்
நமரலா தாரெல்லாம்.

பொருள் : வேள்வி வாய்க் கண் படுத்தும் - வேள்வியினிடத்தே கொன்றும்; வெவ்வினை செய் ஆடவர் கை வாளின் வாய்க் கண் படுத்தும் - கொடிய கொலைத்தொழிலைச் செய்யும் ஆடவரின் கையிலேந்திய வாளினாலே கொன்றும்; கோள் இமிழ்ப்பு நீள் வலைவாய்க் கண்படுத்தும் - கொலைக்குரிய கட்டப்பட்ட நீண்ட வலையினிடத்தே கொன்றும்; நமர் அலாதார் எல்லாம் - நம்முடைய சமயத்தைச் சாராத பிறர் எல்லாரும்; வாரணத்தின் ஈருரிபோல் - யானையின் பசுந்தோல் போர்த்தவர்க்குக் கேடாயினாற் போல; இன்னணமே நாள் உலப்பித் திட்டார் - இவ்வாறே தங்கள் வாழ்நாளைத் தேய்ப்பித்திட்டார்.

விளக்கம் : யானையின் பசுந்தோல் பிறர் உடம்பிற் பட்டாற் கொல்லும். அத்தோலைப் போர்த்தவர் கெட்டாற்போல இவர்களும் தமக்கு நன்மைதருமென்றெண்ணி உயிர்க்கொலை செய்து கொட்டரென்று உவமை கொள்க. வாரணத்தின் உரிபோல் தப்பாமற் கொல்லும் வலையெனினும் பொருந்தும். கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண் மேற் - செல்லா துயிருண்ணுங் கூற்று, (குறள் - 389) என்றார் பிறரும். இமிழ்ப்பு - கட்டு. ( 189 )

2788. கொல்வாருங் கூட்டுட் செறிப்பாரு மாடவர்க
ளல்லாரு நாய்வேட்ட மாடாத மாத்திரையே
யால்லாத பைங்கிளியும் பூவையு மாதியா
வெல்லாங் கிளைபிரித்திட் டேமுறுநோய் செய்பவே.

பொருள் : ஆடவர்கள் அல்லாரும் - ஆடவரே அன்றி மகளிரும்; நாய்வேட்டம் ஆடாத மாத்திரையே - நாய் வேட்டையாக வெளிவந்து ஆடாத அவ்வளவே; கொல்வாரும் - (கருனையாக்குவதற்குக்) கொல்வாரும்; அல்லாத - (கருனைக்குத்) தகாத; பைங்கிளியும் பூவையும் ஆதியா எல்லாம் - பச்சைக்கிளி பூவை முதலாக எல்லாவற்றையும்; கிளை பிரித்திட்டுக் கூட்டுள் செறிப்பாரும் - உறவிலிருந்து பிரித்துக் கூட்டில் அடைத்து வைப்பாரும் ஆகி; ஏம்உறு நோய் செய்ப - வருந்துதற்குரிய நோயைச் செய்வார்கள்.

விளக்கம் : அல்லாரும் : உம் : எச்ச உம்மை. மகளிர் உள்ளிருந்தும் பாவமே செய்கின்றனர் என்பதாம். ( 190 )

2789. மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும்
பல்லவரே யன்றிப் பகுட்ததுணாப் பாவிகளு
மல்குல் விலைபகரு மாய்தொடிய ராதியார்
வில்பொருதோண் மன்னா விலங்காய்ப் பிறப்பவே.

பொருள் : வில் பொரு தோள் மன்னா! - வில் தாக்கும் தோளையுடைய வேந்தனே!; மல்லல் மலை அனைய மாதவரை வைது உரைக்கும் - வளமுறும் மலைபோன்ற பெருமையை உடைய முனிவர்களை இகழ்ந்து கூறுகின்ற, பல்லவரே அன்றி - பலருமே அல்லாமல்; பகுத்து உணாப் பாவிகளும் - (பிறருக்குக்) கொடுத்துண்ணாத பாவிகளும்; அல்குல் விலைபகரும் ஆய் தொடியர் ஆதியர் - அல்குலை விற்கும் விலைமகளிரும் முதலானோர்; விலங்காய்ப் பிறப்ப - விலங்குகளாகப் பிறப்பார்கள்.

விளக்கம் : இதனால் விலங்குகட்கும் ஊழ்வினை யுண்மைக்குக் காரணம் தெரிந்தோதினார். எனவே தீவினை மாக்களே விலங்குகளாகி அப்பிறப்பின்கண் பழவினையின் பயனை நுகர்ந்து மேலும் நரக கதியும் எய்துவர் என்பது கருத்தாயிற்று, ( 191 )

12. மக்கட் கதித் துன்பம்

2790. தம்மை நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கிச்
செம்மை மலர்மார்ப மட்டித் திளையார்தோள்
கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர்
வெம்மை மிகுதுன்பம் வேந்தே சிலகேளாய்.

பொருள் : தம்மை நிழல் நோக்கி - தம்மைக் கண்ணாடியிலே பார்த்து; தாங்கார் - தம் அழகின் பெருமையைத் தாங்க வியலாராய்; மகிழ்தூங்கி - மகிழ்ச்சியிலே திளைத்து; செம்மைமலர் மார்பம் மட்டித்து - செந்நிறம் பொருந்திய மார்பிலே பூசப்படுவன பூசி;கொம்மைக் குழகு - பெரிய இளமைச் செவ்வியாலே; இளையார் தோள் ஆடும் - மகளிர் தோளைத் தழுவும்; கோலவரை மார்பர் - அழகிய மலையனைய மார்பரின்; வெம்மை மிகு துன்பம் - கொடுமை மிக்க துன்பங்களிற்; சில கேளாய் - சிலவற்றையேனும் கேட்பாயாக.

விளக்கம் : வரை மார்பர் : இகழ்ச்சி. நிழல் கண்ணாடியின்கண் தம் நிழல் என்க. தம்மழகின் பெருமையாற் செருக்கெய்தி என்றவாறு. மட்டித்தல் - பூசுதல். கொம்மை - பெருமை. குழகு - இளமை. அவை முழுதும் சொல்லவியலாது ஆகலின் ஒருசில கூறுதும், கேள் என்றவாறு. ( 192 )

2791. ஈருட் டடிமூடி யீண்டுமலப் பண்டப்
போர்வை புழுமொய்ப்பப் பொல்லாக் குடர்சூடிச்
சார்தற் கரிதாகித் தானின் றறாவள்ள
னீர்வாய்ச் சுரம்போந்தார் தம்மை நினையாரோ.

பொருள் : ஈருள் தடிமூடி - (தாய் வயிற்றிலே) ஈருளாகிய தடியை மூடி; ஈண்டும் மலப்பண்டப் போர்வைப் புழு மொய்ப்ப - (தமக்கு அடைத்த காலங்கள் தோறும்) உறுப்புக்கள் திரள்கின்ற மலமாகிய தம் உடம்பைப் போர்த்த போர்வையைப் புழுக்கள் மொய்ப்ப; பொல்லாக் குடர் சூடி - அழகல்லாத குடரைச் சூடியிருந்து; சார்தற்கு அரிது ஆகி - (தூய்மை செய்யாக்கால்) நெருங்குதற்கு அரியதாகி; அள்ளல் தான் நின்று அறா - சேறு நிலைத்து நீங்காத; நீர் வாய்ச்சுரம் போந்தார் - நீரை இடத்தே உடைய சுரத்தின் வழியே வந்த மக்கள்; தம்மை நினையாரோ? தம் தூய்மையை நினையார்களோ?

விளக்கம் : நினையாமைலேயே தம்மை வியக்கின்றனர் என்றபடி. ஓகாரம் : எதிர்மறை. இனி, மலபிண்டத்திற் பிறந்த புழு, தடியையும் மூடித் தம்மையும் மொய்ப்ப என்பாரும் உளர். ( 193 )

2792. அஞ்சொன் மடவார்த மார்வக் களிபொங்க
நெஞ்சத் தயிலேற்று நீள்வெங் கழுவீர்ந்துங்
குஞ்சிக் களியானைக் கேட்டா லுழப்பட்டுந்
துஞ்சிற் றுலகந்தோ துன்பக் கடலுள்ளே.

பொருள் : அம்சொல் மடவார்தம் ஆர்வக் களிபொங்க - அழகிய மொழியையுடைய மகளிரிடத்துப் பிறந்த அவாவினாற் களிப்பு மிகுதலின்; நெஞ்சத்து அயில் ஏற்றும் - நெஞ்சிலே வேலை ஏற்றும்; நீள் வெம் கழு ஊர்ந்தும் - (அவர்க்குப் பொருள் தரக் களவுசெய்து) நீண்ட கொடிய கழுவில் ஏறியும்; குஞ்சிக் களியானைக் கோட்டால் உழப்பட்டும் - மத்தகத்தில் மயிரை உடைய மதயானையின் கொம்பினால் உழப்பட்டும்; துன்பக் கடலுள்ளே உலகம் துஞ்சிற்று - துன்பக் கடலிலே உலகம் அழுந்தியது.

விளக்கம் : அந்தோ! : இரக்கக் குறிப்பு. ஆர்வக்களி - அவாவாலுண்டாய மயக்கம். அவரைப் பெறுதற்கு நெஞ்சிலயிலேற்றும், அவர்க்குப் பொருள் கொடுத்தற் பொருட்டுக் களவு கொண்டு கழுவேறியும் என்பது கருத்து. குஞ்சி என்றமையால் யானை களிற்றியானை என்றாராயிற்று. ( 194 )

2793. பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய்
கண்ணார் கடன்மண்டிக் காற்றிற் கவிழுங்கான்
மண்ணார் மணிப்பூணோய் மக்க ளுறுந்துன்ப
நண்ணா நரகத்தி னான்கா மடியன்றே.

பொருள் : மண் ஆர் மணிப்பூணோய் - கழுவிய மணிக்கலன் உடையாய்; பண்ஆர் களிறேபோல் - புனையப்பட்ட களிற்றைப் போல; பாய் ஓங்கு உயர் நாவாய் - பாய் விரித்த உயர்ந்தோங்கிய மலக்கலம்; கண்ஆர் கடல் மண்டிக் காற்றில் கவிழுங்கால் - இடம் பரவிய கடலிலே ஓடிக் காற்றிலே கவிழும்போது; மக்கள் உறுந்துன்பம் - மக்கள் அடையும் துன்பம்; நண்ணா நரகத்தின் நான்காம் மடி - சென்று சேர்தற்கரிய நரகத்தின் துன்பத்தினும் நான்கு மடங்கு துன்பமுடையது.

விளக்கம் : நான் மடங்கு என்பது மிகுதியென்னும் பொருட்டு. அந்நரகம் நிகோதம்; அஃது இரத்தினப்பிரபை முதலிய நரகங்கள் ஏழினும் கீழுள்ளது என்பர். ( 195 )

2794. செந்தீப் புகையுண்டுஞ் சேற்று ணிலைநின்று
மந்தோ வெனமாற்றா லாற்றப் புடையுண்டுந்
தந்தீ கெனாமுன்கை வீக்கத் தளர்வுற்று
நொந்தார் குடிச்செல்வர் நோன்மை நுகம்பூண்டார்.

பொருள் : நொந்தார் குடிச்செல்வர் - நின் பகைவர்களின் நாட்டிற் குடியிருக்கும் மக்களாகிய செல்வர்; தந்தீக எனா - அரசனுக்குப் பொருள் தருக என்று கூறி; முன்கை வீக்கத் தளர்வுற்றும் - முன் கையைப் பிணிக்கத் தளர்ந்தும்; சேற்றுள் நிலை நின்றும் - சேற்றிலே நிலையாக நின்றும்; அந்தோ என மாற்றால் ஆற்றப் புடையுண்டும் - ஐயோ என்று அலற வளாரால் நன்றாக அடியுண்டும்; செந்தீப் புகையுண்டும் - செந்தீயின் புகையிலே அகப்பட்டும்; நோன்மை நுகம் பூண்டார் - பொறுமையாகிய நுகத்தைப் பூண்டனர்.

விளக்கம் : இதனால் பண்டைக்காலத்தே இறைப்பொருள் கொடாதார்க்கு அரசியலார் கொடுக்குந் தண்டனை சிலவற்றை உணரலாம். மாறு - வளார். ( 196 )

2795. கண்சூன் றிடப்பட்டுங் கால்கை களைந்தாங்கே
யண்பல் லிறக்கையா லாற்றத் தகர்பெற்று
நுண்சாந் தரைப்பார்போ னோவ முழங்கையாற்
புண்செய் திடப்பட்டும் புன்கணு ழப்பவே.

பொருள் : அண்பல் இறக் கையால் ஆற்றத் தகர்பெற்றும் - மேற் பல்லுடையக் கையால் நன்றாக அறையப்பட்டும்; நுண் சாந்து அரைப்பார் போல் - நுண்ணிய சாந்தை அரைப்பவர் போல; முழங்கையால் நோவப் புண்செய்திடப்பட்டும் - முழங்கையினால் வருந்தும்படி புண்ணாக்கப்பட்டும்; கால் கை களைந்து ஆங்கே கண்சூன்றிடப்பட்டும் - காலும் கையுந் தறியுண்டு அங்கே கண்ணும் தோண்டப்பெற்றும்; புன்கண் உழப்ப - துன்பத்திலே அழுந்துவர்.

விளக்கம் : தந்தீக : வினைத் திரிசொல். தந்தீக என ஒருமையாற் கூறினார் தனித்தனியே தண்டித்தலின். ( 197 )

2796. மாலைக் குடைமன்னர் வைய மகற்றுவான்
காலைக் கதிதுன்பங் காவல் பெருந்துன்பஞ்
சோலை மயிலன்னார் தோள்சேர் விலராயின்
வேலைக் கடலேபோற் றுன்பம் விளையுமே.

பொருள் : மாலைக் குடை மன்னர் - மாலையுங்குடையும் உடைய வேந்தர்; வையம் அகற்றுவான்காலை - நாட்டைப் பெருக்குதற்குச் செல்லுங்காலத்தே, கதி துன்பம் - போக்குந்துன்பம்; காவல் பெருந்துன்பம் - ஆட்சியும் பெரிய துன்பம்; சோலை மயில் அன்னார் தோள் சேர்வு இலராயின் - சோலை மயில் போன்ற மகளிரின் தோளைத் தழுவாராயின்; வேலைக் கடலே போல் துன்பம் விளையும் - கரையுறு கடலேபோலத் துன்பம் பெருகும்.

விளக்கம் : அகற்றுதல் - அகலச் செய்தல். அகற்றுவான் காலை - அகற்றுதற்குப் போகுங் காலம். கதி - மேற்சேறல். காவல் - காத்தற்றெழில். வேலை - கரை. ( 198 )

2797. ஊன்சே ருடம்பென்னு மோங்கன் மரச்சோலை
தான்சேர் பிணியென்னுஞ் செந்தீக் கொடிதங்கிக்
கான்சேர் கவினென்னுங் காமர் மலர்வாடத்
தேன்சேர் மலர்மார்ப தீத்திட் டிறக்குமே.

பொருள் : தேன்சேர் மலர் மார்ப - தேன் பொருந்திய மலர் மார்பனே!; ஊன்சேர் உடம்பு என்னும் ஓங்கல் மரச்சோலை - ஊன் பொருந்திய மெய்யென்னும் உயர்ந்த மரச்செறிவிலே; சேர்பிணி யென்னும் செந்தீக் கொடி தங்கி - சேர்ந்த பிணி என்னும் தீயொழுங்கு அதனைவிட்டுப் போகாமல் தங்கி; கான்சேர் கவின் என்னும் காமர் மலர் வாட - மணம் பொருந்திய அழகு என்கிற விருப்பூட்டும் மலர் வாட; தீத்திட்டு இறக்கும் - (அப்பொழிலை) வேகச்செய்து தானும் இறந்துபோம்.

விளக்கம் : ஓங்கல் - உயர்தலையுடைய. தீக்கொடி - தீயொழுங்கு. கான்சேர் மலர், காமர் மலர் என்று தனித்தனி கூட்டுக. தீத்திட்டு : ஒருசொல்; தீத்து என்க; (சுட்டு) பிணி தீத்திட்டுத் தானும் இறக்கும். (199)

2798. கொட்டுப் பிடிபோலுங் கூனும் குறளாமை
விட்டு நடப்பனபோற் சிந்தும் விளைந்துசீ
யட்டு முயவுநோ யல்லாப் பிறநோயும்
பட்டா ருறுதுன்பம் பன்னிச் சொலலாமோ.

பொருள் : கொட்டிப் பிடிபோலும் கூனும் - களைக்கொட்டின் பிடியைப்போலும் கூனரும்; குறள் - குறளரும்; ஆமை விட்டு நடப்பனபோற் சிந்தும் - ஆமை கைவீசி நடக்குமாறு போலுஞ் சிந்தரும்; சீ விளைந்து அட்டும் உயவு நோய் - சீபெருகிவருத்தும் நோயையும்; அல்லாப் பிற நோயும் - இவையல்லாத வேறு பிற நோய்களையும்; பட்டார் உறு துன்பம் - உற்றவரும் படுந் துன்பத்தை; பன்னிச் சொலலாமோ? - விளக்கிக் கூற வியலுமோ?

விளக்கம் : கொட்டுப்பிடி - களைக்கொட்டின் பிடி, இது கூனருக்குவமை. குறளும் எனல் வேண்டிய எண்ணும்மை தொக்கது; செய்யுள் விகாரம். சிந்தர் - குறளரின் சிறிது நெடியராய் மாந்தர்க்குரிய முழு வளர்ச்சியும் எய்தாதவர். அட்டும் - ஒழுகும். உயவு. செய்யும் நோய். பிறநோய் என்றது மனத்தால் உண்டாகும் துன்பங்களை. பன்னிச் செல்லுதல் - வகுத்துக் கூறுதல். ஓ : எதிர்மறை.
( 200 )

வேறு

2799. வேட்டன பெறாமை துன்பம்
விழைநரைப் பிரித றுன்ப
மோட்டெழி லிளமை நீங்க
மூப்புவந் தடைத றுன்ப
மேட்டெழுத் தறித லின்றி
யெள்ளற்பா டுள்ளிட் டெல்லாஞ்
சூட்டணிந் திலங்கும் வேலோய்
துன்பமே மாந்தர்க் கென்றான்.

பொருள் : சூட்டு அணிந்து இலங்கும் வேலோய் - மாலை அணிந்து விளங்கும் வேலனே!; மாந்தர்க்கு - மக்களுக்கு; வேட்டன பெறாமை துன்பம் - விரும்பியவற்றைப் பெறாமை துன்பமாம்; விழைநரைப் பிரிதல் துன்பம் - விரும்பியவரைப் பிரிதல் துன்பம்; மோடு எழில் இளமை நீங்க - பெருமையுடைய இளமை விலகி; மூப்பு வந்து அடைதல் துன்பம் - முதுமை வந்து சேர்தல் துன்பம்; ஏட்டு எழுத்து அறிதல் இன்றி எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம் - ஏட்டிலிருக்கும் எழுத்தை அறிய முடியாமையால் இகழப்படுதல் உள்ளிட்டுயாவும்; மாந்தர்க்குத் துன்பமே என்றான் - மக்களுக்குத் துன்பமேயாம் என்றான்.

விளக்கம் : வேட்டன - விரும்பப்பட்ட பொருள்கள். விழைநர் - விரும்புவோர், மோடு - பெருமை; ஈண்டுச் சிறப்பின்மேனின்றது. எழில் - அழகு; எழுச்சியுமாம். ஏட்டெழுத்தறிதல் இன்றி என்றது கல்லாமை என்பதுபட நின்றது. எள்ளற்பாடு - இகழப்படுதல். ( 201 )

13. தேவகதித் துன்பம்

2800. திருவிற்போற் குலாய தேந்தார்த்
தேவர்தந் தன்மை செப்பிற்
கருவத்துச் சென்று தோன்றார்
கானிலந் தோய்தல் செல்லா
ருருவமே லெழுத லாகா
வொளியுமிழ்ந் திலங்கு மேனி
பருதியி னியன்ற தொக்கும்
பன்மலர்க் கண்ணி வாடா.

பொருள் : திருவில்போல் குலாய தேன் தார்த் தேவர்தம் தன்மை செப்பின் - வான வில்லென விளங்கும் தேன் பொருந்திய மாலையணிந்த வானவரின் தன்மையை விளம்பின்; கருவத்துச் சென்று தோன்றார் - கருவிலே போய்ப் பிறவார்; கால் நிலம் தோய்தல் செல்லார் - கால் நிலத்திலே தோய்தலைப் பொருந்தார்; உருவமேல் - அவருருவைக் கூறின்; எழுதல் ஆகா - எழுதவியலாதன; ஒளி உமிழ்ந்து இலங்கும் மேனி - அவர்களுடைய ஒளியைத் தோற்றி விளங்கும் நிறம்; பருதியின் இயன்றது ஒக்கும் - ஞாயிற்றினாலே அமைந்தது போன்றதாம்; பல்மலர்க் கண்ணி வாடா - அவர் அணிந்த பல மலர்க் கண்ணிகளும் வாடமாட்டா.

விளக்கம் : திருவில் - வானவில்; இது தாருக்குவமை. கருவத்து என்புழி அத்து, சாரியை. எழுதலாகாவாகும் என்க. பருதி - ஞாயிறு. தேவர் கருவிற்பிறவார், கானிலந்தோயப்பெறார், அவர் உருவம் எழுதவியலாத சிறப்புடையன. உடம்பு ஒளிமிக்கன; அவர் அணிந்த மாலைகள் பாடமாட்டா என்பதாம். ( 202 )

2801. அங்கையு மடியு நோக்கிற்
றாமரை யலர்ந்த தொக்கும்
பங்கய மனைய செங்கண்
பகுவொளிப் பவழஞ் செவ்வாய்
செங்கதிர் முறுவன் முத்தின்
றெளிநகை திகழுஞ் செய்யாள்
வெங்கடை மழைக்க ணோக்கி
வெய்துறத் திரண்ட வன்றே.

பொருள் : அங்கையுங் அடியும் நோக்கின் தாமரை அலர்ந்தது ஒக்கும் - (அவர்களுடைய தேவியருக்கு) அழகிய கையையும் அடியையும் பார்த்தால் தாமரை மலர்ந்ததைப்போன்றிருக்கும்; செங்கண் பங்கயம் அனைய - சிவந்த கண்கள் செந்தாமரை மலரைப் போல்வன; செவ்வாய் பகுவொளிப் பவழம் - சிவந்த வாய் பேரொளியையுடைய பவழத்தையொக்கும்; செங்கதிர் முறுவல் முத்தின் தெளிநகை திகழும் - நல்லொளியையுடைய முறுவலிலே முத்துக்களின் தெளிந்த ஒளிவிளங்கும்; செய்யாள் வெங்கடை மழைக்கண் நோக்கி வெய்து உறத்திரண்ட - திருமகளுடைய மழைக் கண்களின் வெவ்விய கடை நோக்கி நோக்கிப் (பொறாமையால்) வெம்மையுற (வானமங்கையரின் உறுப்புக்கள்) அழகு திரண்டன.

விளக்கம் : இது தேவருள் மகளிர் இயல்பு கூறிற்று. பங்கயம் தாமரை. பகுவொளி - பேரொளி. முறுவல் - புன்சிரிப்பு; பற்களுமாம். செய்யாள் - திருமகள். திருமகள் இவரழகைப்  பெற்றிலேன் என்று வெய்துற என்க ( 203 )

2802. தாணெடுங் குவளைக் கண்ணித்
தளையவிழ் கோதை மாலை
வாண்முடி வயிர வில்லும்
வார்குழை சுடரு மார்பிற்
பூணிடை நிலவு மேனி
மின்னொடு பொலிந்த தேவ
ரூணுடை யமிர்தம் வேட்டா
லுண்பது மனத்தி னாலே.

பொருள் : தாள் நெடுங் குவளைக் கண்ணி - நீண்ட தாளையுடைய குவளை மலர்களால் ஆகிய கண்ணியையும் ; தளை அவிழ் கோதை - (மார்பில்) இதழ் விரிந்த மலர் மாலையையும்; மாலை - (நெற்றி) மாலையையும்; வாள் முடி வைர வில்லும் - ஒளி பொருந்திய முடியில் உள்ள வைரக்கதிரையும்; சுடரும் வார் குழை - ஒளிரும் நீண்ட குழையையும்; மார்பின் பூணிடை நிலவும் - மார்பிலே அணியிடை நிலவினையும்; மேனி மின்னொடு பொலிந்த தேவர் - நிறம் மின்னையும் கொண்டு பொலிவுற்ற அவ்வானவர்; ஊண் உடை அமிர்தம் வேட்டால் உண்பதும் மனத்தினால் - உண்ணுந் தொழிலையுடைய அமிர்தத்தை விரும்பினால் உண்பதும் மனத்தாலேயே!

விளக்கம் : தளை - கட்டு. கண்ணி, கோதை, மாலை என்பன மலர் மாலை வகைகள். ஊண்உடை - உண்ணுதலையுடைய. மனத்தினாலே உண்பர் என்றது நம்போன்று கையாலும் வாயாலும் உண்ணார் என்பது படநின்றது. ( 204 )

2803. சிதரரி யொழுகி யோடிச் செவியுறப் போழ்ந்து நீண்ட
மதரரி மழைக்க ணம்பா வாங்குவிற் புருவ மாகத்
துதைமணிக் கலாப மின்னத் தொன்மலர்க் காம னம்பு
புதைமலர் மார்பத் தெய்யப் பூவணை மயங்கி வீழ்வார்.

பொருள் : காமன் தொன்மலர் அம்பு புதைமலர் மார்பத்து - காமனுடைய பழைய மலர்க்கணைகள் புதைந்து வானவரின் மலர்ந்த மார்பிலே; சிதர் அரி ஒழுகி ஓடிச் செவியுறப் போழ்ந்து நீண்ட - சிதரின் செவ்வரியுடைய, நீண்டு சென்று செவியை உறவும் பிளந்து நீண்ட; மதர் அரி மழைக்கண் அம்புஆ - கதிர்த்த அழகுற்ற மழைக்கண் அம்பாகவும்; வாங்குவில் புருவம் ஆக - புருவம் வளைந்த வில்லாகவும் (கொண்டு); எய்ய மயங்கி - அரம்பையர் எய்தலாலே மயங்கி; துதை மணிக்கலாபம் மின்ன வீழ்வார் - (அம்மங்கையரின்) நெருங்கிய மணிகளையுடைய கலாபம் ஒளிர (அணையிலே தழுவி) வீழ்வர்.

விளக்கம் : கலாபம் மின்ன அணையிலே வீழ்வர் என்றது இடக்கரடக்கு. கலாபம் மின்ன என்றது புணர்ச்சியை என்றார் நச்சினார்க்கினியர். சிதரரி : வினைத்தொகை. (205 )

2804. பூத்ததை கொம்பு போன்று
பொன்னிழை சுடரு மேனி
யேத்தருங் கொடிய னாரை
யிருநடு வாகப் புல்லிக்
காய்த்தியிட் டுள்ளம் வெம்பிக்
கடைந்திடு கின்ற காம
நீத்துநீர்க் கடலை நீந்தும்
புணையென விடுத்தல் செல்லார்.

பொருள் : பூத் ததை கொம்பு போன்று - மலர் செறிந்த கொம்பு போன்று; பொன் இழை சுடரும் மேனி - பொன்னணி விளங்கும் மேனியையுடைய; ஏத் தரும் கொடியனாரை - காமன் அம்பைத்தரும் கொடிபோன்றவரை; இரு நடு ஆகப் புல்லி - இடை யிரண்டாகத் தழுவி; உள்ளம் வெம்பிக் காய்த்தியிட்டு - மனம் வெதும்பச் சுட்டு; கடைந்திடுகின்ற காமம் நீத்து நீர்க்கடலை நீந்தும் புணையென - தம் உளத்தைக் கடையும் காம வெள்ளமாகிய நீரினையுடைய கடலை நீந்தும் புணையென (அம்மங்கையரை எண்ணி); விடுத்தல செல்லார் - நீங்கிச் செல்லார்.

விளக்கம் : ததைதல் - செறிதல். ஏ - அம்பு, ஈண்டுக் காமனம்புகளாகிய மலரம்புகள் - இவை மாதர் எண் முதலியவற்றிற்குவமை. இனி, காமன் அம்பை வழங்குவதற்குக் காரணமான கொடியன்னார் எனினுமாம். வெம்பி - வெம்ப. புணை - தெப்பம். விடுத்தல் செல்லார் : ஒருசொன்னீர்மைத்து. ( 206 )

2805. பொங்கல்வெம் முலைக ளென்னும்
போதொடு பொருது பூந்தா
ரங்கலந் தொடையன் மாலை
கிழிந்தழ கழிய வைகிக்
கொங்கலர் கோதை நல்லார்
குரைகட லமிர்த மாகத்
தங்கலர் பருகி யாரார்
தாழ்ந்துகண் ணிமைத்தல் செல்லார்.

பொருள் : பொங்கல் வெம் முலைகள் என்னும் போதொடு பொருது - பெருமையும் விருப்பமும் உடைய முலைகளாகிய தாமரை முகைகளுடன் பொருது; அம் கலம் தொடையல் மாலை பூந்தார் - அழகிய கலனணிந்த மார்பிலே, தொடுத்த மாலையாகிய மலர்த்தார்; கிழிந்து அழகழிய - தோற்று அழகழிய; வைகி - (அவர்களுடன்) கூடியிருந்து; கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆக - மணம் விரியும் மாலையணிந்த அரம்பையரை, ஒலிக்குங் கடலில் தோன்றிய அமிர்தமாக எண்ணி; தங்கலர் பருகி - விடாமற் பருகி; ஆரார் - மன நிறைவுறாராய்; தாழ்ந்து கண் இமைத்தல் செல்லார் - (அவர்களிடமே) தங்கிக் கண்கள் இமையாராயினார்.

விளக்கம் : பொங்கல் - பெருமை. அழகிய கலத்தினையும் தொடையன் மாலையினையும் உடைய மார்பு என்க. கொங்கு - நறுமணம். குரைகடல் : வினைத்தொகை. ஆரார் - தெவிட்டாராய். தங்கலர் - அமையாராய். ( 207 )

2806. கருவியின் னிசைக ளார்ப்பக்
கற்பக மரத்தி னீழற்
பொருகய லனைய கண்ணும்
புருவமு மரவஞ் செய்ய
வரவமே கலைக ளம்பொற்
கிண்கிணி சிலம்பொ டார்ப்பத்
திருவனா ராடல் கண்டுந்
திருவொடு திளைத்து மானார்.

பொருள் : கற்பக மரத்தின் நீழல் - (அவர்கள்) : கற்பக மரத்தின் நீழலிலே (அமர்ந்து); இன்னிசைக் கருவிகள் ஆர்ப்ப - நால்வகையான இனிய இசைக்கருவிகள் ஆர்ப்ப; பொருகயல் அனைய கண்ணும் புருவமும் அரவம் செய்ய - காதொடு மோதும் கயல் போன்ற கண்களும் புருவமும் மனத்தைக் கலக்க; அரவ மேகலைகள் அம்பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப - ஒலிக்குரிய மேகலைகளும் அழகிய பொற்கிண்கிணிகளும் சிலம்பும் ஆரவாரிக்க; திருவனார் ஆடல்கண்டும் - திருமகளைப்போன்ற அரம்பையரின் ஆடலைக் கண்டும்; திருவொடு திளைத்தும் ஆனார் - செல்வத்துடனே பிற விளையாட்டுக்களில் ஈடுபட்டும் அமையாராய்,

விளக்கம் : இப் பாட்டுக் குளகம். கருவி - ஈண்டிசைக் கருவிகள். பொருகயல் - தம்முட் போர் செய்யும் கயற்கெண்டைகள். அரவஞ் செய்ய - மனத்தைக் கலக்க. புருவமு முருவஞ்செய்ய என்றும் பாடம். திருவனார் என்புழித் திரு திருமகள்; திருவொடு என்புழிச் செல்வம் என்க. ஆனார் - அமையார். ( 208 )

2807. பனிமுகின் முளைத்த நான்கு
பசுங்கதிர்த் திங்க ளொப்பக்
குனிமருப் புழுது மேகங்
குஞ்சரங் குனிந்து குத்த
வினிதினி னிலங்கு பொற்றோ
டேற்றுமின் குழைகள் பொங்கத்
துனிவிலர் களிற்றோ டாடித்
தொழுதகத் கழிப்பர் வேந்தே.

பொருள் : வேந்தே! - அரசனே!; பனிமுகில் முளைத்த நான்கு பசுங்கதிர்த் திங்கள் ஒப்ப - வெண்முகிலிடையே முளைத்த நான்கு பசிய கதிர்களையுடைய பிறைத்திங்கள்களைப்போல; குனி மருப்புக் குஞ்சரம் குனிந்து மேகம் உழுது குத்த - வளைந்த கொம்புகளாலே வெள்ளையானை தாழ்ந்து முகிலை உழுது குத்தும் படி; இலங்குபொன் தோடு ஏற்று மின் குழைகள் பொங்க - வீளங்கும் பொன் தோடுடன் பொருந்தி ஒளிவிடும் குழைகள் பொங்கும்படி; துனிவிலர் இனிதினின் களிற்றோடு ஆடி - வெறுப்பிலராய் இனிமையாகக் களிற்றுடன் விளையாடி; தொழுதகக் கழிப்பர் - (பிறர் கண்டு) விரும்பிம்படி பொழுது போக்குவர்.

விளக்கம் : வெள்ளையானைக்கு நான்கு கோடுகள் உண்டு. வெள்ளை யானையை முகிலுடன் பொருமாறு விடுத்து விளையாடுவர். ( 209 )

2808. கடிகைவா ளார மின்னக்
கற்பகக் காவு கண்டுந்
தொடிகவி னறாத மென்றோட்
டேவியர் சூழ வாம
னடிகையிற் றொழுது பூத்தூ
யஞ்சலி செய்து வீடே
முடிகவிப் பிறவி வேண்டே
முனைவவென் றிரப்ப வன்றே.

பொருள் : கற்பகக் காவு கண்டும் - (இங்ஙனம்) கற்பகக் காவில் இன்பங் கண்டாலும்; தொடிகவின் அறாத மென்தோள் தேவியர் சூழ - வளையணிந்த அழகு மாறாத மெல்லிய தோள்களையுடைய, தேவியர் சூழ; கடிகை வாள் ஆரம்மின்ன - தோள் வளையும் ஒளிதரும் ஆரமும் மின்னிச் (சென்று); வாமன் அடி கையின் தொழுது - அருகன் அடியைக் கையாலே கும்பிட்டு; பூத்தூய் அஞ்சலி செய்து - மலரிட்டு மறுபடியும் கைகூப்பி; முனைவ! - முன்னவனே!; இப்பிறவி வேண்டேம் - இவ்வானவர் கதி வேண்டா; வீடே முடிக - வீடே எமக்குக் கிடைப்பதாகுக; என்று இரப்ப - என்று வேண்டுவர்.

விளக்கம் : கடிகை. தோள்வளை. காவு - சோலை. வாமன் - அருகக் கடவுள். தூய் - தூவி. அஞ்சலி செய்து - வணங்கி. வீடே என்புழி ஏகாரம் பிரிநிலை. முனைவ : விளி. அன்றும் ஏயும் அசைகள். ( 210 )

2809. மலங்குவித் தாவி வாட்டி
வாய்நிறை யமிர்தம் பெய்த
விலங்குபொற் கலச மன்ன
வெரிமணி முலைகள் பாயக்
கலந்தனர் சென்ற பின்னாட்
கதிர்கழன் றிருந்த வெய்யோன்
புலம்புபோற் புலம்பித் தேவர்
பொற்புகுத் திருப்ப வன்றே.

பொருள் : வாய் நிறை அமிர்தம் பெய்த இலங்கு பொன் கலசம் அன்ன எரிமணி முலைகள் - வாயளவும் நிறைய அமிர்தம் பெய்த விளங்கும் பொற்கலசம் போன்ற, ஒளிவிடும் மணிகள் அணிந்த முலைகள்; மலங்குவித்து ஆவி வாட்டிப் பாய - மயக்குறுத்தி உயிரை வாட்டிப் பாய்தலினாலே; கலந்தனர் சென்ற பின்னாள் - கலந்து சென்ற பின்னாளிலே; கதிர் கழன்று இருந்த வெய்யோன் புலம்புபோல் - ஒளியை இழந்து நின்ற ஞாயிற்றின் வருத்தம்போல; தேவர் புலம்பிப் பொற்பு உகுத்து இருப்ப - வானவர் வருந்திப்பொலிவைப் போக்கி இருப்பர்.

விளக்கம் : மலம் குவித்து ஆவி வாட்டி - பற்று ஆர்வம் செற்றம் முதலிய மலங்களைத் திரட்டித் தமக்குள்ள ஆயுளை அவமே போக்கி - எனலுமாம். ( 211 )

2810. எல்லைமூ வைந்து நாள்க
ளுளவென விமைக்குங் கண்ணு
நல்லெழின் மாலை வாடு
நஞ்சுடை யமிர்துண் டாரிற்
பல்பகற் றுய்த்த வின்பம்
பழுதெனக் கவல்ப கண்டாய்
பில்கித்தே னொழுகும் பைந்தார்ப்
பெருநில வேந்தர் வேந்தே.

பொருள் : தேன் பில்கி ஒழுகும் பைந்தார்ப் பெருநில வேந்தர் வேந்தே! - தேன் துளித்து ஒழுகும் பசிய தாரணிந்த பெருநில மன்னருக்கும் மன்னனே!; எல்லை மூவைந்து நாட்கள் உள என - (அவர்கள் உயிர் நீங்கும்) எல்லை பதினைந்து நாட்கள் இருக்கின்றன என்னும்போது; கண்ணும் இமைக்கும் - கண்களும் இமைக்கும்; நல் எழில் மாலை வாடும் - நல்லழகுடைய மாலையும் வாடும்; நஞ்சு உடை அமிர்து உண்டாரின் - நஞ்சு கலந்த அமிர்தம் உண்டவரைப்போல; பல்பகல் துய்த்த இன்பம் பழுதுஎனக் கவல்ப கண்டாய் - பல நாளும் தாங்கள் நுகர்ந்த இன்பம் குற்றமுடையது என்று வருந்துவர்காண்.

விளக்கம் : தம் காலத்தை வறிதே கழித்ததாக எண்ணி வருந்துவர். எல்லை - அப்பிறப்பு ஒழிதற்குரிய எல்லை. கண்ணும் இமைக்கும் என்க. மாலையும் வாடும் எனல்வேண்டிய உம்மை தொக்கது : செய்யுள் விகாரம். கவல்ப - கவலையடைவர். ( 212 )

2811. தேவரே தாமு மாகித்
தேவராற் றொழிக்கப் பட்டு
மேவல்செய் திறைஞ்சிக் கேட்டு
மணிகமாப் பணிகள் செய்து
நோவது பெரிதுந் துன்ப
நோயினுட் பிறத்த றுன்பம்
யாவதுந் துன்ப மன்னா
யாக்கைகொண் டவர்கட் கென்றான்.

பொருள் : தாமும் தேவரே ஆகி - தாமும் தேவரேயாயிருந்தும்; தேவரால் தொழிக்கப்பட்டும் - வேறு தேவராலே வெகுளப்பட்டும்; இறைஞ்சிக்கேட்டு ஏவல் செய்தும் - வணங்கிக் கேட்டுப் பணிபுரிந்தும்; அணிகம் மாப்பணிகள் செய்தும் - அணிகலங்களிலே பெரிய அணிகளைச் செய்து கொடுத்தும்; நோவது பெரிதும் துன்பம் - வருந்துவது பெரிய துன்பம்; நோயினுள் பிறத்தல் துன்பம் - நோயைத் தரும் மக்களாயும் விலங்காயும் பிறத்தலும் துன்பம்; மன்னா! - அரசே!; யாவதும் யாக்கை கொண்டவர்கட்குத் துன்பம் என்றான் - எந்த உடம்பெடுத்தவர்கட்கும் துன்பமே என்றான்.

விளக்கம் : அணிதிரிந்து அணிகம் ஆயிற்று. பணிகள் செய்வார் : மயன் முதலியோர். நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழை (முருகு.18) என்றார் பிறரும். இனி, ஊர்திகளாகிப் பணிகள் செய்தும் என்பாருமுளர்; வாகன தேவதைகளாகி என்பதாம். அணிகம் - ஊர்தி. ( 213 )

14. நற்காட்சி

வேறு

2812. கொங்கு விம்மு குளிர்பிண்டிக்
குழவி ஞாயிற் றெழிலேய்ப்பச்
சிங்கஞ் சுமந்த மணியணைமேற்
றேவ ரேத்திச் சிறப்பயர
வெங்கு முலக மிருணீங்க
விருந்த வெந்தை பெருமானார்
தங்கு செந்தா மரையடியென்
றலைய வேயென் றலையவே.

பொருள் : கொங்கு விம்மு குளிர் பிண்டி - மணம் விரியும் தண்ணிய அசோகின் நிழலிலே; சிங்கம் சுமந்த மணி அணைமேல் - சிங்கத்தாற் சுமக்கப்பட்ட மாணிக்க அணையின் மேலே; தேவர் ஏத்திச் சிறப்பு அயர - வானவர் வாழ்த்திச் சிறப்புச் செய்ய; குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்ப - இளஞாயிற்றின் அழகு போல; உலகம் எங்கும் இருள் நீங்க - உலகெங்கும் பொருந்திய இருள் விலக; இருந்த எந்தை பெருமானார் - வீற்றிருந்த எந்தையாகிய பெருமானாரின்; செந்தாமரை தங்கு அடி - செந்தாமரையின்மேல் தங்கின திருவடிகள்; என் தலையவே என் தலையவே - என் தலையிடத்தனவே, என் தலையிடத்தனவே;

விளக்கம் : அடுக்கு விரைவுப் பொருட்டு. இருள் - பிற தெய்வங்களைத் தெய்வம் எனக் கருதுதல். ( 214 )

2813. இலங்கு செம்பொ னெயின் மூன்று
மெரிபொன் முத்தக் குடைமூன்றும்
வலங்கொண் டலர்தூஉ யடியேத்தும்
வைய மூன்றும் படைமூன்றும்
கலங்கா துயர்ந்த வதிசயங்கண்
மூன்றுங் காமர் நூன்மூன்று
நலங்கொ டீம்பாற் குணக்கடலு
முடையார் நம்மை யுடையாரே.

பொருள் : இலங்கு செம்பொன் எயில் மூன்றும் - விளக்கமுடைய பொன் மதில் மூன்றும்; எரி பொன் முத்தக் குடை மூன்றும் - பொன்னாலாகிய, முத்துக்கள் இழைத்த குடைகள் மூன்றும்; வலம் கொண்டு அலர்தூய் அடி ஏத்தும் வையம் மூன்றும் - வலமாக வந்து மலரையிட்டுத் திருவடிகளை வணங்குகின்ற உலகம் மூன்றும்; படை மூன்றும் - படைக்கலன்கள் மூன்றும்; கலங்காது உயர்ந்த அதிசயங்கள் மூன்றும் - கலக்கமின்றி மேம்பட்ட அதிசயங்கள் மூன்றும்; காமர் நூல் மூன்றும் - விருப்பந்தரும் ஆகமங்கள் மூன்றும்; நலம் கொள் தீம்பால் குணக்கடலும் - நலந்தருகின்ற இனிய பாலாகிய குணக்கடலும்; உடையார் நம்மை உடையார் - இயற்கையாக உடையவர் நம்மை யுடையராவார்.

விளக்கம் : எயின்மூன்றாவன : உதயதரம், பிரிதிதரம், கல்யாணதரம் என்க; குடைமூன்றாவன : சந்திராதித்தியம், நித்தியவினோதம், சகலபாசனம் என்க; உலகம் மூன்றாவன. நாகலோகம், பூலோகம், சுவர்க்கலோகம் என்க; படைமூன்றாவன; இரத்தினத்திரயம்; அவை : நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்க. அதிசயம்மூன்றாவன; சகசாதிசயம் கர்மக்ஷயாதிசயம் தெய்விகாதிசயம். நூன்மூன்றாவன : அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம். குணக்கடல் - அனந்தஞானம் முதலியகுணங்கள். ( 215 )

2814. மன்ற னாறு மணிமுடிமேன்
மலிந்த சூளா மணிபோலும்
வென்றோர் பெருமா னறவாழி
வேந்தன் விரிபூந் தாமரைமேற்
சென்ற திருவா ரடியேத்தித்
தெளியும் பொருள்க ளோரைந்து
மன்றி யாறு மொன்பானு
மாகு மென்பா ரறவோரே.

பொருள் : மன்றல் நாறும் அணிமுடிமேல் - மணங்கமழும் அழகிய முடியின்மேல் (அணிந்த); மலிந்த சூளாமணிபோலும் - நிறைந்த முடிமணி போலும்; வென்றோர் பெருமான் - முனிவர் தலைவனும்; அறவாழி வேந்தன் - அறக்கடலாகிய வேந்தனும் ஆகிய அருகனின்; விரி பூந்தாமரை மேல் சென்ற திருஆர் அடி ஏத்தி - மலர்ந்த தாமரை மலர்மேற் சென்ற அழகு நிறைந்த அடியை வணங்கி; தெளியும் பொருள்கள் - தெளிகின்ற பொருள்கள்; ஓரைந்தும் அன்றி ஆறும் ஒன்பானும் ஆகும் என்பார் அறவோர் - ஐந்தும் ஆறும் ஒன்பதும் என்று அறவோர் உரைப்பர்.

விளக்கம் : ஐந்து : சீவம், புற்கலம், தருமம், அதருமம், ஆகாசம் இவற்றுடன் காலஞ்சேர ஆறாம். ஒன்பது : சீவம், ஆசீவம், புண்ணியம், பாவம், ஆஸரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோட்சம் என்பவை. ( 216 )

2815. பெரிய வின்பத் திந்திரனும்
பெட்ட செய்கைச் சிறுகுரங்கு
முரிய செய்கை வினைப்பயத்தை
யுண்ணு மெனவே யுணர்ந்தவனை
யரிய ரென்ன மகிழாது
மெளிய ரென்ன விகழாது
மிருசார் வினையுந் தெளிந்தாரே
யிறைவ னூலுந் தெளிந்தாரே.

பொருள் : செய்கை உரிய வினைப்பயத்தை - தம் செயலால் தமக்கு உரியவாகிய இருவினையின் பயனை; பெரிய இன்பத்து இந்திரனும் - மிகுதியான இன்பத்தையுடைய இந்திரனும்; பெட்ட செய்கைச் சிறு குரங்கும் - விரும்பிய செய்கையுடைய சிறிய குரங்கும்; உண்ணும் எனவே உணர்ந்து - நுகரும் என்றே உணர்ந்து; அரியர் என்ன அவனை மகிழாதும் - பிறர் இந்நிலை எய்துதற்கு அரியர் என்று வியந்து இந்திரனை மகிழாமலும்; எளியர் என்ன இகழாதும் - பிறர் இந்நிலை எய்துதற்கு எளியர் என்று வெறுத்துக் குரங்கை இகழாமலும்; இருசார் வினையும் தெளிந்தாரே - நல்வினை தீவினைகளின் தன்மை இத்தன்மைத்தென்று தெளிந்தவரே; இறைவன் நூலும் தெளிந்தாரே - இறைவனுடைய பரமாகமத்தையும் தெளிந்தவராவர்.

விளக்கம் : பரமாகமம் : அங்காகமம் பன்னிரண்டும், பூர்வாகமம் பதினாலும், பகுசுருதியாகமம் பதினாறும் ஆகிய நாற்பத்திரண்டும். இச்செய்யுட் கருத்தோடு,

திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

எனவரும் கணியன்பூங்குன்றனார் மெய்ம்மொழி நினையற்பாலது. ( 217 )

2816. உறுவர்ப் பேண லுவர்ப்பின்மை
யுலையா வின்பந் தலைநிற்ற
லறிவர் சிறப்பிற் கெதிர்விரும்ப
லழிந்தோர் நிறுத்த லறம்பகர்தல்
சிறியா ரினத்துச் சேர்வின்மை
சினங்கை விடுதல் செருக்கவித்த
லிறைவ னறத்து ளார்க்கெல்லா
மினிய ராத லிதுதெளிவே

பொருள் : உறுவர்ப் பேணல் - மிக்கோரை விரும்புதல்; உவர்ப்பு இன்மை - வெறுப்பு இல்லாமை ; உலையா இன்பம் தலை நிற்றல் - கெடாத இன்பமாகிய வீட்டை அடையுங் கருத்துத் தம்மிடத்தே நிற்றல்; அறிவர் சிறப்பிற்கு எதிர் விரும்பல் - அறிவற்குச் செய்யும் வழிபாட்டிற்கு எதிர் விரும்புதல்; அழிந்தோர் நிறுத்தல் - கெட்டோரைப் பழைய நிலையிலே நிறுத்தல்; அறம் பகர்தல் - அறத்தைக் கூறுதல்; சிறியார் இனத்துச் சேர்வு இன்மை - இழிந்தோர் குழுவிலே சேராதிருத்தல்; சினம் கை விடுதல் - சினத்தை நீக்குதல்; செருக்கு அவித்தல் - செருக்கைப் போக்குதல்; இறைவன் அறத்துளார்க்கு எல்லாம் இனியர் ஆதல் - அருகன் அறத்திலே ஈடுபட்டார்க்கெல்லாம் இனியராக நடத்தல்; இது தெளிவு - இத்தன்மையே பரமாகமப் பொருளைத் தெளிந்த தெளிவாகும்.

விளக்கம் : உறுவர் - மிக்கோர்; உறு - மிகுதி : உரிச்சொல். உவர்ப்பு - வெறுப்பு. அழிந்தோர் - கெட்டவர். பகர்தல் - கூறுதல். சிறியார் - கயமாக்கள். இறைவனறம் - அருகன் அறம். ( 218 )

2817. செறியச் சொன்ன பொருடெளிந்தார்
சேரார் விலங்கிற் பெண்ணாகார்
குறுகார் நரக மோரேழுங்
கீழ்முத் தேவர் குழாந்தீண்டா
ரறியா துரைத்தே னதுநிற்க
வாறே நரக மாகாத
பொறியார் போக பூமியுள்
விலங்குமாவ ரொரு சாரார்.

பொருள் : சொன்ன பொருள் செறியத் தெளிந்தார் - யான் கூறிய பொருளைச் செறிவுறத் தெளிந்தவர்கள்; விலங்கிற் சேரார் - விலங்கொடு கூடார்; பெண் ஆகார் - பெண்ணாகமாட்டார்; நரகம் ஓர் ஏழும் குறுகார் - நரகம் ஏழினையும் அடையார்; கீழ் முத்தேவர் குழாம் தீண்டார் - கீழான முத்தேவர் திரளைத் தொடார்; அறியாது உரைத்தேன் - நரகம் ஏழென அறியாமற் கூறினேன்; அது நிற்க - அது கிடக்க; ஆறே நரகம் ஆகாத - ஆறு நரகங்களே ஆகாதவை; பொறி ஆர் போக பூமியுள் விலங்கும் ஒரு சாரார் ஆவர் - நல்வினை நிறைந்த போகபூமியிலே விலங்காகவும் ஒரு சாரார் பிறப்பர் (அதனால் ஆறே நரகம்).

விளக்கம் : நரகம் ஏழாவன; இரத்தினப்பிரபை, சருக்கராப்பிரபை, வாலுகாப்பிரபை, பங்கப் பிரபை, தூமப்பிரபை, தமப்பிரபை, தமத்தமப்பிரபை என இவை, கீழ் முத் தேவராவார் : பவணர், வியந்தரர், ஜ்யோதிஷ்கர், ஆகாத நரகம் ஆறே என்றது முன்பே நரகாயுஷ்யம் கட்டின பின்பு தரிசனங் கொண்டவர், முதல் நரகத்திலே முதற் புரையிலே நரகராயும், விலங்காயுஷ்யம் கட்டின பின்பு தரிசனங்கொண்டவர் போக பூமியிலே விலங்காயும் பிறப்பர் என்றதென்க. ( 219 )

15 சீலம்

வேறு

2818. ஏத்தருந் திருமணி யிலங்கு நீர்மைய
கோத்தன போற்குண நூற்றுக் கோடியுங்
காத்தன காவல பதினெண் ணாயிரம்
பாத்தன பண்ணவர் சீல மென்பவே.

பொருள் : காவல! - அரசனே!; இலங்கும் நீர்மைய - விளங்குந் தன்மையவாகிய; ஏந்தருந் திருமணி கோத்தன போல் - புகழ்தற்கரிய திருமணியைக் கோத்தன போன்ற; பாத்தன குணம் - எண்பத்து நான்கு நூறாயிரமாகப் பகுக்கப் பட்டனவாகிய குணவிரதங்களும்; நூற்றுக்கோடியும் - நூற்றுக் கோடி மகா விரதங்களும்; பதினெண்ணாயிரம் சீலம் - பதினெட்டாயிரம் சீலாசாரங்களும்; பண்ணவர் பாத்தன - பண்ணவராற் காக்கப்பட்டன.

விளக்கம் : என்ப, ஏ : அசைகள். ஏத்து - புகழ்தல், குணம் - குணவிரதம், பாத்தன - பகுக்கப்பட்டன. காவல : விளி. பண்ணவர் - என்றது துறவியரை. இதிற் கூறப்பட்டவை துறவிகட்குரிய நாட்கடன்கள் என்க. ( 220 )

2819. மொய்யமர் ஞாட்பினுண் முரண்கொண் மன்னவர்
மெய்புகு பொன்னணி கவச மொப்பன
மையலைம் பொறிமதம் வாட்டி வைகலுஞ்
செய்வினை நுணுக்குவ சீல மென்பவே.

பொருள் : சீலம் என்ப - (அவற்றுள்) சீலமெனப்படுவன; மொய் அமர் ஞாட்பினுள் - வலிமை மேவின போரிலே; முரண் கொள் மன்னவர் - மாறுகொண்ட வேந்தர்களின்; மெய்புகு பொன் அணி கவசம் ஒப்பன - மெய் சென்று மறையும் பொன்னாலாகிய கவசத்தை ஒப்பனவாய்; வைகலும் - நாடோறும்; மையல் ஐம்பொறி மதம் வாட்டி - உண்ணின்று மயக்கமூட்டும் ஐம்பொறியின் செருக்கையும் வாட்டி; செய்வினை நுணுக்குவ - புறத்துச் செய்யும் தீவினையையும் குறைப்பன.

விளக்கம் : மொய் - வலிமை. ஞாட்பு - போர். முரண் - பகைமை. மையல் - மயக்கம். ஐம்பொறி - மெய்வாய்கண் மூக்குச்செவி. வினை - ஈண்டுத் தீவினை. சீலங்கள் தீவினையைத் தேய்ப்பனவாம் என்பதாம். ( 221 )

2820. மணித்துண ரனையதங் குஞ்சி வண்கையாற்
பணித்தனர் பறித்தலிற் பரவை மாநிலந்
துணித்தொரு துணிசுமந் தனைய திண்பொறை
யணித்தகு முடியினா யாதி யாகவே.

பொருள் : அணித்தகு முடியினாய்! - அழகிய முடியுடையாய்! மணித்துணர் அனைய - நீலமணியின் கொத்துப் போன்ற; தம் குஞ்சி - தம் சிகையை; வண்கையாற் பறித்தலின் - தம் கையாற் பறித்துக் கொள்வதால்; பரவை மாநிலம் துணித்து - பரப்புடைய இம் மாநிலத்தை இருகூறாக்கி; ஒரு துணி சுமந்த அனைய திண்பொறை - ஒரு கூற்றைச் சுமந்தாற் போன்ற இத்திண்ணிய பொறுமையை; ஆதி ஆகவே பணித்தனர் - முதன்மையாகவே பணித்தார்கள்.

விளக்கம் : ஒரு துணியோடு உவமித்தலின், ஏனைய ஒரு கூறும் இஃது ஒரு கூறுமாகக் கூறினான், அருமையால் என்றுணர்க, மணித்துணர் அனைய குஞ்சி என்பதை, மணியனைய துணர்க்குஞ்சி என்று மாற்றுவர் நச்சினார்க்கினியர். ( 222 )

வேறு

2821. பெரியவாட் டடங்கட் செவ்வாய்ப்
பிறர்மனை பிழைக்கு மாந்தர்
மாபுஇயவாய்ப் புறஞ்சொற் கூர்முண்
மத்திகைப் புடையு மன்றி
யொருவர்வா யுமிழப் பட்ட
தம்பல மொருவர் வாய்க்கொண்
டரியவை செய்ப வையத்
தாண்பிறந் தார்க ளன்றே.

பொருள் : பெரிய வாள் தடங்கண் செவ்வாய்ப் பிறர்மனை அவாய் மெரீஇ பிழைக்கும் மாந்தர் - பெரிய வாளனைய தடங்கண்களையும் செவ்வாயையும் உடைய பிறர் தாரத்தை விரும்பி அவரைக் கூடி ஒழுக்கந் தவறும் மக்கள்; புறஞ்சொல் கூர்முள் மத்திகைப் புடையும் அன்றி - (இம்மையிலே) புறஞ்சொல்லாகிய கூரிய முள்ளையுடைய சவுக்கால் அடிபெறுதலே அன்றி; ஒருவர் வாய் உமிழப்பட்ட தம்பலம் ஒருவர் வாய்க்கொண்டு - (அவளை முன்னர் நுகர்ந்த) ஒருவர் அவள் வாயிலே உமிழப்பட்ட தம்பலத்தைப் (பின்னர் நுகர்வார்) ஒருவராகிய தம் வாயிலே கொண்டு;அரியவை செய்ப - (இங்ஙனம்) அரியவற்றைச் செய்வார்கள்; வையத்து ஆண் பிறந்தார்கள் அன்று - (இவர்கள்) உலகிலே ஆண் மக்களாய்ப் பிறந்தவர்களன்று.

விளக்கம் : இச் செய்யுள், இல்லறம் புரிவார்க்குரிய விரதங்களுட் காத்தல் அரிது என்று இதனைக் கூறியது. பிறன்மனை நோக்காத பேராண்மை (குறள்.148) என்று வள்ளுவர் கூறியது காண்க. ( 223 )

2822. ஒழுக்கமே யன்றித் தங்க
ளுள்ளுணர் வழிக்கு மட்டும்
புழுப்பயி றேனு மன்றிப்
பிறவற்றின் புண்ணு மாந்தி
விழுப்பய னிழக்கு மாந்தர்
வெறுவிலங் கென்று மிக்கார்
பழித்தன வொழித்தல் சீலம்
பார்மிசை யவர்கட் கென்றான்.

பொருள் : பார் மிசையவர்கட்கு - உலகில் அறம்புரிவார்க்கு; ஒழுக்கமே அன்றித் தங்கள் உள் உணர்வு அழிக்கும் மட்டும் - ஒழுக்கத்தைக் கெடுத்தலே அன்றித் தங்களுடைய மனவுணர்ச்சியைக் கெடுக்கின்ற கள்ளையும்; புழுப் பயில் தேனும் - புழுப்பயின்ற தேனையும்; அன்றி - அல்லாமல்; பிறவற்றின் புண்ணும் மாந்தி - பிறவுயிர்களின் புண்ணாகிய தசைகளையும் உண்டு; விழுப்பயன் இழக்கும் மாந்தர் - சிறந்த வீடுபேற்றினை இழக்கும் மக்கள்; வெறுவிலங்கு என்று - வீணான விலங்கு போல்வர் என்று; மிக்கார் பழித்தன ஒழித்தல் சீலம் - பெரியோர் பழித்தவற்றை நீக்குதல் சீலமாகும்.

விளக்கம் : ஒழுக்கத்தைக் கெடுத்தலே அன்றி என்க. உள்உணர்வு - உள்ளத்தின் கண்ணதாகிய உணர்ச்சி என்க. தேனின் இழிவு தெரிப்பார் புழுப்பயில்தேன் என்றார். உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின்  என்றார் வள்ளுவனாரும், (257). மழித்தலு நீட்டலும் வேண்டாவுலகம் பழித்த தொழித்து விடின் என்ற திருக்குறளும் (280) ஈண்டு நினைக்கப்படும். ( 224 )

16. தானம்

2823. நன்னிலத் திட்ட வித்தி
னயம்வர விளைந்து செல்வம்
பின்னிலம் பெருக வீனும்
பெறலருங் கொடையும் பேசிற்
புன்னிலத் திட்ட வித்திற்
புற்கென விளைந்து போக
மின்னெனத் துறக்குந் தானத்
தியற்கையும் விரித்து மன்றே.

பொருள் : நல் நிலத்து இட்டவித்தின் - நல்ல நிலத்திலே விதைத்த விலைபோல; நயம்வர விளைந்து - விருப்பம் உண்டாக விளைந்து; பின் நிலம் பெருகச் செல்வம் ஈனும் - பிறகு, உலகிலே பெருகும்படி செல்வத்தைத் தருகின்ற; பெறல் அருங் கொடையும் - பெறுதற்கரிய தலைமை பெற்ற கொடையின் இயற்கையையும்; பேசின் - கூறுமளவில்; புல் நிலத்து இட்ட வித்தின் - பொல்லா நிலத்திலே விதைத்த விதைபோல; புற்கென விளைந்து - பொல்லாததாக விளைந்து போகம் மின் எனத் துறக்கும் - இன்பம் நிலைத்து நில்லாமல் மின்போலத் தோன்றி மாய்கின்ற; தானத்து இயற்கையும் - இடைப்பட்ட தானத்தின் இயற்கையையும்; விரித்தும் - (இனி) விரித்துக் கூறுவோம்.

விளக்கம் : உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந்தா அங்கறப்பயனுந்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்

வான்சிறிதாப் போர்த்து விடும் என்றார் நாலடியினும் (38) ( 225 )

2824. ஐவகைப் பொறியும் வாட்டி
யாமையி னடங்கி யைந்தின்
மெய்வகை தெரியுஞ் சிந்தை
விளக்குநின் றெரிய விட்டுப்
பொய்கொலை களவு காம
மவாவிருள் புகாது போற்றிச்
செய்தவ நுனித்த சீலக்
கனைகதிர்த் திங்க ளொப்பார்.

பொருள் : ஐவகைப் பொறியும் வாட்டி - ஐந்து பொறிகளையும் வருத்தி; ஆமையின் அடங்கி - ஆமைபோல அடங்கி;ஐந்தின் மெய்வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டு - சீவபுற்கலம் முதலிய ஐந்தின் உண்மை வகையினை ஆராய்கின்ற சிந்தையாகிய விளக்கை அவியாமல் எரியவிட்டு; பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றி - பொய்யும் கொலையும் களவும் காமமும் ஆசையுமாகிய இருள் புகாமல் தடுத்து; செய்தவம் நுனித்த சீலக் கனை கதிர்த் திங்கள் ஒப்பார் - செய்கின்ற தவத்தைக் கூர்க்க நிகழ்த்தின சீலமாகிய கதிரினையுடைய திங்களைப் போன்றவராய்,

விளக்கம் : இப் பாட்டு முதல் நான்கு பாட்டுக்கள் வரை ஒரு தொடர். ஒருமையு ளாமைபோல் ஐந்தடக்க லாற்றின் என்றார் வள்ளுவனாரும். ஐந்து - சீவபுற்கலமுதலியன. சிந்தையாகிய விளக்கு என்க. பொய் முதலிய நான்கிருளும் புகாது என்க. கனைகதிர் - மிக்க கதிர். ( 226 )

2825. வாய்ச்சிவா யுறுத்தி மாந்தர்
மயிர்தொறுஞ் செத்தி னாலும்
பூச்சுறு சாந்த மேந்திப்
புகழ்ந்தடி பணிந்த போதுந்
தூக்கியிவ் விரண்டு நோக்கித்
தொல்வினை யென்று தேறி
நாச்செறு பராவு கொள்ளார்
நமர்பிற ரென்று முள்ளார்.

பொருள் : மாந்தர் வாய்ச்சிவாய் உறுத்தி - மாந்தர்கள் வாய்ச்சியினது வாயைச் சேர்த்து; மயிர்தொறும் செத்தினாலும் - மயிர்க்கால் தோறும் செதுக்கினாலும்; பூச்சுறு சாந்தம் ஏந்திப் புகழ்ந்து அடிபணிந்த போதும் - பூசுதற்குரிய சந்தனத்தை ஏந்தி நின்று புகழ்ந்து அடியில் வணங்கினாலும்; இவ்விரண்டும் தூக்கி நோக்கி - இவ்விரண்டினையும் ஒப்பிட்டு நோக்கி; தொல் வினை என்று தேறி - ஊழ்வினை என்று தெளிந்து; நாச்செறுபராவு கொள்ளார் - நாவாற் பழித்தலையும் புகழ்தலையும் கொள்ளாமல்; நமர் பிறர் என்றும் உள்ளார் - (அவர்களையும்) நம்மவரென்றோ பகையாளரென்றோ நினையாதவராய்,

விளக்கம் : இதனுடன் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் வழிமுறையாற் கூறிய மெய்ப்பாடு முப்பத்திரண்டினுள் மூன்றாம் நிலைக் கண் வரும் நடுவுநிலைக்கு மேற்கோளாகச் செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந்து ஓடாமை எனவரும் பேராசிரியர் உரையை நினைக. (தொல், மெய்ப்-12). ( 227 )

2826. பாற்கதிர்த் திங்கட் கொட்பிற்
பருமித்த களிறு போல
நூற்கதி கொண்டு கண்ணா
னுகத்தள வெல்லை நோக்கி
மேற்கதிக் கேணி யாய
விழுத்தவர் மனையில் வந்தாற்
காற்கொசி கொம்பு போலக்
கைதொழு திறைஞ்சி மாதோ.

பொருள் : பால்கதிர் திங்கள் கொட்பின் - பாலனைய கதிரையுடைய திங்கள் (எல்லா மீன்களையும் அளித்தற்குச்) சுழலும் சுழற்சிபோலே; பருமித்த களிறுபோல - (எல்லாரையும் அளித்தற்குப்) பலதார் அணிந்த களிறு அடங்கி மெத்தென நடக்குமாறுபோல; நூல் கதி கொண்டு - ஆகமத்திற் கூறிய வழியை உட்கொண்டு; மேல்கதிக்கு ஏணி ஆய விழுத்தவர் - வீட்டு நெறிக்கு ஏணியாகிய சிறந்த தவத்தினர்; கண்ணால் நுகத்தளவு எல்லை நோக்கி - கண்ணால் நுகத்தளவாகிய எல்லையை நோக்கி; மனையில் வந்தால் - மனையிடத்து வந்தால்; காற்கு ஒசி கொம்பு போலக் கைதொழுது இறைஞ்சி - காற்றுக்கு நுடங்கும் மலர்க் கொம்புபோல (நிலமிசை விழுந்து) கையினால் தொழுது வணங்கி,

விளக்கம் : கொட்பு - சுழற்சி. பருமித்த - அணிசெய்யப்பட்ட. நூல் - ஆகமம். நுகம் - நுகத்தடி. விழுத்தவர் - சிறந்த துறவிகள். ஏணிதவத்திற்குவமை. காற்கு - காலுக்கு; கால் - காற்று. ( 228 )

2827. தொடிக்கையாற் றொழுது வாழ்த்தித்
தூமணி நிலத்து ளேற்றிப்
பொடிப்புனை துகிலி னீக்கிப்
புகழ்ந்தடி கழீஇய பின்றை
யடுத்தசாந் தகிலி னாவி
யாய்மல ரருச்சித் தானார்
கொடுப்பர்நா லமிர்த மூன்றிற்
குணம்புரிந் தடங்கி னார்க்கே.

பொருள் : தொடிக் கையால் தொழுது வாழ்த்தி - (எழுந்து) வளையணிந்த கையால் மறுமுறையும் வணங்கிப் போற்றி; தூமணி நிலத்துள் ஏற்றி - தூய மணி நிலத்தே இருத்தி; அடிபொடிப் புனை துகிலின் நீக்கி - அவரடியின் துகளைத் துணியால் துடைத்து; புகழ்ந்து கழீஇய பின்றை - புகழுமாறு கழுவிய பிறகு; அடுத்த சாந்து அகிலின் ஆவி ஆய்மலர் அருச்சித்து - பொருந்தின சந்தனமும் அகிற்புகையும் ஆராய்ந்த மலரும் ஆகியவற்றால் அருச்சித்து; ஆனார் - அமையாராய்; குணம் புரிந்து அடங்கினார்க்கு - நற்பண்பை விரும்பி அடங்கிய அப் பெரியார்கட்கு; நால் அமிர்தம் மூன்றின் கொடுப்பர் - நால்வகை உணவை மனம் மொழி மெய்களின் தூய்மைப் பாட்டுடன் கொடுப்பர்.

விளக்கம் : நால்வகை : உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. மூன்று - நெஞ்சம் மொழி உடல் ஆகிய மூன்றும். ( 229 )

2828. ஒன்பது வகையி னோதிற் றுத்தமர்க் காகு மார்ந்த
வின்பத மருளி யீத லிடையென மொழிப யார்க்குந்
துன்புற விலங்கு கொன்று சொரிந்துசோ றூட்டினார்க்கு
நன்பொருள் வழங்கி னார்க்கும் பயனமக் கறிய லாகா.

பொருள் : ஒன்பது வகையின் ஓதிற்று உத்தமர்க்கு ஆகும் - ஒன்பது வகையினாற் கொடுக்க வேண்டுமென்று கூறியது உத்தமராயினார்க்காகும்; ஆர்ந்த இன்பதம் யார்க்கும் அருளி ஈதல் இடையென மொழிப - நிறைந்த இனிய சோற்றை யார்க்கும் அருளிக் கொடுத்தல் இடைப்பட்ட தானம் என்பர்; துன்பு உறவிலங்கு கொன்று சொரிந்து சோறூட்டினார்க்கும் - துன்பம் அடைய விலங்கைக் கொன்று கலந்து சோற்றை உண்பித்தார்க்கும்; நன்பொருள் வழங்கினார்க்கும் - அவர்கட்கு நல்ல பொருளைக் கொடுததவர்கட்கும்; பயன் நமக்கு அறியல் ஆகா - விளையும் தீவினைப் பயன்கள் நமக்கு அறிந்து கூறமுடியாது.

விளக்கம் : ஒன்பதாவன :

எதிர்கொளல் இடம்நனி காட்டல் கால்கழீஇ
அதிர்பட அருச்சனை அடியின் வீழ்தரல்
மதுரநன் மொழியொடு மனம்மெய் தூயராய்
உதிர்கநம் வினையென உண்டி ஏந்தினார்

என இவை. ( 230 )

17. தானப் பயன்

வேறு

2829. கூற்றுநா வலறுவ தனைய கூரிலை
யேற்றநீர்த் துளும்புவா ளிறைவ வீங்கினிப்
போற்றினை கேண்மதி பொருவில் புண்ணியர்க்
காற்றிய கொடைப்பய னறியக் கூறுவாம்.

பொருள் : அலறுவது கூற்று நா அனைய - கூப்பிடுவதாகிய கூற்றுவனின் நாவைப் போன்ற; கூர்இலை - கூரிய இலை போன்ற வடிவமுடைய; துளும்பும் நீர் ஏற்ற வாள் - (குடங்களில்) அசையும் நீரை (அரசர் சொரிய) ஏற்றுக் கொண்ட வாளை ஏந்திய; இறைவ! - அரசனே!; ஈங்கு இனி - இங்கு, இனிமேல்; பொருஇல் புண்ணியர்க்கு - ஒப்பற்ற நல்லோர்க்கு; ஆற்றிய கொடைப்பயன் அறியக் கூறுவாம் - செய்த கொடையின் பயனை நீயறியக் கூறுவேம்; போற்றினை கேள் - அதனைக் கருத்துடன் கேட்பாயாக.

விளக்கம் : அலறுவதாவது : தன் கொடுமை கூறிப் பலரையுங் கூப்பிடுதல். அலறுவதாகிய கூற்றுநா என்க. இது வேலினது இலைக்கு வினையும் வடிவமும் பற்றி வந்தவுவமை. ( 231 )

2830. கடிப்புவா ரங்குலி கொளீஇய கைதுரந்
தடுத்துவார் மயிர்த்துதி யலற வூதலிற்
பொடித்தபொற் றாமரை யனைய பொங்கழ
லிடைக்கிடந் தெவ்வள விரும்பு காய்ந்ததே.

பொருள் : கடிப்பு வார் அங்குலி கொளீஇய கை - விளிம்பிற் பிணித்த கடிப்பிற் சேர்த்த வாரை விரல் கோத்துக்கொண்ட கையாலே; அடுத்துத் துரந்து வார் மயிர்த்துதி அலற ஊதலின் - நெருக்கிச் செலுத்தி நீண்ட மயிரையுடைய தோலாலாகிய துருத்தியை ஓசை உண்டாக ஊதுவதால்; பொடித்த பொன்தாமரை அனைய பொங்கு அழலிடைக் கிடந்து - துகளாக்கிய பொற்றாமரை போன்ற பொங்கும் அழலிலே கிடத்தலால்; இரும்பு எவ்வளவு காய்ந்தது - இரும்பு எவ்வளவு காய்ந்ததாகும்?

விளக்கம் : கடிப்பு - துருத்தியின் உறுப்பினுளொன்று. அங்குலி - விரல். கொளீஇய - கோத்துக்கொண்ட. மயிர்த்துதி - மயிரையுடைய தோலாலாகிய துருத்தி. பொன்றாமரை - அழலுக்குவமை. தாமரை மலர்க்கு ஆகுபெயர். ( 232 )

2831. காய்ந்தவவ் வளவினாற் கௌவு நீரதொத்
தாய்ந்தறி கொடையின தளவிற் புண்ணியந்
தோய்ந்துயி ருடம்பிவ ணொழியத் தொக்கநாள்
வீந்துபோய் வயிற்றகம் விதியி னெய்துமே.

பொருள் : காய்ந்த அவ்வளவினால் கௌவும் நீரது ஒத்து - இரும்பு காய்ந்த அம்மிகுதிக்கேற்றவாறு உண்ணும் நீர்போல; ஆய்ந்து அறி கொடையினது அளவில் - ஆராய்ந்து தெளியும் கொடையின் அளவுக்கேற்றவாறு; புண்ணியம் உயிர் தோய்ந்து - புண்ணியத்தை உயிர் பெற்று; தொக்க நாள்வீந்து - தொகுத்த நாள் கழிந்தபின்; உடம்பு இவண் ஒழியப்போய் - உடம்பை இங்கே ஒழித்துப் போய்; வயிற்றகம் விதியின் எய்தும் - (போக பூமியிலே) ஒரு வயிற்றிலே முறைப்படி அடையும்.

விளக்கம் : நச்சினார்க்கினியர். உயிரென்றது மேல், இரும்பு போல வாம் பிணியுயிர் (சீவக. 3111) என்பதனால் ஈண்டு நரகத்திற் சேறற்குரிய இருப்புயிரைக் கூறிற்றாம் எனக் கொண்டு, இவ் விருப்புயிர். பல பிறப்பினும் தீவினையென்னும் தீயினுட்கிடந்து காய்ந்தே தீவினைப்பயனாகிய நீரை யுண்ணுதலைக் கெடுத்து, ஈண்டுச் செய்த நற்றானத்தினது அளவாலே உண்டான புண்ணிய நீரை உண்டுபோய்ப் போகபூமியிலே ஒரு வயிற்றகத்தே எய்தும், என்று தம் வழக்கப்படி சொற்களை மாற்றியமைத்துப் பொருள் கூறுவர். ( 233 )

2832. திங்கணா ளொன்பதும் வயிற்றிற் சேர்ந்தபின்
வங்கவான் றுகில்பொதி மணிசெய் பாவைபோ
லங்கவ ரிரட்டைக ளாகித் தோன்றலுஞ்
சிங்கினா ரிருமுது குரவ ரென்பவே.

பொருள் : வயிற்றில் ஒன்பது திங்கள் நாளும் சேர்ந்தபின் - (சேர்ந்த) வயிற்றிலே ஒன்பது திங்களுக்குரிய நாட்களெல்லாம் சேர்ந்திருந்த பிறகு; வங்கவான் துகில் பொதிமணி செய்பாவை போல் - மரக்கலத்திலிருந்து வந்த சிறந்த ஆடையாற் பொதியப் பெற்ற மணிப்பாவை அவ்வாடையினின்றும் புறப்பட்டாற்போல; அங்கு அவர் இரட்டைகள் ஆகித் தோன்றலும் - அவ்விடத்தில் (அவ்வுயிரையுடைய) அவர்கள் இரட்டைப் பிள்ளைகளாய்ப் பிறந்த அளவிலே; இதுமுது குரவர் சிங்கினார். இருமுது குரவராக அவர்களைத் தொடர்பு கொண்டவர்கள்,

விளக்கம் : இப் பாட்டுக் குளகம். ஒன்பது திங்கள் நாளும் என மாறுக. வங்கவான் துகில் - மரக்கலத்தின் வாயிலாய் வந்த சிறந்த ஆடை என்பதாம் . இது கருவினைப் பொதிந்துள்ள ஓர் உறுப்பிற்குவமை. மணிசெய்பாவை - மகவிற்குவமை. இரட்டை - இரட்டைப் பிள்ளைகள். சிங்கினார் : சிக்கினார் என்பதன் விகாரம். ( 234 )

2833. இற்றவர் தேவராய்ப் பிறப்ப வீண்டுடல்
பற்றிய விசும்பிடைப் பரவு மாமுகி
றெற்றென வீந்தெனச் சிதைந்து போகுமான்
மற்றவம் மக்கடம் வண்ணஞ் செப்புவாம்.

பொருள் : இற்று அவர் தேவராய்ப் பிறப்ப - இவ்வுடம்பு நீங்க, அவர்கள் வானவர்களாய்ப் பிறப்ப; ஈண்டு உடல் பற்றிய விசும்பிடைப் பரவும் மாமுகில் தெற்றென வீந்தென - ஈண்டிய உடல் வானிடைப் பரவும் பெரிய முகில் தெளிவாக மாயந்தாற் போல; சிதைந்து போகும் - அழிந்து போகும்; மற்ற அம்மக்கள் தம் வண்ணம் செப்புவாம் - இனி அம் மக்களின் வண்ணம் கூறுவாம்.

விளக்கம் : இச்செய்யுளும் உரையும் வேறு பிரதிகளில் கீழ்வருமாறு வேறுபட்டுள்ளன.

இற்றவர் தேவராய்ப் பிறப்ப வீண்டுடம்
பற்றமில் பறவைக ளடையக் கொண்டுபோய்ச்
சுற்றிய பாற்கடற் றுளும்ப விட்டிடும்
பொற்றிரள் வரையொடு மின்னுப் போலவே.

(பொருள்) சிக்கெனக் கொண்டு நின்றவர்கள் தம்முடம்பை நீத்துப் போய்த் தேவர்களாய்ப் பிறப்ப, வரையோடு கூடிய மின்னுப்போல ஈண்டிய வுடம்பைச் சில பறவைகள் எடுத்துக் கொண்டுபோய்ப் பாற்கடலிலே போகடு மென்றானென்க. இச்செய்யுளின் பாடபேதம் பலவென்ப. ( 235 )

2834. பிறந்தவக் குழவிகள் பிறர்கள் யாவரும்
புறந்தர லின்றியே வளர்ந்து செல்லுநா
ளறைந்தன ரொன்றிலா வைம்ப தாயிடை
நிறைந்தனர் கலைகுண முறுப்பு நீரவே.

பொருள் : பிறந்த அக் குழவிகள் - பிறந்த அப் பிள்ளைகள்; பிறர்கள் யாவரும் புறந்தரல் இன்றியே .- புறத்துள்ளார் ஒருவரும் போற்றுதல் இன்றியே; வளர்ந்து செல்லும் நாள் - வளர்ந்து போகும் நாட்கள்; ஒன்றிலா ஐம்பது ஆயிடை - நாற்பத்தொன்பது நாட்களிலே; உறுப்பு கலை குணம் நீர நிறைந்தனர் அறைந்தனர் - உறுப்புக்களும் கலையும் குணமும் நீர்மையுடையவாய் நிறைந்தனர் என்றும் ஆகமத்திலே கூறினர்.

விளக்கம் : குழவியென்னும் விரவுப் பெயரின் பின்வந்த கள்ளீறு ஈண்டு உயர்திணையை உணர்த்துதல், கடிசொல் இல்லை (தொல். எச்ச. 56) என்பதனாற் கொள்க. ( 236 )

வேறு

2835. சோலைமீ னரும்பித் திங்கட்
சுடரொடு பூத்த தேபோன்
மாலையுங் கலனு மீன்று
வடகமுந் துகிலு நான்று
காலையு மிரவு மில்லாக்
கற்பக மரத்தி னீழற்
பாலையாழ் மழலை வேறாய்ப்
பன்மணிக் கொம்பி னின்றாள்.

பொருள் : பாலையாழ் மழலை - பாலையாழ் போலும் மழலைச் சொல்லால்; சோலைமீனை அரும்பித் திங்கள் சுடரொடு பூத்ததே போல் - ஒரு சோலை விண்மீனை அரும்புவித்துத் திங்களை ஞாயிற்றுடன் பூத்ததைப் போல; மாலையும் கலனும் ஈன்று - மாலையும் அணிகலனையும் ஈன்று; வடகமும் துகிலும் நான்று - அத்தவாளம் என்னும் மேற் போர்வையும் ஆடையும் தொங்கி; காலையும் இரவும் இல்லாக் கற்பக மரத்தின் நீழல் - காலையும் இரவும் அறியாத கற்பக மரத்தின் நிழலிலே; வேறாய்ப் பன்மணிக் கொம்பின் நின்றாள் - தனியே பல மணிகள் கொண்ட கொம்பு போல நின்றனள்.

விளக்கம் : இரண்டு குழவிகளிலே ஒன்று ஆண்; மற்றொன்று பெண். பெண் இவ்வாறு நின்றாள். ( 237 )

2836. இலங்குபொற் குவடு சாந்த
மெழுதிய தனைய தோண்மே
னலங்கிளர் குழைக ணான்று
சாந்தின்வாய் நக்கி மின்னக்
கலங்கலந் தகன்ற மார்பிற்
கற்பக மாலை தாழ
விலங்கர சனைய காளை
வேனில்வேந் தென்னச் சேர்ந்தான்

பொருள் : விலங்கு அரசு அனைய காளை - (ஆண் குழவியாகிய) சிங்கம் போன்ற அக் காளைப் பருவத்தினன்; இலங்கு பொன் குவடு சாந்தம் எழுதியது அனைய தோள்மேல் - விளங்கும் பொன்மலையின் மேற் சந்தனம் எழுதியது போன்ற தோளின் மேல்; நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின்வாய் நக்கி மின்ன - அழகு விளங்குங் குழைகள் தொங்கிச் சாந்தைத் தடவிக்கொண்டு மின்ன; கலம் கலந்து அகன்ற மார்பில் கற்பகமாலை தாழ - அணிகலன் பொருந்தி விரிந்த மார்பிலே கற்பகமாலை தொங்க; வேனில் வேந்து என்னச் சென்றான் - காமன்போலச் சென்றனன்.

விளக்கம் : சாந்தம் எழுதிய பொற்குவடு அனைய தோள் என்றவாறு. நலம் - அழகு. கலம் - அணிகலன். விலங்கரசு - அரிமா. வேனில் வேந்தன். காமன். ( 238 )

2837. குண்டலங் குலவி மின்னப்
பொன்னரி மாலை தாழத்
தெண்கட லமிர்திற் செய்த
பாவையிற் பாவை நிற்ப
விண்டலர் மாலை மார்பன்
விதியினாற் சென்று மாதோ
கண்டனன் கலந்த வுள்ளங்
காதலி னொருவ ரானார்.

பொருள் : குண்டலம் குலவி மின்னப் பொன் அரிமாலை தாழ - குண்டலம் விளங்கி மின்னவும் பொன்னரிமாலை தொங்கவும்; தெண்கடல் அமிர்தின் செய்த பாவையின் பாவை நிற்ப - தெளிந்த கடலமிர்தினாலே செய்த பாவைபோல அப் பாவையாள் நிற்ப; விண்டு அலர்மாலை மார்பன் விதியினால் சென்று கண்டனன் - விரிந்து மலர்ந்த மாலையையுடைய மார்பன் ஊழாலே சென்று பார்த்தான்; உள்ளம் கலந்த - மனமிரண்டும் ஒன்றாய்க் கூடின; காதலின் ஒருவர் ஆனார் - அன்பினால் ஒரு மனத்தரானார்.

விளக்கம் : உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் என்பது குறள் (1106.) ( 239 )

2838. கொதிநுனைக் காம னம்பு
கொப்புளித் துமிழ்ந்து காம
மதுநிறை பெய்து விம்மு
மணிக்குட மிரண்டு போல
நுதிமுக முத்தஞ் சூடி
நோக்குந ராவி வாட்ட
விதிமுலை வெய்ய வாகித்
தாரொடு மிடைந்த வன்றே.

பொருள் : கொதி நுனைக் காமன் அம்பு காமம் கொப்புளித்து உமிழ்ந்து - கொதிக்கும் முனையையுடை காமன் அம்பு காமத்தைக் கொப்புளித்து உமிழ; மது நிறை பெய்து விம்மும் மணிக்குடம் இரண்டு போல - மது நிறையப் பெய்யப்பட்டு விம்முகின்ற இரண்டு மணிக்குடம் போல; நோக்குநர் ஆவிவாட்ட நுதிமுகம் முத்தம் சூடி - பார்ப்போர் உயிரை வாட்ட முனையுறும் முகத்தே முத்தை அணிந்து; முலை வெய்ய ஆகி - முலைகள் விருப்பூட்டுவனவாக; விதி தாரொடு மிடைந்த - ஊழினால் தாரொடு கலந்தன.

விளக்கம் : கொதிநுனை : வினைத்தொகை. உமிழ்ந்து - உமிழ. காமத்தைக் கொப்புளித்துக் கொதி நுனையையுடைய அம்பைக் காமன் சொரிய என்பர் நச்சினார்க்கினியர். பெய்து - பெய்யப்பட்டு. வாட்ட - வாட்டுதற்கு. விதியினாலே முலை தாரொடு மிடைந்த என்க. ( 240 )

2839. இமைத்தநுங் கண்க ளென்னை
யிகழ்ந்தனி ரென்று சீற
வமைத்துநின் னழகு கோல
மாரவுண் டறுக்க லாற்றா
திமைத்தன வஞ்சி யென்ன
விளையவள் சிலம்பிற் குஞ்சி
நமைத்தபூந் தாமந் தோய
நகைமுக விருந்து பெற்றான்.

பொருள் : நும் கண்கள் இமைத்த - உம் விழிகள் இமைத்தன; எம்மை இகழ்ந்தனிர் - (ஆகையால்) நீர் எம்மைப் பழித்தீர்; என்று சீற - என்று அவள் சினந்துரைக்க ; வஞ்சி - வஞ்சிக்கொடி போல்வாளே!; நின் அழகுகோலம் ஆர வுண்டு அமைத்து - நின் அழகையும் ஒப்பனையையும் நிறையப் பருகி அமைத்துக்கொண்டு; அறுக்கல் ஆற்றாது இமைத்தன என்ன - நீக்கமாட்டாமல் இமைத்தனகாண் என்று (இளையவன்) கூறி; இளையவள் சிலம்பில் குஞ்சி நமைத்த பூந்தாமம் தோய - அவள் சிலம்பிலே தன் குஞ்சியிற் சூட்டிய மலர்மாலை படும்படி வணங்கலாலே; நகைமுக விருந்து பெற்றான் - அவளது நகைமுகமாகிய விருந்தைப் பெற்றான்.

விளக்கம் : அமைத்து என்பதற்குப் பொறுத்து என்ற பொருள் கூறி, தாமந் தோய அமைத்து என்றும். வஞ்சி என்பதனை அஞ்சி எனப் பிரித்துச் சீற என்பதற்குப் பின், அவன் அஞ்சி, என்றும் கொண்டு கூட்டுவர் நச்சினார்க்கினியர், என்று கூற எனவும் பாடம்.
( 241 )

2840. இன்னகி லாவி விம்மு
மெழுநிலை மாடஞ் சேர்ந்தும்
பொன்மலர்க் காவு புக்கும்
புரிமணி வீணை யோர்த்து
நன்மலர் நான வாவி
நீரணி நயந்துஞ் செல்வத்
தொன்னலம் பருகிக் காமத்
தொங்கலாற் பிணிக்கப் பட்டார்.

பொருள் : இன் அகில் ஆவி விம்மும் எழுநிலை மாடம் சேர்ந்தும் - இனிய அகிற் புகை நிறையும் எழுநிலை கொண்ட மாடத்திலே சேர்ந்தும்; பொன்மலர்க் காவு புக்கும் - அழகிய பூஞ்சோலையை அடைந்தும்; புரிமணி வீணை ஓர்த்தும் - நரம்பினையுடைய அழகிய யாழிசையை நுகர்ந்தும்; நன்மலர் நான வாவி நீர் அணி நயந்தும் - அழகிய மலர்களையுடைய மணங்கமழும் வாவியிலே ஆடும் நீர்க்கோலத்தை விரும்பியும்; செல்வத் தொல் நலம் பருகி - செல்வத்தையுடைய பழைய நலத்தைப் பருகி; காமத் தொங்கலால் பிணிக்கப்பட்டார் - காமமாகிய மாலையாற் கட்டப்பட்டார்.

விளக்கம் : ஆவி - புகை. பொன்மலர்க்காவு என்றது கற்பகச் சோலையை. நீர்க்கோலம் - நீராடற் பொருட்டுச் செய்துகொள்ளும் ஒப்பனை. காமத்தொங்கல் என்றார் கட்டுண்ட காலையும் மெத்தென்றினிமை நல்குதல் கருதி. ( 242 )

2841. பூமுற்றுந் தடங்க ணாளும்
பொன்னெடுங் குன்ற னானுங்
காமுற்று நினைந்த வெல்லாங்
கற்பக மரங்க ளேந்தத்
தாமுற்றுக் கழிப்பர் தான
மிடையது செய்த நீரா
ரேமுற்றுக் கரும பூமி
யிருநிதிக் கிழமை வேந்தே.

பொருள் : வேந்தே!- அரசே!; பூ முற்றும் தடங்கண்ணாளும் - மலரின் தன்மை நிரம்பிய பெரிய கண்களையுடையவளும்; பொன் நெடுங்குன்றனானும் - நெடிய பொன்மலை போன்றவனும்; காம்உற்று நினைந்த எல்லாம் கற்பக மரங்கள் ஏந்த - தாம் விருப்பமுற்று எண்ணிய எல்லாவற்றையுங் கற்பக மரங்கள் கொடுக்க; தாம் உற்றுக் கழிப்பர் - (தலைமைக் கொடை பூண்ட) தாங்கள் அவற்றை நுகர்ந்து காலங்கழிப்பர்; இடையது தானம் செய்த நீரார் - இடைப்பட்டதாகிய தானத்தைச் செய்த இயல்பினார்; கரும பூமி இருநிதிக் கிழமை ஏமுற்றுக் கழிப்பர் - கரும பூமியிலே பெருஞ்செல்வ உரிமையிலே மயங்கிக் காலங்கழிப்பர்.

விளக்கம் : ஏமம் - மயக்கம். ஏம் என நின்றது.காமம், என்பதும் காம் என நின்றது. கடைப்பட்ட தானத்திற்குப் பாவமே உண்மையின் ஈண்டுக் கூறிற்றிலர். தானப்பயனாவது தானத்தின் அளவினும் மிகப் பெரிய அளவினதாகும். உறக்குந் துணையதோர் ஆலம்வித்தீண்டி இறப்ப நிழற்பயத்தலிதற் கொப்பாகும். ( 243 )

2842. அடங்கலர்க் கீந்த தானப்
பயத்தினா லலறு முந்நீர்த்
தடங்கட னடுவுட் டீவு
பலவுள வவற்றுட் டோன்றி
யுடம்பொடு முகங்க ளொவ்வா
ரூழ்கனி மாந்தி வாழ்வர்
மடங்கலஞ் சீற்றத் துப்பின்
மானவேன் மன்ன ரேறே.

பொருள் : மடங்கல் அம் சீற்றத் துப்பின் மானவேல் மன்னர் ஏறே! - சிங்கம் போன்ற சீற்றத்தினையும் வலிமையையுமுடைய பெருமை பொருந்திய வேலேந்திய அரசர்க்கரசே!; அடங்கலர்க்கு ஈந்த - ஐம்பொறிகளையும் வாட்டாதார்க்குக் கொடுத்த; தானப் பயத்தினால் - தானத்தின் விளைவால்; அலறும் முந்நீர்த் தடங்கடல் நடவுள் பல தீவு உள - முழங்குகின்ற மூன்று தன்மையுற்ற பெரிய கடலின் நடுவிலே பல தீவுகள் உள; அவற்றுள் உடம்பொடு முகங்கள் ஒவ்வார் தோன்றி - அவற்றுள் உடம்பு மக்களுடம்பும் முகம் விலங்கின் முகமுமாய்த் தோன்றி; ஊழ் கனி மாந்தி வாழ்வர் - தாமே கனிந்து வீழ்ந்த பழங்களை யுண்டு வாழ்வார்கள்.

விளக்கம் : இது முற்கூறிய புண்ணிரல்லார்க்குச் செய்த தானத்துக்குப் பயன் கூறியது. இச்செய்யுள் பரிமேலழகரால் 276 ஆம் திருக்குறளுக்கு மேற்கோளாக எடுக்கப்பட்டது. முந்நீர்த்தடங்கடல் - மூன்று நீர்மையையுடைய பெரிய கடல் - முத்தொழிலையுடைய கடலுமாம். ஊழ்கனி : வினைத்தொகை - மடங்கல் - அரிமா. துப்பு - வலிமை. ( 244 )

18. சீலப்பயன், காட்சிப்பயன்

2843. செப்பிய சீல மென்னுந்
திருமணி மாலை சூழ்ந்தார்
கப்பத்து ளமர ராவர்
காட்சியி னமிர்த முண்டா
ரொப்பநீ ருலக மெல்லா
மொருகுடை நிழற்றி யின்பங்
கைப்படுத் தலங்க லாழிக்
காவல ராவர் கோவே.

பொருள் : கோவே! - அரசே!; செப்பிய சீலம் என்னும் திரு மணிமாலை சூழ்ந்தார் - கூறிய சீலம் என்கிற அழகிய மணிமாலையை அணிந்தவர்; கப்பத்துள் அமரர் ஆவார் - (பதினாறுவகைக்) கற்பம் என்னும் உலகிலே வானவர் ஆவர்; காட்சி இன் அமிர்தம் உண்டார் - காட்சியாகிய இனிய அமிர்தை நுகர்ந்தவர்கள்; நீர் உலகம் எல்லாம் ஒப்ப ஒருகுடை நிழற்றி - கடல் சூழ்ந்த உலகம் எல்லாவற்றையும் சமனாக ஒருகுடை நீழலிலே இருத்தி; இன்பம் கைப்படுத்து அலங்கல் ஆழிக் காவலர் ஆவர் - இன்பத்தைக் கைக்கொண்டு மாலையணிந்த ஆணையாழியைச் செலுத்தும் அரசர் ஆவார்கள்.

விளக்கம் : திருமணி - மாணிக்கமணி. கப்பம் - கற்பம் : பிராகிருதச் சிதைவு. கப்பத் திந்திரன் காட்டிய நூலின் என்றார் இளங்கோவடிகளாரும். ஆழிக்காவலர் - சக்கரவர்த்திகள். ( 245 )

19. வீடு பேறு

வேறு

2844. வீட்டின தியற்கைநாம் விளம்பிற் றீங்கதிர்ப்
பாட்டரும் பனிமதி பழித்த முக்குடை
மோட்டிருங் கொழுமலர்ப் பிண்டி மூர்த்திநூ
லீட்டிய பொருளகத் தியன்ற தென்பவே.

பொருள் : நாம் வீட்டினது இயற்கை விளம்பின் - நாம் வீட்டின் தன்மையை விளக்கிக் கூறின்; தீ கதிர்ப் பாடு அரும் பனி மதி பழித்த முக்குடை - இனிய கதிர்களையுடைய இளைய ஞாயிற்றினது கூறு பாட்டினையும் அரிய குளிர்ந்த திங்களைப் பழித்த முக்குடையையும்; மோடு இருங் கொழுமலர்ப் பிண்டி மூர்த்தி - புடைபட்ட வயிறு போன்ற பெரிய கொழுவிய மலர்களையுடைய அசோகின் நீழலில் எழுந்தருளிய தலைவன்; ஈட்டிய நூற்பொருள் அகத்து இயன்றது - ஈட்டிய நூற்பொருளிடத்தே கூறப்பட்டது.

விளக்கம் : தீங்கதிர்ப்பாடு - இளைய ஞாயிற்றினது கூறுபாடு. ஞாயிற்றின் கூறுபாட்டையும் மதியையும் பழித்த குடை என்றது சந்திராதித்தியம் என்னும் பெயர்ப் பொருள் கருதிப் போலும். பிண்டிமூத்தி - அருகக்கடவுள். நூல் - ஆகமம். வாமனார்வடித்த நூல் என்றார் முன்னரும். அதனையான் கூறக்கேள் என்பது குறிப்பெச்சம். என்ப : அசை. ( 246 )

2845. உள்பொரு ளிதுவென வுணர்தன் ஞானமாந்
தெள்ளிதி னப்பொரு டெளிதல் காட்சியாம்
விள்ளற விருமையும் விளங்கத் தன்னுளே
யொள்ளிதிற் றரித்தலை யொழுக்க மென்பவே.

பொருள் : இது உள் பொருள் என உணர்தல் ஞானம் ஆம் - (பொருள்களுள்) இது உண்மைப் பொருள் என உணர்தல் ஞானம் எனப்படும்; அப்பொருள் தெள்ளிதின் தெளிதல் காட்சி ஆம் - அப் பொருளின் தன்மை இது எனத் தெளிந்திடுதல் காட்சி யெனப்படும்; இருமையும் விள் அற விளங்க - அந்த இரண்டினையும் நீக்கம் அற விளங்கும்படி; தன் உளே ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்ப - தன் மனத்திலே சிறப்புற நிலை பெறுத்தலை ஒழுக்கம் என்று அறிஞர் கூறுவர்.

விளக்கம் : ஐ, என்ப : இரண்டினையும் அசை என்பர் நச்சினார்க்கினியர். இச்செய்யுட் கருத்தோடு,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (423)
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு (351)

எனவரும் திருக்குறள்கள் நினைக்கற்பாலன. ஞானம் காட்சி ஒழுக்கம் எனுமிவற்றை இரத்தினத்திரயம், மும்மணிகள் என்ப. (247)

2846. கூடிய மும்மையுஞ் சுடர்ந்த கொந்தழ
னீடிய வினைமர நிரைத்துச் சுட்டிட
வீடெனப் படும்வினை விடுதல் பெற்ற தங்
காடெழிற் றோளினா யநந்த நான்மையே.

பொருள் : ஆடு எழில் தோளினாய் - வெற்றியும் அழகுமுடைய தோளுடையாய்!; கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்து அழல் - இவ்வாறு கூடிய மூன்று தன்மையும் நின்று எரிந்த மிகு நெருப்பு; நீடிய வினைமரம் நிரைத்துச் சுட்டிட - மிக வளர்ந்த இருவினையாகிய மரத்தினை ஒழுங்குறச் சுட்டுப்போட; வினைவிடுதல் வீடு எனப்படும் - அவ்விருவினையும் (தாம் நெடுங்காலம் பழகிய உயிர்க்கிழவனைக்) கைவிடுதல் வீடு எனப்படும்; அங்குப் பெற்றது அநந்த நான்மை - அங்குப் பெற்ற பயன் அநந்த சதுட்டயங்கள்.

விளக்கம் : அவை : அநந்த ஞானம், அநந்த தரிசனம், அநந்த வீரியம், அநந்த சுகம். (கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம்.) ( 248 )

2847. கடையிலா வறிவொடு காட்சி வீரியங்
கிடையிலா வின்பமுங் கிளந்த வல்லவு
முடையதங் குணங்களோ டோங்கி விண்டொழ
வடைதலான் மேலுல கறியப் பட்டதே.

பொருள் : கடை இலா அறிவொடு காட்சி வீரியம் கிடையிலா இன்பமும் - முடிவில்லாத அறிவுக் காட்சியும் வீரியமும் ஒப்பிலாத இன்பமும் என; கிளந்த அல்லவும் - கிளந்தனவும் அல்லனவும்; தம் உடைய குணங்களோடு ஓங்கி - தம்முடைய குணங்களாலே மிக்கு; விண்தொழ அடைதலான் - விண்ணிலுள்ளார் தொழும்படி வந்து சேர்வதாலே; மேல் உலகு - வீட்டுலகு என்பது ஒன்று உண்டு; அறியப்பட்டது - அது யாவராலும் அறியப்பட்டது

விளக்கம் : அல்ல என்றவை : நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, ஆயு இன்மை, அழியா வியற்கை. ( 249 )

20. பிறவிகள் அற உரை

2848. மாதவ னெனப்பெயர் வரையி னவ்வரை
யேதமி லெயிறணி பவள வாய்த்தொடுத்
தாதியி லறவுரை யருவி வீழ்ந்தென
மாதுயர் மலங்கெட மன்ன னாடினான்.

பொருள் : அவ் வரை எயிறு அணி பவளம் வாய் ஆதியில் - அழகிய வரைகளையுடைய, எயிறுகளால் அணிந்த பவளம் போலும் வாயிற் பிறந்த; ஏதம் இல் அறவுரை அருவி தொடுத்து - குற்றம் அற்ற அறவுரைகளாகிய அருவி தொடுத்து ; மாதவன் எனப் பெயர் வரையின் வீழ்ந்தென - மாதவன் எனப் பெயர் பெற்ற வரையினின்றும் வீழ்ந்ததாக; மாதுயர் மலங்கெட மன்னன் ஆடினான் - பெருந்துயரைச் செய்யும் மலங்கெடும்படி வேந்தன் முழுகினான்.

விளக்கம் : நுண்ணிய வரியொடு திரண்டு (சீவக.1702) என்றார் முன்னும். வாய் மேகமாயிற்று. வீழ்ந்தது என : வீழ்ந்தென : தொகுத்தல் விகாரம். ( 250 )

2849. எல்லையி லறவுரை யினிய கேட்டபின்
றொல்லையெம் பிறவியுந் தொகுத்த பாவமும்
வல்லையே பணிமின மடிகளென்றனன்
மல்லைவென் றகன்றுபொன் மலர்ந்த மார்பினான்.

பொருள் : மல்லை வென்று அகன்று பொன் மலர்ந்த மார்பினான் - மற்றொழிலை வென்று பரந்து திருமகள் மலர்ந்த மார்பினையுடைய சீவகன்; எல்லை இல் இனிய அறவுரை கேட்டபின் அளவு இல்லாத இனியவாகிய அறவுரைகளைக் கேட்ட பிறகு; அடிகள் - அடிகளே!; எம் தொல்லை பிறவியும் தொகுத்த பாவமும் - எம்முடைய முற்பிறப்பையும் அப் பிறவியில் யாம் ஈட்டிய பாவத்தையும்; வல்லையே பணிமின் என்றனன் - விரைவாக அருளிச் செய்க என வேண்டினன்.

விளக்கம் : கடுகத்துறத்தற்கு வல்லை என்றனல், பணிமினம் : அம் : அசை. ( 251 )

2850. கதிர்விடு திருமணி யங்கைக் கொண்டதொத்
தெதிர்வது மிறந்தது மெய்தி நின்றது
மதிர்வறு தவவிளக் கெறிப்பக் கண்டவன்
பதரறு திருமொழி பணிக்கு மென்பவே.

பொருள் : கதிர்விடு திருமணி அங்கை கொண்டது ஒத்து - ஒளிவிடும் அழகிய மணியை அகநங்கையிலே கொண்டால் ஆண்டுள்ளவற்றை அது விளக்குந் தன்மை போல; எதிர்வதும் இறந்ததும் எய்தி நின்றதும் - எதிர்வு இறப்பு நிகழ்வு என்னும் முக்காலத்தையும்; அதிர்வு அறு தவ விளக்கு எறிப்பக் கண்டவன் - நடுக்கம் அற்ற தவவிளக்கு விளக்குதலாலே உணர்ந்தவன்; பதர் அறு திருமொழி பணிக்கும் - பொய்யற்ற அழகிய மொழியாலே கூறுவான்.

விளக்கம் : என்ப, ஏ : அசைகள்.  திருமணி - மாணிக்கமணி; இது தவத்திற்குவமை. எதிர்வது - எதிர் காலத்து நிகழ்ச்சி. இறந்தது -  இறந்த காலத்து நிகழ்ச்சி. எய்தி நின்றது - நிகழ்கால நிகழ்ச்சி; பதர் என்றது - பயனிலாச் சொற்களை. ( 252 )

2851. முழுநீர் வளைமேய் தலின்முத் தொழுகிப்
பொழிநீர் நிலவின் னிருள்போழ்ந் தரிசிக்
கழுநீ ரொழுகக் கழுநீர் மலருந்
தழுநீ ரதுதா தகியென் றுளதே.

பொருள் : முழுநீர் வளை - கடலில் உள்ள சங்கு; அரிசிக்கழுநீர் மேய்தலின் - (ஊரிடத்ததாய் வந்து) அரிசிக் கழுநீரிலே மேய்வதால்; முத்து ஒழுகி - அவை சொரிந்த முத்துக்கள் ஒழுங்குபட்டு; பொழிநீர் நிலவின் இருள் போழ்ந்து ஒழுக - ஒளி பொழியும் நீர்மையுடைய நிலவினைப்போல இருளைக் கெடுத்து (அணைபோலக் கழுநீரைத் தடுத்து) ஒழுகுவதால்; கழுநீர் மலரும் - கழுநீர் மலரை மலர்விக்கின்ற; தழுநீரது தாதகி என்று உளது - வளந்தழுவிய தன்மையுடையது தாதகி என்றொரு நாடு உளது.

விளக்கம் : முத்தொழுகக் கழுநீர் மலரும் எனக் காரண காரியமாக்குக.  (253 )

2852. கயல்பாய்ந் துகளக் கடியன் னம்வெரீஇ
வியனீள் சுடர்வெண் மதிசேர் வதுபோ
லயலே யலர்தா மரைசேர்ந் துறையும்
வயல் சூழ்ந் தனவூர் வளமார்ந் தனவே.

பொருள் : கயல் பாய்ந்து உகளக் கடி அன்னம் வெரீஇ - கயல் பாய்ந்து பிறழ்வதாலே மிக்க அன்னம் அஞ்சி; வியன் நீள் சுடர் வெண்மதி சேர்வதுபோல் - (வானிலே) பெரிதாக மேம்பட்ட ஞாயிற்றை வெண்திங்கள் அணைவது போல; அயலே அலர் தாமரை சேர்ந்து உறையும் - அருகே மலர்ந்த தாமரையை அடைந்து வாழ்கின்ற; வயல் சூழ்ந்தன ஊர் வளம் ஆர்ந்தன - வயல்கள் சூழ்ந்தனவாகிய ஊர்கள் செல்வம் நிறைந்தன.

விளக்கம் : கடியன்னம் - மிகுதியான அன்னப் புட்கள். வெரீஇ - வெருவி - அஞ்சி. வியனீள் சுடர் என்றது ஞாயிற்றை. இது தாமரை மலர்க்குவமை. வெண்மதி அன்னத்திற்குவமை. ( 254 )

2853. அவணத் தவர்கூந் தலகிற் புகையைச்
சிவணிச் சிறுகால் கமுகம் பொழில்சேர்ந்
துவணுய்த் திடமஞ் செனநின் றுலவும்
பவணத் தொருபாங் கினதா லளிதோ.

பொருள் : சிறுகால் - தென்றற் காற்று; அவணத்தவர் கூந்தல் அகில் புகையைச் சிவணி - அந் நாட்டின் ஊர்களில் இருப்பார் கூந்தலுக்கிட்ட அகிற் புகையை (முதலிற்) பொருந்தி; கமுகம் பொழில் சேர்ந்து - (பின்னர்) கமுகந் தோட்டத்தை அடைந்து; உவண் உய்த்திட - (அதன் மணத்தையும் பெற்று) அப் புகையை அந்நாடெங்கும் செலுத்த; மஞ்சு என நின்று உலவும் - (அப்புகை) வெண்முகிலென நின்று உலாவும்; பவணத்து ஒரு பாங்கினது - நாகருலகின் ஒரு கூறு போன்றது; அளிதோ? - (ஆகையால்) அது அளிக்கத்தக்கதோ? (அன்று.)

விளக்கம் : அந்நாடு கேடின்றி யிருத்தலின் அளிக்க வேண்டாததாயிற்று. பாங்கினதால் : ஆல் : அசை. பாங்கினதால் - பாங்கினதாகையால் என்றுமாம். ( 255 )

2854. மதியுஞ் சுடரும் வழிகா ணலுறாப்
பொதியும் மகிலின் புகையுங் கொடியு
நிதியின் கிழவன் னினிதா வுறையும்
பதிபொன் னகரின் படிகொண் டதுவே.

பொருள் : மதியும் சுடரும் வழிகாணல் உறா - திங்களும் ஞாயிறும் வழிகாணல் இயலாதவாறு; பொதியும் அகிலின் புகையும் கொடியும் - பொதிந்த அகிற் புகையும் துகிற் கொடியும் (கொண்டு); நிதியின் கிழவன் இனிது ஆ உறையும் - நிதிக்குரிய குபேரன் இனிமையாக வாழ்கின்ற; பதி பொன் நகரின் படி கொண்டது - அப் பதி பொன் நகரின் தன்மையைக் கொண்டதாகும்.

விளக்கம் : செல்வம் மிக்கதாற் குபேரன் பதிபோன்றது . குபேரன் பதி - அளகாபுரி. பொன் நகர் : இந்திரனுடையது. ( 256 )

2855. ஏம மாகிய துப்புர வெய்திய
பூமி மாதில கம்மெனும் பொன்கிளர்
நாம நன்னகர் வீதிக டாமெலாங்
காம வல்லி கிடந்தன போன்றவே.

பொருள் : ஏமம் ஆகிய துப்புரவு எய்திய - ஆதரவாகிய நுகர் பொருள்களைத் தன்னிடத்தே கொண்ட; பூமி மாதிலகம் எனும் நாம நல்நகர் - பூமி மாதிலகம் என்கிற பெயரையுடைய அழகிய நகரிலே; பொன்கிளர் வீதிகள்தாம் எலாம் - பொன் ஒளிரும் தெருக்கள் யாவும்; காமவல்லி கிடந்தன போன்ற - காமவல்லிகள் கிடந்த அமராவதியின் தெருக்களைப் போன்றன.

விளக்கம் : ஏமம் - இன்பமுமாம். துப்புரவு - நுகர்பொருள். பூமிமாதிலகம் எனும் நகரில் பொன்கிளர் வீதிகள் என இயைக்க. தாம் : அசை. காமவல்லி கிடந்தன என்னுந்தொடர் அமராவதியிற் றெருக்கள் என்பதுபட நின்றது. ( 257 )

2856. பைங்கழன் மன்னர் மன்னன்
பவணமா தேவ னென்பான்
சங்கினுண் முத்த மொப்பாள்
சயமதி பயந்த நம்பி
யைங்கணைக் காம னன்னா
னசோதர னரச சீயந்
தங்கிய கேள்வி யாற்குத்
தையலார்ச் சேர்த்தி னாரே.

பொருள் : பைங்கழல் மன்னர் மன்னன் பவணமா தேவன் என்பான் - (அந் நகரில் உறையும்) பைங்கழல் அணிந்த வேந்தர் வேந்தன் பவணமா தேவன் என்பானும்; சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி - சங்கில் உள்ள முத்தைப் போன்றவளாகிய சயமதி என்பாளும் பெற்ற நம்பி; ஐங்கணைக் காமன் அன்னான் அசோதரன் அரச சீயம் - ஐங்கணை ஏந்திய காமனைப் போன்றவனாகிய அசோதரன் அரசராகிய யானைகட்குச் சிங்கம் போன்றவன்; தங்கிய கேள்வியாற்குத் தையலார்ச் சேர்த்தினார் - நூல்களில் தங்கிய கேள்வியையுடைய அவனுக்குத் தக்க மாதர்களை மணம் புரிவித்தனர்.

விளக்கம் : அரச சீயம் : ஏக தேச உருவகம். அசோதரன் வீரமும் அழகும் கேள்வியும் உடையவன் என்றார். ( 258 )

2857. இளமுலை பொருது தேந்தா
ரெழில்குழைந் தழிய வைகிக்
கிளைநரம் பிசையுங் கூத்துங்
கிளர்ந்தவை கனற்ற நாளும்
வளைமயங் குருவ மென்றோள்
வாய்நலம் பருகி மைந்தன்
விளைமதுத் தேறன் மாந்தி
வெற்றிப்போ ரநங்க னானான்.

பொருள் : இளமுலை பொருது தேன் தார் எழில் குறைந்து அழிய வைகி - (அவன் அம் மங்கையரின்) இளமுலைகள் தாங்குதலால் தன் மார்பிலுள்ள தேன் பிலிற்றும் மலர் மாலைகள் அழகு குறைந்து வாட அவர்களுடன் கூடி; கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற - (சோர்வுற்றபோது) கிளையென்னும் நரம்பையுடைய யாழிசையும் கூத்தும் எனத் தோற்றியவை (சோர்ந்த காமத்தை) அழலுறச் செய்ய; நாளும் - எப்போதும்; வளை மயங்கு உருவம் மென்தோள் வாய்நலம் பருகி - மூங்கில் மயங்கும் அழகிய மெல்லிய தோளை(த் தழுவி) வாயிலுள்ள தேறலைப் பருகி; விளைமதுத் தேறல் மாந்தி - முற்றியகள்ளின் தெளிவையும் பருகி; மைந்தன் வெற்றிப் போர் அநங்கன் ஆனான் - (அம்) மைந்தன் (அம் மகளிர்க்கு) வெற்றிப் போரையுடைய காமன் ஆயினான்.

விளக்கம் : பொருது - பொர. கிளை எழுவகைப் பண்ணில் ஒன்று இசையுங் கூத்துமாகிய கிளர்ந்தவை என்க. கிளர்ந்தவை - தோற்றியவை. மதுத்தேறல் - கட்டெளிவு. அநங்கன் - காமன். ( 259 )

2858. இலங்கரி பரந்த வாட்க
ணிளையவர் புலவி நீங்கச்
சிலம்பெனும் வண்டு பாடச்
சீறடிப் போது புல்லி
யலங்கல்வாய்ச் சென்னி சேர்த்தி
யரிமதர் மழைக்கண் பில்க
நலங்கவர்ந் துண்டு நண்ணார்
நாமுறக் கழிக்கு மாதோ.

பொருள் : இலங்கு அரி பரந்த வாள்கண் இளையவர் புலவி நீங்க - விளங்கும் செவ்வரி பரவிய வாளனைய கண்களையுடைய மங்கையரின் புலவி நீங்கும்படி; சிலம்பு எனும் வண்டு பாடச் சீறடிப்போது புல்லி - அவர்களுடைய சிலம்பாகிய வண்டுகள் முரலும்படி சிற்றடி மலர்களைத் தழுவி; அலங்கல்வாய்ச் சென்னி சேர்த்தி - மாலையைக் கொண்ட தன் முடியிலே சேர்த்து; அரிமதர் மழைக்கண் பில்க - செவ்வரி பரந்த குளிர்ந்த கண்கள் உவகை நீரைத் துளிக்க; நலம் கவர்ந்து உண்டு - அவர்களுடைய அழகைக் கவர்ந்து பருகி; நண்ணார் நாம் உறக் கழிக்கும் - பகைவர் அச்சம் உறக் காலம் போக்குவான்.

விளக்கம் : காமம் நுகரினும் வீரங்குன்றாமை தோன்ற நண்ணார் நாம் உற என்றார். மடங்கல் - அரிமா. மொய்ம்பு - வலிமை. பங்கயத்தடம் - தாமரைக்குளம். பார்ப்பு - குஞ்சு. அனம் - அன்னம். ( 260 )

வேறு

2859. மங்கையர் தம்மொடு மடங்கன் மொய்ம்பினான்
பங்கயப் பனித்தடஞ் சேரப் பார்ப்பனஞ்
செங்கயற் பேரின மிரியச் செவ்வனே
பொங்கிமேற் பறந்துவிண் புதைந்த தென்பவே.

பொருள் : மடங்கல் மொய்ம்பினான் - சிங்கம் போன்ற ஆற்றலையுடைய அவன்; மங்கையர் தம்மொடு பங்கயப் பனித்தடம் சேர - அம் மாதர்களுடன் (நீர் விளையாடுதற்குத்) தாமரைநிறைந்த குளிர்ந்த பொய்கையை அடைந்தபோது; பார்ப்பு அனம் - (ஆண்டுறைந்த) பார்ப்புகளுடன் கூடிய அன்னத்திரள்; செங்கயல் பேரினம் இரிய - செங்கயல்களின் பெருந்திரள் ஓடும் படி; செவ்வனே மேல் பொங்கி பறந்து விண் புதைந்தது - செவ்வையாக மேலே பொங்கிப் பறந்ததால் விண் மறைந்தது.

விளக்கம் : பறந்த - பறக்க : எச்சத்திரிபு. என்ப, ஏ : அசைகள். ( 261 )

வேறு

2860. வேய்ந்தவெண் டாமரைக் கோதைபோல
விசும்பிற் பறக்கின்ற வெள்ளையன்ன
மாய்ந்த முகிலாடைத் திங்கட்கண்ணி
யாகாய மென்னு மரிவைசாயற்
றோய்ந்ததன் காதலன் பற்ற
வற்றுச்சொரிகின்ற மேகலைபோல் வீழ்ந்தவாளை
பாய்ந்து துகைப்பக் கிழிந்தகூழைப்
பனித்தா மரைசூழ் பகற்கோயிலே.

பொருள் : வேய்ந்த வெண்தாமரைக் கோதை போல - கட்டிய வெள்ளைத் தாமரை மலர் மாலைபோல; விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம் - வானிலே பறக்கின்ற வெள்ளை அன்னம்; ஆய்ந்த முகில் ஆடைத்திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை - சுருங்கிய முகிலாகிய ஆடையினையும் திங்களாகிய கண்ணியினையும் உடைய ஆகாயம் என்னும் அரிவையின்; மேகலை - மேகலையை; சாயல் தோய்ந்த தன் காதலன் பற்ற அற்றுச் சொரிகின்றபோல் - அவள் மென்மையை நுகர்ந்த அவள் காதலன் பற்ற அற்றுச் சொரிகின்ற முத்துக்கள் போல; வாளை பாய்ந்து துகைப்பக் கிழிந்த கூழைப் பனித்தாமரைசூழ் பகல் கோயில் வீழ்ந்த - வாளை பாய்ந்து உழக்குதலாலே கிழிந்த கூழையிலையையுடைய குளிர்ந்த தாமரை சூழ்ந்த நீராவி மண்டபத்திலே வீழந்தன.

விளக்கம் : பகற்கோயில் என்றார் பகற்போதில் இருத்தல் பற்றி. முத்தமேகலை எனக் கொள்க. ( 262 )

வேறு

2861. விரும்புபொற் றட்டிடை வெள்ளிக் கிண்ணமார்ந்
திருந்தன போன்றிள வன்னப் பார்ப்பினம்
பொருந்துபொற் றாமரை யொடுங்கிப் புக்கொளித்
திருந்தகண் டானிளங் கோக்க ணம்பியே.

பொருள் : விரும்பு பொன் தட்டிடை - விருப்பூட்டும் பொன் தட்டிலே; வெள்ளிக் கிண்ணம் ஆர்ந்து இருந்ன போன்று - வெள்ளிக் கிண்ணம் நிறைந்து இருந்தன போல; இள அன்னப் பார்ப்பினம் - இளமை பொருந்திய அன்னப் பார்ப்புத்திரள்; பொருந்து பொன் தாமரை ஒடுங்கி - (பறக்கலாற்றாமல்) பொருத்தமான அழகிய தாமரை மலர்களிலே ஒடுங்கி; புக்கு ஒளித்து இருந்த - புகுந்து ஒளித்து இருந்தவற்றை; இளங்கோக்கள் நம்பி கண்டான் - இளவரசர்கட்கெல்லாம் தலைவனாகிய அவன் கண்டான்.

விளக்கம் : பொருந்து - ஒளித்தற்குப் பொருந்தின. நம்பி : தலைவன்; இளமைப் பெயரன்று. அன்னப்பார்ப்பு தன் உறையுள் கண்டு மகிழ்ந்து சென்றமை கருதல்வேண்டும். ( 263 )

2862. உரிமையுட் பட்டிருந் தொளிக்கின் றார்களைப்
பெருமநீ கொணர்கெனப் பேசு காஞ்சுகி
யொருமகற் கீந்தனன் கோயில் புக்கன
னெரிமுயங் கிலங்குவேற் காளை யென்பவே.

பொருள் : உரிமையுள் பட்டிருந்து - (அவ் வன்னப் பார்ப்புக்களை) அவன் மனைவியரும் உடனிருந்து கண்டு; பெரும! நீ ஒளிக்கின்றார்களைக் கொணர்க என - தலைவனே! நீ மறைந்திருக்கும் அப் பார்ப்புக்களைக் கொண்டு தருக என்று கேட்க; பேசு காஞ்சுகி ஒரு மகற்கு ஈந்தனன் - கூறுதற்குரிய காஞ்சுகி ஒருவனுக்கு அதனைக் கூறிப் பார்ப்பைப் பற்றி (அவர்கட்குக்) கொடுத்தனனாகி; எரி முயங்கு இலங்கு வேல்காளை கோயில் புக்கனன் - எரி தழுவி விளங்கும் வேலேந்திய காளை அரண்மனையை அடைந்தான்.

விளக்கம் : உட்பட்டு - அக் காட்சிக்கு உட்பட்டு. பெருமைநீர் எனப் பாடம் ஓதுவாருமுளர். பல பார்ப்பைப் பிடித்தான் என்றாற் பலமுறை சிறைப்படுதல் வேண்டுமாதலின் அவற்றுள் ஒன்றென்றே பொருள் கூற வேண்டும் என்பர் நச்சினார்க்கினியர். ( 264 )

2863. வடமலைப் பொன்னனார் மகிழ்ந்து தாமரைத்
தடமுறை வீர்க்கிவை தடங்க ளல்லவே
வடமுலை யெனநடாய் வருடிப் பாலமு
துடனுறீஇ யோம்பினார் தேம்பெய் கோதையார்.

பொருள் : வடமலைப் பொன் அனார் மகிழ்ந்து - இமயத்தில் (பதுமை யென்னும் பொய்கையில் தோன்றிய) திருமகளைப் போன்ற அம் மங்கையர் களிப்புற்று; தாமரைத் தடம் உறைவீர்க்கு வடமுலை இவை தடங்கள் அல்லவே? (அப் பார்ப்பைப் பார்த்து) தாமரைத் தடத்தே வாழும் நுமக்கு வடமணிந்த இம் முலைத்தடங்கள் தடங்கள் அல்லவோ? ; என நடாய் வருடி - என்று நன்மொழிகளை நவின்று வருடிக் கொடுத்து; பால் அமுது உடன் உறீஇ - பாலாகிய அமுதை உடனிருந்து ஊட்டி; தேன் பெய் கோதையார் ஓம்பினார் - தேன் பொழியுங் கோதையார் அவற்றைப் பாதுகாத்தனர்.

விளக்கம் : உறைவீர் எனவும் இவை தடங்கள் அல்லவே? எனவும் பன்மை வந்ததனால் முற்செய்யுளில் ஒரு பார்ப்பெனக் கூற வேண்டும் என்பது ஆராய்தற்குரியதாகிறது. நச்சினார்க்கினியர் இதனை ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி என்பர். இப் பார்ப்புக்கள் கட்டவோ, கூட்டிலடைக்கவோ கூடிய பருவத்தன அல்லவென்பது தோன்ற, முலையில் அணைத்து என்றார். அஃது, இளவன்னப் பார்ப்பினம் என்பதனானும் (சீவக. 2861) உணர்க, இதனுள் இப் பார்ப்பைக் கட்டி வைத்து வளர்த்தார் என்னாது முலைத்தடத்தே அணைத்து வைத்து வளர்த்தார் என்றமையால், சீவகனும் கட்டுண்டான் என்பதற்குக் காரணம் இன்மையுணர்க என்று ஈண்டு நச்சினார்க்கினியர் கூறி, முன்னரெங்கும் சீவகன் கட்டுண்டான் என்று வரும்போது, மனத்தாற் கட்டுண்டான் ஆசிரியன், தந்தை ஆகியோர் சொல்லாற் கட்டுண்டான் என்றே கூறிவந்ததற்குச் சான்று காட்டுவர். ( 265 )

வேறு

2864. கண்டா னொருநாட் கதிர்மாமுடி மன்னர் மன்னன்
றண்டா மரைசூழ் தடத்திற்பிரித் தார்கள் யாரே
யொண்டா ரிளங்கோவென் றுழையவர் கூற வல்லே
கொண்டீங்கு வம்மின் கொலைவேலவன் றன்னை யென்றான்.

பொருள் : கதிர்மா முடி மன்னர் மன்னன் - ஒளி பொருந்திய மாமுடி அணிந்த அரசர்க்கரசன்; ஒருநாள் கண்டான் - ஒரு நாள் இவர்களிடம் அப் பார்ப்பைக் கண்டான்; தண்தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே (என) - குளிர்ந்த தாமரை சூழ்ந்த பொய்கையினின்றும் பிரித்தவர்கள் யாவரோ என்று வினவ; உழையர் ஒண்தார் இளங்கோ என்று கூற - அதனைக் கேட்ட பணியாளர் ஒள்ளிய தார் அணிந்த இளவரசன் என்று கூற; கொலை வேலவன் தன்னை ஈங்கு வல்லே கொண்டு வம்மின் என்றான் - (அரசன்) கொலைவேலனை இங்கே விரைவிற் கொண்டு வம்மின் என்றான்.

விளக்கம் : அரசரைப் பிடியாமற் பார்ப்பைப் பிடித்தான் என்னும் இகழ்ச்சி தோன்றக் கொலைவேலவன் என்றான். பார்ப்பைக் கட்டுதல் கூட்டில் அடைத்தல் செய்யாமையின் அரசற்குக் காட்சியானமை உணர்கஎன்று தம் கருத்திற்கேற்ப நச்சினார்க்கினியர் கூறுவர். ( 266 )

2865. படுகண் முழவும் பசும்பொன்மணி யாழு மேங்க
விடுகுந் நுசுப்பி னவராட விருந்த நம்பி
யடிகட் கடிக ளருளிற்றென் றிறைஞ்ச வல்லே
கடிவிம்மு தாரான் கழல்கையிற் றொழுது சேர்ந்தான்.

பொருள் : படுகண் முழவும் பசும்பொன் மணி யாழும் ஏங்க - ஒலியெழும் கண்களையுடைய முழவும் பசிய பொன்னும் மணியும் புனைந்த யாழும் ஒலிக்க; இடுகும் நுசுப்பினவர் ஆட - நுண்ணிடையார் ஆட; இருந்த நம்பி - கண்டிருந்த இளவரசனிடத்தே (சென்று); அடிகள் அடிகட்கு அருள் இற்று என்று இறைஞ்ச - அரசர் இளவரசர்க்கு அருளியது இஃது என்று உழையர் கூறி வணங்க; கடி விம்மு தாரான் - மணம் விம்மும் மலையான்; வல்லே கழல் கையின் தொழுது சேர்ந்தான் -விரைந்து அரசன் கழலணிந்த திருவடியைத் தன் கையால் தொழுதவாறே சென்றான்.

விளக்கம் : படுகண் : வினைத்தொகை. ஏங்க - ஒலிக்க. இடுகுதல் - நுண்ணிதாதல். நுசுப்பி - இடை. நம்பி - ஈண்டு அசோதரன். அடிகட்கு : முன்னிலைப் புறமொழி. இற்று - இத்தன்மைத்து. வல்லே - விரைந்து. ( 267 )

2866. அணிசே ரிடக்கை விரலால் வலத்தோண்
மணிசேர் வளைவாய் வதின்வைத் துவலத்
தணிமோ திரஞ்சூழ் விரல்வாய் புதையாப்
பணியா முடியாற் பணிந்தா னிலையோன்.

பொருள் : இளையோன் - அவ்விளவரசன்; அணிசேர் இடக்கைவிரலால் வலத்தோள் மணிசேர் வளை வாய்வதின் வைத்து - அழகிய இடக்கை விரலால் வலத்தோளிலுள்ள மணிகள் இழைத்த வளையை நன்றாகத் திருத்தி; வலத்து அணி மோதிரம் சூழ் விரல் வாய் புதையாப் பணியா - வலக்கையின் அழகிய மோதிரம் அணிந்த விரலாலே வாயைப் பொத்தி வணங்கி; முடியால் பணிந்தான் - பிறகு முடிசாய்த்து வணங்கி நின்றான்.

விளக்கம் : பணியா - பணிந்து : செய்யா என் எச்சம். தோள்வளை, மணிசேர்வளை என இயைக்க. வாய்வதின் - வாய்ப்புடையதாக; பொருந்துமாறு என்றவாறு. வலம் : ஆகுபெயர்; வலக்கை. புதையா - புதைத்து : செய்யா என் வாய்பாட்டெச்சம். ( 268 )

வேறு

2867. கிளைப்பிரி வருஞ்சிறை யிரண்டுங் கேட்டியேல்
விளைக்கிய வித்தனா யிருமற் றீங்கெனத்
திளைக்குமா மணிக்குழை சுடரச் செப்பினான்
வளைக்கையார் கவரிகொண் டெறிய மன்னனே.

பொருள் : வளைக்கையார் கவரிகொண்டு எறிய மன்னன் - வளைக்கை மகளிர் கவரியால் வீச வீற்றிருந்த மன்னன்; கிளைப்பிரிவு அருஞ்சிறை இரண்டும் கேட்டியேல் - (அன்னப் பார்ப்பு) உறவினிடமிருந்து பிரிந்ததும் அரிய சிறையிற் பட்டதும் ஆகிய இரண்டின் பயனையுங் கேட்டாய் எனில்; விளைக்கிய வித்து அனாய் ஈங்கு இரு என - (அவ்விரண்டின் பயனையும் மேல்) விளைத்தற்கு வித்துப்போன்றவனே! இங்கே இரு என்று; திளைக்கும் மா மணிக்குழை சுடரச் செப்பினான் - தோளிற் பயிலும் பெரிய மணிக்குழை ஒளிரக் கூறினான்.

விளக்கம் : இச் செய்யுளிலும், சிறையாவது, தான் நினைத்தவறொழுகுதலின்றிப் பிறர் நினைத்தவாறே ஒழுகும்படி காத்தல். இளம் பார்ப்புக் கிளையைப் பிரிந்திருந்து ஆற்றின் அருமை நோக்கி, அருஞ்சிறை என்றார். என்றும், ஈண்டுப் பார்ப்பைப் பிரித்ததற்குத் தானும் பிரிந்தும், அதனைச் சிறை செய்ததற்குத் தானுஞ் சிறைப்பட்டும் அத் தீவினை நுகர்ந்தான் என்று முன்னர்ப் பொருளுரைத்ததே தேவர்க்குக் கருத்தென்றுணர்க; என்னை? நீ இப் பார்ப்பைக் கட்டி வைத்ததனையுங் கேளென்று அவனை நோக்கி ஈண்டு அரசன் கூறாமையின் என்றும் நச்சினார்க்கினியர் கூறுகின்றனர். ( 269 )

வேறு

2868. அறம்பெரிய கூறின் னலங்கலணி வேலோய்
மறம்புரிகொ ணெஞ்சம்வழி யாப்புகுதந் தீண்டிச்
செறும்பெரிய தீவினைகள் சென்றுகடி தோடி
யுறும்பெரிய துன்ப முயிர்க் கொலையும் வேண்டா

பொருள் : அலங்கல் அணி வேலோய்! - மாலை புனைந்த வேலோனே!; பெரிய தீவினைகள் கூறின் - பெரிய தீவினையின் இயலைக் கூறின்; மறம் புரிகொள் நெஞ்சம் வழியாப் புகுந்தது ஈண்டி - அவை பாவத்தை விரும்பிய நெஞ்சின் வழியாகப் புகுந்து திரண்டு; கடிது ஓடிச்சென்று செறும் - தம்மைச்செய்த வுயிரோடு விரைந்தோடிச்சென்று அதனைத் துன்புறுத்தும்; பெரிய துன்பம் உறும் - துன்புறுத்தும்பொழுது அது பெரிய துன்பம் உறும்; உயிர்க்கொலையும் வேண்டா - (ஆதலால்) அத்தீவினைக்கு அடியதாகிய உயிர்க்கொலையும் நுமக்கு வேண்டா; பெரிய அறம் - இஃது அறங்களுட் பெரிய அறம்.

விளக்கம் : தீவினைகள் கூறின் எனவும் உயிர்க்கொலையும் வேண்டா, இது பெரிய அறம் என்றும் இயைத்துக்கொள்க. சுட்டு வருவித்துக் கொள்க.

ஒன்றாக நல்லது கொல்லாமை

என்றார் திருவள்ளுவனாரும் (323.) உயிரோடே ஓடி என்றும் அது உறும் என்றும் வருவித்தோதுக. ( 270 )

2869. மெய்யுரை விளங்குமணி மேலுலக கோபுரங்க
ளையமிலை நின்றபுகழ் வையகத்து மன்னு
மையல்விளை மாநரக கோபுரங்கள் கண்டீர்
பொய்யுரையும் வேண்டா புறத்திடுமி னென்றான்.

பொருள் : மெய்யுரை வையகத்து நின்ற புகழ் மன்னும் - மெய்யுரை கூறின் இவ்வுலகத்து நிலையான புகழ் பொருந்தும்; மேலுலகம் விளங்கும் மணிக்கோபுரங்கள் (மன்னும்) - (மறுமையில்) மேலுலகிலே விளக்கமான மணிக்கோபுரங்களையுடைய கோயில்கள் பொருந்தும்; (பொய்யுரை) மையல் விளை மாநகர கோபுரங்கள் - (மன்னும்) பொய்யுரையைக் கூறினால் அதற்கு (இம்மையிற்) பழியும் (மறுமையில்) நரகத்துக்கோயில்களும் பொருந்தும்; ஐயம் இலை கண்டீர் - இவை ஐயமில்லை அறிமின்; வேண்டா புறத்து இடுமின் என்றான் - (ஆதலால்) அப்பொய்யுரையும் வேண்டாம்; கைவிடுமின் என்றான்.

விளக்கம் : மெய்யுரை கூறின் என்றும் பொய்யுரை கூறின் என்றும் வருவித்தோதுக. மெய்யுரைக்குப் புகழ் கூறியதற்கேற்பப் பொய்யுரைக்குப் பழியைக் கொள்க. வையகத்து என்றது இம்மையில் என்பது பட நின்றது. எனவே மறுமையில் என வருவித்தோதுக.
( 271 )

2870. முளரிமுக நாகமுளை யெயிறுழுது கீற
வளவிறுயர் செய்வரிவண் மன்னரத னாலும்
விளைவரிய மாதுயரம் வீழ்கதியு ளுய்க்குங்
களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே.

பொருள் : முளரிமுகம் நாகம் முளை எயிறு உழுதுகீற - தாமரைப் பூப்போலும் புள்ளிகள் பொருந்திய முகத்தையுடைய யானையின் முளைத்த எயிறு உழுது பிளக்க; இவண் மன்னர் அளவு இல்துயர் செய்வர் - இவ்வுலகிலே மன்னர் அளவில்லாத துயரைச் செய்வர்; வீழ்கதியுள் விளைவு அரிய மாதுயரம் உய்க்கும் - (பின்னர்) நரகத்தில் விளைதற்கரிய பெரிய துன்பங்களை அது தானே செலுத்தும்; அதனாலும் களவு கடன் ஆகக் கடிந்திடுதல் சூது - அதனாலும் அக்களவை மேற்கொண்டு நீக்குதல் உபாயம் ஆகும்.

விளக்கம் : முளரி - தாமரை. தாமரைப் பூப்போலும் புகரையுடைத்தாகிய யானையினது முளைத்த எயிறு என்க. சூது - ஈண்டு உபாயம் என்பதுபட நின்றது.

2871. மடத்தகைய நல்லார் மனங்கரிய மற்றார்
பிடர்த்தலையொள் வாள்போற் பிறர்மனைகள் சேரி
னெடுப்பரிய துன்பத் திடைப்படுவ ரின்னா
நடுக்குடைய காமம் விடுத்திடுத னன்றே.

பொருள் : மடத்தகைய நல்லார் மனம்கரிய - இளமை சான்ற மங்கையராகிய தம் மனைவியர் மனம் வருந்த; மாற்றார் பிடர்த்தலை ஒள் வாள்போல் பிறர் மனைகள் சேரின் - பகைவர் கழுத்தில் வைத்த ஒள்ளிய வாளைப்போற் கொடிதாகிய பிறர் மனையாளைச் சேர்தலைக்கொள்ளின்; எடுப்ப அரிய துன்பத்திடைப்படுவர் - தாங்கற்கரிய துன்பத்தினிடையிலே அழுந்துவர்; இன்னா நடுக்குடைய காமம் விடுத்திடுதல் நன்று - (ஆதலால்) துன்பமாகிய நடுங்குதலையுடைய காமத்தினைக் கைவிடுதல் நல்லது.

விளக்கம் : காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும்
ஆணின்மை செய்யுங்கால் அச்சமா - நீணிரயத்
துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தாற் கூறு (நாலடி - 84)

என்பவாகலின், மாற்றார் பிடர்த்தலை ஒள்வாள்போற் பிறர்மனை என்றும், எடுப்பரிய துன்பத்திடைப்படுவர் என்றும் ஓதினார்.
( 273 )

2872. தெருளிற்பொருள் வானுலக
மேறுதற்குச் செம்பொ
னிருளில்படு கால்புகழ்வித்
தில்லையெனி னெல்லா
வருளுநக வையநக
வைம்பொறியு நையப்
பொருளுநக வீட்டும்பொருள்
யாதும்பொரு ளன்றே.

பொருள் : தெருளின் - தெளிவாக ஆராய்ந்தால்; பொருள் - (நன்னெறியில் ஈட்டும்) பொருளானது; வான் உலகம் ஏறுதற்குச் செம்பொன் இருள் இல் படுகால் - வானுலகிற்கு ஏறிச் செல்லச் செம்பொன்னலான மயக்கமற்ற ஏணியாம்; புகழ்வித்து - புகழுக்கு வித்து; இல்லையெனின் - (நன்னெறியில் ஈட்டுதல்) இல்லையானால்; எல்லா அருளும் நக - எல்லா அருளும் இகழ; வையம் நக - உலகம் இகழ; ஐம்பொறியும் நைய - ஐம்பொறிகளும் வருந்த; பொருளும் நக - (ஈட்டிய) பொருளும் இகழ; ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்று - சேர்த்துவைக்கும் பொருள் சிறிதும் பொருளாகாது.

விளக்கம் : அருள்கள் பலவாதலின், எல்லா அருளும் என்றார். வையம் - வையத்துள்ளார் (ஆகுபெயர்). ஐம்பொறியும் பொருள்களை நுகரப் பெறாமையால் நைய என்றார். ஈட்டிய பொருளும் எம்மை நுகர்கின்றிலன் என்று நகும். செம்பொன் வானுலகம் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். ( 274 )

2873. பொய்யொடு மிடைந்தபொரு ளாசையுரு ளாய
மைபடும்வி னைத்துகள் வழக்குநெறி மாயஞ்
செய்தபொருள் பெய்தகலன் செம்மைசுடு செந்தீக்
கைதவ நுனித்தகவ றாடலொழி கென்றான்.

பொருள் : பொய்யொடு மிடைந்த பொருள் ஆசை உருள் ஆயம் - பொய்யொடு நெருங்கிய பொருளாசையால் உருள்கிற பரத்தையர் கூட்டம்; மாயம் செய்த பொருள் பெய்த கலன் - மாயத்தைச் செய்த இன்பம் நிறையப் பெய்ததொரு கொள்கலம்; மைபடும் வினைத்துகள் வழக்கு நெறி - ஆதலின், பாவமுண்டாகும் தீவினையாகிய துகளைப் புகுத்துதற்கு வழியாய் இருக்கும்; (அதனை ஆடுதலையும்) செம்மை சுடு செந்தீக் கைதவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான் - நடுநிலையைச் சுடுகின்ற சிவந்த நெருப்பாகிய வஞ்சனை மிக்க கவறாடுதலையும் ஒழிக என்று கூறினான்.

விளக்கம் : உருள் ஆயம் - தம்மை நுகர்வார் மனங்கட் கேற்பப் புரளும் ஆயம். வழக்கு : வளிவழக்கறுத்த வங்கம் (368 : புறநா.) என்றாற்போலக் கொள்க. பொருளென்றது ஈண்டு இன்பத்தினைக் குறிக்கும். ( 275 )

2874. காமமுடை யார்கறுவொ டார்வமுடை யாருந்
தாமமொடு சாந்துபுனை வார்பசியி னுண்பா
ரேமமுடை யார்களிவ ரல்லரிவை யில்லா
வாமனடி யல்லபிற வந்தியன்மி னென்றான்.

பொருள் : காமமுடையார் - காமத்தையுடையாரும்; கறுவொடு ஆர்வம் உடையாரும் - செற்றத்துடன் ஆசையையுடையாரும்; தாமமொடு சாந்து புனைவார் - மாலையையும் சாந்தையும் புனைவாரும்; பசியின் உண்பார் - பசியாலே இல்லிற்சென்று உணவேற்பாருமாகிய; இவர் ஏமம் உடையார்கள் அல்லர் - இவர்கள் நமக்கு ஆதரவு செய்தவர்களல்லர்; இவை இல்லாவாமன் அடி அல்ல பிற - இத்தீப் பண்புகள் இல்லாதவாமன் அடி அல்லாத பிற அடிகளை; வந்தியன்மின் என்றான் - வணங்கன்மின் என்றான்.

விளக்கம் : கறுவு - செற்றம். ஆர்வம் - ஆசை. ஏமம் - காவல். இவை என்றது காமமும் செற்றமும் ஆர்வமும் ஆகிய இத் தீங்குணங்கள் என்றவாறு. வந்தித்தல் - வணங்குதல். ( 276 )

2875. பூவைகிளி தோகைபுண ரன்னமொடு பன்மா
யாவையவை தங்கிளையி னீங்கியழ வாங்கிக்
காவல்செய்து வைத்தவர்க டங்கிளையி னீங்கிப்
போவர்புகழ் நம்பியிது பொற்பிலது கண்டாய்.

பொருள் : புணர் அன்னமொடு - தன் கிளையுடன் கூடிய அன்னத்தோடு; பூவை கிளி தோகை - பூவையும் கிளியும் தோகையும்; பல்மா - பல விலங்குகளும்; யாவை - பிறவும் ; அவைதம் கிளையின் நீங்கி அழவாங்கி - அவற்றைத் தம் உறவினின்றும் நீங்கி வருந்தப் பிரித்து; காவல் செய்து வைத்தவர்கள் - இம்மையிலே காவலிட்டு வைத்தவர்கள்; தம் கிளையின் நீங்கிப் போவர் - (மறுமையில) தம் உறவினின்றும் பிரிந்து, பிறராற் காவல் செய்யப்பட்டுப் போவர்; புகழ் நம்பி - புகழ் பெற்ற நம்பியே!; இது பொற்பு இலது கண்டாய் - (ஆதலின்) இதுவும் அழகில்லாதது காண்.

விளக்கம் : கட்டுதல் கூட்டில் அடைத்தல் செய்தற்குரிய அல்லா இளமைப் பருவத்தனவற்றையே ஈண்டுங் கூறலின், காவல் செய்து என்றார். ஈண்டுக் காவல் செய்து வைத்தவர் என்று கூறலின், முன்னம் கட்டுண்டான் என்றற்குக் காரணம் இன்மையுணர்க என்று இச் செய்யுளிலும் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். ( 277 )

2876. அல்லித்தா ளற்ற போது
மறாதநூ லதனைப் போலத்
தொல்லைத்தம் முடம்பு நீங்கத்
தீவினை தொடர்ந்து நீங்காப்
புல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்து
புக்குழிப் புக்குப் பின்னின்
றெல்லையி றுன்ப வெந்தீச்
சுட்டெரித் திடுங்க ளன்றே.

பொருள் : அல்லித்தாள் அற்றபோதும் அறாத நூலதனைப் போல - அல்லித்தண்டு அற்று வீழ்ந்த போதும் நூல் அறாது தொடர்ந்து நிற்குந் தன்மைபோல; தொல்லைத் தம் உடம்பு உயிரை நீங்க - பழைய தம் உடம்பு உயிர நீங்கிக் கிடக்க; தீவினை தொடர்ந்து நீங்கா - (பழைய) தீவினை மட்டும் (உயிரைத்) தொடர்ந்து நீங்காமல்; சூழ்ந்து புல்லிக்கொண்டு - சூழவிருந்து பற்றிக்கொண்டு; புக்குழிப்புக்கு - அவ்வுயிர்போய்ப் புக்க உடம்பிலே தானும் புகுந்து. பின் நின்று - பின்னே நின்று; எல்லையில் துன்ப வெந்தீச் சுட்டு எரித்திடுங்கள் - அளவற்ற துன்பஞ்செய்யும் கொடிய நெருப்பாகச் சுட்டு எரித்திடும்.

விளக்கம் : தாள் - தண்டு. உடம்பிற்கு அல்லித்தண்டும், தீவினைக்கு அதன் நூலும் உவமைகள். எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்றாடும், என்றார் திருவள்ளுவனாரும். வீயாது பின் சென்றடுதலாவது ஒருவன் நிழல் நெடிதாகச் சென்றும் அவன் காலடியில் வற்துறுவது போல வினையும் வந்து துன்புறுத்தும் என்பதாம். எரித்திடுங்கள் என்புழி, கள் : அசை.
( 278 )

2877. அறவிய மனத்த ராகி யாருயிர்க் கருளைச் செய்யிற்
பறவையு நிழலும் போலப் பழவினை யுயிரோ டாடி
மறவியொன் றானு மின்றி மனத்ததே சுரக்கும் பால
கறவையிற் கறக்குந் தம்மாற் காமுறப் பட்ட வெல்லாம்.

பொருள் : அறவிய மனத்தர் ஆகி - அறத்தையுடைய மனத்தராய்; ஆர் உயிர்க்கு அருளைச் செய்யின் பல்லுயிர்க்கும் அருளைச் செய்தால்; பழவினை பறவையும் நிழலும்போல உயிர்ரோடு ஆடி - அப் பழமையான நல்வினை பறவையும் நிழலும் நீங்காது திரியுமாறுபோல் அவ்வுயிரை விடாமல் திரிந்து; ஒன்றானும் மறவி இன்றி - சிறிதும் மறதியில்லாமல்; மனத்ததேசுரக்கும் பால கறவையின் - மனத்தில் நினைத்ததையே கொடுக்கும் பாலவாகிய கறவைப் பசுவைப்போல; தம்மால் காம் உறப்பட்ட எல்லாம் கறக்கும் - தம்மால் விரும்பப்பட்ட எல்லாவற்றையும் கொடுக்கும்.

விளக்கம் : அறவிய மனம் - அறத்தை விரும்பும் நெஞ்சம். பழவினை - அந் நல்வினை. உயிர்க்குப் பறவையும் பழவினைக்கு நிழலும் உவமைகள். வள்ளுவனாரும் பழவினைக்கு நிழலையே உவமை கூறுகின்றனர். மனத்தின் நினைத்ததே கொடுக்கும் பாலவாகிய கறவை என்க. அது காமதேனு. ( 279 )

2878. நெடுமணி யூபத் திட்ட
தவழ்நடை யாமை நீணீர்த்
தொடுமணிக் குவளைப் பட்டந்
துணையொடு நினைப்ப தேபோற்
கடுமணிக் கயற்க ணல்லார்
காமமும் பொருளுஞ் சிந்தித்
தடுமணி யாவி நீப்பா
ரறிவினாற் சிறிய நீரார்.

பொருள் : நெடுமணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை - நீண்ட அழகிய வேள்வித் தூணிலே கட்டப்பட்ட தவழும் நடையுடைய யாமையானது; நீள்நீர்த் தொடுமணிக் குவளைப் பட்டம் துணையொடு நினைப்பதேபோல் - தான் கிடந்த மிகு நீரையுடைய, தோண்டப்பட்ட, மணியையும் குவளையுமுடைய பொய்கையையும் துணையையும் நினைப்பதைப்போல; அறிவினால் சிறிய நீரார் - அறிவிலே சிறுமையுற்ற இயல்பினார்; கடுமணிக் கயற்கண் நல்லார் காமமும் பொருளும் சிந்தித்து - கொடிய அழகிய கயலைப்போன்ற கண்களையுடைய நல்லாரின் காமத்தையும் பொருளையும் எண்ணி; அடும் மணி ஆவி நீப்பார் - அராவிய மணிபோன்று சிறந்த உயிரைப் (பாழே) போக்குவர்.

விளக்கம் : அழலெழு தித்திய மடுத்த யாமை - நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாங்கு (361) என்றார் அகத்திலும்.  மணி - அழகு, மணிக்குவளை : உவமத்தொகை - கடுங் கண், மணிக்கயற்கண் என இயைக்க, மணிக்கயல்-அழகிய கயல்மீன். மணி ஆவி நீப்பார் என்றது, வீடு பெறுதற்குரிய மணியுயிரைப் பாழே போக்குவர் என்றவாறு. அடுமணி - அராவிய மணி என்க. ( 280 )

2879. வீறழி வினைசெய் காலன்
வைரவாள் வலையிற் பட்டாற்
சாறழி குவளை மாலை
யவரையுந் தனமு நீக்கி
யாறிழி வரையிற் றோன்று
மறநனி நினைப்பர் செம்பொ
னேறெழி னெறியி னேறி
யிருவிசும் பாளு நீரார்.

பொருள் : செம்பொன் ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார் - செவ்விய பொன் சிறந்த அழகிய நெற்றிலே சென்று பெரிய வானுலகை ஆளும் இயல்பினார்; வீறு அழி வினைசெய் காலன் வயிராவாள் வலையில் பட்டால் - கொலைவினை செய்கின்ற காலனுடைய வயிர வாள்போலே கொல்லும் வலையில் அகப்பட்டால்; சாறு அழி தனமும் குவளைமாலையவரையும் நீக்கி- விழாக் கொண்டாடுதலால் மிக்க பொருளையும் குவளை மாலையணிந்த மகளிரையும் விட்டு; ஆறிழி வரையின் தோன்றும் அறம் நனி நினைப்பர் - ஆறுகள் தோன்றி யிழிகின்ற மலைபோலத் தோன்றும் அறத்தை மிகவும் நினைப்பர்.

விளக்கம் : வீறழிந்த வினை : கொலைத்தொழில், பலகாலும் வெட்டினாலுங் கேடு இன்று என்பதனை நினைக்க வைரவாள்  என்றார். வலை : பிறப்பு. ஆறழிகின்றவரை என்றார் பயன்படுதலும் நிலைகுலையாமையும் நோக்கி. நெறி - தவம் செம்பொன் நீரார் என இயைத்துச் சுவர்க்கத்தே செல்லும் பொன்னாகிய உயிரினையுடையார் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். (281)

2880. துன்னிமற் றறத்தைக் கேட்டே
துகினெருப் புற்ற தேபொன்
மின்னுத்தார் மார்பன் மெய்வெந்
தாலியி னுருகிப் பெண்பா
லன்னப்பார்ப் பன்று கொண்ட
தடத்திடை விடுவித் திட்டான்
பின்னைத்தன் கிளைகள் கூட்டம்
பெருந்தகை வித்தி னானே.

பொருள் : மின்னுத்தார் மார்பன் - மின்னுப்போலும் தாரை உடைய மார்பன்; அறத்தைத் துன்னிக்கேட்டு - (இவ்வாறு) அறத்தைப் பொருந்திக் கேட்டு (அஞ்சி); துகில் நெருப்பு உற்றதேபோல் - உடுத்த துகிலிலே நெருப்புற்றதைப்போல; மெய் வெந்து - உடல் வெதும்பி; ஆலியின் உருகி - ஆலங்கட்டி போல உருகி; பெண்பால் அன்னப் பார்ப்பு - பெண்பாலிடமிருந்த அன்னப் பார்ப்பை; விடுவித்து அன்று கொண்ட தடத்திடை இட்டான் - நீக்கி அன்றுகொண்ட பொய்கையிலே போகவிட்டான்; பின்னைத் தன் கிளைகள் கூட்டம் பெருந்தகை வித்தினான் - பிறகு, அப்பார்ப்பின் உறவுடன் கூடுதலுக்கும் அப்பெருந்தகை வழி செய்தான்.

விளக்கம் : பின்னைத் தன் கிளைகள் கூட்டம் வித்தினான் என்பதற்கு, முன்னர்க்கிளைப் பிரிவை வித்தியதேயன்றிப் பின்னர்க் கிளைகளிடத்துக் கூட்டத்தையும் வித்தினான் என்று பொருள்கூறி, இக்காரணத்தாலே விசயையை நீங்கிச் சுநந்தையிடத்தே வளர்ந்தானென்றும், பின்னர் அவளைச் சேர்ந்தான் என்றும் முன்னர்க் கூறினார் என்று விளக்கங் கூறுவர். ( 282 )

2881. மெய்ப்படு முதுபுண் டீர்ப்பான்
மேவிய முயற்சி போல
வொப்புடைக் காமந் தன்னை
யுவர்ப்பினோ டொழித்துப் பாவ
மிப்படித் திதுவென் றஞ்சிப்
பிறவிநோய் வெருவி னாலே
மைப்படு மழைக்க ணல்லார்
வாய்க்கொண்ட வமுத மொப்பான்.

பொருள் : மைப்படும் மழைக்கண் நல்லார் வாய்க்கொண்ட அமுதம் ஒப்பான் - மை தீட்டிய மழைக்கண் மங்கையர் வாய்க்கொண்ட அமுதம்போல அவர் நினைத்த தன்மையனாக இருந்தவன்; மெய்ப்படும் முதுபுண் தீர்ப்பான் மேவிய முயற்சிபோல - உடம்பிற்கண்ட பழம் புண்ணைத் தீர்ப்பதற்குக் கைக்கொண்ட முயற்சிபோல; ஒப்புடைக் காமந்தன்னை உவர்ப்பினோடு ஒழித்து - (தன் இளமைக்கு) ஒப்புடைய காமத்தை வெறுப்பினால் ஒழித்து; பாவம் இது இப்படித்து என்று அஞ்சி பாவத்தையும் இது இவ்வாறு பெரியதாந் தன்மையுடையது என்றும் அஞ்சி; பிறவி நோய் வெருவினான் - (இவற்றை யெல்லாமுடைய) பிறவிப் பிணியை எண்ணி அஞ்சினான்.

விளக்கம் : முது புண் : ஒடு என்பர். முதுபுண் என்பதற்கு ஒடு என்றனர் நச்சினார்க்கினியர். தீர்ப்பான் : வினையெச்சம். தன்னிளைமையோடு ஒப்புடைய காமம். உவர்ப்பு - வெறுப்பு. இப்படித்து - இத்தன்மைத்து என்றவாறு. இவற்றையெல்லாம் உடைய பிறவிநோய் என்பதுபடநின்றது. அவனது இளமையைத் தெரித்தோதுவர் நல்லார் வாய்க்கொண்ட அமுதமொப் பான், என்றார். ( 283 )

2882. ஆளியாற் பாயப் பட்ட
வடுகளி யானை போல
வாளிவிற் றடக்கை மைந்தன்
வாய்விட்டுப் புலம்பிக் காம
நாளினு நஞ்சு துய்த்தே
னச்சறை யாக நன்பொற்
றோளியர்த் துறந்து தூய்தாத்
தவஞ்செய்வ லடிக ளென்றான்.

பொருள் : ஆளியால் பாயப்பட்ட அடுகளி யானைபோல - ஆளியென்னும் விலங்காற் பாயப்பட்ட, கொல்லும் மதமுடைய யானையைப்போல; வாளி வில் தடக்கை மைந்தன் வாய்விட்டுப் புலம்பி - அம்பையுடைய வில்லேந்திய நீண்ட கையானாகிய யசோதரன் வாய்விட்டழுது; நஞ்சு அறையாகக் காம நஞ்சு நாளினும் துய்த்தேன் - நஞ்சிற்கு ஓர் இருப்பிடமாகக் காமமாகிய நஞ்சினை நாள்தோறும் நுகர்ந்தேன்; அடிகள்! - அடிகளே!; நன் பொன் தோளியர்த் துறந்து தூய்து ஆ தவம் செய்வல் என்றான் - அழகிய பொன்னணி புனைந்த தோளியரை நீங்கித் தூயதாகத் தவத்தைச் செய்வேன் என்றான்.

விளக்கம் : துய்த்தேன் என்று யானை போலப் புலம்பித் தவஞ் செய்வல் அடிகள் என்றான் எனக்கூட்டுவர் நச்சினார்க்கினியர். தவஞ்செய்தலே தன்கருமமாதலின் தவஞ்செய்வல் எனத் துணிந்தனன் என்பதாம். ( 284 )

2883. சிறுவன்வாய் மொழியைக் கேட்டே
தேர்மன்னன் றானுஞ் சொன்னா
னுறுகளிற் றுழவ மற்றுன்
னொளிமுடித் தாய மெய்தி
யறைகடல் வேலி காத்துன்
னலங்கல்வேற் றாய மெல்லாம்
பெறுதகு புதல்வற் கீந்து
பின்னைநீ துறத்தி யென்றான்.

பொருள் : சிறுவன் வாய்மொழியைக் கேட்டு - யசோதரன் வாய்மொழியைக் கேட்டு; தேர் மன்னனும் சொன்னான் - அரசனும் கூறினான்; (எங்ஙனம் சொன்னான் எனின்) உறுகளிற்று உழவ - மிகுதியான களிறுகளையுடைய உழவனே!; உன் ஒளி முடித்தாயம் எய்தி - உன் ஒளிமுடியாகிய தாயத்தை அடைந்து; அறை கடல் வேலி காத்து - ஒலிக்குங் கடலை வேலியாகக் கொண்ட உலகைக் காத்து; உன் அலங்கல் வேல் தாயம் எல்லாம் - உன்னுடைய மாலையணிந்த வேலாற் கொண்ட தாயத்தையெல்லாம்; பெறு தகு புதல்வற்கு ஈந்து - பெறத்தக்க மகனுக்களித்து; பின்னை நீ துறத்தி என்றான் - பிறகு, நீ துறப்பாயாக என்று கூறினான்.

விளக்கம் : மன்னன் - பவணமாதேவன். மன்னன் சொன்னான் எங்ஙனம் சொன்னான் எனின் உழவ! எய்தி, காத்து, ஈந்து, பின்னைத் துறத்தி என்றான் என்க. ( 285 )

2884. கொலைச்சிறை யுய்ந்து போகு
மொருவனைக் குறுக வோடி
யலைத்தனர் கொண்டு பற்றி
யருஞ்சிறை யழுத்து கின்றார்
தொலைப்பருஞ் சுற்றத் தாரோ
பகைவரோ வடிக ளென்ன
விலைப்பெரு மணியை முந்நீர்
நடுக்கடல் வீழ்த்த தொத்தான்.

பொருள் : அடிகள் - அடிகளே!; கொலைச்சிறை உய்ந்து போகும் ஒருவனைக் குறுக ஓடி - கொலைத்துன்பமுடைய சிறையினின்றும் தப்பிப்போகும் ஒருவனைத் தொடர்ந்து சென்று; பற்றிக்கொண்டு; அலைத்தனர் அருஞ்சிறை அழுத்துகின்றார் - வருத்தினராய்த் திரும்பவும் அந்த அரிய சிறையிலே அழுத்துகின்றவர்; தொலைப்ப அருஞ்சுற்றத்தாரோ? பகைவரோ? என்ன - நீங்கற்கரிய உறவினரோ? பகைவரோ என்று கூற; பெருவிலை மணியை முந்நீர் நடுக்கடல் வீழ்த்தது ஒத்தான் - அதுகண்ட பவணமாதேவன் மிகு விலைபெற்ற மணியை முந்நீர்மையுடைய கடல் நடுவே வீழ்த்ததைப் போன்றான்.

விளக்கம் : தொல்லை : தொலை என விகாரப்பட்டதென்பர் நச்சினார்க்கினியர். விலைப்பெருமணி அசோதரனுக்கும் கடல் துறவுக்கும் மணியை வீழ்த்தோர் பவணமாதேவனுக்கும் உவமைகள். ஓங்கிய நன்மணி உறுகடல் வீழ்த்தோர் (சிலப். 30 : 30) என்றும் மாமணி ஓங்கு திரைப் பெருங்கடல் வீழ்த்தோர் (மணிமே. 2 : 72 - 3) என்றும் பிற சான்றோரும் ஓதுதல் காண்க. ( 286 )

2885. காதல மல்ல மேனாட் கழிந்தநம் பிறவி தம்மு
ளேதிலம் யாங்க ளெல்லா மினிக்கொளு முடம்பினானு
மாதலாற் சுற்ற மில்லை யதுபட்ட வாறென் றம்பூந்
தாதலர் மார்ப னற்புத் தளையறப் பரிந்திட் டானே.

பொருள் : மேல் நாள் கழிந்த நம் பிறவி தம்முள் யாங்கள் எல்லாம் காதலம் அல்லம் - முன்னர்க் கழிந்த நாளில் நம் பிறவிகளில் யாங்கள் எல்லோரும் இவற்குச் சுற்றம் அல்லோம்; இனிக் கொளும் உடம்பினானும் ஏதிலம் - இனிப் பிறக்கும் பிறவிகளினும் சுற்றம் ஆகேம்; ஆதலால் சுற்றம் இல்லை - ஆதலால், ஈண்டுச் சுற்றம் என்பது ஒன்றில்லை; பட்ட ஆறு அது என்று - இவற்குப் பட்டதும் அது என்று கருதி; அம் பூந்தாது அலர் மார்பன் அற்புத்தளை அறப் பரிந்திட்டான் - அழகிய மலர்த்தாது கொண்ட மலர்மார்பன் அன்பாகிய தளை போம்படி அறுத்துக்கொண்டான்.

விளக்கம் : தாய் முதற் சுற்றமெல்லாகூட்டி. யாங்கள் எல்லாம் என்றான். அது என்றது தான் கருதிய கருத்தை. ( 287 )

2886. நற்பொறி குயிற்றி வல்லான்
செய்ததோர் நன்பொற் பாவை
பொற்பொறி கழல வெல்லாப்
பொறிகளுங் கழல்வ தேபோற்
சொற்பொறி சோர வெல்லாப்
பொறிகளுஞ் சோர்ந்து நம்ப
னிற்பொறி யின்ப நீக்கி
யிராயிரர் சூழச் சென்றான்.

பொருள் : நல் பொறி குயிற்றி - நடத்துதற்கு உரிய நல்ல பொறியை உள்ளே வகுத்து; வல்லான் செய்தது ஓர் நன் பொன்பாவை - வல்லவன் இயற்றியதாகிய ஒரு நல்ல பொற்பாவை; பொன் பொறி கழல - அந்த நல்ல பொறி குலைய; எல்லாப் பொறிகளும் கழல்வதேபோல் - (அதனால்) எல்லாப் பொறிகளும் குலைதல் போல; சொல் பொறி சோர - அரசனுடைய சொலலாகிய பொறி ஒன்று கழலுதலாலே; நம்பன் எல்லாப் பொறிகளும் சோர்ந்து - யசோதரன் தன்னுடைய ஐம்பொறிகளும் புலன்களிலே செல்லும் வேட்கை போக; இல் பொறி இன்பம் நீக்கி - இல்லின்கண் நல்வினையால் நுகரும் இன்பத்தையும் நீக்கி; இராயிரர் சூழச் சென்றான் - இரண்டாயிரம் அரசர்கள் சூழ்ந்து வரத் துறவிலே சென்றான்.

விளக்கம் : சோர்ந்து. சோர: எச்சத்திரிபு. பொறி - இயந்திரம். பொற்பொறி - அழகிய பொறி. எல்லாப் பொறிகளும் சோர்ந்து என்றது மெய், வாய், கண், மூக்கு, செவீ என்னும் ஐம்பொறிகளும் சோர்ந்து என்றவாறு. இல் - இல்லம். பொறி - ஊழ். ( 288 )

2887. தணக்கிறப் பறித்த போதுந்
தானளை விடுத்தல் செல்லா
நிணப்புடை யுடும்ப னாரை
யாதினா னீக்க லாகு
மணப்புடை மாலை மார்ப
னொருசொலே யேது வாகக்
கணைக்கவி னழித்த கண்ணார்த்
துறந்துபோய்க் கடவு ளானான்.

பொருள் : தணக்கு இறப் பறித்தபோதும் தான் அளைவிடுத்தல் செல்லா - வாலை இறப்பற்றிப் பறித்த காலத்தும் தான் அளையைக் கைவிடாத; நிணம் புடை உடும்பு அனாரை யாதினால் நீக்கல் ஆகும் - நிணத்தைப் படயிலே உடைய உடும்புபோன்ற வரை யாதொரு வழியாலும் இல்வாழ்க்கையினின்றும் போக்கவியலாது; மணம்புடை மாலை மார்பன் ஒரு சொலே ஏது ஆக மணத்தைக் கூடுதலையுடைய மாலையணிந்த மார்பனாகிய யசோதரன் (முற்பிறப்பின் பயனால்) தந்தை கூறிய ஒரு சொல்லே காரணமாகக் கருதி; கணைக்கவின் அழித்த கண்ணார்த் துறந்து போய் - அம்பின் அழகை அழித்த கண்களையுடைய மகளிரைத் துறந்து சென்று; கடவுள் ஆனான் - முனிவன் ஆனான்.

விளக்கம் : தணக்கு - வால். நிணத்தைப் புடையிலேயுடைய உடும்பென்க. மணத்தைக் கூடுதலையுடைய மாலை என்க. இனி. மணப்பு - மணத்தல் எனினும் இழுக்கின்று. ( 289 )

2888. தூமமார்ந் தணங்கு நாறுஞ் சுரும்புசூழ் தாரி னானுந்
தாமமா ரொலிய லைம்பாற் சயமதித் திருவு மார்ந்த
காமமா சுண்ட காதற் கதிர்வளைத் தோளி னாரு
நாமநாற் கதியு மஞ்சி நற்றவத் துச்சி கொண்டார்.

பொருள் : தூமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ்தாரினானும் - அகிற்புகை நிறைந்து தெய்வத்தன்மை மணக்கும் வண்டுமுரலும் மாலையனாகிய பவணமாதேவனும்; தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதித்திருவும் - ஒளி நிறைந்த மாலையணிந்த ஐம்பாலையுடைய சயமதியாகிய திருவனையாளும்; ஆர்ந்த காமம் மாசு உண்ட காதல் கதிர்வளைத் தோளினாரும் - நுகர்ந்த காமமாகிய மாசிலே தழும்பிய, காதலூடடும் ஒளிமிகும் வளையணிந்த தோளினாராகிய யசோதரன் மனைவியரும்; நாமம் நால் கதியும் அஞ்சி - அச்சந்தரும் நால்வகைப் பிறப்பிலும் சேறற்கு அஞ்சி; நல் தவத்து உச்சி கொண்டார் - நல்ல தவத்தின் முடிவைக் கொண்டனர்.

விளக்கம் : தூமம் - நறுமணப்புகை. சுரும்பு - வண்டு. தாரினான் என்றது பவணமாதேவனை ஒலியல் - மாலை. சயமதியாகிய திரு என்க. காமமாகிய மாசிலே தழும்பிய தோளினார் என்க. தோளினார் என்றது யசோதரன் தேவிமாரை. ( 290 )

வேறு

2889. ஆசார நாணத் தவஞ்செய் தலர்க் கற்ப கத்தார்ச்
சாசார னென்னுந் தகைசாலொளித் தேவர் கோவாய்
மாசார மாய மணிவானுல காண்டு வந்தாய்
தூசார்ந்த வல்குற் றுளும்புந்நலந் தாரொ டென்றான்.

பொருள் : ஆசாரம் நாணத் தவம் செய்து - (யசோதரனா கிய நீ அவ்வாறு) தவத்திற்குக் கூறிய ஒழுக்கம் நாணும்படி தவம் புரிந்து; அலர்க் கற்பகத்தார் சாசாரன் என்னும் தகைசால் ஒளித்தேவர் கோவாய் - அலர்ந்த கற்பகமாலையணிந்த சகஸ்காரன் என்னும் பெருமை சான்ற ஒளியையுடைய வானவர் தலைவனாய்; மாசாரம் ஆய மணிவான் உலகு ஆண்டு - பெரு நன்மையுடைய மணிகள் நிறைந்த வானுலகை ஆண்டு; தூசு ஆர்ந்த அல்குல் துளும்பும் நலத்தாரொடு - ஆடை சூழ்ந்த அல்குலையும் ததும்பும் அழகையும் உடைய மனைவியருடன்; வந்தாய் என்றான் - இவ்வுலகிலே இப்பிறவியில் வந்தாய் என்று கூறினான்.

விளக்கம் : வந்தாய் என்றது சீவகனாகப் பிறந்ததை. வானவருல கின்கண் நுகரும் இன்பமும் யான் நுகரப்பெற்றிலேன் என்னும் அவர் நீங்கினால் அன்றி ஈண்டு வீடு பெறுதல் இன்றென்பது உணர்த்தற்கு இந்திரனாகி வந்தாய் என்றான், எனவே எல்லா அவாவும் அற்றது வீடு ஆயிற்று. முற்பிறப்பில் மனைவியரானவரே இப்பிறப்பிலும் மனைவியராக வந்தார் என்று ஈண்டுச் சாரணர் கூறுதலின், முன்னர்க் கனவில், எண் முத்தணிமாலை (சீவக. 223) தூங்கக் கண்டாள் என்றுணர்க. ( 291 )

2890. மின்னார் சிலம்பிற் சிலம்புங்குர லன்ன மேனாண்
மன்னா பிரித்தாய் பிரிந்தாய்சிறை வைத்த தனாற்
பொன்னார மார்ப சிறைப்பட்டனை போலு மென்றா
னின்னாப் பிறவிப் பிணிக்கின்மருந் தாய சொல்லான்.

பொருள் : இன்னாப் பிறவிப் பிணிக்கு இன்மருந்து ஆய சொல்லான் - துன்பந் தரும் பிறவி நோய்க்கு இனிய மருந்து ஆகிய சொல்லையுடைய முனிவன்; மன்னா! - அரசனே!; மேல் நாள் - முற்பிறவியிலே; மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் பிரித்தாய் பிரிந்தாய் - ஒளிநிறைந்த சிலம்பைப்போல ஒலிக்குங் குரலையுடைய அன்னப்பார்ப்பைக் கிளையினின்றும் பிரித்தாய், அத்தீவினையாலே நீயும் இப்பிறப்பிலே கிளையினின்றும் பிரிந்தாய்; பொன் ஆர மார்ப! - பொன் மாலை மார்பனே!; சிறை வைத்ததனால் சிறைப்பட்டனை என்றான் - முன் அதனைச் சிறை வைத்ததனால் நீயும் சிறைப்பட்டாய் என்றான்.

விளக்கம் : போலும் : அசை (ஒப்பில் போலி). நச்சினார்க்கினியர் முன் அதனைக் காவல் செய்து வைத்த அனதாலே நீயும் ஈண்டுச் சிறைப் பட்டாய் போற் பிறர்க்குத் தோன்றினை என்று பொருள் கூறுவர்.

அவர் கூறும் விளக்கம்:

பிறரிடத்து வளர்ந்தமை குறிப்பான் உணரக் கூறினாராதலின் சுநந்தையைப் பிறரென்று கூற்றாற் கூறாராயினர். போலும் என்பது, வேறு பட வந்த உவமத் தோற்றம் (தொல். உவம. 32) என்னுஞ் சூத்திரத்து அடங்கும்; ஒப்பில் போலியன்று; இதனைத் தற்குறிப்பேற்றம் என்ப. சீவகற்குச் சிறைப்பட்ட தன்மையின்மை, விலங்கி வில் உமிழும் பூணான் (சீவக.1167) என்னுங் கவியிற் கூறினார். ஈண்டுச் சாரணர், சிறைவைத்ததனாற் ....சிறைப்பட்டனை போலும் என்று கூறிய சிறை என்னுஞ் சொல்லும், முன்னர்க்கூறிப்போந்த கட்டு என்னுஞ் சொல்லும் பரியாயச் சொல்லன்றி வேறு வேறு பொருள்தருஞ் சொற்களாம்; என்னை? இத் தமிழ் மொழியில் உலக வழக்காகிய இயற்சொற்களில் ஒரு வினையை உணர்த்துதற்கு ஒரு சொல் வழங்குதல் அன்றி இருசொல் வழங்காமையின். சிறையென்பது தடுத்துக் காத்தலை உணர்த்தும்; முன்னர், அருஞ்சிறை (சீவக. 2867) என்பதற்குப் பின்னர், காவல் செய்து வைத்தவர்கள் (சீவக. 2875) என்றமையால். அன்றியும், சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் (குறள். 57), சிறைபனியுடைந்த சேயரி மழைக்கண் (குறுந். 86), கொலைச்சிறை உய்ந்து போகும் ஒருவனை (சீவக. 2884) என்றாற் போல்வன பிறவற்றானும், சிறைக்கால், நீர்ச்சிறை என்னும் வழக்கானும் உணர்க. இஃது ஆகுபெயராய்ச் சிறைவைத்தான் என்றால் சிறைக்கோட்டத்தை உணர்த்துமாறும் உணர்க. இதற்குக் கோலுதல், அகப்படுத்தல், தகைத்தல் என்றாற்போல ஆசிரியன் முழுவதூஉந் திரித்த திரிசொற்கள் பரியாயச் சொற்களாம்; இதற்குச் சிக்கல் என்பது திசைச்சொல். இனிக் கட்டினான் என்னுஞ்சொல் உண்டான், வந்தான் போனான் என்பனபோலப் புடைபெயர்ச்சித் தொழில் உணர்த்துஞ் சொற்கு வேறொரு சொல்லின்றி நிற்கும்; இதற்கு, வீக்கினான், பிணித்தான், யாத்தான் என்றாற்போல ஆசிரியன் முழுவதூஉந் திரித்துக் கொண்ட வினைத்திரி சொற்கள், பரியாயச் சொற்களாம். இது, பசுவை முலையைக் கட்டினான், பாம்பை வாயைக் கட்டினான் என்றாற்போலப் புடைபெயர்ச்சித் தொழில் புலப்படாமலும் நிற்கும்; இவ்விரண்டு சொல்லும் வேறு வேறு பொருள் தருதலின், ஒன்றற்கொன்று பரியாயம் ஆகாமையின் சாரணர் கூறிய சிறையென்னுஞ் சொல்லிடத்துக் கட்டென்னுஞ் சொல் பிறத்தலின்மையின், முன்னர்க் கட்டென்று கூறியது ஈண்டைக்குப் பொருந்தாதாயிற்று. ஈண்டு இவர்கூறிய பாவம் காரணமும், ஆண்டுச் சிறைப்பட்டது காரியமுமாகவே கோடல் வேண்டுதலின், சிறைப்பட்டானென்றே யாண்டும் பொருள் கூறவதன்றிக் கட்டுண்டான் என்று பொருள் கூறலாகாமை உணர்க. ( 292 )

வேறு

2891. மஞ்சிவர் மணிவரை யனைய மாதவன்
வஞ்சமி லறவுரை பொதிந்த வாய்மொழி
யஞ்சின னிருந்துழி யம்பு வீழ்ந்தென
நஞ்சுமிழ் வேலினா னடுங்க வீழ்ந்ததே.

பொருள் : மஞ்சு இவர் மணிவரை அனைய மாதவன் - முகில் ஊரும் கரிய மலைபோல அசைவற்ற மாதவன்; வஞ்சம் இல் அறவுரை பொதிந்த வாய்மொழி - மாறுபாடு இல்லாத அறவுரை நிறைந்த வாய்மொழியானது; நஞ்சு உமிழ வேலினான் - நஞ்சு பொழியும் வேலையுடைய சீவகன்; அஞ்சினன் இருந்துழி - முன்னர் அரசாட்சியை அஞ்சியிருந்தபோது; அம்பு வீழ்ந்தென நடுங்க வீழ்ந்தது - அம்பு வீழ்ந்தாற்போல அவன் நடுங்கும்படி (அவன் காதிலே) வீழ்ந்தது.

விளக்கம் : அரசாட்சியை அஞ்சியிருந்த சீவகன் காதிலே மாதவனுடைய வஞ்சமில் அறவுரை பொதிந்த வாய்மொழி நடுங்க வீழ்ந்தது என்க. அம்மொழி, தீவினையாற் சிறைப்பட்டதன்மை கூறியதனை. அஃது அம்பு வீழ்ந்த இடத்தினின்றும் போதற்குப் பிறர் நடுங்குமாறு போல, அரசாட்சியைக் கைவிட்டுப் போதற்கு நடுங்கும்படி வீழ்ந்ததென்க. பயன்தருதலின் மஞ்சு கூறினார். உமிழ் நஞ்சு பொதிந்த வாய்மொழி என்று மொழிமாற்றிக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். ( 293 )

2892. வாரணி மணித்துடி மருட்டு நுண்ணிடைக்
காரணி மயிலனார் சூழக் காவல
னேரணி மணிமுடி யிறைஞ்சி யேத்தினான்
சீரணி மாதவர் செழும்பொற் பாதமே.

பொருள் : வார் அணி மணித்துடி மருட்டும் நுண் இடை - வார் அணிந்த, மணிபுனைந்த துடியை மயக்கும் நுண்ணிடையை உடைய; கார் அணி மயில் அனார் சூழ - கார்காலத்தில் அணி செயும் மயில்போன்றவர் சூழ (வணங்கி நிற்ப); சீர் அணி மாதவர் செழும் பொன்பாதம் - புகழை அணிந்த மாதவரின் வளவிய பொன்னனைய திருவடிகளை; ஏர் அணி மணிமுடி - அழகு பொருந்திய மணிமுடியாலே; காவலன் இறைஞ்சி ஏத்தினான் - அரசன் வணங்கி வாழ்த்தினான்.

விளக்கம் : துடி - உடுக்கை. காரால் உண்டான அழகுடைய மயில் என்பர் நச்சினார்க்கினியர். காவலன் - ஈண்டுச்சீவகன். ஏர் - அழகு. சீர் - சீர்த்தி; பெரும்புகழ். ( 294 )

2893. நலத்திரு மடமக ணயந்த தாமரை
நிலத்திருந் திருசுடர் நிமிர்ந்து செல்வபோ
லுலப்பருந் தவத்தினா லோங்கு சாரணர்
செலத்திரு விசும்பொளி சிறந்த தென்பவே.

பொருள் : நலம் மடம் திருமகள் நயந்த தாமரை நிலத்து இருந்து - அழகுறும் இளமை பொருந்திய திருமகள் விரும்பிய தாமரைப் பூவையுடைய இடத்தேயிருந்து; உலப்பருந் தவத்தினால் ஓங்கு சாரணர் - கெடுதல் அற்ற தவத்தினாலே மேம்பட்ட சாரணர் இருவரும்; கெடுதல் அற்ற தவத்தினாலே மேம்பட்ட சாரணர் இருவரும்; இருசுடர் நிமிர்ந்து செல்வ போல் - இரண்டு கதிர்கள் எழுந்து செல்வனபோல; விசும்புசெல - வானிலே எழுந்து செல்ல; திரு ஒளி சிறந்தது - அவர் திருவொளி அவ்வானம் எங்கும் சிறந்தது.

விளக்கம் : சாரணர் தாமரை இடத்தேயிருந்து இருசுடர் செல்வபோல் விசும்பு செல ஒளி சிறந்தது என்க. ( 295 )

21. தாயத் தீர்வு

2894. சாரணர் போயபின் சாந்த மேந்திய
வாரணி வனமுலை வஞ்சிக் கொம்பனார்
போரணி புலவுவேற் கண்கள் பூத்தன
நீரணி குவளைநீர் நிறைந்த போன்றவே.

பொருள் : சாரணர் போயபின் - சாரணர் இருவரும் சென்ற பின்னர்; சாந்தம் ஏந்திய வார் அணி வனம் முலை வஞ்சிக் கொம்பனார் - சந்தனந் தாங்கிய வாரணிந்த அழகிய முலைகளையுடைய வஞ்சிக்கொடி போன்றவர்களின்; போர் அணி புலவுவேல் கண்கள் - போருக்குப் புனைந்த, புலவு கமழும் வேல் போன்ற கண்கள்; நீர் அணி பூத்தன குவளை நீர் நிறைந்த போன்ற - நீர் நிலையிலே அழகுற மலர்ந்தனவாகிய குவளை மலர்கள் நீர் நிறைந்தாற்போல நீர் நிறைந்தன.

விளக்கம் : அரசனுடைய துறவை எதிர் நோக்கி நீர்மல்கின.சாந்தம் - சந்தனம். கொம்பனார் கண்கள் நீர்நிறைந்த குவளைமலர் போன்றன என்றவாறு. எனவே, அஞ்சி அழுதனர் என்றவாறு. ( 296 )

2895. பொன்வரை நிலாக்கதிர் பொழிந்து போர்த்தபோற்
றென்வரைச் சந்தனந் திளைக்கு மார்பினான்
மின்னிவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே
யின்னுரை கொடான்கொடிக் கோயி லெய்தினான்.

பொருள் : பொன்வரை நிலாக்கதிர் பொழிந்து போர்த்த போல் - மேருமலைமிசை நிலவு தன் கதிரைச் சொரிந்து அதனை மறைத்தாற்போல; தென்வரைச் சந்தனம் திளைக்கும் மார்பினான்- பொதியமலையின் சந்தனம் கிடந்து பயன்கொண்ட மார்பினான்; மின் இவர் நுசுப்பினார் மெலிய - மின் போன்ற இடையினார் வருந்த; இன் உரை கொடான் மெல்லக் கொடிக்கோயில் எய்தினான் - இனிய மொழி கூறாமல், மெல்லக் கொடியுடைய கோயிலை அடைந்தான்.

விளக்கம் : கொடான் : முற்றெச்சம். பொன்வரை - மேருமலை. தென்வரை - பொதியமலை, நுசுப்பினார் - ஈண்டுக் காந்தருவதத்தை முதலியோர். கொடிக்கோயில் - ஈண்டு அரண்மனை. தென்றமிழ்நாட்டுப் பொதியமலைச் சந்தனம் மிக்க நறுமணமுடையது; சிறந்தது. ( 297 )

2896. அஞ்சுரை பொழிந்தபா லன்ன மென்மயிர்ப்
பஞ்சிமெல் லணையின்மேற் பரவை யல்குலார்
மஞ்சிவர் மதிமுக மழுங்க வைகினார்
நஞ்சுயிர்த் தணிநலங் கரிந்து நையவே.

பொருள் : பரவை அல்குலார் - பரவிய அல்குலையுடைய அம் மங்கையர்; நஞ்சு உயிர்த்து - நஞ்சுபோல வெய்துயிர்த்து; அணிநலம் கரிந்து நைய - தம் அணியும் அழகும் கரிந்து வாட; மஞ்சு இவர் மதிமுகம் மழுங்க - முகிலிற் பொருந்திய திங்களனைய முகம் ஒளி குன்ற; அம் சுரை பொழிந்த பால் அன்ன- அழகிய மடி சொரிந்த பால்போன்ற ; மென்மயிர்ப் பஞ்சி மெல் அணையின்மேல் வைகினார் - மெல்லிய தூவிகளும் பஞ்சும் பொருந்திய மெல்லிய அணையின்மேல் அமர்ந்தனர்.

விளக்கம் : மடிசொரிந்த பாலெனவே நுரையுண்மை பெற்றாம். இதனைப்; பஞ்சுக்கு மட்டும் கொள்க. கிடக்கை நுரை போன்ற தென்பதனை “எண்ணெய், நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை“ எனப் புறநானூற்றின்கண் மோசிகீரனார் பாடிய சுவைமிக்கபாட்டான் உணர்க. ( 298 )

வேறு

2897. வெள்ளெயிற் றரவு மேய்ந்த
மிச்சிலின் மெலிந்து மேகப்
புள்வயிற் பிறந்த புட்போ
லொன்றலா துரைத்த றேற்றார்
கள்வயிற் றலர்ந்த கோதைக்
கலாபவில் லுமிழு மல்கு
லொள்ளெயிற் றவர்கள் பொன்பூத்
தொளிமணி யுருவ நீத்தார்.

பொருள் : மேகப் புள்வயின் பிறந்த புள்போல் - வானம்பாடி முகிலிடத்துப் பிறந்த துளியையே விரும்பிப் பாடுமாறு போல; ஒன்று அலாது உரைத்தல் தேற்றார் - அரசன் உள்வயின் பிறந்த அளியொன்றும் அல்லாதவற்றை உரைத்தலறியாதவர்களாகிய; கள் வயிற்று அலர்ந்த கோதை - தேனை வயிற்றிலே மலர்ந்த மாலையினையும்; கலாப வில் உமிழும் அல்குல் - கலாபத்தின் ஒளி உமிழப்பெற்ற அல்குலையும்; ஒள் எயிற்றவர்கள் - ஒளி பொருந்திய முறுவலையும் உடைய அரசியர்; வெள்எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து - வெண்மையான பற்களையுடைய பாம்பினால் உண்ணப்பட்ட திங்கள் போல ஒளி கெட்டு; பொன் பூத்து - பசந்து; ஒளி மணி உருவம் நீத்தார் - ஒளியையுடைய மணிகளின் உருவைக் கைவிட்டார்.

விளக்கம் : மேகப்புள் - வானம்பாடி. அரவு மேய்ந்த மிச்சில் என்றது - பாம்பால் விழுங்கப்பட்டு ஒளி மங்கிய திங்களை. மேகப்புள் - வானம்பாடி, மேகப்புள் அம்மேகத்து வயிற்பிறந்த ஒன்றலாது உரைத்தல் தேற்றாதன்றே அப்புள்போல அரசனிடத்துப் பிறந்த ஒன்றலாது உரைத்தல் தேற்றார் என்பது கருத்தாகக் கொள்க. மேகத்துப் பிறந்த ஒன்றென்றது துளியை; அரசனிடத்துப் பிறந்த ஒன்றென்றது அன்பினை என்க. ( 299 )

2898. கிளிச்சொலி னினிய சொல்லார்
கிண்கிணி சிலம்பொ டேங்கக்
குளித்துநீ ரிரண்டு கோலக்
கொழுங்கயல் பிறழ்ப வேபோற்
களித்துநீர் சுமந்து வாட்கண்
கலாஅய்ப்பிறழ்ந் தலமந் தாட
வளித்ததா ரலங்க லாழி
யவன்றுற வுரைத்து மன்றே.

பொருள் : கிளிச்சொலின் இனிய சொல்லார் - கிளிமொழி போலும் இனிய மொழியினாருடைய கிண்கிணி சிலம்பொடு ஏங்க - கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்க; இரண்டு கோலக் கொழுங்கயல் நீர் குளித்துப் பிறழ்பவேபோல் - இரண்டு ஒப்பனையுற்ற கொழுவிய கயல்மீன்கள் நீரிற் குளித்துப் பிறழ்கின்றனவே போல; வாள் கண் களித்து நீர்சுமந்து கலாய்ப் பிறழ்ந்து அலமந்து ஆட - ஒளியுறுங் கண்கள் களித்து உவகை நீரைச் சுமந்து பிணங்கிப் பிறழ்ந்து அலமந்து ஆட: அளித்த - முன்னர் அவர்களுக் கருளிய; தார் அலங்கல் ஆழியவன் - தாரணிந்தவனும், மாலையையுடைய ஆழியேந்தியவனும் ஆகிய சீவகனின்; துறவு உரைத்தும் - துறவை இனிக் கூறுவோம்.

விளக்கம் : இரண்டு கயல் நீரிலே குளித்துப் பிறழ்பவைபோலக் கண்கள் களித்து உவகைக் கண்ணீரைச் சுமந்து பிறழ்ந்து கலாய்த்து அலமந்தாடவென்க. இது நுதலிப்புகுதல் என்னுமுத்தி; ஆசிரியர் கூற்று. ( 300 )

2899. புனைமருப் பழுந்தக் குத்திப்
புலியொடு பொருது வென்ற
கனைகுர லுருமுச் சீற்றக்
கதழ்விடை யுரிவை போர்த்த
துனைகுரன் முரசத் தானைத்
தோன்றலைத் தம்மி னென்றா
னனைமல ரலங்கற் கண்ணி
நந்தனுந் தொழுது சேர்ந்தான்.

பொருள் : புனை மருப்பு அழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற - சீவின கொம்பு அழுந்துமாறு குத்திப் புலியொடு போர்புரிந்து வென்ற; கனைகுரல் உருமுச் சீற்றக் கதழ்விடை உரிவை போர்த்த - மிக்க குரல் இடிபோலும் சீற்றமிக்க எருதின் தோலைப் போர்த்த; துனைகுரல் முரசத்தானைத் தோன்றலைத் தம்மின் என்றான் - செறிந்த ஒலியுற்ற முரசினையும் படையையுமுடைய நந்தட்டனை அழைத்து வம்மின் என்று சீவகன் பணித்தான்; நனைமலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான் - தேனையுடைய மலர்மாலையையும் கண்ணியையும் உடைய நந்தட்டனும் வணங்கி வந்தான்.

விளக்கம் : தம்மினென்றான் என்னும் பயனிலைக்குச் சீவகன் என்னும் எழுவாய் வருவித்தோதுக. ஏற்றுரி போர்த்த இடியுறழ்தழங்குரல் ...........கொற்றமுரசம் (2 - 2 : 28 - 9) என்றார் பெருங்கதையினும். ஆனேற்றின் சிறப்புக் கூறுவர் புலியொடு பொருதுவென்ற என்றனர். ( 301 )

2900. கொடியணி யலங்கன் மார்பிற் குங்குமக் குன்ற மன்னா
னடிபணிந் தருளு வாழி யரசரு ளரச வென்னப்
படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க
விடியுமிழ் முரச நாண வின்னண மியம்பி னானே.

பொருள் : கொடி அணி அலங்கல் மார்பின் குங்குமக் குன்றம் அன்னான் - ஒழுங்குற அணிந்த மாலையையுடைய மார்பனாகிய குங்குமக் குன்றம் போன்ற சீவகனின்; அடி பணிந்து - அடியை வணங்கி; அரசருள் அரச! வாழி அருள் என்ன - அரசர்க்கரசே! வாழ்க! நினைத்ததை அருள்க என்ன; படுசின வெகுளி நாகப் பைந்தலை பனித்து மாழ்க உமிழ் இடிமுரசம் நாண - உண்டாகும் மிகு சீற்றத்தையுடைய நாகத்தின் படமுடைய தலை நடுங்கி மயங்க இடிக்கும் இடியோசையைப் பிறப்பிக்கும் முரசம் நாணுமாறு; இன்னணம் இயம்பினான் - இவ்வாறு கூறினான்.

விளக்கம் : கொடி அணி மார்பு என இயைத்து, வெற்றிக் கொடி எடுத்தற்குக் காரணமான மார்பு எனலுமாம். அருளு : உ : சாரியை. வாழி : அசை எனலுமாம். ( 302 )

2901. ஊனுடைக் கோட்டு நாகான்
சுரிமுக வேற்றை யூர்ந்து
தேனுடைக் குவளைச் செங்கேழ்
நாகிளந் தேரை புல்லிக்
கானுடைக் கழனிச் செந்நெற்
கதிரணைத் துஞ்சு நாடு
வேன்மிடை தானைத் தாயம்
வீற்றிருந் தாண்மோ வென்றான்.

பொருள் : ஊனுடைக் கோட்டுச் சுரிமுக நாகு - ஊனையுடைய கோட்டினையும் சுரிந்த முகத்தினையும் உடைய நத்தை; ஆன் ஏற்றைச் செங்கேழ் நாகு ஊர்ந்து - (வரம்பிலே துயின்ற) ஆவின் ஏற்றையும் சிவந்த நிறம் பொருந்திய நாகினையும் ஏறி; இளந்தேரை புல்லி - இளந்தேரையையும் தழுவி; தேனுடைக் குவளைக் கழனி - தேன் பொருந்திய குவளைக் கழனியிலே; கானுடைச் செந்நெற் கதிர் அணைத் துஞ்சும் நாடு - காட்டின் தன்மையை உடைய செந்நெற் கதிராகிய அணையிலே துயிலும் நாட்டையும்; வேல் மிடைத் தானைத் தாயம் - வேல் நெருங்கிய படையாகிய தாயத்தையும்; வீற்றிருந்து ஆள் என்றான் - வருத்தமின்றி ஆள்வாயாக என்று கூறினான்.

விளக்கம் : நாகு - நத்தை. சுரிமுகம் : வினைத்தொகை. ஆன் ஏற்றையூர்ந்து என ஒட்டுக. நாகிளந்தேரை : ஒருபொருட்பன்மொழி. கதிரணை : பண்புத்தொகை. தாயம் - அரசுரிமை. ஆண்மோ என்புழி, மோ முன்னிலையசை. ( 303 )

2902. கரும்பலாற் காடொன் றில்லாக்
கழனிசூழ் பழன நாடுஞ்
சுரும்புலாங் கண்ணி விண்ணோர்
துறக்கமும் வீடும் வேண்டே
னரும்புலா யலர்ந்த வம்மென்
றாமரை யனைய பாதம்
விரும்பியான் வழிபட் டன்றோ
வாழ்வதென் வாழ்க்கை யென்றான்.

பொருள் : கரும்பு அலால் காடு ஒன்று இல்லாக் கழனி சூழ் பழன நாடு - கரும்பையன்றி வேறு காடு இல்லாத கழனி சூழ்ந்த பழனமுடைய நாட்டையும்; சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன் - வண்டுகள் உலவும் கண்ணியையுடைய வானோர் துறக்கத்தையும் வீட்டையும் விரும்புகிலேன்; அரும்பு உலாய் அலர்ந்த அம்மென் தாமரை அனைய பாதம் - அரும்பு நெகிழ்ந்து மலர்ந்த அழகிய மெல்லிய தாமரை போன்ற நின் அடிகளை; யான் விரும்பி வழிபட்டு வாழ்வதன்றோ என் வாழ்க்கை என்றான் - நான் விரும்பி வழி பட்டு வாழ்வதே என் வாழ்க்கை என்றான்.

விளக்கம் : பழனம் : மருதநிலம். என் வாழ்க்கை நின் பாரதம் வழி பட்டு வாழ்வதாகையால் இவற்றை வேண்டேன் என்றான்.(304)

2903. குன்றென மருண்டு கோல
மணிவண்டுங் குழாங்கொ டேனுஞ்
சென்றுமொய்த் திமிரும் யானைச்
சீவகற் கிளைய நம்பி
மன்றல்வீற் றிருந்து மின்னு
மணிக்குவ டனைய தோளா
னொன்றுமற் றரசு வேண்டா
னுவப்பதே வேண்டி னானே.

பொருள் : குன்று என மருண்டு கோலமணி வண்டும் குழாம் கொள் தேனும் - மலையென மயங்கி அழகிய கருவண்டும் குழுவாகிய தேனும்; சென்று மொய்த்து இமிரும் யானை - போய் மொய்த்து முரலும் யானையையுடைய; சீவகற்கு இளைய நம்பி - சீவகனுக்கு இளவலாகிய நந்தட்டன்; அரசு ஒன்றும் வேண்டான் - அரசைச் சிறிதும் வேண்டாமல்; மன்றல் வீற்றிருந்து மின்னும் மணிக்குவடு அனைய தோளான் - மணம் வீற்றிருந்து ஒளிரும் மணிவரை போன்ற தோளையுடைய சீவகன்; உவப்பதே வேண்டினான் - விரும்புந் துறவையே விரும்பினான்.

விளக்கம் : வண்டு, தேன் என்பன வண்டின் வகை. இமிர்தல் - முரலுதல்; இமிர்தற்குக் காரணமான மதநீரையுடைய யானை என்க. இளைய நம்பி - நந்தட்டன். ஒன்றும் - சிறிதும். வேண்டான் : முற்றெச்சம். ளுவப்பது : வினையாலணையும் பெயர். உவக்கப்படுவது என்க; அது துறவு. ( 305 )

2904. பொலிவுடைத் தாகு மேனும்
பொள்ளலிவ் வுடம்பென் றெண்ணீ
வலியுடை மருப்பி னல்லால்
வாரணந் தடக்கை வையா
தொலியுடை யுருமுப் போன்று
நிலப்படா தூன்றின் வைவேற்
கலிகடிந் துலகங் காக்குங்
காளையைக் கொணர்மி னென்றான்.

பொருள் : இவ்வுடம்பு பொலிவு உடைத்தாகுமேனும் பொள்ளல் என்று எண்ணி - இவ்வுடம்பு மேலே தோற்றப் பொலிவையுடையதேனும் உள்ளே உறுதியுடைத்தன்று என்று நினைத்து; உருமுப்போன்று ஒலியுடை வாரணம் - இடிபோன்ற ஒலியையுடைய களிறு; நிலப்படாது - நிலத்தில் வீழாமல்; வலியுடை மருப்பின் அல்லால் தடக்கை வையாது - தன்னைத் தாங்கும் வலியையுடைய மருப்பிலே அல்லாமல் தன் துதிக்கையை வையாது; ஊன் தின் வைவேல் கலிகடிந்து உலகம் காக்கும் - பகைவருடைய ஊனைத் தின்னும் கூரிய வேலால் வறுமையை நீக்கி உலகத்தைக் காக்கின்ற; காளையைக் கொணர்மின் என்றான் - சச்சந்தனைக் கொண்டு வருக என்றான். ( 306 )

2905. கழுமணி யார மார்பிற்
காவலன் மக்கள் காய்பொ
னெழுவளர்ந் தனைய திண்டோ
ளிளையவர் தம்முண் மூத்த
தழுமலர்க் கொம்பு போலுந்
தத்தைநாட் பயந்த நம்பி
விழுமணிப் பூணி னானை
வீற்றிரீஇ விதியிற் சொன்னான்.

பொருள் : கழுமணி ஆரம் மார்பின் காவலன் - கழுவிய மணி மாலையணிந்த மார்பினையுடைய அரசன்; காய் பொன்எழு வளர்ந்த அனைய திண்தோள் மக்கள் இளையவர் தம்முள் - காய்ந்த பொன்னணி புனைந்த எழு வளர்ந்தாற் போன்ற திண் தோளையுடைய மக்களாகிய இளைஞர்களில்; தழு மலர்க் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த மூத்த நம்பி - முழுவதும் மலரையுடைய கொம்புபோன்ற தத்தை முதல் நாள் பெற்ற மூத்த நம்பியாகிய; விழுமணிப் பூணினானை - சிறந்த மணிப்பூண் புனைந்த சச்சந்தனை, வீற்றிரீஇ விதியின் சொன்னான் - வீற்றிருத்தி நூல் முறைப்படி யுரைத்தான்.

விளக்கம் : கழுமணி : வினைத்தொகை. மேல் முடிசூட்டி வீற்றிருத்துவதனை வீற்றிரீஇயனெ இறந்த காலத்தாற் கூறினார். இயற்கை பற்றி. ( 307 )

2906. பால்வளை பரந்து மேயும்
படுகடல் வளாக மெல்லாங்
கோல்வளை யாமற் காத்துன்
குடைநிழற் றுஞ்ச நோக்கி
நூல்விளைந் தனைய நுண்சொற்
புலவரோ டறத்தை யோம்பின்
மேல்விளை யாத வின்பம்
வேந்தமற் றில்லை கண்டாய்.

பொருள் : வேந்த! - அரசனே!; பால்வளை பரந்து மேயும் படுகடல் வளாகம் எல்லாம் - வெண்ணிறச் சங்குகள் பரவி மேயும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பையெல்லாம்; நின்குடை நிழல் துஞ்சநோக்கி - நின் குடையின் கீழே தங்கும்படி பார்த்து; கோல் வளையாமல் காத்து - அவ் வுலகைச் செங்கோலாற் காப்பாற்றி; நூல் விளைந்த அனை நுண்சொல் புலவரோடு - நூல்கள் பயன் தந்தாற்போலும் நுண்ணிய சொற்களையுடைய அமைச்சருடன்; அறத்தை ஓம்பின் - அறத்தையும் காக்க வல்லையாயின; மேல் விளையாத இன்பம் மற்று இல்லை கண்டாய் - நினக்கு மேல் உண்டாகாத இன்பம் வேறில்லை காண்.

விளக்கம் : வேந்த! - என்றான்!; மேல் முடிசூட்டக் கருதுதலின். புலவர் - அமைச்சர். அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் (புறநா. 235) ( 308 )

2907. வாய்ப்படுங் கேடு மின்றாம்
வரிசையி னரிந்து நாளுங்
காய்த்தநெற் கவளந் தீற்றிற்
களிறுதான் கழனி மேயின்
வாய்ப்பட லின்றிப் பொன்றும்
வல்லனாய் மன்னன் கொள்ளி
னீத்தநீர் ஞால மெல்லா
நிதிநின்று சுரக்கு மன்றே.

பொருள் : நாளும் வரிசையின் அரிந்து காய்த்த நெல் கவளம் தீற்றின் - நாடோறும் முறைமைப்படி அரிந்து, காய்த்த நெல்லாகிய கவளத்தைக் களிற்றிற்குத் தீற்றினால்; வாய்ப்படும் - அதற்கு உணவும் ஆம்; கேடும் இன்றாம் - அழிவும் இன்றாகும்; களிறுதான் கழனி மேயின் - அங்ஙனம் தீற்றாத களிறு கழனியிலே தானே சென்று மேய்ந்தால்; வாய்ப்படல் இன்றிப் பொன்றும் - உணவாதலின்றி அழிந்துவிடும், மன்னன் வல்லனாய்க் கொள்ளின் - அரசன் கொள்ள வல்லனாகி முறைமையாற் கொண்டால்; நீத்த நீர் ஞாலம் எல்லாம் நின்று நிதி சுரக்கும் - கடலாகிய நீர் சூழ்ந்த உலகம் அவன் வழிநின்று செல்வத்தைக் கொழிக்கும்.

விளக்கம் : காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதம் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே (புறநா.184)

என்பதை இப் பகுதியுடன் ஒப்பிடுக. ( 309 )

2908. நெல்லுயிர் மாந்தர்க் கெல்லா
நீருயி ரிரண்டுஞ் செப்பிற்
புல்லுயிர் புகைந்து பொங்கு
முழங்கழ விலங்கு வாட்கை
மல்லலங் களிற்று மாலை
வெண்குடை மன்னர் கண்டாய்
நல்லுயிர் ஞாலந் தன்னு
ணாமவே னம்பி யென்றான்.

பொருள் : மாந்தர்க்கு எல்லாம் நெல் உயிர், நீர் உயிர் - உலக மக்கட்கெல்லாம் நெல்லும் உயிர், நீரும் உயிர்; செப்பின் இரண்டும் புல்லுயிர் - ஆராய்ந்துரைப்பின் இவ்விரண்டும் சிறந்த உயிரல்ல; நாம வேல் நம்பி! - அச்சந்தரும் வேலையுடைய நம்பியே! ;ஞாலந்தன்னுள் நல் உயிர் - உலகிலே சிறந்த உயிர் ; புகைந்து பொங்கும் முழங்கு அழல் இலங்குவாள் கை - புகைந்து பொங்கி யெரியும் ஒலியுடைய தீயில் தோய்ந்து விளங்கும் வாளேந்திய கையையும்; மல்லல் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய் - வளமிகும் யானையையும் மாலை புனைந்த வெண்குடையையும் உடைய மன்னரே காண்.

விளக்கம் : நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.  (புறநா. 186) ( 310 )

2909. ஆர்வலஞ் சூழ்ந்த வாழி யலைமணித் தேரை வல்லா
னேர்நிலத் தூருமாயி னீடுபல் காலஞ் செல்லு
மூர்நில மறித றேற்றா தூருமேன் முறிந்து வீழுந்
தார்நில மார்ப வேந்தர் தன்மையு மன்ன தாமே.

பொருள் : தார் நிலம் மார்ப! - மாலைக்கு இடமான மார்பனே!; ஆர்வலம் சூழ்ந்த ஆழி அலை மணித்தேரை - ஆரை இடமாகக்கொண்டு வளைந்த ஆழியை உடைய, அலைகின்ற மணி கட்டிய தேரை; வல்லான் நேர் நிலத்து ஊரும் ஆயின் - தேரூர வல்லவன் ஒத்த நிலத்திலே செலுத்துவானாயின்; நீடு பல் காலம் செல்லும் - மிகப்பல காலம் அத்தேர் நடக்கும்; ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும் - தான் செலுத்தும் இடம் தெரியாமற் செலுத்துவானாயின் அதுவும் முறிந்து தானும்விழுவான்; வேந்தர் தன்மையும் அன்னது ஆம் - அரசரியல்பும் அத்தன்மையேயாம்.

விளக்கம் : என்றது, வேந்தர் அரசை ஆளும் முறையில் ஆளின் அது நீடு நடக்கும்; அவ்வாறு ஆளாராயின், அதுவுங் கெட்டுத் தாமும் வீழ்வார் என்றான். ( 311 )

2910. காய்ந்தெறி கடுங்கற் றன்னைக்
கவுட்கொண்ட களிறு போல
வாய்ந்தறி வுடைய ராகி
யருளொடு வெகுளி மாற்றி
வேந்தர்தாம் விழைப வெல்லாம்
வெளிப்படார் மறைத்தல் கண்டாய்
நாந்தக வுழவ ரேறே
 நன்பொரு ளாவ தென்றான்.

பொருள் : நாந்தக உழவர் ஏறே! - வாள்வீரர் தலைவனே!; வேந்தர் தாம் ஆய்ந்த அறிவு அருளொடு உடையர் ஆகி - அரசர் ஆராய்ந்த அறிவும் அருளும் உடையவராகி; காய்ந்து எறி கடுங்கல் தன்னைக் கவுள் கொண்ட களிறு போல - ஒருவனைச் சினந்து எறியும் கடிய கல்லைக் காலம் வருமளவும் கவுளிலே மறைத்து வைத்த களிறுபோல; வெகுளி மாற்றி விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் - பகைவர்மேற் சென்ற சினத்தை மாற்றி விரும்புமவற்றையெல்லாம் (கொடுத்து) அவரை அழிக்கும் எண்ணத்தை மறைப்பது; நன்பொருளாவது என்றான் - அவர்க்கு நல்ல பொருளாவது என்றான்.

விளக்கம் : களிறுகவுள் அடுத்த எறிகல் போல - ஒளித்த துப்பினை (புறநா. 30) என்றார் பிறரும்.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து)
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (478)

எனவும்,

காதல காதல் அறியாமை யுய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். (440)

எனவும் எழுந்த திருக்குறள்கள் ஈண்டு நினையற்பாலன. ( 312 )

2911. குடிபழி யாமை யோம்பிற்
கொற்றவேன் மன்னர் மற்று
னடிவழிப் படுவர் கண்டா
யரும்புகழ் கெடுத லஞ்சி
நொடியலோ ரெழுத்தும் பொய்யை
நுண்கலை நீத்த நீந்திக்
கொடியெடுத் தவர்க்கு நல்கு
கொழித்துணர் குமர வென்றான்.

பொருள் : கொழித்து உணர் குமர! - தீமையை நீக்கி நன்மையை உணர்கின்ற குமரனே!; குடி பழியாமை ஓம்பின் - குடிமக்கள் இகழாமற் காப்பாயெனின்; கொற்றவேல் மன்னர் உன் அடிவழிப் படுவர் கண்டாய் - வெற்றிவேல் வேந்தர் நின்னுடைய அடியிடத்தே வீழ்வார்காண்; அரும்புகழ் கெடுதல் அஞ்சி ஓர் எழுத்தும் பொய்யை நொடியல் - அரிய புகழ் அழிவதை அஞ்சி ஓரெழுத்தேனும் பொய்ம்மொழி புகலாதே; நுண்கலை நீத்தம் நீந்திக் கொடி எடுத்தவர்க்கு நல்கு என்றான் - நுண்ணிய கலைகளாகிய கடலை நீந்தி வென்றிக்கொடி எடுத்த அமைச்சர்க்கு எப்போதும் அருள்செய் என்றான்.

விளக்கம் : குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் 
அடிதழீஇ நிற்கும் உலகு. ( 313 )

2912. சேனடந் தாங்கு மோடிச்
சென்றுலாய்ப் பிறழும் வாட்கண்
மான்மட நோக்கின் மாதர்
மாலைநாட் பயந்த மைந்தன்
கானடந் தனைய மான்றேர்க்
காளையைக் காவன் மன்னன்
றானுட னணிந்து தன்போ
லிளவர சாக்கி னானே.

பொருள் : சேல் நடந்தாங்கு ஓடிச் சென்று உலாய்ப் பிறழும் வாள்கண் - சேற்கெண்டை நடந்தாற்போல ஓடிச் சென்று உலவிப் பிறழும் ஒளிருங் கண்ணினையும்; மான்மட நோக்கின் - மான் போலும் மடநோக்கினையும்; மாதர் மாலை - காதலையும் உடைய குணமாலை; நாள் பயந்த மைந்தன் - முதற்பெற்ற மைந்தனாகிய; கால் நடந்த அனைய மான்தேர்க் காளையை - காற்று விரைந்து சென்றாற் போன்ற குதிரை பூட்டிய தேரையுடைய காளையாகிய சுதஞ்சணனை; காவல் மன்னன் தான் - சீவகன்றான்; உடன் அணிந்து - உடனிருந்து பட்டங்கட்டி; தன்போல் இளவரசு ஆக்கினான் - தான் கந்துக்கடன் நாளில் இளவரசாக இருந்ததுபோல இளவரசு ஆக்கினான்.

விளக்கம் : என்றது, தன் குலத்திற்கேற்ற நுகர்ச்சியை எய்தும் அரசுரிமையை. நடந்தாங்கும் : உம் : இசைநிறை. சேல்நடந்தாங்கு என்புழி நடத்தல் இயக்கம் என்பதுபட நின்றது. மாலை : குணமாலை. கால் - காற்று. காளை : சுதஞ்சணன் கானடந்தனைய என்பதற்கு, தன்கால் நடந்தாற்போல மனம் கருதியதே செய்யும் என்றும் கூறலாம் என்பர் நச்சினார்க்கினியர். ( 314 )

2913. கூரெயி றணிந்த கொவ்வைக்
கொழுங்கனிக் கோலச் செவ்வா
யேரணி மயிலஞ் சாய
லிலக்கணை யீன்ற சிங்கஞ்
சீருடைச் செம்பொற் கண்ணிச்
சிறுவனைச் செம்பொன் மாரி
பேரறைந் துலக முண்ணப்
பெருநம்பி யாக வென்றான்.

பொருள் : கூர் எயிறு அணிந்த கொவ்வைக் கொழுங்கனிக் கோலச் செவ்வாய் - கூரிய முறுவலையுடைய கொவ்வைச் செழுங்கனி போன்ற ஒப்பனை செய்த செவ்வாயையும்; ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம் - எழுச்சியுறும் அழகைக் கொண்ட மயில் போன்ற மென்மையுடைய இலக்கணை பெற்ற சிங்கமாகிய; சீருடைச் செம்பொன் கண்ணிச் சிறுவனை - அழகுறுஞ் செம்பொன் கண்ணிபுனைந்த கோவிந்தனை; உலகம் பேர் அறைந்து செம்பொன்மாரி உண்ண - உலகெல்லாம் நின் புகழைச் சாற்றி நீ பெய்யும் செம்பொன் மழையை உண்ணும்படி; பெருநம்பி ஆக என்றான் - பெருநம்பியாக இருப்பாய் என்றான்.

விளக்கம் : என்றது, சச்சந்தனுக்குப் பின்னர்க் கொவிந்தன் அரசாள உரிமை கொடுத்தான். சிறுவன் என்றது இலக்கணை மகனான கோவிந்தனை. பெருநம்பி என்றது இளவரசு என்பது போன்றதொரு சிறப்புப்பெயர் என்க. ( 315 )

2914. தன்கழ றொழாத மன்னர்
தாஞ்சுமந் தேந்தி நின்ற
பொன்றிக ழுருவிற் றம்பி
புதல்வனைத் தந்து போற்றி
மின்றிகழ் முடியுஞ் சூட்டி
வீற்றிரீஇ வேந்து செய்தான்
குன்றினங் குழீஇய போலுங்
குஞ்சரக் குழாத்தி னானே.

பொருள் : குன்று இனம் குழீஇய போலும் குஞ்சரக் குழாத்தினான் - மலைக்கூட்டம் திரண்டன போன்ற யானைத் திரளையுடைய சீவக மன்னன்; தன்கழல் தொழாத மன்னர் - தன் அடியை முன்பு வணங்காத வேந்தர்; தாம் சுமந்து ஏந்தி நின்ற பொன்திகழ் உருவின் - (பின்னர்) வணங்கித் திறையாக எடுத்த பொன்னாற் செய்த பூண் விளங்கும் வடிவையுடைய; தம்பி புதல்வனைத் தந்து போற்றி - தம்பி மகனை அழைத்துப் போற்றி; மின்திகழ் முடியும் சூட்டி வீற்றிரீஇ - மின் விளங்கும் ஒரு முடியையும் அணிவித்து வீற்றிருக்கச் செய்து; வேந்து செய்தான் - (குறுநில) மன்னன் ஆக்கினான்.

விளக்கம் : குஞ்சரக் குழாத்தினான் : சீவகன் மகன் சச்சந்தன் என விளக்கங் கொடுத்து நச்சினார்க்கினியர் கூறுவது : படையுங் கொடியும் (தொல். மரபு : 7) என்னுஞ் சூத்திரத்தால் அரசர்க்கே முடி கூறினமையாலும், வில்லும் வேலும் (தொல். மரபு. 83) என்னுஞ் சூத்திரத்தால் மன்பெறு மரபி னேனோர்க்கு முடி கூறாமையானும், அந்தணாளர்க்கரசு வரைவின்றே (தொல். மரபு. 82) என்னுஞ் சூத்திரத்தான் அரசு இல்வழி அந்தணரை, அரசியல் பூண்பரென்றைமையானும், நந்தட்டன் புதல்வனை முடிசூட்டினானென்றல் பொருந்தாமையுணர்க. ( 316 )

2915. நிலஞ்செதி ளெடுக்கு மான்றேர்
நித்திலம் விளைந்து முற்றி
நலஞ்செய்த வைரக் கோட்ட
நாறுமும் மதத்த நாகங்
குலஞ்செய்த குமரர்க் கெல்லாம்
கொடுத்தன னிதியு நாடு
முலஞ்செய்த வைரக் குன்ற
மோரிரண்ட டனைய தோளான்.

பொருள் : உலம் செய்த வைரக் குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான் - கல்லாற் செய்த வைரம் பொருந்திய மலை இரண்டு போன்ற தோளையுடைய சீவகன்; நிலம் செதிள் எடுக்கும் மான்தேர் - நிலத்தைத் தூளி செய்யும் குதிரை பூட்டிய தேர்களையும்; நித்திலம் விளைந்து முற்றி நலம் செய்த வைரக்கோட்ட நாறும் மும்மதத்த நாகம் - முத்து விளைந்து முற்றி அழகு செய்த வைரக் கிம்புரியுடைய கோட்டினையுடைய நாறும் மும்மதமுடைய யானைகளையும்; நிதியும் நாடும் - நிதியையும் நாடுகளையும்; குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன்- குலத்தை விளக்கும் மற்றைய மக்கட்கெல்லாம் கொடுத்தான்.

விளக்கம் : திறம் செய்து என்று பாடமாயின் (குலம் செய்த என்பதற்குப் பிரதியாக) கூறுபடுத்தி என்க. ( 317 )

2916. நூற்கிடங் கொடுத்த கேள்வி
நுண்செவி மண்கொண் ஞாட்பில்
வேற்கிடங் கொடுத்த மார்பின்
வில்வலான் றோழர் மக்க
ணாற்கடல் வளாகங் காக்கு
நம்பிதன் கண்க ளாகப்
பாற்கடற் கேள்வி யாரைப்
பழிப்பற நாட்டி னானே.

பொருள் : நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண்செவி - நூலுக்கு இருப்பிடமாகிய கேள்வியையுடைய நுண்ணிய செவியையும்; மண்கொள் ஞாட்பில் வேற்கு இடம் கொடுத்த மார்பின் - மண்ணைக் கொள்ளும் போரிலே வேலுக்கு இடங்கொடுத்த மார்பினையும் உடைய; வில்வலான் தோழர் மக்கள் - வில்வலானாகிய சீவகன் தோழருடைய மக்களாகிய; பாற்கடல் கேள்வியாரை - பாற்கடல்போலத் தூய நூற்கேற்வியுடையாரை; நாற்கடல் வளாகம் காக்கும் நம்பி தன் கண்கள் ஆக - நான்கு புறத்தினும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பை ஆளும் நம்பி சச்சந்தனின் கண்களாக; பழிப்பு அற நாட்டினான் - குற்றம் இன்றி நிறுத்தினான்.

விளக்கம் : செவியையும் மார்பையும் உடைய தோழர் என்க. தன்தோழர் தனக்குச் செய்த தொழில்களை அவர் மக்களும் இவற்குச் செய்க என்றான்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (குறள். 445) ( 318 )

2917. காவல ரகல மென்னுங் கழனியு ளுழுது காமர்
மாவலம் விளைத்த கோட்டு மழகளிற் றரச னன்னான்
பூவலர் கொடிய னாரை விடுக்கிய கோயில் புக்கான்
றூவல ரொலிய லார்தம் வலக்கண்க டுடித்த வன்றே.

பொருள் : காவலர் அகலம் என்னும் கழனியுள் உழுது - பகை மன்னரின் மார்பாகிய கழனியிலே உழுது; காமர் மாவலம் விளைத்த கோட்டு மழகளிறு அன்னான் அரசன் - விரும்பத்தக்க திருத்தங்கும் வெற்றியை விளைத்த கோட்டினையுடைய மழகளிறு போன்றானாகிய அரசன்; பூ அலர் கொடி அனாரை விடுக்கிய - மலர் மலர்ந்த கொடி போன்றவரை இல்லறப் பற்றினின்றும் விடுவித்தற்கு; கோயில் புக்கான் - அரண்மனையிலே புகுந்தான்; தூஅலர் ஒலியலார்தம் வலக்கண்கள் துடித்த - (அப்போது ) தூய்தாக அலர்ந்த மாலையணிந்த அவர்களின் வலக்கண்கள் துடித்தன.

விளக்கம் : மா : பெருமையும் ஆம், செல்வச் செருக்கின்றிச் சாரணர் கூறிய அறத்தின்வழிச் சேறலின் மதமின்றிப் பாகனுடைய தோட்டியை நீக்காத களிற்றினையும், புதல்வர்களைப் பெற்றுப் பயன் கொடுத்தலின் பூவலர்ந்த கொடியையும் உவமித்தார். தூவலர்க்கொடியனார் என்று பாடம் ஓதி, ஒழிகின்ற அலர்களையுடைய கொடியனையார் என்றுமாம். தூவுதல் - ஒழிதல். ( 319 )

22. துறவுணர்த்தல்

2918. செம்பொனாற் செறிய வேய்ந்து
திருமணி முகடு கொண்ட
வெம்புநீள் சுடருஞ் சென்னி
விலங்கிய மாட மெய்தி
யம்பொனாற் றெளிந்த பாவை
யனையவர்த் தம்மி னென்றான்
பைம்பொனால் வளர்க்கப் பட்ட
பனைதிரண் டனைய தோளான்.

பொருள் : பைம்பொனால் வளர்க்கப்பட்ட பனைதிரண்டனைய தோளான் - புதிய பொன்னால் வளர்க்கப்பட்ட பனைதிரண்டாற் போன்ற தோளையுடைய சீவகன்; செம்பொனால் செறிய வேய்ந்து திருமணி முகடு கொண்ட - உயர்ந்த பொன்னால் நெருங்க வேய்ந்து அழகிய மணிகளால் முகடு செய்த; வெம்பு நீள் சுடரும் விலங்கிய சென்னி மாடம் எய்தி - வெம்மை தரும் நீள் கதிரும் விலங்கிச் செல்லும் உச்சியையுடைய மாடத்தை அடைந்து; அம் பொனால் தெளிந்த பாவை அனையவர்த் தம்மின் என்றான் - அழகிய பொன்னாற் செய்து தெளிந்த பாவை போன்றவரை அழைத்து வம்மின் என்றான்.

விளக்கம் : முகடு கொண்ட மாடம், விலங்கிய மாடம் எனத் தனித்தனியே இயைக்க. அம் பொனால் தெளிந்த பாவை அனையவர் - தத்தம் பொருள் மிகுதியாற் செல்வம் நன்றென்று துணியப்பட்ட, பாவை போல்வார் என்றுமாம். ( 320 )

வேறு

2919. தின்பளித மாலைத்திர டாமந் திகழ் தீம்பூ
நன்கொளிசெய் தாமநறும் பூநவின்ற தாமம்
பொன்றெளித்த தாமம்புரி முத்தமிளிர் தாம
மின்றெளித்த மின்னுமணி வீழ்ந்ததிர டாமம்.

பொருள் : தின் பளிதம் மாலைத்திரள் தாமம் - தின்னப் படும் கருப்பூர வொழுங்கால் திரண்ட தாமம்; திகழ்தீம்பு நன்கு ஒளிசெய் தாமம் - விளங்கும் தீம்பூ மிகவும் ஒளிசெய்கின்ற தாமம்; நறும்பூ நவின்ற தாமம் - நல்ல மலரால் இயன்ற தாமம்; பொன் தெளித்த தாமம் - பொன் தகட்டை ஒப்பம் புரிந்த தாமம்; புரி முத்தம் மிளிர் தாமம் - விரும்பும் முத்துக்களால் விளங்கும் தாமம்; மின் தெளித்த மின்னு வீழ்ந்த மணி திரள் தாமம் - மின்னென்று தெளிவித்த மின்னுத் தங்கிய மணியினால் திரண்ட தாமம்.

விளக்கம் : அடுத்த செய்யுளுடன் தொடர்ந்தது ( 321 )

2920. ஈன்றமயில் போனெடிய தாமத் திடையெங்கு
மான்றுமணம் விம்முபுகை மல்கிநுரை யேபோற்
றோன்றுமணிக் காலமளித் தூவணையின் மேலார்
மூன்றுலகம் விற்குமுலை முற்றிழையி னாரே.

பொருள் : நெடிய தாமத்திடை - நீண்ட இவ்வகைத் தாமங்களினிடையில்; மூன்று உலகும் விற்கும் முற்றிழை முலையினார் - மூவுலகையும் விலைகொண்ட நிறைந்த அணிகலன்களையுடைய முலையினாராகிய அரசியர்; ஈன்ற மயில்போல் - கருவீன்ற மயில்களைப்போல்; எங்கும் மான்று மணம் விம்மு புகைமல்கி - எங்கும் கலந்து மணம் பொங்கும் நறும்புகை நிறைந்து; மணிகால் அமளி - மணிகளிழைத்த கால்களையுடைய கட்டிலின்மேல்; நுரையே போல் தோன்றும் - பால்நுரை போன்று தோன்றுகிற; தூ அணையின் மேலார் - தூய பஞ்சணையின்மேல் இருந்தனர்.

விளக்கம் : அரசன் ஏவலர் அழைக்கச் சென்றபோது அரசியார் இருந்த நிலை கூறினார். தாமங்களினிடையே அமளியில் அணையின்மேல் இருந்தனர். ( 322 )

2921. இன்னதரு ளென்றிளைய ரேத்தஞிமி றார்ப்ப
மின்னினிடை நோவமிளிர் மேகலைகண் மின்னப்
பொன்னரிய கிண்கிணியும் பூஞ்சிலம்பு மேங்க
மன்னனடி சேர்ந்திறைஞ்சி வாழியென நின்றார்.

பொருள் : இளையர் இன்னது அருள் என்று ஏத்த - (அப்போது சென்ற) ஏவலர் இஃது அரசன் திருவுள்ளம் என்றுகூறி வாழ்த்த; ஞிமிறு ஆர்ப்ப - வண்டுகள் முரல; மின்னின் இடைநோவ - மின்போன்ற இடை வருந்த; மிளிர் மேகலைகள் மின்ன - விளங்கும் மேகலைகள் ஒளிர; பொன் அரிய கிண்கிணியும் பூஞ்சிலம்பும் ஏங்க - பொன்னாற் செய்த அரிய கிண்கிணிகளும் அழகிய சிலம்புகளும் ஒலிக்க; சேர்ந்து மன்னன் அடி இறைஞ்சி - சென்று அரசன் திருவடியை வணங்கி; வாழி என நின்றார் - வாழி என்று கூறி நின்றனர்.

விளக்கம் : இளையர் - ஈண்டு ஏவலிளையார். ஞிமிறு - வண்டு. பூஞ்சிம்பு - அழகிய சிலம்பு. மன்னன் : சீவகன். ( 323 )

2922. கலவமயில் கால்குவித்த போலுங்கம ழைம்பா
னிலவுமணி மேகலைநி லாவுமிழும் பைம்பூ
ணிலவமலர் வாயினணி கூரெயிற்றி னீரே
யுலவுமனம் வைத்துறுதி கேண்மினமி தென்றான்.

பொருள் : மயில் கலவம் கால் குவித்தாற்போலும் கமழ் ஐம்பால் - மயில் கலாபத்தைக் குவித்தாற்போலும் மணமுறு கூந்தலையும்; நிலவும் மணிமேகலை - விளங்கும் மணிகள் இழைத்த மேகலையையும்; நிலா உமிழும் பைம்பூண் - நிலவைச் சொரியும் புத்தணிகளையும்; இலவ மலர் வாயின் - இலவ மலர்போலும் வாயினையும்; அணிகூர் எயிற்றினீரே! -அழகிய கூரிய பற்களையும் உடையீரே!; உலவும் மனம் வைத்து - இன்பத்திலே உலவும் மனத்தை ஒருமைப்படுத்தி; உறுதி இது கேண்மின் என்றான் - நலந்தருவதாகிய இதனைக் கேண்மின் என்றான்.

விளக்கம் : கேண்மினம் : அம் : அசை. கலவம் - கலாபம் : தோகை. கால் குவித்தல் - குவித்தல் என்னும் ஒரு சொன்னீர்மைத்தாய் நின்றது. மயில் கலாபம்போலும் ஐம்பால் என்றவாறு. உலவு மனத்தை ஒருவழிப்படுத்துக் கேண்மின் என்றவாறு. ( 324 )

வேறு

2923. வாயழ லுயிர்க்கு மாழி
மன்னவன் குறிப்பு நோக்கி
வேயழத் திரண்ட மென்றோள்
வெம்முலைப் பரவை யல்குற்
றோய்பிழி யலங்க லார்தந்
தொன்னலந் தொலைந்து வாடிக்
காயழற் கொடியைச் சேர்ந்த
கற்பக மாலை யொத்தார்.

பொருள் : வேய் அழத் திரண்ட மென்தோள் - மூங்கில் வருந்தத் திரண்ட மெல்லிய தோளையும்; வெம்முலை - விருப்பூட்டும் முலையையும்; பரவை அல்குல் - பரப்புறும் அல்குலையும்; தோய்பிழி அலங்கலார் - செறிந்த மதுவையுடைய மாலையையும் உடைய அரசியார்; வாய் அழல் உயிர்க்கும் ஆழி மன்னவன் குறிப்பு நோக்கி - வாயில் நெருப்பைச் சிந்தும் ஆழியை ஏந்திய அரசன் குறிப்பைப் பார்த்து; தம் தொல்நலம் தொலைந்து வாடி - தம் பழமையான அழகு கெட்டுச் சோர்ந்து; காய் அழல் கொடியைச் சேர்ந்த கற்பக மாலை ஒத்தார் - சுடும் நெருப்பொழுங்கைச் சேர்ந்த கற்பக மாலையைப் போன்றனர்.

விளக்கம் : ஆழி - சக்கரப்படை. மன்னவன் : சீவகன். குறிப்பு - துறக்குங் கருத்து. அலங்கலார் - ஈண்டு மனைவிமார். நலம் - அழகு. அழற்கொடி - தீயொழுங்கு. ( 325 )

2924. கருங்கடற் பிறப்பி னல்லால்
வலம்புரி காணுங் காலைப்
பெருங்குளத் தென்றுந் தோன்றா
பிறைநுதற் பிணைய னீரே.
யருங்கொடைத் தான மாய்ந்த
வருந்தவந் தெரியின் மண்மேன்
மருங்குடை யவர்கட் கல்லான்
மற்றையர்க் காவ துண்டே.

பொருள் : பிறைநுதல் பிணை அனீரே! - பிறை போன்ற நுதலையும் மான் போன்ற பார்வையையும் உடையீரே!; காணுங்காலை - ஆராயுமிடத்து; வலம்புரி கருங்கடல் பிறப்பின் அல்லால் - வலம்புரிகள் கரிய கடலிலே பிறப்பதன்றி; பெருங்குளத்து என்றும் தோன்றா - பெரிய குளத்திலே எப்போதும் பிறவா; தெரியின் - ஆராயின் (அவ்வாறே); அருங்கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம் - அரிய கொடையாகிய தானமும் தெளிந்த அரிய தவமும்; மண்மேல் மருங்கு உடையவர்கட்கு அல்லால் - உலகிற் செல்வமுடையவர் கட்கல்லாமல்; மற்றையர்க்கு ஆவது உண்டே? - வறியவர்கட்கு உண்டாம் தன்மை யில்லை.

விளக்கம் : அருங்கொடைத் தானம் - உத்தம தானம். பற்றறுத்தற்கு நுகர்ச்சி அறிவே காரணமாதலன்றி வறுமை காரணமாகாது என்பது இச்செய்யுளின் கருத்து. ( 326 )

2925. அட்டுநீ ரருவிக் குன்றத்
தல்லது வைரந் தோன்றா
குட்டநீர்க் குளத்தி னல்லாற்
குப்பைமேற் குவளை பூவா
விட்டுநீர் வினவிக் கேண்மின்
விழுத்தகை யவர்க ளல்லாற்
பட்டது பகுத்துண் பாரிப்
பார்மிசை யில்லை கண்டீர்.

பொருள் : நீர் விட்டு வினவிக் கேண்மின் - நீர் வெளிப்படுத்தி யான் கூறும் இதனைக் கேட்பீராக; அட்டு நீர் அருவிக் குன்றத்து அல்லது வைரம் தோன்றா - சொரிகின்ற நீரருவியை உடைய குன்றிலன்றி வைரங்கள் தோன்றா; குட்டம் நீர்க்குளத்தின் அல்லால் குப்பைமேல் குவளை பூவா - ஆழமான நீர்நிறைந்த குளத்திலே அல்லாமற் குப்பைமேற் குவளைகள் மலரா; இப் பார்மிசை - இவ்வுலகிலே; விழுத்தகையவர்கள் அல்லால் - சிறந்த பண்புடையவர்கள் அல்லாமல்; பட்டது பகுத்து உண்பார் இல்லை - கிடைத்ததைப் பங்கிட்டு நல்கி உண்பவர் இல்லை.

விளக்கம் : கண்டீர் : முன்னிலை அசை. அட்டுநீர் - ஒழுகும் நீர். வைரம் - ஒரு மணி. குட்டம் - ஆழம். வினவிக் கேண்மின் என்றது நன்கு கூர்ந்து கேண்மின் என்பதுபட நின்றது. ( 327 )

2926. நரம்பொலி பரந்த கோயி
னன்னுதன் மகளிர் தூவும்
பெரும்பலிச் சோற்றி னீதல்
பெரிதரி தாகு மேனுஞ்
சுரும்பொலி கோதை யார்த
மனைவயிற் றூண்டோ றூட்டு
மரும்பலி யனைத்து மீயி
னதுபொருட் குன்று கண்டீர்.

பொருள் : நரம்பு ஒலி பரந்த கோயில் - யாழிசை பரவிய கோயிலில்; நன்னுதல் மகளிர் தூவும் பெரும்பலிச் சோற்றின் அழகிய நெற்றியையுடைய அரசியர் தெய்வங்கட்குத் தூவுகிற பெரிய பலியாகிய சோற்றைப் போல; பெரிது ஈதல் அரிது ஆகுமேனும் - மிகக் கொடுத்தல் மிடியர்க்கு அரிதாயிருக்குமாயினும்; சுருப்பு ஒலி கோதையார்தம் மனைவயின் தூண்தொறு ஊட்டும் - வண்டு முரலும் மலர் மாலையணிந்த மகளிர் தம் இல்லங்களில் தூணில் உறையுந் தெய்வங்கட்குத் தூவுகின்ற; அரும்பலி அனைத்தும் ஈயின் - அரிய பலியளவேனும் ஈவார்களாயின்; அது பொருட் குன்று - அத் தானம் பின்னர் அவருக்கு மேருவாகி நிற்கும்.

விளக்கம் : பெரும்பலிச் சோறுபோல மிக ஈதல் அரிதாகுமாயினும் தூண்தொறும் ஊட்டும் சிறுபலி போலச் சிறிதே ஈயினும் அத்தானம் பின்பு மேருமலை போன்ற பெரும்பயனை நல்கும் என்றவாறு. ( 328 )

2927. அற்றவர் வருத்த நீக்கி
யாருயிர் கொண்டு நிற்குந்
துற்றவி ழீதல் செம்பொற்
றுறக்கத்திற் கேணி யாகு
முற்றுயி ரோம்பித் தீந்தே
னூனொடு துறப்பின் யார்க்கு
மற்றுரை யில்லை மண்ணும்
விண்ணுநும் மடிய வன்றே.

பொருள் : அற்றவர் வருத்தம் நீக்கி - வறியவர் வருத்தத்தை நீக்கி; ஆர் உயிர் கொண்டு நிற்கும் அவிழ் ஈதல் - சிறந்த உயிரைக் காத்து நிற்கும், உண்ணும் சோற்றைக் கொடுத்தல்; செம்பொன் துறக்கத்திற்கு ஏணி ஆகும் - செவ்விய பொன் நிறைந்த துறக்கத்திற்குச் செல்லும் ஏணி ஆகும்; முற்று உயிர் ஓம்பித் தீ தேன் ஊனொடு துறப்பின் - முற்றும் உயிர்களைக் காத்து இனிய தேனையும் ஊனையும் துறந்தால்; யார்க்கும் மற்று உரை இல்லை - எவருக்கும் வேறு அறம் கூறவேண்டுவதில்லை; மண்ணும் விண்ணும் நும் அடிய - மண்ணும் விண்ணும் நும் அடியில் உள்ளன.

விளக்கம் : அன்று, ஏ : அசைகள். மேற்கூறிய அறங்களை அரசியர் முன்னரே உடையர் ஆதலின் மண்ணும் விண்ணும் அவர்களின் அடியன என்றான். ( 329 )

வேறு

2928. மாலைப் பந்தும் மாலையு மேந்தி மதுவார்பூஞ்
சோலைம் மஞ்ஞைச் சூழ்வளை யார்தோள் விளையாடி
ஞாலங் காக்கும் மன்னவ ராவார் நறவுண்ணாச்
சீலங் காக்குஞ் சிற்றுப காரம் முடையாரே.

பொருள் : மாலைப் பந்தும் மாலையும் ஏந்தி - மலர்மாலையாற் சமைத்த பந்தையும் மாலையையும் கையுறையாகக் கொடுத்து; மதுஆர் பூஞ்சோலை மஞ்ஞைசூழ் வளையார்தோள் விளையாடி - தேன் நிறைந்த மலர்க்காவிலே மயில்போல் உலவும் வளையணிந்த மகளிரின் தோளிலே விளையாடி; ஞாலம் காக்கும் மன்னவர் ஆவார் - உலகங்காக்கும் வேந்தராக ஈண்டிருப்போர்; நறவு உண்ணாச் சீலம் காக்கும் சிறு உபகாரம் உடையாரே - (முன்னர்க்) கள்ளுண்ணாமையாகிய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த சிறிய உதவியை உடையவரே.

விளக்கம் : மாலைப் பந்து - மாலையாலியற்றிய பூப்பந்து. சோலைம் மஞ்ஞை : மகரம் வண்ணத்தால் விரிந்தது. ஞாலம் - உலகம். நறவுண்ணாமையாகிய ஒழுக்கம் என்க. ( 330 )

2929. மாசித் திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளி
னூசித் துன்ன மூசிய வாடை யுடையாகப்
பேசிப் பாவாய் பிச்சையெ னக்கை யகலேந்திக்
கூசிக் கூசி நிற்பார் கொடுத்துண் டறியாதார்.

பொருள் : மாசின சின்னத்துணி - அழுக்கினையுடையவாகிய சிறிய துணிகளை; முள்ளின் ஊசித் துன்னம் மூசிய ஆடை - முள்ளாகிய ஊசியாலே தைத்த தையல் மொய்த்த ஆடையை; மாசித் திங்கள் உடையாக - குளிர்மிக்க மாசித் திங்களின் உடையாகக் கொண்டு; பாவாய்! பிச்சை எனப் பேசி - பாவையே ! பிச்சையிடு எனக் கூறி; கை அகல் ஏந்தி - கையில் ஓட்டை ஏந்தி; கூசிக் கூசி நிற்பர் - (செல்வர் மனையிற் செல்லக்) கூசிக் கூசி நிற்பவர்கள்; கொடுத்து உண்டு அறியாதார் - முற்பிறப்பிலே வறியர்க்குக் கொடுத்துண்டறியாதவர்களே.

விளக்கம் : குளிரின் மிகுதி கருதி மாசித்திங்கள் என்றார். மாசினவாகிய சின்னத்துணி என்க. முள்ளின் ஊசி - முள்ளாலியற்றிக் கொண்ட ஊசி எனினுமாம். துன்னம் - தையல், பிச்சையெனப்பேசி என மாறுக. ( 331 )

வேறு

2930. காட்டகத் தொருமகன் றுரக்கு மாக்கலை
யோட்டுடைத் தாமெனி னுய்யு நங்களை
யாட்டியிட் டாருயி ரளைந்து கூற்றுவ
னீட்டிய விளைமதுப் போல வுண்ணுமே.

பொருள் : காட்டகத்து ஒரு மகன் துரக்கும் மாக்கலை - காட்டிலே ஓட்டவல்லான் ஓட்டும் கலைமான்; ஓட்டு உடைத்தாம் எனின் உய்யும் - ஓட்டம் வல்லதாயின் அவனைத் தப்பி ஓடிப் பிழைக்கும்; (ஆனால்); கூற்றுவன் நங்களை ஆட்டியிட்டு - காலன் நம்மை ஆட்டி; ஆர் உயிர் அளைந்து - சிறந்த உயிரை எடுத்து ; ஈட்டிய விளை மதுப்போல உண்ணும் - சேர்த்து வைத்து விளைந்த மதுவைப்போலத் தப்பாமற் பருகிவிடுவான்.

விளக்கம் : ஒருமகன் - ஒரு வேடன் என்பதுபட நின்றது. ஓடும் வன்மையுடையதாயிருப்பின் என்றவாறு. கூற்றுவன் நங்களை மதுப்போல அளைந்து உண்ணும் என்க. ( 332 )

2931. புள்ளுவர் கையினு முய்யும் புள்ளுள
கள்ளவிழ் கோதையீர் காண்மி னல்வினை
யொள்ளியா னொருமக னுரைத்த தென்னன்மின்
றெள்ளியீ ரறத்திறந் தெரிந்து கொண்மினே.

பொருள் : கள் அவிழ் கோதையீர்! தெள்ளியீர்! - தேன்மலருங் கோதையீராகிய அறிவுடையீர்!; புள்ளுவர் கையினும் உய்யும் புள் உள - வேட்டுவர் கையிலகப்பட்டும் பிழைத்துப் போம் பறவைகளும் உள; நல்வினை காண்மின் - (ஆதலின்) நல்வினை செய்தலை அறிமின்; ஒள்ளியான் ஒருமகன் உரைத்தது என்னன்மின் - (இவ்வறம்) அறிவுடையான் ஒருமகன் (பயனின்றாக) உரைத்ததென்று கொள்ளன்மின்; அறத்திறம் தெரிந்து கொண்மின் - அறத்தின் திறத்தை (உலகியலால்) தெரிந்து கொண்மின்.

விளக்கம் : நல்வினை காண்மின் என்றான் நல்வினை செய்தாற் கூற்றைத் தப்பிப் போதலுங் கூடும் எனற்கு.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (குறள், 369)

என்பது பற்றிப் புள்ளுவர்கையினும் உய்யும் புள்ளுள என்று எடுத்துக்காட்டி அதுபோல யாமும் நல்வினைசெய்தால் கூற்றம் குதித்தலும் கூடும் என்றான் என்க. ஓள்ளியான் - அறிவுடையான். உரைத்தது என்றது, பயனின்றாக உரைத்தது என்பதுபட நின்றது. அறத்தினைச் சொல்லளவாகவே கருதி விடாமல் நுங்கள் ஒழுக்கத்தினும் மேற்கொண்மின் என்பதாம். ( 333 )

2932. மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலுந்
தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால்
வாய்புகப் பெய்யினும் வழுக்கி னல்லறங்
காய்வது கலதிமைப் பால தாகுமே.

பொருள் : மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும் தேய்தலும் உடைமையை - இறத்தலும் பிறத்தலும் வளர்ந்து பருத்தலும் தேய்தலும் யாக்கை உடைமையை; திங்கள் செப்பும் - திங்கள் அறியாதாருக்கும் கூறும்; நல்லறம் வாய் புகப்பெய்யினும் - நல்லறத்தைச் செவியிலே புகும்படி சொரியினும்; வழுக்கிக் காய்வது - அதனைக் கைவிட்டு வெறுப்பது; கலதிமைப் பாலது - தீவினையின் கூறாகும்.

விளக்கம் : திங்கள் காட்டக் கண்டும், அறத்தைச் சொரியக் கேட்டும் கைவிடுவது தீவினையின் பாலதாம் என்று கொள்க. தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் - மாய்தலுண்மையும் பிறத்த லுண்மையும் - அறியாதோரையும் அறியக் காட்டித் - திங்கட்புத்தேள் திரிதரும் உலகத்து (புறநா. 27) என்றார் பிறரும். ( 334 )

2933. புள்ளிநீர் வீழ்ந்தது பெருகிப் புன்புலா
லுள்வளர்ந் தொருவழித் தோன்றிப் பேரற
முள்குமேன் முழுப்புலாற் குரம்பை யுய்ந்துபோய்
வெள்ளநீ ரின்பமே விளைக்கு மென்பவே.

பொருள் : புள்ளி நீர் வீழ்ந்தது - சுக்கிலம் கருப்பைக் குள்ளே வீழ்ந்தது; உள் பெருகிப் புன்புலால் வளர்ந்து - உள்ளே பெருத்துப் புன்மையான ஊன் வளர்ந்து; ஒரு வழித் தோன்றி - புக்க வழியாலே புறப்பட்டு; பேர் அறம் உள்குமேல் - அறிவு பெற்று அறத்தை நன்றென்று கொள்ளுமாயின்; முழுப்புலால் குரம்பை உய்ந்து போய் - (அது) முற்றும் ஊனாலாகிய கூட்டை விட்டுப்போக; வெள்ளநீர் இன்பமே விளைக்கும் - கடல்போலப் பெரிய வீட்டின்பத்தை விளைவிக்கும்.

விளக்கம் : என்க, ஏ : அசைகள். போய் போக : எச்சத்திரிபு. சுக்கிலத்தின் சிறுமைதோன்றப் புள்ளிநீர் என்றார். புள்ளிநிலனும் புரைபடல் அரிது (பரிபா. 2 . 37) என்புழிப்போல. புள்ளி சிறுமைக் கோர் அளவு கூறியபடியாம். புக்க அவ்வொருவழியாலே புறப்பட்டு என்றவாறு. புலால்குரம்பை என்றது உடம்பினை. வெள்ளநீர் என்றது கடலினை. ( 335 )

2934. பாற்றுளி பவளநீர் பெருகி யூன்றிரண்
டூற்றுநீர்க் குறும்புழை யுய்ந்து போந்தபின்
சேற்றுநீர்க் குழியுளே யழுந்திச் செல்கதிக்
காற்றுணாப் பெறாதழு தலறி வீழுமே.

பொருள் : பால்துளி பவளநீர் பெருகி - சுக்கிலமும் குருதியும் பெருத்து; ஊன் திரண்டு - தசை திரண்டு; ஊற்றுநீர்க் குறும்புழை உய்ந்து போந்தபின் - இடையறாது ஊறும் நீரையுடைய சிறு வாயிலாலே தப்ப வந்த பின்னர்; செல்கதிக்கு ஆற்றுணாப் பெறாது - (அறங்கொள்ளாதாயின்) செல்லும் நெறிக்கு நல்வினையாகிய பொதிசோற்றைப் பெறாது சென்று; சோற்றுநீர்க் குழியுளே அழுது அலறி - நரகத்தே கிடந்து அழுது கூவி; வீழும் - (மீட்டும் அக்குறிய, ஊற்று நீரையுடைய குழியிலே) அழுந்தி வீழும்.

விளக்கம் : பாற்றுளி என்றது, சுக்கிலத்தை. பவளநீர் என்றது சுரோணிதத்தை. குறும்புழை: இடக்கர். பருகி என்று பாடமாயின் உள்ளடக்கி என்க. சேற்று நீர்க்குழி என்றது நரகத்தை. வீழும் என்றது, மீட்டும் அக் குறும்புழைக்குள்ளே வீழும் என்பதுபட நின்றது.
( 336 )

2935. திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்
பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
வருந்தினு மறந்திற மறத்த லோம்புமின்
கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணீர்.

பொருள் : கரும்பு எனத் திரண்ட தோள் காலவேல் கணீர் - கரும்புபோலத் திரண்ட தோள்களையும் காலன் வேல்போலும் கண்களையும் உடையீர்! திருந்திய நல்அறச் செம்பொன் கற்பகம் - (யான் கூறிய) திருத்தமுற்ற நல்லறமாகிய செம்பொன் பூக்கும் கற்பகம்; பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால் - மறுமைக்குப் பொருந்திய வீட்டையும் இம்மைக்குரிய போகத்தையும் தருவதால்; வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின் - வருந்தினீராயினும் அறத்தை மறத்தலை ஒழிவீராக.

விளக்கம் : அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு (குறள்.32)

என்பது வள்ளுவர் வாய்மொழி. ( 337 )

2936. மந்திர மருந்திவை யில்லை யாய்விடி
னைந்தலை யரவினை யாவர் தீண்டுவார்
சுந்தரச் சுரும்புசூழ் மாலை யில்லையேன்
மைந்தரு மகளிரை மருங்கு சேர்கிலார்.

பொருள் : மந்திரம் மருந்து இவை இல்லையாய்விடின் - (உலகில்) மந்திரமும் மருந்துமாகிய இவை இல்லாமற் போய்விடின்; ஐந்தலை அரவினை யாவர் தீண்டுவார்? - ஐந்து தலையுடைய பாம்பை எவர் தீண்டி வயப்படுத்துவார்?; சுந்தரச் சுரும்பு சூழ் மாலை இல்லையேல் - (அவ்வாறே) அழகிய வண்டுகள் சூழும் இயல்புடை மாலை முதலிய மணப்பொருள்கள் இல்லையாயின்; மைந்தரும் மகளிரை மருங்கு சேர்கிலார் - மைந்தரும் மகளிரின் அருகே சென்று அவரைத் தம் வயத்தராக்குதலிலர்.

விளக்கம் : பாம்பாட்டுவோர் மந்திரமும் மருந்துமுண்மையால் அதன் நஞ்சுடைமைக்கு அஞ்சாமல் அதனைத் தீண்டுகின்றனர். இங்ஙனமே மணமாலை முதலிய நறுமணப் பொருள்கள் உண்மையால் ஆடவர் மகளிர்க்கு இயல்பாயமைந்த தீநாற்றத்திற்கு அஞ்சாமல் அவரை முயங்குகின்றனர் என்றவாறு. இங்ஙனம் கூறாமல் ஆசிரியர் நச்சினார்க்கினியர், நன்றாகிய நறுநாற்றங்களாற் சுரும்பு சூழும் இயல்பு தமக்கில்லையாயின் மைந்தரும் மகளிரருகே சென்று அவரைத் தம் வயத்தராக்குதலிலர் என்பர். இவ்வுரையில் பொதுத்தன்மை விளங்காமையுணர்க. ( 338 )

2937. பொன்றுலாம் பொன்னனீர் தருதும் பாகுநீர்
தின்றலாற் சிறுவரை யானுஞ் சொற்சில
வின்றெலா மெம்மருங் கிருந்து பேசினால்
வென்றுலாம் வேற்கணீர் விழுத்தக் கீர்களே.

பொருள் : பொன் அனீர்! - திருமகளனையீர்!; வென்று உலாம் வேல்கணீர்! - வென்று உலவும் வேலனைய கண்ணீர்!; நீர் பாகு தின்று விழுத்தக்கீர்கள் அலால் - நீர் (வெற்றிலையுடன்) பாகுதின்று தகுதிப்பாடுடையீராய் இல்லாமல்; இன்று எலாம் எம் மருங்கு இருந்து - இன்று முற்றும் எம் அருகேயிருந்து; சிறுவரை யானும் சில சொல் பேசினால் - சிறிது போதேனும் சில சொற்களைப் பேசினால்; துலாம் பொன் தருதும் - ஒரு துலாம் பொன் தருவேம்.

விளக்கம் : முன்னர்ப் பாகுதின்று அருகேயிருந்து பேசுவீர்; இப்போது பாகுதின்னாமற் பேசுதலரிது என்றானாயிற்று. ( 339 )

வேறு

2938. மெய்ப்படு சாந்தும் பூவு
மிகநனி கமழு மேனுங்
கைப்படு சாந்தும் பூவுங்
கொண்டலாற் கலக்க லாகா
வைப்படு பித்து நெய்த்தோ
ரசும்புசோ ரழுகற் புன்றோற்
பொய்ப்பட வுரைத்த துண்டோ
பொன்னனீர் நம்மு ணாமால்.

பொருள் : பொன் அனீர்! - திருவனையீர்!; நம்முள் நாம் - நம்முள் நாமே கூறுகின்றோம்; ஐப்படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல் - ஐயுடன் கூடிய பித்தும் குருதியும் அசும்பு சோர்கின்ற அழுகலையுடைய இழிந்த தோலையும் உடைய; மெய்ப்படு சாந்தும் பூவும் மிகநனி கமழுமேனும் - இம் மெய்யிலே முன்னரே அணிந்த சாந்தும் பூவும் கொண்டலால் கலக்கல் ஆகா - பின்னரும் கைவழியாகிய சாந்தும் பூவும் மிக நன்றாக மணக்குமாயின்; கைப்படு சாந்தும் பூவும் கொண்டல்லது கூடலாகா; பொய்ப்படவுரைத்ததுண்டோ? - யான்இப்போது பொய் தோன்றக் கூறியது யாதாயினும் உளதோ? (கூறுமின்).

விளக்கம் : அழுகல் அசும்பு என்று கூட்டி மலங்கள் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 340 )

2939. அனிச்சத்தம் போது போலத்
தொடுப்பவே குழைந்து மாழ்கி
யினிச்செத்தாம் பிறந்த போழ்தே
யென்றுநா மிதனை யெண்ணித்
தனிச்சித்தம் வைத்த றேற்றாந்
தளர்ந்துகண் பரப்பி நோக்கிப்
பனித்துமென் றுற்ற போழ்தே
பழுதிலா வறிவி னென்னாம்.

பொருள் : நாம் பிறந்த போழ்தே இனிச் செந்தாம் என்று இதனை எண்ணி - நாம் பிறந்த பொழுதே இனி இறந்தோம் அல்லமோ என்று இம் மெய்யை எண்ணி; அனிச்சத்து அம்போது போல - (நூலாற் றொடுப்பவே மயங்கி வாடும்) அனிச்சமலர்போல; தொடுப்பவே குழைந்து மாழ்கி - தீவினை தொட்டபொழுதே குழைந்து மயங்கி; தளர்ந்து கண் பரப்பி நோக்கி - சோர்ந்து கண்ணை விரித்துப் பார்த்து; பனித்தும் என்று - நடுங்குவோம் என்று எண்ணி; உற்ற போழ்தே தனிச்சித்தம் வைத்தல் தேற்றாம் - அறிவு உற்ற போதே தனித்த சித்தத்தை நிலைபெற வைத்தலைத் தெளியோம்; பழுதுஇலா அறிவின் என் ஆம்? - குற்றமற்ற அறிவினால் யாது பயன்?

விளக்கம் : அனிச்சத்தம் போதுபோல என்பதன்பின் வாடும் என ஒரு சொல் வருவிக்க. ( 341 )

2940. நீனிறங் கொண்ட வைம்பா
னிழன்மணி யுருவ நீங்கிப்
பானிறங் கொண்டு வெய்ய
படாமுலை யையிற் றூங்கி
வேனிற மழைக்கண் டாமு
மிமைகுறைந் தழுகி மேனி
தானிறங் கரக்குங் காலந்
தையலீர் மெய்ய தன்றே.

பொருள் : தையலீர்! - மங்கையிரே!; நீல் நிறம் கொண்ட ஐம்பால் நிழல்மணி உருவம் நீங்கி - நீல நிறம் கொண்ட கூந்தல் தன்னுடைய ஒளிவிடும் அந் நீலநிறத்தை விட்டு; பால் நிறம் கொண்டு - பால்போல வெண்ணிறம் பெற்று; வெய்ய படாமுலைபையின் தூங்கி - விருப்பூட்டுஞ் சாயாத முலைகள் பைபோலத் தொங்கி; வேல்நிற மழைக்கண் தாமும் இமைஅழுகிக் குறைந்து - வேலென ஒளிரும் மழைக்கண்களும் இமை அழுகி ஒளி குறைந்து - மேனிதான் நிறம் கரக்கும் காலம் மெய்யது - மேனியும் ஒளி மறையும் முதுமைக் காலமும் வருவது மெய்யானது.

விளக்கம் : நீல் - நீலம் : கடைக்குறை. ஐம்பால் - கூந்தல். நிழல் - ஒளி; மணி ஈண்டு நீலமணி உருவம் - நிறம். பை - தோற்பை. அதற்கு முன்னே துறப்பீராக என்பது குறிப்பெச்சம். ( 342 )

வேறு

2941. குஞ்சர மயாவுயிர்த் தனைய குய்கம
ழஞ்சுவை யடிசிலை யமர்ந்துண் டார்கடா
மிஞ்சிமா நகரிடும் பிச்சை யேற்றலா
லஞ்சினேன் றுறப்பல்யா னார்வ மில்லையே.

பொருள் : குஞ்சரம் அயா உயிர்த்த அனைய - யானை கொட்டாவி விட்டாற் போன்ற ; குய்கமழ அம் சுவை அடிசிலை அமர்ந்து உண்டார்கள் தாம் - தாளிப்பு மணம் கமழும் அழகிய சுவையுறும் உண்டியை அமர்ந்து உண்டவர்களே; இஞ்சி மாநகர் இடும் பிச்சை ஏற்றலால் - மதிலையுடைய மாநகர் இடுகின்ற பிச்சை ஏற்பதனால்; ஆர்வம் இல்லை - செல்வத்தில் எனக்கு விருப்பம் இல்லை; அஞ்சினேன் - அரசாட்சியை அஞ்சினேன்; யான் துறப்பல் - (எனவே) (இனி) யான் துறப்பேன்.

விளக்கம் : குஞ்சரம் - யானை. அயாவுயிர்த்தல் - கொட்டாவி விடுதல். குய் - தாளிப்பு. அஞ்சுவை - இனிய சுவை. அமர்ந்து - விரும்பி. இஞ்சி - மதில். இது செல்வநிலையாமை கூறியபடியாம். ( 343 )

23.அந்தப்புர விலாவணை

2942. ஒருவர்தம் வலிகெடு முடன்று பொங்கிமே
லிருவர்மற் றியைந்தெழுந் திருப்பி னென்பபோ
லுருவநுண் ணுசுப்பிற விருந்த வொண்மணிப்
பரியகட் படாமுலைப் பைம்பொற் கொம்பனீர்.

பொருள் : இருவர் உடன்று பொங்கி மேல் இயைந்து எழுந்திருப்பின் - இருவர் சினந்து பொங்கி மேலே பொருந்தி எழுந்திருப்பின்; ஒருவர் வலிகெடும் என்ப போல் - (அவர்களிடம்) அகப்பட்ட ஒருவர் வலிமை கெடும் என்பனபோல; உருவம் நுண் நுசுப்பு இற இருந்த - அழகிய நுண்ணிய இடை முரிய இருந்த; ஒண்மணிக் கண்பரிய படாமுலை - ஒள்ளிய நீலமணி போலுங் கண்களையுடைய பெரிய சாயாத முலைகளையுடைய; பைம்பொன் கொம்பு அனீர் - புதிய பொற்கொம்பு போன்றீர்!;

விளக்கம் : இருவர் என்றது முலைகளை. ஒருவர் என்றது, இடையை. நீலமணிபோலும் பெரிய கண் என்க. ( 344 )

2943. காதலங் கழிந்தநா ளிதனி னிப்புற
மேதில மென்றசொற் செவிச்சென் றெய்தலு
மாதரார் மழைமலர்த் தடங்கண் மல்குநீர்
போதுலா மார்பின்வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே.

பொருள் : கழிந்த நாள் காதலம் - இறந்த நாட்களில் இல்லறத்தில் அன்புடையேம்; இதனின் இப்புறம் ஏதிலம் என்ற சொல் - அறவுரையைக் கேட்டதற்கு இப்பால் நாம் அயலாரானோம் என்று சீவகன் செப்பிய மொழி; செவிச் சென்று எய்தலும் - காதுகளிற் சென்று வீழ்ந்தவுடன்; மாதரார் மழைமலர்த் தடங்கண் மல்கும் நீர் - அரசியரின் மழைத்த மலரனைய பெரிய கண்களில் நிறைந்த நீர்; போது உலாம் மார்பின் வாய்ப பொழிந்து வீழ்ந்த - மலர் அசையும் மார்பிலே பெய்யப்பட்டு வீழ்ந்தன.

விளக்கம் : கழிந்தநாள் காதலம் என மாறுக. இதனின் இப்புறம் என்றது அறவுரையைக் கேட்டதற்கு இப்பால் என்றவாறு. மாதரார் - ஈண்டுக் காந்தருவதத்தை முதலியோர். ( 345 )

வேறு

2944. செருக்கி நிணந்தின்று சிவந்து
மன்ன ருயிர்செற்ற
நெருப்புத் தலைநெடுவேற் கண்ணார்
கண்ணீர் நிழன்மணிப்பூட்
பரப்பி னிடைப்பாய்ந்து குளமாய்ப்
பாலார் படாமுலையை
வருத்தி மணிநெடுங்கோட் டருவி
போல வீழ்ந்தனவே.

பொருள் : நிணம் தின்று செருக்கிச் சிவந்து மன்னர் உயிர் செற்ற - நிணத்தைத் தின்று செருக்குடன் சிவந்து வேந்தருயிரைக் கொன்ற; நெருப்புத்தலை நெடுவேல் கண்ணார் - நெருப்பில் தோய்ந்த நீண்ட வேல்போலும் கண்ணினார்; கண்ணீர் நிழல் மணிப்பூண் பரப்பினிடைப் பாய்ந்து குளமாய் - (பெய்த) கண்ணீர் ஒளிவிடும் மணிப்பூணாகிய கரையுள்ளே பாய்ந்து குளமாகி நிறைந்து; பால்ஆர் படாமுலையை வருத்தி - பால் நிறைந்த சாயா முலைகளை வருத்தி; மணி நெடுங் கோட்டு அருவிபோல வீழ்ந்தன - மணிகளையுடைய நீண்ட மாலைச் சிகரத்தினின்றும் விழும் அருவி போல (அம் முலைகளினின்றும்) வீழ்ந்தன.

விளக்கம் : நிணந்தின்று செருக்கி என மாறுக. மன்னர் - பகை மன்னர். மணி நெடுங்கோடு, முலைக்குவமை; அருவி, கண்ணீர்க் குவமை. ( 346 )

2945. அழலேந்து வெங்கடுஞ்சொ லுருமே
றுண்டாங் கலர்சிந்தி
நிழலேந்து பூங்கொடிக ணிலஞ்சேர்ந்
தாங்கு நிலஞ்சேர்ந்து
கழலேந்து சேவடிக்கீழ்க் கண்ணீர்
வெள்ளங் கலநிரப்பக்
குழலேங்கு மாறேங்கி யழுதார்
கோதை மடவாரே.

பொருள் : கோதை மடவார் - மாலையணிந்த அம் மங்கையர்; அழல் ஏந்து வெங்கடுஞ் சொல் - நெருப்பைப் போன்ற மிகவுங் கொடிய (ஏதிலம் என்ற) அம் மொழியைக் கேட்ட அளவிலே; உருமேறு உண்டு - இடியேற்றினாலே தாக்கப்பட்டு; நிழல் ஏந்து பூங்கொடிகள் அலர்சிந்தி நிலம் சேர்ந்தாங்கு நிலம் சேர்ந்து - ஒளியேந்திய மலர்க்கொடிகள் (இடி தாக்கி) மலரைச் சிந்தி நிலத்தில் வீழ்ந்தாற்போல நிலமிசை வீழ்ந்து; கழல் ஏந்து சேவடிக் கீழ்க்கண்ணீர் வெள்ளம் கலம் நிரப்ப - (சீவகனுடைய) கழல் தாங்கிய சேவடியின் கீழே (கிடந்து) தம் கண்ணீராலாகிய வெள்ளம் ஆங்குள்ள கலங்களிலே நிறைய; குழல் ஏங்குமாறு ஏங்கி அழுதார் - குழல் ஏங்கி அழுவதுபோல ஏங்கி அழுதனர்.

விளக்கம் : அழல் - நெருப்பு. கடுஞ்சொல் என்றது இதனின் இப்புறம் ஏதிலம் எனச் சீவகன் கூறியதனை. ஆம்பலங் குழலின் ஏங்கி (நற்.113) என்று, குழலினைவதுபோல் அழுதனள் (புறநா.143) என்றும் பிற சான்றோரும் உரைத்தல் காண்க. ( 347 )

வேறு

2946. குலிகவஞ் சேற்று ணாறிக்
குங்கும நீரு ளோங்கிப்
பொலிகென வண்டு பாடப்
பூத்ததா மரைகள் போலு
மொலிகழ லடிக ணுங்ககீழ்ப்
பிழைத்ததென் னுரைமி னென்னப்
புலிநிழற் பட்ட மான்போற்
போழுயி ராகி நின்றார்.

பொருள் : குலிக அம் சேற்றுள் நாறி - குலிகத்தின் அழகிய சேற்றிலே முளைத்து; குங்கும நீருள் ஓங்கி - குங்குமம் கலந்த பனிநீரிலே வளர்ந்து; வண்டு பொலிக எனப் பாட - வண்டாகிய பாணர் (பரிசில் பெற விழைந்து) பொலிக என்று பாட; பூத்த தாமரைகள் போலும் ஒலிகழல் அடிகள் - மலர்ந்த தாமரைகளைப் போன்ற ஒலிக்குங் கழல் அணிந்த அடிகளே!; நும் கீழ்ப்பிழைத்தது என் உரைமின் என்ன - உம்மிடத்துப் பிழைத்தது யாது? அதனை உரைமின் என்றுரைத்து; புலிநிழல் பட்ட மான்போல் போகு உயிராகி நின்றார் - புலியினிடம் பட்ட மானின் உயிர்போலப் போதற்குரிய உயிராகி நின்றார்.

விளக்கம் : இனி அரசியர் அவனடி முதலாக முடியளவும் நோக்கி யுரைக்கின்றனர். குலிகம் - சாதிலிங்கம். நாறி - முளைத்து. அடிகள் : விளி. புலிநிழல் என்புழி : நிழல் ஏழனுருபின் பொருட்டு. போகுயிர் : வினைத்தொகை. ( 348 )

2947. அருந்தவி சாகியெம்மைச்
சுமந்தயா வுயிர்த்த வாண்மைப்
பெருந்தகு குறங்கு காணீர்
பெண்ணுயி ரளிய தாமே
வருந்துமா லென்று நோக்கீர்
வாடுமா லாவி யென்னீர்
விருந்தினர்போல நின்றீர்
வெற்றுடல் காண்மி னென்பார்.

பொருள் : அருந்தவிசு ஆகி எம்மைச் சுமந்து அயாவுயிர்த்த - (முன்னர்) எமக்கு அரிய இருக்கையாகி எம்மைத் தாங்கி இளைப்பற்றிய; ஆண்மைப் பெருந்தகு குறங்குகாள்! - ஆளுந் தன்மையையுடைய குறங்குகளே!; நீர் பெண் உயிர் அளியதாம் வருந்தும் என்று நோக்கீர் - நீங்கள் பெண்ணுயிர் அருளத் தக்கன, அவை வருந்தும் என்று நினையீராய்; ஆவி வாடும் என்னீர்! - உயிர் வாடும் என்றெண்ணுகிலீராய்; விருந்தினர்போல நின்றீர்! - புதியவர்போல இருக்கின்றீர்; வெற்றுடல் காண்மின் என்பார் - இனி, எம் வெற்றுடலைக் காணுங்கோள் என்பார்கள்.

விளக்கம் : தவிசு - இருக்கை. அயாவுயிர்ப்பித்த என்க. அயரவுயிர்த்தல் - இளைப்பாறுதல். குறங்கு - துடை. விருந்தினர் - புதியவர்; ஈண்டு ஏதிலர் என்பதுபட நின்றது. வெற்றுடல் காண்மின் என்றது யாமிறந்து படுதல் ஒருதலை என்பதுபட நின்றது. ( 349 )

2948. கோதையுந் துகிலு மேந்திக்
குங்கும மெழுதிக் கொய்பூந்
தாதுகொண் டளகத் தப்பித்
தடமுலை வருடிச் சேர்ந்து
காதல்கொண் டிருந்த காமர்
கைவிர லளிய நீரு
மேதில லாகிக் கோமா
னெண்ணமே யெண்ணி னீரே.

பொருள் : கோதையும் துகிலும் ஏந்தி - பூமாலையையும் ஆடையையும் ஏந்தி; குங்குமம் எழுதி - குங்குமச் சாந்தால் எழுதி; கொய்பூந்தாது கொண்டு அளகத்து அப்பி - கொய்த மலர்த்தாதினைக் கொண்டு முன் உச்சி மயிரிலே அப்பி; தட முலை வருடிச் சேந்து - பெரிய முலைகளைத் தடவிச் சிவந்து; காதல் கொண்டு இருந்த காமர் கைவிரல் -அன்புகொண்டிருந்த அழகிய கைவிரல்களே; அளிய நீரும் ஏதிலர் ஆகி - எம்மை அருளத்தக்க நீரும் எமக்கு அயலாராகி; கோமான் எண்ணமே எண்ணினீர் - அரசன் நினைவையே நினைத்தீர்! (இது தகுமோ?)

விளக்கம் : செந்தீக்கடவுளை வலஞ்செய்து அது சான்றாக நும்மைப் பாதுகாப்பே மென்று எம் கைகளைப் பற்றின நீரும் என்றலின் உம்மை உயர்வு சிறப்புப்பொருளது. ( 350 )

2949. பஞ்சிகொண் டெழுதி யார்ந்த
சீறடி பனித்த லஞ்சிக்
குஞ்சிமே லேற்ற கோமான்
கொப்புளித் திட்ட வெம்மை
வஞ்சித்தீர் மணிசெய் தோள்காள்
வாங்குபு தழுவிக் கொள்ளீர்
நெஞ்சநீர் வலியீ ராகி
நிற்பிரோ நீரு மென்பார்.

பொருள் : மணிசெய் தோள்காள்! அணியணிந்த தோள்களே!; பஞ்சி கொண்டு எழுதி - செம்பஞ்சிக் குழம்பினால் எழுதி; ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சி - (அழகு) நிறைந்த சிற்றடிகள் (மெய்யிற்படின்) நடுங்குமென்றஞ்சி; குஞ்சிமேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை - தலையில் ஏற்ற அரசன் இனி நுகரேன் என்று கைவிட்ட எம்மை; நீர் வாங்குபு தழுவிக்கொள்ளீர் - நீர் அணைத்துத் தழுவிக்கொள்ளீர்; நீரும் நெஞ்சம் வலியீர் ஆகி நிற்பிரோ? - நீரும் உள்ளம் வலியீராகி நிற்பீரோ?; வஞ்சித்தீர் - (கைகள் எம்மைப் பற்றித் தெளிவிக்கும்போது உடனிருந்துதவிய நீவிர்) உண்மை கூறாமல் ஏமாற்றினீர்.

விளக்கம் : நெஞ்சின் என்ற பாடத்திற்கு நெஞ்சுபோல் என்று உரை கூறுக. நீரும் : உம் : உயர்வு சிறப்பு. ( 351 )

2950. முட்டுவட் டனைய கோல
முத்துலாய்க் கிடந்து மின்ன
மட்டுவிட் டலர்ந்த கோதை
மதுவொடு மயங்கி நாளு
மொட்டியிட் டுறைய வெங்கட்
குயரணை யாய மார்ப
நட்புவிட் டொழியு மாயி
னன்மையார் கண்ண தம்மா.

பொருள் : முட்டு வட்டு அனைய கோல - அரக்குவட்டுப் போன்றனவாய்த் திரண்ட; அம் முத்து உலாய்க் கிடந்து மின்ன - அழகிய முத்துக்கள் ஒன்றோடொன்று கலந்து மின்ன; மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி - தேன் துளித்து மலர்ந்த எம் மார்பின் கோதை (நின்னிடத்துக்கிடந்த மாலையின்) மதுவோடே மயங்கி; நாளும் ஒட்டியிட்டு உறைய எங்கட்கு உயர் அணையாய மார்பம்! - நாடோறும் ஒன்றுபட்டுறையும்படி எங்கட்கு உயர் அணையாக இருந்த மார்பே!; நட்பு விட்டு ஒழியும் ஆயின் - (நீ எம்மோடு கொண்ட) நட்பு எம்மைக் கைவிட்டு நீங்கின்; நன்மையார் கண்ணது! - மற்று நற்பண்பு யாரிடத்தே உள்ளது? (கூறாய்)

விளக்கம் : மூட்டு - அரக்கு. கோல் அம்முத்து எனக் கண்ணழித்துக் கொள்க. கோல் - திரட்சி. மட்டு - தேன். ஒட்டியிட்டு : ஒரு சொல். மார்பம் : விளி. நீ எம்பாற்கொண்ட நட்பு எம்மை விட்டொழியுமாயின் என்க. ( 352 )

2951. மாக்கவின் வளரத் தீண்டி
மணிநகை நக்கு நாளும்
பூக்கவி னார்ந்த பைந்தார்
புனைமதுத் தேனொ டேந்தித்
தாக்கியெம் முலைக டம்மை
நெருங்கினாய் தரணி மன்னி
னீக்கிநீ யெம்மை நோக்காய்
நீத்தியோ நீயு மென்பார்.

பொருள் : மாக்கவின் வளரத் தீண்டி - எம்முடைய பேரழகு மிகும்படி தீண்டி; மணிநகை நக்கு - மணியின் ஒளியை (நீ) தோற்றுவித்து; பூக்கவின் ஆர்ந்த பைந்தார் - பிற மலர்களின் அழகு நிறைந்த புதிய கழுநீர் மலரே!; நாளும் புனைமதுத்தேனொடு ஏந்தித் தாக்கி - எப்போதும் அணிந்த மதுவை வண்டுகளுடன் ஏந்தித் தாக்கி; நீ எம் முலைகள் தம்மை நெருக்கினாய் - நீ எம் முலைகளை நெருங்கினாய்!; தரணி மன்னின் எம்மை நீக்கி நோக்காய் - உலக வேந்துபோல எம்மை விலக்கிப் பாதுகாவாமல். நீயும் நீத்தியோ என்பார் - நீயும் கைவிட்டு நின்றாயோ என்பார்;

விளக்கம் : மாக்கவின் - பேரழகு. நக்கு - தோற்றுவித்து. தேன் - வண்டு. மன் - மன்னன் : சீவகன். நீயும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. செங்கழுநீர் மாலை மார்பகத்துக் தங்கி ஒட்டி ஒன்றாய் விடாது கூடி இருந்தது. இப்பொழுது நீங்குவதுபற்றி இங்ஙனம் கூறப்பட்டது. ( 353 )

2952. அன்னமே தோகை நல்யா
ழமுதமே யாய்ந்த தீந்தே
னின்னரே நங்கை மாரென்
றேத்திய பவளச் செந்நா
வென்னைநீ கண்ட தெம்மை
யிரண்டுநா வாயி னாயே
மன்னன்போ லீர மின்றி
வலித்தனை வாழி யென்பார்.

பொருள் : அன்னம் தோகை நல்யாழ் அமுதம் ஆய்ந்த தீ தேன் இன்னர் நங்கைமார் என்று - அன்னமும் மயிலும் அழகிய யாழும் அமுதமும் ஆராய்ந்த இனிய தேனும் ஆகிய இத்தன்மையர் நங்கையர் என்று; ஏத்திய பவளம் செந்நா - வாழ்த்திய பவளம்போன்ற செவ்விய நாவே!; எம்மை நீ கண்டது என்னை? - (இப்போது) எம்மிடம் நீ கண்ட குற்றம் என்னையோ?; மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை - அரசனைப்போல அன்பின்றி அழித்துக்கூறத் துணிந்தானை!; இரண்டு நா ஆயினாய் என்பார் - (கூறாயேல்) இரண்டு நாவாக ஆய்விட்டாய் என்பார்.

விளக்கம் : இன்னர் - இத்தன்மையர். செந்நா : விளி எம்மை : வேற்றுமை மயக்கம். மன்னர் : சீவகன். வாழி : அசை. ( 354 )

2953. பூணினா னெருங்க நொந்து
பொதிர்த்தன வெம்பி யென்று
நாணினால் வருத்தந் தீர்ப்பா
னன்முலைக் கண்க டம்மைப்
பேணிநீ ரெழுதி யோம்பிப்
பேரின்பங் கொண்டு தந்தீர்
காண்மினோ வின்றெம் வண்ணங்
கண்ணிலீர் கண்க ளென்பார்.

பொருள் : கண்கள் - கண்களே!; பூணினால் நெருங்க வெம்பி நொந்து பொதிர்த்தன என்று - (இவை) பூணுடன் நெருங்குவதாலே வெம்பி நொந்து புடைக்கொண்டன என்று (அரசன்) கருதி; நாணினால் வருத்தம் தீர்ப்பான் - (மேலும் நொய்துற அணிந்த) பொன்னாணால் (அம் முலைகட்குப்) பிறந்த வருத்தத்தை நீக்குதற்கு; நீர் நன்முலைக் கண்கள் தம்மைப் பேணி - நீர் அம் முலைக் கண்களைப் பேணி; எழுதி ஓம்பிப் பேரின்பம் கொண்டு தந்தீர் - எழுதிப் பாதுகாத்துப் பேரின்பங் கொண்டு எமக்கும் அப் பேரின்பம் கொடுத்தீர்; இன்று கண்ணிலீர்!(அத்தகைய நீர்) இப்போது அருளிலீர் ஆயினீர்; எம் வண்ணம் காண்மின் என்பார் - இனி எம் அழகு கெட்ட படியைக் காணுங்கோள் என்பார்.

விளக்கம் : பொதிர்த்தல் - புடைக்கொள்ளுதல். வெம்பிப் பொதிர்த்தன என மாறுக நாண் - ஈண்டுப் பொன்னாண். தீர்ப்பான் : வினையெச்சம். இன்பங்கொண்டு அதனை எமக்குத் தந்தீர் என்றவாறு. கண்ணிலீர் என்புழிக் கண் என்றது கண்ணோட்டம் என்றவாறு. கண்கள் : விளி. ( 355 )

2954. சென்னிமேன் மிதித்த வஞ்செஞ்
சீறடித் திருவில் வீச
மின்னிவா ளாரஞ் சிந்த
வெறுநிலத் துறைந்து நீயெ
மின்னகை முறுவல் பார்த்தா
யின்றெம தாவி பார்த்தாய்
மன்னிய மாலை வண்டார்
மணிமுடி வாழி யென்பார்.

பொருள் : மன்னிய மாலை வண்டு ஆர் மணிமுடி நிலைபெற்ற மாலையில் வண்டுகள் நிறைந்த நீலமணிபோலும் மயிர்முடியே!; சென்னிமேல் மிதித்த அம் செஞ்சீறடித் திருவில் வீச - (அரசன் வணங்கும்போது) அவன் முடியின்மேல் மிதித்த அழகிய சிவந்த சிற்றடிகள் அழகிய ஒளியை வீசவும்; வாள் ஆரம் மின்னிச் சிந்த - ஒளி பொருந்திய மாலை மின்னிச் சிந்தவும்; வெறுநிலத்து உறைந்து - வெறுந் தரையிலே படிந்து; நீ எம் இன்நகை முறுவல் பார்த்தாய் - நீ எம்முடைய இனிய புன்முறுவலை அன்று எதிர் நோக்கினை; இன்று எமது ஆவி பார்த்தாய் - இன்று எம் உயிர் வருந்துவதையும் பார்த்தாய்; வாழி என்பார் - வாழ்வாயாக! என்று நொந்து கூறுவர்.

விளக்கம் : நின் வழிபாடு பொய்யாயிருந்தது என்றபடி. வாழி : அசை எனினும் ஆம். என்பார் என்பார் என வருவனவற்றிற்கு ஆயினா என வருவித்து. என்பாராயினார் என முடிக்க. இத்துணையும் அரசனுடைய உறுப்புக்களை நோக்கிக் கூறிற்றாகத் தேவர் கூறினார்; சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் - செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும் (தொல். பொருளியல். 2) என்னும் பொருளியற் சூத்திரத்தால் என்று கொள்க. ( 356 )

2955. வீங்குபாற் கடலு நஞ்சாய்
விளைந்ததால் விரிந்த வெய்யோன்
பாங்கிலா விருளை யீன்று
பார்மறைத் திட்ட தாலோ
தீங்கதிர்த் திங்கள் செந்தீச்
சொரிந்ததாற் றிசைக ளெல்லாந்
தாங்குமா றென்னை யாவி
தரிக்கிலேந் தேவிர் காளோ.

பொருள் : தேவிர்காள் - தேவர்களே!; வீங்கு பாற்கடலும் நஞ்சாய் விளைந்தது - (அரசன் தன்மை இங்ஙனம் மாறியதால்) பெரிய பாற்கடலும் நஞ்சாய் விளைந்தது; விரிந்த வெய்யோன் பாங்கு இலா இருளை ஈன்று பார் மறைத்திட்டது - விரிந்த ஞாயிறு தன்னிடத்தில் இல்லாத இருளை ஈன்றதனால், அவ்விருள் உலகை மறைத்துவிட்டது; தீ கதிர்த் திங்கள் திசைகள் எல்லாம் செந்தீச் சொரிந்தது - இனிய நிலவையுடைய திங்கள் திக்கெட்டும் வெந்தீயைப் பெய்தது; ஆவி தரிக்கிலேம் - (ஆகையால்) யாம் எம் உயிரைத் தாங்கற்கிலோம்; தாங்கும் ஆறு என்னை - அதனைச் சுமக்கும் வழி யாது?)

விளக்கம் : ஈன்று - ஈன : எச்சத்திரிபு. பாற்கடலும் என்புழி உன்மை உயர்வு சிறப்பு. தனக்கியல்பாகிய அமிழ்தம் விளையாமல் தன் தன்மை திரிந்து நஞ்சாய் விளைந்தது என்றவாறு. ஏனையவற்றிற்கும் இங்ஙனமே கூறிக் கொள்க. வெய்யோன் - ஞாயிறு. தீங்கதிர் - இனிய கதிர். தேவிர்காள் : விளி. அலும் ஓவும் அசைகள். ( 357 )

வேறு

2956. விண்ணோர் மடமகள்கொல் விஞ்சைமக ளேகொல்
கண்ணார் கழிவனப்பிற் காந்தருவ தத்தையென்
றெண்ணாய வாணெடுங்கண் மெய்கொள்ள வேமுற்றுப்
பண்ணாற்பயின்றீ ரினியென் பயில்வீரே.

பொருள் : எண் ஆய வாள் நெடுங்கண் மெய்கொள்ள ஏம் உற்று - உலகம் எண்ணும் தன்மையுடைய வாளனைய நீண்ட கண்கள் அறிவைக் கவர்ந்து கொண்டதனாலே மயக்கம் உற்று; கண்ஆர் கழிவனப்பின் காந்தருவ தத்தை - கண்ணுக்கு நிறைந்த பெருவனப்பினளான காந்தருவ மகளாகிய தத்தையை; விண்ணோர் மடமகள் கொல்?- வானவரின் இளமகளோ?; விஞ்சைமகளே கொல்? - வித்தியாதர மகளோ?; என்று பண்ணால் பயின்றீர் - என்று (பாராட்டி) யாழார்ல் வென்று உறவுகொண்ட நீர்; இனி என் பயில்வீர் - இங்ஙனம் கைவிட்ட நிலையில் என்ன உறவு கொண்டீராவீர்?

விளக்கம் : அரசியர் அரசனை நோக்கி ஒருவரை யொருவர் காட்டிக் கூறுமாறு இச்செய்யுளிலிருந்து கூறுகிறார். இச் செய்யுளிற் காந்தருவ தத்தையைப் பிரிந்த ஆற்றாமை கூறப்பட்டது. கொல் இரண்டும் ஐயப்பொருளன. கண்ணார் - கண்ணுக்கு நிறைந்த. கழி : மிகுதிப்பொருட்டு. எண்ணாய - எண்ணுதற்குக் காரணமான. ஏம் - மயக்கம். பண் - யாழிற்கு ஆகுபெயர். ( 358 )

2957. கொல்வே னெடுங்கட் குணமாலை குஞ்சரத்தா
லல்லனோ யுற்றாளுக் கன்று களிறடர்த்துப்
புல்லிப் புணர்முலையின் பூங்குவட்டின் மேலுறைந்தா
யெல்லேமற் றெம்பெருமாற் கின்றிவளு மின்னாளோ.

பொருள் : கொல் வேல் நெடுங்கண் குணமாலை - கொல் வேலனைய நீண்ட கண்களையுடைய குணமாலை; அன்று குஞ்சரத்தால் அல்லல் நோய் உற்றாளுக்கு - அன்று அசனிவேகம் என்னும் களிற்றால் வருத்தமுற்றபோது அவளுக்கு; களிறு அடர்த்து - அந்த யானையை வருத்தி; புல்லிப் புணர்முலையின் பூங்குவட்டின்மேல் உறைந்தாய் - அவளைத் தழுவி அவளுடைய இருமுலைகளாகிய அழகிய மலைகளின்மேற் பயின்றாய்; மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் எல்லே இன்னாளோ! - இனி, எம் பெருமானே! நினக்கு இன்று இவளும் வெளியாகத் தீயவளோ?

விளக்கம் : இதனாற் குணமாலையைத் துறந்த ஆற்றாமை கூறப்பட்டது. கொல்வேல் : வினைத்தொகை. குஞ்சரம் - ஈண்டு அசனிவேகம். குஞ்சரத்தால் நோயுற்ற குணமாலைக்கு என்றவாறு. அக்களிறடர்த்து என்க. எல்லே - வெளியாக. இன்னாள் - தீயவள்.(359)

2958. தூம்புடைய வெள்ளெயிற்றுத் துத்தியழ னாகப்
பாம்புடைய நோக்கிப் பதுமை பவழவாய்
தேம்புடைய வின்னமுதாச் சேர்ந்தாய்க் கினியதுவே
யாம்புடைய நஞ்சடங்கிற் றின்றூறிற் றாகாதே.

பொருள் : தூம்புடைய வெள் எயிற்றுத் துத்தி அழல் நாகப்பாம்பு உடைய நோக்கி - புரை பொருந்திய வெள்ளெயிற்றினையும், பொறியினையும், நஞ்சினையும் உடைய நாகப்பாம்பின் நஞ்சு நீங்கப் பார்த்து ; பதுமை பவளவாய் தேம்புடைய இன்அமுதாச் சேர்ந்தாய்க்கு - பதுமையின் பவளமனைய வாயினை இனிய அமுதாகக் கொண்டு கூடிய நினக்கு; இனி ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று, இன்று ஊறிற்று ஆகாதே - மேல் வளருங் கூற்றினையுடைய நஞ்சு ஒருபுறத்தே அடங்கித் தீராமல் நின்றது; அதுவே இன்று ஊறியதாகாதோ?

விளக்கம் : தேம்புதலையுடைய பதுமை எனினும் ஆம். இதனாற் பதுமையைத் துறந்த ஆற்றாமை கூறப்பட்டது. தூம்பு - துளை. துத்தி - படத்தின் கட்பொறி. பாம்பு - நஞ்சிற்கு ஆகுபெயர். தேம்பு - தேம்புதல். ஆம்புடைய - ஆகும் திறத்தையுடைய. பாம்பின் நஞ்சுதீர்த்து உய்யக்கொண்ட நீயே நின்பிரிவாகிய நஞ்சாலே கொல்வாயோ என்பது கருத்து. ( 360 )

2959. தாழ்ந்துலவி மென்முலைமேற் றண்ணாரம் வில்விலங்கப்
போழ்ந்தகன்ற கண்ணினா லேப்பெற்றுப் போகலாய்
தாழ்ந்தமர ரின்னமிர்தந் தக்கநாட் டாகாதே
வீழ்ந்ததென வீழ்ந்தாய்நீ யின்றதுவும் விட்டாயோ.

பொருள் : மென்முலைமேல் தண் ஆரம் தாழ்ந்து உலவி - மென்மையான முலைகளின்மேல் தண்ணிய முத்துமாலை தங்கி உலவி; வில்விலங்க - ஒளியைக் குறுக்கே வீச; அகன்ற கண்ணினால் போழ்ந்து ஏப்பெற்றுப் போகலாய் - மலர்ந்த விழியினால் (நின் நெஞ்சைப்) பிளக்க எய்த அம்பைப் பெற்றுப் போக மாட்டாயாய்; அமரர் இன் அமிர்தம் ஆகாதே தக்கநாட்டு வீழ்ந்தது என - வானவர் கொண்டுபோகும் அமிர்தம் அவர்கட்கு ஆகாமல் தக்கநாட்டிலே வீழ்ந்தது என்று கருதி; வீழ்ந்தாய் - விரும்பினாய்; இன்று அதுவும் நீ விட்டாயோ? - நீ இன்று அவ்விருப்பத்தையும் விட்டாயோ?

விளக்கம் : இதனாற் கேமசரியைத் துறந்த ஆற்றாமை கூறப்பட்டது. ஆரம் - முத்துமாலை. வில் - ஒளி. போழ்ந்து - போழ. ஏ - அம்பு. வீழ்ந்தாய் - விரும்பினாய். அது அவ்விருப்பம். ( 361 )

2960. கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ
பெண்ணோ வமுதோ பிணையோ வெனப்பிதற்றித்
துண்ணென் சிலைத்தொழிலுங் காட்டிமுன் னின்புற்றீர்
புண்மேற் கிழிபோற் றுறத்தல் பொருளாமோ.

பொருள் : பெண்ணோ அமுதோ பிணையோ - இவள் பெண்ணோ? அமுதமோ? மான்பிணையோ?; கண்ணோ கயலோ கழுநீரோ? காவியோ எனப் பிதற்றி - இவள் முகத்தில் உள்ளவை கண்ணோ? கயல்மீனோ? கழுநீர் மலரோ? குவளை மலரோ? என்று புனைந்துரைத்து; துண் என் சிலைத்தொழிலும் காட்டி - (இவள் பொருட்டு இவளைப் பெறுவதற்குமுன்) அஞ்சத்தக்க விற் பயிற்சியையுங் காட்டி; முன் இன்பு உற்றீர் - முன் இன்பம் அடைந்தீர்; புண்மேல் கிழிபோல துறத்தல் பொருளாமோ? - நீர் இக்காலத்துப் புண்ணிற்கிடந்த துணிபோல் துறத்தல் அறம் ஆமோ?

விளக்கம் : விற்பயிற்சியைக் காட்டியது கனகமாலையை மணப்பதற்குமுன் என்றும் மணந்ததற்பின்னர்ப் பாராட்டினான் என்றுங்கொள்க. இதனாற் கனகமாலையைத் துறந்த ஆற்றாமை கூறப்பட்டது. ( 362 )

2961. பொன்னகர வீதி புகுந்தீர் பொழிமுகிலின்
மின்னி னிடைநுடங்க நின்றாடன் வேனெடுங்கண்
மன்ன னகரெல்லாம் போர்ப்ப வலைப்பட்டீர்க்
கின்னே யொளியிழந்த வின்னா விடுகினவோ.

பொருள் : பொன் நகர வீதி புகுந்தீர் - அழகிய இராசமாபுரத்துத் தெருவிலே புகுந்த நீர்; பொழி முகிலின் மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் - நீர் பெய்யும் முகிலிலே மின் போல இடை அசைய நின்ற விமலையின்; வேல் நெடுங்கண் மன்னன் நகர் எல்லாம் போர்ப்ப வலைப்பட்டீர்க்கு - வேலனைய நீண்ட கண்கள் இவ்விராசமாபுரம் முற்றும் சூழ்போத அவ்வலையிலே அகப்பட்ட நுமக்கு; இன்னே ஒளியிழந்து இன்னா இடுகின்வோ? - இப்படியே ஒளிகெட்டுத் துன்பத்தாற் குறைந்தனவோ?

விளக்கம் : பொழி முகில் கூறினார் மிக விளங்குதற்கு. மன்னன் நகர் - இராசமாபுரம். மன்னன் : சச்சந்தன். மன்னநகர் எனின், மன்ன: விளி : ஒருமை பன்மை மயக்கம். மன்ன என்ற ஒருமையுடன் புகுந்தீர், அகப்பட்டீர் எனப் பன்மை மயங்கினதால் போர்ப்ப என்றது, எங்கெங்கே தோன்றினும் அங்கங்கே தோன்றுமே (சீவக.1971) என்றதனை. இதனால் விமலையின் நிலை கூறப்பட்டது.
( 363 )

2962. செங்கச் சிளமுலையார் திண்கறையூர் பல்லினார்
மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீமகிழ்ந்து
பங்கயமே போல்வாளைப் பார்ப்பானாய்ப் பண்ணணைத்துத்
தங்கினாய் கோவே துறத்த றகவாமோ.

பொருள் : கோவே! - அரசே!; செங்கச்சு இளமுலையார் - சிவந்த கச்சணிந்த இள முலையினாரும்; திண்கறையர் பல்லினார் - (முதுமையாற்) கறைபோக விளக்கமாட்டாத பற்களையுடைய வரும் ஆகிய; மங்கையர்கள் காப்ப - பெண்டிர்கள் காக்க; மகிழ்ந்தாளை - மகிழ்ந்த சுரமஞ்சரியை; பங்கயமே போல்வாளை - (ஞாயிற்றை நோக்கும்) தாமரையே போல நின்னையே நோக்கியவளை; நீ மகிழ்ந்து பார்ப்பானாய்ப் பண் அணைத்துத் தங்கினாய் - நீயும் விரும்பிப் பார்ப்பானாய்ச் சென்று இசையாலே தழுவித்தங்கினாய்; துறத்தல் தகவாமோ? - இனி, இவ்வாறு துறத்தல் நினக்குத் தகுதியோ?

விளக்கம் : பங்கயமே போல்வாள் என்றார் கற்புக் கடம்பூண்ட சிறப்பு நோக்கி. பண்ணலைத்து என்ற பாடத்திற்குப், பண்ணாலே அவள் வன்மையை நெகிழ்ந்து என்று பொருள் கொள்க. இதனாற் சுரமஞ்சரியின் நிலை கூறப்பட்டது. ( 364 )

2963. புல்லா ருயிர்செகுத்த பொன்னந் திணிதோளாய்
மல்லா ரகன்மார்ப மட்டேந்தி வாய்மடுத்திட்
டெல்லாருங் காண விலக்கணையோ டாடினா
யல்லாந் தவணடுங்க வன்பி னகல்வாயோ.

பொருள் : புல்லார் உயிர் செகுத்த பொன்அம் திணிதோளாய் - பகைவருயிரைக் கொன்ற, பொன்னணி புனைந்த அழகிய திண்ணிய தோளனே!; மல் ஆர் அகல் மார்ப! - மல்லுத்தன்மை பொருந்திய அகன்ற மார்பனே!; மட்டு ஏந்தி - மதுவைப் பணிமகளிர் எடுத்து நிற்க; வாய்மடுத்திட்டு - வாயாற் பருகி; இலக்கணையோடு ஆடினாய் - இலக்கணையுடன் மகிழ்ந்தாய்; அவள் நடுங்க அன்பின் அகல்வாயோ? - (இன்று) அவள் அஞ்சுற நீ அவளைவிட்டு நீங்குவவையோ?

விளக்கம் : ஏந்தி - ஏந்த : எச்சத்திரிபு. புல்லார் - பகைவர். மல் - மற்றொழில். மட்டு - கள். ஏந்தி - ஏந்த. அல்லாந்து - அலமந்து. அவள் : அவ்விலக்கணை. அன்பின் - அன்பினின்றும். ( 365 )

24.கோயில் விலாவணை

2964. கல்லோ மரனு மிரங்கக் கலுழ்ந்துருகி
யெல்லாத் திசைதோறு மீண்டி யினமயிர்போற்
சொல்லாத் துயர்வார் தொழுவா ரழுவாரா
யல்லாந் தகன்கோயி லாழ்கடல்போ லாயிற்றே.

பொருள் : எல்லாத் திசைதோறும் ஈண்டு - (அரண்மனையின்) எல்ர்ர்ப் பக்கதினும் இருந்து (மகளிர்) கூடி; இனமயில்போல் - திரளாகிய மயிலைப்போல; கல்லோ மரனும் இரங்க - கல்லும் மரமும் வருந்த; கலுழ்ந்து உருகி சொல்லாத்துயர்வார் தொழுவார் அழுவாராய் - (தம் ஆற்றாமையைக்) கதறி உருகிச் சொல்லித் துயருற்றுத் தொழுவாரும் அழவாருமாய்; அல்லாந்து - அலமருதலாலே; அகன் கோயில் ஆழ்கடல்போல் ஆயிற்றே - அகன்ற அரண்மனை ஆழமாகிய கடல்போல வாயிற்று.

விளக்கம் : கல்லோ : ஓ : அசை. இச் செய்யுள் முதலாக மூன்று செய்யுட்களும் அரண்மனையிலுள்ள அரசியரை ஒழிந்த (சீவகனுடைய) காம நுகர்ச்சி மகளிர் துயர் கூறுகின்றார். நச்சினார்க்கினியர் இச் செய்யுளில் உள்ள சொல்லா என்பதனுடன் இங்ஙனம் என வருவித்து இங்ஙனஞ் சொல்லி எனப் பொருள்செய்து அரசியரின் விலாவணையைக் குறிப்பிட்டவராய், அடுத்த செய்யுட்களில் உள்ள பொருள்களையும் அவர்கட்கே ஆக்கிப், பின்னர் இச் செய்யுட் பொருளை அரண்மனைமகளிர்க்காக்குவர். அரசியரின் விலாவணை முற்கூறியதனாலும், நுகர்ச்சி மகளிரின் விலாவணை கூறவேண்டியதனாலும் இங்ஙனம் மாற்றிப் பொருள்கோடலிற் போதிய பயனின்றென்க. ( 366 )

2965. பூப்பரிவார் பொன்செய் கலம்பரிவார் பொன்வளையை
நீப்பி ரெனப்புடைப்பார் நீடாமஞ் சிந்துவா
ரேப்பெற்ற மான்பிணைபோ லேங்குவா ரின்னுயிரைக்
காப்பரேற் காவலனார் காவாரோ வின்றேன்பார்.

பொருள் : பூப்பரிவார் - பூமாலையை அறுப்பார்; பொன் செய் கலம் பரிவார் - பொன்னாலான அணிகளை அறுப்பார்; பொன் வளையை நீப்பிர் எனப் புடைப்பார் - பொன்னாலான வளையலை நீங்குமின் என மோதி உடைப்பார்; நீள் தாமம் சிந்துவார் - நீண்ட மாலையைச் சிதறுவார்; ஏப்பெற்ற மான் பிணைபோல் ஏங்குவார் - அம்பேற்ற மான் பிணைபோல ஏங்குவார்; காவலனார் இன் உயிரைக் காப்பரேல் இன்று காவாரோ என்பார் - உயிரைக் காக்கும் வல்லவராகிய அரசர் இனிய உயிர்களைக் காப்பவரெனின் இன்று எம் உயிரைக் காவாரோ என்பார்.

விளக்கம் : பூ - மாலைக்கு ஆகுபெயர். பரிவார் - அறுப்பார். நீப்பிர் : முன்னிலைப் பன்மை : நீள்தாமம் : வினைத்தொகை. ஏ - அம்பு. காவலனார் - காத்தல் வல்லவர். ( 367 )

2966. கழுநீருந் தாமரையுங் கண்டனவே போலு
முழுநீர்வேற் கண்ணும் முகமு முலறிச்
செழுநீர் மணிக்கொடிகள் காழகஞ் சேர்கொம்பா
யழுநீர வாயலறி யல்லாப்ப போன்றாரே.

பொருள் : கழுநீரும் கண்டனவே போலும் முழுநீர் வேல் கண்ணும் முகமும் உலறி - கழுநீரையும் தாமரையையும் சேரக் கண்டாற்போலும் முழுநீர்மையுடைய வேல் போன்ற கண்ணும் முகமும் உலர்ந்து; செழுநீர் மணிக்கொடிகள் காழகம்சேர் கொம்பாய் - நன்னீர்மையுடைய மணிக்கொடிகள் கருமை பொருந்திய கொம்பாய்; அழுநீரவாய் -அழந்தன்மையுடையனவாய்; அலறி - கதறி; அல்லாப்பபோன்றார் - அல மருகின்றவற்றைப் போன்றனர்.

விளக்கம் : இவர்கள் அழுது வற்றி உலர்ந்தனராகையாற் காழகஞ்சேர் கொம்பு அலமரல் போன்றனர். வளவிய நீர்மையையுடைய மணியென்றார், பல நிறத்து மணிகளையுங் கருதி. ( 368 )

வேறு

2967. பண்ணார் பணைமுழவம் பாடவிந்து
பன்மணியாழ் மழலை நீங்கிப்
புண்ணார் புனைகுழலு மேங்கா
புனைபாண்டி லிரங்கா வான்பூங்
கண்ணா ரொலிகவுள கிண்கிணியு
மஞ்சிலம்புங் கலையு மாரா
மண்ணார் வலம்புரியும் வாய்மடங்கிக்
கோன்கோயின் மடிந்த தன்றே.

பொருள் : வான்பூங் கண்ணார் - சிறந்த மலர்போலுங் கண்ணாருடைய; பண் ஆர் பணைமுழவம் பாடு அவிந்து - இசைக்குரிய பருத்த முழவுகள் ஒலிகெட்டு; பல் மணியாழ் மழலை நீங்கி - பல மணிகளிழைத்த யாழின் ஒலி கெட்டு; புண் ஆர் புனை குழலும் ஏங்கா - துளை பொருந்திய அழகிய குழலும் ஒலியா; புனை பாண்டில் இரங்கா - அழகிய கஞ்சதாளமும் ஒலியா; ஒலி கவுள கிண்கிணியும் அம் சிலம்பும் கலையும் ஆரா - ஒலிக்கும் பக்கத்தையுடைய கிண்கிணியும் அழகிய சிலம்பும் கலையும் ஒலியா; மண ஆர் வலம்புரியும் வாய் மங்கி - அரக்கிட்டாடின வலம்புரியும் ஒலியவிந்து; கோன் கோயில் மடிந்தது - அரசன் கோயில் ஆரவாரம் அற்றது.

விளக்கம் : மண்ணார் கோன் எனச் சேர்க்கலாம் என்றும், பூங்க கண்ணார் மழலை நீங்கி என இயைத்துங் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 369 )

2968. அணியார் மணியரக்கு வட்டழுத்தி
வைத்தனைய செங்கண் மாத்தாட்
பிணியார் பெருந்துருத்தி யன்ன
பெருங்கடவுள பிறையேர் கோட்ட
பணியார் கமழ்கடாத் தண்ண
லரசுவாப் பண்ணார் பாய்மா
விணையாது மில்லாத கண்ணீர்வீழ்த்
துண்ணாநின் றினைந்த தாமே.

பொருள் : அணியார் மணி, அரக்கு வட்டு அழுத்திவைத்த அனைய செங்கண் - அழகிய மணியினையும், சிவந்த எஃகுருண்டையை அழுத்தி வைத்தால் அனைய சிவந்த கண்களையும்; மாத்தாள் - பெரிய கால்களையும்; பிணியார் பெருந்துருத்தி அன்ன பெருங்கவுள - பிணிப்புற்ற பெரிய துருத்திபோன்ற பெரிய கவுள்களையும் உடையனவாய்; பிறை ஏர் கோட்ட - பிறை போன்ற அழகிய கோடுகளையுடையனவாய்; பணி ஆர் கமழ் கடாத்து - வண்டுகள் படிய நிறைந்த மணமுறும் மதத்தினையுடையவாய் (உள்ள); அண்ணல் அரசு உவா - அரசனுடைய பட்டத்து யானைகளும்; இணையாதும் இல்லாத - தமக்குவமை யாதும் இல்லாத; பண் ஆர் பாய்மா - பண்ணுதல் அமைந்த குதிரைகளும்; தாமே கண்ணீர் வீழ்த்து உண்ணா நின்று இனைந்த - தாமே (அரசன் துறவுணர்ந்து) கண்ணீரை விடுத்து உண்ணாமல் நின்று வருந்தின

விளக்கம் : மணியினையும் கண்ணையும் தாளையும் உடைய அரசுவா, கவுளவும் கோட்டவும் ஆகிய அரசுவா, கடாத்து அண்ணல் அரசுவா எனத் தனித்தனி கூட்டுக. அரசுவா - பட்டத்துயானை. பாய்மா - குதிரை. இணையாதுமில்லாத பண்ணார் பாய்மா என இயைக்க. இனைந்த - வருந்தின. தாமே இனைந்த என மாறுக. ( 370 )

2969. கழித்த கடிப்பிணையுங் கைவளையு
மாலையுங் களைந்து முத்துந்
தொழித்த நறுஞ்சாந்துஞ் சுண்ணமும்
பன்மணியுங் கலனுஞ் சிந்தி
விழித்து வியன்கோயில் பன்மீன்
பரந்திமைக்கும் பனியார் வானம்
பழித்துப் பசும்பொன் னுலகு
குடிபோயிற் றொத்த தன்றே.

பொருள் : களைந்து கழித்த கடிப்பிணையும் கைவளையும் மாலையும் முத்தும் - வாங்கிப் போடப்பட்ட கடிப்பிணை என்னும் காதணியும் கைவளையலும் மாலையும் முத்தும்; தொழித்த கலனும் - ஒலித்த கலனும்; நறுஞ்சாந்தும் சுண்ணமும் பல்மணியும் சிந்தி - நல்ல சந்தனமும் சுண்ணப்பொடியும் அளைந்த பல்வகை மணிகளும் சிந்தி; விழித்து - விளங்கியதனால்; வியன் கோயில் - பெரிய அரண்மனை; பன் மீன் பரந்து இமைக்கும் பனி ஆர் வானம் பழித்து - பல விண்மீன்கள் பரவி ஒளிரும் குளிர்ந்த வானத்தைப் பழித்து; பசும்பொன் உலகு குடிபோயிற்று ஒத்தது - பொன்னுலகு குடிபோயிற்றுப் போன்றது.

விளக்கம் : களைந்த முத்தும் என்றும் பாடம் . கடிப்பிணை - ஓர் அணிகலன். தொழித்த - ஒலித்த. சாந்தும் சுண்ணமும் அளைந்த மணியென்க. விழித்து - விழிப்ப - விளங்குதலான் என்க. தொழித்த கலன் என ஒட்டுக. பனி - குளிர். பனியுமாம். ஆற்றொணாத் துன்ப மேலீட்டால் வெறுத்துச் சிந்திய கலன்கள் விண்மீனை யொத்தன. ( 371 )

2970. அழலார் சுரையெயிற்று வெஞ்சினவைந்
தலைசுமந்த வெகுளி நாக
நிழலார் திருமணியுந் தேவர்
திருமுடிமே னிலவி வீசுஞ்
சுழலார் பசும்பொன்னும் வேய்ந்து
சொரிகதிர்மென் பஞ்சி யார்ந்த
கழலா னகர மமுது
கடைகடல்போற் கலங்கிற் றன்றே.

பொருள் : அழல் ஆர் சுரை எயிற்று வெஞ்சின வெகுளி நாகம் - நஞ்சு பொருந்திய குழல்போன்ற பற்களையும் வெஞ்சின வெகுளியையும் உடைய நாகத்தின், ஐந்தலை சுமந்த நிழல் ஆர் திருமணியும் - ஐந்தலையிலே சுமந்த, ஒளி நிறைந்த அழகிய மணியும், தேவர் திருமுடிமேல் நிலவி வீசும் சுழல் ஆர் பசும்பொன்னும் - (இனி வணங்கும்) வானவர் திருமுடிமேல் விளங்கி வீசும் சுழலும் ஒளியுடைய புதிய பொன்னணியும்; வேய்ந்து - அணிந்து; கதிர் சொரி மென் பஞ்சி ஆர்ந்த கழலான் - ஒளி வீசும் மென்மையான பஞ்சுபோல் மென்மை நிறைந்த கழலானின்; நகரம் அமுது கடை கடல்போல் கலங்கிற்று - நகரம் அமுது கடையுங் கடல்போலக் கலங்கியது.

விளக்கம் : வானவர் வணங்குதல், இனிமேல் சீவகனடையும் சிறப்பு, சுழலார் வானவர் எனக்கூட்டி வலம்வரும் வானவர் எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 372 )

25.நகர விலாவணை

வேறு

2971. நீர்நிறை குளத்து மாரி
சொரிந்தென நறுநெய் துள்ளு
நேர்நிறை பொரியுங் குய்யும்
வறைகளு நிவந்த வாசம்
பார்நிறை யடிசிற் பள்ளி
தளியொடு சாலை யெல்லா
மூர்நிறை யுயிர்த்த லின்றி
யுயிர்சென்ற போன்ற வன்றே.

பொருள் : பார் நிறை அடிசில் பள்ளி தளியொடு சாலை எல்லாம் - உலகு நிறைந்த புகழையுடைய அட்டில்களிலும் கோயில்களிலும் சோறிடுஞ் சாலைகளிலும் ஆக எங்கும்; நீர் நிறை குளத்து மாரி சொரிந்தென - நீர்நிறைந்த குளத்திலே மழை பெய்ததென்னும்படி; நறு நெய் துள்ளும் நேர்நிறை பொரியும் குய்யும் வறைகளும் நிவந்த வாசம் - நல்ல நெய்யிலே துள்ளுமாறு பொரித்த ஒழுங்காக நிறைந்த பொரிக்கறிகளும் கொண்டபடி உயர்ந்த மணம்; ஊர் நிறை உயிர்த்தல் இன்றி - ஊர் நிறையும் தோன்றுதலின்றாய்; உயிர் சென்ற போன்ற - உயிர் நீங்கியவை போன்றன.

விளக்கம் : குளத்திலே மழைபெய்த தென்னும்படி நறுநெய்யிற்றுள்ளும்படி பொரித்த பொரிக்கறி. பல காயங்கள் குறிக்கு நேராக நிறைந்த பொரிக்கறி. குய் - தாளிக்குங் கறி. வறைகள் - துவட்டின கறிகள்; வறுவல். பாரிலே நிறைந்த புகழினையுடைய ஊர் என்க.
( 373 )

2972. கோட்புலிச் சுழல்கண் ணன்ன
கொழுஞ்சுவைக் கருனை முல்லை
மோட்டிள முகையின் மொய்கொள்
கொக்குகிர் நிமிரல் வெண்சோ
றூட்டுறு கறிகொ டேமாங்
கனிசுவைத் தயிரோ டேந்தி
வேட்டவர்ப் பெறாது வீதி
வெறுநிலங் கிடந்த வன்றே.

பொருள் : மோட்டு இளமுல்லை முகையின் மொய்கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு - உயர்ந்த இளமை பொருந்திய முல்லையரும்பைப் போலத் திரட்சி கொண்ட, கொக்கின் நகம் போன்ற நீண்ட வெண்சோறும்; கொள்புலிச் சுழல்கண் அன்ன கொழுஞ்சுவைக் கருனை - கொல்லும் புலியின் சுழல்கண் போன்ற நறுஞ்சுவையுடைய கருனைக்கிழங்கும்; ஊட்டுறு கறி - உண்ணப்பண்ணும் கறியும்; தேமா கொள் கனி - தேமாவிற் கொண்ட கனியும்; சுவைத் தயிரொடு ஏந்தி - இனிமையுடைய தயிரையும் ஏந்தியவாறு; வேட்டவர்ப் பெறாது - விரும்பி யுண்போரைக் காணாமல்; வீதி வெறுநிலம் கிடந்த - தெருக்கள் வெறு நிலமாய்க் கிடந்தன.

விளக்கம் : புலிக்கண் பொரிக்கறிக்குவமை. புல்லிக்கண் வெப்பர் என்பர் புறத்தில், (269). முல்லை முகையின் மொய்கொள் வெண்சோறு கொக்கு உகிர் நிமிரல் வெண்சோறு எனத் தனித்தனி கூட்டுக. முல்லை முகை திரட்சிக்கும் கொக்குகிர் நீட்சிக்கும் உவமைகள். வேட்டவர் - விரும்புவார். அறம் நிகழும் வீதிகள் வறிதே கிடந்தன என்றவாறு. மன்னன் துறக்கவே வாழும் மாந்தரும் மனம் மாழ்கினராய் ஊண் துறந்து உரைக்கவொண்ணா உறுதுயர் உற்றமை காண்க. ( 374 )

2973. மைந்தர்தம் வண்கை யான்முன்
மணிவள்ளத் தெடுத்த தேறல்
பைந்துகின் மகளிர் மேவார்
பாசிழை பசும்பொன் மாலை
சிந்தியே கரந்தார் சொற்போன்
மெய்யின்கட் சேர்த லின்றாய்ச்
சந்தனச் சாந்தொ டாரந்
தாங்கவி னிழந்த வன்றே.

பொருள் : மைந்தர் தம் வண் கையால் முன் மணி வள்ளத்து கையால் எடுத்த தேறல் - ஆடவர்கள் தம் வளவிய கையால் முன்னர் மணிகள் இழைத்த கிண்ணத்திலே எடுத்த மதுத் தெளிவை; பைந்துகில் மகளிர் மேவார் - (இன்று) புத்தாடையணிந்த பெண்கள் விரும்பாராயினர்; பாசிழை பசும் பொன் மாலை சிந்தி - புத்தணிகளையும் புதிய பொன் மாலைகளையும் சிந்த; கரந்தார் சொல்போல் மெய்யின் கண் சேறல் இன்றாய் - போலித் துறவிகளின் சொற்களைப்போல மெய்யிலே அடைதல் இல்லாமல்; சந்தனச்சாந்தொடு ஆரம் - சந்தனக் குழம்புடனும் முத்துமாலையுடனும்; தாம் கவின் இழந்த - தாமும் அழகிழந்தன.

விளக்கம் : போலித் துறவிகளின் சொல் பற்றுவிடாதிருக்கவும் பற்றற்றன போன்றிருக்குமாறுபோல, அவர்கட்குப் பற்றிருப்பினும் அரசன் துறவால் பற்றற்றவர்போன்று மேவாதிருந்தனர். மெய் - உண்மை உடம்பு. ( 375 )

2974. தாழிவாய் மறைக்குந் தண்ணென்
றடம்பெருங் குவளைக் கண்ணார்
மூழிவாய் முல்லை மாலை
முலைமுக முரிந்து நக்க
யாழின்வாய் முழவம் விம்ம
வாட்டொழிந் தயர்ந்து தீந்தே
னூழிவாய்க் கொண்ட தொக்கும்
பாடலு மொழிந்த தன்றே.

பொருள் : தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெருங்குவளைக் கண்ணார் - தாழியின் வாயை மறைக்கும் தண்ணெனும் பொய்கையிலுள்ள குவளைபோலும் கண்ணார்; மூழிவாய் முல்லைமாலை முலைமுகம் முரிந்து நக்க - பெட்டியில் இருந்தெடுத்த முல்லை மலர் மாலை முலைமுகத்திலே நுடங்கித் தடவ; யாழின வாய் முழவம் விம்ம - யாழிசைக்கவும் முழவம் முழங்கவும்; ஆட்டு ஒழிந்து தீ தேன் ஊழிவாய்க் கொண்டது ஒக்கும் - பாடலும் ஆட்டமும் ஒழிந்து, இனிய தேனினம் முரல்வது மாறி முறையாகப் பாடினாற்போன்ற பாடலும் ஒழிந்தது.

விளக்கம் : முழவம் விம்ம ஆடலும், யாழிசைக்கப் பாடலும் என மாற்றிக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். யாழிசையும் பாட்டும் கூத்துக்கும் பொருந்துமாதலின் வேறு பிரிப்பதாற் பயனின்றென்க. ஊழ் ஊழியெனத் திரிந்தது. ( 376 )

2975. அருங்கல நிறைந்த வம்பூம்
பவளக்கா றிகழம் பைம்பொற்
பெருங்கிடு கென்னுங் கோலப்
பேரிமை பொருந்தி மெல்ல
வொருங்குட னகர மெல்லா
முரங்குவ தொத்த தொல்லென்
கருட்கடல் கல்லென் சும்மை
கரந்தது மொத்த தன்றே.

பொருள் : அருங்கலம் நிறைந்த அம் பூம் பவழக் கால் திகழும் - அரிய கலங்கள் நிறைந்த, அழகிய பூவேலை செய்த பவழக் காலிலே திகழ்கின்ற; பைம்பொன் பெருங்கிடுகு என்னும் கோலப் பேரிமை பொருந்தி - பைம் பொன்னாலான பெரிய சட்டம் என்னும் பெரிய இமை பொருந்தி; நகரம் எல்லாம் ஒருங்கு உடன் உறங்குவது ஒத்தது - நகரம் முழுதும் ஒன்றாக உறங்குவதைப் போன்றது; ஒல்லென் கருங்கடல் சும்மை கரந்ததும் ஒத்தது - ஒலிக்குங் கரிய கடல் தன் ஒலியை மறைத்ததும் போன்றது.

விளக்கம் : கலங்கள் நிறைந்து, பவழக்காலிலே பொன்சட்டத்தினால் மூடப்படுவது அங்காடித்தெரு. நகருக்கு அங்காடி கண்ணாகவும் சட்டம் அத்தெருவின் இமையாகவும் உருவகஞ் செய்யப்பட்டன. இதனால் அங்காடி யடைத்தது என்றார். ( 377 )

2976. கலையுலாய் நிமிர்ந்த வல்குற்
கடல்விளை யமுத மன்னார்
முலையுலாய் நிமிர்ந்த மொய்தார்
முழவுமுத் துரிஞ்சி மின்னச்
சிலையுலாய் நிமிர்ந்த மார்பன்
றிருநகர் தெருள்க லாதாய்
நிலையிலா வுலகின் றன்மை
நீர்மைமீக் கூறிற் றன்றே.

பொருள் : கலை உலாய் நிமிர்ந்த அல்குல் கடல்விளை அமுதம் அன்னார் - கலை பொருந்தி நிமிர்ந்த அல்குலையுடைய, கடலில் விளையும் - அமுதம்போன்ற மகளிரின்; முலை உலாய் நிமிர்ந்த மொய்தார் - முலைகளில் உலவி நிமிர்ந்த திரண்ட மலர் மாலையும்; முழவு முத்து உரிஞ்சி மின்னச் சிலைஉலாய் நிமிர்ந்த மார்பன் - முழவு போல் திரண்ட முத்துமாலையும் பொருந்தி மின்னும்படி, வில் உலாவி நிமிர்ந்த மார்பனுடைய; திருநகர் - அழகிய இராசமாபுரம்; தெருள்கலாதாய் - தெளிவடையாத தாய்; உலகின் தன்மை நிலை இலா நீர்மை மீக்கூறிற்று - உலகின் இயற்கை நிலையில்லாத நீர்மையாக இருக்கும் என்று மேலாகக் கூறிற்று.

விளக்கம் : கலை - மேகலை. முழவுமுத்து - உவமத்தொகை. சிலை - வில். மார்பன் : சீவகன். நகர்- ஈண்டு. இராசமாபுரம். உலகின் தன்மை நிலையிலா நீர்மை என இயைக்க. ( 378 )

வேறு

2977. கூந்த லகிற்புகையும் வேள்விக் கொழும்புகையு
மேந்து துகிற்புகையு மாலைக் கிடும்புகையு
மாய்ந்த பொருளொருவர்க் கீயா வதிலோப
மாந்தர் புகழேபோற் றோன்றா மறைந்தனவே.

பொருள் : கூந்தல் அகில் புகையும் - கூந்தலுக்கிடும் அகிற்புகையும்; வேள்விக் கொழும் புகையும் - வேள்ளியில் எழும் மிக்க புகையும்; துகில் ஏந்து புகையும் - ஆடைக்கு ஏந்தும் புகையும்; மாலைக்கு இடும் புகையும் - மாலைக்கு இட்ட புகையும்; ஆய்ந்த பொருள் ஒருவர்க்கு ஈயா அதிலோ மாந்தர் புகழேபோல் - நல்ல பொருளை ஒருவர்க்கு நல்காத கொடிய லோபிகளின் புகழ்போல; தோன்றா மறைந்தன - தோன்றாமல் மறைந்தன.

விளக்கம் : கூந்தலுக்கிடும் புகை; துகிற்கிடும் புகை : மாலைக்கிடும் புகை என இடும் என்னும் சொல்லை ஏனையவற்றோடும் கூட்டுக. உலோபம் - இவறுதல்; ஈயாமை. துவரமறைந்தன என்பார் தோன்றா மறைந்தன என்றார். ( 379 )

2978. புல்லுண் புரவி புலம்பு விடுகுரல்போ
னல்லவளை போழரவ நாரை நரல்குரல்போற்
கல்லா விளையர் கலங்காச் சிரிப்பொலியுங்
கொல்யானைச் சங்கொலியுங் கூடா தொழிந்தனவே.

பொருள் : புல் உண் புரவி புலம்பு விடுகுரல்போல் - புல்லைத்தின்னுங் குதிரை சோம்பு போக்கும்போது எழும் ஒலி போல; நல்ல வளை போழ் அரவம் - அழகிய சங்கினை அறுக்கும் ஒலியும்; நாரை நரல் குரல் போல் - நாரைகள் ஒலிக்கும் ஒலிபோல; கல்லா இளையர் கலங்காச் சிரிப்பொலியும் - கல்லாத சிறுவர்கள் விடாது நகைக்கும் ஒலியும்; கொல்யானைச் சங்கு ஒலியும் - கொல்லும் யானையின் பிளிறலும் சங்கின் முழக்கும்; கூடாது ஒழிந்தன - அங்கங்கே எழாமல் நீங்கின.

விளக்கம் : புரவி புலம்பு விடுகுரல், சங்கறுக்கும் போதுண்டாகும் ஒலிக்குவமை. புலம்பு - சோம்பல். வளை - சங்கு. போழரவம் : வினைத்தொகை கல்லா இளையர் சிரிப்புக்கு நாரையின் குரல் உவமை. கொல்யானை : வினைக்தொகை. யானை சங்கு என்னும் இவற்றின் ஒலியும் என்க. ( 380 )

2979. பொற்புடை பூமாலை சாந்தம் புனைகலன்கள்
கற்புடைய மங்கையரிற் காவ லவையிழந்த
நற்புடைய தேனார் நறவு நயம்புல்லார்
சொற்பொருள்போல் வேட்கப் படாசோர்ந் தொழிந்தனவே.

பொருள் : பொற்புஉடைய பூமாலை சாந்தம் புனைகலன்கள் - அழகிய மலர்மாலையும் சாந்தமும் புனைகலன்களும்; நற்பு உடைய தேன் ஆர் நறவும் அவை - நன்மையுடைய வண்டுகள் நுகரும் தேனு மாகிய அப்பொருள்கள்; கற்பு உடைய மங்கையரின் காவல் இழந்த - கற்புடைய பெண்டிர்போல காவலையிழந்தனவாய்; நயம் புல்லார் சொல் பொருள்போல் - இனிமையில்லாதவரின் சொற்பொருள்போல்; சோர்ந்து வேட்கப்படா ஒழிந்தன - சோர்வுற்று விரும்பப்படாவாய் ஒழிந்தன.

விளக்கம் : பொற்பு - அழகு. நற்பு - நன்மை. நயம் - ஈண்டுச் சொல்நயம். சீவகன் துறவால் வருந்தும் மாந்தர் இவற்றை விரும்பாமையால் சோர்ந்தன என்பதாம். ( 381 )

2980. தீம்பால் கிளிமறந்து தேவ ரவிமடங்கித்
தூம்பார் நெடுங்கைம்மாத் தீங்கரும்பு துற்றாவா
யாம்பா லுரைமடங்கி யாரும் பிறர்பிறராய்க்
காம்பார் நடுவிருட்கட் காடேபோ லாயிற்றே.

பொருள் : கிளி தீம்பால் மறந்து - கிளி இனிய பாலை மறத்தலானும்; தேவர் அவி மடங்கி - வானவர்க்கு நல்கும் பலி மடங்குதலானும்; தூம்பு ஆர் நெடுங் கைம்மா தீ கரும்பு துற்றாவாய் - புழையுடைய நீண்ட கையுடைய யானை இனிய கரும்பைத் தின்னாமல் நிற்றலானும்; ஆம்பால் உரை மடங்கி யாரும் பிறர் பிறராய் - வேட்கையால் ஆகிய பலதிறப்பட்ட சொற்கள் மனத்திலே மடங்கி, எல்லோரும் சுற்றத் தொடர்ச்சியற்று நிற்றலானும்; நடு இருள்கண் காம்பு ஆர் காடே போல் ஆயிற்று - நள்ளிருளிலே நின்ற முள்ளுடைய மூங்கில் நிறைந்த காடே போல் (நகரம்) ஆயிற்று.

விளக்கம் : அவற்றிற்கும் அவர்க்கும் ஆயிற்று. அரசன் துறவினை நகர மக்களும் உட்கொண்டமையின் நுகரப்படும் பொருள்கள்மேல் நிகழும் பகுதியையுடைய மொழிகள் மீண்டன : அப்பொருள்களிற் பற்றின்மையின் யாரும் பிறர் பிறராயினர். காடேபோல் என்பதனாற் பயன்:- இவ்வூரிற் பெற்ற செல்வந்தன்னையே நுகர்ந்தாற் பின்னும் மயக்கஞ்செய்யும் பிறவியாகிய இருளைப் பிறப்பித்தலும், முட்போலப் பற்றினால் தொடக்கிக்கொள்ளலும், வீட்டுப் பயன் கொடாமையுமாம், ஆதலின்; துறவுள்ளம் பிறந்தோர்க்கு இத்தன்மைத்தான நகரி காடுபோலாயிற்று; கிளிக்கும் வானவர்க்கும் களிற்றிற்கும் பொருள்களின் நுகர்ச்சியின்மையின் காடு போலாயிற்று. ( 382 )

2981. நீர்முழங்கு நீல நெடுமேக மால்யானைத்
தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான்
பார்முழங்கு தெண்டிரைபோற் செல்வந்தம் பாலர்க்கிந்
தூர்முழுது நாடு முரவோன்றாள் சேர்ந்தனவே.

பொருள் : நீர் முழங்கும் நீலம் நெடுமேகம் மால் யானைத் தேர் முழங்கு தானை - நீரினையுடைய முழங்கும் கரிய பெரிய முகில்போலும் பெரிய யானையும் தேரும் முழங்கும் படையையுடைய, திருமாலின் முன் துறப்பான் - அரசனுக்கு முன்னே துறப்பதற்கு; பார் முழங்கு தெண்திரை போல் செல்வம் தம் பாலற்கு ஈந்து - உலகில் முழங்கும் தெள்ளிய அலைகடல் போன்ற செல்வத்தைத் தம் மக்களுக்கு நல்கிவிட்டு; ஊர் நாடு முழதும் - ஊரில் உள்ளாரும் நாட்டிலுள்ளாரும்; உரவோன்தாள் சேர்ந்தன - அறிவுடைய அரசன் அடியை அடைந்தனர்.

விளக்கம் : காத்தற்றொழிலால் அரசன் திருமாலாயினன். நீரினையுடைய மேகம்; முழங்கு மேகம்; நீலமேகம்; நெடுமேகம் எனத் தனித்தனி கூட்டுக. திருமால் என்றது சீவகனை. துறப்பான் - துறத்தற்கு. நாடும் ஊரும் ஆகுபெயர்கள். ( 383 )

26. துறவு வலியுறுத்தல்

வேறு

2982. கொல்லுலைப் பொங்கழற் கிடந்த கூரிலை
மல்லல்வே லிரண்டொரு மதியுள் வைத்தபோற்
செல்லநீண் டகன்றகஞ் சிவந்த கண்ணினா
ரல்லலுற் றழுபவர்க் கரசன் சொல்லினான்.

பொருள் : கொல் உலைப் பொங்கு அழல் கிடந்த - கொல்லன் உலையிலே பொங்கியெழும் நெருப்பிலே கிடந்த; கூர் இலை மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்தபோல் - கூரிய இலைவடிவுடைய வளவிய வேல்கள் இரண்டினை ஒரு திங்களிடத்தே வைத்தனபோல; செல்ல நீண்டு அகன்று அகம் சிவந்த கண்ணினார் - மிகுதியும் நீண்டு அகன்று உள்ளே சிவந்த கண்ணினராய்; அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான் - துன்புற்றழும் மங்கையர்க்குச் சீவகன் கூறினான்.

விளக்கம் : சொல்லினான் : வினைத்திரிசொல். கண்ணினார் : முற்றெச்சம். கொல் - கொல்லன் : தொழிலுமாம். உலையின் கண்ணழல் என்க. மல்லல் - வளம். இரண்டு வேல் இரண்டு கண்களுக்குவமை. மதி - முகத்திற்குவமை. செல்ல நீண்ட - மிகநீண்ட. அழும் கண்ணினார்க்கு என்றவாறு. அரசன் : சீவகன். ( 384 )

வேறு

2983. நற்றவம் பரவை ஞால
நாமுட னிறுப்பின் வைய
மற்றமி றவத்திற் கென்று
மையவி யனைத்து மாற்றா
திற்றென வுணர்ந்து நிற்பிற்
றிருமக ளென்று நீங்காள்
பற்றொடே நிற்பி னென்றுந்
திருமகள் பற்றல் செல்லாள்.

பொருள் : நாம் நல்தவம் பரவை ஞாலம் உடன் நிறுப்பின்; நாம் நல்ல தவத்தையும் பரவிய நிலத்தையும் சேர நிறுத்தால் - அற்றம் இல் தவத்திற்கு வையம் என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது - சோர்வில்லாத தவத்திற்கு உலகம் எப்போதும் வெண்சிறு கடுகளவும் நிறை ஒவ்வாது; இற்று என உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள் - அதனை இத் தன்மைத்தென அறிந்து தவத்திலே நின்றால் திருமகள் எப்போதும் நம்மை நீங்காள்; பற்றொட நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள் - நாம் பற்றுடனே நின்றால் திருமகளும் நம்மைப் பற்றுதல் செய்யாள்.

விளக்கம் : எனவே, பற்றை விட்டுத் தவஞ்செய்மின் என்றானாயிற்று. தவமானது ஒருவனுடைய பிறவி வேரறுக்கும் பெருஞ் செயலாகும். தவஞ்செய்வார் என்றும் தங்கருமம் செய்வாராவர். இவர்களே பிறர்க்கென வாழும் பெருநிலையினராவர்.

இச் செய்யுளோடு,

பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
வையமும் தவமுந் தூக்கின் தவத்துக்(கு)
ஐயவி யனைத்தும் ஆற்றா தாகலின்
கைவிட் டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅ தோரிவள் விடப்பட் டோரே

எனவரும் புறநானூற்றுச் செய்யுளை (358) ஒப்புநோக்குக. ( 385 )

2984. உப்பிலிப் புழுக்கல் காட்டுட்
புலைமக னுகுப்ப வேகக்
கைப்பலி யுண்டி யானும்
வெள்ளின்மேற் கவிழ நீரு
மைப்பொலி கண்ணி னீரான்
மனையக மெழுகி வாழ
விப்பொருள் வேண்டு கின்றீ
ரிதனைநீர் கேண்மி னென்றான்.

பொருள் : காட்டுள் உப்பு இலி புழுக்கல் புலைமகன் உகுப்ப - சுடுகாட்டிலே உப்பு இல்லாத சோற்றைப் புலைமகன் நீருடன் சொரிய; யானும் ஏகக் கைப்பலி உண்டு வெள்ளில்மேல் கவிழ - யானும் அவன் ஒற்றைக் கையால் இட்ட அப் பலியை உண்டு பாடையின்மேற் கவிழ; நீரும் மைப்பொலி கண்ணின் நீரால் மனையகம் மெழுகி வாழ - நீவிரும் மைவிளங்கும் கண்ணீரினால் வீட்டை மெழுகி வாழ; இப்பொருள் வேண்டுகின்றீர் - இப் பயனில்லாத பொருளை விரும்புகின்றீர்; நீர் இதனைக் கேண்மின் என்றான் - (அதனை விட்டு) நீவிர் இப் பயனுறு பொருளைக் கேண்மின் என்றான்.

விளக்கம் : இக் காலத்திற் புலைமகன் என்பான் வெட்டியான் எனப்படுகின்றான். புலைமகன் என்றார் புரோகிதனை; அவன் தன் குலத்திற்குரியன செய்யாது, அரசன் குலத்திற்குரிய தொழில்களை மேற்கொண்டு நிற்றலின்; புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு (புறநா. 360) என்றும், இழிபிறப்பினோன் ஈயப்பெற்று (புறநா. 363)என்றும் பிறருங் கூறினார்; நாவிதனுமாம் என்பர் நச்சினார்க்கினியர். கவிழ்தல் - முற்றுங்கெடுதல். (இறத்தல்) ( 386 )

2985. கொல்சின யானை பார்க்குங்
கூருகிர்த் தறுக ணாளி
யில்லெலி பார்த்து நோக்கி
யிறப்பின்கீ ழிருந்த லுண்டே
பல்வினை வெள்ள நீந்திப்
பகாவின்பம் பருகி னல்லா
னல்வினை விளையு ளென்னு
நஞ்சினுட் குளித்த லுண்டே.

பொருள் : கொல்சின யானை பார்க்கும் கூர்உகிர்த் தறுகண் ஆளி - கொல்லுஞ் சினமுடைய யானையை எதிர்பார்க்குங் கூரிய நகமுடைய அஞ்சாத ஆளி; இல் எலி பார்த்து நோக்கி - வீட்டெலியை எதிர்பார்த்து நோக்கியவாறு; இறப்பின்கீழ் இருத்தல் உண்டே? - வீட்டுக் கூரையின் கீழ் ருத்தல் உள்தோ?; பல்வினை வெள்ளம் நீந்தி - இருவினையாகிய வெள்ளத்தைக் கடந்து; பகா இன்பம் பருகின் அல்லால் - கெடாத பேரின்பத்தை நுகர்ந்தாலன்றி; நல்வினை விளையுள் என்னும் - நல்வினையால் உண்டாகிய செல்வம் என்கிற; நஞ்சினுள் குளித்தல் உண்டே? - நஞ்சினைப் பருகி அதனுட் குளித்தல் இல்லை.

விளக்கம் : யானை வீடு பேற்றிற்கும், ஆளி அதனை எய்துந் தகுதியுடைய மக்கட்பிறப்பிறகும், இல்லெலி இவ் வுலகவின்பத்திற்கும், இறப்பு உலகிற்கும் உவமைகள் ஆதலுணர்க. விளையுள் - செல்வம். ( 387 )

2986. ஆற்றிய மக்க ளென்னு
மருந்தவ மிலார்க ளாகிற்
போற்றிய மணியும் பொன்னும்
பின்செலா பொன்ன னீரே
வேற்றுவ ரென்று நில்லா
விழுப்பொருள் பரவை ஞால
நோற்பவர்க் குரிய வாகு
நோன்மின் நீரு மேன்றான்.

பொருள் : பொன்னனீர் - திருவனையீர்!; மக்கள் ஆற்றிய அருந்தவம் என்னும் இலார்கள் ஆகின் - மக்கள் தேடிய அரிய தவம் சிறிதேனும் உடையரல்லாராயின்; போற்றிய மணியும் பொன்னும் பின்செலா - (அவர்கள்) காப்பாற்றிய மணியும் பொன்னும் அவர்பின் செல்லா; விழுப்பொருள் வேற்றுவர் என்று நில்லா - (கிடைத்தற்குரிய) சிறந்த பொருள்கள் வேற்றுவர் என்று நினைத்து அவர்பாற் செல்லாமல் நில்லா; பரவை ஞாலம் நோற்பவர்க்கு உரிய ஆகும் - பரவிய உலகப் பொருள்கள் தவம் புரிவார்க்கு உரியவாகும்; நீரும் நோன்மின் என்றான் - (ஆகையால்) நீவிரும் தவம்புரிமின் என்றான்.

விளக்கம் : நோன்மினம் : அம் : அசை.மக்கள் ஆற்றிய தவம் என்னும் இலார்களாகில் என மாறுக. என்னும் - ஒருசிறிதும். அருந்தவமே பின் செல்லும் மணியும் பொன்னும் செல்லா என்றவாறு. வேற்றுவர் - அயலார். ( 388 )

2987. காதலஞ் சேற்றுட் பாய்ந்த மதியெனுங் கலங்க னீரை
யூதுவண் டுடுத்த தாரா னுவர்ப்பினி னுரிஞ்சித் தேற்ற
மாதரார் நெஞ்சந் தேறி மாதவஞ் செய்து மென்றார்
காதலான் காத லென்னு நிகளத்தா னெடுங்க ணாரே.

பொருள் : ஊது வண்டு உடுத்த தாரான் காதலான் - முரலும் வண்டுகள் சூழ்ந்த மாலையானாகிய அன்புடையான்; மாதரார் காதல் அம் சேற்றுள் பாய்ந்த - தன் மனைவியரின் காதலாகிய சேற்றுக்குள்ளே பாய்ந்த; மதி எனும் கலங்கல் நீரை - அறிவு என்னும் நீரை; உவர்ப்பினின் உரிஞ்சித் தேற்ற - வெறுத்தல் என்பதனால் உரிஞ்சித் தெளிவிக்க; நெடுங்கணார் காதல் என்னும் நிகளத்தால் - அம் மாதர்கள் தம் கணவன்மேல் வைத்த அன்பு என்னும் பிணிப்பாலே; நெஞ்சம் தேறி மாதவம் செய்தும் என்றார் - உள்ளம் தெளிந்து மாதவம் செய்வோம் என்றனர்.

விளக்கம் : தம் கணவன்மேல் வைத்த காதலால் அவன் கூறிய துறவிலே அவர்கள் மனம் தொடங்குண்டதென்க. அவர்கட்கு இயற்கையாகத் துறவுள்ளம் இல்லையென்றும், சீவகன் மொழியாலே உண்டாயிற்றென்றும் கருதுக. நச்சினார்க்கினியர் மொழிமாற்றுக் கோளால் மாதராருடைய அறிவென்னும் நீரைக் காதலாகிய பிணிப்பாலே உரிஞ்சித் தேற்ற அவர் நெஞ்சு வெறுப்பினால் தேறித் தவஞ் செய்தும் என்றார் என்பர். அவர், தாரானாகிய காதலான் தன் மனைவியர்மேல் வைத்த காதல் என்னும் பிணிப்பாலே தேற்ற என்று கூட்டுவர். காதலனிடத்து வைத்த காதலால் துறந்தாரென்றல் பொருந்தாமை யுணர்க என மறுப்பர் . இவர் கருத்துப் பொருந்தாமை மேல் நாடகம் எனத் தொடங்கும் 2989 ஆஞ் செய்யுளை நோக்கின் அறியவரும்.  (389 )

2988. தூமஞ்சால் கோதை யீரே
தொல்வினை நீத்த நீந்தி
நாமஞ்சால் கதியி னீங்கி
நன்பொன்மே லுலகி னுச்சி
யேமஞ்சா லின்பம் வேண்டி
னென்னோடும் வம்மி னென்றான்
காமஞ்சாய்த் தடர்த்து வென்ற
காஞ்சனக் குன்ற மன்னான்.

பொருள் : காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சனக் குன்றம் அன்னான் - காமத்தைத் தள்ளி நெருக்கி வென்ற மேருவைப் போன்றவன்; தூமம் சால் கோதையீரே; - நறும்புகை கமழுங் கூந்தலையுடையீரே!; நாமம் சால் கதியின் நீங்கி - அச்சந்தரும் நாற்கதியிலிருந்து விடுபட்டு; தொல்வினை நீத்தம் நீந்தி - பழைமையான இருவினைக் கடலை நீந்தி; நன்பொன்மேல் உலகின் உச்சி - நல்ல பொன்மயமான மேலுலகுக்கும் மேலே; ஏமம் சால் இன்பம் வேண்டின் - காவல் நிறைந்த வீட்டின்பத்தை விரும்பின்; என்னொடும் வம்மின் என்றான் - (இன்று) என்னுடன் (துறவு பூண) வாருங்கோள் என்றான்.

விளக்கம் : காமஞ் சாய்த்தடர்த்து வென்ற ஏமஞ்சால் இன்பம் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். ( 390 )

2989. நாடக நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்று
மாடகக் கலத்து ளான்பா லமிர்தினை நயந்துண் பாரை
நீடகம் வெகுண்டுங் கையாற் பிடித்துநீ றட்டி யிட்டேங்
கோடக மணிந்த கோல முடியினாய் துறத்து மென்றார்.

பொருள் : நாடகம் நயந்து காண்பார் நலம்கிளர் கண்கள் சூன்றும் - நாடகத்தை விரும்பிக் காண்கின்றவரின் நன்மைக்குரிய கண்களைத் தோண்டினோம்; ஆடகக் கலத்துள் ஆன்பால் அமிர்தினை நயந்து உண்பாரை - பொற்கலத்திலே பசுவின்பாலை விரும்பி உண்பவரை; அகம் நீடு வெகுண்டும் கையால் பிடித்தும் நீறு அட்டியிட்டேம் - உள்ளத்திலே மிகுதியாகச் சினந்தோம், கையினால் (உண்ணாமற்) பிடிற்தோம், புழுதியை அள்ளியிட்டோம்; கோடகம் அணிந்த கோல முடியினாய்! - முடியணிந்த அழகிய முடியுடையாய்!; துறத்தும் என்றார் - துறப்போம் என்றனர்.

விளக்கம் : கோடகம் : தாமம், முகுடம், பதுமம், கோடகம், கிம்புரி என்னும் ஐவகையிற் சிகரமாய்ச் செய்த முடி. காண்பார் என்பது கட்பொறியை, உண்பார் என்றது வாய்ப்பொறியை, ஐம்பொறிகளை அடக்கினோம் இனி யாங்கள் துறத்தற்குரியோம் என்று தேவியர் கூறினர் என்பது கருத்து. இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் வருமாறு: நாடகம் எனவே பாட்டுங் கூறிற்று; விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் (திரி.11) என்றலின். உண்பாரை நீறட்டியும் என்றது, உண்பாரை உண்ணாமல் தடுத்தும் என்றவாறு. நீடகம் வெகுண்டும் - மிக்க அன்பினாற் புணர்கின்றாரை நெடுங்காலம் நெஞ்சாலே வெகுண்டும். கையாற் பிடித்தும் - நறிய நாற்றங்களை நுகர்கின்றாரை நுகராமற் கையாற் பிடித்தும் இட்டேம் என்றது, யாங்கள் பிறந்ததொரு பிறப்பிலே பிறரை இங்ஙனம் ஐம்பொறியால் நுகராமல் தடுத்து யாமும் நுகர்ச்சியைக் கைவிட்டேமாதலின், இனி எமக்கு நுகர்ச்சி இன்றென்றவாறு. ( 391 )

வேறு

2990. சாந்தங் கிழிய முயங்கித் தடமலராற்
கூந்தல் வழிபட்ட கோவேநீ செல்லுலகில்
வாய்ந்தடியேம் வந்துன் வழிபடுநா ளின்றேபோற்
காய்ந்தருளல் கண்டா யெனத்தொழுதார் காரிகையார்.

பொருள் : சாந்தம் கிழிய முயங்கித் தடமலரால் கூந்தல் வழிபட்ட கோவே! - மார்பிற் பூசிய கலவைச் சந்தனம் அழியத் தழுவி, பெரிய மலர்களைக் கொண்டு கூந்தலை வழிபட்ட அரசே!; நீ செல் உலகில் அடியேம் வந்து வாய்ந்து உன் வழிபடும் நாள் - நீ செல்லும் வீட்டுலக்கின்கண்ணே அடியேமும் வந்து பொருந்தி நின்னை வழிபடும்போது; இன்றேபோல் காய்ந்தருளல் என - இன்று வெறுத்தாற்போல வெறாதே என்று; காரிகையார் கை தொழுதார் - அரசியர் கைகூப்பித் தொழுதனர்.

விளக்கம் : முயக்கத்தால் வருத்தம் நிகழ்ந்ததாகக் கருதி, மலராற் கூந்தலை வழிபட்டு வருத்தந் தீர்த்த கோவே என்றது, எமக்கு வருத்தம் இல்லதனை வருத்தமாகக் கொண்ட நீ ஈண்டு வருத்தமுள்ளதனைத் தீர்க்கின்றிலை என்றதாம். வாய்ந்து - வீடுபெறுதற்குரிய தவங்கள் எமக்கு வாய்த்து என்றுமாம். ( 392 )

27.தேவிமார் துறவு

வேறு

2991. தெண்டிரை நீத்த நீந்தித்
தீங்கதிர் சுமந்து திங்கள்
விண்படர்ந் தனைய மாலை
வெண்குடை வேந்தர் வேந்தன்
கண்டிரண் முத்த மாலைக்
கதிர்முலை நங்கை மாரை
வெண்டிரை வியக்குங் கேள்வி
விசயைகண் ணபயம் வைத்தான்.

பொருள் : திங்கள் தீ கதிர் சுமந்து - திங்கள் தன் இனிய நிலவைச் சுமந்து; தெண்திரை நீத்தம் நீந்தி - தெளிந்த அலைகளையுடைய கடலை நீந்தி; விண்படர்ந்த அனைய மாலை வெண்குடை வேந்தர் வேந்தன் - வானிலே படர்ந்தாற் போன்ற, மாலை யணிந்த வெண்குடையுடைய மன்னர் மன்னன்; கண் திரள். முத்தம் மாலைக் கதிர்முலை நங்கைமாரை - கண்திரண்ட, முத்துமாலை அணிந்த ஒளிரும் முலைகளையுடைய மனைவியரை; வெண்திரை வியக்குங் கேள்வி விசயைகண் அபயம் வைத்தான் - வெள்ளிய அலைகளையுடைய கடல்போலும் நூற்கேள்வியையுடைய விசயையினிடம் புகலாகச் சேர்த்தான்.

விளக்கம் : தெண்டிரை நீத்தம் - கடல். கதிர் மாலைக்கும் திங்கள் குடைக்கும் உவமை என்க. வேந்தன் : சீவகன், கண்திரள் முலை; கதிர் முத்தமாலை. முலை என இயைக்க. வெண்டிரை: அன்மொழித் தொகை. ( 393 )

2992. கடிமலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்புங் காமர்
வடிமலர் மலர்ந்த காம வல்லியுந் தம்மைத் தாமே
யுடைமலர் கொய்து போக வுகுத்திடு கின்ற தொத்தார்
படைமலர் நெடுங்க ணல்லார் பாசிழை நீக்கு கின்றார்.

பொருள் : படைமலர் நெடுங்கண் நல்லார் பாசிழை நீக்குகின்றார் - காமன் படையாகிய மலர்போலும் நீண்ட கண்களையுடைய மகளிர் தாம் அணிந்த பசிய அணிகளை நீக்குகின்றவர்கள்; கடிமலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்பும் - மணமலர் நிறைந்து மலர்ந்த கற்பகக் கொம்பும்; காமர் வடிமலர் மலர்ந்த காமவல்லியும் - விருப்பம் வடிந்த மலர் மலர்ந்த காம வல்லியும்; தம்மைத் தாமே உடைமலர் கொய்து போக உகுத்திடுகின்றது ஒத்தார் - தம்மைத்தாமே தம்முடைய மலர் தம்மிடத்துனின்றும் போகக் கொய்து சிந்துகின்ற தன்மையை ஒத்தார்.

விளக்கம் : நிறைந்து - நிறைய. கடிமலர் - சிறந்த மலருமாம். தேனிறைந்து அலர்ந்த கொம்பு என்பர் நச்சினார்க்கினியர். வடிமலர் : வினைத்தொகை. காமவல்லி, கற்பகத்தின்மிசைப் படர்வதொரு பொற் பூங்கொடி. படையாகிய மலர் என்க. அவை காமன் அம்புகள் - இழை - அணிகலன். நீக்குகின்றார் : வினையாலணையும் பெயர். ( 394 )

2993. தழுமலர்த் தாம நான்று
சந்தகின் மணந்து விம்முஞ்
செழுமணி நிலத்துச் செம்பொற்
றிருமுத்த விதான நீழ
லெழுமையும் பெறுக வென்னு
மெழின்முலை நெற்றி சூழ்ந்தார்
கழுமிய துகிலிற் காமன்
கண்புடைத் திரங்க மாதோ.

பொருள் : தழும் மலர்த் தாமம் நான்று - பருமையாலே தழுவிக்கொள்ளத்தக்க மாலைகள் தூக்கப் பெற்று; சந்து மணந்து அகில் விம்மும் - சந்தனம் மணந்து அகிற்புகை விம்முகின்ற; செழுமணி நிலத்துச் செம்பொன் திருமுத்த விதானம் நீழல் - வளவிய மணிகள் பதித்த நிலத்திலே, செம்பொன்னாலும் அழகிய முத்தினாலும் ஆகிய மேற்கட்டியின் நிழலிலே (அவரை இருத்தி); காமன் கண்புடைத்து இரங்க - காமன் கண்ணிற்புடைத்துக கொண்டு புலம்பிமாறு; எழுமையும் பெறுக என்னும் எழில்முலை நெற்றி - கணவனை எழுமையினும் அடைக என்னும் அழகிய முலைகளின் முகட்டிலே; கழுமிய துகிலின் சூழ்ந்தார் - மயங்கிய ஆடையினாலே கட்டினார்கள்.

விளக்கம் : தழும் - தழுவும்; தழுவப்படும் என்க. முத்தவிதானம் - முத்தாலாய மேற்கட்டி; பந்தர், கணவனை எழுமையும் பெறுக என்னும் முலை என்க. கழுமிய துகில் - இழைதெரியாமல் மயங்கிய துகில். கழுமல் - மயக்கம். நோக்கும் நுழைகலா நுண்பூண் கலிங்கம் ஆதலின் கழுமிய துகில் என்றனர். ( 395 )

2994. நறும்புகை நான நாவிக்
குழம்பொடு பளிதச் சுண்ண
மறிந்தவ ராய்ந்த மாலை
யணிந்தபைங் கூந்த லாய்பொ
னிறந்தரு கொம்பு நீலக்
கதிர்க்கற்றை யுமிழ்வ வேபோற்
செறிந்திருந் துகுத்துச் செம்பொற்
குணக்கொடி யாயி னாரே.

பொருள் : நாவி நானக்குழம்பொடு - கத்தூரியினது நானக் குழம்புடன்; நறும்புகை - நல்ல மணந்தரும் புகையும்; பளிதச் சுண்ணம் - கருப்புரங் கலந்த சுண்ணப் பொடியும்; அறிந்தவர் ஆய்ந்த மாலை - புனைவியல் அறிந்தவர் ஆராய்ந்த மாலையும்; அணிந்த பைங்கூந்தல் - புனைந்த பசிய கூந்தலை; பொன் நிறம் தரு கொம்பு - பொன்னிறக் கொம்பு; நீலக் கதிர்க்கற்றை உமிழ்பவே போல் - நீலநிறக் கதிர்த் தொகுதியை உமிழ்வனபோல; செறிந்து இருந்து உகுத்து - (மனம் முதலிய முக்கரணங்களும்) அடங்கியிருந்து சொரிந்து; குணம் செம்பொன் கொடி ஆயினார் - நற்பண்புடைய செம்பொற் கொடி ஆயினார்.

விளக்கம் : நாவி நானக்குழம்பு என மாறுக. நாவி - கத்தூரி. பளிதம் - கருப்பூரம், பொன்னிறந்தரு கொம்பு என்றது கற்பகக் கொம்பினை. நீலக் கதிர்க்கற்றை - நீலமணியினது ஒளிக்கற்றை - இது கூந்தலுக்குவவமை. குணச்செம் பொற்கொடி என மாறுக. (396)

28. பெரிய யாத்திரை

வேறு

2995. இலம்பெரி தெனவிரந் தவர்கட் கேந்திய
கலஞ்சொரி காவலன் கடகக் கையிணை
புலம்பிரிந் துயர்ந்தன விரண்டு பொன்னிற
வலம்புரி மணிசொரி கின்ற போன்றவே.

பொருள் : பெரிது இலம் என இரந்தவர்கட்கு - யாம் பெரிதும் வறியேம் என்று வேண்டினவர்களுக்கு; புலம்புரிந்து - அறிவு மிக்கு; ஏந்திய கலம் சொரி காவலன் கடகக் கையிணை - உயர்ந்த கலன்களைச் சொரிகின்ற வேந்தனுடைய கடகமணிந்த இரு கைகளும்; உயர்ந்தன இரண்டு பொன்நிற வலம்புரி - உயர்ந்தனவாகிய இரண்டு பொன் நிறமான வலம்புரிகள்; மணி சொரிகின்ற போன்ற - மணிகளைப் பொழிவன போன்றன.

விளக்கம் : பொன்நிற வலம்புரி என்பதில் உள்ள பொன் என்ற சொல்லை யெடுத்துப் பொன்மணி சொரிகின்ற போன்ற என்பர் நச்சினார்க்கினியர். ( 397 )

2996. என்பரிந் தெரிதலைக் கொள்ள வீண்டிய
வன்பரிந் திடுகலா வுலக மார்கென
மின்சொரி வெண்கலம் வீசும் வண்கைகள்
பொன்சொரி தாமரைப் போது போன்றவே.

பொருள் : என்பு அரிந்து - என்பும் உருகுமாறு; அன்பு அரிந்து இடகலா உலகம் ஆர்க என - அன்பற்று இடாத உலகம் நுகர்க என்று; எரிதலைக் கொள்ள ஈண்டிய மின்சொரி வெண்கலம் - எரியுந் தன்மையைக் கொள்ளத் திரண்ட மின்னைச் சொரியும் முத்தணைகளை; வீசும் வண்கைகள் - சொரியும் வளவிய மன்னன் கைகள்; பொன் சொரி தாமரைப்போது போன்ற - பொன்னைப் பொழியும் பதும நிதியைப் போன்றன.

விளக்கம் : எரி - நெருப்பும் ஆம். வன்கை எனவும் பாடம். இரப்பவரிடம் அன்பற்று இடாத உலகங்கள் பகைமன்னர் நாடுகளும் வன்பாலாகிய நிலங்களும் ஆம். ( 398 )

2997. பூந்துகில் புனைகல மாலை பூசுசாந்
தாய்ந்துல குணவுவந் தருளி மாமணி
காந்திய கற்பகக் கான மாயினா
னேந்திய மணிமுடி யிறைவ னென்பவே.

பொருள் : ஏந்திய மணிமுடி இறைவன் - உயர்ந்த மணி முடியை அணிந்த வேந்தன்; பூந்துகில் - அழகிய ஆடையையும்; புனைகலம் - அணிகலனையும்; மாலை - முத்துமாலையையும்; பூசு சாந்து - பூசுகின்ற சந்தனத்தையும்! உலகு ஆய்ந்து உண உவந்து அருளி - உலகம் ஆராய்ந்து நுகர விரும்பிக் கொடுத்து; காந்திய கற்பகக் கானம் ஆயினான் - ஒளிர்கின்ற கற்பகக் கானம் ஆயினான்.

விளக்கம் : பானவகை, ஒலிவகை, அணிவகை, மாலைவகை, மணி விளக்குவகை, உணவுச் சாலைவகை, உணவு வகை, ஒளிவகை வேண்டிய கலங்கள், ஆடைவகை எனப் பத்து வகைக் கற்பகங்களும் கொடுப்பன வெல்லாங் கொடுத்தலின் கற்பகக்கானம் என்றார். ( 399 )

வேறு

2998. தேய்பிறை யுருவக் கேணித்
தேறுநீர் மலர்ந்த தேனா
ராய்நிறக் குவளை யஞ்சிக்
குறுவிழிக் கொள்ளும் வாட்கண்
வேய்நிறை யழித்த மென்றோள்
விசயையைத் தொழுது வாழ்த்திச்
சேய்நிறச் சிவிகை சேர்ந்தான்
றேவர்கொண் டேகி னாரே.

பொருள் : தேய்பிறை - தேய்பிறை யனைய நுதலையும்; உருவம் கேணித் தேறுநீர் மலர்ந்த தேன் ஆர் ஆய்நிற்க் குவளை - அழகிய கேணியிலே தெளிந்த நீரில் மலர்ந்த தேனையுடைய நிறமுறு குவளைமலர்; அஞ்சிக் குறுவிழிக் கொள்ளும் வாட்கண் - அச்சுற்றுக் குவிகின்ற ஒளியுறுங் கண்களையும்; வேய்நிறை அழித்த மென்தோள் - மூங்கிலின் நிறையை அழித்த மெல்லிய தோளையும் உடைய; விசயையைத் தொழுது வாழ்த்தி - விசயையை வணங்கிப் போற்றி; சேய் - முருகனையனைய சீவகன்; நிறச் சிவிகை சேர்ந்தான் - ஒளியுறும் சிவிகையை அடைந்தான்; தேவர் கொண்டு ஏகினார் - வானவர் சுமந்து சென்றனர்.

விளக்கம் : தேய்பிறை எனவே நுதலாயிற்று. குறுவிழிக் கொள்ளுதல் இரவில் குவிதல். நச்சினார்க்கினியர், வேய்மென் தோள் எனக் கொண்டு, நிறையழித்த என்பதைத் தனியே பிரித்துச் சச்சந்தன் இறந்தபின் தன்னுறுப்புக்கள் பொலிவுற்றிருத்தல் தகாதெனக் கொண்டு அவற்றின் பொலிவினைக் கடிந்தமை தோன்ற நிறையால் அழித்த விசயை என்றார், என்று விளங்கக் கூறுவர். ( 400 )

29.சமவசரண வருணனை

வேறு

2999. நரம்பெழுந் திரங்கின வீணை நன்குழல்
பரந்துபண் ணுயிர்த்தன பைய மெல்லவே
விருந்துபட் டியம்பின முழவம் வீங்கொலி
சுரந்தன சுடர்மணிப் பாண்டி லென்பவே.

பொருள் : வீணை நரம்பு எழுந்து இரங்கின - யாழின் நரம்புகள் எழுந்து இசைத்தன; நன்குழல் பரந்து பைய பண் உயிர்த்தன - இனிய குழல்கள் மெல்லப் பரவி யிசை எழுப்பின; முழவம் மெல்ல விருந்து பட்டு இயம்பின - முழவங்கள் புதுமையாகத் தோன்றி ஒலித்தன; சுடர்மணிப் பாண்டில் வீங்கு ஒலி சுரந்தன - ஒலி பொருந்திய அழகிய கஞ்ச தாளங்கள் மிக்க ஓசையைப் பெருக்கின.

விளக்கம் : வானவர் சீவகனைச் சுமந்து சென்ற பொழுது இவைகள் ஒலித்தன என்க. வீணை நரம்பு என மாறுக. விருந்து - புதுமை. முழவம் இயம்பின என்க. பாண்டில் - கஞ்சதாளம். என்ப, ஏ : அவைகள். பெருந்தவம் ஆற்றிய பெறற்கரும் பெற்றியரை விண்ணுளார் சுமந்து செல்வார். மண்ணுளார் இத்தகையார்க்குச் சிவிகை தாங்குவர். ( 401 )

3000. மங்குலா யகிற்புகை மணந்து கற்பகப்
பொங்குபூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணந்
தங்கியித் தரணியும் விசும்புந் தாமரோ
செங்கதிர்த் திருமணிச் செப்புப் போன்றவே.

பொருள் : அகிற்புகை மணந்து மங்குலாய் - அகிற் புகை கலந்து இருளாய்; பொங்கு கற்பக மாலைகள் பொலிந்து - பொங்குகின்ற கற்பக மாலைகள் அழகுற்று; பூஞ்சுணம் தங்கி - அழகிய சுண்ணப்பொடி தங்கி; இத் தரணியும் விசும்பும் செங்கதிர்த் திருமணிச் செப்புப் போன்ற - இந் நிலவுலகும் வானுலகும் சிவந்த கதிர்களையுடைய மணியிருக்கின்ற செப்பைப் போன்றன.

விளக்கம் : மணி : சமவ சரணம். மங்குல் - இருள். புகைமணந்து மங்குலாய் என்க. சுணம் - சுண்ணம். தரணி - உலகம். தாம். அரோ : அசைகள். மணி - சமவ சரணம். அஃதாவது : பூமிக்கு ஐயாயிரம் வில்லுயரத்திற்கு மேலே பன்னிரண்டு யோசனை அளவுள்ளதாய்ச் சௌதரு மேந்திராதி தேவர்களால் நிருமிக்கப் பட்டதோர் அருகன் கோயில் என்க. ( 402 )

வேறு

3001. திலக முக்குடைச் செல்வன் றிருநகர்
பலரு மேத்தினர் பாடின ராடினர்
குலவு பல்லியங் கூடிக் குழுமிநின்
றுலக வெள்ள மொலிப்பது போன்றவே.

பொருள் : திலகம் முங்குடைச் செல்வன் திருநகர் - சிறப்புற்ற முக்குடைச் செல்வனாகிய அருகனுடைய திருக்கோயிலை; பலரும் ஏத்தினர் பாடினர் ஆடினர் - வானவரும் மக்களுமாகிய எல்லோரும் வாழ்த்தினார், பாடினர், ஆடினர்; குலவு பல்இயம் கூடிக் குழுமி நின்று - விளங்கும் பலவகை இயங்களும் சோந்து கூடி நின்று; உலக வெள்ளம் ஒலிப்பது போன்ற - கடல் கூடி நின்று ஒலிக்கின்ற தன்மையை ஒத்தன.

விளக்கம் : முக்குடைச் செல்வன் - அருகன். நகர் ஈண்டுச் சமவ சரணம். பலரும் என்றது தேவரும் மக்களும் என்பதுபட நின்றது.
( 403 )

3002. கானி ரைத்தன காவொடு பூம்பொய்கை
தேனி ரைத்தன செம்பொ னெடுமதின்
மேனி ரைத்தன் வெண்கொடி யக்கொடி
வானு ரிப்பன போன்று மணந்தவே.

பொருள் : கான் நிரைத்தன காவொடு - மணம் நிரைத்தனவாகிய பொழில்களுடனே; பூம்பொய்கை தேன் நிரைத்தன - மலர்ப் பொய்கைகளினும் வண்டுகள் முரன்றன; செம்பொன் நெடுமதில்மேல் வெண்கொடி நிரைத்தன - செம்பொன் மதிலின் மேல் வெண்கொடிகள் நிரைத்தன; அக் கொடி வான் உரிப்பன போன்று மணந்த - அக்கொடிகள் காற்றால் வானைத் தீண்டி உரிப்பன போன்று கலந்தன.

விளக்கம் : கான் - மணம். கா - பொழில். தேன் - வண்டுகள். மணந்த - நெருங்கின. ( 404 )

3003. கோல முற்றிய கோடுயர் தூபையுஞ்
சூல நெற்றிய கோபுரத் தோற்றமு
ஞால முற்றிய பொன்வரை நன்றரோ
கால முற்றுடன் கண்ணுற்ற போன்றவே.

பொருள் : கோலம் முற்றிய கோடு உயர் தூபையும் - ஒப்பனைகள் நிறைந்த சிகரம் உயர்ந்த தூபியின் தோற்றமும்; சூலம் நெற்றிய கோபுரத் தோற்றமும் - இடிதாங்கிகள் நிறைந்த கோபுரத்தின் தோற்றமும்; ஞாலம் முற்றிய பொன்வரை - உலகஞ் சூழ்ந்த மேருமலைகள்; காலம் நன்று உற்று உடன் கண்உற்ற போன்ற - தம்மிற் கூடுங்காலம் நன்கு பொருந்திச் சேரக்கூடியவற்றை ஒத்தன.

விளக்கம் : பல அண்டங்கள் உலவாதலிற் பல மேருவுளவாம். கோலம் - ஒப்பனை. கோடு - உச்சி. தூபை - தூபி. சமவ சரணத்துள்ள பதினொரு பூமியுள் நவாத்தூபாபூமி என்று ஒன்றுளதாதல் பற்றி ஈண்டுத் தூவி கூறினார். பதினொரு பூமியாவன: - சைத்தியப் பிரசாத பூமி, காதிகாபூமி, வல்லிபூமி, உத்தியானபூமி, துவசபூமி, கற்பகவிருக்க பூமி, நவத்தூபாபூமி, துவாதசகோட்டபூமி, பிரதமபீடம், துவிதீயபீடம், திருதியபீடம் என்பனவாம். சூலம் - உச்சியில் நாட்டப்படுவதொரு சூல வடிவிற்றாகிய உறுப்பு; (இக்காலத்தே நடப்படும் இடி தாங்கியை ஒப்பது.) ( 405 )

3004. வாயிற் றோரணங் கற்பக மாலைதாழ்ந்
தேயிற் றிந்திரன் பொன்னக ரின்புறம்
போயிற் றேயகி லின்புகை போர்த்துராய்
ஞாயிற் றொள்ளொளி நைய நடந்ததே.

பொருள் : வாயில் தோரணம் - வாயிலில் நட்ட தோரணம்; இந்திரன் பொன்நகர் கற்பக மாலை தாழ்ந்து - இந்திரன் நகரிலுள்ள கற்பக மாலை தம்மேற்றங்க ஆண்டுச் சென்று; ஏயிற்று - பொருந்திற்று; அகிலின் புகை புறம் போயிற்று - அகிலின் புகை அவ்வானவருலகின் புறத்திலே போயிற்று; போர்த்து உராய் ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்தது - அப் புகை பின்னர் அவ்வுலகைப் போர்த்து உராய்ந்து ஞாயிற்றின் சிறந்த ஒளி மழுங்க நடந்தது.

விளக்கம் : தாழ்ந்து - தாழ : தோரணம் இந்திரன் பொன்னகரின் கற்பக மாலை தாழ ஏயிற்று என இயைக்க. இது தோரணகம்பத்தின் நெடுமையும் அகிற் புகையின் மிகுதியும் கூறியவாறு. தோரணம் கற்பக மாலை தாழ்ந்து அகிலின்புகை பொருந்திற்று என நச்சினார்க்கினியர் கூறும் பொருள் சிறவாமையுணர்க. ( 406 )

3005. செய்ய தாமரைப் பூவினுட் டேங்கமழ்
பொய்யில் சீர்த்திவெண் டாமரை பூத்தபோன்
றையஞ் செய்தடு பானிறப் புள்ளின
மையி றாமரை மத்தகஞ் சேர்ந்தவே.

பொருள் : செய்ய தாமரைப் பூவினுள் தேங்கமழ் பொய் இல் சீர்த்தி வெண் தாமரை பூத்த போன்று - செந்தாமரை மலரினுள்ளே தேன் மணக்கும் பொய்யற்ற மிகு புகழையுடைய வெண்தாமரை பூத்தன போன்று; ஐயம் செய்து - ஐயமுண்டாக்கி; அடு பால்நிறப் புள்இனம் - காய்ச்சின பாலின் நிற முடைய அன்னப் பறவைத் தொகுதி; மைஇல் தாமரை மத்தகம் சேர்ந்த - குற்றமற்ற தாமரை மலர்களின் உச்சியை அடைந்தன.

விளக்கம் : செய்ய தாமரைப்பூ - செந்தாமரைப்பூ. வெண்ணிறம் அழுக்கற்ற தூய்மைக்கு உவமையாதல் பற்றி, பொய்யில் சீர்த்திவெண்டாமரை என்றார். சீர்த்தி. வெண்மைக்கு அடைமாத்திரையாய் நின்றது. வெண்டாமரைல - அன்னத்திற் குவமை. அடுபால் : வினைத்தொகை. பானிறப்புள் - அன்னம். மத்தகம் - உச்சி. ( 407 )

3006. மல்லன் மாக்கட லன்ன கிடங்கணிந்
தொல்லென் சும்மைய புள்ளொலித் தோங்கிய
செல்வ நீர்த்திருக் கோயிலிம் மண்மிசை
யில்லை யேற்றுறக் கம்மினி தென்பவே.

பொருள் : மல்லல் மாக்கடல் அன்ன கிடங்கு அணிந்து - வளமிகும் பெரிய கடல் போன்ற அகழி சூழ்ந்து; ஒல் என் சும்மைய புள் ஒலித்து - ஒல்லென ஆரவாரமுள்ள பறவைகள் ஒலித்து; ஓங்கிய செல்வநீர்த் திருக்கோயில் - உயர்ந்த செல்வ முள்ள நீர்மைத்தாகிய திருக்கோயில்; இம் மண்மிசை இல்லையேல் துறக்கம் இனிது என்ப - இத் தரைமிசை இல்லையாயின் துறக்கம் இனிது என்பர்.

விளக்கம் : இஃது உளதாதலின் துறக்கம் தீது என்கின்றனர். எனவே. இச் சமவசரணத்தில் உறைவோர் துறக்கமும் வேண்டார் என்றவாறாயிற்று. இக் கருத்து (திருப்பரங்) குன்றத்து கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ மாலைமாலை அடியுறை இயைநர் மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் (17) எனவரும் பரிபாடற் கருத்தோடொக்கும். ( 408 )

வேறு

3007. விளங்கொளி விசும்பறுத் திழிந்து மின்னுதார்த்
துளங்கொளி மணிவணன் றொழுது துன்னினான்
வளங்கெழு மணிவரை நெற்றிப் பாற்கட
லிளங்கதிர்ப் பருதியொத் திறைவன் றோன்றினான்.

பொருள் : மின்னு தார்த் துளங்கு ஒளிமணி வணன் - மின்னும் மாலையணிந்த ஒளியுறும் சீவகன்; விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து - விளங்கும் ஒளியையுடைய வானை ஊடறுத்து இறங்கி; தொழுது துன்னினான் - (கோயிலை நோக்கித்) தொழுதவாறு நெருங்கினான்; வளம்கெழு மணிவரை நெற்றி - வளம் பொருந்திய மாணிக்க மலையின் உச்சியிலே; பால்கடல் இளம் கதிர்ப் பருதி ஒத்து - பாற்கடல் மிசை இளங்கதிரையுடைய ஞாயிறு போன்று; இறைவன் தோன்றினான் - அருகப்பெருமான் தோன்றினான்.

விளக்கம் : மணி : ஈண்டு மாணிக்கம். ஒளிமிக்கிருத்தலின், பாற்கடலிற் பருதியென்றார். இவர் இருபத்து நான்காந் தீர்த்தங்கரர் என்பர். ( 409 )

3008. வினையுதிர்த் தவர்வடி வின்ன தென்னவே
வனைகதிர்த் தடக்கைவைத் திருந்த வாமனார்
கனைகதிர்த் திருமுக மருக்க னாகவான்
புனைமலர்த் தாமரை பூத்த தொத்தவே.

பொருள் : வினை உதிர்த்தவர் வடிவு இன்னது என்ன - இருவினையையுங் கெடுத்தவர் வடிவு இத்தன்மையாதாக இருக்குமென்பதுபோல; வனைகதிர்த் தடக்கை வைத்து இருந்த வாமனார் - வனைந்த ஒளியுறுங் கையை வைதது இருந்த வாமனாருடைய; கனைகதிர்த் திருமுகம் அருக்கன் ஆக - மிக்க ஒளியையுடைய அழகிய முகம் ஞாயிறாக; வான் புனைமலர்த் தாமரை பூத்தது ஒத்த - வானவர் முகங்கள் அழகிய தாமரை மலர்கள் மலர்ந்தது போன்றன

விளக்கம் : வினை - இருவினைகளும். வாமனார் - அருகக்கடவுள். கனை - மிக்க. அருக்கன் - ஞாயிறு. வான் : ஆகுபெயர். வானுலகுக்கு ஆகிப் பின் வானவர்க்கு ஆகிப் பின் அவர்தம் முகத்திற்காகலான் - மும்மடியாகுபெயர் என்க. ( 410 )

3009. இரிந்தன விருவினை யிலிர்ந்த மெய்ம்மயிர்
சொரிந்தன கண்பனி துதித்துக் காதலா
லரிந்தது மணிமிட றலர்பெய்ம் மாரிதூஉய்த்
திரிந்தனன் வலமுறை திலக மன்னனே.

பொருள் : காதலால் - (மன்னனுக்கு இறைவன் மேற் சென்ற) காதலாலே; இருவினை இரிந்தன - நல்வினையுந் தீவினையுங் கெட்டன; மெய்ம்மயிர் இலிர்த்த - மெயம்மயிர்கள் சிலிர்த்தன; கண் பனி சொரிந்தன - கண்கள் உவகைநீர் சொரிந்தன; மணிமிடறு துதித்து அரிந்தது - வாழ்த்தி அழகிய குரல் கம்மியது; திலக மன்னன் பெய்மாரி அலர்தூய் வலமுறை திரிந்தனன் - திலகம் போன்ற அம் மன்னன் பெய்யும் மாரிபோல மலர்களைத் தூவி வலமுறையாகத் திரிந்தனன்.

விளக்கம் : காதலால் இருவினை இரிந்தன என இயைக்க. மிடறு - ஈண்டுக் குரலுக்கு ஆகுபெயர். அரிந்தது - அரிக்குரல் பட்டது என்றவாறு; கம்மியது என்பதாம். ( 411 )

3010. முத்தொளிர் தாமமு முருவ மாமணித்
தொத்தொளிர் தாமமுஞ் சொரிபொற் றாமமுந்
தத்துநீர்த் தண்கடற் பவழத் தாமமும்
வைத்தபூந் தாமமு மலிந்து தாழ்ந்தவே.

பொருள் : முத்து ஒளிர் தாமமும் - முத்துக்களால் ஆகி விளங்கும் மாலையும்; உருவம் மாமணித் தொத்து ஒளிர் தாமமும் - அழகிய பெரிய மணிகளால் ஆகிக் கொத்தாக ஒளிரும் மாலையும்; சொரிபொன் தாமமும்-ஒளியைச் சொரியும் பொன்மாலையும்; தத்துநீர்த் தண்கடல் பவழத் தாமமும் - தத்தும் அலைநீரையுடைய தண்கடலிற் கிடைத்த பவளமாலையும்; வைத்த பூந்தாமமும் மலிந்து தாழ்ந்த - வைத்த மலர் மாலையும் மிக்கு அவ்விடத்தே தங்கின.

விளக்கம் : உருவம் - அழகு. மா - பெருமை. தொத்து - கொத்து. பொற்றாமம் - பொன்மாலை. தத்துநீர் : வினைத்தொகை. பூந்தாமம் - மலர்மாலை. மலிந்து - மிக்கு. ( 412 )

3011. மணிவரை யெறிதிரை மணந்து சூழ்ந்தபோ
லணிமயிர்க் கவரிக ளமர ரேந்தினார்
துணிமணி முக்குடை சொரிந்த தீங்கதிர்
பணிமணிக் காரிருள் பருகு கின்றதே.

பொருள் : மணிவரை எறிதிரை மணந்து சூழ்ந்த போல் - மாணிக்க மலையை, வீசும் அலைகள் நெருங்கிச் சூழ்ந்தன போல; அணிமயிர்க் கவரிகள் அமரர் ஏந்தினார் - அழகிய மயிர்களால் ஆகிய கவரிகளை வானவர் கையிலேந்தி இறைவனைச் சூழ்ந்து வீசினார்; துணி மணி முக்குடை சொரிந்த தீ கதிர் - துண்டங்களாகிய மணிகளிழைத்த முக்குடைகள் பெய்த இனிய கதிர்; பணி மணிக் காரிருள் பருகுகின்றது - பிற ஒளிகளைத் தாழ்த்து நீலமணிகளின் இருளைப் பருகுகின்றது.

விளக்கம் : மணி - ஈண்டு மாணிக்கமணி, மணிவரை இறைவனுக்கும் அலைகள் கவரிக்கும் உவமைகள். துணி - தெளிந்த ஒளியையுடைய எனினுமாம். பணிமணி : வினைத்தொகை. ஏனைய ஒளிகளைத் தாழ்த்தும் மணி என்க. ( 413 )

3012. முழாத்திரண் மொய்ம்மலர்த் தாமந் தாழ்ந்துமேல்
வழாத்திரு மலரெலா மலர்ந்து வண்டினங்
குழாத்தொடு மிறைகொளக் குனிந்து கூய்க்குயில்
விழாக்கொள விரிந்தது வீரன் பிண்டியே.

பொருள் : வீரன் பிண்டி - அருகப் பெருமானுடைய அசோக மரம்; முழாத்திரள் மொய்ம்மலர்த் தாமம் - முழவைப் போலத் திரண்ட, நெருங்கிய மலர்களால் ஆகிய மாலை; தாழ்ந்து - தூக்கப்பெற்று; மேல் வழாத்திரு மலரெலாம் மலர்ந்து - மேலே வாடாத அழகிய மலரெலாம் பூத்து; வண்டினம் குழாத்தொடும் இறைகொளக் குனிந்து - வண்டின் திரள் குழுவினொடும் தங்குதல் கொள்கையினாலே சுமை மிக்கு வளைந்து; குயில்கூய் விழாக்கொள விரிந்தது - குயில் கூவும்படியாக விழாக் கொள்ளப்பரவியது.

விளக்கம் : முழா - முழவு. வழா - வாடாத. இறைகொள்ளுதலானே என்க. ஏதுவாக்குக. குயில்கூய் என மாறுக; கூய் - கூவ. வீரன் - அருகக் கடவுள். பிண்டி - அசோகமரம். ( 414 )

3013. பிண்டியின் கொழுநிழற் பிறவி நோய்கெட
விண்டிலர் கனைகதிர் வீரன் றோன்னினா
னுண்டிவ ணறவமிர் துண்மி னோவெனக்
கொண்டன கோடணை கொற்ற முற்றமே.

பொருள் : பிறவி நோய் கெட - பிறவியாகிய நோய் கெடும்படி; பிண்டியின் கொழுநிழல் - அசோகின் வளவிய நிழலிலே; விண்டு அலர் கனைகதிர் வீரன் தோன்றினான் - விரிந்து மலர்ந்த மிக்க ஒளியை உடைய அருகப் பெருமான் தோன்றினான்; இவண் அற அமிர்து உண்டு - (இனி) இவ்விடத்தே அறமாகிய அமிர்தம் உண்டு; உண்மினோ என - அதனை உண்பீராக என்று, கொற்ற முற்றம் கோடணை கொண்டன - கோயிலின் வெற்றி முற்றங்கள் ஆரவாரத்தைக் கொண்டன.

விளக்கம் : கோடணை : அருகனுக்கு வானவர் செய்யும் எண்வகைச் சிறப்புக்களில் ஒன்றாகிய தெய்வத் துவனி. பிறவி நோய் : பண்புத்தொகை. உண்டு : குறிப்பு வினைமுற்று. இவண் அறவமிர்தம் உண்டு என மாறுக. ( 415 )

3014. வானவர் மலர்மழை சொரிய மன்னிய
வூனிவர் பிறவியை யொழிக்கு முத்தமன்
றேனிமிர் தாமரை திளைக்குஞ் சேவடி
கோனமர்ந் தேத்திய குறுகி னானரோ.

பொருள் : வானவர் மலர்மழை சொரிய - அமரர் பூமாரி பெய்ய; மன்னிய ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன் - பொருந்திய ஊனிலே பரவிய பிறவியை மாற்றும் அருகனுடைய; தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி - வண்டுகள் முரன்று தாமரை யென்று பயிலும் சேவடியை; அமர்ந்து ஏத்திய கோன்குறுகினான் - விரும்பிப் போற்றுதற்கு அரசன் அணுகினான்.

விளக்கம் : மன்னிய - நிலைபெற்ற. உத்தமன் : அருகன். கோன் - சீவகன். ஏத்திய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; ஏத்த என்க. ( 416 )

3015. குருகுலஞ் சீவக குமரன் கோத்திர
மருகலில் காசிப மடிகள் வாழியென்
றெரிமணி முடிநில முறுத்தி யேத்தினான்
புரிமணி வீணைகள் புலம்ப வென்பவே.

பொருள் : அடிகள்! - அடிகளே!; சீவக குமரன் குருகுலம் - சீவகனாகிய இவன் குலம் குருகுலம்; கோத்திரம் அருகல் இல்காசிபம் - இவன் கோத்திரம் குறைதல் இல்லாத காசிப கோத்திரம்; என்று - என்று அருகிலிருந்தோர் கூற; எரிமணி முடிநிலம் உறுத்தி - எரியும் மணிமுடியை நிலத்திலே பொருத்தி; புரிமணி வீணைகள் புலம்ப ஏத்தினான் - நரம்பினையுடைய அழகிய யாழ் வருந்தத் துதித்தான்.

விளக்கம் : என்று - என்ன : எச்சத்திரிபு. வாழி : அசை. துறக்கும் பொழுது குடியும் குலமும் கேட்டே துறப்பித்தல் இயல்பு. ( 417 )

3016. மன்னவன் றுறவெனத் துறத்தன் மாண்பெனப்
பொன்வரை வாய்திறந் தாங்குப் புங்கவ
னின்னுரை யெயிறுவில் லுமிழ வீழ்ந்தது
மின்னியோர் வியன்மழை முழங்கிற் றொத்ததே.

பொருள் : மன்னவன் துறவு என - அரசன் துறப்பேன் என்று கூற; பொன்வரை வாய் திறந்தாங்கு - பொன்மலை வாய் திறந்தாற்போல; புங்கவன் எயிறு வில் உமிழ - சீவர்த்தமானனின் முறுவல் ஒளியுமிழ; துறத்தல் மாண்பு என இன் உரைவீழ்ந்தது - (இனி) நீ துறப்பதே மாட்சியென இனிய உரை வெளிப்பட்டது; ஓர் வியன் மழை மின்னி முழங்கிற்று ஒத்தது - (அவ்வுரை) ஒரு பெருமுகில் மின்னி முழங்கியது போன்றது.

விளக்கம் : வீழ்ந்தது என்பதைத் தனியே எடுத்து, நின்மனம் துறவில் வீழ்ந்தது என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். எயிறுவில் உமிழ்ந்ததற்கு மின்னுவமை. ( 418 )

30.சீவகன் துறவு

வேறு

3017. காய்களிற்றி னிடைமருப்பிற் கவளம்போன்
றேமாராக் கதியுட் டோன்றி
யாங்களிய வெவ்வினையி னல்லாப்புற்
றஞ்சினே னறிந்தார் கோவே
வேய்களிய வண்டறைய விரிந்தலர்ந்த
தாமரையின் விரைசேர் போதின்
வாயொளியே பெறநடந்த மலரடியை
வலங்கொண்டார் வருந்தார் போலும்.

பொருள் : அறிந்தார் கோவே! - அறிந்தாருடைய அரசே!; காய்களிற்றின் மருப்பினிடைக் கவளம் போன்று ஏமாராக்கதியுள் தோன்றி - காயும் களிற்றின் கொம்பினிடையே கவளம் போலக் (காலன் கைப்பட்டு அவன் நுகர்ந்து) கெடுகின்ற கதிகளிலே பிறந்து; ஆய் களிய வெவ்வினையின் அல்லாப்புற்று அஞ்சினேன் - ஆராய்ந்த களிப்பினையுடைய தீவினையாலே வருத்தம் உற்று (இப் பிறவியை) அஞ்சினேன்; வேய்களிய வண்டு அறைய விரிந்து அலர்ந்த விரைசேர் தாமரையின் போதின் வாய் - பொருந்திய களிப்பினையுடைய வண்டுகள் முரல விரிந்து மலர்ந்த மணஞ்சேர் தாமரை மலரின் கண்ணே; ஒளிபெற நடந்த மலரடியை - அஃது ஒளியுற நடந்த மலர்போலும் அடியை; வலம் கொண்டார் வருந்தார் - வலம் வந்தவர் வருந்தமாட்டார்.

விளக்கம் : போலும் : அசை (ஒப்பில் போலி). இப் பிறவியால் வருந்தாதவர், தாமரையினது போதிடத்தே அது தான் ஒளிபெற நடந்த நின் திருவடிகளை வலம் வந்தார்போலே இருந்தது என்று பொருள்கூறி, ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும் (தொல். இடை. 30) என்றதனாற் பொருள் தந்தே நின்றது என்பர் நச்சினார்க்கினியர்.( 419 )

வேறு

3018. சேடார்செம்பொற் றிருமணிவைரத்
தொத்தணிந் துலகோம்பும்
வாடாமாலை வார்தளர்ப்பிண்டி
வாமநின் குணநாளும்
பாடாதாரைப் பாடாதுலகம்
பண்ணவர் நின்னடிப்பூச்
சூடாதார்தாள் சூடார்மலைச்
சுடர்மணி நெடுமுடியே.

பொருள் : சேடு ஆர் செம்பொன் திருமணி வைரத்தொத்து அணிந்து - பெருமை நிறைந்த பொன்னுடன் அழகிய நீல மணியையும் வைரக் கொத்தினையும் அணிந்து; உலகு ஓம்பும் - உலகைக் காக்கின்ற; வாடாமாலை வார்தளிர்ப் பிண்டி வாம! - வாடாத மாலையும் நீண்ட தளிரையுமுடைய அசோகின் நீழலிலே யிருந்த வாமனே!; நின் குணம் நாளும் பாடாதாரை உலகம் பாடாது - நின் பண்பை எப்போதும் பாடாதவரை உலகம் பாடாது; நின் அடிப்பூச் சூடாதார் தாள் பண்ணவர் மாலைச் சுடர்மணி நெடுமுடி சூடார் - நின் அடிமலரைத் தரியாதார் அடியை வானவர்தம் மாலையணிந்த ஒளியுறும் மணியிழைத்த நெடுமுடியின்கட் சூடார்.

விளக்கம் : வாமன் குணம் நாளும் பாடுவாரை உலகம் பாடும் வாமன் அடிமலர் சூடியவர் அடியை விண்ணவர் தம்முடிமிசைச் சூடுவர் என்றானும் ஆயிற்று. சேடு - பெருமை. தொத்து - கொத்து. வாம : விளி. உலகம் புகழ்ந்து பாடாது என்க. ( 420 )

வேறு

3019. வைய மூன்று முடனேத்த
வளருந் திங்கள் வாளெயிற்
றைய வரிமான் மணியணைமே
லமாந்தோய் நின்னை யமராதார்
வெய்ய வெந்நோய் வினையுதைப்ப
வீழ்ந்து துன்பக் கடலழுந்தி
நெய்யு நுண்ணூ னாழிகையி
னிரம்பா நின்று சுழல்வரே.

பொருள் : வையம் மூன்றும் உடன் ஏத்த - உலகம் மூன்றும் ஒருங்கே போற்ற; வளரும் திங்கள் வாள் எயிற்று ஐய அரிமான் மணி அணைமேல் அமர்ந்தோய் - பிறை மதிபோலும் கூரிய பற்களையுடைய அழகிய சிங்கஞ் சுமந்த மாணிக்க அணையின்மேல் அமர்ந்தவனே!; நின்னை அமராதார் - நின்னை உளத்தாற் பொருந்தாதவர்; வெய்ய வெந்தோய் வினை உதைப்ப - சாலவுங் கொடிய நோயைத் தரும் தீவினை தள்ள; துன்பக் கடல் வீழ்ந்து அழுந்தி - துன்பக் கடலிலே வீழ்ந்து அழுந்தி; நிரம்பா நின்று - நோய் நிறைய நின்று; நெய்யும் நுண்நூல் நாழிகையின் சுழல்வர் - நெய்தற் றொழிலைடய தார்கிடக்கும் நாடாப்போல மறுகுவார்.

விளக்கம் : ஐ : உரிச்சொல்; ஈறு திரிந்தது. திங்கள் அணையிற் சிங்கத்தின் பல்லுக்குவமை ஆதலின் ஈண்டுப் பிறைத்திங்கள் என்க. அரிமான் - சிங்கம். அமராதார் - பொருந்தாதவர். நெய்யும் நுண்ணூல் நாழிகை என்பது நெய்தற்றொழிலுக்குரிய ஒரு கருவி. தார்கிடக்கும் நாடா என்பர் நச்சினார்க்கினியர். பாவின் கண் நூல் நுழைக்கும் குழலுமாம். இறைவனை இறைஞ்சும் எண்ணமிலாதார் நண்ணவும் நாடவும் ஒண்ணாப் பொருநோயுற்றுழல்வார். ( 421 )

3020. தொழுதிப் பன்மீன் குழாஞ்சூழத்
துளும்பா திருந்த திங்கள்போன்
முழுதும் வைய முடனேத்த
முதுவாய் வலவை யாயிருந்
தழுது வினைக ளல்லாப்ப
வறைந்தோய் நின்சொ லறைந்தார்கள்
பழுதி னறுநெய்க் கடற்சுடர்போற்
பல்லாண் டெல்லாம் பரியாரே.

பொருள் : தொழுதிப் பன்மீன் குழாஞ்சூழ - தொகுதலையுடைய பல மீனின் திரள் சூழ; துளும்பாதிருந்த திங்கள்போல் - அசையாதிருந்த திங்களைப் போல; வையம் முழுதும் உடன் ஏத்த - உலகமெல்லாம் ஒருங்கே வாழ்த்த; முதுவாய் வலுவாய் இருந்து - முதிய உண்மையால் வெற்றியுடையை ஆக இருந்து; வினைகள் அழுது அல்லாப்ப அறைந்தோய் - இருவினைகளும் அழுது வருந்த அறத்தைக் கூறியவனே!; நின் சொல் அறைந்தார்கள் - நின் அறத்தைச் சாற்றினவர்கள்; பழுதுஇல் நறுநெய்க் கடற்சுடர் போல் பால்லாண்டெல்லாம் பரியார் - கெடுதியில்லாத நல்ல நெய்க்கடலில் இட்ட விளக்குப்போலே பல்லாண்டுகள் எல்லாம் வருந்தார்.

விளக்கம் : தொழுதி - தொகுதி. துளும்புதல் - அசைதல். பன்மீன் - உயிர்த் தொகுதிக்கும் திங்கள் அருகனுக்கும் உவமைகள். முதுவாய் - முதிய உண்மை. வலவை - பெற்றியை உடையை : முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று. வலம் - வெற்றி. அல்லாத்தல் - வருந்துதல். சொல் - ஈண்டு அறத்திற்கு ஆகுபெயர். பல்லாண்டெல்லாம் என்றது எக்காலத்தும் என்பதுபட நின்றது.
( 422 )

3021. செழும்பொன் வேய்ந்து மணியழுத்தித்
திருவார் வைர நிரைத்ததனுட்
கொழுந்து மலருங் கொளக்குயிற்றிக்
குலாய சிங்கா தனத்தின்மே
லெழுந்த பருதி யிருந்தாற்போ
யழுந்தேன் வந்துன் னடியடைந்தே
பழுதி னறுநெய்க் கடற்சுடர்போற்
னருவாய்ப் போத லழகிதோ.

பொருள் : செழும்பொன் வேய்ந்து - வளவியு பொன்னால் வேய்ந்து; மணி அழுத்தி - மணிகளை இழைத்து; திருஆர்வைரம் நிரைந்து - அழகு பொருந்திய வைரத்தை ஒழுங்குறப் பதித்து; அதனுள் கொழுந்தும் மலரும் கொளக் குயிற்றி - அதனுள் கொழுந்தும் மலரும் வடிவுகொள்ளும்படி வல்லியை எழுதி; குலாய சிங்காதனத்தின் மேல் செய்த அரியணையின் மேலே; எழுந்த பருதியிருந்தாற்போல் இருந்த எந்தை பெருமானே!- இளஞாயிறு இருந்தாற்போலே இருந்த எந்தையாகிய பெருமானே!; அழுந்தேன் வந்து உன் அடி அடைந்தேன் - பிறவிக்கடலில் அழுந்தேனாய் வந்து நின் அடியைச் சேர்ந்தேன்; அருவாய்ப்போதல் அழகிது - பிறப்பற்றுப் போதல் நன்று.

விளக்கம் : திரு - அழகு. குயிற்றி - எழுதி. குலாய - பண்ணின. பருதி - ஞாயிறு. எந்தையாகிய பெருமானே என்க. அருவாய்ப்போதல் - பிறப்பற்றுப் போதல். ஓகாரம் : சிறப்பு; ஈற்றசையுமாம். ( 423 )

வேறு

3022. குண்டலமும் பொற்றோடும் வைந்தாருங் குளிர் முத்தும்
வண்டலம்பு மாலையு மணித்தொத்து நிலந்திவள
விண்டலர்பூந் தாமரையின் விரைத்தும்ப மேனடந்த
வண்டலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான்.

பொருள் : குண்டலமும் - குண்டலமும்; பொன்தோடும் - பொன்னால் ஆகிய தோடும்; பைந்தாரும் - பசிய மாலையும்; குளிர் முத்தும் - தண்ணிய முத்தும்; வண்டு அலம்பும் மாலையும் - வண்டுகள் முரலும் (முடி)மாலையும்; மணித்தொத்தும் - (அம்முடி மாலையிலே) மணிக்கொத்தும்; நிலம் திவள - நிலத்திலே பொருந்தி அசைய; விண்டு அலர்பூந் தாமரையின் விரைத்தும்பமேல் நடந்த - விரிந்து மலர்ந்த அழகிய தாமரை மலரின் மணம் பொங்க அதன்மேல் நடந்த; வண்டு அலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான் - வண்டுகள் மொக்கும் அழகிய திருவடியை மணி முடியினாலே வணங்கினான்.

விளக்கம் : குண்டலம் - காதணியிலொருவகை. அலம்பும் - முரல்கின்ற. தொத்து - கொத்து, திவள - துவள; புரள என்றவாறு. விரை - நறுமணம். தாமரையின் மேனடந்த அடி; வண்டலர் பூந்திருவடி எனத் தனித்தனி கூட்டுக. ( 424 )

3023. நிலவிலகி யுயிரோம்பி நிமிர்ந்தொளிர்ந்து பசிபகைநோ
யுலகமிருள் கெடவிழிக்கு மொண்மணி யறவாழி
யலகையிலாக் குணக்கடலை யகன்ஞான வரம்பானை
விலையிலா மணிமுடியான் விண்வியப்ப விறைஞ்சினான்.

பொருள் : நில விலகி - (ஒளியால்) நிலவை விலக்கி; உயிர் ஓம்பி - பல்லுயிரையும் காப்பாற்றி; நிமிர்ந்து ஒளிர்ந்து - மேனோக்கி விளங்கி; உலகம் பசி பகை நோய் இருள் கெட விழிக்கும் - உலகின்கண் பசியும் பகையும் நோயும் இருளும் நீங்க ஒளிர்கின்ற; ஒண்மணி அற ஆழி - ஒள்ளிய மணியிழைத்த அறவாழியையுடைய; அலகை இலாக் குணக்கடலை - எண்ணிறந்த பண்புக் கடலை; அகல்ஞான வரம்பானை - பரவிய ஞானத்துக்கு எல்லையாந் தன்மையுடையவனை; விலைஇலா மணிமுடியான் - விலைமதிக்க முடியாத மாணிக்க முடியினான்; விண் வியப்ப இறைஞ்சினான் - வானவர் வியப்ப வணங்கினான்.

விளக்கம் : நிலாப்போன்று விளங்கி எனினுமாம். உலகம் பசிபகை நோய் இருள்கெட என இயைக்க. உலகம் - உயிர். விழித்தல் - ஒளிர்தல். அலகை - அளவு. மணிமுடியான் என்றது சீவகனை. ( 425 )

3024. தூய்த்திரண் மணித்தாமஞ்
சொரிந்துபொன் னிலநக்கப்
பூத்திரண் மணிமாலைப்
போர்ச்சிங்கம் போதகம்போ
லேத்தரிய குணக்கடலை
யிகலின்ப வரம்பானைத்
தோத்திரத்தாற் றொழுதிறைஞ்சித்
துறப்பேனென் றெழுந்திருந்தான்.

பொருள் : ஏத்த அரிய குணக்கடலை இகல் இன்ப வரம்பானை - புகழ்தற்கியலாத குணக்கடலை, வீட்டுக்குரிய இன்பவரம்புடையவனை; பூத்திரள் மணிமாலைப் போர்ச் சிங்கம் - அழகுறத் திரண்ட மணிமாலையையுடைய போர்ச் சிங்கமாகிய சீவகன்; தூய்த்திரள் மணித் தாமம் சொரிந்து பொன்நிலம் நக்க - தூய்தாகத் திரண்ட முத்துமாலை சிந்திய பொன் நிலத்தைப்படிய; போதகம்போல் - யானையைப்போல்; தோத்திரத்தால் துதித்து - தோத்திரங்கூறி வாழ்த்தி; இறைஞ்சி - வணங்கி; துறப்பேன் என்று எழுந்திருந்தான் - இனி, யான் துறவு பூண்பேன் என்று எழுந்தான்.

விளக்கம் : இகல் இன்பம் - உலக இன்பங்கட்கு மாறாகிய இன்பம். எனவே வீட்டின்பம் சுதன்மர் என்னும் கணதரரிருக்குமிடத்தே போந்தான். ( 426 )

வேறு

3025. முடியணி யமரரு முலைநல் லார்களும்
புடைபணிந் திருந்தவப் புலவன் பொன்னகர்
கடிமலர்க் கற்பகங் காம வல்லியோ
டிடைவிரா யெங்கணும் பூத்த தொத்ததே.

பொருள் : முடி அணி அமரரும் முலை நல்லார்களும் - முடியுடைய வானவரும் அவர் மனைவியரும்; புடைபணிந்து இருந்த அப் புலவன் பொன்நகர் - அருகே வணங்கியிருந்த அவ்வறிவுடையோன் கோயில்; கடிமலர்க் கற்பகம் காமவல்லியோடு - மணமுறும் மலர்களையுடைய கற்பகமும் காமவல்லியும்; எங்கணும் இடைவிராய்ப் பூத்தது ஒத்தது - எங்கும் கலந்து மலர்ந்தது போன்றது.

விளக்கம் : முலை நல்லார் - சுண்ணம் அணிந்ததனால் முலை நல்லவர்கள். அமரர்க்குக் கற்பகமும் நல்லார்க்குக் காமவல்லியும் உவமைகள். புடை - பக்கம், புலவன் - ஈண்டு அருகன், விராய் - விரவி. ( 427 )

3026. ஒத்தொளி பெருகிய வுருவப் பொன்னகர்
வித்தகன் வலஞ்செய்து விழுப்பொற் பூமிபோய்
மத்தக மயிரென வளர்த்த கைவினைச்
சித்திரக் காவகஞ் செல்வ னெய்தினான்.

பொருள் : ஒளி ஒத்துப் பெருகிய உருவப் பொன்நகர் - ஒளிகள் யாவும் ஒத்து மிக்க அழகுறு கோயிலை; வித்தகன் செல்வன் வலம்செய்து - அறிவுடைச் செல்வனாகிய சீவகன் வலம் வந்து; விழுப்பொன் பூமிபோய் - சிறந்த பொன்னிலத்தைக் கடந்து சென்று; மத்தக மயிலென வளர்த்த கைவினைச் சித்திரக் காவகம் எய்தினான் - தலைமயிர்போலப் பேணிவளர்த்த வேலைப்பாடுடைய ஓவியம் போன்ற மலர்ப் பொழிலை அடைந்தான்.

விளக்கம் : வித்தகன் பொன்நகர் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். எனவே, அவர் கருத்துப்படி வித்தகன் கணதரன் ஆவான்.
( 428 )

3027. ஏமநீ ருலகமோ ரிம்மிப் பாலென
நாமவே னரபதி நீக்கி நன்கலந்
தூமமார் மாலையுந் துறக்கின் றானரோ
காமனார் கலங்கழிக் கின்ற தொத்ததே.

பொருள் : நாமவேல் நரபதி - அச்சந்தரும் வேலேந்திய சீவகன்; ஏமம் நீர் உலகம் ஓர் இமமிப் பால் என - கடல்சூழ்ந்த உலகம் (தவத்துடன் ஒப்பிட) ஓர் இம்மியளவே என; நீக்கி - அதனைத் துறந்து; நன்கலம் தூமம்ஆர் மாலையும் துறக்கின்றான் - அழகிய பூண்களையும் நறுமணப் புகையார்ந்த மாலையையும் நீக்குகின்றான்; காமனார் கலம் கழிக்கின்றது ஒத்தது - (அவ்வாறு நீக்குந்தன்மை) காமனார் பூண்களைக் கழிக்கின்ற தன்மையை ஒத்தது.

விளக்கம் : ஏமம் - உயிர்க்குப் பாதுகாவலான என்க. இம்மி - ஓர் அளவை. நாமம் - அச்சம், நரபதி : சீவகன். அரோ : அசை. (429)

3028. மணியுறை கழிப்பது போல மங்கலப்
பணிவரு பைந்துகி னீக்கிப் பாற்கட
லணிபெற வரும்பிய வருக்க னாமெனத்
திணிநிலத் தியன்றதோர் திலக மாயினான்.

பொருள் : மணி உறை கழிப்பதுபோல - மணியை மறைத்த உறையைக் கழிக்கின்ற தன்மைபோல; மங்கலப் பணிவரு பைந்துகில் நீக்கி - அழகிய, குறைகூறற்கியலாத (தன் மேனியை மறைத்த) பசிய துகிலை நீக்கி; பாற்கடல் அணிபெற அரும்பிய அருக்கன் - பாற்கடலிலே அழகுறத் தோன்றிய ஞாயிறு; திணிநிலத்து இயன்றது ஆம் என - திண்மை பெற்ற நிலத்திலே வந்து பொருந்திய தாம் என்று கூறும்படி; ஓர் திகலம் ஆயினான் - ஒரு திலகமானான்.

விளக்கம் : பணிவரு - குறை கூறற்கரிய. மணி - சீவகன் உடம்பிற்கும் உறை அதனை மறைத்துக் கிடந்த ஆடைக்கும் உவமைகள். மீண்டும் பாற்கடல் ஆடைக்கும் அருக்கன் சீவகனுக்கும் உவமைகள் என்க. அணுத்திணிந்த நிலம் என்க. ( 430 )

3029. மலிந்தநன் மாலைகள் வண்ணப் பூந்துகி
னலிந்துமின் னகுமணி நன்பொற் பேரிழை
மெலிந்தனென் சுமந்தென நீக்கி மேனிலைப்
பொலிந்ததோர் கற்பகம் போலத் தோன்றினான்.

பொருள் : மலிந்த நல்மாலைகள் - மிகுதியான நல்ல மாலைகளும்; வண்ணப் பூந்துகில் - அழகிய பூந்துகிலும்; மின் நலிந்து நகுமணி - மின்னை வாட்டிப் பழிக்கும் மணியும்; நன்பொன் பேர்இழை - அழகிய பொன்னாலாகிய பேரணியும்; சுமந்து மெலிந்தனென் என நீக்கி - சுமந்து மெலிந்தேன் என்று அவற்றை நீக்கி; மேல்நிலைப் பொலிந்தது ஓர் கற்பகம்போலத் தோன்றினான் - மேல் நிற்றலால் பொலிந்தது ஒரு கற்பகம் உண்டேல் அதுபோலத் தோன்றினான்.

விளக்கம் : மலிந்த - மிக்க, வண்ணம் - நிறம், மின் நலிந்து நகுமணி என்க. சுமந்து மெலிந்தனென் என மாறுக. மலிந்த என்பது தொடங்கி மெலிந்தனென் என மாறுக. மலிந்த என்பது தொடங்கி மெலிந்தனென் என்னுந் துணையும் கற்பகத்தின் கூற்று. சீவகன் உட்கோள் எனினுமாம். பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பு மிகையாங்கால் அவ்வுடம்பின்மேல் அணியப்பட்ட மாலைகள் வண்ணப் பூந்துகில்கள் அணிகள் நீக்கப்படவேண்டுமென்பது சொல்லாமலேயமையும். ( 431 )

3030. திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனே
யிருந்ததோ ரிடிகுரற் சிங்கம் பொங்கிமேற்
சுரிந்ததன் னுளைமயிர் துறப்ப தொத்தன
னெரிந்தெழு மிளஞ்சுட ரிலங்கு மார்பினான்.

பொருள் : எரிந்து எழும் இளஞ்சுடர் இலங்கும் மார்பினான் - ஒளி மிகுந்து தோன்றுதற்குக் காரணமான இளஞாயிறு போல விளங்கும் மார்பினான்; திருந்திய கீழ்த்திசை நோக்கி - விளங்கிய கீழ்த்திசையை நோக்கி; செவ்வனே இருந்தது ஓர் இடிகுரல் சிங்கம் - நேரே யிருந்ததாகிய ஓர் இடி போன்ற குரலையுடைய சிங்கம்; மேல் சுரிந்த தன் உளைமயிர் துறப்பது ஒத்தனன் - மேல்நோக்கிச் சுரிந்த தன் பிடரிமயிரைத் துறப்பது போலத் (தன் முடிமயிரை நீக்க அமர்ந்து) தோன்றினான்.

விளக்கம் : மேல் பொங்கி இருந்தது ஓர் இடிகுரற் சிங்கம் என்று கூட்டுவர் நச்சினார்க்கினியர். மயிரினை நீக்குங்கால் கீழ்த்திசை நோக்கி இருந்து நீக்குதல் மரபு. இதனை, “முன்னுபு கீழ்த்திசை“ எனவரும் செய்யுளினும் (2636) கண்டாம். இடிகுரல் : வினைத்தொகை. சுரிந்த - சுருண்ட. ( 432 )

3031. அஞ்சுடர்த் தாமரைக் கையி னான்மணிக்
குஞ்சிவெண் படலிகைக் குமர னீப்பது
செஞ்சுடர்க் கருங்கதிர்க் கற்றை தேறுநீர்
மஞ்சுடை மதியினுட் சொரிவ தொத்ததே.

பொருள் : அம் சுடர்த் தாமரைக் கையினான் - அழகிய ஒளியுறும் தாமரை மலர்போலும் கையினால்; மணிக்குஞ்சி வெண்படலிகை - நீலமணிபோலும் சிகையை (வாங்கி) வெள்ளித்தட்டிலே; குமரன் நீப்பது - சீவகன் இடுகின்ற தன்மை; செஞ்சுடர்க் கருங்கதிர்க் கற்றை - செஞ்ஞாயிற்றினிடத்தே உள்ள கரிய கதிர்த்தொகுதியை; தேறும்நீர் மஞ்சுடை மதியினுள் சொரிவது ஒத்தது - தெளிந்த தன்மையையுடைய, முகிலிடையிலுள்ள, திங்களினிடத்தே இடுவது போன்றது.

விளக்கம் : மணிக்குஞ்சி - நீலமணிபோலும் தலைமயிர். வெண்படலிகை - வெள்ளித் தட்டு. கருங்கதிர் : இல்பொருளளுவமை. தேறு நீர்-தெளிந்த நீர்மை. மஞ்சு - முகில், மதி - வெள்ளித்தட்டிற்குவமை. (433)

3032. வேலைவாய் மணியிலை யூழ்த்து வீழ்ப்பதோர்
காலைவாய் கற்பக மரத்திற் காவலன்
மாலைவா யகிறவழ் குஞ்சி மாற்றலிற்
சோலைவாய்ச் சுரும்பினந் தொழுது சொன்னவே.

பொருள் : வேலை வாய் - துறவுக்குரிய நல் போதிலே; மணி இலை ஊழ்த்து வீழ்ப்பது - நீல மணிபோலும் இலைகளை முறைமைப்பட்டு உதிர்ப்பதாகிய; ஓர் காலை வாய் - ஒரு காலத்திடத்து; கற்பக மரத்தின் - கற்பக மரம்போலே; காவலன் மாலைவாய் அகில்தவழ் குஞ்சி மாற்றலின் - அரசன் மாலைப் போதிலே அகில் மணங்கமழும் சிகையைக் களைதலாலே; சோலைவாய்ச் சுரும்பு இனம் தொழுது சொன்ன - பொழிலில் வாழும் வண்டினம் தொழுது சில கூறின.

விளக்கம் : வேலைவாய் - துறத்தற்கியன்ற நல்லபொழுதிலே, மணி - நீலமணி, காலம் வாய்த்தல் பெற்றதொரு கற்பகம் எனினுமாம். காவலன் : சீவகன். சொன்ன - சொன்னவை அடுத்த செய்யுளில் வரும். ( 434 )

3033. தங்கிடை யிலாத்திருக் கேசந் தன்னையுங்
கொங்குடைக் கோதையுங் கொய்து நீக்கினாய்
நுங்கடை நோக்கிநாம் வாழும் வாக்கைய
மெங்கிடை யவரினி யெங்குச் செல்பவே.

பொருள் : நாம் நும்கடை நோக்கி வாழும் வாழ்க்கையம் - யாங்கள் நும் வாயில் நோக்கி வாழும் வாழ்க்கையினேம்; தம்கிடை இலாத் திருக்கேசம் தன்னையும் - தமக்கு ஒப்பில்லாத அழகிய மயிரினையும்; கொங்கு உடைக் கோதையும் - தேன் கொண்ட மாலையினையும்; கொய்து நீக்கினாய் - வாங்கிப் போக்கினாய்; எம் கிடையவர் இனி எங்குச் செல்ப - எம்மைப் போன்றவர்கள் இனி எங்குச் செல்வார்கள்?

விளக்கம் : கேசத்தையும் கோதையையும் விரும்பி நும்கடை நோக்கி வாழும் வாழ்வினேம். இனி, அவற்றை நீ கொய்து நீக்கியதால் எம்போலிகள் ஏங்குச் செல்வர். நீக்கினாய், நும் என்பவை ஒருமை பன்மை மயக்கம். ( 435 )

3034. என்றன தேனின மிரங்கு வண்டொடு
சென்றன விடுக்கிய செல்வன் பொன்மயி
ரின்றொடு தொழுதன நும்மை யாமென
மன்றலுண் டவைவலங் கொண்டு சென்றவே.

பொருள் : என்றன - என்று சுரும்பினம் கூறின; தேன் இனம் இரங்கு வண்டொடு - தேன் தொகுதியும் வருந்தும் வண்டுகளும்; செல்வன் பொன்மயிர் விடுக்கிய சென்றன - செல்வனுடைய அழகிய முடிமயிரை வழிவிடுப்பதற்குச் சென்றவை; மன்றல் உண்டு - மணத்தைப் பருகி; யாம் நும்மை இன்றொடு தொழுதனம் என - யாம் (உறவை விட்ட) நும்மை இன்று இறுதியாகத் தொழுதோம் என்று; அவை வலம் கொண்டு சென்ற - அவற்றை வலம் வந்து சென்றன.

விளக்கம் : அவை என்பதை மிஞிறுகளுக்காக்கி, நால்வகை வண்டுகளில் ஏனையவையான மிஞிறுகள் வலங்கொண்டு பின் சென்றன என்பர் நச்சினார்க்கினியர். ( 436 )

3035. மேற்படு கற்பக மாலை வேய்ந்துபொ
னேற்புடைப் படலிகை யெடுத்துக் கொண்டுபோய்
நாற்கடல் கடந்தவ னமோவென் றிட்டிடப்
பாற்கடல் பனிமதி போல வீழ்ந்ததே.

பொருள் : மேற்படு கற்பக மாலை வேய்ந்து - மேலிடத்துண்டாகிய கற்பக மாலையாலே சூழ்ந்து; ஏற்பு உடைப் பொன்படலிகை எடுத்துக் கொண்டுபோய் - தகுதியுடையதொரு வெள்ளித் தட்டோடு எடுத்துக்கொண்டு சென்று; நாற்கடல் கடந்து - நாலுகடலைக் கடந்து; நமோ என்று அவன் இட்டிட - நமோ என்றுரைத்துச் சுதஞ்சணன் போகட; பாலகடல் பனிமதிபோல வீழ்ந்தது - பாற்கடலிலே அத்தட்டுக் குளிர்ந்த திங்கள்போல வீழ்ந்தது.

விளக்கம் : பொன் - ஈண்டு வெள்ளி, படலிகை. தட்டு - பாற்கடல் நான்கு கடலுக்கு அப்பால் உள்ள ஐந்தாவது கடல் என்பது அருகர் கொள்கை. நமோ என்றது மறைமொழி. ( 437 )

வேறு

3036. ஏவா விருந்த வடிக ளிவர்வாய்ச்சொற்
கோவா மணிகொழித்துக் கொண்டாலே போலுமாற்
சாவா கிடந்தார் செவிச்சார்த்தி னப்பொழுதே
மூவா வமரராய் முத்தணிந்து தோன்றுவரே.

பொருள் : ஏவா இருந்த அடிகள் இவர் வாய்ச்சொல் - இறைவன் புகழைச் சொல்லித் (துறந்த மகிழ்வுடன்) இருந்த அடிகளுடைய பரவிய வாய்ச்சொல்; கோவா மணி கொழித்துக் கொண்டாலே போலும் - துளையிடாத மாணிக்கத்தைக் குற்றம் நீக்கிக் கொண்டாற்போலும்; சாவா கிடந்தார் செவிச் சார்த்தின் - சாகும் நிலையில் உள்ளவர்கள் மனம் கொண்டு கேட்பராயின்; அப்பொழுதே மூவா அமரராய் முத்து அணிந்து தோன்றுவர் - அப்போதே கெடாத வானவராய் முத்து அணிந்து தோன்றுவர்.

விளக்கம் : இவ்வாறு கூறினான் சுதஞ்சணன் என்க. இதுவும் அடுத்துவருஞ் செய்யுளும் சுதஞ்சணன் கூற்று. ஏவா சொல்லி - சாவா கிடந்தார்; உண்ணாகிடந்தார் போல் நிகழ்கால முணர்த்திற்று என்பர் நச்சினார்க்கினியர். செய்யா என்னும் வாய்பாட்டெச்சம் என்க. அடிகள் என்றது, சீவகசாமியரை, கோவாமணி - கோக்கப்படாத மணி. சொல்லுக்குவமை. சாவா கிடந்தார் - சாகும் நிலையிற் கிடந்தவர். ( 438 )

3037. தோளா மணிகுவித்தாற் போன்றிலங்கு தொல்குலத்துச்
சூளா மணியாய்ச் சுடர விருந்தானை
வாளார் முடிவைர விற்றிளைத்து வண்டரற்றுந்
தாளார வேத்திப்போய்த் தன்கோயில் புக்கானே.

பொருள் : தோளா மணி குவித்தால் போன்று - துளையிடப் பெறாத மாணிக்கத்தைக் குவித்தாற்போல; இலங்கு தொல்குலத்துச் சூளாமணியாய் - விளங்கும் பழமையான குடியிலே ஒரு தலைமையான மணியாக சுடர இருந்தானை - விளங்க இருந்த சீவகனை; வாள் ஆர்முடி வைரவில் திளைத்து - தன் ஒளி நிறைந்த முடியிலே உள்ள வைர ஒளி பயின்று வண்டு அரற்றும் தாள் ஆர ஏத்திப் போய் - வண்டுகள் முரலும் அடி பொருந்த வாழ்த்திச் சென்று; தன் கோயில் புக்கான் - தன் அரண்மனையை அடைந்தன்.

விளக்கம் : சுதஞ்சணன் தன் முடி சீவகன் அடியிலே திளைக்க வாழ்த்திச் சென்று தன் கோயில் புக்கான் என்க. (வைர ஒளி) திளைத்து என்னும் எச்சம் (வண்டுகள்) அரற்றும் என்னும் பிறவினை கொண்டது; அம்முக் கிளவியும் (தொல். வினை. 34) என்னுஞ் சூத்திர விதியால். இவ்விரு செய்யுளினும் கூறப்படுவோன் சுதஞ்சணனே என்பதை அடுத்த செய்யுளிற்,புக்கான் சுதஞ்சணனும் என்பதால் அறியலாம். ( 439 )

3038. புக்கான் சுதஞ்சணனும் பொற்றா மரைமகளிர்
தொக்காலே போலுந்தன் றேவிக் குழாஞ்சூழ
மிக்கான் குணம்பாடி யாடி மிகுதீம்பா
றொக்க கடல்போற் சுதங்கணி றைந்தனவே.

பொருள் : சுதஞ்சணனும் - (படலிகையைக் கடலில் வீழ்த்திச் சீவகன் சிறப்பைக் கூறி வணங்கிய) சுதஞ்சணனும்; பொன் தாமரை மகளிர் தொக்காலே போலும் - பொற்றாமரையில் வாழுந் திருமகளிர் குழுமினாற் போன்ற; தன் தேவிக்குழாம் சூழ - தன் மனைவியர் குழுச் சூழ; மிக்கான் குணம் பாடி ஆடி - சிறந்த சீவகனுடைய குணத்தைப் பாடி ஆடியவாறு; புக்கான் - தன் கோயிலை அடைந்தான்; மிகு தீபால் தொக்க கடல்போல் சுதங்கள் நிறைந்தன - பின்னர், மிக இனிய பால் திரண்ட கடலைப்போல (சுதஞானம் எனும்) நூலுணர்ச்சிகள் நிறைந்தன.

விளக்கம் : முற்செய்யுளில் தன் கோயில் புக்கான் என்றார். இச்செய்யுளில் அவன் புக்கபடியைக் கூறினார்.( 440 )

3039. பற்றாவஞ் செற்ற முதலாகப் பாம்புரிபோன்
முற்றத் துறந்து முனிகளா யெல்லாரு
முற்றுயிர்க்குத் தீம்பால் சுரந்தோம்பி யுள்ளத்து
மற்றிருள் சேரா மணிவிளக்கு வைத்தாரே.

பொருள் : எல்லாரும் - நந்தட்டனும் தோழன்மாரும்; பற்று ஆர்வம் செற்றம் முதலாகப் பாம்பு உரிபோல் முற்றத்துறந்து - பற்றும் ஆர்வமும் செற்றமும் முதலாகப் பிறவற்றையும் பாம்பு தோலுரிப்பதைப் போல முழுமையுந் துறந்து; முனிகளாய் -துறவிகளாய்; உயிர்க்கு உற்றுத் தீம்பால் சுரந்து ஓம்பி - உயிர்களுக்குப் பொருந்தி அருளைச் சொரிந்து பாதுகாத்து; உள்ளத்து இருள் சேரா மணிவிளக்கு வைத்தார் - நெஞ்சிலே அறியாமை சேராத மெய்யறிவை வைத்தார்.

விளக்கம் : படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து கண்டவர் மெய்பனிப்ப நோற்றிட்டு என்றார் முன்னரும் (1549). துறவறமாவது நாகந் தோலுரித்தாற்போல அகப்பற்றும் புறப்பற்றும் அறுத்து இந்திரிய வசமறுத்து முற்றத் துறத்தல் என்றார் சிலப்பதிகாரத்தும் உரையாசிரியர் (14 - 11 - உரை.) பற்று - பெற்றதன்மேல் நிகழும் ஆசை. ஆர்வம் - பெறாததன்மேல் நிகழும் ஆசை. தீம்பால் என்றது கருணையை. மணிவிளக்கு - சுருதஞானம். ( 441 )

3040. கோமா னடிசாரக் குஞ்சுரங்கள் செல்வனபோற்
பூமாண் டிருக்கோயிற் புங்கவன்றாள் சேர்ந்தேத்தித்
தாமார்ந்த சீலக் கடலாடிச் சங்கினத்துட்
டூமாண் வலம்புரியின் றோற்றம்போற் புக்காரே.

பொருள் : கோமான் அடிசாரக் குஞ்சரங்கள் செல்வன போல் - பரத சக்கரவர்த்தியின் அடியைச் சேர யானைத்திரள் செல்வனபோல; பூமாண் திருக்கோயில் புங்கவன் தாள் சேர்ந்து ஏத்தி - புவியிற் சிறந்த திருக்கோயிலில் இருந்த சீவர்த்தமானன் அடியைச் சேர்ந்து வாழ்த்தி; தாம் ஆர்ந்த சீலக்கடல் ஆடி - தாம் நிறைந்த ஒழுக்கக் கடலிலே ஆடி; சங்கினத்துள் தூமாண் வலம்புரியின் தோற்றம்போல் புக்கார் - சங்கின் தொகுதியிலே தூய சிறப்புற்ற வலம்புரி தோன்றினாற்போலச் சீவகசாமியும் திரளும் முனிவர் குழுவிலே புகுந்தனர்.

விளக்கம் : கோமான் என்றது பரதசக்கரவர்த்தியை. இலங்கல் ஆழியினான் களிற்றீட்டம் போல் என்றார் நாமகளிலம்பத்தும் (32) புங்கவன் : சீவர்த்தமானன். வலம்புரி - சீவகனுக்குவமை. ( 442 )

31. சேணிகன் வரவு

வேறு

3041. மட்டலர் வனமலர்ப் பிண்டி வாமனார்
விட்டலர் தாமரைப் பாதம் வீங்கிரு
ளட்டலர் பருதியி னளிக்கச் செல்லுநாட்
பட்டதோர் பொருளினிப் பழிச்சு கின்றதே.

பொருள் : வீங்கு இருள் அட்டு - பேரிருளைக் கொன்று; அலர் பகுதியின் - அலர்ந்த ஞாயிறுபோல; மட்டு அலர் வனமலர்ப் பிண்டி வாமனார் - தேன் விரியும் அழகிய மலரையுடைய அசோகின் நிழலில் எழுந்தருளிய அருகப் பெருமானின்; விட்டு அலர் தாமரைப் பாதம் - முறுக்குடைந்து மலரும் தாமரை மலர் போலும் அடிகள்; அளிக்கச் செல்லும் நாள் - இருவினையைக் கெடுத்து அருள் பண்ணும்படி வழிபட்டுச் செல்லும் நாளிலே; பட்டது ஓர் பொருள் இனிப் பழிச்சுகின்றது - பிறந்ததொரு பொருள் இனி யான் கூறுகின்றது.

விளக்கம் : இது நூலாசிரியர் கூற்று. வாமனார் பாதம் இருள் அட்டு அளிக்க என்க. வாமனார் - அருகக் கடவுள். இருள் - இருவினை இருள்சேர் இருவினை என்றார் வள்ளுவனாரும். பட்டது - நிகழ்ந்தது. பொருள் - நிகழ்ச்சி. பழிச்சுதல் - கூறுதல். ( 443 )

வேறு

3042. கயலின முகளிப் பாய
முல்லையம் பொதும்பிற் காமர்
புயலின மொக்குள் வன்கட்
குறுமுயல் புலம்பிக் குன்றத்
தயல்வளர் கின்ற வாமான்
குழவியோ டிரிந்து செந்நெல்
வயல்வளர் கரும்பிற் பாயு
மகதநா டென்ப துண்டே.

பொருள் : கயல் இனம் உகளிப் பாய - கயலின் தொகுதி எழுந்து பாய்வதாலே; முல்லைஅம் பொதும்பில் - முல்லைப் புதரிலே; காமர் புயல் இனம் மொக்குள் வன்கண் குறுமுயல் புலம்பி - விருப்பூட்டும் நீரின் இனமான மொக்குள்போலும் பெருங்கண்களையுடைய சிறுமுயல்கள் வெருவி; குன்றத்து அயல் வளர்கின்ற ஆமான் குழவியோடு இரிந்து - குன்றின் அயலிலே வளர்கின்ற ஆமான் கன்றுடன் ஓடி ; வயல்வளர் செந்நெல் கரும்பில் பாயும் - வயலில் வளரும் செந்நெல்லிலும் கரும்பிலும் பாய்கின்ற; மகத நாடு என்பது உண்டு - மகத நாடென ஒன்று உளது.

விளக்கம் : பொதும்பு - குறுங்காடு, புயல் - நீர்; ஆகுபெயர், இரிந்து - இரிய. முல்லையும் மருதமும் மயங்கின. ( 444 )

3043. இரும்பிடி தழீஇய யானை
யிழிமதங் கலந்து சேறாய்ச்
சுரும்பொடு மணிவண் டார்க்குந்
துகிற்கொடி மாட வீதிப்
பெருங்கடி நகரம் பேசி
னிராசமா கிருக மென்ப
ரருங்கடி யமரர் கோமா
னணிநக ராய தொன்றே.

பொருள் : இரும்பிடி தழீஇய யானை இழிமதம் கலந்து சேறாய் - கரிய பிடியைத் தழுவிய யானையின் பெருகும் மதம் கலந்து சேறாகி; சுரும்பொடு மணிவண்டு ஆர்க்கும் - (அதனாலே) சுரும்பும் வண்டும் ஆரவாரிக்கின்ற; துகில் கொடி மாடவீதி - துகிற் கொடிகளையுடைய மாடங்கள் நிறைந்த தெருவையுடைய; பெருங் கடிநகரம் பேசின் இராசமா கிருகம் என்பர் - பெரிய காவலையுடைய நகரைக் கூறின் இராசமா கிருகம் என்றுரைப்பர்; அருங்கடி அமரர்கோமான் அணிநகர் அனையது ஒன்று - (அந்நகர்) அரிய காவலையுடைய இந்திரனின் அழகிய நகரை ஒப்பதொன்றாம்.

விளக்கம் : இரும்பிடி - கரிய பெண்யானை, நகரத்தின் பெயர் பேசின் என்க. அமரர் கோமான் - இந்திரன். ஆயது - போன்றது.(445)

3044. எரிமிடைந் தனைய மாலை
யினமணி திருவில் வீசுந்
திருமுடி யார மார்பிற்
சேணிக னென்ப நாம
மருமுடி மன்னர் சூழ
வலரணி பிண்டி வேந்தன்
றிருவடி விருந்து செய்வான்
றிரண்முர சறைவித் தானே.

பொருள் : எரி மிடைந்த அனைய மாலை - தீ நெருங்கினாற் போன்ற மாலையையும்; இனம் மணி திருவில் வீசும் திருமுடி - பலவகை மணிகள் அழகிய ஒளியைச் சொரியும் அழகிய முடியையும்; ஆரம் மார்பின் - ஆரம் அணிந்த மார்பினையும் (உடைய); சேணிகன் நாமம் என்ப - சேணிகன் என்பது (அந் நகர மன்னனின்) பெயர் என்பர்; அருமுடி மன்னர் சூழ அலர் அணிபிண்டி வேந்தன் - அரிய முடியையுடைய வேந்தர் சூழ, மலர் அணிந்த பிண்டியின் நீழல் வேந்துக்கு; திருவடி விருந்து செய்வான் திண்முரசு அறைவித்தான் - திருவடி வழிபாடு செய்யத் திண்ணிய முரசினை அறைவித்தான்.

விளக்கம் : சேணிகள் - சிரேணிக மகராசன். எரி - நெருப்பு. திருவில் - அழகிய ஒளி, அந்நகரத்து அரசன் நாமம் சேணிகன் என்ப என்க. பிண்டி வேந்தன் - அருகன், விருந்து - பூசனை.  (446 )

வேறு

3045. பொன்னா வழியாற் புகழ்நாவழித்
தாய்ந்த மெல்கோன்
மின்னார் மணிப்பூ ணவன்மேவிவிண்
காறு நாறு
முன்னோர் வகுத்த முகவாசம்
பொதிந்த வெந்நீர்
மன்னார வாய்க்கொண் டுமிழ்ந்தான்
மணிமாலை வேலோன்.

பொருள் : மணிமாலை வேலோன் - முத்தாரம் அணிந்த வேலோனாகிய; மின்ஆர் மணிப்பூணவன் - ஒளி நிறைந்த மணிக்கலனுடையோன்; ஆய்ந்த மெல்கோல் மேவி - ஆராய்ந்த மெல்லிய கோலைக் கொண்டு பல் விளக்கி; பொன் நா வழியால் புகழ் நா வழித்து - பொன்னாலாகிய நா வழியாலே புகழ்பெற்ற தன் நாவை வழித்து; விண்காறும் நாறும் முன்னோர் வகுத்த முகவாசம் பொதிந்த வெந்நீர் - வானளவும் மணக்கின்ற முன்னோர் அமைத்த முகவாசம் நிறைந்த வெந்நீரை; மன் ஆர வாய்க்கொண்டு உமிழ்ந்தான் - பொருந்த நிறைய வாயிலே கொண்டு (கொப்புளித்து) உமிழ்ந்தான்.

விளக்கம் : முகவாசம் என்பவை ஈண்டு வாய் கொப்புளிக்கும் நீரிற் கலக்கும் பனிநீர் முதலியவை. நச்சினார்க்கினியர், பொதிந்த வெந்நீர் என வேறு பிரித்து, மருந்துகள் இட்டுக்காய்ந்த துவர்நீர் என்றும், முகவாசம் வாய்க்கொண்டு எனக் கூட்டி அடுத்த செய்யுளிற் குளகமாக்கியும் கூறுவர். ( 447 )

3046. தீம்பா னுரைபோற் றிகழ்வெண்பட் டுடுத்து வண்டார்
தேம்பாய சாந்த மெழுகிக்கலன் றேறன் மாலை
தாம்பால தாங்கிப் புகழ்தாமரைக் குன்ற மன்ன
வாம்பான் மயிர்வேய்ந் தயிராவண மேறி னானே.

பொருள் : தீ பால் நுரைபோல் திகழ் வெண்பட்டு உடுத்து - இனிய பாலின் நுரைபோல விளங்கும் வெண்பட்டை உடுத்து; வண்டு ஆர் சாந்தம் மெழுகி - வண்டுகள் நிறைந்த சந்தனத்தை மெழுகி; தேம்பாய் தேறல்மாலை - இனிமை பரவிய மதுக்கமழும் மாலையும்; கலன் - பூண்களும்; பாலதாங்கி - (ஆகிய) பலவற்றை அணிந்து; புகழ் தாமரைக் குன்றம் அன்ன - வெண்தாமரை மலர்ந்த குன்றுபோல; ஆம்பால் மயிர் வேய்ந்து - தான் அணிந்தவற்றின் பகுதியாகிய வெள்ளிய மயிரை வேய்ந்து (நின்ற); அயிராவணம் ஏறினான் - ஐராவணத்தின்மேல் ஏறினான்.

விளக்கம் : ஐராவனம் : இஃது இந்திரன் யானை; இதுவும் வெள்ளியது. வண்டுஆர் சாந்தம் எனவும் தேம்பாய மாலை எனவும் கூட்டுக. தேறல் கலம் எனக்கூட்டித் தேறுதலையுடைய கலம் என்பர் நச்சினார்க்கினியர். ( 448 )

வேறு

3047. எறிசுரும் பரற்று மாலை
யெரிமணிச் செப்பு வெள்ளம்
பொறிவரி வண்டு பாடும்
பூஞ்சுண்ண நிறைந்த பொற்செப்
பறிவரி துணர்வு நாணித்
தலைபணித் தஞ்சுஞ் சாந்தஞ்
செறியிரும் பவழச் செப்புத்
தெண்கடற் றிரையி னேரே.

பொருள் : எறி சுரும்பு அரற்றும் மாலை எரிமணிச் செப்பு வெள்ளம் - மோதி வண்டுகள் முரலும் மலர் மாலையையுடைய, ஒளி வீசும் மணிச்செப்புத்திரளும்; பொறிவரி வண்டு பாடும் பூஞ்சுண்ணம் நிறைந்த பொன்செப்பு - புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டுகள் பாடும் அழகிய சுண்ணப்பொடி நிறைந்த பொற்செப்புத் திரளும்; அறிவு அரிது உணர்வு நாணித் தலை பனித்து அஞ்சும் சாந்தம் - நேரே அறிய இயலாததாய் உணர்வு வெள்கித் தலையசைத் தஞ்சுகின்ற கலவைச் சந்தனத்தையுடைய; தெண்கடல் திரையின் நேர் செறி இரும்பவழச்செப்பு - தெளிந்த கடலலையினாலே வந்து கரையிலே செறிந்த பெரிய பவழச் செப்புகளும்,

விளக்கம் : இது முதல் மூன்று பாட்டுகள் ஒரு தொடர். அறிவரிதுணர்வு நாணித் தலைபனித்தஞ்சும் என்பதை மெய்பொதிந்து உயர்ந்த கோமான் என (3049) பின்வரும் மூன்றாஞ் செய்யுளின் அடியுடன் கூட்டுவர் நச்சினார்க்கினியர். சந்தனத்தின் சிறப்பை யுணர்த்துதற்குக் கூறினாரெனக் கொள்வதே பொருத்தம்; மூன்றாஞ் செய்யுளடியுடன் கூட்டல் நூலாசிரியர் கருத்தாகாது. ( 449 )

3048. வந்துதேன் மயங்கி மூசு
மலயச்செஞ் சாந்த மார்ந்த
சந்தனச் செப்புங் கங்கை
தருமண லலகை யாற்றாச்
சுந்தரம் பெய்த யானைத்
தூமருப் பியன்ற வெண்செப்
பந்தரத் தலர்ந்த பன்மீ
னெனைத்துள வனைத்து மாதோ.

பொருள் : தேன் வந்து மயங்கி மூசும் மலயச் செஞ்சாந்தம் ஆர்ந்த சந்தனச் செப்பும் - வண்டுகள் வந்து கலந்து மொய்க்கும் பொதியச் செஞ்சந்தனம் நிறைந்த சந்தனச் செப்புகளும்; சுந்தரம் பெய்த யானைத் தூமருப்பு இயன்ற - சிந்துரப் பொடி பெய்த யானையின் தூய மருப்பினால் இயற்றிய; கங்கை தருமணல் அலகை ஆற்றா வெண்செப்பு -கங்கையாற்றின் மணல் போல அளவில் அடங்காத வெண் செப்புகளும்; அந்தரத்து அலர்ந்த வெண்மீன் எனைத்து உள அனைத்தும் - வானில் விரிந்த வெள்ளிய விண்மீன்கள் எவ்வளவினவோ அவ்வளவினதாகியவைகளும்.

விளக்கம் : தேன்வந்து என மாறுக. மலயம் - பொதியமலை, கங்கை மணல் வெண்செப்பின் மிகுதிக்கு வேறுபட வந்த உவமம் என்க. சுந்தரம் - சிந்துரப் பொடி, எனைத்து - எவ்வளவு, மணிச்செப்புமுதல் வெண் செப்பீறாக உள்ள செப்புகள் அனைத்தும் பன்மீன் எனைத்துள அனைத்துள என்க. மணப்பொருள்கள் நிறைந்துள்ள சிமிழ்களாகிய செப்புகள் அளவில்லன என்பார், அளவில்லனவற்றை எடுத்துக்காட்டுவாய் விண்மீன்களாகிய உடுக்கூட்டங்களை உரைப்பாராயினர். ( 450 )

3049. மைபொதி குவளை வாட்கண்
மல்லிகைக் கோதை நல்லார்
நெய்பொதி நெஞ்சின் மன்னர்
நிலம்பிறக் கிடுவ போலுங்
கொய்சுவற் புரவி மான்றேர்
குழுமணி யோடை யானை
மெய்பொதிந் துயர்ந்த கோமான்
விரைப்பலி சுமந்த வன்றே.

பொருள் : மை பொதி குவளை வாள் கண் - மை தீட்டிய குவளை மலர்போலும் ஒளிவீசுங் கண்களையும்; மல்லிகைக் கோதை நல்லார் - மல்லிகை மாலையையும் உடைய மங்கையரும்; நெய்பொதி நெஞ்சின் மன்னர் - அன்பு பொதிந்த நெஞ்சினையுடைய மன்னரும் (அமர்ந்து ஏந்திவர); நிலம் பிறக்கிடுவ போலும் கொய் சுவல் புரவி மான்தேர் - நிலம் புறங்காட்டியோடுவனபோல் விரைந்து செல்லும், கொய்த பிடரி மயிரையுடைய குதிரைகள் பூட்டிய தேரும்; குழுமணி ஓடை யானை - தொகுதியான மணிகளிழைத்த ஓடையையுடைய யானைகளும்; மெய் பொதிந்து உயர்ந்த கோமான் - உண்மையறிவு பொதிந்து மேம்பட்ட அருகப்பெருமானுக்காக; விரைப்பலி சுமந்த - மணப்பொருள்களைச் சுமந்தன.

விளக்கம் : விரைப்பலிகள் முன்னிரண்டு செய்யுளிலுங் கூறப்பட்டன. விரைப்பலிகளை மன்னரும் மங்கையரும் ஏந்தி அமர யானைகளும் தேர்களும் சுமந்து சென்றன. நெய் : நேயம் என்பதன் விகாரம். நெய் பொதி குஞ்சி என்றும் பாடம். இப்பாடத்திற்கு நெய் : கத்தூரி. ( 451 )

3050. கொடிக்குழாங் குஞ்சி பிச்சக்
குழாநிறை கோல மாலை
முடிக்குழா மூரி வானம்
பால்சொரி கின்ற தொக்குங்
குடைக்குழா மிவற்றின் பாங்கர்க்
குளித்தது குளிர்சங் கார்க்கும்
படைக்குழாம் பாரிற் செல்லும்
பாற்கடல் பழித்த வன்றே.

பொருள் : கொடிக்குழாம் - கொடித் தொகுதியும்; குஞ்சி - குஞ்சித் தொகுதியும்; பிச்சக் குழாம் - பிச்சத்தொகுதியும்; நிறைகோலம் மாலை முடிக்குழாம் - நிறைந்த அழகிய மாலையை யுடைய முடித்தொகுதியும்; மூரிவானம் பால் சொரிகின்றது ஒக்கும் குடைக்குழாம் - பெரிய வானம் பாலைப்பொழிவதைப் போன்ற குடைத்தொகுதியும்; இவற்றின் பாங்கர்க் குளித்தது - இவற்றின் அருகிலே குளித்ததாகிய; குளிர் சங்கு ஆர்க்கும் படைக்குழாம் - தண்ணிய சங்கு ஒலிக்கும் படைத்தொகுதியும்; பாரில் செல்லும் பால்கடல் பழித்தது - (தம்மிற் கூடிப் பசிய நிறம் கலந்து) பாரிலே நடக்கும் பாற்கடலைப் பழித்தது.

விளக்கம் : பாரிற்செல்லும் பாற்கடல் இல்பொருளுவமை. பிச்சம் - பீலிக்குடை, குஞ்சி - குஞ்சக்குடை, ஆகுபெயர். மூரி - பெரிய. பாங்கர் - பக்கம். ( 452 )

3051. கனைகடல் கவரச் செல்லுங்
கணமழைத் தொழுதி போலு
நனைமலர்ப் பிண்டி நாத
னல்லறங் கொள்ளை சாற்றிப்
புனைமுடி மன்ன ரீண்டிப்
பொன்னெயிற் புறத்து விட்டார்
வினையுடைத் தின்ப வெள்ளம்
விரும்பிய வேட்கை யானே.

பொருள் : புனை முடி மன்னர் ஈண்டி - புனை முடியையுடைய மன்னர் திரண்டு; வினை உடைத்து இன்ப வெள்ளம் விரும்பிய வேட்கையான் - இருவினையைக் கெடுத்து, இன்பமாகிய வெள்ளத்தை விரும்பிய வேட்கையினாலே; நனைமலர்ப் பிண்டி நாதன் நல்அறம் கொள்ளை சாற்றி - தேன்மலர்ப் பிண்டிப் பெருமானின் நல்லறத்தை எங்கும் பரப்பி; பொன் எயில் புறத்துவிட்டார் - பொன்மதிலின் வெளியே தங்கினார்; கனை கடல் கவரச்செல்லும் கணமழைத் தொகுதி போலும் - (அவ்வாறு தங்கியது) ஒலி கடலிலே நீரை முகக்கச்செல்லும் கூட்டமாகிய முகில் தொகுதிபோலும்.

விளக்கம் : கனைகடல் : வினைத்தொகை, மழை - முகில் : ஆகுபெயர். சாற்றி - பறையறைவித்து. விட்டார் - தங்கினார். வினை - இருவினை, வேட்கையான் எயிற்புறத்து விட்டார் என்க. ( 453 )

வேறு

3052. வண்டுசூழ் பூப்பலி சுமந்து தான்வலங்
கொண்டுசூழ்ந் தெழுமுறை யிறைஞ்சிக் கோனடி
யெண்டிசை யவர்களும் மருள வேத்தினான்
வெண்டிரைப் புணரிசூழ் வேலி வேந்தனே.

பொருள் : வெண்திரைப் புணரிசூழ் வேலி வேந்தன் - வெள்ளிய அலைகளையுடைய கடல்சூழ்ந்த வேலிக்கு மன்னன் ஆகிய சேணிகன்; வண்டுசூழ் பூப்பலி சுமந்து - வண்டுகள் சூழும் மலர்ப்பலியைச் சுமந்து; வலம் கொண்டு சூழ்ந்து கோனடி எழுமுறை இறைஞ்சி - வலம் வந்து சூழ்ந்து இறைவனடியை ஏழுமுறை வணங்கி; எண் திசையவர்களும் மருள ஏத்தினான் - எட்டுத் திக்கினில் உள்ளவர்களும் மயங்க வாழ்த்தினான்.

விளக்கம் : புணரியைச் சூழ்ந்த வேலி சக்கரவாளகிரி. அதற்கு வேந்தன் எனவே சேணிகன் சக்கரவர்த்தி யாயினான். ( 454 )

வேறு

3053. பகல்வளர் பவழச் செந்தீப்
பருதிமுற் பட்ட தேபோ
லிகல்வினை யெறிந்த கோமா
னிணையடி யொளியிற் றோன்றா
தகல்விசும் புறையுந் தேவ
ரொளியவிந் திருப்ப மன்னன்
முகிழ்கிழி மதியம் போலு
முனிக்குழா நோக்கி னானே.

பொருள் : பகல்வளர் பவளச் செந்தீ பருதிமுன் பட்டதே போல் - பகலில் வளரும் பவளம்போலும் செந்தீ ஞாயிறுமுன் ஒளிமழுங்கினாற்போல; இகல்வினை எறிந்த கோமான் இணையடி ஒளியின் - தீவினையை எறிந்த இறைவனின் இணையடி ஒளியின் முன்னால்; அகல் விசும்பு உறையும் தேவர் ஒளி தோன்றாது அவிந்து இருப்ப - பரவிய வானில் வாழும் வானவர் ஒளி வெளிப்படாமல் மழுங்கியிருந்த அளவிலே; மன்னன் முகில் கிழிமதியம் போலும் முனிக்குழாம் நோக்கினான் - சேணிகன் முகிலைக் கிழித்துவரும் திங்கள்போலும் முனிவர் திரளை நோக்கினான்.

விளக்கம் : பகல்வளர்தீ, பவழச் செந்தீ எனத் தனித்தனி கூட்டுக. பருதி - ஞாயிறு, கோமான் - இறைவன், மன்னன் : சேணிகன், வினையீனீங்கி விளங்குதற்கு முகில் கிழிமதியம் என்றார். ( 455 )

3054. கண்வெறி போக வாங்கோர்
கடுந்தவ னுருவ நோக்கி
யொண்ணெறி யொருவிக் கோமா
ணொளிதிரண் டிருந்த தாங்கொல்
விண்ணெறி வழுவி வீழ்ந்த
விண்ணவ னொருவன் கொல்லென்
றெண்ணெறி யாது மோரா
திருந்திது கூறி னானே

பொருள் : ஆங்கு ஓர் கடுந்தவன் உருவம் கண் வெறிபோக. நோக்கி - அவ்விடத்தே ஒரு கடிய தவமுடைய முனிவன் உருவைக் கண்ணின் ஆவல் தீரப் பார்த்து; கோமான் ஒளி திரண்டு ஒண்நெறி ஓருவி இருந்ததாம் கொல்? - இறைவன் ஒளி கூடி, ஒள்ளிய நெறியினின்றும் தப்பிப்போய் இருந்ததோ?; விண்நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன் கொல் என்று - வான் வழி தப்பி வீழ்ந்த வானவன் ஒருவனேயோ? என்று; எண்ணெறி யாதும் ஓராது இருந்து இது கூறினான். எண்ணும் நெறியாற் சிறிதும் அறுதியிட முடியாமல் இதனைக் கூறினான்.

விளக்கம் : ஆங்கோர் கடுந்தவன் என்றது சீவகசாமியை, கோமான் ஒளி அவனோடிருக்கும் நெறிதப்பித் தனித்திருந்ததோ என்று ஐயுற்றான் என்றவாறு. எண்ணெறி - ஆராயும்வழி. ஓர்தல் - முடிவுசெய்தல், இது - இம்மொழி; (கீழ் வருமொழி.) ( 456 )

வேறு

3055. விளங்கொளி விசும்பறுத் திழிந்து விண்ணவ
னிளங்கதி ரெனத்துறந் திருப்பக் கண்டனம்
வளங்கெழு முக்குடை யடிகள் வாய்மொழி
துளங்கின னெனத் தொழு திறைஞ்சி னானரோ.

பொருள் : விண்ணவன் விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து - வானவன் ஒருவன் விளங்கும் ஒளியையுடைய வானைவிட்டு இறங்கி; இளங்கதிர் எனத் துறந்து இருப்பக் கண்டனம் - இளஞாயிறுபோலத் துறவு பூண்டிருப்பப் பார்த்தோம்; வளம் கெழும் முக்குடை அடிகள் வாய்மொழி துளங்கினன் என - வளம் பொருந்திய முக்குடையின் கீழ் எழுந்தருளிய இறைவன் கூறிய ஆகமநெறியைத் தப்பினான் என்று கூறி; தொழுது இறைஞ்சினான் - (சுதன்மர் என்னும் கணதரரை) கை கூப்பி வணங்கினான்.

விளக்கம் : விண்ணவன் - ஒரு விண்ணவன் என்பதுபட நின்றது. இளங்கதிர் - இளஞாயிறு. முக்குடையடிகள் - அருகக் கடவுள். வாய்மொழி - ஆகமம். துளங்கினன் - தப்பினான். அரோ : அசை, இது சேணிகன் கூற்று. இளம் பருவத்துத் துறவுத்தோற்றம் விண்ணவன் வந்து மண்ணகத்தே தங்கியிருந்த தொக்கும். ( 457 )

3056. மன்னவ கேண்மதி வானில் வாழ்பவர்
பொன்னியல் கற்பகப் போக பூமியா
ரென்னதுந் துறவல ரிறைவன் வாய்மொழி
சொன்னவா றல்லதெப் பொருளுந் தோன்றுமே.

பொருள் : மன்னவ! கேள்! - அரசனே! கேட்பாயாக!; வானில் வாழ்பவர் - வானவரும்; பொன் இயல் கற்பகப் போக பூமியார் - பொன்னால் இயன்ற கற்பகமுடைய இன்பவுலகத்தினரும்; என்னதும் துறவலர் - சிறிதும் துறவார்; இறைவன் வாய்மொழி சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே? - இறைவன் ஆகமங்கூறிய நெறியானே அல்லாமல் எப்பொருளும் தோன்றுமோ? (தோன்றா).

விளக்கம் : இவ்வாறு கூறினார் கணதரர். மன்னவ என்றது சேணிகனை. கேண்மதி என்புழி மதி முன்னிலையசை. என்னதும் - ஒரு சிறிதும். துறவலர் -துறவார். தோன்றுமே என்புழி ஏகாரம் எதிர்மறை. தோன்றமாட்டா என்றவாறு. ( 458 )

3057. அடிகளுக் கிடமருங் கிருந்த வாய்மலர்க்
கடிகமழ் தாமரைக் கண்ணி னானிவன்
வடிவமே வாய்திறந் துரைக்கும் வானவ
னொடிவறு பேரொளி யுட்கத் தக்கதே.

பொருள் : அடிகளுக்கு இடம் மருங்கு இருந்த - அடிகளே! தங்கட்கு இடப்பக்கத்தே இருந்த; ஆய் கடிகமழ் தாமரை மலர்க் கண்ணினான் இவன் - ஆராய்ந்த மணங்கமழும் தாமரை மலர்போலுங் கண்ணினானாகிய இவனுடைய; உட்கத்தக்கது ஒடிவறு பேரொளி வடிவமே வாய்திறந்து வானவன் உரைக்கும் - அஞ்சத்தக்கதாகிய கெடாத பேரொளியுடைய உருவமே வாய்திறந்து வானவன் என்று கூறும்.

விளக்கம் : அடிகளுக்கு : முன்னிலைப் புறமொழி. இடமருங்கு - இடப்பக்கம். கடி - மணம். உட்கத்தக்கது ஒடிவறு வடிவமே என இயைக்க, ஆதலால் யான் அவ்வாறு கூறினேன் என்பது குறிப்பெச்சம். இது சேணிகள் கூற்று. இந் நிகழ்ச்சி சீபுராணத்திற் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது: - மற்றொருநாள் சேணிக மன்னன் சமவ சரணமடைந்து அசோகவனத்துள் அசோக மரத்தின்கீழ்ப் பேரழகும் நல்லிலக்கணமும் உடையராய்த் தியானத்திலிருந்த சீவகமுனிவரைக் கண்டு அளவிறந்த வியப்புடையனாய் சுதன்மரென்னும் கணதரரையடைந்து அடிகளே, ஈதிருலக்கணமுடையராகிய இத் துறவி யாரென்று வினவ அவரும் அருளிச்செய்வார், எனவரும். ( 459 )

3058. திருவி னோடகன்ற மார்பிற்
சீவக சாமி யென்பா
னுருவினோ டொளியு நோக்கி
னொப்புமை யுலகி னில்லை
மருவினா ரிமைத்து நோக்கின்
மனம்பிறி தாகி நிற்பா
ரரிதிவன் முகத்து நோக்க
லழகொளி யன்ன வென்றான்.

பொருள் : திருவினோடு அகன்ற மார்பின் சீவகசாமி என்பான் - (இவன்) திருமகளோடு கூடி அகன்ற மார்பினையுடைய சீவகசாமி எனப்படுவான்; உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை - இவன் அழகையும் புகழையும் ஆராய்ந்தால் உவமை உலகில் இல்லை ; மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார் - (இவனை) நெருங்கினோர் இமைத்துப் பார்த்தால் அவன் அல்லன் என்று மனம் வேறு ஆகிய நிற்பார்; அழகு ஒளி அன்ன - நீ கூறிய அழகும் ஒளியும் நீ கூறிய தெய்வத் தன்மையேயாக இருக்கும்; இவன் முகத்து நோக்கல் அரிது என்றான் - (ஆதலால்) இவனிடத்துப் பார்த்தல் அரிது என்றான்.

விளக்கம் : இது கணதரர் சேணிகனுக்குக் கூறியது. என்பான் - எனப்படுவான், உரு - அழகு: உட்குமாம், ஒளி - புகழ், மருவினார் - எய்தியவர், அவனல்லன் என மனம் பிறிதாகி என்க. ( 460 )

32. சேணிகன் வினா

3059. மாதவன் சரிதமுந் துறந்த வண்ணமு
மேதமின் றியம்புமி னடிக ளோவெனப்
போதலர் புனைமுடி யிறைஞ்சி யேத்தினான்
காதலிற் கணந்தொழக் காவன் மன்னனே.

பொருள் : காவல் மன்னன் கணம் காதலின் தொழ - உலக காவலனாகிய மன்னவன் முனிவர் குழு கேட்கவேண்டும் என்னும் காதலுடன் தொழும்படி; அடிகளோ! - அடிகளே!, மாதவன் சரிதமும் துறந்த வண்ணமும் - சீவகசாமியின் முற்பிறப்புத் தவ வரலாற்றையும், பற்றற்றுத் துறந்தசெய்திகளையும்; ஏதம் இன்று இயம்புமின் என - குற்றமின்றாகக் கூறுமின் என்று; போது அலர் புனைமுடி இறைஞ்சி ஏத்தினான் - மலரையுடைய ஒப்பனைசெய்த முடியினால் வணங்கிப் போற்றினான்.

விளக்கம் : மாதவன் என்றது சீவகசாமியை. சரிதம் - வரலாறு; முற்பிறப்பிற் செய்த தவம் முதலிய வரலாறு என்க. ஏதம் - குற்றம், இன்று - இன்றி, ஓகாராம் - சிறப்பு, கணம் - முனிவர் கூட்டம், தாமும் கேட்க வேண்டும் என்னும் காதலாலே கைதொழ என்றவாறு.
( 461 )

3060. பாட்டருங் கேவலப் பரவை மாக்கடற்
கூட்டருங் கொழுந்திரை முகந்து மாமுனி
மோட்டிரு மணிமுகின் முழங்கிப் பெய்தலி
னூட்டரு மறவமிர் துலக முண்டதே.

பொருள் : பாடு அருங்கேவலப் பரவை மாக்கடல் - புகழ்தற்கரிய கேவல ஞானம் என்னும் பரப்புடைய பெரிய கடலிலே; கூட்டுஅருங் கொழும் திரை - கூட்டத்தையுடைய பெறுதற்கரிய நல்ல திரையை; மாமுனி மோடு இருமணி முகில் முகந்து - பெருமுனியாகிய பெரிய கருமுகில் மொண்டு; முழங்கி ஊட்ட அரும் அற அமிர்து பெய்தலின் - முழங்கி ஊட்டற்கரிய அறமாகிய அமிர்தைப் பொழிதலின்; உலகம் உண்டது - அதனை உலகம் உண்டது.

விளக்கம் : எனவே, இந்த ஞானத்தாலே பல பிறப்பிற் செய்ததவங்களை உணர்ந்து கூறினார் என்றார். தவங்களைக் கூறவே அறமாயிற்று. இக்காரணங் கூறவே துறந்தவண்ணமுங் கூறினாராயிற்று. ஊட்டரும் - பிறரை அறிவித்தற்கரிய. ( 462 )

3061. சீவகன் றிருவின மாக யாமென
நாவகந் தழும்பநின் றேத்தி நன்றரோ
காவல னாதியாக் கணங்கள் கைதொழப்
பாவமில் சுதன்மராற் பாடப் பட்டதே.

பொருள் : சீவகன் திருவினம் யாம் ஆக என - சீவகன் பெற்ற இத்திருவினை யாமும் உடையேமாக வேண்டும் என்று; நாவகம் தழும்ப நின்று நன்று ஏத்தி - நாவினிடம் தழும்புண்டாக நின்று நன்றாகப் போற்றி; காவலன் ஆதியாக் கணங்கள் கைதொழ - சேணிகன் முதலாக முனிவர் குழுவினர் கைதொழும்படி; பாவம் இல் சுதன்மரால் பாடப்பட்டது - குற்றமில்லாத சுதன்மர் என்னும் கணதரராலே (சீவகன் வரலாறு) பாடப்பட்டது.

விளக்கம் : திருவினம் : தன்மைப் பன்மை. யாம் திருவினமாக என்க அரோ : அசை, காவலன் : சேணிகன், கணம் : முனிக்கூட்டம். சீவக சரிதம் பாடப்பட்டது என்க. பெறற்கரியபேறு பெற்ற பெரியோன் வரலாற்றினை உலகுணர்ந்துய்ய நூல்வடிவில் ஆக்கித்தருவதும், உரைப்பதும், கேட்பதும் உயரிய தவமும் அறமுமாம் என்பதுணர்தல் வேண்டும். ( 463 )

33.கேவலோற்பத்தி

வேறு

3062. முல்லைசூழ் முல்லை வேலி
முயலொடு கவரி மேயுங்
கொல்லைசூழ் குன்றத் துச்சிக்
குருசினோற் றுயர்ந்த வாறும்
வில்லுமிழ்ந் திலங்கு மேனி
விழுத்தவ நங்கை மார்கண்
மல்லலங் குமரர் வான்மேற்
சென்றதும் வகுக்க லுற்றேன்.

பொருள் : முல்லை சூழ் முல்லைவேலி - முல்லை படர்ந்த வேலியையுடைய; முயலொடு கவரி மேயும் - முயலும் கவரியும் மேய்கின்ற; கொல்லைசூழ் குன்றத்து உச்சி - கொல்லை சூழ்ந்த மலையுச்சியிலே நின்று; குருசில் நோற்று உயர்ந்த ஆறும் - சீவகன் நோற்று உயர்ந்த படியையும்; வில் உமிழ்ந்து இலங்கும் மேனி விழுத்தவ நங்கைமார்கள் - ஒளி வீசி விளங்கும் மேனியையுடைய, சிறந்த தவம் புரிந்த அரிவையர்களும்; மல்லல் அம் குமரர் - திண்ணியவர்களான நந்தட்டன் முதலானோரும்; வான்மேல் சென்றதும் வகுக்கல் உற்றேன் - வானிடை போயதும் கூறலுற்றேன்.

விளக்கம் : முல்லைவேலி என்புழி முல்லை வாளா இயற்கையடையாய் நின்றது. முல்லைவேலிக் கொல்லை, கவரிமேயும் கொல்லை எனத் தனித்தனி கூட்டுக. குருசில் - சீவசாமி. வில் - ஒளி. விழுத்தவம் - சிறந்ததவம், குமரர் : நந்தட்டன் முதலாயினோர். ( 464 )

வேறு

3063. முழுதுமுந் திரிகைப் பழச் சோலைத்தே
னொழுகிநின் றசும்பும் முயர் சந்தனத்
தொழுதிக் குன்றந் துளும்பச்சென் றெய்தினான்
பழுதில் வாய்மொழிப் பண்ணவ னென்பவே.

பொருள் : பழுது இல் வாய் மொழிப் பண்ணவன் - குற்றம் அற்ற வாய்மொழியை உடைய சீவகசாமி; முழுதும் முந்திரிகைப் பழச்சோலை - முற்றும் முந்திரிகைப் பழச்சோலையில்; தேன் ஒழுகி நின்று அசும்பும் உயர் சந்தனத் தொழுதிக் குன்றம் - தேன் சொரிந்து நிற்கையினாலே முற்றும் அசும்புகின்ற, உயர்ந்த சந்தனமரத் தொகுதியையுடைய குன்றிலே; துளும்பச் சென்று எய்தினான் - (ஆங்கு இருப்போர்) வருந்தச் சென்று சேர்ந்தான்.

விளக்கம் : துளும்ப : தவத்தின் சுமையால் இளகலுமாம் என்பர் நச்சினார்க்கினியர். ( 465 )

3064. நணிதினெண் வினையின் னவைகண் ணிறீஇத்
துணிய வீர்ந்திடுந் துப்பமை சிந்தையான்
மணியின் மேன்மணி கட்டிய தொத்ததற்
கணியு மாயலர் ஞாயிறு மாயினான்.

பொருள் : நணிதின் எண்வினை இன்னவை கண் நிறீஇ - அண்மையாக எண்வினையினுடைய குற்றங்களை முன்னர் நிறுத்தி; துணிய ஈர்ந்திடும் துப்பு அமை சிந்தையான் - அவற்றை அற்றுப்போம்படி, அறுத்திடும் தூய்மை பொருந்திய சிந்தையினனாய் (அதன்மேல் நின்றபோது); மணியின்மேல் மணி கட்டியது ஒத்து - நீலமணியின்மேல் மாணிக்கத்தை அழுத்தியது ஒத்து; அதற்கு அணியுமாய் அலர் ஞாயிறும் ஆயினான் - அதற்கு ஓர் அணியுமாய் இளஞாயிறும் ஆனான்.

விளக்கம் : நணிதின் - அண்ணிதாக, எண்வினை - காதி அகாதி கர்மங்கள். துப்பு - வலிமையுமாம். மணி - நீலமணி. இது மலைக்குவமை. மேன்மணி என்புழி மணி - மாணிக்கம், இது சீவகனுக்குவமை. ( 466 )

3065. குன்றின்வீ ழருவிக் குரல் கோடணைச்
சென்றெலாத் திசையுஞ் சிலம்பின் மிசை
நின்றனன் னிறை வம்மின் நீரென
வொன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.

பொருள் : குன்றின்வீழ் அருவிக் குரல் - அக்குன்றினின்றும் வீழும் அருவியின் குரல்; கோடு அணைச்சென்று - மரக்கோடுகளை அணைந்து சென்று; எலாத் திசையும் - எல்லாத்திசைகளினும்; சிலம்பின்மிசை இறை நின்றனன் - இக் குன்றின்மேற் சீவகன் நிற்கின்றனன், நீர் வம்மின் என - நீவிரும் வாருங்கோள் என்று; ஒரு பால் எலாம் ஒன்றி நின்று அதிரும் - ஒரு பக்கம் எல்லாம் பொருந்தி நின்று ஒலிக்கும்.

விளக்கம் : கோடு : குன்றின் உச்சியுமாம். இது தற்குறிப்பேற்றவணி. எலாத் திசையும் - எல்லாத் திசையும். இச் சிலம்பின் மிசை என்க. இறை நின்றனன் என்க. இறை : சீவகன், குரல் அதிரும் என்க. கோடு - மலைச் சிகரமுமாம். ( 467 )

3066. செம்பொன் பின்னிய போற்றினைக் காவலர்
வெம்பு மும்மத வேழம் விலக்குவார்
தம்புனத் தெறிமாமணி சந்து பாய்ந்
தும்பர் மீனெனத் தோன்றுமொர் பாலெலா

பொருள் : செம்பொன் பின்னியபோல் - பொற்கம்பி பின்னியதுபோல் உள்ள; தினைக்காவலர் - முற்றிய தினையின் காவலராய் நின்று; வெம்பும் மும்மத வேழம் விலக்குவார் - சீறும்மும் மதக் களிறுகளை ஒட்டுவார்; தம் புனத்து எறி மாமணி சந்து பாய்ந்து - தம் புனங்களிலே எறிந்த மாமணிகள் சந்தன மரங்களைத் தள்ளிப்போய்; உம்பர் மீன என ஓர் பால எலாம் தோன்றும் - விண்மீன் என ஒரு பக்கமெல்லாம் தோன்றும்.

3067. யானை குங்கும மாடி யருவரைத்
தேனெய் வார்சுனை யுண்டு திளைத்துடன்
கானமாப் பிடி கன்றொடு நாடக
மூனமின்றி நின் றாடுமொர் பாலெலாம்.

பொருள் : யானை குங்குமம் ஆடி - யானை குங்குமக் கொடியிலே கிடந்து; அருவரைத் தேன் நெய் வார்சுனை உண்டு - (பின்னர்) அரியமலையின் தேனொழுகிய சுனைநீரைக்குடித்து; திளைத்து - களித்து; உடன் கானம் மாப்பிடி கன்றொடு - அக்களிப்புடன் காட்டிலுள்ள பெரிய பிடியுடனும் கன்றொடும்; ஓர்பாலெல்லாம் ஊனம் இன்றி நின்று நாடகம் ஆடும் - ஒரு பக்கம் எல்லாம் குற்றம் இன்றி நின்று நாடகம் ஆடும்.

விளக்கம் : இது கட்டியானைக் குழாந்திரியும் அச்சந்தரும் காட்டினூடே தவஞ் செய்தமை குறித்தபடியாம். குங்குமம் -குங்குமக்கொடி, யானை பிடியொடும் கன்றொடும் நாடகம் ஆடும் என்க. ( 468 )

3068. வரியநாக மணிச் சுடர் மல்கிய
பொருவில் பொன்முழைப் போர்ப்புலிப் போதக
மரிய கின்னரர் பாட வமர்ந்துதம்
முருவந் தோன்ற வுறங்குமொர் பாலெலாம்.

பொருள் : வரிய நாகம் மணிச்சுடர் மல்கிய - வரியையுடைய நாகத்தின் மாணிக்க ஒளி நிறைந்த; பொரு இல் பொன் முழை - ஒப்பற்ற அழகிய குகையிலே; போர்ப் புலிப் போதகம் - போர்ப்புலியும் யானையும்; அரிய கின்னரர் அமர்ந்து பாட - அரிய கின்னரர்கள் அமர்ந்து பாட; தம் உருவம் தோன்ற ஓர் பாலெலாம் உறங்கும் - (அம் மணியின் ஒளியிலே) தம் உருவம் தெரிய ஒரு பக்கம் எல்லாம் உறங்கும்.

விளக்கம் : நாகத்தின் மணிச்சுடர் என்றதனால் நாகமும் உறங்கும் எனக்கொள்க. புலியும் யானையும் ஒருங்கிருப்பினும் முனிவருறைவிட மாதலின் தீங்கின்றியிருந்தன. ( 470 )

3069. பழுத்த தீம்பல வின்கனி வாழையின்
விழுக்கு லைக்கனி மாங்கனி வீழ்ந்தவை
தொழித்து மந்தி துணங்கை யயர்ந்துதே
னழிக்கு மஞ்சுனை யாடுமொர் பாலெலாம

பொருள் : பழுத்த தீ பலவின் கனி - பழுத்த இனிய பலவின் கனியும்; வாழையின் விழுக்குலைக் கனி - வாழையின் சிறந்த குலையாகிய கனியும்; மாங்கனி - மாங்கனியுமாக; வீழ்ந்தவை - வீழ்ந்தவற்றைத் (தின்று); மந்தி தொழித்து துணங்கை அயர்ந்து - மந்திகள் ஆரவாரித்துத் துணங்கைக் கூத்தாடி; தேன் அழிக்கும் அம் சுனை ஓர் பால் எலாம் ஆடும் - தேனாகிய வெள்ளம் போய் அழிக்கும் சுனையிலே ஒரு பக்கம் எல்லாம் ஆடும்.

விளக்கம் : பல - பலாமரம், விழுக்குலை - சிறந்தகுலை. வீழ்ந்தவை - வினையாலணையும் பெயர். தொழித்து -ஆரவாரித்து, மந்தி - பெண்குரங்கு, துணங்கை - ஒருவகைக் கூத்து. ( 471 )

வேறு

3070. நளிசிலம் பதனி னுச்சி
நாட்டிய பொன்செய் கந்தி
னொளியொடு சுடர வெம்பி
யுருத்தெழு கனலி வட்டந்
தெளிகடல் சுடுவ தொத்துத்
தீயுமிழ் திங்க ணான்கும்
விளிவரு குரைய ஞான
வேழமேற் கொண்டு நின்றான்.

பொருள் : நளி சிலம்பதனின் உச்சி - (முற்கூறியவை) செறிந்த குன்றின் உச்சியிலே; விளிவு அரும் ஞான வேழம் மேற்கொண்டு - கெடுதல் இல்லாத ஞானமாகிய வேழத்தை ஊர்ந்து; நாட்டிய பொன் செய் கந்தின் - நாட்டப்பெற்ற பொன்னாலாகிய தூண்போல; உருத்து எழு கனலி வட்டம் - சினந்து எழும் ஞாயிற்றின் வட்டம்; தெளி கடல் சுடுவது ஒத்து - தெளிந்த கடலைச் சுவறப் பண்ணுந் தன்மையை ஓத்து; ஒளியொடு சுடர வெம்பி - ஒளியோடே விளங்கும்படி சினந்து; தீ உமிழ் திங்கள் நான்கும் - நெருப்பைச்சொரியும் திங்கள் நான்கும்; நின்றான் - நின்றான்.

விளக்கம் : குரைய : அசை, நளி - செறிவு, சிலம்பு - மலை, கந்தின் - தூணைப்போன்று , கனலி வட்டம் - ஞாயிற்று மண்டிலம். சித்திரை வைகாசி ஆனி ஆடி யாகிய திங்கள் நான்கும் என்க. இஃது இளவேனிலும் முதுவேனிலும் ஆகிய கோடைக்காலத்துச் சீவகன் றவநிலை கூறிற்று. ( 472 )

3071. பார்க்கடல் பருகி மேகம்
பாம்பினம் பதைப்ப மின்னி
வார்ப்பிணி முரசி னார்த்து
மண்பக விடித்து வான
நீர்த்திரள் பளிக்குத் தூணி
சொரிந்திட நின்று வென்றான்.
மூர்த்தியாய் முனிவ ரேத்து
முனிக்களி றனைய கோமான்.

பொருள் : மூர்த்தியாய் முனிவர் ஏத்தும் முனிக்களிறு அனைய கோமான் - தவவுருவினனாகி, முனிவர்கள் வாழ்த்தும் முனிக்களிறு போன்ற அரசன்; வானம் மேகம் பார்க்கடல் பருகி - வானிலே முகில் பாறையையுடைய கடலிலே நீரைப் பருகி; பாம்பு இனம் பதைப்ப மின்னி - பாம்பின் திரள் துடிக்க மின்னி; வார்ப்பிணி முரசின் ஆர்த்து - ஆர்ரால் இறுகிய முரசென முறுகி; மண்பக இடித்து - நிலம் பிளக்க இடித்து; நீர்த் திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான் - நீர்த்திரளைப் பளிங்குக் கோல் கிடக்குந் தூணி அதனைப் பெய்வது போலப் பெய்ய (ஆவணி முதலிய திங்கள் நான்கும்) நின்று வென்றான்.

விளக்கம் : இஃது ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை யாகிய காரும் கூதிருமாகிய பருவத்துத் தவநிலை கூறுகின்றது. பார் - பறை, பாப்பினம் - பாம்பின் திரள். விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும் ஆதலான் பாப்பினம் பதைப்ப என்றார். மேகம் நீர்த்திரளைப் பளிக்குத்தூணி பளிக்குக்கோலைச் சொரிவதுபோலச் சொரிய என்க. பக - பிளக்க. மூர்த்தி - தவவேடம். ( 473 )

3072. திங்கணான் கவையு நீங்கத்
திசைச்செல்வார் மடிந்து தேங்கொள்
பங்கயப் பகைவந் தென்னப்
பனிவரை யுருவி வீசு
மங்குல்சூழ் வாடைக் கொல்கான்
வெள்ளிடை வதிந்து மாதோ
விங்குநான் காய திங்க
ளின்னுயி ரோம்பி னானே.

பொருள் : நான்கு திங்கள் அவையும் நீங்க - நான்கு திங்களாகிய காரும் கூதிரும் கழிந்த பிறகு; திசைச் செல்வார். மடிந்து - திசைதொறும் செல்கின்றவர் செல்லாமற் சோம்பியிருக்க; தேம் கொள் பங்கயப் பகை வந்தென்ன - அவ்விடங்களிலே கொண்ட பனி வந்ததாக, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான - பனி மலையைத் தடவி வரும் இருள் சூழும் வாடைக்குத் தளராதவனாய்; வெள்ளிடை வதிந்து - வெளியிடத்திலே தயங்கியிருந்து; இங்கு நான்கு ஆய திங்கள் இன உயிர் ஓம்பினான் - தங்கிய அந்நான்கு திங்களாகிய பனிக்காலத்திலே இனிய உயிரைக் காப்பாற்றினான்.

விளக்கம் : முன்பனி, பின்பனி இரண்டுங் கூடிய பனிக்காலத் தவநிலை கூறினார். பங்கயப்பகை - பனி, இங்குதல் -தங்குதல். (474)

3073. வடிமலர் நெடுங்க ணாரு
மைந்தரும் வரவு பார்த்தங்
கடிமலர் பரவ வேறி
யாரமிர் தரிதிற் கொள்வான்
கடிமலர்க் கமலத் தன்ன
கையினை மறித்துக் கொள்ளான்
முடிதவக் கடலை நீந்தி
யின்னண முற்றி னானே.

பொருள் : அங்கு வடிமலர் நெடுங்கணாரும் மைந்தரும் வரவு பார்த்து - அப்போது கூரிய மலரனைய நெடுங்கண் மங்கையரும் நந்தட்டன் முதலிய மைந்தர்களும் சரியைக்கு வரும் இவன் வரவைப் பார்த்து; ஏறி அடிமலர் பரவ - அவ் வரையில் ஏறி இவன் அடிமலரை வாழ்த் ; அரிதின் ஆர் அமிர்து கொள்வான் - அரிதாகச் சிறந்த உணவைக் கொள்கிறவன் (சிறிது கொண்டு); கடிமலர்க் கமலத்து அன்ன கையினை மறித்துக் கொள்ளான் - மணமலராகிய தாமரை போன்ற கையாலே விலக்கிக் கொள்ளாதவனாய்; முடி தவக்கடலை நீந்தி இன்னணம் முற்றினான் - வீடுபெறுதற்குரிய தவக் கடலைக் கடந்து இவ்வாறு அத்தவத்தை முடித்தான்.

விளக்கம் : முடித்தல் - வீடுபெறுதல். நெடுங்கணார் என்றது காந்தருவதத்தை முதலிய மனைவிமாரை. மைந்தர் நந்தட்டன் முதலியோர். ஆரமிர்து - உணவு, கடிக்கமல மலரன்ன கை என்க. முடிதவம் : வினைத்தொகை. ( 475 )

3074. ஒளிறுதேர் ஞானம் பாய்மா
வின்னுயி ரோம்ப லோடைக்
களிறுநற் சிந்தை காலாள்
கருணையாங் கவசஞ் சீலம்
வெளிறில்வாள் விளங்கு செம்பொன்
வட்டமெய்ப் பொருள்க ளாகப்
பிளிறுசெய் கருமத் தெவ்வர்
பெருமதின் முற்றி னானே.

பொருள் : ஞானம் ஒளிறு தேர் - மெய்ஞ்ஞானமே விளங்குந்தேராக; இன் உயிர் ஓம்பல் பாய்மா - இனிய உயிரைக் காப்பாற்றலே குதிரையாக ; நல் சிந்தை ஓடைக் களிறு - நல்ல சிந்தையே முகபடாமுடைய களிறாக; கருணை காலாள் - அருளே காலாளாக; சீலம் ஆம் கவசம் - ஓழுக்கமே தனக்குக் காவலான கவசமாக; மெய்ப்பொருள்கள் வெளிறு இல் வாள் விளங்கு செம்பொன் வட்டம் ஆக - மெய்ப்பொருள்களே குற்றமற்ற வாளும் விளங்கும் பொன் கேடகமும் ஆகக்(கொண்டு) ; பிளிறு செய்கருமத் தெவ்வர் பெருமதில் முற்றினான் - ஆரவாரம் புரியும் இருவினையாகிய பகைவரின் பெரிய மதிலை வளைத்துக்கொண்டான்.

விளக்கம் : ஒளிறுதேர் : வினைத்தொகை. பாய்மா - குதிரை. உயிரோம்பல்-உயிரைப் பாதுகாத்தல். ஓடை-முகபாடாம் நற்சிந்தைகளிறாக என மாறுக. கருணை காலாளாக என்க சீலம்-நல்லொழுக்கம், பிளிறு - ஆரவாரம். கருமத்தெவ்வர் -இருவினையாகிய பகைவர். ( 476 )

3075. உறக்கெனு மோடை யானை
யூணெனு முருவத் திண்டேர்
மறப்பெனும் புரவி வெள்ளம்
வந்தடை பிணிசெய் காலாட்
டிறப்படப் பண்ணிப் பொல்லாச்
சிந்தனை வாயில் போந்து
சுறக்கட லனைய தானை
துளங்கப்போர் செய்த தன்றே.

பொருள் : உறக்கெனும் ஓடையானை - உறக்கம் என்னும் ஓடையணிந்த யானையும்; ஊன் எனும் உருவத் திண்தேர் உணவென்னும் அச்சமூட்டும் திண்ணிய தேரும்; மறப்பு எனும் புரவி வெள்ளம் - மறவி யென்னும் குதிரை வெள்ளமும்; வந்து அடை பிணிசெய் காலாள் - (ஐயும் வளியும் பித்தும்) வந்து சேரும் பிணிகளாகிய காலாட்களும் (அகிய நாற்படைகளையும்); திறப்படப் பண்ணி - கூறுபட அணிந்து; பொல்லாச் சிந்தனை வாயில் போந்து - அசுப் பரிணாமம் என்கிற வாயிலை விட்டுப் போந்து; சுறக்கடல் அனைய தானை - சுறா மீனையுடைய கடல்போன்ற, (கருமத் தெவ்வருடைய) படை; துளங்கப் போர் செய்தது - நடுங்கும்படி போர் செய்தது.

விளக்கம் : உறக்கு - உறக்கம் ஊண் - உணவு. மறப்பு - மறதி, வளியும் பித்தும் ஐயும் வந்து அடையும் பிணி என்க. பொல்லாச்சிந்தனை-அசுப்பரிணாமம். நினைவின் வழியே செயல் வருதலின் இது வாயிலாயிற்று. சுற - சுறாமீன். இது கடலுக்கு அடை, அக்கருமத்தெவ்வர் தானை என்க. ( 477 )

3076. தெளிவறுத் தெழுவர் பட்டா
ரீரெண்மர் திளைத்து வீழ்ந்தார்
களிறுகா லுதைப்ப வெண்மர்
கவிழ்ந்தனர் களத்தி னுள்ளே
பிளிறிவீழ் பேடி பெண்ணோ
யறுவகைத் துவர்ப்பும் பேசி
னளிபடு சிந்தை யென்னு
மாழிவாய் வீழ்ந்த வன்றே.

பொருள் : களத்தினுள்ளே எழுவர் தெளிவு அறுத்துப் பட்டார் - அப்போர்க்களத்தில் (கருமத்தெவ்வர் படையில்) எழுவர் கலங்கிப் பட்டார்; ஈரெண்மர் திளைத்து வீழ்ந்தார் - பதினறுவர் பொருது வீழ்ந்தனர்; களிறுகால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர் - நல்ல சிந்தையென்னும் களிறு காலால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர்; பிளிறி வீழ் பேடி - அப்போது கூவி வீழ்கின்ற பேடு என்னும் மறையும்; பெண் நோய் - பெண் மறையும்; அறுவகைத் துவர்ப்பும் - அறுவகையான துவர்ப்பும்; பேசின் - கூறினால்; அளிபடு சிந்தை என்னும் ஆழி வாய் வீழ்ந்த - தண்ணளியையுடைய சிந்தனை என்கிற ஆழியின் வாயிலே பட்டன.

விளக்கம் : எழுவர் : மித்தியாத்துவம், சம்யக் மித்தியாத்துவம், சம்மியத்துவப் பிரகிருதி, அநந்தாநுபந்திக் குரோதம், அநந்தா நுபந்திமானம், அநந்தாநுபந்தி மாயை, அநந்தாநுபந்திலோபம், இவை முறையே கற்பிளப்புப்போல்வதூஉம், கற்றூண் போல்வதூஉம், வெதிர்வேர் முடங்கல் போல்வதூஉம், உலைமூக்கிற் பற்றின கிட்டம் பேல்வதூஉம், சேறுபோல்வதூஉம், சேறும் நீருங் கலந்தாற் போல்வதூஉம், மண்ணின் மேல் தெளிந்த நீர் போல்வதூஉம் என்று கொள்ளப்படும்.

(மலைநிலனே மணல்நீர்க் கீற்றிவை வெகுளிக் குவமமாம்
சிலையென்பு திமிசுத்தூண் செங்கொழுந்து பெருமிதக்கா
முலைமாயை முதிர்வெதிர்போர்த் தகர்மருப்பு நார்விடை நீர்
உலையுசவு நீர்மஞ்சள் துகிலினீர் உலோபக்கே.)

அநந்தாநுபந்திக் குரோத முதலாகச் சஞ்சுவலனலோப மிறுதியாகக் கிடந்த இப்பதினாறு கஷாயமும் விரித்துக்கொள்க.சி இவை உவமை காட்டினபடி.

ஈரெண்மராவர்:

இருகதி நாற்சாதி யீராநு பூர்வி
வெயில் விளக்கு நிற்றல் நுணுகல் - பொதுவுடம்பு
நித்தாதி மூன்றோ டிவைபதினா றென்றுரைப்பர்
எப்பொருளுங் கண்டுணர்ந்தோர் ஈண்டு

அவற்றுள், இருகதி : நரக கதி, விலங்கு கதி. நாற்சாதியாவன : ஏகேந்திரிய சாதிநாம கர்மம், துவீந்திரிய சாதிநாம கர்மம், திரீந்திரிய சாதி நாம கர்மம், சதுரிந்திரிய சாதிநாம கர்மம், ஈராநுபூர்வி யாவன : நரக கத்தியாநுபூர்வி, திரியக்கத்தியா நுபூர்வி, வெயிலென்றது, ஆதப நாம கருமத்தை விளக்கென்றது, உத்தியோத நாமகர்மத்தை, நிற்றல் என்றது, தாவரநாம கர்மத்தை, நுணுகல் என்றது, சூக்குமநாம கர்மத்தை, பொதுவுடம்பென்றது, சாதாரண சரீரத்தை, அஃது ஓருயிர்க்கு உடம்பாய் நின்றே பல்வேறு உயிர்க்கும் உடம்பாதல், அவை கடுகுமூலம், கற்றாழை முதலியன; கிளுவை முதலாகக் கொம்புநட்டால் ஆவனவுமாம். நித்தாதி மூன்றாவன : நித்திராநித்திரையும், பிரசலாப் பிரசலையும், ஸ்தியானக் கிரந்தியுமாம், அவற்றுள் நித்திரா நித்திரையாவது, உறக்கத்தின் மேலுறக்கம், பிரசலாப் பிரகலையாவது, துளக்கத்தின்மேல் துளக்கம், ஸ்தியானக்கிரந்தியாவது, கனவிற் செய்தது நனவில் அறியாமை.

எண்மர் : அப்பிரத்தியாக்கியானக் குரோதம், அப்பிரத்தியாக் கியான மானம், அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியான லோபம், பிரத்தியாக்கியான குரோதம், பிரத்தியாக்கியன மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியா லோபம் என்பன. இவை முறையே நிலம் பிளந்தாற்போல்வதூஉம், எலும்பு போல்வதூஉம், உசவு போல்வதூஉம், மணற்கீற்றுப் போல்வதூஉம், திமிசுத்தூண் போல்வதூஉம், வாளின் வாய்நார் போல்வதூஉம், நீர்மஞ்சள் போல்வதூஉம், என்று கொள்ளப்படூஉம்.

அறுவகைத்துவர்ப்பு : ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், சுகுச்சை, ஆசியம் - சிரித்தல், இரதி - வேண்டுதல், அரதி - வேண்டாமை, சோகம் - அசைவு, பயம் - அச்சம். சுகுச்சை - அருவருப்பு.

பிளிறுதல் - அரற்றுதல். ( 478 )

3077. மயக்கப்போர் மன்னன் மக்கண்
மந்திரி யவரும் வீழ
வியப்புறு வேத வில்வாய்.
 வேட்கையம் பெடுத்திட் டெய்யக்
கலக்கமி லசுப மென்னுங்
குந்தத்தாற் கணைபெய்ம் மாரி
விலக்கித்திண் வெறுப்பு வாளால்
விரைந்துயி ரவனை யுண்டான்.

பொருள் : மயக்கப்போர் மன்னன் மக்கள் மந்திரியவரும் வீழ - மயக்கப்போர் மன்னனுடைய மக்களும் அமைச்சர்களும் வீழ; வியப்புறு வேத வில்வாய் வேட்கை அம்பு எடுத்திட்டு எய்ய (பின்பு, அம்மன்னன்) வியக்கத்தக்க புருட வேதம் என்கிற வில்லின் வாயிலே தாக மோகம் என்கிற அம்புகளைத் தொடுத்து எய்ய ; கலக்கம் இல் அசுபம் என்னும் குந்தத்தால் - கலக்கம் இல்லாத அசுபம் என்கிற குந்தத்தாலே; கணைபெய்மாரிய விலக்கி - அந்த அம்பு மழையை விலக்கி; வெறுப்புத்திண் வாளால் விரைந்து அவனை உயிர் உண்டான் - உடம்பை வெறுத்தலாகிய திண்ணிய வாளால் விரைந்து அவன் உயிரைப் பருகினான்.

விளக்கம் : மயக்கம் - மோகநீயம், முற்செய்யுளிற் பட்டவர்களாகக் கூறப்பட்டவர்களெல்லாம் அவனுடைய மக்களும் மந்திரிகளும் அசுபமாவது : தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சை, சுவேத நீராயிருக்கும் இவ்வுடம்பென்று கருதின கருத்து. ( 479 )

3078. கரும்பெறி கடிகை போன்றுங்
கதலிகைப் போழ்கள் போன்று
மரும்பொறிப் பகைவர் தம்மை
யுறுப்பறத் துணித்து மீர்ந்து
மருந்தெறி பிணியைக் கொல்லு
மருத்துவன் போன்று மாதோ
விருந்தெறிந் தெறியு மூவர்
மேற்படை யியற்றி னானே.

பொருள் : கரும்பு எறி கடிகை போன்றும் - கருப்பந்துண்டம் போன்றும்; கதலிகைப் போழ்கள் போன்றும் - வாழைத் துண்டுகள் போன்றும்; அரும்பொறிப் பகைவர் தம்மை உறுப்பு அறத் துணித்தும் ஈர்ந்தும் - அரிய ஐம்பொறியாகிய பகைவரை உறுப்புகள் அற வெட்டியும் பிளந்தும் ; மருந்து எறி பிணியைக் கொல்லும் மருத்துவன் போன்று - மருந்தினை எறியும் பிணியைப்போக்கும் மருத்துவனைப் போன்று ; இருந்து எறிந்து எறியும் மூவர்மேல் படை இயற்றினான் - நிலையாக இருந்து எறிந்து கொல்லத்தக்க ஐ வளி பித்து எனும் மூவர் மேற் படையை விடுத்தனன்.

விளக்கம் : கடிகை - துண்டம். போழ் - துண்டம், பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவிகளாகிய ஐம்பொறிகள். பொறிப்பகைவர் - பொறியாகிய பகைவர் என்க. மருந்தெறி மருத்துவன், பிணியைக் கொல்லும் மருத்துவன் என்த தனித்தனி கூட்டுக. மாதும் ஓவும் அசைகள் மூவர் - ஐயும் பித்தும் வளியுமாகிய மூவர். இக்குறிப்புள்ள திருக்குறள், புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள், துச்சிலிருந்த உயிர்க்கு.-340. ( 480 )

3079. செழுமல ராவி நீங்கு
மெல்லையிற் செறிந்து காயங்
கழுமிய வுதிரம் போல
விமைப்பினுட் கரந்து நீங்கக்
கொழுமலர்க் குவளைக் கண்ணிக்
கூற்றுயி ருண்பதே போல்
விழுமிய தெவ்வர் வாணாள்
வீழ்ந்துக வெம்பி னானே.

பொருள் : செழுமலர் ஆவி நீங்கும் எல்லையில் - வளமைமிக்க உயிர் போங்காலத்து; காயம் செறிந்து கழுமிய உத்திரம் போல இமைப்பினுள் கரந்து நீங்க - உடம்பிலே செறிந்து கோத்திருக்கும் இரத்தம் ஒரு மாத்திரையிற் கரந்துபோமாறு போல இமைப்பளவிலே கரந்து நீங்க; கொழுமலர்க் குவளைக் கண்ணிக் கூற்று உயிர் உண்பதேபோல் - வளமுறும் குவளை மலர்க் கண்ணி புனைந்த கூற்றுவன் உயிர் உண்பதே போல; விழுமிய தெவ்வர் வாழ்நாள் வீழ்ந்து உக வெம்பினான் - துன்பம் புரியும் வினையாகிய அப் பகைவருயிரைக் குறைந்துகெட உண்டான்.

விளக்கம் : காயம் - உடம்பு, கழுமிய - கலந்த, உதிரம் - குருதி, இமைப்பு - ஒரு நொடிப்பொழுது, கூற்று - கூற்றுவன், வெம்பினான் என்பதற்குச் சினந்தான் என்பதே நேரிய பொருள். உண்டான் என்பது தாற்பரியத்தாற் கொண்ட பொருளாகும். ( 481 )

3080. குரோதனே மானன் மாயன்
கூர்ப்புடை யுலோப னென்பார்
விரோதித்து விரலிற் சுட்டி
வெருவரத் தாக்க வீர
னிரோதனை யம்பிற் கொன்றா
னித்தைநீள் பசலைப் பேரோர்
விராகெனும் வேலின் வீழ
வெகுண்டன னவரும் வீழ்ந்தார்.

பொருள் : குரோதனே மானன் மாயன் கூர்ப்பு உடை உலோபன் என்பார் - குரோதன் முதலாகிய நால்வரும்; விரோதித்து விரலின் சுட்டி வெருவரத் தாக்க - மாறுபட்டு, விரலாலே சுட்டிக் காட்டி அச்சுறத் தாக்க; நிரோதனை அம்பின் வீரன் கொன்றான் - நிரோதனை என்னும் அம்பாலே வீரன் கொன்றான் ; நித்தை நீள் பசலைப் பேரோர் - நித்திரையும் பிரசலையும் என்னும் பெயரோர் (தாக்க); விராகு எனும் வேலின் வீழ வெகுண்டனன் அவரும் வீழ்ந்தார் - (அவரை) விராகம் என்னும் வேலாலே வெகுண்டு தாக்கினான்; அவர்களும் பட்டனர்.

விளக்கம் : நால்வர் : சஞ்சுவலனக் குரோதம், சஞ்சுவலன மானம், சஞ்சுவலன மாயை, சஞ்சுவனல லோபம், அவை முறையே நீர்க்கீற்றுப்போல்வதூஉம், செங்கொழுந்து போல்வதூஉம், விடை நீர் போல்வதூஉம், துகில்நீர் போல்வதூஉம், என்று கொள்ளப்படும். நிரோதனை - செறிப்பு, விராகம் என்பது விகாரமாயிற்று. ( 482 )

3081. புணரிபோற் சிறுபுண் கேள்விப்
படையொடு புகைந்து பொங்கி
யுணர்வொடு காட்சி பேறென்
றிடையுறு கோக்க ளேற்றா
ரிணரெரி முழக்க மன்ன
சுக்கிலத் தியான மென்னுங்
கணையெறிந் துகைப்ப வீழ்ந்து
காற்படை சூழப் பட்டார்.

பொருள் : உணர்வொடு காட்சி பேறு என்று இடையுறு கோக்கள் - உணர்வும் காட்சியும் பேறும் என்று சொல்லப்பட்டு மறுபடையாக வரும் அரசர்; புணரிபோல் சிறு புன் கேள்விப் படையொடு புகைந்து பொங்கி ஏற்றார் - கடல்போலப் பெரிய சிறிய புல்லிய கேள்வியையுடைய படையொடு வந்து புகைந்து கிளர்ந்து எதிர்த்தனர்; இணர் எரி முழக்கம் அன்ன சுக்கிலத் தியானம் என்னும் கணை எறிந்து உகைப்ப - கிளைத்தலையுடைய நெருப்பின் முழக்கம்போன்ற சுக்கிலத் தியானம் என்கிற அம்பு பட்டுத் தள்ளுகையினாலே; கால்படை சூழ வீழ்ந்து பட்டார் - காலாட்படை சூழ்ந்து கிடக்க வீழ்ந்து பட்டார்.

விளக்கம் : ஈண்டுக் கூறிய கடலனைய சிறு புன் படை : நெறியல்லா நெறி ஒழுகும் சமயங்கள். உணர்வு: மதிஞானாவரணீயம், சுருதஞானாவரணீயம், அவதி ஞானாவரணீயம், மனப்பரியய ஞானாவரணீயம், கேவலஞானாவரணீயம், அவற்றுள் : மதி ஞானாவரணீயம் - சுபாவ புத்தியை மறைப்பது. சுருதஞானாவரணீயம் - சுருத ஞானத்தை மறைப்பது, அவதி ஞானாவரணீயம் - அதீதகதமான பரிஞானத்தை மறைப்பது; அஃதாவது தன்னுடைய முற்பிறப்பை அறியும் அறிவை மறைப்பது, கேவல ஞானாவரணீயம் - திரிகால ஞானத்தையும் மறைப்பது.

காட்சி : சக்கு தரிசனாவரணீயம், அசக்கு தரிசனாவரணீயம், அவதி தரிசனாவரணீயம், கேவல தரிசனாவரணீயம், சக்கு தரிசனாவரணீயம் கண்ணால் அறியும் அறிவுக்குமுன் காணுங் காட்சியை மறைப்பது. அசக்கு தரிசனாவரணீயம் - கண்ணொழிந்த நான்கு பொறிகளினாலும் அறியும் அறிவை மறைப்பது. அவதி தரிசனாவரணீயம் - அவதிஞானத்துமுன் காணுங் காட்சியை மறைப்பது. கேவல தரிசனாவரணீயம் - கேவல ஞானத்துக்குமுன் காணும் காட்சியை மறைப்பது.

பேறு : தானாந்தராயம், இலாபாந்தராயம், போகாந்தராயம், உபபோகாந்தராயம், வீரியாந்தராயம், தானாந்தராயம் -கொடையினை விலக்குவது. இலாபாந்தராயம் - ஊதியத்தை இடையிலே விலக்குவது. போகாந்தராயம் - துய்த்தற்குரிய இன்பங்களை விலக்குவது. உபபோகாந்தராயம் - நுகர்தற்குரிய பொருள்களை விலக்குவது, வீரியாந்த ராயம் - வீரியத்தை விலக்குவது.

காற்படை : பரிசேந்திரியம், நயனேந்திரியம் முதலியன. ( 483 )

3082. காதிப்போர் மன்னர் வீழக்
கணையெரி சிதறி வெய்யோ
னோதிய வகையி னொன்றி
யுலகுச்சி முளைத்த தேபோல்
வீதிபோ யுலக மூன்றும்
விழுங்கியிட் டலோக நுங்கி
யாதியந் தகன்ற நான்மைக்
கொடியெடுத் திறைமை கொண்டான்.

பொருள் : காதிப் போர் மன்னர் வீழ - உபாதியாகிய, போர் வேந்தர் பட்டு வீழும்படி; கணைஎரி சிதறி - கணையாகிய நெருப்பைத் தூவிக் கொன்று; ஓதிய வகையின் ஓன்றி - ஆகமத்தில் ஓதிய கூற்றிலே பொருந்தி; வெய்யோன் உலகு உச்சி முளைத்ததே போல் - ஞாயிறு உலகின் உச்சியிலே தோன்றியதைப்போல; வீதிபோய் - பரவிப் போய்; உலகம் மூன்றும் விழுங்கியிட்டு - உலகம் மூன்றையும் விழுங்கி; அலோகம் நுங்கி - அலோகத்தையும் விழுங்கி; ஆதி அந்தம் அகன்ற நான்மைக் கோடி எடுத்து - ஆதியும் அந்தமும் அகன்ற நான்கு கூறாகிய வெற்றிக் கொடியை எடுத்து; இறைமைகொண்டான் - இறைவனாந் தன்மையைக் கொண்டான்.

விளக்கம் : அந் நான்காவன : அநந்தஞானம், அநந்ததரிசனம், அநந்தவீரியம், அநந்தசுகம் என இவை. ( 484 )

3083. பசும்பொனி னுலகிற் றேவர்
பயிர்வளை முரச மார்ப்ப
வசும்புசேர் களிறு திண்டே
ரலைமணிப் புரவி வேங்கை
விசும்பியங் கரியோ டாளி
விடைமயி லன்ன நாக
நயந்தவை பிறவு மூர்ந்து
நாதன்றாள் கோயில் கொண்டார்.

பொருள் : பசும்பொனின் உலகில் தேவர் - பசிய பொன்னுலகிலே வாழும் வானவர்கள்; அசும்புசேர் களிறு திண்தேர் அலைமணிப் புரவி வேங்கை விசும்பு இயங்கு அரியோடு ஆனி விடைமயில் அன்னம் நாகம் நயந்தவை பிறவும் ஊர்ந்து - அசும்பு கின்ற களிறும் தேரும் புரவியும் வேங்கையும் வானில் இயங்கும் அரியும் ஆளியும் விடையும் மயிலும் அன்னமும் நாகமும் விரும்பியவை பிறவும் ஏறி; நாதன்தாள் கோயில் கொண்டார் - இறைவன் திருவடியைக் கோயிலாகக் கொண்டார்.

விளக்கம் : பயிர்வளை : வினைத்தொகை, பயிர்தல் - அழைத்தல், வளை-சங்கு, மதமுசும்புதல் சேர்ந்த களிறு என்க. அசும்புதல் ஒழுகுதல். அலைமணி : வினைத்தொகை அரி - சிங்கம், விடை - காளை, நாதன : இறைவன், தாளைக் கோயிலாகக் கொண்டார் என்க. ( 485 )

3084. நறுமலர் மாலை சாந்தம்
பரூஉத்துளித் துவலை நன்னீர்க்
கறைமுகில் சொரியக் காய்பொற்
கற்பக மாலை யேந்திச்
சிறகுறப் பரப்பி யன்னம்
பறப்பன போல வீண்டி
நிறைகடல் விஞ்சை வேந்தர்
நீணில மன்னர் சேர்ந்தார்.

பொருள் : நிறை கடல் விஞ்சை வேந்தர் - நிறைந்த கடல் போன்ற விஞ்சை வேந்தர்; காய்பொன் கற்பக மாலை ஏந்தி - ஒளிரும் பொனன்ர்லாகிய கற்பக மாலையை ஏந்தி; அன்னம் பறப்பனபோலச் சிறகு உறப் பரப்பி ஈண்டி - அன்னம் பறப்பன போலச் சிறகை நன்குறப் பரப்பி வந்து கூடி; சேர்ந்தார் - தாளைச் சேர்ந்தார்; நறுமல் மாலை சாந்தம் பரூஉத் துளித்துவலை நன்னீர் - நறுமண மலர்மாலையும் சந்தனமும் பெரிய துளியாகிய துவலையைத் தெளிக்கும் பனிநீரும்; கறைமுகில் சொரிய - கரிய முகில்போலச் சொரிய; நீள் நில மன்னர் சேர்ந்தார் - பெரு நிலத்து வேந்தர் வந்து சேர்ந்தார்.

விளக்கம் : எதிர் நிரல்நிறையாகக் கொள்க. சேர்ந்தார் என்பதை இரண்டிடத்துங் கொள்க. விஞ்சை வேந்தர்க்கு அன்னமும், நீணில மன்னர்க்கு முகிலும் உவமையாக் கொள்க. சேர்ந்தார் என்னும் பயனிலையை இரண்டெழு வாய்க்கும் தனித்தனியே இயைத்துக் கொள்க. ( 486 )

3085. விண்ணியங் கருக்கன் வீழ்ந்து
மீனிலங் கொள்வ தேபோன்
மண்ணெலாம் பைம்பொன் மாரி
மலர்மழை சொரிந்து வாழ்த்தி
யெண்ணிலாத் தொழில்க டோற்றி
யிந்திரர் மருள வாடிக்
கண்முழு துடம்பிற் றோன்றிச்
சுதஞ்சணன் களிப்புற் றானே.

பொருள் : விண் இயங்கு அருக்கன் வீழ்ந்து மீன்நிலம் கொள்வதே போல் - வானில் உலவும் ஞாயிறு வீழ்ந்து விண்மீன்களுடன் நிலம் கொள்வதைப்போல; மண் எலாம் பைம்பொன்மாரி மலர்மழை சொரிந்து வாழ்த்தி - நிலவுலகெங்கும் பைம்பொன் மழையையும் பூமாரியையும் பெய்து வாழ்த்தி; எண்ணிலாத் தொழில்கள் தோற்றி இந்திரா மருள -கணக்கில்லாத தொழில்களைத் தோற்றுவித்து இந்திரர் மருள; சுதஞ்சணன் கண் உடம்பில் முழுதும் தோன்றி ஆடிக் களிப்புற்றான் - சுதஞ்சணன் கண்கள் உடம்பெலாந் தோன்றி ஆடிக் களிப்புற்றான்.

விளக்கம் : தொழில்கள் தோற்றி - கூத்து முதலிய களியாடல்கள் தோற்றி. நச்சினார்க்கினியர், அருக்கன் விரும்பி மருளவும், வின்மீன்போல மண்ணிலுள்ளார் குவிந்து மலர்மழை சொரிந்து மருளவும், இந்திரர் பொன்மாரி பெய்து தொழில்கள் தோற்றி மருளவும் சுதஞ்சணன் ஆடிக் களிப்புற்றான் என்பர். ( 487 )

3086. குளித்தெழு வயிர முத்தத்
தொத்தெரி கொண்டு மின்ன
வளித்துல கோம்பு மாலை
யகன்குடை கவித்த தாங்கு
வளிப்பொர வுளருந் திங்கட்
கதிரெனக் கவரி பொங்கத்
தெளித்துவில் லுமிழுஞ் செம்பொ
னாசனஞ் சேர்ந்த தன்றே.

பொருள் : ஆங்கு வளிபொர உளரும் கவரி திங்கள் கதிர் எனப் பொங்க - அப்பொழுது காற்று ஒளியுடன் ஒன்று பொரும்படி உளர்கின்ற கவரி திங்களின் கதிர் எனப் பொங்க; தெளித்து வில் உமிழும் செம்பொன் ஆசனம் சேர்ந்தது - தெளிவுறுத்தி ஒளியைச் சொரியும் பொன்னணை சேர்ந்தது; குளித்து எழு வயிரம் முத்தத் தொத்து எரிகொண்டு மின்ன - (எரியும் மாணிக்க மாலையாலே) தம் ஒளி மறைந்து, பின்னரும் எழுகின்ற வயிரத்தையும் முத்துக் கொத்தையும் கொண்டு மின்ன; உலகு அளித்து ஓம்பும் மாலை அகன்குடை கவித்தது - உலகை அளித்து ஓம்பும், மாலையையுடைய பரவிய குடை கவித்தது.

விளக்கம் : குடை எரியுமாணிக்க மாலையாலே தம்மொளி மறைந்து பின்னரும் எழும் வயிரத்தையும் முத்தத் தொத்தையுங்கொண்டு மின்னக் கவித்தது என்க. தொத்து - கொத்து, வளிப்பொரப் : எதுகை நோக்கி, பகரமிரட்டித்தது. ( 488 )

(மணியரும்பதம்)

வேறு

3087. மணியுமிழ் திருக்கேசம் வானவர கிற்புகையும்
பிணியவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்தோடக் கமழமா
றுணியரு வினையெறிந்தாற் கதுநாற்றஞ் சொல்லலா
மணிதிக ழரசுவா வதன்கடாஞ் சாற்றாதோ.

பொருள் : அணிதிகழ் அரசு உவா அதன் கடாம் சாற்றாதோ? - அழகு விளங்கும் பட்டத்து யானையை அதன் மதமே கூறாதோ?; (அதுபோல்); துணி அருவினை எறிந்தாற்கு நாற்றம் அது - நீக்குதற்கு அரியது என்று துணிந்த வினையைக் கெடுத்தாற்கு இயல்பாக உளதாம் நாற்றமாகிய அதனை; மணி உமிழ் திருக்கேசம் அகில் புகையும் வானவர் பிணி அவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்து ஓடக் கமழும் - நீல மணியின் நிறத்தைச் சொரியும் அழகிய கேசமே, அகிற் புகையும் வானவருடைய முறுக்கவிழ்ந்த கற்பக மலரும் கெட்டுப்போம்படி கமழ்ந்து கூறா நிற்கும்; சொல்லலாம் - ஆதலால் (நமக்கும் அதன் தன்மை) சொல்லலாம்.

விளக்கம் : மணி - நீலமணி, திருக்கேசம் - அழகிய மயிர், வானவர் கற்பகம் என ஒட்டுக. கமழுமால் - ஆல் : அசை. துணித்தல் அரிய வினை எனினுமாம். அரசுவா - பட்டத்தியானை, கடாம் - மதநீர், சாற்றோதோ - ஓ : எதிர்மறை; சாற்றும் என்க. ( 489 )

3088. முழங்குதிரு மணிமுறுவன்
முருக்கிதழ் கொடிப்பவளத்
தழக்குரல்வாய் தளையவிழ்ந்த
மந்தாரந் தவநாறு
மழுங்கல் சூழ் வினைவெறுத்தாற்
கதுநாற்ற மறியலாம்
வழங்குபொன் வரைவளரும்
பைங்கண்மா வுரையாதோ.

பொருள் : வழங்கு பொன்வரை வளரும் பைங்கண்மா உரையாதோ? - ஒளியைத தரும் பொன்மலையிலே வளரும் பசிய கண்களையுடைய புழுகு பூனையை அதனிடத்து வழங்கும் மணமே கூறாதோ? (அதுபோல); அழுங்கல் சூழவினை வெறுத்தாற்கு - இரக்கத்தையுடையதாய்ச் சூழ்ந்த வினையை வெறுத்துக் கெடுத்தாற்கு; நாற்றம் அது - இயல்பாக உளதாம் நாற்றமாகிய அதனை ; திருமணி முறுவல், முருக்கு இதழ் கொடிப் பவழத்து, முழங்கு தழங்கு, குரல்வாய் - அழகிய முத்துப்போலும் முறுவலை உடையதும், முருக்கிதழீனையும் கொடிப் பவழத்தினையும், போன்றதும், பேரொலி செய்யும் குரலையுடையதும் ஆகிய வாயே; தளைஅவிழ்ந்த மந்தாரம் தவநாறும் - முறுக்கவிழ்ந்த மந்தாரம் கெட நாறிக் கூறும்; அறியலாம் - (ஆதலால் நமக்கும் அதன் தன்மை) அறிந்து கூற இயலும்.

விளக்கம் : முறுவலுடைய வாய், முருக்கிதழும் பவழமும் போன்ற வாய், குரலையுடைய வாய் எனத் தனித்தனியே கூட்டுக. (490)

3089. உறுப்பெலா மொளியுமிழ்ந்
துணர்வரிதா யிருசுடருங்
குறைத்தடுக்கிக் குவித்ததோர்
குன்றேபோன் றிலங்குமால்
வெறுத்திரு வினையுதிர்த்தாற்
கதுவண்ணம் விளம்பலாங்
கறுப்பொழிந்த கனையெரிவாய்க்
காரிரும்பே கரியன்றே.

பொருள் : இருவினை வெறுத்து ஊதிர்த்தாற்கு வண்ணம் அது - இருவினையை வெறுத்துக் கெடுத்தாற்கு இயல்பாக உள்ள நிறமாகிய அதற்கு; கணை எரிவாய்க் கறுப்பு ஒழிந்த கார் இரும்பே கரி அன்றே? - மிக்க நெருப்பினிடத்துக் கிடந்து தன் கறுப்புத் தீர்ந்த கரிய இரும்பே சான்றாகும்; உறுப்பு எலாம் ஒளி உமிழந்து உணர்வு அரிதாய் - உறுப்புக்கள் எல்லாமே ஒளியைச் சொரிந்து அறிவுக் கரியதாய்; இரு சுடரும் குறைத்து அடுக்கிக் குவித்தது ஓர் குன்றே போன்று இலங்கும் -ஞாயிறு நெருப்பு என்னும் இரண்டு சுடர்களையும் ஒளி குறையச் செய்து அடுக்கிக் குவித்ததாகிய ஒரு குன்றெனவே விளங்கும்; விளம்பலாம்? - ஆதலால் (நமக்கும் அதன் தன்மை) கூற இயலும்.

விளக்கம் : உறுப்புகள் இரு சுடர்களையும் அடுக்கினாற் போலும் மெய் உலையின்கட் கிடந்த இரும்பு போன்ற நிறமுடைய குன்று போலும் விளங்கும் என்க. இருவினையை வெறுத்துக் கெடுத்தாற்கு இயல்பாக உளதாம் நிறமாகிய அதனை, உறுப்பெல்லாந்தானே ஒளியைக் கான்று, எரியின் வாய்க் கிடந்து தன் கறுப்புத் தீர்ந்த இரும்பே சான்றன்றோ என்ற, குன்று போன்று விளக்கிக் கூறாநிற்கும்; ஆதலால், நமக்கும் அதன் தன்மை கூறலாம் என்று நச்சினார்க்கினியர் கூறுவர். இம் மூன்று செய்யுட்களும் ஆசிரியர் தம் மகிழ்ச்சியாலே எடுத்துக் காட்டுவமையான் உலகிற்கு அறிவித்தார். ( 491 )

வேறு

3090. வானோ ரேந்து மலர்மாரி
வண்ணச்சாந்தம் பூஞ்சுண்ணங்
கனார் பிண்டிக் கமழ் தாமங்
கறையார் முகிலி னிறங்காட்டுந்
தேனார் புகைக ளிவையெல்லாந்
திகைப்பத் திகைகண் மணநாறி
யானா கமழுந் திருவவிப்போ
தமரர்முடிமே லணிந்தாரே.

பொருள் : வானோர் ஏந்தும் மலர்மாரி - வானவர் கொண்டு வந்த பெய்யும் பூமழையும்; வண்ணச் சாந்தம் - கலவைச் சந்தனமும்; பூஞ்சுண்ணம் - அழகிய சுண்ணப் பொடியும் ; கான் ஆர் பிண்டிக் கமழ்தாமம் - மணம் நிறைந்த அசோகின் மாலையும்; கறைஆர் முகிலின் நிறம் காட்டும் தேன்ஆர் புகைகள் - கருமை பொருந்திய முகிலின் ஒளியைக் காட்டும் இனிய புகைகளும்; இவையெல்லாம் திகைப்ப - இவை யாவும் கெட; திகைகள் மணம் நாறி - திசைகள் எங்கும் மணங்கமழ்ந்து; ஆனா கமழும் திருவடிப்போது அமரர் முடிமேல் அணிந்தார் - அமையாமற் கமழும் திருவடி மலரை வானவர் முடிமேல் அணிந்தனர்.

விளக்கம் : பூஞ்சுண்ணம் - அழகிய நறுமணப்பொடி, கான் - நறுமணம். கறை - கருநிறம், புகை - நறுமணப்புகை, திகை -திசை, ஆனா - அமையாதனவாய், வழிபட்டுப் பொருள்களின் நறுமணம் மிகுந்து, புலமெலாம் மணக்குங்கால் புரையில் பொருளின் திருவடிப் பொதின்கண் மணக்குமணம் சொல்லொணா தென்க. ( 492 )

வேறு

3091. சுறவுக்கொடிக் கடவுளொடு காலற்றொலைத் தோயெம்
பிறவியறு கென்றுபிற சிந்தை யிலராகி
நறவமலர் வேய்ந்துநறுஞ் சாந்துநில மெழுகித்
துறவுநெறிக் கடவுளடி தூம மொடுதொழுதார்.

பொருள் : சுறவுக் கொடிக் கடவுளொடு காலன் தொலைத்தோய் - மீனக் கொடியுடைய வானவனாகிய காமனையிம் காலனையுந் தொலைத்தவனே!; எம் பிறவி அறுக என்று - எம் பிறப்பை நீக்கு என்று; பிற சிந்தை இலர் ஆகி - வேறெண்ணம் இல்லாதவராகி; நறவ மலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலம் மெழுகி - தேனையுடைய மலரை வேய்ந்து, நல்ல சந்தனத்தாலே நிலம் மெழுகி; துறவு நெறிக் கடவுள் அடி - துறவிலே நின்ற அருகன் அடியை; தூமமொடு தொழுதார் - நறும்புகையிட்டு; (விஞ்சையர்) தொழுதார்.

விளக்கம் : நிலும் மெழுகி, மலர் வேய்ந்து, தூபமிட்டுத் துறவு நெறிக் கடவுள் அடியைப் பிற சிந்தையிலராய் எம் பிறவி அறுக என்று தொழுதனர் என முடிபு கொள்க. சுறவுக் கொடிக் கடவுள் - காமன், காலன் - கூற்றுவன், துறவு நெறிக் கடவுள் என்றது, சீவகனை. ( 493 )

3092. பாலனைய சிந்தைசுட ரப்படர்செய் காதி
நாலுமுட னேயரிந்து நான்மைவரம் பாகிக்
காலமொரு மூன்றுமுட னேயுணர்ந்த கடவுள்
கோலமலர்ச் சேவடிகள் கொண்டுதொழு தும்யாம்.

பொருள் : பால் அனைய சிந்தை சுடர - சுக்கிலத் தியானத்தையுடைய சிந்தை விளங்குகையினாலே; படர்செய் காதி நாலும் உடனே அரிந்து - துன்பஞ் செய்யும் காதி முதலான நான்கையும் ஒன்றாக அரிந்து; நான்மை வரம்பு ஆகி - நால்வகை வரம்புடனே; காலம் ஒரு மூன்றும் உடனே உணர்ந்த கடவுள் - மூன்று காலங்களையும் ஒன்றாக உணர்ந்த கடவுளே!; கோலம் மலர்ச் சேவடிகள் கொண்டு யாம் தொழுதும் - அழகிய மலரனைய சிவந்த அடிகளை உட்கொண்டு யாம் தொழுவோம்.

விளக்கம் : வானவர் இவனைத் தொழுதபடி இதுமுதல் மூன்று செய்யுளிற் கூறினார். காதிநான்காவன ஞானாவரணீயம் முதலியன. அவை புணரிபோல்: என்னும் (சீவக. 3081) செய்யுளிற் கூறப்பட்டன. நான்மையாவன அநந்தஞானம், அநந்த தரிசனம், அநந்த வீரியம், அநந்த சுகம், ( 494 )

3093. முழங்குகட னெற்றிமுளைத் தெழுந்தசுடரேபோ
லழுங்கல்வினை யலறநிமிர்ந் தாங்குலக மூன்றும்
விழுங்கியுமி ழாதுகுணம் வித்தியிருந் தோய்நின்
னிழுங்கில்குணச் சேவடிக ளேத்தித்தொழ தும்யாம்.

பொருள் : முழங்கு கடல் நெற்றி முளைத்து - முழக்குங் கடலின் உச்சியிலே தோன்றி; எழுந்த சுடரே போல் - எழுந்த ஞாயிரே போல; அழுங்கல் வினை அலர நிமிர்ந்து - இரக்கத்தைத் தரும் தீவினை கெட நிமிர்ந்து; ஆங்கு உலகம் மூன்றும் விழுங்கி-அவ்விடத்து உலகம் மூன்றினையும் உணர்ந்து; உமிழாது குணம் வித்தியிருந்தோய்! - பின்னர் அந்நிலை நீங்காமற் குணத்தை வித்தியிருந்தவனே !; நின் இழுங்கு இல் குணச் சேவடிகள் ஏத்தி யாம் தொழுதும் - நின்னுடைய குற்றமில்லாத பண்புறு சேவடிகளை வாழ்த்தி யாம் தொழுவோம்.

விளக்கம் : சுடர் - ஞாயிறு, அழுங்கல் - இரக்கம், இழுங்கு - இழுக்கென்பதன் விகாரம். இழுங்கு - நீங்குதலுமாம். ( 495 )

3094. ஏத்தரிய பல்குணங்கட் கெல்லைவரம் பாகி
நீத்தவரு ளிந்திரனை நின்று தொழு தமரர்
நாத்தழும்ப வேத்தித்தவ நங்கையவர் நண்ணித்
தோத்திரங்க ளோதித்துகண் மாசுதுணிக் கின்றார்.

பொருள் : ஏத்த அரிய பல் குணங்கட்கு எல்லை வரம்பு ஆகி - புகழ்தற்கு அரிய பல பண்புகட்குக் சிறுவரம்பின்றிப் பெருவரம்பு ஆகி; நீத்த அருள் இந்திரனை அமரர் தொழுது - பெருக்கத்தையுடைய அருளாளனாகிய இந்திரனை இவ்வாறு வானவர் தொழுது; நாத்தழும்ப ஏத்தி - நாத் தடிப்ப வாழ்த்துகையினாலே; தவ நங்கையவர் நண்ணி-தவம்புரிந்த அரசியராய்த் துறந்தவர்களும் அடைந்து; தோத்திரங்கள் ஓதித் துகள் மாசு துணிக்கின்றார் - வாழ்த்துக்களைக் கூறித் தம் குற்றமாகிய அழுக்கைப் போக்குகின்றார்.

விளக்கம் : எல்லைவரம்பு - முடிந்த எல்லை என்றவாறு. நீத்தஅருள் - பெருக்கத்தையுடைய அருள். நீத்தம் - பெருக்கம், இந்திரன் என்றது சீவகனை, முனீந்திரன் என்றவாறு. துகண்மாசு : இருபெயரொட்டு, ஏத்தி - ஏத்துகையினாலே; இது பிறவினை கொண்டது.
( 496 )

வேறு

3095. செய்தவ னேவினை சேரு மதற்கெனு
மையமின் றாயலர் தாமரை மேலடி
மொய்ம்மலர் தூய்முனி யாது வணங்குது
மெய்யுல கிற்கு விளம்பிய வேந்தே.

பொருள் : மெய் உலகிற்கு விளிம்பிய வேந்தே! - உண்மையை உலகிற்குக் கூறிய அரசனே!; செய்தவனே வினைசேரும் அதற்கு எனும் ஐயம் இன்றாய் - வினையைச் செய்தவனே அதனை அடைவான் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லாமல்; அலர் தாமரை மேல் அடி - மலர்ந்த தாமரையின்மேற் சென்ற அடியை; மொய்ம்மலர் தூய் முனியாது வணங்குதும் - மிகுதியான மலர்களைத் தூவி வெறுப்பின்றி வணங்குவோம்.

விளக்கம் : வினை செய்தவனே அவ் வினையை எய்தும் என்னும் அதற்கு என்றவாறு. எனும் - சிறிதும், தூய் - தூவி, முனியாது - வெறாதே. வணங்குதும் - வணங்குவேம், மெய் : ஆகுபெயர்; மெய்ப்பொருள் என்க. ( 497 )

3096. நல்லன வேயென நாடி யோர்புடை
யல்லன வேயறை கின்றபுன் னாதர்கள்
பல்வினைக் கும்முலைத் தாய்பயந் தாரவர்
சொல்லுவ நீசுக தாவுரை யாயே.

பொருள் : சுகதா! - நலந்தருவோனோ! ; நல்லனவே என நாடி - நல்ல பொருள்களே என்று ஆராய்ந்து ; ஓர்புடை அல்லனவே அறைகின்ற புன் ஆதர்கள் - ஒரு கூற்றிலே தீயனவாகிய பொருள்களையே சாற்றுகின்ற புல்லறிவினையுடைய பரசமயிகள், பல்வினைக்கும் முலைத்தாய் பய்ந்தார் - பல்வினைகளையும் வளர்த்தற்குச் செவிலித்தாயை உண்டாக்கிவிட்டார்; அவர் சொல்லுவ நீ உரையாய் - அவர் கூறுவனவற்றை நீ கூறாய்!

விளக்கம் : செவிலியைப் பயந்தாரென்றார் அவர் கூறிய ஆகமங்களிலே இருவினை கெடுக்குமாறு கூறிற்றிலரென்று கருதி. ( 498 )

3097. மதியறி யாக்குணத் தோனடி வாழ்த்தி
நிதியறை போனிறைந் தார்நிக ரில்லாத்
துதியறை யாத்தொழு தார்மலர் சிந்தா
விதியறி யும்படி வீரனை மாதோ.

பொருள் : நிதி அறைபோல் நிறைந்தார் - செல்வக் கருவூலம் போலக் கேள்வியயாற் பரமாகமங்கள் நிறைந்த தேயிர்; மதியறியாக் குணத்தோன் அடி வாழ்த்தி - மதிஞானத்தால் அறிய ஒண்ணாத பண்பினோன் அடியை வாழ்த்தி; நிகர் இல்லாத் துதி அறையா - ஒப்பற்ற வாழ்த்துக் கூறி; மலர்சிந்தா - மலரைத் தூவி; விதி அறியும்படி - இருவினையை அறிய வேண்டி; வீரனைத் தொழுதார் - அவ் வீரனை வணங்கினர்.

விளக்கம் : மதி - அறிவு, நிதியறை - கருவூலம், அறையா, சிந்தா, என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். துதி - வாழ்த்து. மாது, ஓ : அசைகள். ( 499 )

வேறு

3098. தீவினைக் குழவி செற்ற
மெனும்பெயர்ச் செவிலி கையுள்
வீவினை யின்றிக் காம
முலையுண்டு வளர்ந்து வீங்கித்
தாவினை யின்றி வெந்நோய்க்
கதிகளுட் டவழு மென்ற
கோவினை யன்றி யெந்நாக்
கோதையர்க் கூற லுண்டே

பொருள் : தீவினைக் குழவி - தீவினையாகிய குழவி; செற்றம் எனும் பெயர்ச் செவிலி கையுள் - செற்றம் என்கிற செவிலியின் கையிலேயிருந்து; வீவினை இன்றி - கெடுந்தொழில் இன்றி; காமம் முலை உண்டு வீங்கி வளர்ந்து; காமமாகிய முலையை உண்டு வீங்கி வளர்ந்து; தாவினை இன்றி - குதிக்கும் வினைகள் இன்றி; வெம்நோய்க் கதிகளுள் தவழும் என்ற - கொடிய நோய்க்கதிகளிலே தவழும் என்று கூறிய; கோவினை அன்றி - இத்தலைவனை அல்லாமல்; எம் நா கோதையர் கூறல் உண்டே? - எம்முடைய நாக்கள் குற்றமுடையவர்களைக் கொண்டாடுதல் இன்று.

விளக்கம் : வீவினையின்றி - ஒழிதல் இன்றி. தீவினையின் தன்மையை அவன் கூறக்கேட்ட தேவியர் இங்ஙனங் கூறினார். ( 500 )

3099. நல்வினைக் குழவி நன்னீர்த்
தயாவெனுஞ் செவிலி நாளும்
புல்லிக்கொண் டெடுப்பப் பொம்மென்
மணிமுலை கவர்ந்து வீங்கிச்
செல்லுமாற் றேவர் கோவா
யெனுமிருள் கழிந்த சொல்லா
வல்லிமே னடந்த கோவே
யச்சத்து ணீங்கி னோமே.

பொருள் : நல்வினைக் குழவி - நல்வினையாகிய குழவி; நல் நீர்த் தயா எனும் செவிலி; நல்ல தன்மையை உடைய அருளென்னுஞ் செவிலி; நாளும் புல்லிக் கொண்டு எடுப்ப - நாடோறும் தழுவியெடுப்ப; பொம்மென் மணிமுலை கவர்ந்து வீங்கி - பருத்த மெல்லிய அழகிய முலையை யுண்டு வீங்கி; தேவர் கோவாய்ச் செல்லும் - வானவர் வேந்தாய்ச் செல்லும்; எனும் இருள் கழிந்த சொல்லால் - என்று கூறிய மயக்கம் நீங்கிய மொழியாலே; அல்லிமேல் நடந்த கோவே!- தாமரை அகவிதழ்மேல் நடந்த கோவே!; அச்சத்துள் நீங்கினோம்- அச்சத்தினின்றும் நீக்கினோம்.

விளக்கம் : நல்வினையின் தன்மையை அவன் கூறக்கேட்ட தேவியர் இங்ஙனம் கூறினார். இச் செய்யுளிரண்டும் கொண்டு கூற்று.
( 501 )

வேறு

3100. மணியினுக் கொளியக மலர்க்கு மல்கிய
வணியமை யங்குளிர் வாச மல்லதூஉந்
திணியிமி லேற்றினுக் கொதுக்கஞ் செல்வநின்
னிணைமலர்ச் சேவடி கொடுத்த வென்பவே.

பொருள் : செல்வ! - செல்வனே!; மணியினுக்கு ஒளி - வீடுபெற்ற உயிருக்கு ஒளியையும்; அணி அமை அகமலர்க்கு மல்கிய அம் குளிர்வாசம் - அழகமைந்த எம் உள்ளத் தாமரைக்கு நிறைந்த குளிர்ந்த மணத்தையும்; அல்லதூஉம் - அதுவல்லாமலும்; திணி இமில் ஏற்றினுக்கு ஒதுக்கம் - திணிந்த இமிலுடைய ஏறாகிய அறத்தினுக்கு இருப்பிடத்தையும்; நின் இணைமலர்ச் சேவடி கொடுத்த - நின் இரண்டு மலரனைய சேவடிகள் கொடுத்தன; என்ப - என்று புகழா நிற்பர்.

விளக்கம் : மணியென்றது, மணியுயிரை; அது வீடுபெற்ற வுயிராம். அகமலர் என்றது தங்களுடைய நெஞ்சத்தாமரைகளை, இமில் என்றது அறத்தினை; அதன் வடிவம் அஃதாகலான். இதுவும் அரசியற் கூற்று. ( 502 )

(பரிநிர்வாணம்)

3101. இகலிருண் முழுமுத றுமிய வீண்டுநீர்ப்
பகல்சுமந் தெழுதரும் பருதி யன்னநின்
னிகலிரு மரைமல ரளித்த சேவடி
தொகலருங் கருவினை துணிக்கு மெஃகமே.

பொருள் : இகல் இருள் முழுமுதல் துமிய - தன்னொடு மாறுபடும் இருளாகிய பெரிய வடிவு துமியும்படி; ஈண்டு நீர்ப்பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின் - மிகுநீராகிய கடலிலே ஒளியைச் சுமந்து எழுகின்ற ஞாயிறு போன்ற நின்னுடைய; இகல் இருமரை மலர் அளித்த சேவடி - (இருவினையுடன்) மாறுபட்ட இரண்டு தாமரை மலரை அருளிய சேவடிகள்; தொகல் அருங் கருவினை துணிக்கும் எஃகம் - தொக்க அரிய தீவினையை அறுக்கும் வாள் ஆகும்.

விளக்கம் : இச் செய்யுளும் தேவியர் கூற்று. இகல் - மாறுபாடு. முழுமுதல் - பெரிய வடிவு. துமிய - கெட. பகல் - ஒளி, பருதி - ஞாயிறு, மரைமலர் - தாமரைமலர். இகல் அடி என இயைத்து இருவினையோடு இகலும் அடி என்க. கருவினை - தீவினை. ( 503 )

வேறு

3102. மீன்றயங்கு திங்கண் முகநெடுங்கண் மெல்லியலார்
தேன்றயங்கு செந்நாவிற் சின்மென் கிளிக்கிளவி
வான்றயங்கு வாமன் குணம்பாட வாழியரோ
கான்றயங்கி நில்லா கருவினைகாற் பெய்தனவே.

பொருள் : மீன் தயங்கு திங்கள் முகம் நெடுங்கண் மெல் இயலார் - மீன் திரளிடையே விளங்கும் திங்கள் போலும் முகமும் நீண்ட கண்களுமுடைய அரசியர்; தேன் தயங்கு செம் நாவின் சின்மென் கிளிக்கிளவி - இனிமை விளங்கும் நல்ல நாவினின்று வரும் சில மெல்லிய கிளிமொழி போலும் மொழியாலே; வான் தயங்கு வாமன் குணம் பாட - வானத்தின்கண்ணே விளங்கா நின்ற வாமனுடைய குணத்தைப் பாட; கருவினை தயங்கி நில்லா கான்கால் பெய்தன - அவர்களின் தீவினைகள் அசைந்து நில்லா வாய்க் காட்டின்கண்ணே ஓடின.

விளக்கம் : மெல்லியலார் என்றது காந்தருவதத்தை முதலியவரை. மீன் தயங்கு திங்கள் என்றது வாளா உவமையடை மாத்திரை. வான் ; ஆகுபெயர்; வானவர். கான் - காடு, கால்பெய்தல் - ஓடுதல், வானிலுள்ளாரும் அசையும் வாமன் குணம் என்பர் நச்சினார்க்கினியர். ( 504 )

வேறு

3103. மதியம்பொழி தீங்கதிர்கள் பருகிமல ராம்பல்
பொதியவிழ்ந்து தேன்றுளிப்ப போன்றுபொரு வில்லார்
விதியிற்களித் தாரறிவன் விழுக்குணங்க ளேத்தித்
துதியிற்றெழு தார்துளங்கு முள்ளமது நீத்தார்.

பொருள் : மதியம் பொழி தீ கதிர்கள் பருகி - திங்கள் பொழியும் இனிய கதிர்களைப் பருகி; மலர் ஆம்பல் பொதி அவிழ்ந்து தேன்துளிப்ப போன்று -மலரும் ஆம்பல் மிக விரிந்து, தேன் துளித்தல்போல; பொரு இல்லார்-ஒப்பில்லாத அவ்வரசியர்; துளங்கும் உள்ளம் அது நீத்தார் - தீவினை கெடுதலின் கலங்கும் உள்ளத்தினின்றும் விலகினார்; விதியின் களித்தார்-அவன் கூற்றினைக் கேட்டுக் களித்தார்; அவன் விழுக்குணங்கள் ஏத்தித் துதியின் தொழுதார் - அறிவனின் சிறந்த பண்புகளைப் போற்றி வாழ்த்தித் தொழுதார்.

விளக்கம் : மதியம் - சீவகசாமிக்குவமை. தீங்கதிர்- அவன்மொழி கட்குவமை, ஆம்பல்-தேவியர்க்குவமை. அறிவன்; இறைவன், துளங்குமுள்ளம் - தீவினையால் துளங்கும் நெஞ்சம். ( 505 )

3104. ஆர்ந்தகுணச் செல்வனடித் தாமரைக ளேத்திச்
சேர்ந்துதவ வீரர்திசை சிலம்பத் துதியோதித்
தூர்ந்தவிரு டுணிக்குஞ்சுடர் தொழுதருளு கென்றார்
கூர்ந்தமிழ்த மாரியெனக் கொற்றவனுஞ் சொன்னான்.

பொருள் : ஆர்ந்த குணச் செல்வன் அடித் தாமரைகள் ஏத்தி - நிறைந்த குணச் செல்வனின் அடிகளாகிய தாமரை மலர்களை வாழ்த்தி; தவவீரர் சேர்ந்து - தவம் புரிந்த வீரர் யாவருங்கூடி; திசை சிலம்பத் துதி ஓதித் தொழுது - திசையெங்கும் முழுங்க வாழ்த்துக் கூறித் தொழுது; தூர்ந்த இருள் துணிக்கும் கூடர் அருளுக என்றார் - நெடுங்காலமாய்ச் செறிந்த இருளை அறுக்கும் சுடரை எமக்குக் கூறியருள்க என்றனர்; கொற்றவனும் அமிழ்த மாரி எனக் கூர்ந்து சொன்னான். அரசனும் அமிழ்த மழைபோல ஆராய்ந்து கூறினான்.

விளக்கம் : சுடர்: பரமாகமம். தொழுது சுடர் அருளுக என்றார் என மாறுக. அவன் சொன்னபடி மேற்கூறுகின்றார். ( 506 )

3105. இன்பமற் றென்னும் பேரா
னெழுந்தபுற் கற்றை தீற்றித்
துன்பத்தைச் சுரக்கு நான்கு
கதியெனுந் தொழுவிற் றோன்றி
நின்றபற் றார்வ நீக்கி
நிருமலன் பாதஞ் சேரி
னன்புவிற் றுண்டு போகிச்
சிவகதி யடைய லாமே.

பொருள் : இன்பம் என்னும் பேர் ஆன் - இன்பம் ஆகிய பெரிய பசு; நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி - நான்கு கதி என்கிற தொழுவிலே தோன்றி; எழுந்த புல் கற்றை தீற்றி-மனவெழுச்சி என்னும் புல்லாகிய கற்றையைத் தின்று; துன்பத்தைச் சுரக்கும் - துன்பமாகிய பாலைச் சுரக்கும்; நின்ற பற்று ஆர்வம் நீக்கி - அதனிடத்து நின்ற பற்றையும் ஆர்வத்தையும் நீக்கி ; நிருமலன் பாதம் சேரின் - தூயவன் திருவடிகளை அடைந்தால்; அன்பு விற்று உண்டு போகிச் சிவகதி அடையலாம் - அன்பைக் கொடுத்து அத் திருவடியை நினைத்துச் சென்று வீட்டுலகை அடையலாம்.

விளக்கம் : மற்று :அசை. இன்பம்: ஆகுபெயர்; அவா என்க. நான்குகதி - மக்கள் தேவர் நரகர் விலங்கு கதிகள். தீற்றி - ஊட்டப்பட்டு. பற்று -பெற்ற பொருள்மே னிகழ்வது; ஆர்வம் - பெறாதபொருள்மேனிகழுவது. நிருமலன் - இறைவன். அன்பு விற்று என்பது சிவகதிக்குப் பண்டமாற்றாகக் கொடுத்து என்றவாறு. சிவகதி-வீடுபேறு. ( 507 )

3106. வாட்கையம் மைந்த ராயும்
வனமுலை மகளி ராயும்
வேட்கையை மிகுத்து வித்திப்
பிறவிநோய் விளைத்து வீயாத்
தேட்கையிற் கொண்ட தொக்கு
நிச்சநோய்ச் செற்றப் புன்றோற்
பூட்கையை முனியின் வாமன்
பொன்னடி தொழுமி னென்றான்.

பொருள் : வேட்கையை மிகுத்து வித்தி - ஆசையைமிகுத்து விதைத்து ; வாள் கை அம் மைந்தராயும் - வாளைக் கையிலேந்திய அழகிய மைந்தராயும்; வனமுலை மகளிராயும்- அழகிய முலையை உடைய மகளிராயும்; பிறவி நோய் விளைத்து - பிறவிப் பிணியை விளைவித்து ; வீயா - கெடாமல்; தேள் கையில் கொண்டது ஒக்கும் - தேளைக் கையிலே பிடித்திருந்த தன்மையை ஒப்பதும்; நிச்சம் நோய் செற்றம் புன்தோல் - நாடோறும் (தாகமும் மோகமுமாகிய) நோயினையும் செற்றத்தினையும் உடையதும் ஆகிய புன் தோலாகிய; பூட்கையை முனியின் - மேற்கோளை வெறுத்தால்; வாமன் பொன் அடி தொழுமின் என்றான் - அருகனுடைய பொன்னடியை வணங்குமின் என்றான்.

விளக்கம் : பூட்கையையும் உடைய தோல் என்பர் நச்சினார்க்கினியர். வீயாதுஎன்பது வீயா என விகாரப்பட்டது ; ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். ( 508 )

3107. தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோன்
மன்னுயிர் வைகலு மோம்பி வாழுமே
லின்னுயிர்க் கிறைவனா யின்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயி ராய்ப்பிறந் துயர்ந்து போகுமே.

பொருள் : தன் உயிர் தான் பரிந்து ஓம்பும் ஆறுபோல் - தன் உயிரைத் தான் விரும்பிக் காப்பாற்றும் வகைபோல; வைகலும் மன் உயிர் ஓம்பி வாழுமேல் - நாடோறும் பிறவுயிரக் காத்து வாழ்வனெனின்; இன் உயிர்க்கு இறைவனாய் இன்பமூர்த்தியாய்ப் பொன் உயிராய் - இனிய உயிர்க்குத் தலைவனாய். இன்ப உருவினனாய்ப், பொன் உயிராய் ; பிறந்து உயர்ந்து போகும் - பிறந்து உயர்ந்து போவான்.

விளக்கம் : மன்னுயிர் - பிறவுயிர் வைகலும் - நாடோறும், இறைவன் - தலைவன், இன்பமூர்த்தி - இன்பமே வடிவமாயினோன். பொன்னுயிர் - அருகந்தாவத்தை என்பர் நச்சினார்க்கினியர். ( 509 )

3108. நெருப்புயிர்க் காக்கிநோய் செய்யி னிச்சமும்
முருப்புயி ரிருவினை யுதைப்ப வீழ்ந்தபின்
புரிப்புரிக் கொண்டுபோய்ப் பொரிந்து சுட்டிட
விருப்புயி ராகிவெந் தெரியுள் வீழுமே.

பொருள் : உயிர்க்கு நெருப்பு ஆக்கி நோய் செய்யின் - உயிர்களுக்கு வெம்மையுண்டாக்கி நோய் செய்தால்; நிச்சமும் உருப்பு உயிர் இருவினை உதைப்ப - நாடோறும் வெப்பத்தை உயிர்க்கின்ற அப் பெரிய தீவினை தள்ளுவதால்; வீழ்ந்த பின் - நோயிடத்தே வீழ்ந்த பிறகு; புரிப்புரிக் கொண்டுபோய்ப் பொதிந்து சுட்டிட - அந்நோய் புரியாற் புரிமேற் கட்டி இறுகப் பொதிந்து சுட; இரும்பு உயிராகி வெந்து எரியுள் வீழும் - தீவினை தோய்ந்த உயிராய்ப் போய்வெந்து நரகத்துக்குள்ளே வீழும்.

விளக்கம் : உயிர்க்கு நெருப்பு ஆக்கி என மாறுக. நெருப்பு : ஆகுபெயர். உருப்பு - வெப்பம். உருப்பை உயிர்க்கின்ற இருவினை என்க. இரும்புயிர் - தீவினை தோய்ந்த வுயிர். எரி - நரகம். ( 510 )

3109. மழைக்குர லுருமுவா வோத மாக்கடற்
பிழைத்ததோ ரருமணி பெற்ற தொக்குமாற்
குழைத்தலைப் பிண்டியான் குளிர்கொ ணல்லறந்
தழைத்தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்ததே.

பொருள் : குழைத்தலைப் பிண்டியான் குளிர்கொள் நல்லறம் - தளிரையுடைய பிண்டி நீழலானின் குளிர்ந்த நல்லறத்தை; தழைத்தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்தது - தழைதலையுடைய சந்தனப் பொதும்பரிலே சார்ந்தது; உருமுக்குரல் மழை உவா ஓதம் மாக்கடல் - இடியாகிய குரலையுடைய மழை பெய்கின்ற நிறை உவா நாளிலே உள்ள குளிர்ந்த பெரிய கடலிலே; பிழைத்தது ஓர் அருமணி பெற்றது ஒக்கும் - தப்பியதான ஓர் அரிய மணியைப் பெற்றதைப்போலும்.

விளக்கம் : நிறை உவா நாளிற் கடல் கொந்தளிக்கும். உருமுக் குரலையுடைய மழைபெய்கின்ற உவாநாளின்கண் கடலிலே என்றவாறு. உவாநாளிற் கடல் கொந்தளிக்குமாதலின் இங்ஙனம் கூறினார். இச் சந்தனப் பொதும்பரிலே பிண்டியானுடைய அறத்தைச் சார்ந்தது கடலிலே வீழ்ந்த மணியைப் பெற்றதொக்கும் என்க. ( 511 )

3110. மல்குபூங் கற்பக மரத்தி னீழலா
னல்குவா னொருவனை நயந்து நாடுமோ
பில்குபூம் பிண்டியா னமிர்துண் டார்பிறர்
செல்வங் கண்டதற் கவாச்சிந்தை செய்யுமோ.

பொருள் : மல்கு பூங்கற்பக மரத்தின் நீழலான் - வளம் நிறைந்த அழகிய கற்பக மாத்தின் நிழலில் இருப்பவன்; நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ? - கொடையாளி ஒருவனை விரும்பி நாடுவானோ?; (அதுபோல) பில்குபூம் பிண்டியான் அமிர்து உண்டார் சிந்தை - தேன் துளிக்கும் பூம் பிண்டியான் அறத்தைக் கேட்டவர் சிந்தை; பிறர் செல்வம் கண்டு அதற்கு அவாச் செய்யுமோ? - மற்றவர்கள் செல்வத்தைக்கண்டு அதற்கு விருப்பங் கொள்ளுமோ?

விளக்கம் : எடுத்துக்காட்டுவமை அணி. நீழலான் - நீழலில் தங்குவான். உண்டார் சிந்தை என ஒட்டுக. அவாச் செய்யுமோ என ஒட்டுக. ( 512 )

3111. மணியுயிர் பொன்னுயிர் மாண்ட வெள்ளியி
னணியுயிர் செம்புயி ரிரும்பு போலவாம்
பிணியுயி ரிறுதியாப் பேசி னேனினித்
துணிமின மெனத்தொழு திறைஞ்சி வாழ்த்தினார்.

பொருள் : மணி உயிர் - வீடுபெற்ற உயிரும்; பொன் உயிர் - வானவர் உயிரும்; அணி வெள்ளியின் உயிர் - அழகிய மக்களுயிர்; செம்பு உயிர் - மக்களிற் கீழாயினோர் உயிரும்; விலங்கின் உயிரும்; இரும்புபோல ஆம் பிணி உயிர் - நரகளுயிரும்; இறுதிஆப் பேசினேன் - என முடிவாகக் கூறினேன்; இனித் துணிமின் என - இனி அவற்றைத் துணிவீராக என்று; இறைஞ்சித் தொழுது வாழ்த்தினார் - (அதுகேட்ட அவரும்) முடி வணங்கித் தொழுது ஏத்தினார்.

விளக்கம் : மணியுயிர் - வீடுபெற்றவுயிர். பொன்னுயிர் - தேவருயிர். வெள்ளியுயிர் - மக்களுயிர். செம்புயிர் - மக்களிற் கீழாயினாருயிரும், விலங்குயிரும். இரும்புபோலவாம்பிணியுயிர் - நரகருயிர். ( 513 )

3112. விண்ணின்மேன் மலர்மழை பொழிய வீங்குபாற்
றெண்ணிலாத் திருமதி சொரியத் தேமலர்
மண்ணின்மேன் மழகதிர் நடப்ப தொத்ததே
யண்ணலா ருலாய்நிமிர்ந் தளித்த வண்ணமே.

பொருள் : அண்ணலார் உலாய் நிமிர்ந்து அளித்த வண்ணம் - அத்தலைவனார் அருளின்கண் மிகுந்து உலவி உலகுயிரை அருளிய தன்மை; விண்ணின்மேல் மலர்மழை பொழிய வானிலிருந்து பூமழை சொரிய; வீங்கு பால் தெள் நிலாத் திருமதி சொரிய - மிகுதியான பால்போன்ற தெள்ளிய நிலவை அழகிய திங்கள் பொழிய; தேம் அலர் மண்ணின்மேல் - திசைகளிற் பரவிய மண்ணின்மேல்; மழ கதிர் நடப்பது ஒத்தது - இளஞாயிறு திரியும் தன்மையை ஒத்தது.

விளக்கம் : பொழியச் சொரியத் திரிவதொரு ஞாயிறு : இல்பொருளுவமை. மதி - குடை. இளஞாயிறு இருளைக்கெடுத்து உலகை அளித்தாற்போல, இவனும் மக்களின் மனத்திருளைக் கெடுத்து அறக்கதிரைப் பரப்புகின்றான் என்பதாம். ( 514 )

வேறு

3113. பான்மிடை யமிர்து போன்று
பருகலாம் பயத்த வாகி
வானிடை முழக்கிற் கூறி
வாலற வமிர்த மூட்டித்
தேனுடை மலர்கள் சிந்தித்
திசைதொழச் சென்ற பின்னாட்
டானுடை யுலகங் கொள்ளச்
சாமிநாள் சார்ந்த தன்றே.

பொருள் : பால் மிடை அமிர்து போன்று - கூறுபாடு நெருங்கின அமிர்தம் போன்று; பருகலாம் பயத்த ஆகி - பருகுமியல்பினவாகி; வானிடை முழக்கின் கூறி - வானில் இடிபோலக் கூறி; வால் அற அமிழ்தம் ஊட்டி - தூய அறமாகிய அமிழ்தை உண்பித்து; திசை தேன் உடை மலர்கள் சிந்தித் தொழச் சென்ற பின் நாள் - திசையெங்கும் தேனுடைய மலர்களைச் சிதறித் தொழப் போன பிறகு; தான் உடை உலகம் கொள்ள - (தவத்தாலே) தனக்குரிமையாகிய வீட்டை அடைய; சாமி நாள் சார்ந்தது - சீவகசாமியின் நாள் சேர்ந்தது.

விளக்கம் : என்றது வீடுபெறக் கற்பித்த காலம் வந்தது என்றவாறு. பால் - கூறுபாடு. கூறுபாடு நெருங்கின அமிர்து என்றது கேட்போர் உணர்விற்கும் அவர் நிற்கின்ற நிலைக்குமேற்பக் கூறுபாடுடைய அறங்கள் என்றற்கு. வாலிதாய் எல்லாரும் அறியப்படுகின்ற அறம் என்க. தானுடையுலகம் - தான் முன்பு செய்த தவத்தாலே தனதாகிய வீடு என்க. ( 515 )

3114. உழவித்தி யுறுதி கொள்வார்
கொண்டுய்யப் போகல் வேண்டித்
தொழுவித்தி யறத்தை வைத்துத்
துளங்கிமி லேறு சேர்ந்த
குழவித்தண் டிங்க ளன்ன
விருக்கைய னாகிக் கோமான்
விழவித்தாய் வீடு பெற்றான்
விளங்கிநால் வினையும் வென்றே.

பொருள் : உழவு வித்தி உறுதி கொள்வார் - உழவுத் தொழிலைப் பரப்பி அதன் பயனைக் கொள்ள வல்லார்; கொண்டு உய்யப் போகல் வேண்டி - கொண்டு பிறவியைத் தப்பிப்போகலைத் தான் விரும்பு; தொழு வித்தி அறத்தை வைத்து - சமவ சரணத்தே அறத்தை உண்டாக்கி வைத்து; துளங்கு இமில் ஏறு சேர்ந்த தண் குழவித் திங்கள் அன்ன இருக்கையன் ஆகி - அசையும் இமிலையுடைய விடையோரைச் சேர்ந்த தண்ணிய பிறைத் திங்கள்போன்ற பல்லியங்காசனத்தை யுடையவனாய்; விளங்கி விழவித்தாய் நால்வினையும் வென்று கோமான் வீடு பெற்றான் - விளங்கி விழவுக்குக் காரணமாய் நால்வினையையும் வெற்றி கொண்டு சீவகன் வீடுபெற்றான்.

விளக்கம் : உழவு - வழிபாடு. ஏறு சேர்ந்த திங்கள் - இடப ஓரையைச்சேர்ந்த திங்கள் : வைகாசி. வைகாசிப் பிறைபோன்ற இருக்கை என்க. நால்வினை : பின்பு நின்ற வேத நீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம் என இவை. ( 516 )

3115. துந்துபி கறங்க வார்த்துத்
துகிற்கொடி நுடங்க வேந்தி
யந்தரம் விளங்க வெங்கு
மணிகமூர்ந் தமர ரீண்டி
வந்துபொன் மாரி சிந்தி
மலர்மழை சொரிந்து சாந்துங்
கெந்தநா றகிலுங் கூட்டிக்
கிளர்முடி யுறுத்தி னாரே.

பொருள் : துந்துபி கறங்க - வாச்சியம் ஒலிக்க; ஆர்த்துத் துகிற்கொடி நுடங்க ஏந்தி - ஆரவாரத்துடன் துகிற்கொடியை அசைய எடுத்து; அந்தரம் எங்கும் விளங்க - வானம் எங்கும் விளக்கம் உற; எங்கும் அமரர் அணிகம் ஊர்ந்து ஈண்டி வந்து - எவ்விடத்தும் வானவர் தம் ஊர்தியில் ஏறிக் குழுமி வந்து; பொன்மாரி சிந்தி - பொன்மழை பொழிந்து; மலர் மழை சொரிந்து - பூமாரி பெய்து; சாந்தும் கெந்தம் நாறு அகிலும் கூட்டி - சந்தனத்தையும் மணங்கமழும் அகிற்புகையையுஞ் சேர்த்து; கிளர்முடி உறுத்தினார் - விளங்கும் முடியை வைத்து வணங்கினார்.

விளக்கம் : நுடங்க - அசைய. அணிகம் - ஊர்திகள். கெந்தம் - நறுமணம். அகில் : ஆகுபெயர். கிளர்முடி : வினைத்தொகை. (517)

3116. முளைத்தெழு பருதி மொய்கொண்
முழங்கழற் குளித்த தேபோற்
றிளைத்தெழு கொடிகள் செந்தீத்
திருமணி யுடம்பு நுங்க
விளைத்தபின் விண்ணு மண்ணு
மங்கலம் வகையிற் செய்து
வளைப்பொலி கடலி னார்த்து
வலங்கொண்டு நடந்த வன்றே.

பொருள் : முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததேபோல் - (கீழ்த்திசையிலே) தோன்றி எழுகின்ற ஞாயிறு மிகுதியான நெருப்பிலே முழுகினாற்போல; திளைத்து எழு செந்தீக் கொடிகள் - பயின்று எழு செந்தீயின் கொடிகள்; திருமணி உடம்பு நுங்க - அழகிய மாணிக்கம் போன்ற உடம்பை விழுங்க; விளைத்த பின் - அதனை முடித்த பிறகு; விண்ணும் மண்ணும் மங்கலம் வகையின் செய்து - வானவரும் மண்ணவரும் முத்தி என்னும் திருமணத்தை முறைப்படி யியற்றி; வளைப்பொலி கடலின் ஆர்த்து - சங்கினால் விளக்கமுற்ற கடலைப்போல ஆரவாரித்து; வலம் கொண்டு நடந்த - வலஞ்செய்து போயினார்.

விளக்கம் : கர்ப்பாவதரணம், ஜன்மாபிஷேகம், பரிநிஷ்கிரமணம், கேவல ஞானம், பரிநிர்வாணம் என்னும் ஐந்து மங்கலங்களுள் பரிநிர்வாணம் என்னும் முத்தி ஒன்றாகும். ( 518 )

3117. கேவல மடந்தை யென்னுங்
கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப்
பொன்னொரு பாக மாகக்
காவலன் றானொர் கூறாக்
கண்ணிமை யாது புல்லி
மூவுல குச்சி யின்பக்
கடலினுண் மூழ்கி னானே.

பொருள் : கேழ் கிளர் நெடிய வாள் கண் - ஒளி விளங்கும் நீண்ட வாளனைய கண்களையும்; பூ அலர் முல்லைக் கண்ணி - மலராக அலர்ந்த முல்லைக் கண்ணியையும் உடைய; கேவல மடந்தை என்னும் பொன் ஒரு பாகம் ஆக - கேவல ஞானமென்னும் திருமகள் ஒரு பங்கிலாக; காவலன் தான் ஓர் கூறுஆ - சீவக மன்னன் தான் ஒரு பங்கிலாக; கண் இமைய்ர்து புல்லி - கண் இமைக்காமல் நோக்கித் தழுவி; முவுலகு உச்சி இன்பக் கடலினுள் மூழ்கினான் - மூவுலகின் உச்சியிலேயிருந்து இன்பக் கடலிலே அழுந்தினான்.

விளக்கம் : கேவல மடந்தை என்றது கேவல ஞானத்தை. கேழ் - நிறம். பொன் திருமகள்; ஈண்டுக் கேவல மடந்தைக்கு உவமவாகு பெயர். கற்புடைமைக்கு முல்லைக் கண்ணி கூறப்பட்டது. பின் எஞ்ஞன்றும் அகலாமை ஈண்டு கேவலமடந்தைக்குக் கற்பென்க. காவலன் : சீவகன். ( 519 )

3118. பிரிதலும் பிணியு மூப்புஞ்
சாதலும் பிறப்பு மில்லா
வரிவையைப் புல்லி யம்பொ
னணிகிளர் மாடத் தின்றேன்
சொரிமது மாலை சாந்தங்
குங்குமஞ் சுண்ணந் தேம்பாய்
விரிபுகை விளக்கு விண்ணோ
ரேந்தமற் றுறையு மன்றே.

பொருள் : அம் பொன் அணி கிளர் மாடத்து - அழகிய பொன்னணி விளங்கும் மாடத்திலே; இன் தேன் சொரி மது மாலை - இனிய தேனைச் சொரியும் மலர் மாலையும்; சாந்தம் - சந்தனமும்; குங்குமம் - குங்குமமும்; சுண்ணம் - சுண்ணப்பொடியும்; தேன்பாய் விரிபுகை - தேன் கலந்த மிகுநறும் புகையும்; விளக்கு - விளக்கும்; விண்ணோர் ஏந்த - வானவர் ஏந்தி நிற்க; பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா அரிவையைப் புல்லி - பிரிவு பிணி முதுமை சாவு பிறப்பு என்பவை இல்லாத சேவல மடந்தையைத் தழுவி; உறையும் - வாழ்வான்.

விளக்கம் : அரிவை - கேவல மடந்தை (வீடு.) புல்லி - தழுவி. சீவகன் பொன்மாடத்தே விண்ணோர் மாலை முதலியவற்றை ஏந்த அரிவையைப் புல்லி உறையும் என்க. ( 520 )

தேவிமார் நோற்றுயர்வு

3119. வல்லவன் வடித்த வேல்போன்
மலர்ந்துநீண் டகன்ற வாட்கண்
மெல்லவே யுறவி யோம்பி
யொதுங்கியு மிருந்து நின்று
முல்லையஞ் சூட்டு வேயின்
முரிந்துபோ நுசுப்பி னல்லார்
மல்லற்குன் றேந்தி யன்ன
மாதவ முற்றி னாரே.

பொருள் : வல்லவன் வடித்த வேல்போல் மலர்ந்து நீண்டு அகன்ற வாள் கண் - தொழில் வல்ல கம்மியன் வடித்த வேல் பேல மலர்ந்து நீண்டு பரந்த ஒள்ளிய கண்களானே; உறவி ஓம்பி - எறும்பிற்கும் துன்பம் இன்றிக் காப்பாற்றி; மெல்ல ஒதுங்கியும் இருந்தும் நின்றும் - மெல்லென நடந்தும் இருந்தும் நின்றும்; மல்லல் குன்று ஏந்தி அன்ன மாதவம் - வளவிய குன்றை ஏந்தினாற்போன்ற மாதவத்தை; முல்லை அம் சூட்டு வேயின் முரிந்துபோம் நுசுப்பின் நல்லார் - முல்லையங் கண்ணியை வேய்ந்தாலும் முரிந்துபோகக் கூடிய இடையையுடைய அம்மங்கையர்; முற்றினார் - செய்து முடித்தனர்.

விளக்கம் : வல்லவன் - தொழில் வல்ல கம்மியன் என்க. நல்லார் கண்ணாலே உறவி முதலியவற்றையும் விழிப்புடன் பாதுகாத்து ஒதுங்கல் முதலியவற்றைச் செய்து தவமுற்றினார் என்க. உறவி - எறும்பு. தாங்கற்கரிதாகலின் தவத்திற்கு மல்லற் குன்றினை உவமித்தார்.( 521 )

வேறு

3120. சூழ்பொற் பாவையைச் சூழ்ந்து புல்லிய
காழகப் பச்சை போன்று கண்டெறூஉ
மாழை நோக்கினார் மேனி மாசுகொண்
டேழைப் பெண்பிறப் பிடியச் சிந்தித்தார்.

பொருள் : சூழ்பொன் பாவையைச் சூழ்ந்து புல்லிய - நன்றென்று சூழ்ந்த பொற்பாவையைச் சூழ்ந்து தழுவிய; காழகப் பச்சைபோன்று - கருஞ்சேற்றையுடைய தோல்போல; கண்தெறூஉம் மேனி - முன்னர் நோக்கினார் கண்களைச் சுடும் தம்மேனியெல்லாம்; மாசு கொண்டு ஏழைப் பெண் பிறப்பு இடிய - அழுக்குப் படிந்து, எளிய பெண் பிறப்புக் கெடும்படி; மாழை நோக்கினார் சிந்தித்தார் - இளமை பொருந்திய பார்வையினர் எண்ணினர்.

விளக்கம் : மாழை - இளமை. பச்சை - தோல். சூழ்பொன் : வினைத்தொகை. முன்பு கண் தெறூஉம் மேனியில் இப்பொழுது மாசுகொண்டு சிந்தித்தார் என்க. பேதைமை மிக்க பிறப்பு என்பதுபற்றி ஏழைப் பெண் பிறப்பு என்று தேவர் இரங்கிக் கூறினார் என்க. சிந்தித்தல் - சுக்கிலத்தியானஞ் செய்தல்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்பது அறிவு (குறள் - 358)

என்பதுமிது. ( 522 )

3121. ஆசை யார்வமோ டைய மின்றியே
யோசை போயுல குண்ண நோற்றிபி
னேசு பெண்ணொழித் திந்தி ரர்களாய்த்
தூய ஞானமாய்த் துறக்க மெய்தினார்.

பொருள் : ஆசை ஆர்வமொடு ஐயம் இன்றி - ஆசையும் பற்றும் ஐயமும் இன்றி; ஓசை போய் உலகுண்ண நோற்றபின் - புகழ்சென்று வானுலகுள்ளவற்றை நுகர நோற்ற பிறகு; ஏசு பெண் ஒழித்து இந்திரர்களாய் - பொல்லாததென்னும் பெண் பிறப்பைக் கைவிட்டு இந்திரர்களாய்; தூயஞானமாய்த் துறக்கம் எய்தினார் - தூயஞானத்தைப் பெற்றுத் துறக்கத்தை அடைந்தனர்.

விளக்கம் : ஆர்வம் - இரதி - கன்மம். ஐயம் இன்றி என்றது, தரிசன விசுத்தியைக் கூறிற்று. ( 523 )

3122. காம வல்லிகள் கலந்து புல்லிய
பூமென் கற்பகப் பொன்ம ரங்கள்போற்
றாம வார்குழற் றைய லார்முலை
யேம மாகிய வின்ப மெய்தினார்.

பொருள் : காம வல்லிகள் கலந்து புல்லிய - காம வல்லிகள் கூடித் தழுவிய; பூ மென் கற்பகப் பொன்மரங்கள்போல் - அழகிய அழகிய மெல்லிய பொன் மயமான கற்பக மரங்கள் போல; தாமவார்குழல் தையலார்முலை ஏம மாகிய இன்பம் எய்தினார் - ஒளியுறும் நீண்ட குழலையுடைய வான் மங்கையரின் முலையைத் தழுவும் காவலாகிய இன்பத்தை அடைந்தனர்.

விளக்கம் : காமவல்லி - கற்பத்தின் மிசைப் படர்வதொரு பொன் பூங்கொடி : இது தெய்வ மகளிர்க்குவமை. கற்பகம் - இந்திரர் ஆயவர்க்குவமை. ஏவம் - காவல். இங்ஙனம் முயங்கித் தாம் எய்திய செல்வத்தை வியந்து கூறுதலின், அஃது ஊடலையும் புலவியையும் விளைத்ததென்பர் மேல் என்பது நச்சினார்க்கினியர் குறிப்பு. ( 524 )

3123. கலவி யாகிய காமத் தின்பயன்
புலவி யாதலாற் பொன்னங் கொம்பனா
ருலவு கண்மல ரூடற் செவ்விநோக்
கிலைகொள் பூணினா ரிதயம் போழ்ந்ததே.

பொருள் : கலவி ஆகிய காமத்தின் பயன் - கலவியால் உண்டாகிய காமத்தின் பயன்; புலவி ஆதலால் - புலவியே ஆகையால்; பொன் அம் கொம்பனார் - பொற் கொம்பு போன்ற அவர்கள்; உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு - உலாவுகின்ற கண் மலர்களால் ஊடிப் பார்த்ததொரு தகுதியான நோக்கம்; இலைகொள் பூணினார் இதயம் போழ்ந்தது - இலை வடிவப் பூணினாரின் உள்ளத்தைப் பிளந்தது.

விளக்கம் : உணலினும் உண்ட தறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது (குறள் - 1326)

என்பதுபற்றிக் கலவியாகிய காமத்தின்பயன் புலவி என்றார். கலவி - புணர்தல். புலவி - ஊடுதல். ( 525 )

3124. பூவி னுள்ளவள் புகுந்து முள்ளத்தா
ணாவிற் பெண்பெயர் நிவிற்றி னீரெனக்
காவிக் கண்கடை யிடுகக் காற்சிலம்
பாவித் தார்த்தன வம்மென் குஞ்சியே.

பொருள் : பூவின் உள்ளவள் புகுந்து உம் உள்ளத்தாள் - செந்தாமரையாள் வந்து உம் உள்ளத்திருந்தான்; நாவின் பெண் பெயர் நவிற்றினீர் என - நாமகளையும் வாக்காற் கூறினீர் என்று; காவிக் கண் கடை இடுக - காவியனைய கண்கள் (புலந்து) இடுகி நோக்க; கால் சிலம்பு அம்மென் குஞ்சி ஆவித்து ஆர்த்தன - காற்சிலம்புகள் அழகிய மெல்லிய சிகையிலே வாய்விட்டு ஒலித்தன.

விளக்கம் : இது புலவி நுணுக்கம். பூவின் உள்ளாள் என்றது திருமகளை. உம் - நும். நாவிற்பெண் : கலைமகள். வாக்காற் கூறுதலாவது, பேசுதலானே தாம் கலைமகள் அருளுடையர் என்பது கேட்போர்க்குப் புலனாக்குதல். ( 526 )

3125. நெஞ்சி னேரிழை வருந்து மென்றுபூங்
குஞ்சி யேற்றது குறிக்கொ ணீயெனாப்
பஞ்சின் மெல்லடிப் பாவை பூநுதா
லஞ்சி னார்க்கதோர் தவற தாகுமே.

பொருள் : பாவை! பூ நுதால்! - பாவையே! அழகிய நெற்றியை உடையவளே!; பஞ்சின் மெல் அடி - நின் பஞ்சனையமெல்லிய அடி; நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று - மார்பிற் பட்டால் (அவை) அழகிய பூணாலே வருந்தும் என்று; பூங்குஞ்சி ஏற்றது - அழகிய எம் தலைமயிர் ஏற்றது; நீ குறிக்கொள் எனா - நீ குறித்துப் பார்த்துக்கொள் என்று; அஞ்சினார்க்கு அது ஓர் தவறது ஆகும் - அஞ்சினவர்களுக்குத் தவறாகிய அது பிறந்தேவிடும்.

விளக்கம் : இவ்வாறு கூறி அவர் புலவியைத் தீர்த்தனர். நெஞ்சு - மார்பு. நேர் - அழகு. இழை - அணிகலன். இழையால் அடி வருந்தும் என்றியைக்க. எனா - என்றுகூறி. பாவை, பூநுதால் இரண்டும் விளிகள். ( 527 )

3126. தவளைக் கிண்கிணித் தாமஞ் சேர்த்தியுங்
குவளைக் கண்மலர்க் கோலம் வாழ்த்தியு
மிவளைக் கண்டகண் ணிமைக்கு மோவெனாத்
திவளத் தேமலர்க் கண்ணி சேர்த்தியும்.

பொருள் : தவளைக் கிண்கிணித் தாமம் சேர்த்தியும் - தவளையின் வாயைப்போன்ற கிண்கிணி மாலையை அடியிலே சேர்த்தும்; குவளைக் கண்மலர்க் கோலம் வாழ்த்தியும் - குவளை மலர்போன்ற கண்களின் அழகைப் புகழ்ந்தும்; இவளைக் கண்ட கண் இமைக்குமோ எனா - இவளைப் பார்த்த கண்கள் இமையா என்று புகழ்ந்து; தேன் மலர்க் கண்ணி திவளச்சேர்த்தியும் - தேனையுடைய மலர்மாலையை அசைய அணிவித்தும்;

விளக்கம் : இது முதல் மூன்று பாட்டுக்கள் ஒருதொடர். தவளை வாய்போன்ற வாயையுடைய கிண்கிணி என்க. கிண்கிணி - சதங்கை. கோலம் - அழகு. வாழ்த்துதல் - ஈண்டு நலம் பாராட்டுதல். எனா - என்று புகழ்ந்து . திவள - துவள. ( 528 )

3127. பன்ம ணிக்கதிர்ப் பரவை மேகலை
மின்ன ணிந்துகத் திருத்தி வெம்முலைப்
பொன்ன ணிந்துபூஞ் சுண்ணந் தைவர
நன்ம ணிக்குழை யிரண்டு நக்கவே.

பொருள் : பன் மணிக் கதிர்ப் பரவை மேகலை மின் அணிந்து உகத்திருத்தி - பல மணிகளையுடைய ஒளிவீசும் பரவிய மேகலையை மின்போல அணிந்து (மணி) சிந்தத் திருத்தியும; வெம்முலைப் பொன் அணிந்து - வெம் முலைமிசை பொன்னணி புனைந்தும்; பூஞ்சுண்ணம் தைவர - அழகிய சுண்ணப் பொடியைத் தடவியதால்; நன்மணிக் குழை இரண்டும் நக்க - நல்ல மணிகள் இழைத்த குழைகள் இரண்டும் ஒளிவீசின.

விளக்கம் : இவ்வாறு பலவகையினும்பாராட்டியதால்அம் மங்கையரின் காதணிகள் ஒளி வீசின; என்றது, ஊடல் தீர்ந்ததைக் குறிக்கும். நச்சினார்க்கினியர் முற்செய்யுளில் உள்ள குவளைக் கண்மலர் என்பதன் பின் குழையிரண்டும் நக்க என்பதனை இணைத்து, கண்மலர்  குழையை நக்க அதனை உணர்ந்து கோலம் புனைந்தனர் என்று கூட்டுவர். ( 529 )

3128. செய்த நீர்மையார் செயப்பட் டார்கடா
மெய்தி யாவையும் முணர்க வென்பபோன்
மைய வாங்குழன் மடந்தை குண்டல
நைய நின்றெலா நாண நக்கவே.

பொருள் : செய்த நீர்மையார் செயப்பட்டார்கள் தாம் எய்தி - மண்ணுலகிலே சீவகனிடம் ஊடியவர் வானுலகிலே அரம்பையர்களால் ஊடப்பட்டவர்களாக அப்பயனை அடைந்து; யாவையும் உணர்க என்பபோல - ஊடல் துன்பத்தையும் கூடல் இன்பத்தையும் உணர்க என்பபோல்; மை அவாம் குரல்மடந்தை குண்டலம் - கருமை பொருந்திய கூந்தலையுடைய மடந்தையின் குண்டலங்கள்; எலாம் நைய நின்று நாண நக்க - தம்மையொழிந்த அணிகள் நைந்து நாணத் (தாம் மட்டும்) நக்கன.

விளக்கம் : செய்த நீர்மையார் தாம் பாவையும் எய்திச் செயப்பட்டார்கள் என்பபோல் நக்க என்று கூட்டி, முற்பிறப்பில் பிறரை மதியாமற் செய்த தன்மையை உடையவர்கள்தாம் இப்பிறப்பில் தம்மைவந்து அவை எய்துகையினாலே, இப்பொழுது பிறராற் பராமற் செய்யப்பட்டார்களென்று கூறுவனபோலக் குண்டலம் நக்க என்றவாறு. இதுதற்குறிப்பேற்றம். தம்மை ஒழிந்தன எல்லாம் இங்ஙனம் நகாதே நின்று நாணா நிற்க நையாநிற்கத் தாம் நக்கன என்க. என்றது, தேவிமார் முற்பவத்திற் பிள்ளையார் முடியை மிதித்த வினைப்பயத்தால் தாங்களும் இப் பவத்து மிதியுண்டாரென்றவாறு. இவளை என்றும் மடந்தையென்றும் ஒருமையாற் கூறினாரேனும், ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும் - வருகைதானே வழக்கென மொழிப (தொல். பொருளியல், 28) என்னும் பொருளியல் வழுவமைதியாற் பன்மை கூறிற்றென்று உணர்க. ( 530 )

3129. செல்வக் கிண்கிணி சிலம்பத் தேன்சொரி
முல்லைக் கண்ணிகள் சிந்த மொய்ந்நலம்
புல்லிப் பூண்டதார் புரள மேகலை
யல்குல் வாய்திறந் தாவித் தார்த்தவே.

பொருள் : செல்வக் கிண்கிணி சிலம்ப - செல்வமுற்ற கிண்கிணிகள் ஒலிக்க; தேன் சொரி முல்லைக் கண்ணிகள் சிந்ததேனைச் சொரியும் முல்லைக் கண்ணிகள் மலர்களைச் சிந்த; தார் புரள - மாலைகள் புரள; மொய்ந் நலம் புல்லி - மிக்க நலத்தை நுகர்தலாலே; அல்குல் பூண்ட மேகலை வாய் திறந்து ஆவித்து ஆர்த்த - அல்குலினிடத்தே பூண்ட மேகலை மணிகள் வாய் திறந்து கொட்டாவி விட்டு ஆர்த்தன.

விளக்கம் : இவை கூட்டத்தே நிகழ்வன. ஆவித்துத் தேன் சொரி கண்ணியென இயைப்பர் நச்சினார்க்கினியர். ( 531 )

3130. இலங்கு கொம்பனார் காம மென்னும்பேர்
கலந்த கள்ளினைக் கைசெய் தையென
மலர்ந்து வாய்வைத்தார் மணிகொள் வள்ளத்தே
நலங்கொள் சாயலார் நடுங்கி நையவே.

பொருள் : இலங்கு கொம்பனார் நலங்கொள் சாயலார் - விளங்கும் பூங்கொம்பனையாரும் நன்மை கொண்ட அழகினரும் ஆகிய அம் மங்கையர், நடுங்கி நைய - நடுங்கிச் சோர்வடைய; காமம் என்னும் பேர் கலந்த கள்ளினைக் கைசெய்து - காமம் என்னும் பெயர் கூடிய கள்ளை ஒழுங்கு செய்து; ஐ யென மலர்ந்து - அழகுற மகிழ்ந்து; மணிகொள் வள்ளத்தே வாய் வைத்தார் - முத்துக்களைக்கொண்ட கிண்ணத்திலே வாய்க்கொண்டார்.

விளக்கம் : மணிகொள் வள்ளத்துக்காமம் என்னும் பேர் கலந்த கள்ளினை வாய்வைத்தார் என்க. மணிகொள் வள்ளம் : முறுவல் கொண்ட வாய்க்கு உவமம். கள்ளுப்போலே எயிற்று நீர் மகிழ்ச்சி கொடுத்தலிற் கள்ளென்றார். இருதிறத்தாரும் இதழ் பருகின்மை கூறிற்றென்பர் நச்சினார்க்கினியர். அவர், மணிகொள் வள்ளத்து நலம்கொள் காமம் என்னும் பேர் கலந்த கள்ளினை வாய் வைத்தார் என்றது, முத்தைத் தன்னிடத்தே கொண்ட வாயாகிய வட்டிலிலேயிருந்து நன்மைகொண்ட வேட்கையென்னும் பெயர் கூடின கள்ளை அவர்கள் வாயிடத்தே வைத்தார்களென்றவாறு; என்றது, இருதிறத்தோரும் அதரபானம் பண்ணினமை கூறிற்று என்று பொருள் கூறுவர். மேலும் அவர் இச்செய்யுளையும் முற்செய்யுளையும் ஒன்றாக்கிக்கொண்டு கூட்டுவர்.

அப்பொருள் முடிபு:

அவர்கள் தம் தேவியரை அங்ஙனம் கைசெய்து மலர்ந்து ஐயென, கொம்பனாராகிய சாயலார் நடுங்கி நையும்படி அவர் மெய்ந்நலத்தைப் புல்லி வாய்வைத்தார்; அப்பொழுது கண்ணிகள் சிந்தத் தார்புரளக் கிண்கிணி சிலம்ப மேகலை வாய்விட்டு ஆர்த்தன என்க. ( 532 )

3131. வெம்மை கொண்டதே னமிர்த மெல்லவே
யம்மை யஞ்சொலா ரார வுண்டவர்
தம்மைத் தாமகிழ்ந் துறைய வித்தலைச்
செம்மை மாதவர்க் குற்ற செப்புவாம்.

பொருள் : வெம்மை கொண்ட தேன் அமிர்தம் - வேண்டுதல் கெண்ட இனிய அமிர்தத்தை; அம்மை அம் சொலார் மெல்ல ஆர உண்டவர் - அமைதியுறும் அழகிய மொழியினார் மெல்ல நிறைய உண்டவராய்; தம்மைத் தாம் மகிழ்ந்து உறைய - தம்மைத் தாமே மகிழ்ந்து வாழா நிற்க; இத்தலைச் செம்மை மாதவர்க்கு உற்ற செப்புவாம் - இவ்விடத்தே செம்மையுற்ற நந்தட்டனுக்கும் தோழர்கட்கும் பிறந்த செய்கை கூறுவோம்.

விளக்கம் : வெம்மை - வேண்டுதல். அம்மை - அமைதி. இத்தலை - இவ்விடத்தே. செம்மை மாதவர் என்றது, நந்தட்டனையும் தோழரையும். இஃது ஆசிரியர் கூற்று. ( 533 )

நந்தட்டன் தோழன்மார் நோற்றுயர்வு

3132. நாள்கண்கூடிய நகைவெண் டிங்கள்போற்
காளை நந்தனுந் தோழன் மார்களு
நாளு நாளினு நடுங்க நற்றவந்
தாளி னீட்டினார் தம்மைத் தாம்பெற்றார்.

பொருள் : காளை நந்தனும் தோழன்மார்களும் - காளையாகிய நந்தட்டனும் அவன் தோழர்களும்; நாள் கண் கூடிய நகைவெண் திங்கள் போல் - நாடோறும் தன்னிடத்தே கலைகள் வந்து கூடிய ஒளி பொருந்திய வெண்மதி போல; நாளும் நாளினும் - நாடோறும் நாடோறும்; நடுங்க - (கண்டார்) நடுங்க; தாளின் - தம் முயற்சியாலே; நற்றவம் ஈட்டினார் - நல்ல தவத்தை யீட்டினார்; தம்மைத் தாம் பெற்றார் - (ஈட்டி) ஐம்பொறியையும் தம் வசமாக்கினார்.

விளக்கம் : நாள் - நாள்தோறும். கண் - இடம். கலைகள் வந்து கூடிய என்க. நகை - ஒளி. காளைபோல்வான் ஆகிய நந்தட்டனும் என்க. கண்டோர் பனிப்ப என்க. தாள் - முயற்சி. தம்மைத்தாம் பெறலாவது - தாம் பொறியின் வயப்படாமல் அவற்றைத் தாம் வயப்படுத்துதல். ( 534 )

3133. பாவ னைமாபுஇப் பட்டினி யொடுந்
தீவினை கழுஉந் தீர்த்தன் வந்தியாப்
பூவுண் வண்டெனக் கொட்பிற் புண்ணியர்
நாவின் வேட்கையு நஞ்சி னஞ்சினார்.

பொருள் : புண்ணியர் - அத்தவத்தினர்; பட்டினியொடும் - பட்டினிகளுடன்; பாவனை மெரீஇ - சோடச பாவனைகளுடன் பொருந்தி; தீவினை கழுஉம் தீர்த்தன் வந்தியா - தீவினையை நீக்கும் இறைவனை வணங்கி; கொடபின் - (உயிரைக் காப்பாற்றித் தவஞ்செய்தற்குக் கருதிய மனக்) கொட்பினாலே; நாவின் வேட்கையும் நஞ்சின் அஞ்சினார் - நாவினாற் கொண்ட உணவையும் (பின்னர்) நஞ்சுபோல அஞ்சிக் கைவிட்டனர்.

விளக்கம் : வண்டொத்த வேட்கை யென்றது - வண்டுபோலச் சிறிதாகக் கொள்ளும் உணவை. வேட்கை : ஆகுபெயர். சோடாசபாவனைகள் : தரிசன விசுத்தி, விநய சம்பந்நதை, சீலவ்ரதேஷ்ய நதீசாரம், அபீஷண ஞானோபயோகம், சம்வேகம், சக்தி தஸ்தியாகம், சக்தி தஸ்தபஸ், ஸாதுஸமாதி, வையாவிருத்தியம், அருகதபத்தி, ஆசாரிய பத்தி, பகுசுருத பத்தி, பிரவசன பத்தி, ஆவசியகா பரிஹாணி, மாக்கப் பிரபாவனை, பிரவசன வத்ஸலத்வம். ( 535 )

3134. கருவிற் கட்டிய காலம் வந்தென
வுருவ வெண்பிறைக் கோட்டி னோங்கிய
வருவிக் குன்றின்மேன் முடித்திட் டைவருந்
திருவின் றோற்றம்போற் றேவ ராயினார்.

பொருள் : உருவ வெண்பிறைக் கோட்டின் ஓங்கிய அருவிக் குன்றின் மேல் - அழகிய வெண்பிறையைத் தன் உச்சியிலே கொள்ள உயர்ந்த அருவியை உடைய குன்றின்மேல்; ஐவரும் முடித்திட்டு - ஐவரும் ஏனைத் தவங்களையும் முடித்திட்டு; கருவில் கட்டிய காலம் வந்தென - கருவிலே இறத்தற்கு விதித்த காலம் வந்ததாக; திருவின் தோற்றம்போல் தேவர் ஆயினார் - திருமகள் தோன்றுமாறு போல வானவர் மெய்யை (விரைவிற்) பெற்றனர்.

விளக்கம் : தீவினை நீங்கி நல்வினை வந்தால் திருமகள் நினைவின்றித் தோன்றுமாறு போல இருவரும் இவ்வுடம்பைவிட்டுத் தேவர் யாக்கை கடிதிற்பெற்றார். ( 536 )

வேறு

3135. அனங்கனைத் தவஞ்செய வழன்று கண்டவர்
மனங்களைக் கவர்ந்திடு மணிக்கண் வெம்முலைப்
பொனங்கொடி மயிலனார்ப் புல்ல மாப்பிடி
யினம்பயில் கடாக்களிற் றின்ப மெய்தினார்.

பொருள் : தவம்செய அனங்கனை அழன்று கண்டவர் - தாம் தவம்புரிதற்குக் காமனைச் சினந்து நோக்கியவர்; மனங்களைக் கவர்ந்திடும் - (தம்மைக் கண்டார்) மனங்களைக் கவரும்; மணிக் கண் வெம்முலைப் பொனங்கொடி மயிலனார் புல்ல - நீலமணி போலுங் கண்களையுடைய, விருப்பூட்டும் முலைகளையுடைய பொற்கொடியையும் மயிலையும் போன்றவர்கள் தழுவ; மாப்பிடியினம் பயில் கடாக்களிற்று இன்பம் எய்தினார் - பெரிய பிடித்திரளைத் தழுவின மதயானைகளைப்போல இன்பத்தை அடைந்தனர்.

விளக்கம் : காமனைத் தம்மைப் பெறுதற்குத் தவம்செய்யும்படி அழன்று தம்மைக் கண்டார் மனங்களைக் கவர்ந்திடும் என்றுமாம். களிற்றிற்கு ஊற்றின்பமே மிக்க இன்பமாகலின், ஊற்றின்பத்திற்கு இஃது உவமையாயிற்று. ஊற்றின்பம் - தொடுதலான் வரும் இன்பம். தூய வாழ்க்கையினடிப்படை யிது. ( 537 )

வேறு

3136. காதணிந்த தோடொருபான் மின்னு வீசக்
கதிர்மன்னுக் குழையொருபாற் றிருவில் வீசத்
தாதணிந்த தாமங்க ளொருபாற் சோரத்
தாமரைக்கண் டாமிரங்கப் புருவு மாட
மாதணிந்த நோக்கினா ரல்குற் காசு
மணிமழலைக் கிண்கிணியுஞ் சிலம்பு மேங்கப்
போதணிந்த தாருடையப் பொருது பொங்கிப்
புணர்முலைகள் போர்க்களந்தாங் கண்ட வன்றே.

பொருள் : மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலைக் கிண்கிணியும் சிலம்பும் ஏங்க - காதல் அமைந்த பார்வையினாரின் அல்குலில் அணிந்த மேகலைக் காசும் ஒலிக்கும் மணிக் கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்க (அவர்களுடன் வானவர் பொருதலாலே); காது அணிந்த தோடு ஒருபால் மின்னு வீச - காதில் அணிந்த தோடு ஒரு பக்கம் ஒளி வீச; கதிர் மின்னுக்குழை ஒருபால் திருவில் வீச - ஒளிதரும் மின்னுக்குழை ஒரு பக்கத்தில் வான வில்லென ஒளிவிட; தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோர - பூந்தாது பொருந்திய மாலைகள் ஒருபக்கத்தே சோர; தாமரைக்கண் தாம் இரங்க - தாமரை மலரனைய கண்கள் உவகைக் கண்ணீர் சிந்த; புருவம் ஆட - புருவம் ஏறி வளைய; போது அணிந்த தார் உடைய - (கணவரின்) மலர் பொருந்திய மாலை உடைய; புணர்முலைகள் பொங்கிப் பொருது - இரு முலைகளும் விம்மிப் பொருதலால்; போர்க்களம் கண்ட - காமப் போர்க்களத்தை (அம் முலைகள்) கண்டன.

விளக்கம் : பொருது - பொர : எச்சத்திரிபு. மின்னு - ஒளி. திருவில் - அழகிய ஒளி. தாது - பூந்துகள். தாம் : அசை. மாது - காதல். பொருது - பொர. தாம் : அசை. அன்றும் ஏயும் அசைகள். ( 538 )

3137. முழுதார மின்னுமுலைக் குவட்டினான்மொய்ம்
மார்பிற்குங் குமச்சே றிழுக்கிவீழ
வுழுதார்வம் வித்தி யுலப்பிலாத
நுகர்ச்சிவிளைத் தலர்ந்தகற் பகத்தின்கீ
ழெழுதார் மணிக்குவளைக் கண்வலையுட்பட்
டிமையார்கள் காமமறு சுழியுளாழ்ந்
திழுதார்மென் பள்ளிப்பூந் தாதுபொங்க
விருவர் பலராகி யின்புறுபவே.

பொருள் : அலர்ந்த கற்பகத்தின்கீழ் இழுது ஆர் பூமென் பள்ளி - மலர்ந்த கற்பகத்தின் நிழலிலே தேனார் மலர் நிறைந்த மென் பள்ளியிலே; ஆரம் முழுதும் மின்னும் முலைக்குவட்டினால் - முத்துமாலை முற்றும் மின்னும் முலைக்குவட்டினாலே; மொய்ம் மார்பின் குங்குமச் சேறு இழுக்கி வீழ - இன்பம் நிறை மார்பிலே குங்குமச் சேறு அழிந்து கெட; உழுது - உழுது; ஆர்வம் வித்தி - ஆசையை விதைத்து; உலப்பு இலாத நுகர்ச்சி விளைத்து - கெடாத இன்பத்தை விளைத்தலாலே; எழுது ஆர் மணிக்குவளைக் கண்வலையுட் பட்டு - மை எழுதுகின்ற நிறைந்த நீலமணிபோலும் குவளைக் கண்வலையிலே பட்டு; இமையார்கள் - இமையாராய்; காமம் மறு சுழியுள் ஆழ்ந்து - காமம் சுழலும் சுழியிலே ஆழ்ந்து; பூந்தாது பொந்து - பூந்தாது பொங்க; இருவர் பலராகி இன்புறுப - ஆணும் பெண்ணுமாகிய இருவரும் பலப்பல உருவங்களைக் கொண்டு இன்புறுவர்.

விளக்கம் : ஆரம் - முத்துமாலை. குங்குமச் சேற்றை உழுது என்க. ஆர்வம் ஆகிய விதையை வித்தி என்க. நுகர்ச்சி - இன்பம். எழுது - எழுதுதல். மணி - நீலமணி. இழுது - தேன். இருவர் பலராகி என்றது ஆடவரும் மகளிருமாகிய அத்தேவர்கள் பற்பல வேடங் கொண்டவராய் என்றவாறு. ( 539 )

3138. மண்கனிந்த பொன்முழவ மழையின் விம்ம
மாமணியாழ் தீங்குழல்க ளிரங்கப் பாண்டில்
பண்கனியப் பாவைமார் பைம்பொற் றோடுங்
குண்டலமுந் தாம்பதைப்ப விருந்துபாட
விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப
முரிவுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக்
கண்கனிய நாடகங்கண் டமரர்காமக்
கொழுந்தீன்று தந்தவந்தா மகிழ்ந்தா ரன்றே.

பொருள் : மண் கனிந்த பொன் முழவல் மழையின் விம்ம - மண்ணிட்ட பொன் முழவம் முகிலென முழங்க; மாமணி யாழ் தீ குழல்கள் பாண்டில் இரங்க - பெரிய மணிகள் இழைத்த வாழும் இனிய குழல்களும் தாளமும் ஒலிக்க; பாவைமார் பைம்பொன் தோடும் குண்டலமும் தாம் பதைப்ப - பாவையர் பொற்றோடும் குண்டலமும் பதைக்க; இருந்து பண்கனிய பாட இருந்து பண்முற்றுப் பெறப் பாடக் கேட்டும்; கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப - கிண்கிணியுஞ் சிலம்பும் ஒலிக்க; முரிபுருவ வேல் நெடுங்கண் விருந்து செய்ய - முரிபுருவமும் வேலனைய நெடுகண்களும் விருந்து செய்ய; கண் கனிய நாடகம் கண்டு - கண்ணுருகும் நாடகம் ஆடக் கண்டும்; விண்கனிய - விண்ணில் உள்ளோர் மனம் உருக; அமரர் காமக் கொழுந்து ஈன்று - அவ்வானவர்கள் காமக் கொழுந்து பெற்று; தம் தவம்தாம் மகிழ்ந்தார் - தம் தவப்பயனைத் தாம் மகிழ்ந்தனர்.

விளக்கம் : மண்ணிடுதல் - மார்ச்சனையிடுதல். நச்சினார்க்கினியர், கண்கள் காமமாகிய கொழுந்தை ஈன்று கொடுத்து விருந்து செய்ய எனக் கூட்டுவர். மற்றும் அவர், விண்ணிலுள்ளோர் மனம் உருக, அத் தேவர், முழவம் விம்ம, யாழும் குழலும் பாண்டிலும் இரங்கப் பாவைமார் தாம் தோடும் குண்டலமும் பதைப்ப இருந்து பண்முற்றுப்பெறப் பாட, அவர்கள் கண்கள் விருந்து செய்யக் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப நாடகத்தைக் கண்ணுருகக் கண்டு மகிழ்ந்தார் என்று பொருள் கூறுவர். ( 540 )

வேறு

3139. முருகுடைந்த பூங்கோதை முத்தணிந்த தோளா
ரொருகுடங்கைக் கண்ணா லுளங்கிழிய வேவுண்
டருகடைந்த சாந்தழிய வம்முலைமேல் வீழ்ந்தார்
திருவடைந்த நீண்மார்பிற் றேந்துளிக்குந் தாரார்.

பொருள் : முருகு உடைந்த பூங்கோதை முத்து அணிந்த தோளார் - தேன் வழிந்த மலர்க் கோதையையும் முத்தையும் அணிந்த தோளாருடைய; ஒரு குடங்கைக் கண்ணால் உளம் கிழிய ஏவுண்டு - ஒரு குடங்கையளவு கண்களால் உள்ளம் பிளக்கத் தாக்கப்பெற்று; அருகு அடைந்த சாந்து அழிய - முலையின் பக்கத்திற் பூசிய சந்தனம் அழியும்படி; அம் முலைமேல் - அம் முலைகளின் மேல்; திரு அடைந்த நீண்மார்பின் தேன் துளிக்கும் தாரார் - திருமகள் பொருந்திய நீண்ட மார்பின தேன் னிலேற்றும் மாலையினார்; வீழ்ந்தார் - தழுவிக்கிடந்தார்.

விளக்கம் : முருகு - தேன், முத்து - முத்துமாலை, தாரார் தோளார் கண்ணால் ஏவுண்டு முலைமேல் வீழ்ந்தார் என்க. ( 541 )

3140. நிலவி யொளியுமிழு நீளிலைவேற் கண்ணார்
கலவித்தூ தாகிய காமக்கை காய்த்திப்
புலவிப் படைபயிலப் பூச்செய்த கோல
முலவித் துறக்க மொளிபூத்த தன்றே.

பொருள் : நிலவி ஒளி உமிழும் நீள்இலை வேல் கண்ணார் - நிலைபெற்று ஒளியைச் சொரியும் நீண்ட இலை வடிவான வேலனைய கண்ணினார்; கலவித் தூ தாகிய காமக்கை - கலவிக்குத் தூதாகிய காமம் என்கிற கையாலே; புலவிப்படை காய்த்திப் பயில - புலவியாகிய படையைக் காய்ச்சி (அவர்மேல்) எய்வதனாலே; பூச்செய்த கோலம் - காமன் அம்பு செய்த கோலம்; உலவித் துறக்கம் ஒளி பூத்தது - எங்கும் பரந்து துறக்கம் அவ்வொளியின் பொலிவைப் பெற்றது.

விளக்கம் : என்றது, துறக்கத்துள்ளார் இவர்கள் இன்ப நுகர்ச்சியைப் புகழ்ந்தார் என்பதாம். நிலவி - நிலைபெற்று. நீளிலை : வினைத்தொகை. கண்ணார் என்றது தெய்வ மகளிரை. காமக்கை - காமமாகிய கை. காய்த்தி - காய்ச்சி. உலவி - பரந்து. பூச்செய்த கோலம் - மலராகிய காமனுடைய அம்புகள் அவர்கள் மேற்பட்டுச் செய்த கோலம். ( 542 )

3141. புருவச் சிலைநுதற் பொன்றுஞ்சு மல்கு
லுருவத் துடியிடையா ருடலுப் பாகத்
திருவிற் றிகழ்காமத் தேன்பருகித் தேவர்
பொருவற் கரிய புலக்கடலு ளாழ்ந்தார்.

பொருள் : நுதல் சிலை புருவம் பொன் துஞ்சும் அல்குல் உருவத்துடி இடையார் - நெற்றியையும் வில்லினைய புருவத்தையும் மேகலை துயிலும் அல்குலையும் அழகிய துடி போன்ற இடையையும் உடைய காதலியரின்; ஊடல் உப்பு ஆக - ஊடலே இனிமையாக; திருவின் திகழ் காமத் தேன் பருகி - திருவினால் விளங்குங் காமமாகிய தேனைப் பருகி; பொருவற்கு அரிய புலக் கடலுள் ஆழ்ந்தார் - உவமை கூறுதற்கு அரிய ஐம்புலக் கடலிலே முழுகினார்.

விளக்கம் : சிலைப்புருவம் என மாறுக. பொன் - மேகலை, உருவம் : அழகு உப்பு - இனிமை. திருவினால் திகழும் காமமாகிய தேன் என்க. புலக்கடல்-சுவையொளி ஊறு ஓசை நாற்றம் என்னும் புலமாகிய கடல் என்க. இக் கருத்தமை திருக்குறள் வருமாறு:

ஊடிப் பெறுகுவம் கொல்லே நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.-  1328. ( 543 )

வேறு

3142. முகடு மணியழுத்தி முள்வைர
முள்வேய்ந்து முத்தம் வாய்ச்சூழ்ந்
தகடு பசுமணியார்ந் தங்காந்
திருள்பருகி யடுபால் விம்மிப்
பகடு படவடுக்கிப் பண்ணவனார்
தம்மொளிமே னின்றாற் போலுந்
தகடு படுசெம்பொன் முக்குடையான்
றாளிணையென் றலைவைத் தேனே.

பொருள் : முகடு மணி அழுத்தி - உச்சியில் மணியை அழுத்தி; முள் வைரம் உள் வேய்ந்து - கூரிய வைரத்தை உள்ளே அழுத்தி; வாய் முத்தம் சூழ்ந்து - விளிம்பிலே முத்தமாலை சூழ்ந்து; அகடு பசுமணி ஆர்ந்து - நடுவே நீலமணி நிறைந்து; அங்காந்து இருள் பருகி - வாயைத் திறந்து இருளைப் பருகி ; அடுபால் விம்மி - காய்ச்சின பால் போன்ற ஒளியை முத்துச் சொரிந்து ; பகடுபட அடுக்கி - பெருமைபெற மூன்றாக அடுக்கி; பண்ணவனார் தம் ஒளிமேல் நின்றால் போலும் - இறைவனார் ஒளி மேலே நின்றாற் போன்ற; தகடுபடு செம்பொன் முக்குடையான் தாளிணை என்தலை வைத்தேன் - தகடாகப் பொருந்திய பொன்னாலாகிய முக்குடையானின் தாளிணைகளை என் தலைவைத்தேன்.

விளக்கம் : முகடு - உச்சி, முள் - கூர்மை. வாய் - விளிம்பு. அகடு - நடுவிடம். அடுபால் : வினைத்தொகை. பகடு - பெருமை. பண்ணவனார் - அருகக் கடவுள். முக்குடையான் - அருகக் கடவுள். இவ்விலக்கியம் இடுக்கணின்றி இனிது முடிந்த மகிழ்ச்சியான் மீட்டும் வணங்கினார். ( 544 )

ஓம்படை

3143. முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து
வாய்முரன்று முழங்கி யீன்ற
மெய்ந்நீர்த் திருமுத் திருபத்தேழ்
கோத்துமிழ்ந்து திருவில் வீசுஞ்
செந்நீர்த் திரள்வடம்போற் சிந்தா
மணியோதி யுணர்ந்தார் கேட்டா
ரிந்நீர ராயுயர்வ ரேந்துபூந்
தாமரையாள் காப்பா ளாமே.

பொருள் : முந்நீர் வலம்புரி - சோழகுலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி; சோர்ந்து அசைந்து - பிறர் குற்றம் கூறுகின்றார் என்று தளர்ந்து நடுங்கி; வாய் முரன்று முழங்கி - வாயினால் மெல்ல இசைத்துப் பின் மிகவும் முழங்கி; ஈன்ற மெய்நிர்த் திருமுத்து இருபத்தேழ் - பெற்ற தன் மெய்விடத்து நீர்மையாகிய அழகிய முத்துக்கள் இருபத்தேழையும்; செந்நீர்த்திரள் - சிவந்த நீர்மையையுடைய மாணிக்கத் திரளையும்; வடம் போல் கோத்து - வடம்போல் கோத்து ; திருவில் உமிழ்ந்து வீசும் சிந்தாமணி - வானவில்போல ஒளி உமிழ்ந்து வீசும் சிந்தாமணி என்னும் இச் செய்யுளை; ஓதி உணர்ந்தார் கேட்டார் - ஓதி உணர்ந்தாரும் அவர் கூறக்கேட்டாரும்; இந் நீரார்ல் உயர்வர் இந்திரராய்ப் பின் வீடுபெறுவர்; ஏந்து பூந்தாமரையாள் காப்பாள் ஆம் - உயர்ந்த தாமரை மலராள் காப்பாள் ஆகும்.

விளக்கம் : மெய்நீர் - (முத்துக்கு) மெய்யிடத்து நீர்; (நூலுக்கு) உண்மையான பொருளின் நீர்மை. செந்நீர்த் திரள்; சிவந்த நீர்மையை உடைய மாணிக்கத்திற்கு ஆகுபெயர். இம் முத்தையும் மாணிக்கத்தையும் ஈன்ற வலம்புரி : இல்பொருளுவமை. இச் செய்யுள் இந் நூலாசிரியரின் ஆசிரியர் கூறியது: இங்ஙனம் நூலாசிரியர் தம்மைப் புனைந்துரைத்தல் ஆகாமையின் முத்தும் மணியும் கோத்தாற் போன்றதென்றார், எளிதிற் பொருள் தந்தும், அரிதிற் பொருள் தந்தும் நிற்றலின். இருபத்தேழென்றார், ஒன்றைப் பத்தாற்பெருக்கின இரு நூற்றதெழுபதைப் பத்தாற் பெருக்கின இரண்டாயிரத்தெழு நூற்றை; எனவே, தேவர் அருளிச்செய்த செய்யுள், இரண்டாயிரத்தெழுநூறென்றே கொள்க.

(மற்றை445-செய்யுட்களும் கந்தியார் என்னும்பெண் புலவரால் இடையிடையே பாடிச் சேர்க்கப்பட்டன என்று சிலர் கூறுகின்றனர். அச் செய்யுட்கள் எவையோ? இதுகாறும் கந்தியார் பாட்டிவையென்று காண்டலெவர்க்கும் அரிதாம்.) ( 1 )

வேறு

3144. செந்தா மரைக்குச் செழுநாற்றங் கொடுத்த தேங்கொ
ளந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச்
சிந்தா மணியின் சரிதஞ்சி தர்ந்தேன் றெருண்டார்
நந்தா விளக்குச் சுடர்நன்மணி நாட்டப் பெற்றே.

பொருள் : செந்தாமரைக்குச் செழுநாற்றம் கொடுத்த - செந்தாமரைக்கு நல்ல நாற்றத்தைக் கொடுத்த; தேன்கொள் அம் தாமரை - தேன் கொண்ட அழகிய இறைவன் திருவடிகள்; ஆள் அகலத்தவன் பாதம் ஏத்தி - ஆள்கின்ற விரிந்த ஞானத்தையுடையவனாகிய குருக்களின் திருவடிகளை வாழ்த்தி; சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன் - சிந்தாமணியின் வரலாற்றைப் பரக்கக் கூறினேன்; நந்தா விளக்குச் சுடர் நன்மணி நாட்டப் பெற்று - அவியாத விளக்காகிய எரிகின்ற நல்ல மணியின் அருள் நாட்டப் பெற்று; தெருண்டார் - இவ்வுலகோர் நன்றென்று தெளிந்தார்.

விளக்கம் : இது நூலாசிரியர் கூற்று; நச்சினார்க்கினியர், அகலத்தவன் சீவகன் என்பார். அகலத்தவன் சரிதம் சிந்தாமணி சிதர்ந்தேன் என்று கூட்டுவர். ( 2 )

வேறு

3145. செய்வினை யென்னு முந்நீர்த்
திரையிடை முளைத்துத் தேங்கொண்
மைவினை மறுவி லாத
மதியெனுந் திங்கண் மாதோ
மொய்வினை யிருள்கண் போழு
முக்குடை மூர்த்தி பாதங்
கைவினை செய்த சொற்பூக்
கைதொழு தேத்தி னேனே.

பொருள் : செய்வினை என்னும் முந்நீர்த் திரையிடை-நல்வினை என்னும் கடலிலே; முளைத்து- தோன்றி; தேன் கொள் மைவினை மறுஇலாத மதி எனும் திங்கள் - இனிமை கொண்ட தீவினையாகிய குற்றம் இல்லாத அறிவு எனும் திங்களாலே; கைவினை செய்த சொல்பூ - ஆராய்ந்த செய்யுளாகிய பூவை; மொய்வினை இருள்கண் போழும் முக்குடை மூர்த்தி பாரதம் -செறிந்த வினையாகிய இருளை அவ்விடத்தே நீக்கும் முக்குடையுடைய இறைவன் திருவடியிலே (இட்டு) ; கைதொழுது ஏத்தினேன் - கையாலே தொழுது ஏத்தினேன்.

விளக்கம் : இதுவும் நூலாசிரியராகிய தேவர் கூற்று. நச்சினார்க்கினியர் கூறும் பொருள்:

தத்தைகுண மாலையொடு தாவில் புகழ்ப் பதுமை
ஓத்தவெழிற் கேமசரி ஒண்கனக மாலை
வித்தகநல் விமலையொடு வெஞ்சுரமஞ் சரிதான்
அத்தகை யிலக்கணையொ டாகமணம் எட்டே.

பகைமாற் றொருநற் பரன்வாழ்த் தவைச்சொற் பதிக விலம்பகமே
வகைமாற் றொருநா மகளோ கோவிந்தை மணமுறு தத்தைகுணம்
மிகைமாற் பதுமை கேமசரி கனகம் விமலையர் வீழ்சுரமஞ்
சகைமாற் றொடுமண் மகள்வூ விலக்கணை முத்தியீ ராறொன்றே

இவையிரண்டும் கந்தியார் கூற்று என்பர் நச்சினார்க்கினியர், ( 3 )

முத்தி இலம்பகம் முற்றிற்று

சீவகசிந்தாமணி உரை முற்றுப்பெற்றது.

வாழ்த்து

திங்கள்மும் மாரிபெய்க திருவறம் வளர்க செங்கோல்
நன்கினி தரச னாள்க நாடெல்லாம் விளைக மற்று
மெங்குள வறத்தி னோரும் இனிதூழி வாழ்க எங்கள்
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே.

 
மேலும் சீவக சிந்தாமணி »
temple news
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக ... மேலும்
 

கடவுள் வாழ்த்து நவம்பர் 14,2011

சித்தர் வணக்கம் 1. மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்திஓவாது நின்ற ... மேலும்
 
கதைச் சுருக்கம்: இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. ... மேலும்
 
கதைச்சுருக்கம்: சீவகன் இவ்வாறிருக்கக் கட்டியங்காரனுடைய ஆனிரைகளை ஆயர் காட்டின்கண் மேய்த்தனராக; ... மேலும்
 
கதைச் சுருக்கம்: சீவகன் முதலியோர் இராசமாபுரத்தின்கண் இவ்வாறு இனிது உறைந்தனராக; அந்நகரத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar